LUCIA | கன்னடம் | 2013 - கனவு மெய்ப்படும் வேளை இது...

1:04:00 PM

By writing this post I am making loads of enemies! I did contemplate for a long time whether to write this or not, and now I have made up my mind to put this out, so that I can move on and find a solution! - கன்னட இயக்குனர் ஒருவர் "Making Enemies" என்ற தலைப்பில் எழுதிய, இப்படித் தொடங்கும் பதிவு தான் இன்று மொத்த இந்தியத் திரையுலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. Lifeu Ishtene என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்து விட்டு LUCIA என்று பெயரிடப்பட்ட தனது அடுத்த கதையைப் படமாக எடுக்க தயாரிப்பாளர் யாரும் முன்வராத நிலையில் தனது வலைப்பக்கத்தில் அவர் எழுதிய ஆங்கிலப் பதிவு தான் Making Enemies. ஆர்பாட்டமில்லாமல் யாரையும் நேரடியாகத் தாக்கிப்பேசாமல் உள்ளதை உள்ளபடி தனது மனக்குமுறல்களையும் கன்னட சினிமாவின் இன்றைய துர்நிலையையும் பட்டியலிட்டிருந்தார். அந்த இயக்குனரின் பெயர் பவன் குமார். அக்மார்க் ஒரிஜினல் கன்னட சினிமா இயக்குனர். இப்படிச் சொல்லக் காரணம் இருக்கிறது. கன்னடத்தில் ஒரு வருடத்தில் 100 படங்கள் வெளியாகிறதென்றால் அதில் 90 படங்கள் ரீமேக் படங்களாகத் தான் இருக்கும். கர்நாடகாவில், பெரும் வருமானம் தரக்கூடிய "ஏ" செண்டர் ஆடியன்ஸ் யாரும் கன்னட சினிமாக்களை தியேட்டரில் போய்ப் பார்க்க மாட்டார்கள். தியேட்டரில் என்ன கன்னட சினிமாவைப் பார்க்கவே மாட்டார்கள். ஆனால் கன்னடம் அல்லாத வேறு எந்த மொழிப்படமாக இருந்தாலும் சரி, சக்கை போடு போடும், கலெக்ஷனை அள்ளும் இந்த ஏரியாவில். உலக அளவில் அதிக படங்களைக் கொடுக்கும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளா எல்லாம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் பொழுது, கர்நாடகா மட்டும் ஒரு இழிபெயரையே தனக்கென பல வருடங்களாக தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று யாருமே எண்ணியதில்லை. ஹிந்தி, தமிழ், தெலுங்கு - இந்த மூன்று மொழிகளிலும் வெளியாகி வெற்றியடைந்த படம் எதுவாக இருந்தாலும் 10 லட்சம், 20 லட்சம் என்று உடனே கொடுத்து வாங்கி ஏதாவது ஒரு இயக்குனரை வைத்து ரீமேக் செய்து வெளியிட்டு விடுவார்கள். சமீபத்தில் தான் நம் வழக்கு எண் 18/9 படமும் தெலுங்கின் பிருந்தாவனமும் கன்னடத்தில் வெளியானது.

இயக்குனர் பவன் குமாரின் ஆதங்கம் இதுதான். "10 லட்சம், 20 லட்சம் கொடுத்து வேறு மொழியில் ஒரு எழுத்தாளர் எழுதிய கதையின் ரீமேக் உரிமையை வாங்குபவர்கள், கன்னட எழுத்தாளர்களுக்கு என்று வரும்பொழுது குறைந்தபட்சம் ஒரு லட்சம் கூடத் தரத் தயாராக இல்லை. மற்ற மொழிப் படங்களை போட்டி போட்டுக் கொண்டு ரீமேக் செய்து நடிக்கும் நடிகர்கள் ஒரு கன்னட இயக்குனர் சொல்லும் கதையை கேவலம் 3 மணிநேரம் கூட அமர்ந்து கேட்கத் தயராக இல்லை. ஒரிஜினல்கள் என்றால் தயாரிப்பாளர்களுக்கும் சரி, நடிகர்களுக்கும் சரி அந்த இயக்குனர் சொல்லும் கதையை மூளையை உபயோகித்து உள்வாங்கி, கதையைப் புரிந்து கொள்ள வேண்டும். இயக்குனர் மேல் நம்பிக்கை வைத்து களத்தில் இறங்க வேண்டும். ஆனால் ரீமேக் படங்களுக்கு அந்த அவசியம் இல்லை. ஒரிஜினல் படத்தை ஒரு முறை பார்க்க வேண்டும், வசூல் எவ்வளவு என்று தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும், ஏதாவது ஒரு இயக்குனரை வைத்து படத்தை அப்படியே எடுத்து வெளியிட்டு விட வேண்டும். அவ்வளவு தான். மூளையின் அவசியமே இங்கு இல்லை. புதிய கதைகளை புதிய ஸ்டார்களை எடுத்து அதை சிரமப்பட்டு வியாபாரமாக்குவதை விட, பெரிய "ஸ்டார்"களைப் போட்டு ரீமேக் செய்வது சுலபம் என்ற மனநிலை தான் கன்னட சினிமாவை அழித்துக் கொண்டிருக்கிறது"  

தமிழ் சினிமாவை விட கன்னட சினிமாவில் ஆதிக்கம், அரசியல், பிரச்சனைகள் அதிகம். கன்னட சூப்பர் ஸ்டாரான மறைந்த நடிகர் திரு. ராஜ்குமார் அவர்களின் குடும்பம் தான் மொத்த கன்னட சினிமாவையும் தன் கைக்குள் வைத்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. சிவ்ராஜ்குமார் - யப்பா... இவரது பட போஸ்டர்களே படுபயங்கரமாக இருக்கும். படங்கள் எப்படி என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால் இவர் தான் கன்னடத்திரையுலகின் டான். புனித்ராஜ்குமார் - இவர் இளையவர். அண்ணனைப் போலக் கொல்லாமல் காதல் + ஆக்ஷன் என்று வலம்வருபவர். ராஜ்குமார் காலத்திலேயே அவருக்கு இணையான ஸ்டாராக இருந்தவர் விஷ்ணுவர்தன். நம் கேப்டன் போல இவரைக்காட்டும் பொழுதெல்லாம் ஒரு சிங்கத்தைக் காட்டிவிடுவார்கள். இவர்களை எதிர்த்து தாக்குபிடித்து நிற்பவர்கள் உப்பேந்திரா - விஷாலின் சத்யம் படதில் வரும் போலீஸ். கன்னடத்தில் வெளியாகும் வித்தியாசமான படங்கள் பெரும்பாலும் இவருடையதாகத்தான் இருக்கும். இவரது இயக்கத்தில் வெளிவந்த "சூப்பர்" என்ற கன்னடப்படம் நிஜமாகவே சூப்பராக இருக்கும். ஆனாலும் ரீமேக் படங்களையும் இவர் விடுவதில்லை. பிதாமகன், நான் அவன் இல்லை என்று ஏதாவது ரீமேக் படங்கள் இவர் நடிப்பில் வந்துகொண்டே இருக்கும். சுதீப் - 'நான் ஈ' சுதீப்பை இங்கு "கிச்சா" என்று அழைக்கிறார்கள். 'சேது' ரீமேக் மூலம் கிடைத்த பெயர். நமது ஒரிஜினல் மூலம் வந்த பெயர் சீயான், ரீமேக்கில் வந்த பெயர் கிச்சா. தெலுங்கு விக்ரமார்குடு (சிறுத்தை), தமிழ் சிங்கம் என்று இவரும் ஒரு ரீமேக் பிரியர் தான். கணேஷ் - காலம்காலமாக கன்னட சினிமாவின் காவியம் என்று போற்றப்படும் "முங்காரு மலே" படத்தின் ஹீரோ. மல்டிப்ளெக்ஸ் தியேட்டரிகளிலேயே ஒரு வருடம் ஓடிய படம். தர்ஷன் - இவர் சிக்காத பிரச்சனை இல்லை. ஆனாலும் தனக்கென் ஒரு தனி ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பவர். இவர்களைப் போன்று விரல் விட்டு எண்ணக்கூடிய ஸ்டார்கள் மட்டுமே கன்னடத்தில் உண்டு. இவர்களும் பெரும்பாலும் ரீமேக் படங்களிலேயே நடிப்பார்கள். நல்ல படம், ஒரிஜினல் படம் என்று சொல்லிக்கொள்ளும்படி வருடத்திற்கு ஒரு படம் வெளியாவதே பெரிய விஷயம். ஆனால் பிரச்சனைகளுக்கு மட்டும் குறைச்சலே இல்லை. ஒருவர் படம் வெளியாவதை மற்றவர் தடுப்பார்கள். ரசிகர்கள் அடித்துக் கொள்வார்கள். இவர்களுக்கெல்லாம் பஞ்சாயத்து செய்து வைப்பதற்கென்றே ஒரு சீனியர் நடிகர் இருக்கிறார். அவரது பெயர் அம்ப்ரிஷ். இப்படிப்பட்ட ஒரு மோசமான கலைத்துறையில் ஒரு படமே எடுத்த இளம் இயக்குனர் ஒருவர் மொத்த கன்னடத் திரையுலகத்தையும் கேள்வி எழுப்பி இப்படி ஒரு பதிவை எழுதியிருந்தார். நிச்சயம் பிரச்சனை வரும் என்று தெரிந்தே தான் இந்தப் பதிவை எழுதினார். ஆனால் பிரச்சனை வந்ததோ இல்லையோ, பெரும் உதவி வந்தது. எந்த தயாரிப்பாளர், நடிகர் உதவியும் இல்லாமல் தனது லூசியா கதையை தான் விரும்பியபடியே எந்த ஒரு சமரசமும் இல்லாமல் திரைப்படமாக எடுக்க முடிந்தது. நம்மவர்கள் போல் படமெடுத்து விட்டு அதை வெளியிட வழியில்லை என்று புலம்பிக்கொண்டிருக்காமல் புதுப்புது வழிகளை தேடிக் கண்டுபிடித்து பரிசோதித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகியும் லூசியா இன்னும் தியேட்டர்களில் சக்கை போட்டு கொண்டிருக்கிறது. அத்தோடு நிற்காமல் உலக சினிமா அரங்கில் கன்னட சினிமாவிற்கென இதுவரையில்லாத ஒரு தனி அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக நமக்கு அறிமுகமில்லாத ஒரு புதிய வியாபார உக்தியை நிகழ்த்திக்காட்டி அசத்தியிருக்கிறார் இயக்குனர் பவன் குமார். 

தனது லூசியா ஸ்கிரிப்டின் மேல் தீராத நம்பிக்கை வைத்திருந்த பவன் குமார், தன் மனதிலிருந்து எழுதிய அந்தப் பதிவு, உலகெங்கிலும் உள்ள கன்னட சினிமா ஆர்வலர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. ஒத்த சிந்தனை உள்ளவர் ஒன்றிணைந்தார்கள். பதிவு எழுதிய 10 தினங்களுக்குப் பிறகு இங்கிலாந்தில் உள்ள கன்னடப் பெண் ஒருவர் பவன் குமாரின் வங்கிக் கணக்கிற்கு ரூபாய் இரண்டு லட்சத்தை அனுப்பியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக பலர் பணம் அனுப்பத் தொடங்க, சீக்கிரமே 9 லட்சம் வரை சேர்ந்துள்ளது. இந்த வரவேற்பு கொடுத்த உற்சாகத்தில் தனது லூசியா படத்தை எடுக்க தயாரிப்பாளர்களை நம்பாமல் ரசிகர்களை நம்ப முடிவுசெய்தார் பவன். புதிய திட்டத்தை உருவாக்கினார் பவன் குமார். அந்தத் திட்டம் PROJECT LUCIA. தியேட்டர் கட்டணத்தை படம் எடுப்பதற்கு முன்பே கேட்டார். தியேட்டர்களில் இந்தப் படத்தை வெளியிடாமல் படத்தின் டி.வி.டியை அனுப்பி வைப்பதாகக் கூறினார். ஆன்-லைனிலும் வெளியிட்டு இலவசமாகப் பார்ப்பதற்கு வழி செய்வதாக வாக்களித்தார். 100 நாட்களில் 50 லட்சம் என்று டார்கெட் வைத்தார். படத்தின் கதை யாருக்கும் தெரியாது, டிரைலர் கூட வெளியிட வில்லை, பவன் குமாரின் முதல் படமான Lifeu Ishtene மட்டும் தான் அவரது திறமைக்குச் சான்று. 27 நாட்காளில் 51 லட்சம் வசூல் செய்தது லூசியா, முதல் காட்சி எடுக்கப்படும் முன்பே. இந்தப் படத்திற்கு மொத்தம் 12 தயாரிப்பாளர்கள் (ரூ.30,00,844), 27 இணை தயாரிப்பாளர்கள் (ரூ.13,44,442), 28 துணை தயாரிப்பாளர்கள் (ரூ.7,02,648), 40 பேர் ரூ.76,438 என்று கொடுத்து எடுக்கப்படாத இந்தப் படத்திற்கு டிக்கெட் வாங்கினர். ஆக மொத்தம் 110 தயாரிப்பாளர்கள் கொடுத்த பணத்தால் லூசியா தொடங்கப்பட்டது. இதற்கு பெயர் Crowd Funding. மக்கள் பணத்தில் படமெடுப்பது. உலகெங்கிலும் பல படங்கள் இப்படி எடுக்கப்பட்டுள்ளது. இந்தியில் சமீபத்திய உதாரணம் "I AM" என்ற திரைப்படம். 85 லட்சம் வரை கிடைத்ததாகத் தெரிகிறது. 

போதுமான அளவு பணம் சேர்ந்த பின் வந்தப் பணத்தை, அனுப்பியவர்களுக்கே நன்றியுடன் திருப்பித் தந்தார் பவன். அத்தோடு நிற்கவில்லை. எல்லா வகையிலும் படத்திற்கான செலவுகளைக் குறைத்தார். திறமைசாலிகளை தேடித் தேடி தன்னுடன் சேர்த்துக் கொண்டார். மூன்று கோடி ரூபாய் வரை பட்ஜெட் தேவைப்படும் படமான லூசியாவை வெறும் 71 லட்சத்தில் எடுத்து முடித்தார். படத்திற்கு இசையமைத்தவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். இது அவருக்கு முதல் படம். மொத்த படமும் Canon DSLR கேமராவில் டிஜிடலில் தான் எடுக்கப்பட்டது. The 72 hours challenge என்ற பெயரில் லூசியா ப்ரோமோ போட்டி நடத்தி திறமையாளர்களுக்கு தனது படத்தில் வாய்ப்பு கொடுத்தார். படத்தின் இணை இயக்குனர்களை இப்படித்தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர். Facebook இல் கிடைத்த நண்பர் ஒருவர் கம்போஸ் செய்த பாடலை தனது படத்தில் உபயோகித்தார். "There are no small roles, just small actors" என்று விளம்பரம் செய்து 250 நடிகர் நடிகைகளை ஆடிஷன் செய்து தனது படத்தில் பயன்படுத்தினார். படத்தின் ஹீரோவாக நடித்திருப்பவர் பவன் குமாரின் Lifeu Ishtene உள்ளிட்ட சில கன்னடப்படங்களில் நடித்திருக்கும் ஒரு துணை நடிகர். மொத்தக்கதையும் இவரைச் சுற்றித்தான் நடக்கிறது. அசத்தியிருக்கிறார் மனிதர். கதாநாயகி ஒரு மாடல். அருமையானதொரு நடிப்பை வழங்கியிருக்கிறார். பணம் கொடுத்து உதவியவர்கள் ஒரு பக்கம் இருக்க, தங்களது வீடு, கார்களை சூட்டிங்கிற்கு கொடுத்து உதவியிருக்கின்றனர் பலர். பவன் குமாரின் இந்த முயற்சியைப் கேள்விப்பட்ட பெங்களூரின் முக்கிய மல்டி ப்ளெக்ஸ் திரையரங்கு அமைப்பான Cinepolis லூசியாவின் ப்ரீமியர் காட்சிகளை வெளியிட முன் வந்தது. இவையனைத்தும் படம் எடுக்கப்படும் முன் நடந்த விஷயங்கள். படம் பற்றிய ஒவ்வொரு செய்தியையும் தனது தளத்தில் பதிவாக எழுதிக்கொண்டே இருந்தார் பவன். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே வந்தது, லூசியா.

படத்தை எப்படியோ எடுத்துவிட்டாலும் அதை திரையரங்குகளில் அவ்வளவு சுலபமாக வெளியிட்டு விட முடியாது என்பது பவனுக்குத் தெரியாமல் இல்லை. டிக்கெட் பணத்தைக் கொடுத்தவர்களுக்கு படத்தை ஆன்-லைனில் காட்டலாம். ஆனால் அது போதாது. இந்த முயற்சி இத்தோடு நின்று விடக்கூடாது என்று முடிவு செய்த சமயத்தில் கைகொடுத்த விஷயம் தான் - சர்வதேச திரைப்பட விழாக்கள். அருமையாக வந்திருந்த லூசியா படம், லண்டன் இந்திய திரைப்பட விழாவில் ரசிகர்களின் பெருவாரியான ஆதவைப் பெற்று சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது (Audience Choice BEST Film - London Indian Film Festival). இந்தியாவில் நடந்த திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டு வெற்றி பெறத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக லூசியாவைப் பற்றிப் பிரபலங்கள் பேசத் தொடங்கினர். அவர்கள் பேசியதும் மீடியாவும் பேசியது. பவன் குமாரின் Project Lucia என்ற Crowd Funding உக்தியும் பல பரிசுகளை பவன் குமாருக்குப் பெற்றுத் தந்தது. அதில் முக்கியமான ஒன்று, Young Creative Entrepreneur Award by the British Council. இந்த விருதுகளும் பாராட்டுக்களும் படத்திற்கு நல்ல விளம்பரமாக அமைய, இந்தியாவின் முக்கிய திரையரங்கு செயின்களில் முதன்மையான PVR சினிமாஸ் தனது PVR Director's Rare மூலம் லூசியாவை முக்கிய நகரங்களில் வெளியிட முன்வந்தது. ஆட்டம் ஆரம்பமானது! 

செப்டம்பர் 6 ஆம் தேதி லூசியா வெளியானது. மீடியாக்களில் இப்படி ஒரு படம் தயாராவது பற்றிப் பேசப்பட்டு வந்ததால், படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்து. வெளியான இடங்களில் எல்லாம் பாராட்டு மழை. படத்தை பற்றி ஒருவர் கூடக் குறை சொல்லவில்லை. அவ்வளவு பெர்பெக்ட்டாக இருந்தது லூசியா. இத்தனைக்கும் படத்தில் எந்த பெரிய ஸ்டாரும் நடிக்கவில்லை. துகிலுரித்துக்காட்டும் ஹீரோயின்கள் இல்லை, அபத்த காமெடி இல்லை, பறந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகள் இல்லை. முக்கியமாக படம் ஒரு ரீமேக் படமில்லை. அக்மார்க் ஒரிஜினல் கன்னடத் திரைப்படம். இன்றைய கன்னட டிரெண்டிற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத சைக்கலாஜிக்கல் த்ரில்லர்! ஆம், தனது முதல் படத்தை டார்க் காமெடியாக எடுத்த பவன், அடுத்து த்ரில்லரைக் கையில் எடுத்தார். படத்தின் கதைக்கருவிற்கும் படம் உருவான விதத்திற்கும் பெரிய ஒற்றுமை இருக்கிறது - "கனவு". தூக்கம் வராமல் தவிக்கும் ஹீரோவிற்கு ஒரு நாள் யாரோ ஒருவர் மூலம் ஒரு மாத்திரை கிடைக்கிறது. தனது கதையைப் படமாக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த பவனுக்கு யாரோ ஒரு முகம் தெரியாத பெண் அனுப்பிய முதல் பணம் போல. அந்த மாத்திரயைப் போட்டுக்கொள்ளும் ஹீரோவிற்கு தூக்கம் மட்டுமில்லாமல் தான் வாழ விரும்பும் வாழ்க்கையை கனவாகக் காணும் வாய்ப்பும் கிடைக்கிறது. பவனுக்கு பணம் மட்டுமல்லாமல் தனது கனவுப்படமான லூசியாவை எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது போல. முதல் படம் ஹிட் என்பதால் அதிக சம்பளத்திற்கு பவனை புக் செய்ய தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். லூசியாவிற்காக அல்ல, நமது "எங்கேயும் எப்போதும்" படத்தை ரீமேக் செய்வதற்காக. லூசியா கதையால் ஈர்க்கப்பட்டு தமிழிலும் ஹிந்தியிலும் அதைப் படமாக எடுக்க ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். ஆனால் பவனிற்குத்தான் ரீமேக் படங்களை இயக்கவோ, தனது லூசியாவை கன்னடம் தவிர்த்து மற்ற மொழிகளில் எடுக்கவோ விருப்பம் இல்லை. "எத்தனை நாளைக்குத்தான் மற்ற மொழிப்படங்களின் ரீமேக் உரிமையை கன்னடத் திரையுலகம் வாங்கிக் கொண்டிருக்கும். கன்னடப் படத்தின் ரீமேக் உரிமையை மற்ற மொழியினர் வாங்க வேண்டும்" என்று பவன் கண்ட கனவு இன்று பளித்திருக்கிறது. லூசியாவின் தமிழ், தெலுங்கு உரிமையை திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் C.V குமார் வாங்கியிருக்கிறார். மேலும் கன்னட சேனலான உதாயா டிவி ரூ.95 லட்சம் கொடுத்து லூசியாவின் டி.வி ரைட்ஸை வாங்கியிருக்கிறது. நினைவிருக்கட்டும் லூசியாவின் மொத்த பட்ஜெட், ரூ 71 லட்சம்! இவையெல்லாம் தவிர்த்து தியேட்டர் வசூல் வேறு இருக்கிறது. வந்த லாபம் அனைத்தையும் தனது முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து கொடுத்து வருகிறார். 3 லட்சம் கொடுத்த என் நண்பனின் கன்னட நண்பர் ஒருவருக்கு 15 லட்சம் திருப்பிக் கொடுத்திருக்கிறார் பவன்! படத்தின் பிரதான 12 தாயாரிப்பளர்களில் இவரும் ஒருவர். 110 முதலீட்டாளர்கள் பெயரும் படத்தின் டைட்டிலில் இடம் பெறுவது மற்றுமொரு சிறப்பு. 

இத்தேடு ஆட்டம் முடிந்துவிடவில்லை. 

HomeTalkies - ஒரிஜினல் கன்னட சினிமாக்களை வியாபாரமாக்குவதற்காகவே பவன் குமாரால் தொடங்கப்பட்ட தளம். இந்தத் தளத்தில் ரீமேக் அல்லாத ஒரிஜினல் கன்னடப் படங்களைப் பணம் கொடுத்துப் பார்க்கலாம். ஒரிஜினல் படமெடுத்தவர்களை ஊக்குவிக்கிறது இந்தத் தளம். தியேட்டர் வசூல் தவிர்த்து இங்கு கிடைக்கும் லாபமும் தயாரிப்பாளர்களுக்குப் போய் சேரும். உலகெங்கிலும் உள்ள கன்னட மொழி ஆர்வலர்களின் முழு ஆதரவுடன் இயங்கி வருகிறது ஹோம் டாக்கீஸ். இங்கு தான் தனது லூசியாவையும் முதலில் வெளியிட நினைத்திருந்தார் பவன். PVR தயவால் தியேட்டர் ரிலீஸே கிடைத்துவிட்டது. ஆனால் PVR மட்டும் போதாது. இன்னும் நிறைய தியேட்டர்கள் வேண்டும். ஒரு கன்னடப்படம் குறைந்து 250 தியேட்டர்களிலாவது வெளியாக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் தியேட்டர் வாடகைக்கு மட்டும் 2 கோடி ரூபாய் வேண்டும். அவ்வளவு பணம் நிச்சயமாக இல்லை. எனவே யோசிக்கவே இல்லாமல் மீண்டும் மக்களிடமே வந்தார் பவன். இந்த முறை ஒரிஜினல் டி.வி.டி / ப்ளூ-ரேக்கள் மூலம். தனது முதல் படமான Lifeu Ishtene படத்தை இதுவரை 2500 பேர் பணம் கட்டி ஆன்-லைனில் பார்த்திருப்பதாகச் சொல்கிறார் பவன். லூசியாவிற்கு அவரது டார்கெட் 15,000! பதினைந்தாயிரம் பேர் லூசியாவை ஆன்-லைனிலும் ஒரிஜினல் டி.வி.டியிலும் பார்க்கத் தயாராக இருந்தால், லூசியாவை சொந்தமாக 250 தியேட்டர்களில் வெளியிட முடியும். தானம் கேட்கவில்லை. புதிய வழி ஒன்றை உருவாக்கினார் - முன்பதிவின் மூலம். லூசியாவை ஆன்-லைனில், டி.வி.டியில் பார்க்க விரும்புபவர்கள் அந்தப் பணத்தை முதலிலேயே கொடுத்துவிட வேண்டும். அதாவது ப்ரீ-ஆர்டர். 

படம் தியேட்டர்களில் ஓடி முடித்து ஒரிஜினல் டி.வி.டி வெளியானவுடன் ப்ரீ-ஆர்டர் செய்திருப்பவர்களுக்கு அவை அனுப்பி வைக்கப்படும். அதுமட்டுமல்ல, அந்த ரசிகருக்கு லூசியாவின் ஆன்-லைன் விநியோக உரிமையும் வழங்கப்படும். அதாவது, நீங்கள் 5000 ரூபாய் முன்பதிவுப்பணமாக கொடுத்ததாக வைத்துக்கொள்வோம். உங்களுக்கு 75% விநியோக உரிமை வழங்கப்படும். லூசியா படம் பற்றிய சுட்டியை (லின்க்) உங்களது FB பக்கத்திலோ, வலைப்பக்கத்திலோ, சொந்த தளத்திலோ எங்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். நண்பர்களுக்கு ஈ-மெய்லும் அனுப்பலாம். இந்தத் திட்டம் வெற்றியடந்து 250+ தியேட்டர்களில் லூசியா வெளியானால் உலகமெங்கும் மக்கள் லூசியாவைக் காண விரும்புவார்கள். தியேட்டரில் பார்க்க முடியாதவர்கள் ஆன்-லைனில் பார்க்க நினைப்பார்கள். அப்படிப் பார்ப்பவர்கள் உங்களது "லின்க்" மூலம் படத்தைப் பார்த்தால் அவர்கள் கொடுக்கும் பணத்தில் 75% உங்களுக்கு! கேட்பதற்கும், புரிந்து கொள்வதற்கும், இதெல்லாம் நடக்கிற காரியமா என்ற சந்தேகத்துடன் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும் இதைத் தான் செய்து கொண்டிருக்கிறார் பவன். அப்படி பணம் சம்பாதித்த ஒருவரின் தளம் இது - http://www.techsagar.com/lucia-film-pre-order/ 1000 ரூபாய் போட்ட அவருக்கு அதற்குள் 1450 ரூபாய் கிடைத்துவிட்டதாகச் சொல்கிறார். இது மற்றுமொரு தளம் - http://www.luciakannadamovie.com/. இதுவரை 4697 பேர் லூசியாவை ப்ரீ-ஆர்டர் செய்துள்ளதாக ஹோம் டாக்கீஸ் சொல்கிறது. இந்த விநியோக உரிமைக்கு காலவரையறை கிடையாது. உங்களது வாழ்நாள் முழுக்க லூசியாவின் ஆன்-லைன் விநியோக உரிமை உங்களுக்கு உண்டு. வெறும் 12 பேர் படத்தைப் பார்த்துவிட்டால் போதும் போட்ட பணம் 500 ஆக இருந்தாலும் சரி, 5000 ஆக இருந்தாலும் சரி எடுத்துவிடலாம். மற்ற அனைத்தும் லாபம் தான் என்கிறார் பவன். பணம் அனுப்பியவர்கள் மொத்த விபரமும் இந்த சுட்டியில் காணக்கிடைக்கிறது. முன்பணம் கொடுத்தவர்களுக்கு மற்றவர் போல் வெறும் டி.வி.டி / படம் பார்க்க லின்க் மட்டும் கொடுத்துவிட்டுப் போகாமல் அவர்களையும் வியாபாரத்திற்குள் இழுத்து, லாபத்தைப் பங்கு கொடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இந்த முறை வெற்றி பெற்றால் கன்னட சினிமாவின் தலையெழுத்து மட்டுமல்ல, மொத்த இந்திய சினிமாவின் தலையெழுத்தும் மாறிவிடும். 

இவ்வளவு முயற்சி செய்பவர் ஏன் DTHல் படத்தை வெளியிடவில்லை என்று கேட்டதற்கு, "அவ்வளவு பெரிய ஸ்டார் திரு கமல்ஹாசன் அவர்களாலேயே முடியவில்லை. என்னால் எப்படி முடியும். நம் மக்களும் சிஸ்டமும் மாற சிறிது காலம் எடுக்கும்" என்கிறார் பவன். 

இவ்வளவு சொல்லிவிட்டு படத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்றால் எப்படி - சில கதைகளை யோசிப்பது சுலபம். ஆனால் அதை எழுதும் பொழுது தான் பிரச்சனை புரியும். அப்படியும் சில சிக்கலான கதைகளைக் சுவாரஸ்யமாக எழுதிவிட்டு வாசிப்பவர்களின் கற்பனைக்கு விட்டுவிடலாம். ஆனால் அந்தக் கதையை அப்படியே திரையில் கொடுப்பதென்பது முடியாத காரியம். அப்படியே கொடுத்தாலும் அது அநேகம் பேருக்கு புரியாது. செல்வாவின் ஆயிரத்தில் ஒருவன் அப்ப்டி ஒரு கதை தான். ஆசை ஆசையாக எழுதி, அதை முடிந்தவரை நியாயமான முறையில் படமாக்கிக் கொடுத்தார். ஆனால் உண்மைக்கும் புதினத்திற்கும் இருக்கும் வித்தியாசம் நமக்குத் தெரியாததால் அந்தப் படம் பெற வேண்டிய நியாயமான வெற்றியைப் பெறவில்லை. லூசியாவும் அது போன்றதொரு கதை தான். 

Your small life is somebody's big dream - இது தான் கதை. 

நிக்கி - தனது தூரத்து உறவினரான மாமாவான சங்கரண்ணாவின் டாக்கீஸ் ஒன்றில் வேலை செய்கிறான். அவனது பிரதான வேலை தியேட்டருக்கு வருபவர்களை இருட்டில் டார்ச் அடித்து அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைப்பது. ஒரு சிறிய அறையில் நான்கு பட்டாப்பட்டி நண்பர்களுடன் வாழும் அவனுக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு பிரச்சனை மட்டும் தான். அது தூக்கம். இரவு முழுவதும் கொட்டக்கொட்ட முழித்தே இருப்பான். எவ்வளவு முன்றாலும் தூக்கம் மட்டும் வரவே வராது. இந்தச் சூழ்நிலையில் தான் டாக்கீஸிற்கு நண்பர்களுடன் வரும் ஒரு பெண்ணைச் சந்திக்கிறான், காதல் கொள்கிறான். அவள் பெயர் ஸ்வேதா, பீட்ஸா கடையில் வெயிட்டராக வேலை செய்பவள். உறங்கமுடியாத ஒரு நாள் இரவு, அறிமுகமே இல்லாத இருவர் மூலம் அவனுக்கு ஒரு மாத்திரை கிடைக்கிறது. அந்த மாத்திரையின் பெயர் லூசியா. 

இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க நிக்கி அடிபட்டு மருத்துவமனையில் கட்டுக்களுடன் படுத்துக்கிடக்க அவன் உயிர் பிழைப்பது கடினம் என்று சொல்கிறார்கள். கொலையா தற்கொலையா என்கிற ரீதியில் விசாரணை நடக்கிறது. அது பற்றி விசாரிக்க மும்பை டிடெக்டிவ் ஒருவர் வருகிறார். நிக்கி உட்கொள்ளும் மாத்திரை பற்றித் தெரியவருகிறது. நில் பிடித்தாற்போல் வேகமாக நகர்கிறது விசாரணை. 

மாத்திரையைப் போட்டுக்கொள்ளும் நிக்கிக்கு அருமையான தூக்கம் வருகிறது. கூடவே கனவும். கனவில் அவன் டார்ச் லைட் நிக்கி அல்ல. சூப்பர் ஸ்டார் நிக்கி. அவனது கால்ஷீட்களுக்காக கம்பெனிகள் காத்து நிற்கிறது. அவனுடன் நடிக்க அழகிகள் வரிசையில் நிற்கிறார்கள். அவனது மேனேஜர் மாமா சங்கரண்ணா. போதாத குறைக்கு அவனைக்கடத்திக்கொண்டு போய் மிரட்டிப் பணம் பிடுங்கப் பார்க்கிறது ஒரு கும்பல். இந்தச் சூழ்நிலையில் ஸ்வேத்தாவை சந்திக்கிறான், காதல் வயப்படுகிறான். இங்கு ஸ்வேதா ஒரு வளர்ந்து வரும் மாடல்.

மூன்று தளங்களில் பயணிக்கும் இந்தக் கதையில் நிஜ வாழ்வில் நிக்கி சந்திக்கும் அதே மனிதர்கள் கனவில் வேறு விதமாகத் தோன்ற, கொஞ்சம் கொஞ்சமாக கனவும் நிஜமும் கலந்து நிக்கி நிலையற்ற ஒரு நிலைமைக்கு ஆளாகிறான். என்ன நடந்தது என்பது தான் கதை.

பார்ப்பவர் தலையைப் பியித்துக்கொள்ள வைக்கக் கூடிய கதை. ஆனால் அதை பவன் சொல்லியிருக்கும் விதம் அருமை. கனவையும் நிஜத்தையும் வேறுபடுத்திக்காட்ட சூப்பர் ஸ்டாட் நிக்கி வரும் காட்சிகளை கருப்பு-வெள்ளையில் காட்டியிருக்கிறார். கிட்டத்தட்ட அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் டபுள் ரோல். அருமையாக வேறுபடுத்திக்காட்டி அற்புதமாக நடித்திருக்கிறார்கள். புகுந்து விளையாடி இருக்கிறார் எடிட்டர். கொஞ்சம் கூடக் குழப்பாமல் கட் செய்திருக்கிறார். படத்தின் ஹீரோ இவர் தான். கூடவே பின்னனி இசையும். டைட்டிலில் இருந்தே படத்தை அருமையாக நகர்த்திச் செல்கிறது இசை. லூசியாவின் பாடல்களை விடாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். "ஜம்மா ஜம்மா", "ஹேளு சிவா" முக்கியமாக "தின்பெடக்கம்மி" அனைத்தும் அருமை. டைட்டில் + தீம் பாடலான "நீ தொரபெடா"வில் அந்தப் பெண்ணின் குரல் மனதை என்னவோ செய்யும். கன்னட சினிமா மீதுள்ள தனது ஆதங்கத்தை அற்புதமாக படத்திலும் சேர்த்திருக்கிறார் பவன். சூப்பர் ஸ்டார் நிக்கி நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் அப்படியே டெம்ப்ளேட் கன்னட ஆக்ஷன் ஹீரோக்களின் போஸ்டர். அரிவாளில் ரத்தம் சொட்ட சொட்ட சாய்ந்து நிற்பது. பிரஸ் மீட் அதை விடப் பெரிய காமெடி. நன்றாக பகடி செய்திருக்கிறார். சங்கரண்ணா ஒருகாட்சியில் தான் நடத்தும் டாக்கீஸில் எந்தக் காரணத்தைக் கொண்டும் யார் பேச்சைக் கேட்டும் கன்னடம் அல்லாத மற்ற மொழிப் படங்களையோ குஜால் படங்களையோ வெளியிடுவதில்லை என்று சண்டையிடுகிறார். இப்படி இன்றைய கன்னட சினிமாவை பகடி செய்யும் காட்சிகள் + சினிமாவாக கன்னடமொழிப்படங்களை ஆதரிக்கும் காட்சிகள் படத்தில் ஏராளம் உண்டு. தாய்மொழியில் அவசியத்தையும் ஆங்கிலம் நமது வாழ்க்கையை, கலாச்சாரத்தை எப்படி மாற்றியிருக்கிறது என்பதையும் நகைச்சுவையாக சொருகியிருக்கிறார். முக்கியமான மற்றுமொரு விஷயம், படம் எல்லா இடங்களிலுமே ஆங்கில சப்-டைட்டில்களுடன் தான் வெளியாகியிருக்கிறது.

மேடை நாடகங்கள் எழுதி தனது கலைப்பயணத்தை தொடங்கிய பவன் குமார், பின் துணை நடிகராக, இணை இயக்குனாராக தன்னை வளர்த்துக் கொண்டு Lifeu Ishtene என்ற படம் மூலம் நல்ல இயக்குனர் என்று பெயரெடுத்த பவன், இன்று இந்தியாவே திரும்பிப் பார்க்கும் ஒரு தயாரிப்பாளராகவும் வளர்ந்து இருக்கிறார். லூசியாவை கேட்கக்கூட நேரமில்லாத தயாரிப்பாளர்கள் எல்லாம் இன்று பவன் குமாருக்காக காத்திருக்கின்றனர். ஆனால் தனது நிலையில் தெளிவாக இருக்கிறார் பவன். "இனி தனது கதைகளை மாமூல் தயாரிப்பாளர்களை நம்பி எடுக்க முடியுமா, தெரியவில்லை" - என்று தெளிவாகச் சொல்கிறார். அவருக்கு நம் வாழ்த்துக்களைச் சொல்வோம். படம் பார்க்காத நண்பர்கள் ஹோம் டாக்கீஸ் தளத்தில் போய் ப்ரீ-ஆர்டர் செய்யலாம். வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்கள், ஆன்-லைனில் பணம் கட்டிப் படத்தைப் பார்க்கலாம் அல்லது டிவிடி / ப்ளூரே டிஸ்க்களை ப்ரீ-ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருக்கலாம் (நான் ஆர்டர் செய்துவிட்டேன்!) 

கன்னட சினிமா என்றாலே எனக்கும் ஒரு இழக்காரம் இருந்தது. லூசியா என்ற ஒரு படம் எனது மொத்த எண்ணத்தையும் மாற்றிவிட்டது. நன்றி பவன்,லூசியாவிற்காகவும், உங்களது விடா முயற்சியால் திறக்கப்பட்டிருக்கும் ஒரு புதிய கதவிற்காகவும். உங்கள் கனவு மெய்ப்படும் நாள் தூரத்தில் இல்லை...

You Might Also Like

12 comments

  1. great....thx brother

    ReplyDelete
  2. wel written.. i have never read a lenth article before.. :) thanks for ur valuable article bro..

    ReplyDelete
  3. லூசியா பற்றி விரிவான தகவல்கள் திரட்டி எழுதி உள்ளீர்கள்.
    வாழ்த்தும் நன்றியும்.

    தமிழில் ‘ஆரண்ய காண்டம்’ இயக்குனர் இத்தகைய முயற்சியில் இறங்கி வெற்றி பெறலாம்.

    ReplyDelete
    Replies
    1. தமிழிலும் இப்படி ஒரு படம் தயாராவதாகச் சொன்னார்கள். எந்தப் படமென்று தெரியவில்லை...

      Delete
  4. தல,
    போனவாரம்தான் இந்தப்படத்தைப் பார்த்தேன்.. கன்னட சினிமா பற்றிய எனது எண்ணங்களை மொத்தமாகத் திருப்பிப்போட்டது இந்தப்படம்.. இவ்ளோ சிக்கலான கதையை எப்டி அருமையா எளிமையா சொல்லிருக்கார்னு நினைக்கும்போது ஆச்சரியமா இருக்குது. படம் பாத்து முடிச்சுட்டு அன்னிக்கு பூரா பவன் குமார் ப்ளாக் தான் பாத்துட்டு இருந்தேன்.. அதுல முக்கியமான பல விடயங்களை நீங்க அருமையா தொகுத்து சொல்லிட்டீங்க.. படிக்க ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு தல.. சூப்பர்..!!

    அதேபோல வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களுக்கும், சினிமா ஆர்வலர்களுக்கும் அவர் நிறைய ஒர்க் ஷாப்களும் நடத்திட்டு வர்றாரு.. அந்த வீடியோசும் அந்த தளத்துலயே பதிவிட்டுருக்காரு.. அடுத்த ஒர்க் ஷாப் நடக்கும்போது ஒரு சினிமா ஆர்வலரா நானும் கலந்துக்கலாம்னு இருக்கேன் தல..!!

    ReplyDelete
    Replies
    1. என்னையும் சேத்துக்கோங்க சகோ... நானும் வர்றேன். எப்போனு சொல்லுங்க...

      Delete
    2. தல, வழக்கம் போல அலசி ஆராய்ந்து எழுதி உள்ளீர்கள். செம பதிவு..
      எங்கள் அலுவலகத்தில் கன்னட மெயிலிங் லிஸ்ட் ஒன்று உள்ளது, நானும் அதில் சேர்ந்து உள்ளேன். அதில் "LUCIA" படத்தை பற்றி நிறைய பேர் சிகாலித்து எழுதி இருந்தார்கள். கன்னட படங்கள் மீது இருக்கும் அதித நம்பிக்கை காரணமாக நான் அதை கண்டுக்கொள்ளவில்லை. இனி கண்டிப்பாய் ஆன்லைன்னில் பணம் கட்டி பார்கிறேன்.

      Delete
  5. சமீபத்தில்நான் படித்த விரிவான ஆழமான விமர்சனம். நன்றி.

    ReplyDelete
  6. please post it in English seriously want to read it

    ReplyDelete
  7. அருமையா விவரிச்சு இருக்கீங்க , நான் கண்ட கன்னட படங்களில் இதுவே சிறந்தது . நிச்சயம் அவரின் இது போன்ற முயற்சிகள் பல மொழிகளில் தொடர வேண்டும்

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...