சிறுகதை: காதல் பயணம்

9:57:00 AM


பார்த்தவுடன் சட்டென்று மனதில் பதியும் முகமல்ல. ஆனால் ஒரு முறை பார்த்தால் மறுமுறை சட்டென்று திரும்பிப் பார்க்க வைக்கும் முகம். நான் முதன் முதலில் அவளைத் திரும்பிப் பார்த்தது, சரியாக 18 மாதங்களுக்கு முன்.

ஜன்னலோரப் பேருந்துப் பயணத்தின் போது ஏதோ ஒரு யெல்லோ சுடிதார் போகிற போக்கில் கண்களை களவாடிப் போவாள் . அந்த யெல்லோ சுடிதார் யாரென்று உங்களுக்குத் தெரியாது. முகமும் நியாபகத்திற்கு வராது. ஆனால் தினம் தினம் கண்கள் அவளை அதே திசையில் தேடிக்கொண்டிருக்கும். அப்படி நான் விடாமல் ‘தேடி’ எனக்கு அறிமுகமானாள் - வந்தனா.

ஆயிரமாயிரம் தேவதைகளை தாங்கிக்கொண்டிருக்கும் புண்ணிய தேசமான மங்களூரில் வசிக்கும் ஆண்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனையான "எதைப் பார்ப்பது, எதை விடுவது"தில் சிக்கிக் திணறி, அலைபாய்ந்து கொண்டிருந்த என் மனதிற்குள் நிரந்தர அணை கட்டி அமர்ந்தவள் வந்தனா! இந்த 18 மாதங்களில் அவள் பெயரை எத்தனையோ முறை நான் சொல்லி ரசித்திருக்கிறேன், எத்தனையோ முறை பிறர் சொல்லக்கேட்டு, அவள் திரும்புவதை நான் திரும்பிப் பார்த்தும் ரசித்திருக்கிறேன்.

முதன் முறையாக அவள் பெயரைச் சொல்லி நான் கூப்பிட்ட போது அவள் கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்போது கையில் பூவுடன் பழைய ஸ்டைலில் "ஐ லவ் யூ" சொல்ல என் வீட்டு கண்ணாடி முன் நின்று நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தேன். அடுத்த முறை அவள் பெயரை கூப்பிட்ட போது அவள் திரும்பினாள். "நீ விக்கி கிளாஸ்மேட் தானே?" - நெருக்கிக் கொண்டிருக்கும் “500K” கூட்டத்திற்கு மத்தியில் தடுமாறாமல் கேட்டேன். "விக்கி... ம்ம்ம்ம்… எந்த விக்கி, தெரியலையே!" - புருவம் உயர்த்தி, உதடு சுழித்து, முதன் முதலாக அவளை என்னிடம் பேசவைத்த அந்த முகம் தெரியாத விக்கீக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.

பின் நடந்தது எல்லாம் அவள் "யதார்த்தமாக நடக்கிறது" என்று கூறிய, ஆனால் நான் ஏற்படுத்திய சந்திப்புகள். சிறு புன்னகை, பின் புன்னைகையுடன் ஹாய், பின் ஹாயுடன் பக்கத்து சீட் பயணம், பின் செல்பேசி மெஸேஜுகள், பின் உரையாடல்கள், பின் காஃபி ஷாப்சந்திப்புகள், பின் அவள் பிறந்த நாளிற்கு ஆளுயர டெட்டி பேர் பொம்மை என்று பற்பல புன்னகை, சிரிப்பு, சிணுங்கள்களுடன் அழகாக வளர்ந்தது என் காதல். அவளது கன்னக்குழியில் நான் காணாமல் போய் பல நாள் ஆனதை உணர்ந்து, நாங்கள் பல முறை சந்தித்துப் பேசியிருக்கும் காஃபி ஷாப்பிற்கு அவளை வரச் சொன்னேன்.

சிறிது நேரத்தை மௌனத்திடம் தொலைத்து விட்டு, பின் மெதுவாக பேச ஆரம்பித்தேன். திடீரென்று ஒரு நாள் பார்த்தது, பின் காரணமில்லாமல் பேச ஆரம்பித்தது, பின் சந்திப்புகளை ஏற்படுத்தியது, பின் பழக ஆரம்பித்தது என்று அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னேன். சொல்லி விட்டு அவளைப் பார்த்தேன்.

நான் தான் முதலில் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்ததை அவள் சொன்னாள்.

"ஆனந்த், ஐ லவ் யூ!"

நான் என்ன சொல்வேன் என்று என் முகம் பார்த்தவளுக்கு ஏமாற்றம், நான் எதுவுமே பேசவில்லை!

"ஆனந்த் யூ... ஆல்ரைட்?" அவள் கேட்டது கேட்கவில்லை.

"ஆனந்த்...நான்... யூ தேர்…?" முகத்திற்கு முன் கையை அசைத்தாள்.

"யா, யா... யெஸ்... இது போதும்... வேற... வேற எதுவும் சொல்லிடாத, ஐ காண்ட் ஹேண்டில் எனிமோர் ஃப்ரம் யூ டுடே" உள்ளிருந்த காதல் பெருக்கெடுத்து வெளியே வந்ததில் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது. வாழ்க்கையில் முதல்முதலாக வெட்கப்பட்டேன் பின் அழுகை வந்தது, சிரித்தேன்… கைகளை மேலே தூக்கி பலமாகத் தட்டினேன். சேரிலிருந்து எழுந்தேன். காஃபி ஷாப்பின் விளக்குகள் அணைந்து, எங்கள் டேபிளில் மட்டும் ஒரேயொரு மெழுகுவர்த்தி எரிந்தது.

மெதுவாக அவளருகில் சென்று, மண்டியிட்டு, கைகளை வாங்கி, சட்டைப் பையிலிருந்து மோதிரத்தை எடுத்து அவள் விரலில் அணிவித்து, அதை மென்மையாக முத்தமிட்டு, இருமுறை மூச்சுவாங்கி பின் சொன்னேன்...

"ஐ லவ் யூ!"

சொட்டைத் தலை அப்பன், ஜிம் பாடி அண்ணன், முறுக்கு மீசை மாமன் என்று யாரும் குறுக்கே நிற்க வில்லை. சிம்பிளாக, ஆனால் சந்தோஷமாக எங்கள் திருமணம் நடந்து, புது உறவின் எல்லையை தொட்டுப் பார்த்துவிடும் முயற்சியில் இரண்டு மாதங்களும் ஓடியது. நான் வேலை செய்யும் கம்பெனி தனது புதுக் கிளையை துபாயில் திறக்கும் வேலைக்கு என்னைப் பொறுப்பாக்கி அனுப்பியது. ஒரே வாரம் தான், என் காதல் மனைவி வந்தனாவையும் என்னுடன் துபாய்க்கு அழைத்துக் கொண்டு போக, கிடைத்த பிளைட்டில் ஏறி, இதோ இன்று மே 22, 2010 ஏர் இண்டியாவில் என்னைத் தவிர 165 பேருடன் மங்களூர் பறந்து வந்து கொண்டிருக்கிறேன்…

You Might Also Like

7 comments

  1. ///////சிறிது நேரத்தை மௌனத்திடம் தொலைத்து விட்டு, பின் மெதுவாக பேச ஆரம்பித்தேன். திடீரென்று ஒரு நாள் பார்த்தது, பின் காரணமில்லாமல் பேச ஆரம்பித்தது, பின் சந்திப்புகளை ஏற்படுத்தியது, பின் பழக ஆரம்பித்தது என்று அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னேன். சொல்லி விட்டு அவளைப் பார்த்தேன்.

    நான் தான் முதலில் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்ததை அவள் சொன்னாள்.

    "ஆனந்த், ஐ லவ் யூ!"
    /////////


    கதையிலும் பெண்கள்தான் முதலிலா . ம்ம் கலக்குறாங்க . கதை நன்றாக இருந்தது . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. பாண்டி.... வாய்ப்பே இல்ல... சத்தியமா சொல்றேன்... அல்டிமேட்..... சூப்பர் கதை டா...
    இந்த மங்களூர் ஃப்லைட் க்ராஷ் பத்தி இப்பதான் எங்க அப்பா சொன்னார்.. வந்து ப்ளாக்க ஒபென் பண்ணா உன் கதை... அல்டிமேட் அகைன்.....

    அப்படியே கண்டினியு பண்ணு.....

    ReplyDelete
  3. நான் உன் 'ப்ளாக்'கோட தீவிர விசிறி ஆயிட்டேன்....

    ReplyDelete
  4. க்ளைமேக்ஸில் ஏதாவது திடீர்த் திருப்பம் இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டே படித்தேன் ;-) ஹீ ஹீ..

    ReplyDelete
  5. கதை நல்லாயிருந்ததுங்க! பெங்களூரை விட்டு மங்களூரை கதை களமாக வைத்ததால் முடிவு கொஞ்சமாக யூகிக்கக் கூடியதாக இருந்தது.

    ReplyDelete
  6. @!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ : தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி நண்பரே

    @ சுரேந்திரா: //நான் உன் 'ப்ளாக்'கோட தீவிர விசிறி ஆயிட்டேன்....//
    இந்த டர்ர்ர்ர் வேலையெல்லாம் எங்கிட்ட காட்டாதடா கார்பெட் மண்டையா!

    @ கருந்தேள் கண்ணாயிரம்: என்ன செய்வது நண்பரே, சாதாரணமாக ஒரு கதை எழுதலாம் என்று ஆரம்பித்தாலும் இப்படித்தான் ஏதாவது கிளைமாக்ஸ் டுவிஸ்ட் ஒன்று ஊடே வந்து விடுகிறது. சுஜாதாவின் 'தூண்டில்' கதைகளை பல முறை ரசித்துப் படித்ததன் விளைவு நான் எழுதும் அனைத்தும் அப்படியே அமைந்து விடுகிறது. அடுத்த கதையில் நிச்சயம் ஒரு மாறுதலைக் கொடுக்கிறேன்.

    @ Mohan: முதலில் தேவதை தேசமென பெங்களூரைத் தான் சொல்லியிருந்தேன். பின் கிளைமாக்ஸ் டுவிஸ்ட் இப்படி யோசித்த பிறகு மங்களூர் என்று மாற்றி விட்டேன். அடுத்த முறை நீங்கள் கண்டே பிடிக்க முடியாத ஒரு கதையை எழுதுகிறேன்... |:-)

    ReplyDelete
  7. Dei
    Really good one da.. good going...ipdiye continue pannuna seikiram un kanavu niraiverum...

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...