உன்னை போல் ஒருவன்...
9:55:00 AMகமல் ரீமேக் படம் நடித்தால் அதற்கு ஒரு காரணம் இருக்கும். அந்தப் படத்தில் ஏதாவது ஒருசிறப்பு இருக்கும். கமலின் முக்கியமான படங்களான நாயகன், அன்பே சிவம், சதி லீலாவதி, அவ்வை சண்முகி போன்ற படங்கள் ஆங்கிலப் படங்களின் தழுவல்களே. ஒரு சாதாரண ஆக் ஷன் படத்தை கமல் ரீமேக் செய்வதில்லை. தமிழுக்கு இந்த கதை வேண்டும் என்று ஒரு தேடல் செய்து படங்கள் செய்பவர் கமல்.
ஹிந்தில் வெளியான 'A Wednesday' படத்தின் ரீமேக் தான் இது என்பதை முதலிலேயே சொல்லி விட்டார்கள். இதற்கு முன் கமல் நடித்த ஹிந்தி ரீமேக் வசூல்ராஜா mbbs. இன்று வரை எனது டாப் 10 பேவரிட் படங்களில் வசூல் ராஜாவும் ஒன்று. அது தான் கமல் ஸ்பெஷல். உன்னை போல் ஒருவனும் அது போல் தான். கொஞ்சம் ஸ்பெஷல்.
கதை இதுதான். நகரத்தின் முக்கியமான இடங்களில் குண்டு வைத்திருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிக்கு அடையாளம் தெரியாத நபர் போன் செய்கிறார். முக்கிய தீவிரவாதிகள் நால்வரை விடுதலை செய்யச் சொல்கிறார். அவர் யார் என்பது யாருக்கும் தெரியவில்லை. செய்யும் போன் கால்களும் வேறு வேறு நம்பர்கள். போலி விலாசங்கள். பெயர் தெரியாத ஒரு சாதாரண 'common man' ஏன் தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்கிறார் என்பது சாட்டையடி கிளைமாக்ஸ்.
நசுருதீன் ஷா நடித்த பாத்திரத்தில் கமல். நடிப்பைப் பற்றி சொல்லத் தேவை இல்லை. ஒரு கட்டி முடிக்கப் படாத பெரிய கட்டடத்தின் உச்சியில் நகரத்தைப் பார்த்தபடி, உட்கார்ந்த இடத்திலேயே முக பாவனையிலேயே நடிப்பைக் காட்டுகிறார். அனுபம் கேர் பாத்திரத்தில் மோகன் லால். பல இடங்களில் இவர் கமலை விஞ்சி விடுகிறார். அபாரமான நடிப்பு.
இந்த மாதிரியான படங்களுக்கு வசனம், பின்னணி இசை ரொம்பவும் முக்கியம். அதை அறிந்து அற்புதமாக செய்திருக்கிறார்கள். இசை, ஸ்ருதி ஹாசன். சரியான இடங்களில் கமல் குரலிலேயே ஹும்மிங் கொடுத்திருக்கிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது. வசனம், இரா. முருகன். 'கோவமா?' என்று மனைவி கேட்பதற்கு 'உன் மேல என்ன கோபம், கோபப்படுறதுக்கு தான் இந்த நாடே இருக்கே' என்று கமல் சொல்லும் முதல் முக்கிய வசனத்திலேயே படத்தின் ஆணிவேரை அழகாகச் சொல்லி விடுகிறார்கள். இருவருக்கும் பாராட்டுக்கள்.
ஹோம் செக்ரடேரி லட்சுமியிடம் மோகன் லால் பேசும் வசனங்கள் அனைத்திற்கும் கைத்தட்டல் விழுகிறது. மிகவும் நேர்த்தியான அதே சமயம் சில இடங்களில் நகைச்சுவையான வசனங்கள். ஆங்கிலத்தின் ஈடுபாடு கொஞ்சம் அதிகமாகவே இருந்தாலும் தேவைப் படும் இடங்களில் தேவையான ஆட்கள் மட்டுமே பேசுகிறார்கள். அதனால் தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். கலைஞர் பேசுவது போலும் சில வசனங்கள் இருக்கிறது படத்தில்.
குறை என்று சொன்னால், ஹிந்தி 'A Wednesday' பார்த்தவர்களுக்கு, உன்னை போல் ஒருவன் அந்த அளவிற்கு இல்லையே என்று நினைக்கத் தோன்றலாம். அதற்கு முக்கியமான காரணம் கமலை அந்த 'common man' ஆக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதது தான். நசுருதின் ஷா ரொம்பவுமே சாதாரணமாக இருப்பார் அந்தப் படத்தில். அதே போல் தான் செய்யும் செயல்களுக்கு அவர் சொல்லும் காரணமும் சாதாரணமாக, ஆனால் ஒரு தனி மனிதனுக்கு மிகவும் வேதனை தரும் காரணமாக இருக்கும். அவர் வரையில் அண்டக் கோபம் நியாyஅமானதாக இருக்கும். அதே காரணத்தை இந்தப் படத்திலும் உபயோகித்து இருக்கலாம். ரிபோட்டர் பெண், Hacker சிறுவன், போலீஸ் அதிகாரிகள் என்று அனைவரும் 'ஹிந்தியில் நன்றாக இருப்பார்களே' என்று தோன்றுகிறது. இருந்தாலும் பரவாயில்லை. தீவிரவாதத்தை ஒழிக்கக் காரணம் தேவை இல்லை.
மறுபடியும் மறுபடியும் முஸ்லீம்களை தீவிரவாதிகளாகக் காட்டுவது சின்ன வருத்தம். அனைத்து முஸ்லீம்களும் தீவிரவாதிகள் என்பது போல் ஒரு மாயையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 'பாக்கிஸ்தான்' என்று சொன்னாலே முஸ்லீம் என்று தான் கேட்கிறது.
ஒரு காட்சியில் கூட வித்யாசம் காட்டாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். படம் 110 நிமிடம் மட்டும் தான். இந்த மாதிரியான படங்கள் நேரடியாக தமிழில் நிறைய வரவேண்டும். 5 பாட்டு, 4 காமெடி டிராக், 3 பைட், 20 தொப்புள் சீன என்னும் மாமூல் தமிழ் படங்கள் போர் அடிக்கிறது...
உன்னை போல் ஒருவன் - அவனை போல் இல்லையென்றாலும்...
0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...