100 நாடுகள் 100 சினிமா #2 SLOVAKIA - HEAVEN, HELL... EARTH (2009)

7:44:00 PM

Laura Siváková | Slovakia | 2009 | 95 min.

(*** English Synopsis given below ***)

"அழகான லக்ஷனமான பெண் குழந்தைக்கு, கண்டிப்பாக ஒரு கலெக்டரோ, டாக்டரோ தான்டியம்மா உனக்கு மாப்பிள்ளையாக வருவான் என்று ஒருத்தி ஆசிர்வதிப்பாள். ஏன் அந்தப் பெண் ஒரு கலெக்டரோ, டாக்டரோ ஆவாள் என்று வாழ்த்தக்கூடாது"

'எப்போதும் பெண்' நாவல் முன்னுரையில் சுஜாதா இப்படிச் சொல்லியிருப்பார். 'மாற்றம் ஒன்று தான் மாறாதது' என்பது பழமொழி, 'பெண்' என்று வரும்பொழுது அதுவும் ஒத்துப்போகாது. எத்தனை கலாச்சாரங்கள் தோன்றினாலும், நாகரீக வளர்ச்சியால் வாழ்க்கை முறைகள் மாறிப்போனாலும், இன்று இந்த நிமிடம் வரை ஆணுக்குச் சமமாக பெண் எங்கும் மதிக்கப்படுவதில்லை. இங்கு நம்மை ஆள்பவர் பெண்ணாக இருந்தாலும் அந்த ஆட்சியின் தூண் ஆண்களே. பொன், பொருளுக்கு அடுத்து மனிதன் தேடி அடைய நினைக்கும் ஒரு பொருளாகவே வாழ்ந்துவருகிறார்கள் பெண்கள். பெண் உரிமையைப் பற்றிச் சொன்ன திரு. சுஜாதா அவர்களே தன் மனைவியை, வீட்டுப்பெண்களை எப்படி நடத்தினார் என்பதை அவர் இறந்த பிறகு திருமதி. சுஜாதா ரங்கராஜன் கொடுத்த பேட்டிகளைப் படித்தால் தெரியும். ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து, ஸ்ரீரங்கத்தில் தாத்தா பாட்டியிடம் வளர்ந்தவர். வளர்த்த, வளர்ந்த விதம் அப்படி. ஜாதி, மதம், மொழி, இனம், நாடுகளைச் சொல்லிக் குற்றமில்லை. பிரச்சனை இந்த சமூகத்தில் இருக்கிறது.

படத்திற்கு வருவோம்... படத்தின் ஆங்கில டைட்டில் - Heaven, Hell... Earth. மிகப் பொருத்தமான தலைப்பு. நான் சென்ற முதல் உலகத் திரைப்படவிழாவில் பார்த்த படம். அப்படியே மனதில் தங்கிவிட்டது. ஏற்கனவே இந்தப் படத்தைப் பற்றி என் பிளாகில் எழுதியுள்ளேன்.

க்ளாரா (Clara) ஒரு பாலே டான்ஸர். சந்தோஷமாக இருக்கிறாள். கனவுகளைச் சுமந்தபடி காத்திருக்கிறாள். உலகின் மிகசிறந்த நடனக்கலைஞர்கள் கூடும் விழாவில் ஆடும் பெரும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கவிருக்கிறது. மிகத் தீவிரமாகப் பயிற்சி செய்கிறாள். வெளியூரிலிருந்து வரும் தன் காதலனிடம் தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பற்றிச் சொல்லிச் சொல்லி மகிழ்கிறாள். ஆனால் அவனோ வேறு ஒரு பெண்ணுடன் நட்பு வளர்த்து கிளாவிற்கு துரோகம் செய்கிறான். வலியுடன் அவனை விட்டு விலகி தன் அம்மாவுடன் போய்த் தங்கிக்கொள்கிறாள் க்ளாரா. அங்கு சென்ற பின் தான் தெரிகிறது அம்மாவிற்கும் அப்பாவிற்கும் பிரச்சனை, இருவரும் பிரியும் நிலையில் இருக்கிறார்கள் என்று. அண்ணனிடம் போகலாமென்றால் கொடுமைக்கார அண்ணிக்கு இவளைக் கண்டாலே ஆகாது. எல்லாவற்றிற்கும் மேலாக படியில் இறங்கும் போது கால் வழுக்கி கீழே விழந்து இடது காலில் பலத்த காயம் ஏற்படுகிறது. பெரிய கட்டுடன் நடக்கவே சிரமப்படுகிறாள்.

தனது நெடுநாள் நடனக்கனவு மெல்ல மெல்ல கரைந்து போவதை உணர்கிறாள். அந்தச் சமயத்தில் தன் தந்தை வயதுடைய டாக்டர் ருடால்ஃப் (Rudolf) உடன் பழக்கம் பழக்கம் ஏற்படுகிறது. நடனம் மறந்து புது பந்தத்தில் சிக்கித் திளைக்கிறாள் க்ளாரா. காதல், காமம், தாய்மை என்று அந்த 22 வயதுப் பெண்ணிற்கு புதிய அனுபவங்கள் கிடைக்கிறது. புதிய அனுபவங்கள் க்ளாராவிற்கு கொடுத்தது என்ன? என்பது தான் இந்தப் படம்.

க்ளாராவிற்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. குளம் ஒன்றின் நடுவில் மிதந்துகொண்டிருக்கிறாள். சுகமான தருணங்களில் குளத்துடன் சேர்த்து பயணிப்பதைப் போலவும், மோசமான தருணங்களில் அதே குளம் உள்ளே இழுத்து தன்னை மூழ்கடிப்பதைப் போலவும் கனவு காண்கிறாள் க்ளாரா. நிலையற்ற உறவுகளால் சொர்க்கமும் நரகமும் மாறி மாறி வருகிறது. ஆண்களின் கைப்பாவையாக அவர்கள் தனக்கு நிர்ணயிக்கும் வாழ்க்கையே வாழ்ந்துகொண்டிருப்பது தெரிந்தும், ஏதும் செய்ய முடியாத கையறு நிலையிலேயே காலம் கடத்துகிறாள் க்ளாரா. மாற்றத்தை அவள் விரும்பினாலும், சுற்றியிருக்கும் ஆண்கள் அவளுக்கு காட்டுவது ஒரே உலகத்தை தான்.

Dir. Laura Siváková
ஒரு பெண்ணின் அகப்போராட்டங்களைச் சொல்லும் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஒரு பெண் - Laura Siváková.

ஒரு பெண் இயக்கிய ஒரு பெண்ணைப் பற்றிய இந்தப் படமும் ஆண்கள் ஆளும் சினிமா உலகம் அவ்வளவு சீக்கிரன் அங்கீகரிக்கவில்லை. திரும்பிய இடமெல்லாம் பிரசனை. சூட்டிங் நடந்தது 40 நாட்கள். ஆனால் அது இரண்டு வருடங்களில் 12 நாட்கள், 28 நாட்கள் என்று இரண்டு செட்யூல்களில் நடந்துள்ளது. அதற்குள் படத்தில் நடித்த 13 வயதுக் குழந்தை வளர்ந்து ரீ-காஸ்ட் செய்யும் அளவிற்கு போயிருக்கிறது. க்ளாராவின் அண்ணன் கதாபாத்திரத்திற்கும் அதே நிலமை தான். படத்தின் காஸ்ட்-க்ரூ பாதிக்கு பாதி மாற்றப்பட்டிருக்கிறது. க்ரெடிட்ஸில் வருவது 50 பெயர்கள் என்றாலும் இறுதிக்கட்ட வேலைகள் வரை கூட இருந்தது 20 பேர்தானாம். ஆரம்பத்திலிருந்து படத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் என்று பார்த்தால் 220 பேர் வரை வரும் என்கிறார் இயக்குனர் Laura Siváková.

படத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு சிறு தகவல். சமீபத்தில் படித்தது. அக்டோபர் 1975 ஆம் ஆண்டு, சம உரிமை கேட்டு ஐஸ்லாந்தில் (Iceland) பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். 90% பெண்கள் வீட்டைவிட்டு, வேலையை விட்டு வெளியே வந்து நாட்டையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார்கள். அடுத்த வருடமே பாராளுமன்றத்தில் சம உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சம உரிமை. சம ஊதியம். சரியாக ஐந்து வருடங்களில் ஐஸ்லாந்தின் முதல் பெண் ஜனாதிபதி தேர்தெடுக்கப்பட்டார். இன்று ஆண், பெண் சமத்துவத்தில் (gender equality) ஐஸ்லாந்து முதல் இடத்தில் உள்ளது. 'ஃபெமினிஸம்' என்பது பெண் உரிமைப் போராட்டம், பெண் விடுதலை மட்டும் என்று நினைப்பவர்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். பெண்கள் இயல்பிலேயே வலிமையானவர்கள். பெண் இல்லாமல் ஆண் இல்லை. இந்த உலகமும் இல்லை. பெண்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்து இந்தப் பதிவு பலரைச் சென்றடைய உதவுங்கள்.

Nebo Peklo... gem (English Title: Heaven, Hell... Earth) is the story of a young 22 year old ballet dancer, Clara. She is living a perfect life with a businessman boyfriend and a contract waiting for her to participate in an International Dance Festival. Clara is clearly in Heaven. But soon Heaven turns Hell when her life takes random turns. She leaves her cheating boyfriend, relaises that her mom and dad are separating and the family is falling apart, injures her leg, steps away from dancing and finally lands in a rich man's house for babysitting his 12 year old daughter. The father of the house Rudolf, a divorcee promises new life to Clara and she sees Heaven again which again doesn't last long...

Directed by a femal Director Laura Siváková, the movie explores and questions the male dominent soceity on how women are treated, manipulated and used based on the interests of men. The director herself had turned mountains to shoot and release the film.

Watched this movie in Chennai International Film Festival, 2010. Did not find any other Slovakian Films in the Internet or through DVDs. Recommendations are welcome.

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...