காதல் பயணம்...

10:54:00 PM

நண்பன் ஒருவன் நேற்று எனக்கு அனுப்பிய ஃபார்வர்ட் மெயில்... எழுதியவர் யாரென்று தெரியவில்லை. இருந்தாலும் பகிர்ந்துகொள்ளாமலிருக்க முடியவில்லை...

-------------------------------------------------------------------------------------------------------------------------------

உன்னைப் பெண் பார்க்க, என் பெற்றோரோடு உன் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருக்கிறேன் நான். கண்களை மூடிக் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு உள்ளறையில் ஒளிந்திருக்கிறாய் நீ. சற்று நேரத்தில், உன் அப்பாவின் கண்ணசைவில், உன் அம்மாவின் கையசைவில் உனக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது.அந்த அறையின் வாசலை மறைத்திருந்த திரையை ஒரு கையால் விலக்கி விட்டு நீ வெளிப்படுகிறாய். திரையில் படமாய் இருந்த மகாலட்சுமி உயிரோடு எழுந்து வருவதைப் போல மெல்ல வருகிறாய். எல்லாக் கண்களுக்கும் உனது பார்வையும், வணக்கமும் சேர்ந்து கிடைக்க என் கண்களுக்கோ உனது வணக்கம் மட்டுமே கிடைக்கிறது. ஏன் நேராய்ப் பார்க்க வில்லை என்று நான் என் கண்களையும், நீ உன் கண்களையும் திட்டிக் கொண்டிருக்கிறோம். வெட்கம் நம்மைப் பார்த்து சிரித்துக் கொள்கிறது.

சற்று நேரத்தில், புது உடையில், தட்டில் சாக்லேட்டோடு சுற்றி வரும் பிறந்த நாள் குழந்தையைப் போல , காபி டம்ளர்களோடு நீ வலம் வருகிறாய். குனிந்து தட்டையேப் பார்த்துக் கொண்டு அதை நீ என்னிடம் நீட்டுகையில், தட்டில் ஒரு நிலாத் தெரிகிறது எனக்கு. ஒரு நொடி தட்டில் சந்திக்கின்றன நம் கண்கள். ஒரு டம்ளரை நான் எடுத்துக் கொண்டவுடன் விலகி ஓரமாய் நிற்கிறாய் நீ. இதேக் காட்சியை என் நிலையில் உன்னையும், உன் நிலையில் என்னையும் வைத்து கற்பனை பண்ணிப் பார்க்கிறது மனம்.இருக்கையில் அமர்ந்த படி நீ. காபி டம்ளர்களோடு நான்.

"என்ன தம்பி யோசிக்கிறீங்க" என்ற உன் அப்பாவின் குரலில் திடுக்கிட்ட நான்,சமாளிப்பாக " இது ஃபில்டர் காஃபியா, இல்ல ப்ரூவான்னு யோசிச்சுட்டு இருக்கேன் " என்று சொல்ல…
"அது பூஸ்ட்ங்க…" என்கிறாய் நீ.

எல்லாரும் சிரிக்க, நான் உன் முகத்தை நேராய்ப்பார்க்கிறேன். நீயோ உதட்டை மெல்லக் கடித்து, நிலம் நோக்கி நகுகிறாய். பின் உள்ளறைக்குள் நுழைய முதல் அடி எடுத்துவைக்கிறாய், என் மனதுக்குள்ளும். "என்னப்பா.. பொண்ணப் புடிச்சிருக்கா?" என மெல்லக் கேட்கும் அம்மாவிடம், "பொண்ணுக்கு என்னப் புடிச்சிருந்தா, எனக்கும் சம்மதம்" என உள்ளறைக்கும் கேட்கும் படி சத்தமாகவே சொல்கிறேன். அங்கிருந்து ஓடி வந்த உன் தங்கை "உங்கள எங்கக்காவுக்குப் புடிச்சிருக்காம்" எனக் கத்திவிட்டு மறைகிறாள். இரண்டே வரிகளில் நிச்சயமாகிறது நமதுத் திருமணம்.

முகத்தில் மலர்ச்சியோடு, " அப்புறம் நீங்க எவ்வளவு நக எதிர்பாக்கறீங்கன்னு சொன்னா…." என உன் அப்பா ஆரம்பிக்க… என்னைப் பார்க்கிறார் என் அப்பா.
"உங்கப் பொண்ணுதான் நல்லா சிரிக்கிறாங்களே… அப்புறம் எதுக்குங்க நகையெல்லாம்…நீங்க எதுவும் போட வேண்டாம்… அவங்க வேணும்னு சொன்னா, நான் வாங்கித் தர்றேன்" என்கிறேன் நான். சந்தேகமாய்ப் பார்க்கிறார் உன் அப்பா.

"வீட்டுக்குத் தேவையான கட்டில், பீரோ, பாத்திரம், பண்டெமெல்லாம்..நாங்க…" என ஆரம்பிக்கிறார் உன் அம்மா."உங்கப் பொண்ணுக்கு மத்தவங்கள சந்தோஷப்படுத்தத் தெரியுமில்ல…அது போதும்… அது தானங்க வீட்டுக்கு முக்கியமாத் தேவை…மத்ததெல்லாம் நான் வாங்கிக்கிறேன்" என மறுபடியும் மறுக்கிறேன் நான்.

"என்ன இருந்தாலும் பொண்ணு வீட்டு சீர் வரிசைனு ஒன்னு இருக்கில்லங்க" என என் அப்பாவைப் பார்த்து உன் தாய்மாமன் சொல்ல…"உங்கப் பொண்ணோட சேர்த்து, அவங்க ஆசையெல்லாத்தையும் சீராக் கொடுங்க, வரிசையா அத நிறைவேத்துறேன்" என சொல்லி விட்டு என் பெற்றோரோடு கிளம்புகிறேன்.

வெளியேறி தெருவில் இறங்கி நடக்கும்போது திரும்பி உன் உள்ளறையின் ஜன்னல் பார்க்கிறேன். அங்கே எல்லா நகையையும் கழற்றிவிட்டு அழகானப் புன்னகையோடு என்னைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாய் நீ. விழிகளால் பேசி விட்டு சாலையில் நடக்க ஆரம்பிக்கிறேன் நான்.

"உனக்கெல்லாம் காதல்னு ஒன்னு வந்தா, அது நிச்சயத்துக்கும், கல்யாணத்துக்கும் நடுவுலதாண்டா" என கல்லூரியில் நண்பன் கொடுத்த சாபம் ( வரம்? ) பலிக்க ஆரம்பிக்கிறது.

நிமிர்ந்து உலகத்தைப் பார்க்கிறேன் – அது இன்று மட்டும் அழகாய்த் தெரிகிறது.

You Might Also Like

10 comments

  1. காதலுக்கு எனது வோட்டுகள் எப்போதும் உண்டு . . :-) என்ன. . நீங்களும் காதல் திருமணமா ? :-)

    ReplyDelete
  2. @கருந்தேள் கண்ணாயிரம்: தெரியவில்லயே நண்பா... இப்போதைக்கு கதையில் வரும் நபர் போல் தான் என் நிலைமையும்.//"உனக்கெல்லாம் காதல்னு ஒன்னு வந்தா, அது நிச்சயத்துக்கும், கல்யாணத்துக்கும் நடுவுலதாண்டா"// :)

    ஒரு வழியாக தமிழிஷ் பட்டையை இணைத்தாயிற்று! அன்பிற்கு நன்றி

    ReplyDelete
  3. நண்பரே நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  4. ஜில்லுனு ஒரு கதை...


    நல்லாருக்கு நண்பா..

    ReplyDelete
  5. நல்லாருக்கு!பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. @ கனவுகளின் காதலன், ramtirupur, அன்புடன் அருணா: எல்லா புகழும் எழுதிய அந்த முகம் தெரியாதவர்க்கே...

    ReplyDelete
  7. நண்பர்களே, இந்தக் கதையை எழுதியவரை ஒருவழியாக கண்டுபிடித்து விட்டேன். பெயர் ஜனா, பெங்களூர் விப்ரோவாசி...

    ReplyDelete
  8. உங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. உங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. nandri பாலராஜன்கீதா!

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...