நவரசா | தமிழ் | 2005

11:30:00 AM

எழுத்தாளர் பால் சுயம்பு எழுதிய திருநங்கைகள் உலகம் என்ற புதகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைப் படித்துக் கொண்டிருக்கும் போது எனக்குத் தோன்றிய கதை தான் 'அழகி'. எல்லோரையும் போலவே சாதாரண ஆணாகப் பிறந்து, பின் உடல், உள்ள ரீதியாக ஒரு பெண்ணாக உணர்ந்து பின் திருநங்கைகளாக வாழும் இவர்களின் வாழ்க்கை ஒரு போராட்டம். ஒம்போது, அலி, உஸ்ஸூ, ரூட்டு என்று இஷ்டத்திற்கு இவர்களை கிண்டலடித்து துன்புருத்தியும், கிட்டே வந்தால் அடித்து விரட்டியும் இந்த உலகம் செய்யும் தீங்குகள் கணக்கில் அடங்காதது. ஒருவர் அரவாணி என்று தெரிந்து விட்டால் உடனே அவர்கள் இந்தையாவின் பாரம்பரிய தொழில்கள் இரண்டிற்குள் புகுந்து கொள்ள வேண்டியது தான். ஒன்று பிச்சை எடுப்பது, இன்னொன்று பாலியல் தொழில். இவை இரண்டையும் விட்டால் அவர்களால் உங்களைப் போல், என்னைப் போல் வேறு எதுவும் செய்ய முடியாதா? முடியும்… ஆனால் ‘நாம்’ அதை அனுமதிக்க மாட்டோம் என்பதே உண்மை.

ஊருக்குள் நல்ல பெயர், மதிப்புடைய குடும்பத்தில் ஒருவனாகப் பிறந்து ஒருவளாக உணரும் ஒரு திருநங்கையின் போராட்டமும், தன் சித்தப்பாவின் நிலை தெரியாமல் அவர் எங்கேயோ சொல்லாமல் கொள்ளாமல் போகிறார் என்று அவரை பின் தொடர்ந்து போகும் ஒரு இளம் பெண்ணின் பயணமும் தான் நவரசா!

சந்தோஷ் சிவன் - நான் மிகவும் ரசிக்கும் ஒரு அற்புதமான படைப்பாளி. இவரது டெரரிஸ்ட் படம் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். நவரசா நான் டெரரிஸ்டிற்கு முன் பார்த்தது. தனிப்பட்டு தெரியும் ஒளிப்பதிவில் என்னை முதலில் கவர்வது கலரிங். அவர் உபயோகிக்கும் கலர் டோன், காபினேஷன்கள் அத்தனை அழகு. சேட்டன்களை இந்த விஷயத்தில் அடிக்க ஆளில்லை. ஏன் என்று பின்னால் சொல்கிறேன். நவரசாவிலும் டைடிலில் ஆரம்பித்தே அவரது வர்ணஜாலங்கள் படம் நெடுகிலும் உண்டு. அடுத்தது ஷாட்ஸ் அல்லது காட்சியமைப்பு. நீரவ்ஷாவின் பலமே 'எதிரொளி' லைடிங் தான். டெக்னிகள் பெயர் தெரியவில்லை. முகத்தில் லைட் கொடுக்காமல் முகத்திற்குப் பின் ஒளி கொடுத்து காட்சிப்படுத்துவது. இந்த வகையான ஷாட்களை ஒளிப்பதிவின் அழகியல் என்பேன் நான். சந்தோஷ் சிவன் இதில் கெட்டிக்காரர். அவர் கொடுக்கும் கலர்களை அதியற்புதமாகக் காட்டும் இவரது லைட்டிங் மற்றும் ஷாட்கள்.சரி படத்திற்கு வருவோம்.

இளம் பருவ மங்கையான சுவேதாவைச் (மல்லி, குட்டி புகழ் P.சுவேதா) சுற்றியே இந்தப் படம் அமைக்கப்பட்டிருக்கிறது. அன்பான அப்பா, லொட லொட வென்று பேசிக்கொண்டேயிருக்கும் லேடீஸ் கிளப் அம்மா, தான் மிகவும் நேசிக்கும் தன் மீது உயிரையே வைத்திருக்கும் சித்தப்பா , ஏடாகூட அதிகப்பிரசங்கி நண்பனான பக்கத்து வீட்டுச் சிறுவன் என்று தன் உலகிற்குள் சந்தோஷமாக சிறகடித்து சுற்றிக் கொண்டிருக்கிறாள் சுவேதா. தான் பருவமடைந்ததும் முன்பு போல் துள்ளிக் குதித்து ஓடி, ஆட முடியாது என்பதை உணர்கிறாள். உணர்த்தப்படுகிறாள் என்பதே உண்மை. குடும்பத்தின் பரம்பரிய நகைகளை அவளுக்கு அணிவிக்கிறார்கள். அவள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவளது சித்தப்பா, அந்த நகைகளை அவளிடமிருந்து பயபக்தியுடன் வாங்கி, ஆசையாக கழுத்தில் வைத்துப் பார்த்து, அதில் தங்கள் முன்னோர்களின் ஒளி கேட்பதாகக் கூறும் போது அவரை ஆச்சரியமாகப் பார்க்கிறாள். பின் வரும் நாட்களில் அவளுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தது.

நகைகளை எடுத்துக்கொண்டு சித்தப்பா எங்கோ, அவசரவசரமாகக் கிளம்பிப் போவதைப் பார்க்கும் சுவேதா அவரைப் பின் தொடர்ந்து போகிறாள். ஒரு வீட்டிற்குள் போகும் சித்தப்பாவை மறைந்திருந்து நோட்டமிடுகிறாள். அந்தச் சிறிய வீட்டிற்குள் அவளுக்கு மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. மிக அழகாக பட்டுப்புடவையில், தலை நிறைய பூ வைத்து, நகை அணிந்து, மீசையில்லாமல் பெண் வேஷத்தில் தன் சித்தப்பா வேறு ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். அவளுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. யாரிடமும் போய் சொல்லவும் முடியவில்லை. நேராக தன் சித்தப்பாவிடமே போய் கேட்கிறாள். அவர் தான் ஒரு திருநங்கை என்பதை அவளுக்கு விளக்கி, மஹாபாரதப் போரில் தோன்றிய அரவாண் கடவுள் கதையையும், வருடாவருடம் நடக்கும் கூவாகம் திருவிழா பற்றியும் அதில் தன் இனத்தவர் பங்கேற்பையும் பற்றியும் சொல்கிறார். அந்த அரவாம் கதை இதுதான்.

ராஜகுமாரன் என்று அழைக்கப்படுகிற அரவாண் அர்ஜுனனின் மகன். போரில் வெற்றி பெருவதற்காக அரவாணை பலி கொடுக்க பாண்டவர்கள் முடிவு செய்கிறார்கள். அரவாணும் இதை சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறான் ஒரே ஒரு நிபந்தனையுடன். அது இறப்பதற்கு முன், திருமணம் செய்ய வேண்டும் என்பதே. நாளை இறக்கப்போகும் ஒருவனை மறந்து அடுத்த நாள் வெள்ளை உடை உடுத்த எந்தப் பெண்ணும் முன் வர மறுக்கிறாள். இதைப் பார்க்கும் கிருஷ்ண பகவான் பேரழகியான பெண் வடிவம் எடுத்து அரவாணை மணந்து, தாம்பத்திய உறவு கொண்டு மறுநாள் விதவையாகிறார். அந்தக் கிருஷ்ண வடிவம் தான் திருநங்கைகள்!"எல்லாம் சரி ஆனால் இந்த விஷயமெல்லாம் வீட்டிலிருப்பவர்களுக்குத் தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும். அதனால் எப்போதும் போலவே ஆணாகவே இருந்துவிடுங்கள்" என்று கூறி வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போகிறாள் சுவேதா.

அடுத்து வரும் நாட்களில் சுவேதாவின் தாய் தந்தையர் வெளியூர் கிளம்புகின்றனர். சுவேதாவை பத்திரமாக வீட்டிலேயே இருக்கும்படியும், ஒட்டு மீசையுடன் பரிதாபமாக நிற்கும் சித்தப்பாவை அவர்கள் திரும்பி வருவதற்குள், அவரது நீளமான முடியை வெட்டுமாறு கறாராகக் கூறி விட்டுச் சென்றுவிடுகின்றனர். அவர்கள் அந்தப்பக்கம் சென்றதும் இந்தப் பக்கம் சித்தப்பா காணாமல் போகிறார். மிகவும் வருத்தப்படும் சுவேதா தன் சித்தப்பா விழுப்புரத்தில் நடக்கும் கூவாகம் திருவிழவிற்கு தான் போயிருப்பர் என்று உறுதி செய்து அவரைத் திரும்ப வீட்டிற்கு அழைத்து வரத் தனியாளாகக் கிளம்புகிறாள். இங்கிருந்து படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பமாகிறது.

கூவாகம் திருவிழாவை இவ்வளவு முழுமையாக, இத்தனை திருநங்கைகளை வைத்து யாரும் காட்டியிருக்கமாட்டார்கள். அங்கு வரும் திருநங்கைகள் அல்லாத மற்றவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார், எழுத்தாளர் சந்தோஷ் சிவன். அதை அழகாகப் படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

ாலிவுட்டில் பிரபலமான திருநங்கை பாபி டார்லிங் அதே பெயரில் இந்தப் படத்தில் இரண்டாம் பாகம் முழுக்க வருகிறார். சுவேதாவிற்கு கூவாகத்தில் உதவும் படத்தின் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரம். அவரது நடிப்பும் அவர் காட்டும் ரியாக் ஷனும் அற்புதம்.

கூவாகம் திருவிழா என்று நாம் தொலைகாட்சியிலோ, பத்திரிக்கைகளிலோ செய்தி வந்தால் அது அங்கு நடக்கும் மிஸ்.கூவாகம் பற்றியதாகத்தான் இருக்கும். ஆனால் பல மாகநிலங்களிலிருந்து வரும் திருநங்கைகள் தங்களது வளர்ச்சித் திட்டங்களைக் பற்றி விவாதிக்கின்றனர், வருங்கால செயல் திட்டங்களைப் பற்றி விரிவாகக் கலந்துரையாடுகிறார்கள், பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து பேசுகின்றனர். ஆனால் இது எதுவும் ஊடகங்களில் வருவதில்லை. "எந்தக் கலர் உங்களுக்கு பிடிக்கும்?" - இந்த ஒரேக் கேள்வியையே திருநங்கைகளிடம் கேட்டு ஒரு தொலைக்காட்சி கூவாகத் திருவிழாவை 'கவர்' செய்துகொண்டிருக்க, "ஏன் ஸார் இந்தக் கேள்வியயே எங்க எல்லார்கிட்டையும் கேக்குறீங்க, எங்களுக்கு எந்தக் கலர் பிடிக்கும்கிறத தெரிஞ்சிகிட்டா எங்க பிரச்சனைய தீத்துடுவீங்களா?" என்று ஒருவர் கேட்க்கும் போது அந்த தொலைக்காட்சி நிருபர், வேறு என்ன செய்யமுடியும் என்பது போல் பதிலளிப்பார். அதே போல் தான் நாமும், அவர்களைப் பற்றி பேசத்தான் முடியுமே தவிர, எதுவும் செய்ய முன்வருவதில்லை என்பது தான் நிதர்சன உண்மை...

சுவேத்தா - முதல் படத்திலேயே "சிறந்த குழந்தை நட்சத்திரம்" என்று தேசிய விருது வாங்கியவர். மல்லி, குட்டி என்று இவர் நடித்த மற்ற படங்களையும் நான் பார்த்து வியந்திருக்கிறேன். அவ்வளவு அற்புதமான நடிப்பு.

சந்தோஷ் சிவன் - இவரது படங்களை இவரது ஒளிப்பத்திவிற்காகவே தேடித் தேடிப் பார்க்க ஆரம்பித்து, பின் இவரது இயக்கத்தினாலும் ஈர்க்கப்பட்டு இப்போது முழு நேர 'ஃபன்' ஆகிவிட்டேன். இவரது மற்ற படங்களைப் போலவே இந்தப் படமும் பல தேசிய விருதுகளையும், சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது

படத்தின் லிங்க் கிடைக்கவில்லை. ஒரிஜினல் டி.வி.டி கிடைக்கிறது. கண்டிப்பாக வாங்கிப் பார்க்கவும்...

You Might Also Like

3 comments

 1. நண்பரே,

  நல்லதொரு விமர்சனம்.

  ReplyDelete
 2. நண்பா . . திருநங்கைகள் மீது, எனக்கும் இதே கரிசனம் உண்டு. குறிப்பாக, இங்கே பெங்களூரில், அவர்களது நடமாட்டம் அதிகம். பேருந்து நிலையங்களில் அவர்கள் நின்றுகொண்டு பணம் கேட்கையில், அவர்களிடம் பல முறை பேசியிருக்கிறேன் . .இந்தப் படத்தை இன்னமும் பார்த்ததில்லை. . பார்த்துவிடுகிறேன் . . நல்ல விமர்சனம் நண்பா . .

  ReplyDelete
 3. hi.. just dropping by here... have a nice day! http://kantahanan.blogspot.com/

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...