ஒரு பெண் போராளியின் கதை...தி டெரரிஸ்ட்...

9:11:00 AM

சந்தோஷ் சிவன்...

எனக்கு மிகவும் பிடித்த, இந்தியாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். இப்போது முழு நேர இயக்குனராக இருக்கும் இவர் இயக்கிய நவராசா எனது ஆல் டைம் பேவரிட். திருநங்கையாக மாறியிருக்கும் தன் சித்தப்பாவைத் தேடிப் போகும் சிறுமியின் கதை. அந்தப் படத்தைப் பற்றி இன்னொரு பதிவில் கண்டிப்பாக எழுத வேண்டும். இவரது இயக்கத்தில் வந்த படங்களான அசோகா, மல்லி, தஹான், சிவபுரம் என்று அனைத்தையுமே நான் பார்த்துள்ளேன். Prarambha - பில் கேட்ஸ் அறக்கட்டளை மூலம் இவர் இயக்கிய AIDS விழிப்புணர்வு குறும்படம். யுடியூபில் பிரபு தேவா, சரோஜா தேவி, ரம்யா நடித்த இந்தக் கன்னடக் குறும்படம் சப் டைட்டிலுடன் உள்ளது.
சரி, இந்தப் படத்திற்கு வருவோம்.

1991 ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி, இரவு 10 மணியளவில் சந்தன மாலையுடன் தன்னை நெருங்கிய பெண்ணைப் பார்த்து சிரித்தார் அந்த பிரமுகர். அவரது காலில் விழுந்து எழுந்த அந்தப் பெண்ணுடன் சேர்த்து அந்தப் பிரமுகர் மற்றும் அருகில் இருந்த சுமார் 14 பேர் உடல் சிதறி இறந்தனர். அந்தப் பெண் தேன்மொழி ராஜரத்னம் என்ற தாணு என்ற காயத்ரி. அந்தப் பிரமுகர் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி. இப்போது வெகுவாகப் பிரபலமாகியிருக்கும் இடுப்பில் வெடிகுண்டை கட்டிக் கொண்டு நடத்தப்படும் தற்கொலைத தாக்குதலை முதன்முதலில் உலகிற்குக் காட்டி, உலுக்கிய இந்தியாவின் முதல் பெரும் துன்பியல் சம்பவம் இது (புலித் தலைவர் பிரபாகரன் இப்படித் தான் குறிப்பிடுவார்). டெரரிஸ்ட் கதைக்கு பின்னணி இந்தச் சம்பவம் தான். ஆனால் எதையும் நேரடியாகக் கூறாமல், எந்தப் பெயரையும் குறிப்பிடாமல் (மணிரத்னத்தின் 'இருவர்' போல) ஒரு தீவிரவாத இயக்கம், அவர்களது போராட்டம், இயக்கத்திற்காக நடத்தப்படும் தற்கொலைத் தாக்குதல் என்று பொதுவாகச் சொன்ன படம்.
தன் அண்ணனின் இறப்பால் பாதிக்கப் பட்டு தீவிரவாதியான ஒரு பெண்ணின் கதை, தி டெரரிஸ்ட்.

போரில்
ஆண்களை விட பன்மடங்கு வீரமும், வேகமும் காட்டியஅந்தப் பெண், தான் இருக்கும் போராளி இயக்கத்திற்காக நடத்தப்படும் முக்கிய வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறாள். தயார் செய்யப் படுகிறாள். ஒரு உயிரைக் கொல்வதில் எந்த விதமான தயக்கமோ, வருத்தமோ, யோசனையோ செய்திராத அவளின் பெயர் மல்லி !

முக்கியப் பிரமுகரைத் தற்கொலை தாக்குதல் மூலம் கொல்வது என்று முடிவானவுடன், இயக்கத்திலிருக்கும் சிறந்த பெண் போராளிகளை வரவழைத்து, பேசி, பின் அதில் மல்லியைத் தேர்ந்தெடுத்து, ஆற்றங்கரை ஓரமாக இருக்கும் அந்த ஊரிற்கு அழைத்துச் சென்று, ஊரே அரைக் கிறுக்கன் என்று சொல்லும் விவசாயம் செய்யும் ஒரு பெரியவர் வீட்டில், ஆராய்ச்சி மாணவி என்று பொய் சொல்லி தங்க வைக்கிறார்கள், இயக்கத்தினர். பிரமுகர் அந்த ஊரிற்கு வர இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் மல்லிக்கு பயிற்சி ஆரம்பம் ஆகிறது. கூடவே அதிர்ச்சியும்!
போர் முனையில் இறக்கும் தருவாயில் இருந்த, பின் இறந்த ஒரு வீரனால் தான் தாயாகி இருப்பது தெரியவருகிறது. சாவதற்கு பயிற்சி நடந்து கொண்டிருக்கும் அந்த வேளையில் அவளுக்கு வாழும் ஆசை வருகிறது. ஆண்களை மிஞ்சும் வீரம் இவளது பலமாகக் இயக்கத்தில் காட்டப்பட்டது. ஆனால் பெண்களுக்கே உரிய மென்மை, தாய்மை இறுதியில் இவள் கொள்கைக்கே சவாலாக வந்து நிற்கிறது. ஒவ்வொரு முறையும் தன் வயிற்றில் வெடிகுண்டைக் கட்டிப் பார்க்கும் போது, வாழ வேண்டும் என்கிற ஆசை வலுவடைவது அவளுக்குத் தெரிகிறது. இவள் தாயாகப் போவதைத் தெரிந்து கொண்ட, மகனை இழந்த அந்தப் பெரியவர், இவளை மகளாக நினைத்துக் காட்டும் அன்பில் மனம் கரைவதும், தன் லட்சியம் நிறைவேறாமல் போய்விடுமோ என்கிற பயத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்வதும், மழையில் ஓடுவதும், நனைவதும் என்று நாள் நெருங்க நெருங்க காட்டப்படும் மல்லி முதலில் காட்டப்படும் மல்லியே அல்ல. சாகப் போகும் மனிதனின் மன வலியை மல்லியாக நடித்த Ayesha Dharker அற்புதமாகக் காட்டியிருப்பார்.
வெள்ளை நிறத்தில் ஆடை உடுத்தி, கையில் மாலையுடன் பிரமுகர் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு போய் அவரைப் பார்த்து புன்னகைத்து, காலில் விழுந்து எழுந்து... லிங்க் கொடுத்துள்ளேன்... பாருங்கள் |:-)

அடர்ந்த காட்டிற்குள்ளிருந்து ஆற்றைக் கடக்க உதவும் அந்த 'லோட்டஸ்' சிறுவனின் கதையும், சுவற்றில் மாட்டப் பட்டிருக்கும் படங்களில் உள்ள பெண்களைப் போல் மல்லி நின்று பார்ப்பதும், புது உடைகளை ஆசையாக முகர்ந்து பார்ப்பதும், இலையில் போட்ட உணவை பருக்கை விடாமல் ருசித்து உண்பதும் சூழ்நிலையால் தீவிரவாதியானவர்களின் வலிகளைப் பதிவு செய்யும் இடங்கள். மகனை இழந்த பெரியவர், பக்கவாதத்தால் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அவரது மனைவி, மகன் இருந்த இடத்தை இவள் நிரப்பி விட மாட்டாளா என்னும் ஏக்கம் என்று உறவின் வலிகளையும் பதிவு செய்கிறது இந்தப் படம்.
படத்தின் ஒளிப்பதிவு...யப்பப்பா...அதி அற்புதம். ஒரிஜினல் லைட்டிங்கில் மனுஷன் விளையாடியிருப்பார். வெளியே மழை பெய்து கொண்டிருக்கும் போது அதை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருக்கும் மல்லி திடீரென்று ஜன்னலை ஒரு குத்து விட்டு உடைக்க, உள்ளே சாரல் தெறிக்கும். அந்த பிரேம் சான்ஸே இல்லை... அவ்வளவு அழகு. அசைவின்றி படுத்துக் கிடக்கும் பெரியவரின் மனைவியை முதலில் சுவரில் மாட்டப் பட்டிருக்கும் போட்டோ என்று மல்லியுடன் சேர்ந்து நாமும் நினைக்கும் படி காட்டியிருப்பார். அதே போல் நீர்த்துளி, மழைத்துளி போன்ற சமாச்சாரங்கள் சந்தோஷ் சிவனிற்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அழகாக ஸ்லோ மோசனில் ஹைடெபனிசன் கேமரா வைத்து எடுத்திருப்பார்.

1999 ஆம் ஆண்டு வெறும் பதினைந்து நாட்களில் எடுக்கப் பட்ட இந்தப் படம், சர்வதேச அளவில் பல விருதுகளைக் குவித்துள்ளது . கெய்ரோ திரைப்பட விழாவில் (Cairo International film Festival) இந்தப் படத்தைப் பார்த்த John Malkovich (ஹாலிவுட் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்) அதை வாங்கி பின்பு உலகளவில் வெளியிட்டு உள்ளார்.
இதே 'தீமில்' (இடுப்பில் வெடி குண்டு கட்டிக் கொண்டு...) சமீபத்தில் வெளியான, உலகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பாலஸ்தீனியப் படமான Paradise Now விற்கு சற்றும் சளைக்காத இந்தப் படம், உலகின் சிறந்த சினிமா விமர்சகர்கில் ஒருவரான Roger Ebert டின் சிறந்த பட விமர்சனங்களில் ஒன்றாக உள்ளது. இந்தப் படத்தைப் பற்றி அவர் சொன்னது,

Every time I see the film ,I feel a great sadness, that a human imagination could be so limited that it sees its own extinction as a victory

படத்தின் RS லிங்க் :

http://rapidshare.com/files/228627663/The_Terrorist.avi.001
http://rapidshare.com/files/228640206/The_Terrorist.avi.002
http://rapidshare.com/files/228536863/The_Terrorist.avi.003
http://rapidshare.com/files/228543068/The_Terrorist.avi.004
http://rapidshare.com/files/228549328/The_Terrorist.avi.005
http://rapidshare.com/files/228556178/The_Terrorist.avi.006
http://rapidshare.com/files/228563498/The_Terrorist.avi.007
http://rapidshare.com/files/228571033/The_Terrorist.avi.008
http://rapidshare.com/files/228578664/The_Terrorist.avi.009
http://rapidshare.com/files/228586972/The_Terrorist.avi.010
http://rapidshare.com/files/228595635/The_Terrorist.avi.011
http://rapidshare.com/files/228605720/The_Terrorist.avi.012
http://rapidshare.com/files/228615109/The_Terrorist.avi.013

தி டெரரிஸ்ட் - சந்தோஷ் சிவன் காட்டிய மல்லி வாசம்...

டிஸ்கி: வெடிகுண்டு தயாரிக்கும் ஆளாக இந்தப் படத்தில் வரும் கொஞ்சம் முடிஉள்ள மொட்டைத் தலை, டோரா கண்ணாடி என்று ஒரு ஒல்லிபிச்சான் வருவான். அது வேறு யாரும் இல்லை; நம்ம பட்டியல்,பில்லா விஷ்ணுவர்தன் தான்...

You Might Also Like

2 comments

  1. விட்டுப் போன ப‌ட‌ம்.. அருமையாக‌ எழுதி ஞாப‌க‌ப் ப‌டுத்திட்டீங்க‌..பாக்கணும்..

    -Toto
    www.pixmonk.com

    ReplyDelete
  2. arumaiyana padam sir!

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...