The Dark Knight Rises படம் வெளியாவதற்கு முன்பும் பின்பும்
பதிவுலகமே அல்லோல் கல்லோல் பட்டுக்கொண்டிருந்தது. படம் இப்படி இருக்குமா அப்படி இருக்குமா,
இந்த சாதனையை முறியடிக்குமா அந்த சாதனையை முறியடிக்குமா, நோலன் தன் மேஜிக்கை காடுவாரா
மாட்டாரா அதுஇதுவென்று ஊரே பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து விட்டு நானும்
கூட ஒரு பதிவை (படம் பார்ப்பதற்கு முன்) எழுதி வைத்தேன். The Avengers வெளியான போதும்
இதே நிலை தான். நானெல்லாம் முதல் போஸ்டர் ரிலீஸ் ஆனவுடன் காத்திருக்க ஆரம்பித்துவிட்டேன்.
ஆனால் இன்று தமிழில் இதே போன்றதொரு சூப்பர் ஹீரோ படம் வெளியாகிறது - முகமூடி. ஆனால்
அது பற்றி பதிவுலகில் இப்பொழுது வரை மூச்சே இல்லை. காரணம், நம்மைப் பொறுத்தவரை இந்த
முகமூடி மற்றுமொரு ஆங்கிலப் படத்தைப் பார்த்து காப்பியடித்தோ தழுவியோ எடுக்கப்படும்
மற்றுமொரு தமிழ் படம். எப்படியும் மட்டமாகத்தான் இருக்கும் என்ற இளக்காரம். யாருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அப்படியே இருந்தாலும்
பெரிதாக அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஏனென்றால் நாம் ஏற்கனவே பல சூப்பர் ஹீரோ படங்களைப்
பார்த்தவர்கள். தமிழில் இன்று வெளியாகும் முகமூடியெல்லாம் அவற்றை வைத்துப் பார்க்கும்
போது நிச்சயம் ஜுஜுபி யாகத்தான் இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இன்று மதியம்
12 மணிக்கு மேல் (முதல் ஷோ முடிந்தவுடன் என்று கூட எடுத்துக்கொள்ளாலாம்) அடுத்த இரண்டு
நாட்களுக்கு முகமூடி தான் டார்கெட். படத்தைப் பார்த்தோமா, சோறு தண்ணி கூட பாக்காம சுடச்சுட
படத்தின் மொத்த கதையையும் எழுதி “மிஷ்கினுக்கு இது தேவையா?” “புலியைப் பார்த்து சூடு
போட்டுக்கொண்ட பூனை” “இதுவெல்லாம் ஒரு சூப்பர் ஹீரோ கதையா” “இந்த சரித்திர காப்பிக்கா
இவ்வளவு பிட்டு” “அது எப்படித்தான் வெக்கமே இல்லாம விஜய் டி.வில வெற்றி நடை போடுகிறதுனு
போடுறாங்களோ” என்று ஒரு டெம்ப்ளேட் விமர்சனத்தை எழுதினோமா என்று நாம் இருப்போம். பலர்
இந்நேரம் விமர்சனத்தின் “கதை சுருக்கம்” பாகத்தை மட்டும் விட்டுவைத்து விட்டு மீதியை
எழுதி ரெடியாக இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். முதல் ஆளாக விமர்சனத்தைப் போட
வேண்டடுமல்லவா? (இதைப் பற்றி விரிவாக எனது கருத்தை எழுத வேண்டுமென்று நீண்ட நாட்களாக
ஒரு அவா!)
ஒரு சாதாரண படத்திற்கு நாம் தரும் “மரியாதை” முகமூடிக்கும்
கிடைத்து விடக்கூடாதே என்பதால் தான் இந்த அவசர பதிவு. இந்த பதிவினால் நான் எதை சாதிக்கப்
போகிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் ஒரு சிறு நம்பிக்கை தான்.
Batman, Spiderman, Superman, Ironman, He – Man, Captain America, Hulk, Green
Lantern, Kick Ass, Thor, Fantastic Four, Incredible, X - Men என்று பல சூப்பர் ஹீரோக்களை
பார்த்துவிட்டு காத்துக்கொண்டிருக்கும் நமக்கு, “முகமூடி” என்று ஒரு தமிழ் சூப்பர்
ஹீரோவை “குவாட்டர் சொல்லு மச்சி” ஜீவாவை வைத்து காட்டத் துணிந்திருக்கிறாரே இயக்குனர்
மிஷ்கின் அது போல.
ஆங்கிலத்தில் குறைந்தது ஒரு 100 சூப்பர் ஹீரோ படங்களாவது
வந்திருக்கும். அவையனைத்தயும் நாம் பார்த்திருக்கிறோம், ரசித்திருக்கிறோம். தலையில்
தூக்கி வைத்து கொண்டாடியிருக்கிறோம். அது தான் நமது இந்த “முகமுடி”க்கு முதல் எதிரி.
அதற்காக ஆங்கிலப் படமே பார்க்கக்கூடாதா? தமிழ் வாழ்க என்று கத்திவிட்டு தமிழ் ப்டங்கள்
மட்டும் தான் பார்க்க வேண்டுமா என்று கேட்க வேண்டாம். எதை எடுத்தாலும் வெளிநாட்டவருடன்
வைத்து ஒப்பிட்டு பார்க்கும், நம்முடையதை அசிங்கப்படுத்திப் பார்க்கும் பழக்கம் நமக்கிருக்கிறது.
நீண்ட காலமாக இந்தப் பழக்கத்திற்கு பலி ஆகிக்கொண்டிருப்பது தமிழ் சினிமா தான். தமிழ்
சினிமா நமக்கு இந்த விஷயத்தில் பொது எதிரி. இதனாலேயே அத்திபூத்தாற்போல் தமிழ் சினிமாவிற்கு
வரும் சில நல்ல படைப்புகள், மேற்கத்திய படைப்புகளோடு கம்பேர் செய்யப்பட்டு கேலிப்பொருளாகி,
மூலையில் தூக்கி வைக்கப்படுது. ஐ மீன் வீ ஆல்வேஸ் பிரவுட்லி சே, “வெள்ளைக்காரனுக்கு
கட் அவுட், தமிழுக்கு கெட் அவுட்” !
இந்த நிலை முகமூடிக்கும் வரும் என்று நன்றாகத் தெரிந்தே தனது
இந்த முயற்சியில் மிஷ்கின் இறங்கியிருக்கிறார். படமும் இன்று ரிலீஸ் ஆகிறது. தனது முந்தைய
படங்கள் அனைத்தையுமே பல வெளிநாட்டுத் திரைப்படங்களின் காப்பி என்று விமர்சகர்கள் (?) சொல்லியிருந்தாலும் இவர் அதற்காக கவலைப்படாமல், கனவு காணும் ஒரு கலைஞனாக, சிறு
வயதில் தான் படித்து ரசித்த “முகமுடி வீரர் மாயாவி” சூப்பர் ஹீரோ காமிக்ஸை போன்றதொரு கதையை தமிழில்
படமாக எடுத்திருக்கிறார். இதை “தமிழுக்கு ஏற்றவாரு எடுத்திருக்கிறார்” என்று கூட நான்
சொல்லமாட்டேன். அந்த வார்த்தைகளே எனக்கு அபத்தமாக படுகிறது. “Krrish” என்றொரு படம் வந்ததே
அது என்ன ஹிந்திக்கு ஏற்றவாரு எடுக்கப்பட்ட படமா? அப்படியென்றால் ஏதாவதொரு வடமாநிலத்தில்
தானே அந்தக் கதை நடக்க வேண்டும்? இரண்டாம் பாதி முழுக்க வெளிநாட்டில் அல்லவா நடக்கிறது.
ஓ, அதனால் தான் அந்தப் படம் சூப்பர் ஹீரோ படம் என்று ஒத்துக்கொள்ளப்பட்டதா? முகமூடி
கதை சென்னையில் நடப்பதாக சொல்லியிருக்கிறார். பேசாமல் வழக்கம்போல மலேசியாவில் நடக்கிறதென
சொல்லியிருக்கலாமோ? விமர்சனங்கள் குறையுமோ? ஏனென்றால் நம்மைப் பொறுத்த வரை தமிழ் நாடு,
இந்தியாவைத் தவிர எங்கும் எதுவும் நடக்கலாம். கேள்வியே இல்லை. அப்படித்தானே?
உலகில் எந்த ஒரு மூலையிலும் சூப்பர் ஹீரோ என்று ஒருவன் இருந்ததாக
எனக்குத் தெரியவில்லை (நிறைய ராபின் ஹுட்கள் தான் உண்டு) தெரிந்தால் சொல்லவும். சூப்பர்
ஹீரோ என்பதே ஒரு கற்பனை தான். அமெரிக்காகாரன் மட்டும் தான் அப்படி கற்பனை செய்யலாம்
என்றில்லை, யார் வேண்டுமானாலும் அவரவர் வசதிக்கேற்ப கற்பனை செய்யலாம். “விடாது கருப்பு”வில்
நாகா காட்டிய கருப்பன சாமி கிராமத்து சூப்பர் ஹீரோ. அதனால் குதிரையில் வந்தார், கையில்
அருவாள் வைத்திருக்கிறார். ஆனால் நம் முகமூடி சென்னைவாசி. அதனால் பைக்கில் பறக்கிறார்,
குங்ஃபூ சண்டையிடுகிறார், தன் வசதிக்கேற்ப உடை அணிந்திருக்கிறார். காலேஜ் படிக்கும்
Spiderman தனது சூப்பர் ஹீரோ காஸ்டியூமை தானே வடிவமைத்து ஆன்-லைனில் ஆர்டர் செய்து,
கூரியர் பார்சலில் வாங்குகிறார். அதை நாம் எந்தக் கேள்வியும் கேட்காமல் நம்புகிறோம்,
ரசிக்கிறோம். அதே போல் நம் சூப்பர் ஹீரோவும் அவன் வசதிக்கேற்ப தான் வடிமைத்த தனது காஸ்டியூமை
ஒரு டெய்லரிடம் கொடுத்து ரெடி செய்கிறான் என்று மிஷ்கின் காட்டினால் அதையும் நாம் நம்புவோம்.
நம்பவேண்டும் தானே? ஆனால் நாம் கேள்வி கேட்போம். “அதெப்படி, எங்களல்லாம் பாத்தா உனக்கு
எப்படி தெரியுது?” என்று. சூப்பர் ஹீரோ என்ற கதாபாத்திரமே ஒரு கற்பனை தான். கற்பனைகளுக்கு
எல்லையோ, கம்பரிசனோ இருக்கக் கூடாது என்பது என் கருத்து. இது ஒரு எளிய உதாரணம் மட்டுமே!
இப்படி எத்தனையோ இருக்கும் படத்தில்.
மிஷ்கின் காலை மட்டுமே காட்டிக்கொண்டிருக்கிறார், எல்லாரும்
மேலேயே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற வழக்காமன விமர்சனங்கள் போக (அவர் அப்படித்தான்
எடுப்பார். யாராலும் அதை மாற்ற முடியாது) பேட்மேனை காப்பியடித்திருக்கிறார்கள், ஸ்பைடர்மேன்
படத்திலிருந்து சுட்டிருக்கிறார்கள், இதைத் தான் ஏற்கனவே சூப்பர்மேனில் பார்த்திருக்கிறோமே
என்பது போன்ற விமர்சனங்களும் இதில் சேர்ந்துவிடுவோமா என்ற பயம் தான் எனக்கு. ஒரு முழு
முதல் முயற்சியை ஆரம்பத்திலேயே நாம் ஏன் காரணமில்லாமல் கருவறுக்க வேண்டும் என்பது தான்
என் கேள்வி. நன்றாக படிக்க ஆரம்பித்திருக்கும் ஒரு குழந்தையை பக்கத்து வீட்டில் இருக்கும்
IAS பாஸ் செய்தவனைக்காட்டி, “நீயும் அவர் போல் பெரிய ஆளாக வேண்டும்” என்று ஊக்குவித்தால்
பரவாயில்லை. “அவரெல்லாம் IAS, எனக்கும் தான் வந்து பொறந்துருக்குதே, மக்கு, த்தூ” என்று
காரிஉமிழ்ந்தால் எப்படியிருக்கும். அதைத் தான் நாம் செய்துகொண்டிருகிறோம். இங்கு ஹாலிவுட்காரன் IAS, படிக்க ஆரம்பித்திருக்கும் மாணவன் தமிழ் சினிமா. அவர்களுக்கிருக்கும் பட்ஜெட், வியாபாரம், வரவேற்பு போன்ற அடிப்படை விஷயங்களை நினைவில் கொண்டால் கூட நாம் இப்படி ஒப்பிட்டு பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். மலையையும்
மடுவையும் ஒப்பிட்டு, மடுவை ஆரம்பத்திலேயே காலால் நசுக்கி தரையோடு தரையாக்கி விடுகிறோம்.
நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசினால் அது ஸ்டைல், தமிழில் பேசினால் அது கொச்சை. ஆங்கிலத்தில்
திட்டினால் அது சர்வசாதாரணம், கேசுவல் டாக், அதுவே தமிழில் திட்டினால் ஆபாசம். ஆங்கிலப்
படத்தில் செய்தால் அது சாகசம், அதுவே தமிழ் படத்தில் செய்யப்பட்டால் அபத்தம், காப்பி?
நம்மை மற்றவர்கள் அசிங்கப்படுத்தினால் பரவாயில்லை, நாம் மற்றவர்களை
எப்பொழுதும் நம்மை விட உயரத்தில் வைத்தே பார்க்கிறோம். நம்மை நாமே அவர்களாய் வைத்து
ஒப்பிட்டு அசிங்கப்படுத்திக்கொள்கிறோம். அதையே பெருமை என்று நினைத்து சிரித்து கொள்கிறோம்.
நம்மைப் போன்ற பாவப்பட்ட ஜீவங்கள் உண்டா? விமர்சனம் தவறே அல்ல. தமிழில் முயற்சி செய்திருக்கிறார்கள்
என்பதற்காக மட்டமான படத்தைக் கூட “ஆஹா ஓஹோ” என்று தான் சொல்லவேண்டும் என்று நான் முட்டாள்
தனமாக வாதாடவில்லை. “எப்படியும் இது ஒரு காப்பி தான” என்கிற மனநிலை, இளக்காரம் தான் வேண்டாம் என்கிறேன்.
படம் பார்த்து விட்டு “கதை சரியில்லை, திரைக்கதை வேகமாக இல்லை” போன்ற நியாயமான காரணங்களுக்காக
படம் பிடிக்காமல் போனால் பரவாயில்லை. அதையே சொல்லி நாமும் விமர்சனம் எழுதினாலும் பரவாயில்லை. ஆனால் பேட்மேன் போல் இல்லை, ஸ்படர்மேன் போல் இல்லை, கிரிஸ்டியன் பேல் எங்கே, குவாட்டர் ஜீவா எங்கே, ஜோக்கரும் நரேனும் ஒன்னா போன்ற காரணங்களால் மட்டும் நமக்கு பிடிக்காமல் போவது, நமக்கு பிடிக்கவில்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது, விமர்சனமாக எழுதுவது தான் சரியில்லை
என்கிறேன்.
தமிழில் நிறைய “ராபின் ஹுட்” பாணி படங்கள் தான் வெளிவந்திருக்கிறது
என்றாலும் இந்த “முகமூடி”யும் தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படம் கிடையாது. தமிழின் முதல்
சூப்பர் ஹீரோ படம் “மர்மயோகி” என்று மிஷ்கினே சொல்கிறார். கமலின் “குரு” ஒரு சூப்பர்
ஹீரோ படம். சுசி கணேசன் இயக்கிய “கந்தசாமி”யில் விக்ரம் 100% சூப்பர் ஹீரோ தான். படம்
பிளாப் என்பதால், தற்போது வெளியாகும் “முகமூடி”யை “முதல் சூப்பர் ஹீரோ” என்று விளம்பரப்படுத்திக்
கொண்டும், பேட்டி கொடுத்துக்கொண்டும் இருக்கிறார்கள் படத்தைத் தயாரித்தவர்கள். கவனிக்க
மிஷ்கின் அல்ல.
இன்னமும் நான் படம் பார்க்கவில்லை. படம் எனக்கு பிடித்திருந்தாலும்
பிடிக்காவிட்டாலும் நான் இந்த முயற்சியை வரவேற்கிறேன். இதே வரவேற்பு மற்றவர்களிடமும்
இருந்து கிடைத்தால், இந்தப் படம் தோல்வியடந்தாலும் கூட, இது போன்ற வேறு நல்ல வேறுபட்ட
களன்களைக் கொண்ட படங்கள் தமிழுக்கு வர நாம் திறக்கும் கதவாக அந்த வரவேற்பு இருக்கும்.
தமிழக்கத்தில் அதிகம் வசூலித்த ஆங்கிலப்படங்கள் எல்லாமே சூப்பர் ஹீரோ படங்கள் தான் (The Avengers, The Dark Knight Rises). அப்படிப்பார்த்தால் சூப்பர் ஹீரோ என்பவன் நம்க்கு அந்நியமானவன் அல்ல. நாமும் அவனை ரசிக்கிறோம். அந்தப்படங்களையெல்லாம் எந்தக் கேள்வியும் கேட்காமல்,
“நமக்கு ரசிக்கும்படி இருக்கிறதா, அது போதும்” என்ற மனநிலையில் கைதட்டிவிட்டு வந்திருக்கிறோம்.
அதே மனநிலையில் தான் இந்த முகமூடியையும் நாம் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் சினிமா உயரவேண்டும் என்ற நப்பாசை தொண்டைக்குழியை அடைக்கும் ஒரு உண்மையான ரசிகனின்
தாழ்மையான வேண்டுகோள் இது. மிஷ்கின் – யார் என்ன சொன்னாலும் சரி, நிகழ்கால
தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத கலைஞன். தனது சிந்தனையில், படமெடுக்கும் முறையில்,
பின்பற்றும் சினிமா இலக்கணத்தில் தனித்தே நிற்கும் இவர் தமிழ் சினிமா தன் கிளிஷேகளில்
இருந்து விடுபடும் என்ற நம்பிக்கையின் முதல் படி. இவரது முகமூடியைக் காண காத்திருக்கிறேன்,
முழு நம்பிக்கையோடு !
டிஸ்கி: நான் ஏன் இப்படி ஒரு பதிவை தேவையில்லாமல் எழுதுகிறேன்
என்பது இப்போது உங்களுக்கு புரியவில்லை என்றால் பரவாயில்லை. படம் வெளியாகி, அதை விமர்சனம் என்ற பெயரில்
நம் மக்கள் சல்லடை சல்லடையாக கிழித்து தொங்கபோட்ட பிறகு வந்து வாசித்துப்பாருங்கள், நிச்சயம் புரியும், என் ஆதங்கம் என்னவென்று, நான் ஏன் இந்தப் பதிவை எழுதினேன் என்று.முகமூடி
விமர்சனத்தையும் எழுதலாம் என்றிருக்கிறேன். ஆங்கிலப் படத்தில் இருந்த எது இதில் இல்லை
என்பதையல்ல. அங்கில்லாதது எது இங்கிருந்தது என்பதை.
(ஒரு டவுட்: படம் ஒருவேளை உங்களுக்கு பிடிக்காமல் இருந்து, எனக்கு பிடித்து போய் அதை "ஆஹா ஓஹோ" என்று நான் புகழ்ந்தால் "நீ மொதல்லயே முடிவு செஞ்சிட்டு தானடா படம் பாக்கவே போன" என்று சொல்வீர்களோ. ஏனென்றால் ஊரே கூடி கும்மியடித்து அடித்து விரட்டிய "பொன்னர் - சங்கர் படத்தை ஆதரித்தவன் நான் :-))
முகமூடி வெற்றயடைய வேண்டும். யூ டிவி தனஞ்செயனுக்காகவோ, மிஷ்கினுக்காவோ, ஜீவாவிற்காகவோ, நரேனுக்காகவோ அல்ல. தமிழ் சினிமாவிற்காக. மேல் சொன்னவர்களுகெல்லாம் அடுத்த படம் உடனடியாகக் கிடைத்துவிடும். அடுத்த வேலையைப் பார்த்துகொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால் "சூப்பர் ஹீரோ கதை" என்பது தமிழ் சினிமாவிற்கு இல்லாமலேயே போய்விடும்!