Cinema Club of Coimbatore வழங்கிய Meet the Film Makers கருத்தரங்கம் - ஒரு அனுபவம்

11:08:00 AM

படிப்பு சம்பந்தமாக கல்லூரியிலும், இப்பொழுது வேலை நிமித்தமாக அலுவலகத்திலும் பல கருத்தரங்குகளில் நான் பங்கேற்றதுண்டு. பலமுறை நிர்பந்தம் காரணமாக மட்டும்தான் என்னை அந்தக் கூட்டத்தில் காணலாம். பலசமயம் என்ன பேசுகிறார்கள், என்ன விவாதிக்கிறார்கள், ஏன் கைதட்டுகிறார்கள், என்ன புரிந்துவிட்டது என்று 'டவுட்' கேட்கிறார்கள் என்று எதுவுமே தெரியாது. ஒன்று பாதியிலேயே எழுந்து வந்துவிடுவேன். அல்லது அமைதியாக அவர்கள் சொல்வதை கவனித்து நோட்ஸ் எடுப்பது போல் வேறு எதையாவது எழுதிக் கொண்டிருப்பேன். ஆனால் ஒன்று. எவ்வளவு தான் மொக்கை போட்டாலும், கூட்டத்தில் தூங்கிவிழும் பழக்கம் மட்டும் என்னிடத்தில் இல்லை. அது கடவுள் எனக்களித்த வரம். இப்படியாப்பட்ட எனது கருத்தரங்கு வரலாற்றில் முற்றிலும் ஒரு புதிய அனுபவமாக அமைந்தது கோவையில் Cinema Club of Coimbatore நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம். காலை 10.40க்கு தொடங்கி மாலை 6.40 மணிவரை நடந்த இந்த நிகழ்வில் என்னையும் சேர்த்து யாரும் கடைசி வரை வெளியஏ எழுந்து சென்றதாகத் தெரியவில்லை. 220 பேர் அமர்திருந்த அந்த அரங்கத்தில் பேசப்பட்ட விஷயங்கள் அனைத்தும் அனைவருக்கும் புரியும்படியாகவும், பயனுள்ளதாகவும், சுருங்கச் சொல்லவேண்டுமானால் Short n Sweet ஆகவும் இருந்தது. ஒரு முழு நாள் நிகழ்வுகளை மொத்தமாக எழுத முடியாது என்றாலும், சில முக்கிய விஷயங்களையாவது பகிர்ந்துகொள்ளலாம் என்பதாலேயே இந்த நீண்ட பதிவு.

Meet the Film Makers என்ற போஸ்டர் ஒன்று சில நாட்களுக்கு முன் இணையத்தில் உலா வரத் தொடங்கியது. 'சூது கவ்வும்' நலன் குமாரசாமி, 'மூடர் கூடம்' நவீன், 'மதுபானக்கடை' கமலக்கண்ணன், மாமல்லன் கார்த்தி, 'நாளைய இயக்குனர் சீசன் 4 வெற்றியாளர்' எழில் வேந்தன் ஆகியோர் இன்டிபென்டன்ட் ஃபில்ம் மேக்கிங் (இதற்கு தமிழில் அழகாக ஒரு வார்த்தை சொன்னார்கள், மறந்துவிட்டேன் - சுயாதீன சினிமா என்று நினைக்கிறேன்) பற்றிய கருத்தரங்கில் பேசப்போகிறார்கள் என்று அந்த போஸ்டர் சொன்னது. நுழைவுக் கட்டணம் ரூ200. பெங்களூரிலிருந்து கோவைக்குச் சென்று பங்கேற்கும் அளவிற்கு இது முக்கியமானதா என்ற சந்தேகம் எனக்கு கடைசிவரை இருந்தது. ஏனென்றால் கோவைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. கோவைக்கு இதற்கு முன் நான்கு முறை நான் சென்றிருக்கிறேன். முதல் இரண்டு முறை 'மங்களூர்' எக்ஸ்பிரஸ் பிடிப்பதற்காக, அடுத்து ஒரு முறை கல்லூரி இறுதியாண்டு ப்ராஜெக்ட்டிற்காக, அடுத்து கடைசியாக 'உலக சினிமா ரசிகன்' திரு பாஸ்கரன் அவர்களது அழைப்பின் பேரில் சென்ற ஆண்டு புத்தகக் கண்காட்சிக்காக. இவ்வளவு தான் கோவைக்கும் எனக்குமான தொடர்பு. இந்தக் கருத்தரங்கோ சென்னையைத் தவிர்த்து கோவையிலேயே ஒரு முழு திரைப்படம் எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி கோவைக்காரர்கள் பேசுவதாக மறைமுகமாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. சென்னையும் சரி கோவையும் சரி, இரண்டுமே எனக்கு ஒன்று தான். இந்த ஊர்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அப்படியிருக்க இது தேவையா என்றுதான் தோன்றியது. சரி, சினிமா சம்பந்தமாகப் பேசுகிறார்கள். அதிலும் புதியவர்கள், சாதித்துக்காட்டியவர்கள் பேசப்போகிறார்கள், சென்று தான் பார்ப்போமே என்று தான் கிளம்பிச் வந்தேன். 

சனிக்கிழமை காலையிலேயே கோவை வந்தடைந்து நண்பன் ஒருவனது அறையில் தஞ்சம் புகுந்துகொண்டேன். காலை அந்த ஏரியாவைச் சுற்றி வந்ததிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. கோவையில் திருட்டு வி.சி.டிக்கு பஞ்சமே இல்லை. பத்தடிக்கு ஒரு டி.வி.டி கடை இருக்கிறது. கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தார்கள். "ஒரிஜினல் இருக்கா" என்று கேட்டால் "அதெல்லாம் அழகா கவர் போட்டு 150ரூபான்னு "மால்" கடைலதான் விப்பான், அதே குவாலிட்டி நம்மகிட்டயும் இருக்கு, விலை 40ரூபா தான்" என்று டி.வி.டியை டிவியிலும் போட்டு குவாலிட்டி காட்டுகிறார்கள். ஒரு கடையில் நான் இருந்த 10 நிமிடத்தில் 10 போன் கால்கள் கடைக்காரருக்கு வந்துவிட்டது "ஒரிஜினல் பிரிண்ட் நாளைக்குத்தான் வருது", "5.1ன்னு ஆப்ஷன் இருக்கும் பாருங்க, அத செலெக்ட் செய்ங்க" என்று கடைக்காரர் போனிலும் ஒரே பிஸி. "உலக சினிமா எதுவும் இருக்கா" என்று நான் கேட்க "என்னங்..." என்று கேட்டார் கடைக்காரர். நான் உடனே மேதாவித்தனமாக "வேற நாட்டுப்படம், வேற மொழிப்படம் ஏதாவது" என்று சொல்ல, ஒரு குறிப்பிட்ட வரிசையக் காட்டி "இது எல்லாமே ஒரிஜினல் காப்பி. தமிழ், இங்கிலீஸ் தவிர வேற மொழிலையும் லாங்குவேஜ் செலெக்ஷன் பண்ணிக்கலாம்... பாத்துக்கோங்க" என்று டப்பிங் பட டி.வி.டி வரிசையைக் காட்டி பல்பு கொடுத்தார் கடைக்காரர். பேசாமல் வந்துவிட்டேன். மாலை 'கோவை பேமஸ்' ப்ரூக்ஃபீல்டு மாலிற்கு கூட்டிச் சென்றான் நண்பன். பெங்களூர் மால்களை மிஞ்சியது அந்த அந்த மால். இல்லாத பிராண்ட் இல்லை, கிடைக்காத பொருள் இல்லை. அசந்துவிட்டேன். தீபாவளிக்கு அருமையாக இரண்டு சட்டைகளையும், ரத்னா வீடியோ ஸ்டோர்ஸில் "தங்கமீன்கள்" ஒரிஜினல் டி.வி.டி மற்றும் இன்னபிற டி.வி.டிக்களையும் வாங்கிக்கொண்டு போய் உட்கார்ந்த படம், "சுட்ட கதை". வான்ட்டடாக போய் *த்தில் சூடு வாங்கியது போலிருந்தது படம். உட்கார முடியவில்லை. 'சுட்ட கதை' என்ற சொல்லைக் கேட்டாலே நண்பன் 'கெட்ட வார்த்தை' பேசுவான் என்பதால் அந்த அனுபவத்தை ஸ்கிப் செய்கிறேன். 

மறுநாள் வாழ்க்கையில் முதல் முறையாக சரியான நேரத்திற்கே எழுந்து கிளம்பி, 10 மணிக்கு 'ட்டான்' என்று கருத்தரங்கள் நிகழும் கஸ்தூரி ஸ்ரீநிவாசன் கலைக்கூடத்தில் ஆஜர் ஆனாலும் எங்களுக்கு முன்பே பலர் வந்து ஐ.டி கார்டு வாங்க முட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. ஐ.டி கார்டுடன் ஒரு நோட் பேடும், பேனாவும் தரப்பட்டது. 200 பேர் அமரக்கூடிய சிறிய அரைவட்ட ஏ.ஸி ஹால், ஸோபா சீட் என்று அருமையாக இருந்தது அரங்கம். கூட்டம் கணிசமாக வந்தமர்ந்ததும் இயக்குனர் நலனின் வெற்றிக்குறும்படமான (நாளைய இயக்குனர் சீசன் ஒன்று) 'நெஞ்சுக்கு நீதி' திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இயக்குனர் எழில் வேந்தனின் வெற்றிக்குறும்படமான (நாளைய இயக்குனர் சீசன் நான்கு) 'காற்று' திரையிடப்பட்டது. மைக், சவுண்ட் என்று மேடை தயாராக சிறிது நேரம் ஆனது. எல்லாம் தயாராகி அனைவரும் ஒருவழியாக அமர்ந்தவுடன் குர்தா, கார்கோ பேண்ட் போட்ட கண்ணாடிக்காரர் ஒருவர் பேச ஆரம்பித்தார். மாமூல் அலங்காரப் பேச்சாக இல்லாமல் சாதாரணமாக இருந்தது. வந்திருந்த 200 பேரையும் தனது நெருங்கிய நண்பர்களைப் போல அவர் அணுகிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தங்களது Cinema Club of Coimbatore மூலம் பல கலந்துரையாடல்கள் + திரையிடல்களை நிகழ்த்தியிருந்தாலும் 200 பேர் என்பது அவர்களுக்கே புதிது என்றும், அன்றைய தினம் எதைப் பற்றிப் பேசப்போகிறார்கள், யார் யார் எல்லாம் பேசப் போகிறார்கள் என்றும் ஒரு முன்னுரையை வழங்கினார். எல்லாவற்றையும் சொன்னவர் கடைசி வரை தன் பெயரைஸ் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளவே இல்லை. பிறகு தான் தெரிந்தது அவர் தான் 'மதுபானக்கடை' பட இயக்குனர் + Cinema Club of Coimbatore நிறுவனர், இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்த இயக்குனர் திரு. கமலக்கண்ணன் என்று. 

முதலில் பேசியவர் திரு. அருண் கார்த்திக். 22 வயதே ஆன சினிமா ஆர்வலர். சினிமாவின் ஆரம்ப கால வரலாறு, முக்கிய இயக்குனர்கள், சினிமாவில் ஏற்பட்ட புரட்சிகள், மாற்றங்கள் பற்றிய தகவல்களைக் கொட்டினார். அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை, அதிக விரிவாக்கமும் கொடுக்கவில்லை. எது தேவையோ அதை மட்டுமே பேசினார். உலக சினிமா விழாக்களை குறி வைத்து இவர் ஒரு படம் இயக்கி வருவதாகக் கேள்விப்பட்டேன். வாழ்த்துக்களும், பிராத்தனைகளும் அருண் கார்த்திக். 

இவர் பேசி முடித்தவுடன் சின்ன பிரேக் விட்டார்கள். சூடான காஃபியும், வடையும் வழங்கப்பட்டது. 20 நிமிடத்தில் அனைவரும் மீண்டும் தங்களது இடத்தில் வந்தமர, தனது சினிமா அனுபவத்தைப் பற்றிப் பேச வந்தார் 'மூடர் கூடம்' நவீன்.

நிச்சயம் அன்றைய தினம் நவீனால் பலர் தீவிரமாக சினிமாவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை. அவ்வளவு நம்பிக்கை + உற்சாகத்தைத் தந்தது அவர் பேச்சு. தான் என்ன செய்கிறோம், யாரை எதிர்கொள்கிறோம் என்பதைப் பற்றிய தெளிவு இருக்கிறது இவரிடம். எதையும் தயார் செய்து கொண்டு வந்து பேசியது போலத் தெரியவில்லை. அவரது படத்தில் வரும் வசனங்களைப் போலவே அவரது பேச்சிலும் அர்த்தம் + விஷயம் இரண்டும் நகைச்சுவையுடன் கலந்திருந்தது. டராண்டினோவும், அனுராக் கஷாயப்பும் தனது ரோல்மாடல்கள் என்று தனது பேச்சைத் தொடங்கினார் நவீன். மூடர் கூடம் படம் எடுக்கப்பட்ட விதம் பற்றி விரிவாகவும், ரசிக்கும்படியும் பேசி கைதட்டல்களை அள்ளினார். "நண்பர்களே, படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தால், உடனே எடுத்து விடுங்கள், உங்களுக்கு எந்தத் தடையும் இல்லை" - இது தான் அவரது பேச்சின் சாராம்சம். தானே தயாரிப்பாளராக உருவெடுத்ததற்கு இதையே காரணமாகச் சொல்கிறார் நவீன். 20 வயதில் 25,000 கொடுத்த வேலையை விட்டுவிட்டு சினிமா பழக வந்திருக்கிறார் இவர். படப்பிடிப்பின் போது பல நாட்கள் மதிய சாப்பாடிற்கே வழி இல்லை என்ற நிலையிலும் தொடர்ந்து எப்படி எப்படியோ போராடி, பணம் புரட்டி, நம்பிக்கை வைத்து படத்தை எடுத்து முடித்து இன்று அரியணையில் ஏறி அமர்ந்திருக்கிறார். "உங்களிடம் இரண்டு கால்கள் இருக்கிறது, எங்களிடம் இரண்டு கைகள் இருக்கிறது. கூச்சப்படாமல் காலில் விழுந்து விடுவோம்" - என்று அவர் பணம், படப்பிடிப்பிற்குத் தேவையான சாதனங்கள், வீடு, இடம், காஸ்டியூம், ஹீரோயின் போன்றவற்றை ஏற்பாடு செய்த விதத்தைப் பற்றிப் பேசியது அத்தனை அருமை. மூடர் கூடம் படத்தில் இருந்ததை விட இவரது பேச்சில் "டார்க் ஹியூமர்" அருமையாக இருந்தது. பணம் இல்லாமல் கஷ்டப்பட்டது, அடுத்தவர் காலில் விழுந்தது, தர்மசங்கடமான சூழ்நிலைகளை சமாளித்தது போன்ற அவல நிலைகளை நகைச்சுவையுடன் அவர் விவரித்தது அவ்வளவு அருமையாக இருந்தது. 'ரிச்'ஆகவும் வேணும் அதே சமயம் காசு கம்மியாகவும் இருக்கணும் என்று தரத்தில் காம்ப்ரமைஸ் செய்யாமல் அதே சமயம் பட்ஜெட்டையும் குறைத்து தங்களது படத்தை எடுத்து முடித்ததை "தம்பி பொண்டாட்டியும் வேணும், அதுவும் கற்போட வேணும்" என்று சொல்லி கைதட்டல்களை அள்ளினார். மூடர் கூடம் 95% கோவையில் தான் படம் பிடிக்கப்பட்டதாம். இரண்டு அறைகள் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து அனைவரையும் அங்கேயே தங்கவைத்து, படப்பிடிப்பிற்குத் தேவையான சாதனங்களை தாங்களே செய்து, சமைத்து, படுத்துறங்கி, லொக்கேஷன் பார்த்து படப்பிடிப்பு நடத்தி வந்து என்று மொத்த வேலையையும் கோவையில் தான் செய்திருக்கிறார்கள். "நாய்" பாடலை எடுக்க வீடு கிடைக்காததால் ஒரு கோழிப்பண்ணையில் படமாக்கியது, வீடு தரமாட்டேன் என்று சொன்ன பெண்ணின் காலில் விழுந்து அவரை பணியவைத்தது, "சலீம் பாய்" காஸ்டியூம் வாங்க காசில்லாமல் ஜிகுஜிகு சட்டை, வெய்ஸ்ட் கோட் என்று இரண்டாயிரத்திற்குள் முடித்தது, ஹனிமூன் கப்புல்கள் மத்தியில் ஊட்டிப் பாடலை படமாக்கியது, ஆச்சாரக் குடும்பத்தை ஏமாற்றி ஒரே ஷாட்டில் தம் அடித்துக்கொண்டே பேசும் காட்சியைப் படமாக்கிவிட்டு வெளியேறியது என்று படம் நெடுக அவர் செலவை எப்படியெல்லாம் குறைத்தார் என்பதை அடுக்கிக்கொண்டே சென்றார். படம் எடுத்து முடித்த பின்னர் ஆகும் Post-Production, Publicity செலவுகளை எப்படியும் குறைக்க முடியாது. ஆனால் படப்பிடிப்பின் போது ஆகும் Production செலவுகள் எப்படியும் நம் கையில் தான் இருக்கிறது. எதையாவது செய்து செலவைக் குறைத்து விட்டால் அந்தப் பணத்தை பப்ளிசிட்டியில் செலவு செய்து படத்தை மக்களிடம் கொண்டு செல்லலாம் என்று அவர் பேசியது 100 / 100 உண்மை. தனக்கு உதவிய நண்பர்களையும் தன் மீது நம்பிக்கை வைத்த தனது தாயையும் அவர் நினைவுகூறத் தவர வில்லை. இயக்குனர் சிம்புதேவன் பற்றியெல்லாம் பேசியவர் ஏனோ மூடர் கூடத்தை வாங்கி வெளியிட்ட இயக்குனர் பாண்டிராஜ் பற்றி அவர் எதுவுமே பேசவில்லை. அவர் பேசியதிலேயே முக்கியமான மற்றுமொரு விஷயம் - எக்காரணத்தைக் கொண்டும் வட்டிக்குப் பணம் வாங்கி மட்டும் படம் எடுக்கக்கூடாது. படம் வெளியாகும் வரை, அந்த வட்டியும் பட பட்ஜெட்டில் சேர்ந்துகொண்டே இருக்கும்!

இயக்குனர் நவீனின் பேச்சிலேயே பாதி வயிறு நிரம்பிவிட்டாலும் மதியம் அருமையான வெஜ்-பிரியாணி, தயிர் சாதம் கொடுத்தார்கள். கூடவே ஒரு வடை வேறு. அடடா, அட்டகாசம். முதல் நாள் இரவிலிருந்து சரியாக எதையும் சாப்பிடாமல் வந்திருந்த எங்களுக்கு அமிர்தமாக அமைந்தது லன்ச்!

மதிய சாப்பாட்டு மயக்கத்தில் இருந்தவர்களை "சினிமா பட்ஜெட்டிங்" என்று சொல்லி தட்டியெழுப்பினார் கமலக்கண்ணன். சினிமா வியாபாரம் பற்றிய பொதுவான கொஞ்சம் விரிவான அறிமுகமாக இருந்தது அவர் பேச்சு. Outright, Minimum Guarantee, Distribution போன்ற சினிமா வர்த்தக வார்த்தைகளுக்கான அர்த்தங்களை எளிமையாக விளக்கினார். கொடுக்கப்பட்ட நோட்பேடை உபயோகித்தது இவர் பேசும் பொழுதுதான். பேச்சு சென்சார் பக்கம் திரும்பியதும் கூடவே அரசியல், ஆதிக்கம், செல்வாக்கு போன்ற தலைப்புகளும் தொற்றிக் கொண்டது. அவர் பேசியதில் சில சுவாரஸ்ய தகவல்கள் - "தி.மு.க காலத்தில் தமிழில் பெயர் வைத்தாலே வரிவிலக்கு. ஆனால் அம்மா ஆட்சியில் கலாச்சாரத்தைப் பாதுகாத்தால் மட்டும் தான் வரிவிலக்கு. U/A, A படங்களை விநியோகிஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் என்று யாருமே விரும்புவதில்லை. 30% பணம் வரியாக போய்விடுவதால் யாருக்கும் எந்த லாபமும் இருக்காது என்பதுதான் அவர்களது கருத்து. எனவே நல்ல படம் எடுப்பது முக்கியமல்ல, U படமெடுப்பது தான் முக்கியம். காட்சிக்கு காட்சி யாராவது மது அருந்துவது போல் படமெடுத்தால்கூட U கிடைத்துவிடும். அதுவே மதுபான கடை பற்றி படமெடுத்தால் A. இதுதான் சென்சார். தமிழ் நாட்டில் ஒரு படம் வெற்றியா தோல்வியா என்பதை முதலில் மதுரை மக்கள் தீர்மானித்துக்கொண்டிருந்தார்கள். அந்த வேலையை இப்பொழுது கோவை செய்துகொண்டிருக்கிறது, அதனால் தான் மிஷ்கின் கோவையில் வந்து போஸ்டர் ஒட்டினார். மொத்தப் படத்தையும் கோவையில் எடுத்துவிட்டு, சென்சாருக்காக மட்டும் சென்னைக்கு சென்று வரலாம். அத்தனை வசதிகளும் கோவையிலேயே இருக்கிறது" - என்று பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். இன்றைய தமிழ் சினிமா சூழல் மேல் அவருக்கு இருக்கும் கோபம் தெளிவாகத் தெரிந்தது. மதுபானகடை போன்ற அருமையான மாற்று சினிமா ஒன்றைக் கொடுத்தவர், இன்றைய தமிழ் சினிமா உலகிலிருந்து விலகியே இருப்பதாகக் கூறியது வருத்தமளிக்கும் விதமாக இருந்து. அதன் சரியான அர்த்தம் தெரியவில்லை என்றாலும், மதுபானகடை போன்ற மற்றுமொரு சென்சிபிள் படத்தை மீண்டும் கமலக்கண்ணன் எடுப்பாரா தெரியவில்லை. மேலும், கோவையிலேயே குறைந்த முதலீட்டில் தரமான படமெடுத்து அதை கோவையில் மட்டுமே சரியான முறையில் விளம்பரப்படுத்தி, வியாபாரமாக்கி அதில் வரும் லாபத்தில் தமிழகம் முழுவதும் சொந்தமாக வெளியிடலாமென்ற புதிய வியாபார உக்தியை கோவை மக்களை நம்பி முன் வைத்தார். இது வெற்றி பெற்றால் தரமான படங்கள் தாராளமாக தமிழகமெங்கும் உலா வரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒன்று மட்டும் உறுதி. மாற்று சினிமா, தரமான நல்ல சினிமா எடுக்க நினைப்பவர்களுக்கு கமலக்கண்ணனும் அவரது Cinema Club of Coimbatore அமைப்பும், கோவையும் நிச்சயம் பேருதவி செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

சினிமா வியாபாரத்திற்காக கமலக்கண்ணன் இரண்டு படங்களை மேற்கோள் காட்டிப் பேசியது சூட்சுமத்தை சுலபமாகப் புரிந்து கொள்ள வைத்தது. அந்தப் படங்கள் சூது கவ்வும் + மூடர் கூடம். இரண்டிலும் பெரிய நாயகர்கள் இல்லை, புதிய இயக்குனர்கள், புதிய தளம். ஆனால் டிரைலர்கள் மக்களிடையே ஒருவித எதிர்பார்ப்பை உண்டு செய்திருந்தது. பெரிய விளம்பரம், ஏகப்பட்ட பப்ளிசிட்டி, தனுஷ் + நயன்தாரா டான்ஸ் வேறு என்று பெரிய விளம்பரத்துடன் வெளியான "எதிர்நீச்சல்" படத்துடன் வெளியான சூதுகவ்வும் படத்திற்கு கோவையில் முதலில் குறைவான திரையரங்குகளே ஒதுக்கப்பட்டது. ஆனால் வாரங்கள் நகர நகர, எதிர்நீச்சலை விட சூது கவ்வும் அதிக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்து. அதே சமயம் இயக்குனர் பாண்டிராஜ் வாங்கி வெளியிட்ட மூடர் கூடம் படம், தேவைக்கு அதிக திரையரங்குகளில் வெளியானது. படம் நன்றாக இருந்தாலும் அடுத்தடுத்த வாரங்களில் கூட்டம் இல்லாத காரணத்தினால் திரையரங்குகளிலிருந்து படம் தூக்கப்பட்டு விட்டது. காரணம், பெரிய ஸ்டார்கள் இல்லாத படங்களை என்னதான் நல்ல படம் என்றாலும் குறைவான ரசிகர்களே தியேட்டரில் போய் பார்ப்பார்கள். எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் செய்தாலும் இத்தகைய படங்களுக்கு என்று வரும் கூட்டம் மட்டும் தான் தியேட்டருக்கு வரும். மூடர் கூடம் படம் ஆரம்பத்திலேயே அதிக தியேட்டர்களில் வெளியாகியிருந்ததால், தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் சிறு சிறு குழுக்களாகச் சிதறிவிடுவார்கள். பல தியேட்டர்களில் படம் ஓடுவதால் எந்தத் தியேட்டர் தங்களுக்கு வசதியோ அங்கு போய் படம் பார்த்தார்கள். ஆக ஒவ்வொரு தியேட்டரிலும் சுமார் 30, 50 பேர் மட்டுமே படம் பார்த்தனர். பெரிய வருமானம் இல்லாததால் படம் தூக்கப்பட்டது. விமர்சங்களைப் படித்துவிட்டு படம் பார்க்கலாமென்று வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சூது கவ்வும் படத்திற்கு நடந்தது வேறு. படம் குறைவான தியேட்டர்களிலேயே வெளியானது. ஆக தியேட்டர் நிரம்புவதில் சிரமம் இல்லை. தேடிப்பிடித்து ரசிகர்கள் குவிந்தார்கள். விமர்சனங்கள் வேறு நல்ல விதமாக வரத்தொடங்க, கலெக்ஷனும் நன்றாக இருந்ததால், டிமாண்ட் அடிப்படையில் இன்னும் சில காட்சிகள் அதிமாக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடியது சூது கவ்வும். இந்தக் கோணத்தில் சினிமா வியாபாரத்தைப் பற்றி நான் எண்ணியதில்லை. இந்த விஷயம் எனக்குத் தெரியாத ஒன்று. நன்றி, கமலக்கண்ணன்.

கோவையிலேயே தனது அனைத்து குறும்படங்களையும் எடுத்த 'நாளைய இயக்குனர்' வெற்றியாளர் இயக்குனர் எழில் வேந்தன் அடுத்து பேசினார். அவர் பேசும் முன்னரே அவரது மற்ற குறும்படங்களான "கடைசில பாத்தா காதல்", "களமாடும் சூது", "கொடியோர் செயல் அறவே" போன்றவை திரையிடப்பட்டது. தனது குறும்பட அனுபவத்தை சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார், வேந்தன். தேவைகளுக்கு ஏற்ப கதைகளை வடிவமைத்த விதத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார். உதாரணத்திற்கு, இரவுக்காட்சிகளைப் படம் பிடிப்பதில் சிரமம் இருந்ததால் "பேய்" படத்தைக்கூட (கார்காலம்) பகல் வேளையில் படமாக்கி அதில் பெரும் பாராட்டும் பெற்றதாகச் சொன்னார். பெண்கள் நடிக்க வரத் தயங்குவதால் பெண் கதாப்பாத்திரமே இல்லாத கதை (கொடியோர் செயல் அறவே) ஒன்றைத் தயார் செய்ததாகச் சொன்னார். அதே போல் பட்ஜெட் காரணமாக "காற்று" படத்தின் இறுதிக்காட்சி நடக்கும் இடத்தை 1 கிலோ செய்தித்தாள் வாங்கி சுவரெல்லாம் ஒட்டிப் படமாக்கியது அவ்வளவு ரிச்சாக திரையில் தெரிந்தது. தாங்களே வடிவமைத்த ட்ராலியால் தொரையில் ஆங்காங்கே ஜெர்க் தெரிய அதையே "ஆஹா, என்ன ஒரு த்ரில்லிங் எபெக்ட்" என்று ரசிகர்கள் பாராட்டியதாகச் சொன்னார். நவீனின் பேச்சிலும் சரி, வேந்தனின் பேச்சிலும் சரி தேவைக்காக கண்டுபிடிக்கப்பட்ட / செய்யப்பட்ட பல விஷயங்கள் படத்தின் தரத்தை உயர்த்தி பெயர் வாங்கித் தந்திருக்கிறது. Necessity is the Mother of Innovation என்பதை இந்த இயக்குனர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அதே போல சினிமா என்பது சாதாரண விஷயமல்ல. நிறைய படிப்பும், உழைப்பும் மற்ற தொழில்களை விட இங்கு மிகவும் அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்கள். மேலும் 5.1 சவுண்ட் மிக்சிங் தவிர்த்து ஏனைய அனைத்து வசதிகளும் கோவையிலேயே இருப்பதை சுட்டிக்காட்டினார். விபரம் தெரிந்தவர்கள், ஒத்த சிந்தனை உடையவர்கள் உடன் இருந்தால் வேலை சுலபம் என்பது இவர் கருத்து. எழில் வேந்தனைப் பற்றி சில தகவல்கள். பெங்களூரில் முன்னணி சாப்ட்வேர் கம்பெனியில் (நான் வேலை செய்யும் அதே கம்பெனி உயர் பதவியில் இருப்பவர். நாளைய இயக்குனர் முதல் சீசனிலேயே பங்கு பெற வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், தன்னால் முடியுமா என்ற சந்தேகம் இருந்ததால், இரண்டு வருடங்கள் காத்திருந்து சீசன் நான்கில் பங்குபெற்று வெற்றியும் பெற்றிருக்கிறார். வார இறுதிகளில் ஊருக்கு வந்து தனது படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார். எந்த வித சமரசங்களும் இல்லாமல் தனது ஒவ்வொரு குறும்படத்தையும் அருமையாக எடுத்திருக்கிறார். இப்பொழுது மொத்தமாக இரண்டு மாதங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஸ்கிரிப்ட் எழுதும் வேலையில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. வேந்தன், என்னைப் போல் சினிமா ஆசையிருந்தும் தயக்கம் கொண்டு விலகி இருக்கும் பலருக்கு ஒரு முன்னுதாரணம். வாழ்த்துக்கள் + நன்றி, வேந்தன். உங்கள் வருகைக்காக தமிழ் சினிமா காத்திருக்கிறது. 

வேந்தனின் குறும்படங்களைப் பற்றிய எனது விமர்சனங்களை விரைவில் எழுதலாமென்றிருக்கிறேன்.

வேந்தன் பேசி அமர்ந்தவுடன் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் மேடை ஏறினார், 'சூது கவ்வும்' நலன். அவரை மேடைக்கு அழைக்கும் முன்னர் அவரது குறும்படமான "உண்மைய சொல்லனும்னா" திரையிடப்பட்டது. காட்சிக்கு காட்சி கைதட்டல். ஒரு படத்தை எப்படி எடுக்கக்கூடாது என்று சொன்னது அந்தப் படம். மேடைப் பேச்சில் தனக்கு பெரிய அனுபவமில்லை என்று நலன் சொன்னாலும், எப்படிப் பேசுவது, என்ன பேசுவது என்பதில் அவருக்கு எந்தக் குழப்பமும் இருந்ததாகத் தெரியவில்லை. சினிமாவில் சாத்திக்க விரும்புபவர்கள் ஏதாவது ஒரு துறையில் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான் நலன் முதலில் சொன்ன விஷயம். ஒரு இயக்குனருக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் ஏதாவது ஒரு விஷயத்தில் வல்லுனராக இருக்க வேண்டும். தனது பலம் வசனம் மற்றும் திரைக்கதை என்று சொன்னவர் எவ்வளவு அருமையான திரைக்கதையாக இருந்தாலும் அதை கேவலமாக படமெடுக்க முடியும் என்பது தெரிந்ததால் தான் தானே இயக்குனர் ஆனதாகச் சொன்னார். மேலும் சினிமா பற்றி தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்களை விலக்கியே வைத்திருக்குமாறு எச்சரித்தார். ஏனென்றால் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் பொழுது அந்த புத்திசாலிகள் மற்றொரு பக்கம் படத்தை எடுத்துக் கொண்டிருப்பார்கள், அது என்றுமே பிரச்சனை தான் என்றார். மேலும் படம் எடுக்க வேண்டும் என்று வந்த பிறகு ஈகோ கூடாது. டெக்னீஷியன்களும் இயக்குனர்களும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கூடவே நண்பர்கள், உறவினர்கள் போன்ற நெருக்கமானவர்களை உடன் வைத்துக்கொண்டால் வேலைக்கு ஆகாது என்பதையும் சொன்னார். பேச்சின் ஊடே ராபர்ட் மெக்கீ என்ன சொல்றார்னா, சிட் பீல்டு இப்படி சொல்றார் என்று மண்டையைச் சொறிய வைத்தாலும் தலைப்பை விட்டு வெளியே போகாமல் இருந்ததால் அந்த திரைக்கதை வல்லுனர்கள் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார் என்பது மட்டும் புரிந்தது. காஸ்டிங் ஒரு கதைக்கு மிகவும் அவசியம் அதனால் ஆடிசன் நிச்ச்யம் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மொத்தமாக 10 பாய்ண்ட்களைப் பற்றிப் பேசி விட்டு சென்றார் நலன்.

நலன் பேசி முடிக்கவும் மணி 5.45 ஆகவும் சரியாக இருந்தது. ஏற்கனவே ஒரு மணி நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இருந்தாலும் கேல்வி - பதில்களுக்கு என்று நேரம் ஒதுக்கப்பட்டது. அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முடிந்தவரை தங்களுக்குத் தெரிந்த விபரங்களை வைத்து பதில் அளித்தனர் இயக்குனர்கள். ஒரு கதாப்பாத்திரத்தை எப்படி வடிவமைப்பது என்பதில் தனக்கிருந்த சந்தேகத்தைக் கேட்டார் ஒருவர், ஆன்-லைன், டி.வி.டியில் படம் வெளியிடுவது பற்றி பேசப்பட்டது. கோவையில் உள்ள வாய்ய்புகள் பற்றிப் பேசப்பட்டது. சினிமா சங்கங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. லூசியா, ஷிப் ஆப் தீசியஸ் பற்றிப் பேசப்பட்டது, திரைப்பட விழாக்கள் பற்றிப் பேசப்பட்டது. திடீரென்று ஒருவர் மைக்கை வாங்கி சுக்கிரன் வெள்ளிக்கிழமை உச்சத்தில் இருப்பதால் தான் அன்று வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெறுகிறது என்று சொல்ல அதற்கு கமலக்கண்ணன் "ஐய்யையோ..." என்று பதில் சொல்ல அரங்கமே கைத்தட்டி ஆரவாரம் செய்தது. Cinema Club of Coimbatore மூலம் மேலும் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார் கமலக்கண்ணன். வந்திருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லப்பட்டு, கருத்தரங்கம் நிறைவுபெற்றது. 

வெளியே செல்லும் போது ஒருங்கினைப்பாளர்கள் அன்பாக அழைத்து, தேனீர் அருந்திவிட்டுச் செல்லுமாறு கூற பிஸ்கட் டீயுடன் வெற்றிகரமாக எனது கோவை பயணத்தை நிறைவு செய்து பஸ் ஏறி ஊர் வந்து சேர்ந்தேன். மொத்தத்தில் செம்ம ஜாலியாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது எனது கோவை பயணம்.

பி.கு: 

1) இந்த கருத்தரங்கிற்கு நிச்சயம் நண்பர் உலக சினிமா ரசிகர் வருவார் என்று தெரியும். கோவை வந்து இறங்கியவுடன் அவருக்கு போன் போட்டு உறுதி செய்துகொண்டேன். கருத்தரங்கு முடிந்தவுடன் எனக்காக அவர் எடுத்து வந்த உலக சினிமா டி.வி.டிக்களை வாங்கிக்கொண்டு விடைபெற்றேன்.

2) இங்கு கொடுக்கப்பட்டள்ள படங்கள் அனைத்தும் இணையத்தில் எடுக்கப்பட்டவை. எதற்கும் நான் சொந்தமல்ல. க்ளிக்கியவருக்கு நன்றி.

3) கருத்தரங்கு மொத்தத்தையும் வீடியோ எடுத்துள்ளனர். விரைவில் வெளியிடப்போவதாகவும் சொல்லியுள்ளனர். டி.வி.டியாக விற்றாலும் வாங்கிப் பார்க்க நண்பர்கள் தவற வேண்டாம்.

Cinema Club of Coimbatore முகநூல் பக்கம் - https://www.facebook.com/pages/Cinema-club-of-coimbatore/292486957560639

தொலைபேசி எண்கள் - +91-94435 78887, +91-99944 11774

You Might Also Like

10 comments

 1. koodiya viraivil implementation thana..

  ReplyDelete
 2. ரொம்ப பயனுள்ள பதிவு தல.. அதுவும் என்னைப்போல இந்த கருத்தரங்குக்கு வர முடியாதவர்களுக்கு இப்பதிவு வரப்பிரசாதம் தான். மிக்க நன்றி..!!

  அடுத்து உங்களோட முயற்சி எப்போ ? மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தல.. மிக விரைவில் எதிர்பார்க்கிறேன்.. ;)

  ReplyDelete
 3. வணக்கம்
  பதிவு அருமை வாழ்த்துக்கள்

  இனியதீபாவளி வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. நேரடி ஒளிபரப்பே செய்து விட்டீர்கள்.சூப்பர்.

  உங்களைப்போன்ற இளைஞர்கள் ‘சினிமாவுக்கு’ வரவேண்டும்.
  இந்நிகழ்ச்சியின் லட்சியம் அப்போதுதான் நிறைவு பெறும்.

  ReplyDelete
 5. கோவையில் நாற்பது ரூபாய்க்கு DVD எங்கே கிடைக்குதுன்னு சொல்ல முடியுமா?

  ReplyDelete
 6. Coimbatore can be developed as an alternate to Kollywood for low budget films, since the technology allows to produce films anywhere. There is enough talent there, and they don't need to run to Chennai for everything.

  ReplyDelete
 7. நன்றி நல்லபகிர்வு, நானும் அந்த கருத்தரங்கில் கலந்துகொண்டேன்.
  மிகவும் உபயோகமாக இருந்தது. "நானும் சினிமாவை தொலைத்து. என்னை தேடி சினிமாவை பற்றிக்கொள்ள முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன்" தொடர்ந்து சினிமாவை பற்றி எழுதுங்கள், பகிர்ருங்கள். நன்றி ....!

  ReplyDelete
 8. nalla avathaanippu,,,,,,,,,,,,,,,,,,,,

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...