ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி

2:23:00 AM

சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர்.


ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தன் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.

அவர் இறந்த தினத்தொடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமாதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை."ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும். ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.

ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணணி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது.

எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனிஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.

தமிழரோடு தமிழில் பேசுவோம்..தமிழன் என்று சொல்வோம்...தலை நிமிர்ந்து நிற்போம்....
"
தமிழன் இல்லாத நாடில்லை,
தமிழனுக்கென்று
ஒரு நாடில்லை..."

You Might Also Like

18 comments

 1. நண்பரே வட்டார வழக்கு இலக்கியங்கள் மூலம் மொழியானது மேலும் வளர்ச்சியடையுமே ஒழிய அழிந்து விடாது. நம்முன்னே உள்ள பெரிய சவால் நமது பயிற்று மொழி தமிழாகவும் அதில் அனைத்து அறிவுக் களஞ்சியங்களையும் கொண்டு வந்து சேர்ப்பதுமே ஆகும்.
  மேலும் நமது மொழியின் கலைச்சொல்லாக்கம் விரைந்தும் எளிமையையும் செயல்படுத்தப்பட வேண்டும்.

  பாரதி அன்றே பாடினாரே மெல்லத்தமிழினி சாகும் அந்தப் பாடலிலேயே எல்லாமும் சொல்லிப் போயிருக்கிறார்.

  ReplyDelete
 2. ரைட்டுங்க...

  இனிமே.. தமிழ்ல தலைப்பை வச்சி.. தமிழை வாழ வைப்போம். :)

  ReplyDelete
 3. ///மேலும் நமது மொழியின் கலைச்சொல்லாக்கம் விரைந்தும் எளிமையையும் செயல்படுத்தப்பட வேண்டும்.///

  கீபோர்டுக்கு தமிழ்ல...

  ‘விரற்கட்டை தட்டச்சுப் பட்டடை’யாம். இதுக்கு தமிழ் செத்துடலாம். இல்ல பேசுறவன்...!!!!!!! :)

  ReplyDelete
 4. @அரைகிறுக்கன்: வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி அரைக்கிறுக்கன்.

  @ஹாலிவுட் பாலா: //‘விரற்கட்டை தட்டச்சுப் பட்டடை’யாம். இதுக்கு தமிழ் செத்துடலாம். இல்ல பேசுறவன்...!!!!!!! :)//
  தல நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க?:):)

  ReplyDelete
 5. நண்பரே,

  ஒரு மொழி வாழ்வது என்பது அதனை உபயோகப்படுத்தும் எளிமையில் இருக்கிறது. மொழி புதிய தலை முறையால் புறக்கணிக்கப்படுவதற்கான காரணங்கள் என்ன, ஆங்கிலத்தில் இருக்கும் சில சொற்களிற்கு தமிழில் பொருள் தேடினால் கட்டுரை பதிலாக கிடைக்கிறது. சுருக்கமாக பேசும் விரைவாக பறக்கும் தலைமுறையிடம் தமிழ் கட்டுரை எடுபடாது. தமிழ் ஆர்வலர்களும் இலகுவான சொற்களை அறிமுகம் செய்வதை விடுத்து, கடினாமான சொற்கள் வழி தங்கள் மேதாவித்தனத்தை நிரூபிக்க விழைகின்றனர். தமிழ் அழியாது, 2040லும் சுறா போன்ற படங்கள் வந்து எம்மை குஷியாக்கும். ஒரு மொழியின் வட்டார வழக்கு என்பது ஒரு அழகு, ஒரு அழகான பெண்ணின் உதட்டிற்கு கீழ் உள்ள மச்சம் போன்று, சிறப்பான பதிவு நண்பரே.

  ReplyDelete
 6. ஆனந்தன் சார், நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனால் இன்றைய நிலையில், தமிழ் அழிய கூடாது என்று கூறும் மக்கள், சுமுகமாக அதை கூறவில்லையே! தமிழ் வளர்ச்சி அடையவேண்டும் என்று எண்ணுபவர்கள், அதை கிளர்ச்சியுடனும், கலகத்துடனும் தானே கூறுகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால், தமிழ் மீது பற்றுடைய மக்கள் கூட அதை வெறுக்க ஆரமித்து விடுவார்களே! ஒரு வேளை நாம் தமிழ் தமிழ் என்று மார்த்தட்டாமல் இருந்தால் கூட தமிழ் அழிவை நோக்கி போகாது என்று நான் எண்ணுகிறேன்.

  ReplyDelete
 7. @கனவுகளின் காதலன்: நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் நண்பரே. தம்முடைய தமிழ்ப் புலமையைக் காட்ட நம்மாட்கள் ஆங்கில வார்த்தைகளுக்கு இஷ்டத்திற்கு பெயர் கொடுத்து விடுகிறார்கள். செல்போன் என்று ஆங்கில வார்த்தையை தமிழிலேயே பேசாமல் எழுதிவிடலாம், அதை விட்டு விட்டு புதிது புதிதாக கைப்பேசி, செல்லிடத்துப்பேசி, கையடக்கப்பேசி என்று கொன்று விடுகிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு நம் ஊர் தமிழ் பெயர்கள் வரவில்லை. அதனால் என்ன இணையான புது வார்த்தைகளையா கண்டுபிடித்தார்கள். எதையுமே மாற்றாமல் திருச்சிராப்பள்ளியை ட்ரிச்சி, தஞ்சாவூரை டேஞ்சூர், தூத்துக்குடியை ட்யுடிக்கோரின் என்று தங்கள் வாயில் வந்ததை வைத்து ஆண்டுவிட்டும் போய்விட்டார்கள். நாம் தான் இப்படி விவரம் கெட்டத்தனமாக பெயர் வைத்துக்கொண்டுத் திரிகிறோம்.

  //2040லும் சுறா// நாடு தாங்காது நண்பரே... தமிழ் தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் அபாயம் உண்டு!

  @ நெல்லை நாயகன்:நண்பா, தமிழ் தமிழ் என்று அடித்துக்கொள்வதால் தான் தமிழ் இந்த அளவாவது நிலைத்து நிற்கிறது என்பது என் கருத்து. கலக்கமோ கிளர்ச்சியோ இல்லை எச்சரிக்கை மட்டுமே பிரதானமாக இருக்கிறது. அதனால் வெறுப்பு வராது பொறுப்பு மட்டுமே கூடும்! விடு மாப்ள, நாம்மெல்லாம் இருக்கும் போது எவனும் ஒன்னும் பண்ண முடியாது...

  ReplyDelete
 8. @ ராம்ஜி_யாஹூ, இராமசாமி கண்ணண்: வருகைக்கு நன்றி :-)

  ReplyDelete
 9. //Baby ஆனந்தன் said...
  தம்முடைய தமிழ்ப் புலமையைக் காட்ட நம்மாட்கள் ஆங்கில வார்த்தைகளுக்கு இஷ்டத்திற்கு பெயர் கொடுத்து விடுகிறார்கள். செல்போன் என்று ஆங்கில வார்த்தையை தமிழிலேயே பேசாமல் எழுதிவிடலாம், அதை விட்டு விட்டு புதிது புதிதாக கைப்பேசி, செல்லிடத்துப்பேசி, கையடக்கப்பேசி என்று கொன்று விடுகிறார்கள். ..... நாம் தான் இப்படி விவரம் கெட்டத்தனமாக பெயர் வைத்துக்கொண்டுத் திரிகிறோம்.//

  ஆனந்தன்,

  நீங்க சொல்லறது.. எனக்கு சரியாப் படலைங்க..
  “செல்போன்ல கால் பண்றண்டா மாப்ள” க்கும், “கைப்பேசில கூப்பிடறண்டா மாப்ள” க்கும் வித்தியாசம் இருக்குங்க. மொதல்ல சொன்னதுல தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை.
  எந்த மொழியப் பேசினாலும் சரியாப் பேசனும். இப்படி ரெண்டுக்கெட்டானாப் பேசறதுதலான் புது மொழி உருவாகுது. தமிழையும் சமஸ்கிரதத்தயும் கலந்துப் பேசித்தான் மலையாளம் உருவாச்சுங்கறத நீங்க மறுக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.
  “செல்போன், டிவி, ரேடியோ, வீடியோ” இதெல்லாம் தமிழ் தான் இப்படிப் பேசினாலே தமிழ் பொழச்சுடும் சொல்லறது கொஞ்சம் அபத்தமாப் படுதுங்க..
  என்னப் பொருத்தவரைக்கும் கைப்பேசி, தொலைக்காட்சி, வானொலி, காணொளி ன்னு சொல்லறதுல ஒன்னும் மரியாதைக் குறைவில்லைன்னு நாம நெனச்சாத்தான் தமிழ் வளரும்.
  இப்ப உதாரணத்துக்கு ஒரு அன்னிய மொழிக்காரன் வந்து உங்கக்கிட்ட “How do you say 'cellphone' in tamil?” - அப்படின்னு உங்ககிட்ட கேட்டா நீங்க என்ன சொல்லுவீங்க?

  ReplyDelete
 10. //எதையுமே மாற்றாமல் திருச்சிராப்பள்ளியை ட்ரிச்சி, தஞ்சாவூரை டேஞ்சூர், தூத்துக்குடியை ட்யுடிக்கோரின் என்று தங்கள் வாயில் வந்ததை வைத்து ஆண்டுவிட்டும் போய்விட்டார்கள்.//

  வெள்ளக்காரன் என்ன செஞ்சாலும் சரி.. நம்ம மக்கள் எது செஞ்சாலும் “வெவரங்கெட்டத்தனம்”.. அடப்போங்கப்பா..

  ReplyDelete
 11. // வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது.//

  //எதையுமே மாற்றாமல் திருச்சிராப்பள்ளியை ட்ரிச்சி, தஞ்சாவூரை டேஞ்சூர், தூத்துக்குடியை ட்யுடிக்கோரின் என்று தங்கள் வாயில் வந்ததை வைத்து ஆண்டுவிட்டும் போய்விட்டார்கள். நாம் தான் இப்படி விவரம் கெட்டத்தனமாக பெயர் வைத்துக்கொண்டுத் திரிகிறோம்.// Baby ஆனந்தன், நீங்க நல்லவரா, கெட்டவரா?

  ReplyDelete
 12. @குலவுசனப்பிரியன்: ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த ஆங்கில வார்த்தைகளுக்கு கஷ்டமான - சிக்கலான - இணையான தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தான் சொல்ல வருகிறேன். தமிழ் பேச வேண்டிய இடத்தில் ஆங்கிலம் கலப்பது தான் தவறு என்பது என் கருத்து. இப்போது சொல்லுங்கள்... நான் நல்லவனா, கெட்டவனா

  ReplyDelete
 13. @சரண்: ஆஹா...சொல்ல வந்ததை குழப்படியாகச் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்.

  தஞ்சாவுர், திருச்சி, தூத்துக்குடி எல்லாம் எடுத்துக்காட்டுகளுக்காக சொன்னது. இவை நம்மூர் பெயர்கள். இதற்கு அவர்கள் ஆங்கிலப் பெயர்கள் வைக்க விரும்பவில்லை. இதே பெயரை தங்கள் மொழிக்கேற்ப மாற்றிக் கொண்டார்கள். அதே போல் 'செல்போன்' இது தான் செல்போனைக் கண்டுபிடித்தவன் அதற்கு வைத்த பெயர். இதற்கு நாம் ஏன் நம் இஷ்டத்திற்கு செந்தமிழ் பெயர் சூட வேண்டும்? கைப்பேசி என்று கூறினால் மரியாதைக் குறைவு இல்லை என்றாலும் இப்போதுள்ள சூழ்நிலையில் அது மற்றவர்களுக்கு எளிதில் புரிய வாய்ப்புகள் குறைவு. 6.2" படத்தில் வரும் வடிவேலு காமெடி போலத்தான். "அதுக்கு தமிழ் தெரியுமா இங்கிலீஷ் தெரியுமா, வந்தா பிச்சிக்கிட்டு போகத்தானடா தெரியும். எதுலெல்லாம் தமிழ வளக்குறதுன்னு ஒரு வரமுற வேணாமா?". இதுதான் நிதர்சன உண்மை. தேவையான இடங்களில் ஆங்கிலம் கலப்பதை நாம் தடுக்க முடியாது. ஆனால் இரு தமிழர்கள் சந்தித்துக்கொள்ளும் போது ஆங்கிலத்தில் பேசினால் மூக்கில் குத்தலாம்.

  இணையான வார்த்தைகள் தேவையில்லை என்பது தான் என் கருத்து. செல்போன், ரேடியோ, டி.வி எல்லாமே கண்டுபிடிப்புகள். கண்டுபிடித்தவன் வைத்த பெயரிலேயே விட்டுவிடலாமே. ஹாலிவுட் பாலா, கீபோர்டிற்கு இணையான தமிழ் வார்த்தை 'விரற்கட்டை தட்டச்சுப் பட்டடை' என்று சொல்கிறார். ஏன் இப்படி சுலபத்தில் யாருக்கும் புரியாத அர்த்தம் சொல்ல வேண்டும்? இது தான் எனது கேள்வி. கம்ப்யூட்டரை அவன் கண்டுபிடித்தான், அதை வைத்து தமிழை எப்படி வளர்க்கலாம் என்று யோசிக்காமல், அதற்கு தமிழில் என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிப்பது தேவையில்லாத ஒன்று. தேவைக்கேற்றார்போல் மாற்றம் நல்ல விஷயம் தான்.

  வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
  மாற்றுக்கருத்து இருந்தால் மன்னிக்கவும்...|:-)

  ReplyDelete
 14. இரு பதிவுகளும் அற்புதம் நண்பா..

  ReplyDelete
 15. @ramtirupur: வருகைக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 16. நன்றி.
  தொண்டு தொடர்க.
  அன்புடன்
  ராதாகிருஷ்ணன்
  ஏப்ரல் 11, 2010

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...