THE FINAL DESTINATION - மீண்டும் ஒருமுறை மரண பயம்...

10:23:00 AM

தியேட்டரில் ஆங்கிலப் படம் பார்ப்பது என்பது எனக்கு பிடித்த விஷயம் என்றாலும் ஒன்றரை மணி நேரத்திற்காக 200 ரூபாய் கொடுப்பதற்கு நான் பல முறை தயாராய் இருந்ததில்லை. பெங்களூர் வருவதற்கு முன் நேரடி ஆங்கிலப் படம் நான் பார்த்தே இல்லை. ஆனால் பல ஆங்கில படங்களை, "டாக்டர் கேர்ணல், அது நம்மள நோக்கி தான் வந்திக்கிட்டு இருக்கு, அதுங்க நம்மள அழிக்கப் போகுதுங்க " போன்ற இப்போதைய விஜய் டிவி வசனங்களில் பார்த்திருக்கிறேன். அப்படி தமிழில் டப் செய்யப்பட்ட படங்களில் எங்கு மிகவும் பிடித்த படம் 'தி மாஸ்க்'. எனக்கு தெரிந்து தமிழில் முறையாக டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட முதல் டப்பிங் படம் இதுதான். அதேபோல் பிடித்த ஆங்கில படத் 'தமிழ்' டயலாக் 'மாட்டுச் சாணம்'. டெர்மினேட்டர் அர்நால்ட் 'Bull Shit' என்று சொல்வதை தான் இப்படி 'மொழி' பெயர்த்திருப்பார்கள்.
முதன் முறையாக முழு மனதோடு 200 ரூபாய் கொடுத்து, ஒரிஜினல் 'விசயங்களுடன்' நான் பார்த்த நேரடி ஆங்கிலப் படம் Fast and the Furious 4. அந்தப் படம் தியேட்டர் போய் பார்க்கிற அளவிற்கு சிறப்பாக இருக்கவில்லை. பின்பு ஒரு 4, 5 படங்கள் கழித்து நான் இன்று வேறு படமே இல்லையே என்ற வருத்தத்துடன் வேண்டா வெறுப்பாக போய் உட்கார்ந்த படம் THE FINAL DESTINATION (FD). எனது வெறுப்பிற்கு காரணம் ஏற்கனவே வந்த மூன்று பாகங்களிலும் மாறாத ஒரே மாதிரியான கதை, திரைக்கதை. ஒரு கொடுரமான விபத்தில் பலர் செத்துப் போக சிலர் பிழைக்க பிறகு அந்தச் சிலரும் கொடுரமாக சாவதுதான் கதை. முதல் பாகம் ரொம்பவுமே மிரட்டலாக, அதிர்ச்சிகள் நிறைந்ததாக இருந்தது. பாத்ரூமில் தண்ணீர் சொட்டினால் கூட பயத்தில் தெறித்து ஓடி வரவைத்த படம் FD1. இரண்டாம் பாகமும் பரவாயில்லை. மூன்றாம் பாகம் என்னை நிறையவே கடுப்பேற்றி விட்டது. இரண்டாம் பாகத்தையும் மூன்றாமானதையும் அடுத்தடுத்து பார்த்ததால் தான் இந்தப் பிரச்சனை. அதிர்ச்சிகள் பழகி முதிர்ச்சி அடைந்துவிட்டது. அதற்குப் பிறகு பேச்சிற்கு கூட FD பற்றி பேசவில்லை, பார்க்கவும் இல்லை.
சென்ற வாரம் 'QUICK GUN முருகன் ' பார்த்து நொந்து வெளியே வந்த போது THE FINAL DESTINATION - REST IN PIECE - RELEASING THIS WEEK என்ற போர்டு பார்த்து 'இவனுக வேற மறுபடியும் ஆரம்பிசிடானுவலா...' என்று நினைத்துக் கொண்டே வந்தேன். இந்த வாரம் DISTRICT 9 தான் போக நினைத்தேன். நல்ல படங்கள் இந்த ஊரில் இரண்டு மூன்று வாரம் கழித்து தான் வரும். சரி வந்தது வந்தாச்சு படம் பார்க்காம போகக்கூடாது என்ற முடிவில், நான், சுரேந்திரா மற்றும் புது நண்பர் அசோக் மூவரும் வெட்டியாக மூன்று மணி நேரம் forum இல் கழித்துவிட்டு பின் ஒரு வழியாக பார்த்த படம் FINAL DESTINATION. கடைசியாக FD பாத்தது இரண்டு வருடங்களுக்கு முன் அதுவும் கம்ப்யூட்டர் திரையில் என்பதால் இந்த பெரிய திரை FD என்னை மறுபடியும் மிரட்டி விட்டது.
இப்போது வரும் பெரும்பாலான ஆங்கிலப் படங்கள் 3D வெர்சனில் தான் வெளிவருகிறது. அதனால் சாதாரணமாய் பார்க்கும் போதும், காட்சிகள் நம் கண்ணைக் குத்திச் செல்வது போல் இருக்கிறது.அதிலும் இந்தப் படத்தில் வேகமாக கம்பி ஒன்று உருவிக் கொண்டு வருவது, பெரிய டயர் உருண்டு வருவது, ரத்தம் தெறிப்பது என்று பல காட்சிகள் இருக்கிறது. சாதாரணமாய் பார்த்த எனக்கே மூணு நாளைக்கு சோறு இறங்காது போல் இருக்கிறது; 3D வெர்சனில் பார்ப்பவர்கள் ஒரு வாரத்தில் பயத்திலேயே கோமாவிற்குப் போய் விடுவார்கள். அந்தளவிற்கு 'இப்படியெல்லாமா யோசிக்கிறது' என்று பயப்பட வைக்கும் காட்சிகள் நிறைய இருக்கிறது.

படத்தின் கதை இதுதான்.கார் ரேஸ் பார்க்க வருபவர்களில் ஒருவனுக்கு மட்டும் பெரிய விபத்து நடக்கப் போவது கண்ணில் தெரிய, நண்பர்களையும் வேறு சிலரையும் வெளியே கூட்டிக் கொண்டு வந்து விடுகிறான். அவன் நினைத்த மாதிரியே கொடூரமான விபத்து நடக்கிறது. விதிப்படி சாகவேன்டியவர்கள் இவனது எச்சரிக்கையால் பிழைத்துவிடுகின்றனர். விதியை ஏமாற்றிய இவர்களை விதி எப்படி துரத்தித் துரத்திதிக் கொடூரமாகக் கொல்கிறது என்பது தான் கதை.
'i will keep an eye on you' என்று ஒருத்தி சொல்லிவிட்டுத் திரும்ப, அடுத்த நொடி அவள் கண்ணில் வேகமாக வந்து அடித்து அவள் கபாலத்தைப் பிளக்கும் கல், நீச்சல் குளத்தில் 'அழுத்தம்' காரணமாக இழுக்கப்பட்டு குழாய் வழியே குடல் தெறித்து சாகும் காட்சி, 'அதெல்லாம் ஒன்னும் நடக்காதுடா மாப்ள' என்று பேசிக்கொண்டே வரும் போது ஒரு வேன் வந்து இடித்துக் கொண்டு போகும் காட்சி, எல்லாவற்றிக்கும் மேலாக தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் திரையில் வரும் கவுண்ட் டவுன் படி வெடித்துச் சாவது, ஹீரோயின் மெசினில் மாட்டிய கரும்பைப் போல் எக்ஸ்கலேட்டரில் மாட்டிச் சக்கையாவது என்று பலப் பல கொடூரமான காட்சிகளால் நமக்கும் மரண பயத்தை உண்டாக்குகிறார்கள். தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கே தியேட்டரில் நடக்கும் பயங்கரமான தீ விபத்தைக் காட்டுகிறார்கள். இந்த அமெரிக்க பசங்களின் கொடூர எண்ணத்திற்கு ஒரு அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
அதிலும் இந்த பாகத்தில் இயக்குனர் பல 'டச்' வைத்துள்ளார். எதோ நடக்கப் போகிறது என்று நினைக்கும் போது ஒரு சவமும் நடக்காது. நடக்காது என்று நினைக்கும் போது ஏதாவது ஒன்று பறந்து வந்து கொன்று விடும். அப்படி சும்மா நின்று பேசிக்கொண்டிருக்கும் போதே 'செத்துவிடுவார்களோ, அது வந்து இப்படி குத்துமோ, அப்படி பிளக்குமோ' என்று நம்மைத் தவிக்க விடுகிறார்கள், திரைக்கு வெளியே இருக்கும் நம்மையும் உள்ளே இழுக்கிறார்கள். ஆக்ஸிஜன் சிலிண்டர் ஒன்று ஒருவன் வயிற்றில் மோதி கத்தி மாதிரியான வெளிக் கம்பியில் அவனை இடித்து அவனது வயிற்றுப் பகுதி மாம்பலம் போல துண்டு துண்டாகப் பிளக்க...சே! பார்த்ததை எழுதக் கூட முடியவில்லை. பயமாக இருக்கிறது. எனக்கு மட்டும் அல்ல, படம் பார்த்து விட்டு வெளியே வரும் அனைவரது கண்ணிலும் மரண பயம் தெரிந்தது.
3D இல் இந்தப் படத்தைப் பார்த்தால் ஒரு life time experience கிடைக்கும் என்பது மட்டும் உறுதி...

THE FINAL DESTINATION - Dont MISS It !!!

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...