அகதி...

12:21:00 PM

அகதி - இந்த மூன்றெழுத்து ஒருவனது தலையெழுத்தையே மாற்றி விடக் கூடியது. நேற்று ராஜாவாக பல்லக்கில் உலா வந்தவனை இன்று சோற்றுப் பொட்டலம் வாங்க லத்தியடி வாங்க வைத்து விடும் இந்த அகதி என்னும் சொல். சொந்த தேசம்,மக்கள், வீடு, வாசல், சொத்து, சுகம் என்று அனைத்தையும் இழந்து வேறு தேசம் போவதைப் போன்ற அவலம்... அது சொலலிப் புரிவதில்லை.12 வருடம் வாழ்ந்த வீட்டை விற்று விட்டு வேறு ஊருக்குப் போய் அந்த வீட்டை விடப் பெரியதாக ஒரு வீட்டைக் கட்டி, சொகுசாக வாழும் போதே பழைய வீட்டு ஞாபகம் கனவில் வந்து தூக்கத்தில் புரள வைக்கிறது. இதில், பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாட்டை விட்டு விட்டு, இழப்பதற்கு உயிரைத் தவிர ஒன்றும் இல்லை என்ற நிலையில் அந்த உயிரையும் கையில் பிடித்துக் கொண்டு ஓடி வரும் நிலை ஏற்ப்பட்டால்??? நினைத்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது.

இலங்கையில் நம் மக்கள் பல வருடங்களுக்கு முன்னமே குடியேறி விட்டனர். இலங்கையின் பழங்குடியினர் தமிழர்களே என்கிறது வரலாறு. அதை மொத்தமாக அழித்து விட்டு,'இது எங்கட நாடு...நீ வெளியேறு' என்று நம்மவர்களை விரட்டுகிறது சிங்கள அரசு. நம்மவர்களும் கள்ளத் தோணியிலும், படகுகளிலும் தப்பித்து ராமேஸ்வரம், வேதாரண்யம் என்று வந்து இறங்கிவிடுகின்றனர். சொந்த ஊர், சொந்த தேசத்தில் கிடைக்காது, அகதியாய் வந்த நாட்டில் எப்படி கிடைக்கும்? ஊருக்கு ஒதுக்குப் புறமாக, பலத்த காவல் போட்ட ஒரு இடம் 'அகதிகள் முகாம்' ஆக ஆக்கப்படும். மிருகக் காட்சி சாலைக்கும், மிருகங்கள் சரனாலயத்திருகும் உள்ள வித்யாசம் தான், சிறைச்சாலைக்கும், அகதிகள் முகாமிற்கும். முகாமை விட்டு எங்கேயும் செல்ல முடியாது, எதுவும் பேசவும் முடியாது, செய்யவும் முடியாது. குடியுரிமை கிடையாது, அதனால் எந்த வேலையும் கிடைக்காது, பணம் சம்பாதிக்க வழியே இருக்காது, ஒரு வேளைச் சோற்றுக்கே கையேந்த வேண்டிய அவல நிலை ஏற்படும் போது தெரியாத்தனமாக எங்காவது கைவைத்துவிட்டால், அவ்வளவுதான்... இருக்கிற குற்றங்கள் எல்லாம் சுமத்தப் பட்டு சாகிற வரை மரண அடி வாங்க வேண்டியது தான். செத்தாலும் சொந்த மண்ணிலேயே குண்டடிபட்டு செத்திருக்கலாம் என்று முடிவு செய்து அவர்கள் திரும்பிச் செல்ல முற்பட்டால், நினைத்தமாதிரியே குண்டடி கிடைக்கும், கடற்படையிடமிருந்து.

அப்படி ஒரு அகதி முகாமைப் பற்றிய படம் தான் ----- DISTRICT 9.
Neill Blomkamp என்னும் தென்ஆப்பிரிக்க இயக்குனர் தான் 2005 ஆம் ஆண்டு இயக்கிய Alive in Joburg என்னும் குறும்படத்தைத் தழுவி எடுத்த முதல் முழு நீளப் படம் தான் DISTRICT 9. 30 மில்லியன் டாலரில் தயாரான இந்தப் படத்தின் முதல் வாரயிறுதி வசூல் மட்டும் 37 மில்லியன் டாலர். படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.
படத்தின் கதை இதுதான் :
தென்ஆப்ரிக்காவில் 20 வருடங்களுக்கு முன் ஒரு வேற்று கிரக விண்வெளிக்கலம் ஒன்று வந்து இறங்குகிறது. இறங்குகிறது என்பதை விட நடு வானில் மிதக்கிறது. சுமார் 1 கி.மீ சுற்றளவுள்ள அந்தக் கலத்தில் பல்லாயிரக்கணக்கான ஏலியன்கள் தலைவன் இல்லாமல், செய்வதறியாமல், நோய்வாய் பட்டு இருப்பதைக் கண்டுபிடித்து அவைகளை அகதிகளாக ஊருக்குச் சற்று ஒதுக்குபுறமாக 'DISTRICT 9' என்ற இடத்தில் தங்க வைக்கிறது அரசு .
முதலில் சில ஆயிரங்களாக வந்திறங்கிய ஏலியன்கள், இப்போது பல மில்லியன்களாகப் பெருகி DISTRICT 9 ஒரு சேரி போல் ஆகி விடுகிறது. தங்களிடம் இருக்கும் பயங்கர ஆயுதங்களை சோற்றுக்காக உள்ளூர் ரவுடிகளிடம் விற்கிறது ஏலியன்கள். அவர்களில் ஒரு கூட்டத்தினர், ஏலியன்களைத் தின்றால் அசுர பலம் வரும் என்று நம்பி அவைகளை அடித்து சாப்பிடுகிறார்கள். இந்த இடத்தை விட்டு ஏலியன்களுக்கு வெளியே வரவும் அனுமதி இல்லை. வந்தால் உடனே சுட்டுக் கொல்கிறார்கள். இப்படியாகப் போய்க்கொண்டிருக்கிறது ஏலியன்களின் அகதி வாழ்க்கை.
மேலும் இந்த ஏலியன்கள் இருப்பதால் அரசாங்கத்திற்கு பயங்கர செலவு, மக்களுக்கு தொந்தரவு, இவைகளுக்கு திரும்பிப் போகும் எண்ணமே இல்லை; இப்படியே போனால் அவ்வளவு தான் என்று ஊருக்குள்ளும் பிரச்சனை பெரிதாக ஆரம்பிக்கிறது. அதனால் இந்த ஏலியன்கள் அனைத்தையும் ஊருக்கு இன்னமும் வெளியே DISTRICT 10 என்ற புதிய இடத்திற்கு மாற்ற MNU என்னும் தனியார் இராணுவம் முயல்கிறது. இந்த வேலையைச் செய்து முடிக்க 'விக்கூஸ்' என்ற ஒருவரை தேர்ந்தெடுக்கிறது MNU.
திட்டத்தை அமல் படுத்த DISTRICT 9 லிருக்கும் ஒவ்வொரு ஏலியனிடமும் போய் உடன்படிக்கை பத்திரத்தில் கையெழுத்து வாங்குகிறார். அங்கு 'கிரிஸ்டொபெர்' என்று அழைக்கப்படும் ஏலியன் தனது வீட்டில் ஒரு ரகசிய ஆராய்ச்சிக் கூடத்தையே வைத்திருப்பதைப் பார்க்கும் விக்கூஸ், அங்கு பல வருடங்களாக சொட்டு சொட்டாய் கிரிஸ்டொபெர் சேர்த்து வைத்திருக்கும் தாய்க் கப்பலின் எரிபொருள் உள்ள ஒரு சின்ன கருவியைத் திறக்க முயல, அது அவர் முகத்தில் தெறித்து விட, பிரச்சனை ஆரம்பம் ஆகிறது. முதலில் எரிச்சல் போல ஆரம்பித்து, பின் ஒரு கையே ஏலியன் கை போல் மாற ஆரம்பிக்க MNU ஆட்களே இவரைத் தூக்கிச் செல்கின்றனர். அங்கிருந்து தப்பி ஓடும் விக்கூஸ், தாய்க் கலத்தை இயக்க தன் மகனுடன் திட்டம் போட்டு செயல் பட்டுக்கொண்டிருக்கும் கிரிஸ்டொபெர் ஏலியனிடம் போய் சேர்ந்து தன்னைக் காப்பாற்றச் சொல்ல, நடக்க வேண்டியவை நடந்து டைரக்டர் டச்சுடன் படம் முடிகிறது.
விக்கூஸ் ஏலியனாக மாறுவதும், MNU ஆட்கள் அவரைச் சித்தரவதைப் படுத்துவதும், ஏலியன்களைத் துண்டுதுண்டாக்கி ஒரு கூட்டம் திண்பதும், இன்னொரு கூட்டம் ஆராய்ச்சி என்ற பெயரில் தொங்க விடுவதும் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது. கடைசியில் MNU ராணுவத்திடமிருந்து கிரிஸ்டோபரைக் காப்பாற்றி அனுப்ப, அதுவும் கண்டிப்பாக 3 வருடத்தில் உன்னைக் காப்பாற்றுவேன் என்று சொல்லி விண்கலத்தை இயக்க 'போய்த் தொலைந்தார்கள்' என்று நாடே சந்தோசப்படுகிறது.

படம் முழுவதுமே ஒரு டாக்குமெண்டரி போலவே ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் கடைசி க்ரெடிட்ஸ் வரை யாராவது இந்த ஏலியன் வருகையைப் பற்றி பேட்டி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். விக்கூஸ் தேர்ந்தெடுக்கப் பட்டதிலிருந்து அவர் செய்யும் வேலைகளை லைவ் ரெகார்டிங் செய்து கொண்டே ஒரு கேமரா அவர் கூடவே பயணிப்பது போல் காட்டுகிறார்கள்.ஆனால், எல்லா படங்களிலும் வரும் ஒரு சீன இந்தப் படத்திலும் வருகிறது. என்னதான் வில்லனாக இருந்தாலும் அவன் ஒரு ராணுவ வீரன் என்பதற்காகவே சண்டையில் ஜெய்த்து நடந்து வருவதை ஸ்லோ மோஸனில் புகைக்கு நடுவே காட்டி ஹயிப் கொடுக்கிறார்கள்.

படத்தை
9 ரெட் ஒன் காமெராக்கள் மூலம் எடுத்திருக்கிறார்கள். தமிழில் ரெட் ஒன் மூலம் இது வரை மூன்று படங்கள் வந்திருக்கிறது. அச்சமுண்டு அச்சமுண்டு, உன்னைப் போல் ஒருவன், திரு திரு துறு துறு.

முன்பு தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த கறுப்பர் இனக் கொடுமையை மறைமுகமாகக் காட்டும் விதமாக இந்தப் படத்தை அமைத்திருக்கிறார்கள். 1970 களில் 60,000 கறுப்பின மக்கள் வலுக்கட்டாயமாக DISTRICT 6 என்ற இடத்திற்கு மாற்றப்படிருக்கிறார்கள். அதன் பாதிப்பாகவே இந்தப் படம் அமைந்துள்ளது.

அன்றிலிருந்து இன்று வரை மனிதனின் கொடுமையான பக்கங்கள் வெளிவந்தது கொண்டே தான் இருக்கிறது. மனிதன் அழகாக ஆடை உடுத்திக் கொண்டு திரியும் ஒரு மிருகம் தான் என்று தன் இந்தப் படம் கூறுகிறது. மனிதத்தன்மை என்பது சுத்தமாக அழிந்து வருகிறது என்பது தான் கதைக் கரு. மொத்தத்தில்,

DISTRICT 9 - ஏலியன்...மனிதன்...மிருகம்

You Might Also Like

2 comments

  1. எதிர்பார்ப்பே.. இல்லாமல்.. முதல் காட்சியில் உட்கார்ந்த படம். அசத்தியிருக்காங்க இல்ல??? :) :)

    ReplyDelete
  2. ஆமாம் தல... இங்க தியேட்டர்ல இன்னும் ரிலீஸ் ஆகல. டவுன்லோட் பண்ணி தான் பார்த்தேன். நல்ல படம்...

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...