அவதார் - தி லாஸ்ட் ஏர் பென்டர்...

7:09:00 AM

கார்டூன் வகையறாக்களில் டாம் அண்ட் ஜெர்ரியைப் பிடிக்காதார் இல்லை. 'அட அதெல்லாம் சின்னப் பசங்க பாக்குறது' என்று பெரிதாய் சீன் போடுபவர்களும் டாம் அண்ட் ஜெர்ரி என்றால், என்று பல்லைக் காட்டிக் கொண்டும் கெக்கே பிக்கே என்று சிரித்துக் கொண்டும் உட்கார்ந்து விடுவார்கள். கார்டூன் நெட்வொர்க் மட்டுமே ஒரே கார்டூன் சேனலாக 'ஆண்டு' கொண்டிருந்த சமயத்தில் வந்தது போல இப்பொது எந்தச் சேனலிலும் தரமான கார்டூன்கள் வருவதில்லை. எங்க காலத்துலலெல்லாம் எப்படி இருந்துச்சு...இப்ப என்னத்த காட்டுறாங்க என்று 'அந்த காலப் பெருமை பேசும் பெருசு' போலப் பேசுவதற்கு ஒரு மாதிரி கேவலமாக இருந்தாலும், உண்மை இதுதான்.
தமிழிலேயே சுட்டி டிவி, ஜெடிக்ஸ், டூன் டிஸ்னி என்று பல சேனல்கள் இப்போதிருந்தாலும், இவை எதுவுமே நான் அப்போது ரசித்த ரிச்சீ ரிச், ஆட்டம் ஆன்ட், கேப்டன் பிளானெட், ஸ்வாட் கேட்ஸ், பாப்பாய், டெக்ஸ்டர்ஸ் லெபாரடோரி . . . (இன்னும் எத்தனையோ) போல் இல்லை. அதிலும் 4:10 ற்கு பள்ளி முடிந்தவுடன், மரண வேகத்தில் லாரிக்காரனிடமெல்லாம் ரோட்டில் கேவலமாகத் திட்டு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து பையைத் தூக்கி எரிந்து விட்டு அம்மா போடும் சத்தத்தைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் சரியாக 4:00 மணிக்கு டிவியைப் போட்டு ஆ ஆ என்று வாயைப் பிளந்து ஸ்வாட் கேட்ஸ் பார்த்த நியாபகங்கள்...ச்சே அது என்றும் திரும்பக் கிடைக்காத அழகிய நிலாக் காலங்கள்.இப்போது, காலப் போக்கில் இது போல் சின்னச் சின்னச் சந்தோஷங்கள் நிறைய இழந்தது போலத் தோன்றுகிறது.

பின் போக்கீமான், பவர் ரேஞ்சர்ஸ் என்று அட்டு கார்டூன்கள் வர, அது கருமம் எனக்கு அடுத்து வந்த ஸ்மால் பாய்ஸ்க்கு பிடித்துப் போக எனது பேவரிட்கள் காணாமல் போனது. நானும் கார்டூன் சேனல் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் இருந்தேன்.
போன மாதம் எதோ ஒரு சனிக்கிழமை, கல்லூரி சீனியர் ஒருவரது லேப்டாப்பை 'ஏதாவது படம் தேறுகிறதா' என்று மேய்ந்து கொண்டிருந்த போது, AVATAR - THE LAST AIR BENDER என்று 61 எபிசோட் உள்ள ஒரு கார்டூன் சீரியல் இருப்பதைக் கண்டு, எனது 1 TB ஹார்ட் டிஸ்க்கில் சேவ் செய்து கொண்டேன். எதையாவது உருவுவோமே என்ற எண்ணமும், 1 TB ஹார்ட் டிஸ்க் வைத்திருக்கும் திமிரில் தான் இதைக் காப்பி செய்தேனே தவிர இதைப் பார்க்கும் எண்ணம் எனக்கு சுத்தமாக இல்லை. காலேஜ் நாட்களில் Prison Break, 24, Lost, Friends என்று நண்பர்கள் பலர் ஆங்கில சீரியல்களாகப் பார்த்துத் தள்ளிக் கொண்டிருந்த காலங்களில் நான் சத்தம் இல்லாமல் என் ரூமில் ஒரு சிறு கூட்டத்தைக் கூட்டி விஜய் டிவி 'மதுரை' சீரியல் பார்த்த 'சுத்த' த்தமிழன். நான், கார்டூன் அதுவும் ஆங்கில கார்டூன் ஒன்றை ஒரே மூச்சில் இரவு பகலாகப் பார்த்து முடிப்பேன் என்று நினைக்கவில்லை.
வழக்கம் போல் பொழுது போகாமல், செய்வதற்கு வெட்டி வேலை எதுவுமிலாமல், ஏதாவது படம் பார்க்கலாம் என்று ஹார்ட் டிஸ்க்கை தட்டிக் கொண்டிருக்கும் போது, இதில் எதோ ஒரு எபிசோடை தட்டி விட, தலையில் நீல நிற ரோ போட்ட சிறுவன் ஒருவன் ஆறு கால் இருந்த பனி எருமை போன்ற மிருகத்தில் கூடவே நீல நிறக் கண்ணுள்ள அழகான சிறுமி, சின்னதாய்க் குடும்பி வைத்த, பார்த்தாலே 'லூசு' என்று தெரியும்படியான ஒரு சிறுவன் ஆகியோருடன் பறந்து வருவதைப் பார்த்தேன். சரி என்னதான் கதை என்று முதல் எபிசோடைத் தட்டி விட்டேன்.

முற்றிலும் சீன தேசத்துப் பின்னணியில், BOOK I - WATER, BOOK II - EARTH, BOOK III - FIRE என்று
மூன்று பாகங்களாக NIKELODEON என்னும் அமெரிக்க சேனலில் 2005 முதல் 2008 வரை மூன்று வருடங்கள் ஓடிய AVATAR - THE LAST AIR BENDER ன் முன்கதைச் சுருக்கம் இதுதான்.
நிலம், நீர், காற்று, நெருப்பு என்று நான்கு சேதங்கள் (EARTH KINGDOM, WATER TRIBE, AIR NOMADS, FIRE NATION)- மேலே படம் காண்க. சுமார் 100 வருடங்களுக்கு முன் இந்த நான்கு தேசங்களும் நெருப்பு தேசம் மற்றவை மீது போர் தொடுக்கும் வரை ஒன்றோடொன்று நட்புடன் இருந்து வந்திருக்கிறது. நெருப்பு தேசத்திடமிருந்து உலகைக் காப்பாற்றி, போரைத் தடுக்கக்கூடிய சக்தி நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு சக்திகளையும் ஒரேசமயத்தில் அடக்கி ஆளக்கூடிய அவதார் ரிடமே உண்டு. ஆனால், சரியான நேரத்தில், தேவைப்படும் சமயத்தில் மறைந்து விடுகிறார் அவதார். போரும் நடைபெற்று 100 ஆண்டுகள் கழித்து... (இங்கு தான் முதல் எபிசோடே ஆரம்பம் ஆகிறது)
100 வருடங்களுக்குப் பிறகு நீர் தேசத்துச் சிறுமி 'கடாரா' தன் அண்ணன் 'சாக்கா'வுடன் சேர்ந்து ஒரு மிகப்பெரிய பனிக்கட்டியின் நடுவே ஒரு சிறுவனையும், ஒரு மிகப்பெரிய பனி எருமையையும் கண்டுபிடிக்கிறாள். அந்தச் சிறுவன் பெயர் 'ஆங்'. அவன் ஒரு காற்று தேசச்சிறுவன். எத்தனை நாள் பனிக்கட்டிக்குள் இருந்தான் என்பதே அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் நூறாண்டுகளாக உறைந்து போயிருந்திருக்கிறான் என்பதை அவனுக்கு நடந்து கொண்டிருக்கும் போரைப் பற்றி எதுமே தெரியாததை வைத்து கண்டுபிடிக்கிறார்கள். நெருப்பு தேசம் முற்றிலும் அழித்துவிட்ட காற்று தேசத்தின் கடைசி பிரஜை, THE AVATAR தான் ஆங்.

நெருப்பு அரசன் ஒஸாயிடமிருந்து (OZAI) உலகைக் காப்பாற்ற 'ஆங்', நிலம், நீர், காற்று, நெருப்பு என்று நான்கு சக்திகளையும் வசப்படுத்தவும், அவதார நிலையை கட்டுப்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக உலகத்தைச் சுற்றி ஆங் மற்றும் கடாரா-சாக்கா கூட்டணி, தலைசிறந்த ஆசிரியர்களை கண்டுபிடித்து, வெற்றி பெறுவது மீதி முழுக் கதை.
ஒரு சாதாரண கார்டூனில் பாசம், நட்பு, காதல், கோபம், துரோகம், வீரம், இயலாமை, பரிவு, சிரிப்பு, அழுகை, பரிவு, ஆளுமை, பக்தி என்று மணிரத்னம் சமாச்சாரத்திலிருந்து பேரரசு சமாச்சாரம் வரை சகலத்தையும் புகுத்தி அசத்தியுள்ளார்கள். இதன் முதல் பாகம் THE LAST AIRBENDER என்ற பெயரில் 2010 ஆம் ஆண்டு வெளிவரவுள்ளது. இயக்குபவர் மனோஜ் நெல்லியாற்று ஷியாமலன். ஹாலிவுட்இல் இந்த பாண்டிச்சேரிக்காரரின் பெயர், M.NIGHT SHYAMALAN. இன்னொரு கொசுறுத் தகவல்.இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பவர் 'ஸ்லம்டாக்' புகழ் தேவ் படேல்.

AVATAR கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்...

ஆங் (AANG):
காற்று தேசத்து கடைசி பிரஜை. THE AVATAR. ஆனால்,விவரம் இல்லாத, விளையாட்டுச் சிறுவன். தன் பொறுப்பு பெரியது என்று தெரிந்தும் மற்ற சிறுவர்களைப் போலத் தன்னால் இருக்க முடியவில்லையே என்பதாலேயே ஓடி மறைந்தவன். இவன் செய்யும் அனைத்தையும் ரசிக்க முடிகிறது. கடாரா எப்படியாவது இவனுக்குக் கிடைத்து விட வேண்டும் என்று நமக்குத் தோன்றும் அளவிற்கு இவன் நம்மை ஆட்கொள்வது அழகு. பிறப்பால் இவன் காற்றை வசப்படுத்தும் சக்தி கொண்டவன் (AIR BENDER).

கடாரா (KATARA):
சிறு வயதிலேயே நெருப்பு தேசத்தினால் தன் தாயை இழந்த நீர் தேசச் சிறுமி. அதனாலேயே அவதாரைக் கண்டுபிடித்தவுடன் அவனுக்கு உதவுவதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவள். நீரை வசப்படுத்தும் சக்தி கொண்டவள் (WATER BENDER). இவள் கோபப்பட்டால் 'பூவொன்று புயலானது' கதை தான். கதையின் நாயகி, அவதாரின் குரு, காதலி என எல்லாமே இவள்தான்.

சாக்கா (SAKKA):
கடாராவின் அண்ணன். 'Meat Lover, Protogonist' என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் நீர் தேசத்து வீரன். இவனுக்கென்று அபார சக்திகள் எதுவுமில்லை. உண்மையிலேயே சிறந்த புத்திசாலியாக இருந்தாலும் இவன் செயல்கள் 'தம்பி நீ லூசுதான?' என்று பார்த்தவுடன் கேட்க வைக்கும். பல முறை இவன் செயல்கள் பார்த்து நான் லூசு மாதிரி தனியே சிரித்துக் கொண்டிருந்திருக்கிறேன். என் பேவரிட்.

டப்ஹ் (TOPH):
நிலத்தை வசப்படுத்தக் கூடிய சக்தி கொண்ட பார்வையில்லச் சிறுமி (EARTH BENDER). அதிர்வுகளின் மூலம் தன் கால்களால் உலகத்தைப் பார்ப்பவள். அதிர்வுகள் மூலமே இரும்பையும் வளைக்கும் சக்தியைக் காலப்போக்கில் கற்ற பெரும் வீராங்கனை. அவதாரின் மற்றுமொரு குரு, தோழி.

ஜூக்கோ (PRINCE ZUKKO):
நெருப்பு தேசத்தின் சக்கரவர்த்தியான தன் தந்தை ஒஸாயாலேயே நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசன். நெருப்பை வசப்படுத்தும் சக்தி கொண்டவன் (FIRE BENDER). அவதாரைக் சிறைபிடித்தால் தான், இழந்த தன் கௌரவத்தையும், அடுத்த அரச பட்டத்தையும் பெற முடியும் என்பதற்காக இறுகி இறுகி இரும்பாக வெறிபிடித்துத் திரிபவன். முதல் இரண்டு பாகங்களில் அவதாரின் முக்கிய வில்லனாக வரும் இவன் உண்மையில் நல்லவன்.

அஜுலா (PRINCESS AZULA):
ஜூக்கோவின் தங்கை. ஆனால் அவனை விட பன்மடங்கு சக்தி கொண்டவள். மின்னலை உருவாக்கி எதிரியை அழிப்பவள். உண்மையில் இவள் தான் அவதாரின் வில்லி. அழகி. ஆனால் ஆபத்தானவள். தான் தான் என்னும் இறுமாப்பும், தன்னை யாராலும் ஜெய்க்க முடியாது என்ற திமிரும் உள்ள பட்டது இளவரசி. ஒஸாயின் உண்மையான பிம்பம்.

ஐராஹ் (UNCLE IROH):
நெருப்பு தேசத்தின் அரசனாக இருக்க வேண்டியவர், தன் மகனைப் போரில் இழந்த துக்கத்தினால் வெறுத்து போய் அரச பதவியை தம்பியிடம் கொடுத்து விட்டு, தம்பி மகன் ஜூக்கோவை மகன் போல் வளர்த்து வருபவர். ஜூக்கொவின் குரு, புத்திசாலி, பலசாலி, டிராகன்களிடமிருந்து நெருப்பை ஆளும் சக்தியைக் கற்றுக் கொண்ட உண்மையான நெருப்பு வீரன்.


இவர்கள்
தவிர, அவதாரின் செல்லப் பிராணிகளான ஆப்பா (APPA), மோமோ (MOMO) இரண்டும் முக்கியமான கதாப்பாத்திரங்கள்.

சாதாரணமாக ஒரு பதிவெழுத எனக்கு 2 மணி நேரமாவது ஆகும். ஆனால் இந்தப் பதிவெழுத்த 3 மணி நேரம் ஆகிவிட்டது. இருந்தாலும் பரவில்லை... ரொம்ப நாட்கள் கழித்து நான் ரசித்த கார்டூனிற்கு இது கூட செய்ய வில்லை என்றால் எப்படி....?

பிரச்சனைக்கு வன்முறை தீர்வல்ல. அன்பே கடவுள் என்பதைத் தான் இந்த அவதார் நமக்குச் சொல்கிறார்....


AVATAR
- சிறியவர், பெரியவர் பேதமில்லை. கண்டிப்பாகப் பார்க்கவும்.

டவுன்லோட் லிங்க் கீழே:
http://www.mininova.org/search/?search=avatar+the+last+airbender&cat=0

You Might Also Like

3 comments

  1. சூப்ப்ரா இருக்கும்.. சுட்டி டி.வியில நல்லாவே தமிழ் படுத்தியிருப்பாங்க..
    என்னோட வேலையெல்லாம் விட்டுட்டு பாத்திருக்கேன்.. அவ்ளோ நல்லா அரை மணி நேரத்தில ... ஹும் ... நன்றி.

    ReplyDelete
  2. மிகவும் நல்ல தொடர்.நான் கூட விளையாட்டிற்குதான் டவுன்லோட் செய்து பார்த்தேன்.சிறுவர் விரும்பும் தொடர்.

    ReplyDelete
  3. முதன்முதலில் இதை சுட்டி டிவியில் பார்தேன். மிகவும் பிடித்துப் போனது. பின்பு அனைத்து பாகங்களையும் தரவிறக்கி முழுதும் பார்த்தேன். அப்போது நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டு இருந்தேன். இப்போது வேலைக்கு சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. சமீபத்தில் இந்த தொடரை மீண்டும் முழுதாகப் பார்த்து முடித்தேன். இதைப்பற்றி தமிழில் பதிவுகள் வந்திருக்கிறதா எனத் தேடிய போது இக்கட்டுரையைப் பார்தேன். நல்லா எழுதியிருங்கீங்க! :-)

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...