SHIP OF THESEUS | 2013 | HINGLISH | INDIA

4:18:00 AM



ஆனந்த் காந்தி

இதற்கு முன் இந்தப் பெயரை நான் கேள்விப்பட்டது கிடையாது. ஆனால் திடீரென்று ஒரு நாள் சினிமா வலைப்பக்கங்கள் அனைத்தும் இந்தப் பெயரை உச்சரிக்க ஆரம்பித்தன. கூடவே SHIP OF THESEUS என்ற படத்தின் பெயரையும். படத்தின் காணொளியைக் காண இந்த ஹைப்பே போதுமானதாக இருந்தது.

SHIP OF THESEUS படத்திற்கு போகும் முன் ஆனந்த் காந்தியைப் பற்றிக் கொஞ்சம் சொல்லி விடுகிறேன். விக்கிபீடியாவை துளாவியதில் முதன்முதலாக தனது 19 ஆவது வயதில் ஹிந்தி டிவி சீரியல்களுக்கு வசனம் எழுதி தான் தனது கலைப்பயணத்தை இவர் தொடங்கியிருக்கிறார் என்று தெரிய வந்தது. அதுவும் சாதா சீரியல்கள் இல்லை. மாமியார் - மருமகள் சீரியல்கள். மூன்று வருடங்களுக்குப் பின்னர் வெளியே வந்து, மேடை நாடகங்களை எழுதத் தொடங்கியிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் அவர் எடுத்த குறும்படம் தான் RIGHT HERE RIGHT NOW. 29 நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும்படம், 12 லொக்கேஷன்களில், 8 மொழிகள் பேசும் 19 கதாப்பாத்திரங்களைக் கொண்டு இரண்டே ஷாட்களில் எடுக்கப்பட்ட படம். அதாவது மொத்தப்படத்திலும் ஒரே ஒரு “கட்” மட்டும் தான்!

இந்த மாதிரியான ஒரு படத்தை எடுப்பது எவ்வாளவு பெரிய விஷயம் என்பதை யோசித்துப் பார்த்தால் தெரியும். ஆனால் எவ்வளவு ஒத்திகைகளுக்குப் பின் இது சாத்தியமானது என்பதை யோசிக்கவே முடியவில்லை. ஒரு இடத்தில் சொதப்பினாலும் மொத்தப் படத்தையும், அத்தனை பேரையும் வைத்து திரும்ப எடுக்க வேண்டும். ஒரு இயக்குனராக எந்த அளவிற்கு இந்த ஆனந்த் காந்தி உழைத்திருந்தால் இப்படியொரு படம் சாத்தியப்பட்டிருக்கும் என்பது தான் விஷயம். இயக்குனர் பாலாவிடம் பேட்டி ஒன்றில் “நீங்கள் ஏன் கமர்ஷியல் படங்கள் எடுப்பதில்லை?” என்று கேட்டதற்கு அவர் “கமர்ஷியல் படமெடுத்தால் அதில் எனக்கென்ன வேலை இருக்கப்போகிறது? சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பார்த்துக்கொள்வார், பாடல்காட்சிகளை டான்ஸ் மாஸ்டர் பார்த்துக்கொள்வார், சூட்டிங்கில் நான் என்ன செய்வது? கூட்டத்தினருடன் சேர்ந்து நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான். பிறகெப்படி அதை என் படமென்று சொல்ல முடியும்?” என்று கேட்டார். ஒரு நல்ல சினிமா உருவாவதில் ஒரு இயக்குனரின் பங்கு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை பாலா மிக அருமையாக தனது பதிலில் சொல்லி இருப்பார். அவரது ஒவ்வொரு படத்திலும் நடித்த நடிகர்கள் மட்டும் தெரியாமல் “பாலா” என்ற முத்திரையும் சேர்த்து பதிவதன் ரகசியம் இது தான். ஆனந்த் காந்திக்கு வருவோம்.

“சாப்பிட்டு விட்டு போடா” என்று சொல்லும் தாயிடம் எரிந்து பேசிவிட்டு வெளியே கிளம்புகிறான் இளைஞன் ஒருவன். வெளியே வரும் அவனிடம் தான் வரைந்த ஓவியம் ஒன்றைக் காட்டுகிறான் அவன் தம்பி. அதைப் பாராட்டுகிறான் இளைஞன். மகன் தன் மேல் எரிந்து விழுந்தனால் உண்டான வெறுப்பை அப்படியே வேறொருவரிடம் காட்டுகிறாள் அம்மா. அந்த “வெறுப்பு” அப்படியே ஒவ்வொருவராகப் பரவுகிறது. மறுபக்கம் அண்ணனின் அன்பைப் பெற்ற தம்பி அதை அப்படியே மற்றொருவருடன் பகிருகிறான். அந்த “அன்பு” அப்படியே ஒவ்வொருவராகப் பரவுகிறது. இது தான் RIGHT HERE RIGHT NOW குறும்படத்தின் கதை. படத்தின் கேரக்டர்கள் ஒரே வீட்டிற்குள்ளோ, ஒரே இடத்திலோ கூட இருப்பதில்லை. கேரக்டர்கள் மெயின் ரோட்டில் கார், ஆட்டோ, சைக்கிள், ரோலர் ஸ்கேட்ஸில் என்று கி.மீ கணக்கில் பயணிக்கிறார்கள், நடக்கிறார்கள், ஓடுகிறார்கள், பறக்கிறார்கள். அவர்களுடனேயே கேமராவும் பயணிக்கிறது. ஒரு இடத்தில் கூட குறையில்லை. சரியாகத் திட்டமிட்டு படத்தை எடுத்த இயக்குனரை மட்டுமல்லாமல், இதை சாத்தியப்படுத்திய ஒளிப்பதிவாளரையும் நாம் பாராட்டியே தீர வேண்டும். கூடவே இசை. Red Blossom Cheery பாடலை இந்தக் குறும்படம் பார்த்த யாராலும் எளிதில் மறக்க முடியாது. செம ஜாலியான பின்ணணிப்பாடல் அது. இந்தியாவின் மிக முக்கியமான குறும்படம் என்று RIGHT HERE RIGHT NOW படத்தைச் சொன்னால் அது மிகையாகாது.

RIGHT HERE RIGHT NOW - பாகம் 01, பாகம் 02.

அடுத்த குறும்படம் CONTINUUM.
ஏழைச் சிறுவனின் பசியைச் சொல்லும் HUNGER, கறார் கடைக்காரர் செய்யும் ஒரு வியாபாரத்தைச் சொல்லும் TRADE, செக்கியூரிட்டிக்கு ஒரு குட்டிப்பயலிடமிருந்து கிடைக்கும் பாசத்தைச் சொல்லும் LOVE, ஒவ்வொரு கிறிஸ்துமஸிற்கும் உலக பேமஸ் கேக் செய்து தருபவரின் இறப்பைச் சொல்லும் DEATH, 20 வருடங்களாக பேசாதிருக்கும் “பீடா” குருஜி ஞானம் பெறும் கதையைச் சொல்லும் ENLIGHTENMENT என்று 5 குறும்படங்களையும் கடைசியாக இந்தக் கேரக்டர்களைப் பற்றிய பின்புலங்களையும், இவற்றுக்குள் இருக்கும் தொடர்புகளையும் சொல்லும் CONTINUUM என்ற முடிவுரை (Epilogue) ஒன்றையும் கொண்ட படம் தான் CONTINUUM. குஷ்பு ரன்கா என்பவ்அருடன் சேர்ந்து இந்தப் படத்தை எழுதி இருக்கிருக்கிறார் ஆனந்த் காந்தி. சின்னச் சின்ன உணர்வுகளை, குழந்தைத்தனங்களை வேடிக்கையாகச் சொல்லும் சற்றே பெரிய குறும்படம் (சுமார் 40 நிமிடங்கள்). பார்க்கும் போது சாதாரணமாகத் தோன்றினாலும் பார்த்து முடிக்கும் போது (முக்கியமாக முடிவுரையான CONTINUUM பகுதி) ஏதோ புதிதாக, வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றியது.


இந்த இரண்டு குறும்படங்களுக்குப் பிறகு சொந்தப்பணம் (Recyclewala Films), நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லாம் சேர்ந்து, பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் எந்த ஒரு உதவியுமின்றி, “சார்பிலா சினிமா”வாக (Independent Cinema) ஆனந்த் காந்தி இயக்கிய படம் தான் SHIP OF THESEUS. திரைக்கு வருவதற்கு முன் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்துக்கொண்டிருந்த இந்தப் படத்தைப் பார்த்த திரு. கிரண் ராவ் (Dhobi Ghatt திரைப்படத்தின் இயக்குனர், ஹிந்தி நடிகர் ஆமீர்கானின் மனைவி – படத்தை அவர் பார்த்தது  Enlighten Films’ Naya Film Festival, Mumbai) UTV யுடன் இணைந்து இந்தப் படத்தை இப்பொழுது வெளியிட்டுள்ளார். கிரண் ராவின் தலையீட்டிற்குப் பிறகு தான் SHIP OF THESEUS பற்றி பெருமளவில் செய்தி வெளியாகத் தொடங்கியது. மற்ற படங்களைப் போல மொத்த மொத்தமாக இந்தப் படத்தை வெளியிடவில்லை UTV. 

இந்தியாவில் முதல் முறையாக ஒரு சினிமாவிற்கென பிரத்யேக டிஜிட்டல் வாக்குப்பதிவை அறிமுகம் செய்திருக்கின்றனர். அதன்படி SHIP OF THESEUS தங்கள் ஊரில் பார்க்க விரும்பும் ரசிகர்கள், படத்தின் பேஸ்புக் பக்கத்திற்கு சென்று, தங்களது ஊர்களுக்கு வாக்களிக்க வேண்டும். எந்த ஊரெல்லாம் 100% இலக்கை அடைகிறதோ அங்கெல்லாம் SHIP OF THESEUS திரையிடப்படும். அதன்படி முதற்கட்டமாக 100% டார்கெட்டை எட்டிப்பிடித்த முக்கிய நகரங்களான மும்மை, தில்லி, கொல்கத்தா, பெங்களூரூ, பூனே மற்றும் ஹைதிராபாத் நகரங்களில் ஜூலை மாதம் 19 ஆம் தேதி படம் வெளியானது (நான் பார்த்தது 23 ஆம் தேதி, இரவுக்காட்சி). அதற்கடுத்த வாரம் அதாவது 26 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக சென்னை, அகமதாபாத், கொச்சி மற்றும் பரோடாவில் திரையிடப்பட்டது. தயாரிப்பு + விளம்பரம் என்று மொத்தம் 1.5 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது இந்தப் படம். தயாரிப்பு செலவு நிச்சயம் லட்சங்களில் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குறைந்த பட்ஜெட்டில் உலகத் தரத்தில் ஒரு படம்.

படத்திற்குப் போவதற்கு முன் “SHIP OF THESEUS” என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஏதென்ஸ் நகரத்தின் மாமன்னன் THESEUS. கடல் மார்க்கமாக பல நாடுகளை வென்றவன். அவனது கப்பல் தான் SHIP OF THESEUS. ஒரே கப்பலில் பல வருடங்களக ஒவ்வொரு நாடாகப் பயணித்த தீசியஸ், நாளடைவில் தனது கப்பலின் பழுதடைந்த பாகங்களை ஒவ்வொன்றாக மாற்றிக்கொண்டே வந்துள்ளான். சில வருடங்களுக்குப் பிறகு தீசியஸ் கப்பலின் அனைத்து பாகங்களுமே மாற்றப்பட்டிருந்தது. இப்பொழுது மன்னனுக்கு ஒரு சந்தேகம். பாகங்கள் அனைத்துமே முற்றிலும் புதிதாக மாற்றப்பட்டுவிட்ட அந்தக் கப்பல், புதிய கப்பலா அல்லது தனது பயணத்தை தொங்கும் போதிருந்த அதே பழைய கப்பல் தானா? அப்படி அது ஒரு புதிய கப்பலென்றால் எந்த இடத்தில் பழைய கப்பல் அழிந்து புதிய கப்பல் உருவானது? 

இந்தப் படத்திற்கு இதை விட பொருத்தமான தலைப்பு இருக்காது என்று நினைக்கிறேன். 

SHIP OF THESEUS தத்துவத்தைப் (?) பற்றித் தெரிந்துகொள்ள இங்கு க்ளிக்கவும்

SHIP OF THESEUS படத்தில் மொத்தம் மூன்று கதைகள். கண்பார்வை இல்லாத ஒரு பெண் புகைப்படக்கலைஞர், ஒரு துறவி, ஒரு பங்குச் சந்தை நிபுணர். இந்த மூவருடைய தனித்தனிக் கதை + அவர்களுக்குள் இருக்கும் ஒரு ஒற்றுமை – இது தான் படம்.

புகைப்படக்கலைஞரான ஆலியா (ALIYA) வெறும் சத்தத்தைக் மட்டும் கொண்டு தன்னைச் சுற்றியிருப்பதைக் கண்டறிந்து புகைப்படமெடுப்பவர். தினம் ஆலியா எடுக்கும் புகைப்படங்கள் எப்படி வந்துள்ளது என்பதை அவளது காதலன் விரிவாக விளக்கிக் கூறுவான். எந்தப் புகைப்படம் வேண்டும், எது வேண்டாம், எதை எப்படி மாற்ற வேண்டும் என்பதை ஆலியா தான் முடிவு செய்வாள். கருப்பு வெள்ளையாக மாற்றப்பட்டு பின் பிரதியெடுக்கப்படும் அந்தப் புகைப்படங்கள். இந்தப் புகைப்படங்களால் ஆலியா பிரபலமடைகிறாள். எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்கும் பொழுது ஆலியாவிற்கு மாற்றுக் கண் பொருத்தப்படுகிறது. புதிய கண்கள் கிடைக்கப்பெற்ற ஆலியா மீண்டும் புகைப்படங்கள் எடுக்கக் கிளம்புகிறாள். தான் இதுவரை “கேட்ட” அதே உலகை அவள் “பார்க்கத்” தொடங்குகிறாள். தன் கேமராவிற்குள் அவற்றை அடைக்கத் துடிக்கிறாள்.

(படத்தின் ஒளிப்பதிவாளர் கொடுத்த ஐடியாவின் படி இந்த கதாப்பாத்திரத்திற்கென்று பிரத்யேக கேமரா ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். உலகில் இப்படிப்பட்ட கேமரா ஒன்று இன்னும் நடைமுறை உபயோகத்திற்கு கண்டுபிடிக்கபடவில்லை)   
  
உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத, “ஆன்மா” மீதும் அதன் சக்தி மீதும் அதீத நம்பிக்கை கொண்ட, எந்த உயிர்க்கும் தீங்கு செய்யாத, எங்கு சென்றாலும் நடந்தே செல்லும், வீடு வீடாகப் போய் யாசகம் ஏந்தி உண்ணும், சிரித்த முகமுடைய ஒரு அக்மார்க் துறவி – மைத்ரேயா (MAITREYA). சுற்றியிருப்பவர் அனைவரலும் மதிக்கப்படும் ஒரு அருமையான மனிதர். முக்கிமாக படித்தவர். மனிதர்களின் உயிர்காக்க கண்டுபிடிக்கப்படும் மருந்துகள் முதலில் விலங்குகளின் உடலில் வலுக்கட்டாயமாக பரிசோதிக்கப்படும் “மிருக வதை”யை எதிர்த்து வழக்கு போட்டு நீதிமன்றத்திற்கு நடையாக நடந்துகொண்டிருப்பவர். அப்படிப்பட்டவருக்கு ஒரு பிரச்சனை வருகிறது. கல்லீரல் வியாதியால் வயிற்றில் அதீத வலி ஏற்பட்டு அவதிக்குள்ளாகிறார். சரியான மருந்து உண்டால் நோய் குணமாகும் வாய்ப்பு இருந்தாலும் தனது நம்பிக்கைக்கு எதிராக எதையும் செய்ய விரும்பாத மைத்ரேயா, விலங்களின் மேல் பரிசோதிக்கப்பட்ட எந்த ஒரு மருந்தையும் தான் எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார். நாளுக்கு நாள் அவரது உடல்நிலையும் மோசமடைந்து கொண்டே வருகிறது. ஆளே அடையாளம் தெரியாமல் எலும்பும் தோலுமாக ஒரு மடத்திற்கு வந்தடையும் மைத்ரேயா, கொஞ்சம் கொஞ்சமாக தன் உடல் அழிந்து, அழியா ஆன்மா வெளிபட்டு அதன் மூலம் மோட்சமடையும் நிலையை (முக்தி) எதிர்நோக்கி காத்திருக்கத் தொடங்குகிறார்.

(எந்த மதத்தையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் இந்தப் படத்திற்கென்று ஒரு தனி மதம், தனி சித்தாத்தங்கள் என்று உருவாக்கியிருக்கிறார்கள் (இன்னும் ஒரு மதத்தை நாடு தாங்குமா?))

பணம் மட்டும்தான் பத்தும் செய்யக்கூடிய வலிமையுடையது என்று தீ்ர்க்கமாக நம்பும் இளைஞன் நவீன் (NAVIN). பிஸியான பங்குச் சந்தை நிபுணர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து திரும்பியிருப்பவன். கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் பாட்டியுடன் இருப்பவனுக்கு ஒரு சந்தர்பத்தில் தனது ஏழைக் கணவனது சிறுநீரகம் திருடப்பட்டதை அறிந்து கதறி அழும் ஒரு பெண்ணின் குரல் கேட்கிறது. அந்த வறுமையின் அழுகையால் தனக்கு பொறுத்தப்பட்ட சிறுநீரகம் உண்மையில் மற்றவர்கள் சொல்வது போல் தானமாகக் கிடைத்ததா அல்லது யாரையாவது ஏமாற்றி திருடப்பட்டதா என்ற சந்தேகம் வருகிறது. சிறுநீரகத்தை இழந்த அந்த ஏழைக் கூலித் தொழிலாளியைக் காண்டுபிடிக்கிறான்.

(இயக்குனர் ஆனந்த் காந்தி இந்தப் படத்திற்கான கதையை தனது பாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருடன் இருந்த சமயத்தில் தான் எழுதினாராம்)

இந்த மூன்று பிரதானப் கதாப்பாத்திரங்களைத் தவிர்த்து, ஒவ்வொரு கதையிலும் மேலும் மூன்று முக்கிய கதாப்பாத்திரங்கள் இருக்கிறார்கள். ஆலியாவின் காதலன், மைத்ரேயாவின் இளம் நண்பன், நவீனின் பாட்டி ஆகிய இந்த மூன்று காதாப்பாத்திரங்களின் மூலமாகத் தான் நம் கதாநாயகர்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இவர்கள் இல்லை என்றால் நம் கதாநாயகர்கள் இல்லை. இவர்கள் நம் கதாநாயகர்களோடு மேற்கொள்ளும் உரையாடல்தான் படத்தின் ஆணிவேர். அந்த உரையாடல்கள் அனைத்தும் நீண்ட, ஆனந்த் காந்தியின் பேவரிட்டான ஒரே ஷாட்டில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. அதில் முக்கியமாக ரோட்டில் நடந்து கொண்டே மைத்ரேயாவிடம் சிறுவன் (இளைஞன்?)  Charvaka பேசும் உரையாடல் காட்சி. சிறுவன் பேசும் ஒவ்வொரு வசனமும் மைத்ரேயாவின் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கும் நெத்தியடி. அருமையாக எழுதி, எடுக்கப்பட்டிருக்கிறது இந்தக் காட்சி (சார்வாகா கேட்கும் கேள்விகளில் ஒன்று தான் காணொளியில் வரும் – Whats the difference between you and a suicide bomber?). பிறகு ஆலியா எடுத்த ஒரு புகைப்படத்தைப் பற்றி காதலனுடன் விவாதிக்கும் காட்சி. காதல், கோபம், பரிதவிப்பு, எரிச்சல் என்று சகல உணர்ச்சிகளும் வெளிப்படும் காட்சி அது. கால் உடைந்து தான் இருந்த அதே மருத்துவமனையில் படுத்திருக்கும், சமூக சிந்தனையுள்ள தன் பாட்டியுடன் நவீன் பேசும் காட்சி மற்றொரு காட்சி.

படம் முழுக்க சித்தாந்தங்களும், நம்பிக்கைகளும், உணர்ச்சிகளும், ஆன்மீகமும், தத்துவங்களும் நிறைந்து இருக்கிறது. இந்தப் படம் இந்த அளவிற்கு கொண்டாடப் படுவதற்கு முக்கிய காரணம், இந்த வயதில் இந்த ஆனந்த் காந்தியால் எப்படி இது போன்றதொரு பண்பட்ட படத்தை எடுக்க முடிந்தது, அந்த பக்குவம் எப்படி வந்தது என்ற ஆச்சரியம் தான் என்று நான் நினைக்கிறேன். படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். முக்கியமாக மைத்ரேயா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் Neeraj Kabi . மேடை நாடக நடிகரன இவர் இந்தப் படத்திற்காக 17 கிலோ எடை குறைத்து வியாதியின் பாதிப்பை கண் முன் கொண்டுவந்திருக்கிறார். மிரள வைக்கும் உழைப்பு, அற்பணிப்பு. ஒளிப்பதிவு அருமை என்பதை காணொளியைப் பார்த்த யாரும் சொல்லிவிடுவார்கள். ஆனால் பெங்களூரூ PVR – ன் 7.1 surrond sound ல் படத்தைப் பார்த்த எனக்கு படத்தின் ஒலியமைப்பும் அற்புதமாக மிகவும் கவனமாகக் கையாளப்பட்டிருப்பது தெரிந்தது. கூடவே படத்தின் இசை. எனக்கு கொஞ்சம் இசை ஞானம் கம்மி. அதனால் “நன்றாக, பொருத்தமாக இருந்தது” என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

இயக்குனர் ஆனந்த் காந்தியின் வலைதளத்தில் மேலும் பல தகவலகள் படத்தைப்பற்றியும் அவரைப் பற்றியும் காணக் கிடைக்கிறது. 

அனைவருக்கும் பிடிக்கும் ஜனரஞ்சகமான திரைப்படம் SHIP OF THESEUS என்று பச்சைப் பொய் சொல்ல நான் விரும்பவில்லை. சினிமா என்னும் கலையில் இவ்வகைப் படங்களும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. வெறும் கேளிக்கைக் கூத்து மட்டுமல்ல சினிமா. நம்மை சிந்திக்கவும், நாம் யார் என்ற கேள்விக்கு விடையைத் தேட வைக்கவும் ஒரு சினிமாவால் முடியும். இது அந்த வகை சினிமா. பெரும்பாலும் ஆங்கிலம், கொஞ்சம் ஹிந்தி பேசப்படும் இந்த படத்திற்கு சப்-டைட்டில் போடுகிறார்கள். எனவே மொழிப் பிரச்சனை இல்லை. தியேட்டரில் பார்க்க கொடுத்து வைக்காதவர்கள், நிச்சயம் இந்தப் படத்தின் டிவிடி வெளிவந்தவுடன் வாங்கிப் பாருங்கள். பார்த்தே தீர வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. ஆனால் பார்த்தால் உங்களுக்குள்ளும் ஒரு சிறு மாற்றம் ஏற்படும். ஏனென்றால் இந்தப் படம் சொல்லும் விஷயமே அது தான்

மாற்றம் ஒன்றே மாறாதது... 

You Might Also Like

6 comments

  1. நண்பரே...இப்படம் இந்திய சினிமா மாஸ்டர்பீஸ்களில் ஒன்று.
    அற்புதம்...அற்புதம்...அற்புதம்.
    பித்து பிடித்தவன் போல் கொண்டாடிக்கொண்டு இருக்கிறேன் இப்படத்தை.

    ReplyDelete
    Replies
    1. உங்களிடமிருந்து எதிர்பார்த்த ரியாக்ஷன்தான் :-) படம் பற்றிய உங்களது தொடருக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.

      Delete
  2. படம் குறித்த பல தகவல்கள் குறிப்பாக குறும்படங்கள் பற்றி தகவல்களும் இணைப்புக்கும் நன்றி.

    நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. முதல் தடவையா இங்க கமெண்டுகிறேன். ரொம்ப அருமையா ஆனந்த் காந்தியோட வரலாற்றுல இருந்து அத்தனையையும் சொல்லிட்டீங்க. செம.

    கூகுள்ல ராஜமவுலி பத்தி தேடிட்டு இருக்கும்போது தான் உங்களோட தொடர் லிங்க் கிடச்சது. ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. அப்டியே உங்களை தொடர்கிறேன். (நேரம் கிடச்சா நம்ம சைடும் ஒரு எட்டு வந்துட்டுப்போங்கப்பு)
    http://killadiranga.blogspot.com/

    ReplyDelete
  4. lot of thanks........intro to such a vantastic movie....

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...