சிறுகதை: பொருத்தம்

10:04:00 AM

"பின்ன என்னங்க? அந்த மாதிரி ஒரு பதிலக் கேட்ட பிறகு எப்படி?ஏற்கனவே பாதாச்சாம், அதுவும் பத்து தடவ பாதாச்சாம்... கருமம்!"


அப்படி என்ன தான் நடந்தது இவன் வாழ்கையில்? முதலில் அதைத் தெரிந்து கொள்வோம்...
பிறந்து 27 வருடங்கள் உருண்டோடியும் அதுவரை எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காத ஏகபத்தினி விரதனவன். அதனாலோ என்னவோ அவனது தற்போதைய குறிக்கோள் ஒரு நல்ல, பொருத்தமான பெண்ணைப் தேர்ந்த்தெடுப்பது, உடனுக்குடன் திருமணத்தை முடிப்பது என்றாகியிருந்தது. இனிமேல் முயற்சித்து, ஒரு பெண்ணைப் பார்த்து, காதலித்து, அவள் சம்மதித்து, இவனை விட அழகான, திறமையான, பணக்காரனான என் பல 'ஆன' உள்ளவர்களை ஜெயித்து பின் திருமணம் என்னும் விஷப்பரிட்சையில் உடன்பாடில்லாம ஒரு சுலபமான வழியைத் தேர்ந்தெடுத்தான். வீட்டில் தனக்குப் பெண் தேடச் சொன்னான்.

வீட்டுப் பெரியவர்களும் இவனது ஜாதகத்தை தூசி தட்டி, இரு வேறு கோணங்களில் இவனை புகைபடமாக்கி ஊருக்குள் உலாவவிட்டனர். சொந்தபந்தங்கள் இவன் சிறு வயது முதல் பார்த்துச் சளித்த தங்கள் வீட்டுப் பிள்ளைகளை தலையில் கட்ட கொக்கி போட்டனர்; தரகர்கள் இவனுக்கு முற்றிலும் புதிதாக செதுக்கிய சிலைகளைப் போல் நிற்கும் பெண்களை இவன் முன் புகைப்படங்களாக அடுக்கினர். முடிவு இவன் கையில் என்றானது. தரகர்களை வரவேற்றான். அவர்கள் காட்டிய சிலைகளில் தங்கச் சிலை ஒன்றை தேர்ந்தெடுத்தான். சொந்தங்கள் விட்ட மூச்சில் உருகியே போயிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! பெண் பார்க்க வருவதாக செய்தி அனுப்பப்பட்டது.

பெற்றோருடன், நெருங்கிய சொந்தங்கள் பத்து பேருடன் காலையிலேயே பெண் வீட்டிற்கு வாடகைக் காரில் கிளம்பினர். பெண் ஊர் போயிறங்கியதும், வரவேற்பு காத்திருக்கும் என்று எண்ணியவர்களுக்கு கடைசியில் பெரிய 'பல்ப்' தான் காத்திருந்தது. வண்டியை நேராக கோவிலுக்கு விடும்படி சொல்லிவிட்டனர் பெண் வீட்டார். அவர்கள் வழக்கப்படி முதலில் கோவிலில் தான் பேச வேண்டுமாம். எல்லாம் முடிவான பிறகே வீட்டிற்கு அழைப்பார்களாம். கூட வந்த சொந்தங்கள் இதை சாக்காக வைத்து வாய் திறந்தால் அவன் கதையில் உடனடி கிளைமாக்ஸ் வரும் அபாயமிருக்கிறது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கோவிலில் காத்திருக்கத் தொடங்கினர்.

முதலில் பெண் வீட்டாரின் குடும்ப நண்பர், பின் பெண்ணின் சித்தப்பா, அதன் பிறகு தாய் மாமா, அவருக்குப் பின் தாத்தா, பின் அப்பா, கடைசியாக தாயுடன் அவள் என்று வந்திறங்கினர். அவனுக்கு திருப்பதியில் பல கட்டங்களைத் தாண்டி கடைசியில் பெருமாளைப் பார்ப்பத்து போலிருந்தது. ஆனால் அவன் பார்த்தது பெருமாளை அல்ல, தேவலோகத்திலிருந்து இறங்கி வந்த ரதிதேவியை!

ஒவ்வொன்றாக பேச ஆரம்பித்தனர். இவன் எதுவும் பேசவில்லை. அவளும் பேசவாய்ப்பில்லை. இருவரது கண்களும் இணைந்த அந்த நேரம் அவள் வெளிப்படுத்திய உணர்ச்சி, இவனுக்குள் கிளர்ச்சியை உண்டு பண்ணியது. அவளின் சிரிப்பில் இவன் காணாமல் போயிருந்தான். மானாசீகமாக இவன் அவளை ஏற்க ஆரம்பித்திருந்தான். அந்தப் பக்கம் என்ன நிலவரம் என்று தெரியவில்லை!

பெருசுகள் ஒரு வழியாக பேசிமுடித்து, சம்பந்தம் பிடித்து கடைசியாக "மாப்பிள்ளைக்கு சம்மதமா?" என்று இவன் பக்கம் திரும்பினர். இவன் கொஞ்சம் வேகமாகத் தலையாட்டியிருக்கிறான் என்பது அவனுக்கே சுற்றியிருப்பர்கள் "மாப்பிள்ளைக்கு ரொம்ப அவசரம் போல" என்று சொல்வதை வைத்துதான் தெரிந்தது. மதிய உணவு பெண் வீட்டில் என்று முடிவானது ஏற்கனவே ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியில் இருந்த இவன் காதுகளுக்கு தேவைப்படவில்லை. இப்போதைக்கு அவன் காதுகளுக்கு தேவை அவளது வாய்மொழி மட்டுமே!

உண்ட களைப்பில் இவன் வீட்டார் அனைவரும் உட்கார்ந்த இடத்திலேயே உருண்டு கொண்டிருக்க, இவன் தன் சித்தியிடம் போய் "நான் பொண்ணுகூட கொஞ்சம் பேசனும்" என்றான். அவன் ரகசியமாகக் கேட்டது, அம்பலமானது. "மாப்பிள்ள, அக்காகூட பேசனும்னு சொல்றாரு" பெண் வீட்டுச் சின்னப்பெண் ஒன்று தம்பட்டம் அடித்தபடியே ஓடியது. "இந்தக்காலத்துல இதெல்லாம் தப்பில்ல", "நாங்கெல்லாம் பாத்து, பேசியா கட்டிக்கிட்டோம்", "அட கட்டிக்கப்போரவன், ஆசப்படுறான்" - இப்படி பல குரல்கள். ஒருவழியாக வீட்டின் தனியறை ஒன்றில் எல்லோருக்கும் தெரியும்படி 'தனியாக' பேசவைக்கப்பட்டனர். அருகில் மிக அழகாக இருந்தாள் அவள்!

முதல் ஐந்து நிமிடத்தை வெட்கம் வாங்கிக்கொண்டது. ஆறாவது நிமிடத்தில் இவனே ஆரம்பித்தான். "உங்களுக்கு என்ன புடிச்சிருக்கா?" அவள் "உம்ம்" என்றாள். "நீங்க பேசி நான் கேட்கவேயில்ல, பேசமாடீங்களா?" சூரியனைக் கண்ட ஆயிரம் சூரியகாந்திகள் ஒன்றாக வெட்கி முகம் சிவந்ததைப் போலிருந்தது அவளிடமிருந்து வந்த அந்த உணர்வு வெளிப்பாடு! "சரி, ஜென்ரலா ஏதாவது பேசலாம். “உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?" என்று கேட்ட போது, "பிடிக்கும்னா... பிடிக்கும்னா... பிடிக்கும்னா" என்று மூன்று முறை 'பார்த்திபன் கனவு' சினேகா மாதிரி சொன்னபோதே சுதாரித்து இருக்க வேண்டும்.

"எனக்கு விஜய் ரொம்பப் பிடிக்கும்" என்றாள்.

"எந்த விஜய்?"

"இளைய தளபதி"

"அப்போ சுறா"

"ம்ம்ம்ம் பத்து தடவ, தியேட்டர்ல... நீங்க கூட பாக்குறத்துக்கு விஜய் மாதிரியே இருக்கீங்க..." 

பத்து விரல் காட்டி அவள் கூறியது இப்போது அவனுக்குக் கன்றாவியாக இருந்தது.
இது தான் அந்த பெண் பார்க்கும் படலத்தில் நடந்த கடைசி உரையாடல். வேகமாக வெளியே வந்தவன், "எனக்கும் பொண்ணுக்கும் ஒத்து வரலை. நான் கிளம்புறேன்" என்று கூறிவிட்டு யாரையும் எதிர்பார்க்காமல் தன் மாமனார் ஆகியிருக்க வேண்டியவரை முறைத்துக் கொண்டே வெளியேறினான்...

"பொண்ணு வளத்து வச்சிருக்கான் பாரு... ிஜய் ரசிகையாம்… தூ..."

பி.கு: இந்தக் கதை, இன்னமும் "எங்க தளபதி ஹிட் கொடுப்பார்" என்று நம்பிக்கொண்டு 'விஜய் ரசிகை' என்று பீத்திக்கொள்ளும் என் அப்பாவி அக்காவிற்காக ஸ்பெஷலாக எழுதப்பட்டது...:-)

You Might Also Like

5 comments

  1. கதை கலக்கல் நல்ல இருக்கு . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. மாப்ள, கதை சூப்பர். இந்த கதை எழுதியதை விட நீயே "சுறா" படத்திற்கு விமர்சனம் எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். "சிங்கம்" - எப்போது விமர்சனம்?
    "ராவணன்" - எங்கே பார்க்க போகிறாய்? பெங்களூரூ என்றால் மறக்காமல் என்னை அழைக்கவும்.

    ReplyDelete
  3. Super boss.. Last line of this story is superrb especially that pinkurippu..

    ReplyDelete
  4. @ பனித்துளி சங்கர், மசக்கவுண்டன்: வருகைக்கு நன்றி நண்பர்களே...

    @நெல்லை நாயகன்: சரிதான் மச்சி, சுறா வுகெல்லாம் விமர்சனம் எழுதனுமாக்கும்... சரி, ராவணன் பெங்களூருல தான்... கண்டிப்பா கூப்புடுறேன்.

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...