குடி குடியைக் கெடுக்கும், மது நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடு - சியர்ஸ்!

7:17:00 AM


நான் குடிப்பதில்லை. இதுவரை முயற்சித்ததும் இல்லை. யார் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன என்று தான் இதுவரை "குடி" பற்றி நண்பர்களுடன் நிறைய பேசியிருந்தாலும் எதுவும் வெளிப்படையாக எழுதாமல் இருந்து வந்தேன். ஆனால் நிலைமை நாளுக்கு நாள் கோரமாகிக் கொண்டே வருவதைப் பார்க்கும் பொழுது அமைதியாக இருக்க முடியவில்லை. "டீ" குடிப்பது போல் மது அருந்துவதும் ஒரு சாதாரண விஷயமாகிவிட்டதால் ஏற்பட்ட பயத்தின் விளைவு தான் இந்தப் பதிவு. புதிதாக எதையும் சொல்லப் போவதில்லை. குடிகாரர்களை குடிக்க வேண்டாம் என்று பாடம் நடத்தபோவதில்லை. அது என் வேலையும் அல்ல. ஆனால் குடிப்பவர்களால் எனக்கு என்ன பிரச்சனையோ, குடிப்பழக்கம் பற்றி எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதுகிறேன். தொடர்ந்து வாசிப்பது அவரவர் இஷ்டம்.

“புகை பிடித்தால் அது பிடிப்பவனுக்கு மட்டும் தான் பாதிப்பதைத் தரும். ஆனால் மது என்பது அவன் வாழும் சமூகத்தையே சீரழிக்கும்” - இது யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றும் இல்லை. இருந்தும் எப்படி இவ்வளவு சர்வசாதாரணமாக மதுவை வளர்க்கிறார்கள் என்று தான் புரியவில்லை. இந்தியாவில் மது விற்பனையில் முன்னிலையில் இருப்பது தமிழ்நாடு. ஆண்டிற்காண்டு மதுவிற்பனையில் 20% மேல் வருமானம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2012-13 ஆண்டு டாஸ்மாக்கின் மொத்த வருமானம் 18,081 கோடி! இந்த ஆண்டு நிச்சயம் 30 ஆயிரம் கோடியைத் தொடும் என்று சத்தியம் செய்கிறார்கள். வெறிபிடித்து குடிக்கிறார்கள் தமிழர்கள். சந்து பொந்தெல்லாம் டாஸ்மாக் கடைகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. தமிழர்களை குடிவெறியர்களாக்கிய வரலாறு இது தான். 1983 – டாஸ்மாக் பிறந்த வருடம். தொடங்கி வைத்ததே நம் "வாத்தியார்" தான். சரக்குகளை அரசு மொத்தமாக கொள்முதல் செய்து, பார்களுக்கு சப்ளை செய்து வந்தது. திருட்டுத்தனம் பெருமளவில் நடந்ததால் செம்ம நஷ்டத்திற்கு ஆளான டாஸ்மாக் நிறுவனம், அதிரடியான ஒரு முடிவு எடுத்தது. அந்த முடிவை எடுத்து வரலாற்று சிறப்புமிக்க அந்த ஆர்டரைப் போட்டது "அம்மா". அந்த ஆர்டர் - "இனி தமிழகத்தின் ஒரே மது விற்பனையாளர் இனி டாஸ்மாக் அல்லது தமிழ அரசு மட்டும் தான்" என்பதே அது. ஆர்டர் அமலுக்கு வந்தது அக்டோபர் 2003 ஆம் ஆண்டு. அடுத்து ஆட்சிக்கு வந்த "ஐயா"வும் இதை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. ஏன் கேவலம் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. புது போப் ஆண்டவர் பற்றியெல்லாம் அறிக்கை விடுகிறார். டாஸ்மாக் பற்றி வாயே திறக்கவில்லை. யாரும் திறக்கவும் மாட்டார்கள். அதற்கான விரிவான காராணத்தை "விகடன்" ஓரிரு மாதங்களுக்கு முன்பு பெரிய கட்டுரையாக வெளியிட்டிருந்தது. சமீபத்தில் விகடன் வெளியிட்ட உருப்படியான கட்டுரைகளில் அதுவும் ஒன்று.

ஒரு மொத்த தலைமுறையே குடிக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறார்கள் நம்மை ஆள்பவர்கள். "அம்மா உணவகம்" என்று பெயர் வைத்து சோறு போடுகிறார்கள். "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்" பின்னர் அது "எம்.ஜி.ஆர் காப்பீட்டுத் திட்டம்" என்று ஏதோ ஒரு பெயரில் இன்று பல லட்சம் பேரைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பிருந்தே அரசு சலுகைகளை வாரிக் கொடுக்கிறது. இலவச உணவு, இலவச கல்வி, இலவச உடை, இலவச நோட்டுப் புத்தகங்கள், இலவச டிவி, மடிக்கணிணி, மிக்சி, கிரைண்டர், காற்றாடி இவ்வளவு ஏன், விரைவில் "அம்மா வாட்டர்" என்று 10ரூ அரசு பேருந்துகளில் மினரல் வாட்டர் கொடுக்கப் போகிறார்களாம். இதற்கெல்லாம் அன்றைய ஆட்சியில் இருந்தவர்கள் அவரவர் பெயர்களை வைத்துக்கொண்ட போது (முக்கியமாக “அம்மா”) ஏன் ஒயின் ஷாப்புகளுக்கு மட்டும் "டாஸ்மாக்" என்றே வைத்துவிட்டார்கள் என்று தெரியவில்லை. "அம்மா வைன்ஸ்" / "எம்.ஜி.ஆர் ஒயின்ஸ்" / "கலைஞர் ஒயின்ஸ்" / “அண்ணா ஒயின்ஸ்” என்று பெயர் வைத்திருக்க வேண்டியது தானே? ஏன் அப்படி வைக்கவில்லை? “டாஸ்மாக்” என்ற சொல் பிரபலமானதே ஒயின் ஷாப்புகளுக்கு “அம்மா” ஆப்பு வைத்த பிறகு தானே. அரசு ஏற்று நடத்தும் தொழிலிற்கு அடுத்து என்ன பெயர் வைத்தால் என்ன? சோறு போடுவதில் ஆரம்பித்தது கஷ்டப்பட்டு உழைத்து தன் குடும்பத்திற்கு ஒரு ஆண் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் அரசே இலவசமாக செய்து கொடுக்கிறது. பிள்ளை பெற ஏற்பாடு மட்டும் தான் செய்து கொடுக்க வில்லை. மற்றபடி எனக்குத் தெரிந்து எல்லாவற்றையுமே அரசு செய்து கொடுக்கிறது. ஆக, வீட்டிலிருக்கும் ஆணுக்கு என்ன வேலை? குடித்துவிட்டு தன்னையும் தன் குடும்பத்தையும் சீரழிப்பது மட்டும் தான் அவன் வேலை. அப்பனைப் பார்த்து பிள்ளை என்று அந்த வம்சமே காணாமல் போகும். ஏழைகளின் அன்னபூரனியான இதே அரசு தான் தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் தெரியாத குடிவெறியனாக தமிழனை மாற்றிக் கொண்டிருக்கிறது. ஊற்றி ஊற்றி கொடுத்து, மது இல்லையென்றால் எதுவுமே இல்லை என்ற நிலைமைக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய இந்த மோசமான நிலைமைக்கு முழுக்காரணம் தமிழக அரசு மட்டுமே. வாரி வாரி இந்த அரசு கொடுக்கும் இலவசங்கள் எல்லாம் பல குடும்பங்களின் சவக்குழியிலிருந்து கொண்டு வரப்பட்டவை தான். வாய்க்கரிசி போடப்பட்டு மீதமிருக்கும் அரிசியில் தான் பசித்த வயிற்றுக்கு சோறு போடுவதில் ஆரம்பித்து, படிப்பதற்கு லேப் - டாப் வரை தரப்படுகிறது. இதை யாராவது மறுக்க முடியுமா?

ஏழைகளுக்கு மட்டும் தான் இந்த நிலை என்றில்லை. படித்த, சரி-தவறு எதுவென்று பிரிக்கத் தெரிந்த மேல் வர்க்க ஜென்மங்களும் சீரழிந்து தான் உள்ளன. ஏன் குடிக்கிறாய் என்று கேட்டால் "அதுதான் இன்றைய "லைஃப் ஸ்டைல்" என்கிறார்கள் பலர். ஜீன்ஸ் போடுவது எப்படி ஒரு பேஷனோ அது போலத்தான் குடிப்பதுமாம். முட்டை என்று சைவமானதோ அன்றே "பீர்" எனர்ஜி டிரிங்க் ஆகிவிட்டது. பீரைத் "தண்ணி" லிஸ்டில் சேர்த்துச் சொன்னால் கோபம் வந்துவிடுகிறது குடிகாரர்களுக்கு.

“ஏன் குடிக்கிறோம்” என்று தெரியாமலே குடிப்பவர்கள் தான் இன்று அதிகம். எனக்குத் தெரிந்து பலர் இன்று தினக் குடியாளர்கள். "வர்புறுத்திக் குடிக்கச் சொன்னாங்கடா, அதான்" என்று ஆரம்பித்து "எப்போவாவது ஃப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா இருக்கும் போது மட்டும்" என்று தொடரும் இந்தப் பழக்கம், "வீக்-கெண்ட் மட்டும் தான் மச்சி" என்று வளர்ந்து இன்று குடிக்கவில்லை என்றால் தூக்கம் வருவதில்லை பலருக்கு. சம்பாதிக்கும் பணத்தில் தம் / தண்ணிக்கு பட்ஜெட் ஒதுக்காதவர்கள் இன்று குறைவு. முன்பெல்லாம் ஏதாவது டென்ஷன் - மனவருத்தம் என்றால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் போய் மனம் விட்டுப் பேசுவது தான் நல்ல தீர்வு என்றிருந்தது. ஆனால் இன்று அப்படி பேசவேண்டும் என்றாலே நடுவில் "பாட்டில்" அவசியமாகிவிட்டது. ஓவர் பிரச்சனை என்றால் ஓரேடியாக மாய்த்துக்கொள்ள தூக்குக்கயிறு / தூக்கமாத்திரைகளையும், கொஞ்சம் கொஞ்சமாக தன்னையே அழித்துக்கொள்ள குடியையும் நாடியவர்கள் இன்று சம்பந்தமே இல்லாமல் தினக்குடியாளர்களாகி விட்டார்கள்.

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை குடிகாரக் கணவர்கள் தான் கொடூரமானவர்களாக இருந்தனர். ஆனால் இன்று கணவன் - மனைவி சேர்ந்து குடிக்கின்றனர். அருகிலிருக்கும் குழந்தை மதுக்கோப்பைகளை வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறது! துக்கம் என்றாலும் குடி, கொண்டாட்டம் என்றாலும் குடி, தூக்கம் வரவில்லையா குடி, தெரிந்தவனா உடனே அவனை அழைத்துக்கொண்டு போய் குடி, தெரியாதவனா கைகுழுக்கி அறிமுகப்படுத்திக்கொண்டு உடனே குடி, ஒருவரைப் மனதார பாராட்ட வேண்டுமா குடி, அசிங்கசிங்கமாகத் திட்ட வேண்டுமா குடி, ப்ளான் பண்ண வேண்டுமா குடி, ரிலாக்ஸ் பண்ண வேண்டுமா குடி, பேருந்தில் ஏறித் தூங்குவதாக இருந்தாலும் குடி, கார் ஓட்ட வேண்டுமானாலும் குடி, தியேட்டருக்கு படம் பார்க்கப் போக வேண்டுமானாலும் குடி, நண்பனிடம் / பெற்றோரிடம் / மனைவியிடம் / மகனிடம் மனதில் இருப்பதைச் சொல்ல வேண்டுமா குடி, வேலை கிடைத்து விட்டதா குடி, வேலை போய்விட்டதா குடி, ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டாயா குடி, அவள் சிரித்துவிட்டாளா குடி, உடன் படுத்துவிட்டாளா குடி, செருப்பால் அடித்துவிட்டாளா குடி, அடுத்த பிகரைப் பிடித்துவிட்டாயா கட்டாயம் குடி, பிறந்த நாளா குடி, வீட்டில் எளவு விழுந்து விட்டதா குடி, அக்காவிற்கு கல்யாணமா குடி, உனக்குக் கல்யாணமா குடி, அலுவலக பார்ட்டியா குடி, நண்பர்களுடன் அவுட்டிங்கா குடி, வெயிலடிக்கிறதா குடி, மழையா குடி, குளிரா குடி, போர் அடிக்கிறதா குடி ... குடி குடி குடி என்று நாடே நாசமாகிப் போய்க்கொண்டிருக்கிறது. அதிக லாபம் வருகின்றதென்பதபதற்காக அரசு மது விற்பனைச் செய்கிறதென்றால், குடிக்கு அடுத்து பாலியல் தொழில் தான் இங்கே அமோகமாக நடக்கிறது. அதையும் அரசே எடுத்து நடத்தாலாம். இன்னும் கொஞ்ச நாட்களில் அதுவும் நடக்கும் என்று தான் தோன்றுகிறது. நிச்சயம் “அம்மா XXX, அய்யா XXX” என்றெல்லாம் அதற்குப் பெயர் வைக்கமாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன். TASMAC போல் ஏதாவது ஒரு பெரிய ஆங்கில வாக்கியத்தைச் சுருக்கி பெயர் வைப்பார்கள். அப்படி நடந்தாலாவது நாட்டில் பாலியல் தொல்லைகள் குறைந்து மற்ற பெண்கள் நிம்மதியாக இருப்பார்கள். நம்மாட்காளும் ஜஸ்ட் லைக் தட் என்று இதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வார்களா என்னவோ. “சோஷியல் ட்ரிங்கிங்” போல “சோஷியல் ஃபக்கிங்” என்று அதற்கும் ஏதாவது பெயர் வைத்துக்கொள்ள வேண்டியது தான். தமிழக அரசும் சட்டமன்றத்தில் உட்கார்ந்து லாபக்கணக்கு பார்த்து இன்னும் பல இலவசங்களை வாரி வழங்குவார்கள். குடிப்பது காலம்காலமாக நமது கலாச்சாரத்தில் இருந்து வருகிறதென்றால் இதுவும் தானே காலம் காலமாக இருந்து வருகிறது? அப்படியென்றால் அதுவும் தப்பில்லைதானே?

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு குற்றங்களும், பாலியல் வன்முறைகளும், சாலை விபத்துகளும், விவாகரத்துகளும் பெருகி வருவதற்கு மிகப்பெரிய காரணம் இந்தக் குடிதான். 10 ல் 8 தவறு செய்பவன் குடித்திருப்பான் என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும். இது தெரிந்தும் குடிப்பதைப் பெருமையாக எப்படி பேசுகிறார்கள் என்று தான் தெரியவில்லை. குடித்துவிட்டு ரோட்டில் போனால் போலீஸ் பிடிக்கும் என்று தெரிந்தும் நம்மவர்கள் குடித்து விட்டு தான் வண்டி ஓட்டுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன? பிடிக்கும் போலீஸிற்கு குவார்டருக்கு காசு கொடுத்து விட்டால் போதும் என்கிற மனநிலை தான். ஊதச் சொல்லும் போலீஸ் வாயிலிருந்து வரும் துருநாற்றத்தில் மூக்கின் உள்ளிருக்கும் முடி கூட அழுகிவிடும். அப்படி இருக்கிறது லட்சணம்.  


இன்றைய தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்தால் வயிறு எரிகிறது. "குடி குடியைக் கெடுக்கும் / மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு" என்று ஒரு ஓரத்தில் போட்டுவிட்டால் போதுமா? பிரச்சனை சரியாகிவிடுமா? இந்த 2013 ஆம் ஆண்டை எடுத்துக்கொள்வோம். அவற்றில் நான் பார்த்த படங்களை மட்டும் எடுத்துக்கொள்வோம். தேட வேண்டியதாக இருக்கிறது "குடி" காட்சி இல்லாத படத்தை. அலெக்ஸ் பாண்டியன், கண்ணா லட்டு தின்ன ஆசையா, சமர், கடல், டேவிட், விஸ்வரூபம், வனயுத்தம், ஆதிபகவான், ஹரிதாஸ் (ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படத்தில் எதற்கு போலீஸ்காரர்கள் குடித்து விட்டு ஆடும் குத்துப்பாடல்?), ஒன்பதுல குரு, சுண்டாட்டம், வத்திக்குச்சி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கௌரவம், சேட்டை, உதயம், நான் ராஜாவாகப் போகிறேன், யாருடா மகேஷ், எதிர்நீச்சல், மூன்று பேர் மூன்று காதல், சூது கவ்வும், நாகராஜ சோழன், நேரம், குட்டிப்புலி, தீயா வேலை செய்யணும் குமாரு, தில்லு முல்லு, சிங்கம் - அத்தனை படங்களிலும் ஹீரோ / ஹீரோயின் / காமெடியன் / வில்லன் / குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் குடிக்கும் காட்சி இருக்கிறது. காட்சிகளின் ஊடே "குடி குடியை கெடுக்கும்" வரி போடாத படமில்லை. இவற்றில் டாஸ்மாக்'கை ஒரு காட்சியிலாவது காட்டாத படத்தை விரல் விட்டு எண்ணி விடலாம். நல்ல படமெடுப்பவர் என்று பெயரெடுத்த ராதாமோகனின் "கௌரவம்" படத்தின் முக்கிய கதாப்பாத்திரம் கூட தன் உள்ளக்குமுறல்களைக் கொட்ட குடித்துவிட்டுத்தான் வருகிறான். சாதாரணமாக அவன் பேசினால் யாரும் கேட்கமாட்டார்களோ என்னவோ. “குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு” என்று தான் இருந்தது, இப்பொழுது என்னவென்றால் “தெளிவா இருக்கிறவன் பேச்சு மயிராப் போச்சு” என்றாகிவிட்டது. குடித்துவிட்டு சவுண்ட் விட்டால் தான் கேட்கிறார்கள். சிறுவர்களை வைத்துப் படமெடுத்து தேசிய விருது பெற்ற பாண்டிராஜின் "கேடி பில்லா கில்லாடி ரங்கா" படமே கதாநாயகர்கள் குடிப்பதில் ஆரம்பித்து இயக்குனர் + டெக்னீஷியன்கள் குடிப்பதில்தான் முடிகிறது. ஷங்கர் படமான "நண்பன்"ல் ஹீரோயின் "லேடீஸ் ஸ்பெஷல் விஸ்கி" அருந்திவிட்டு ஹீரோவைப் பார்க்க வருகிறாள். "ஒன்னும் தப்பில்ல... குடிங்க குடிகங்க" என்று தமிழக தாய்க்குலங்களுக்கு கற்றுத் தருகிறாளோ? ஹீரோவும் அதை "ஸோ கியூட்" என்பது போல் ரசிக்கிறான். மயில்சாமி போன்ற ஒரு சில குணச்சித்திர நடிகர்கள் மட்டும் தான் குடிகாரர்கள் போல் நடித்துப் பெயரெடுத்தார்கள் என்றால் இப்பொழுது ஜீவா, கார்த்தி போன்ற கதாநாயகர்களும் சந்தானம் போன்ற காமெடியன்களும், திரிஷா போன்ற கதாநாயகிகளும் (நான் குடிப்பது போல் காட்சியமைத்தால் படம் ஹிட் ஆகிறது - திரிஷா) கூட சிறந்த குடிநடிப்பாளர்கள் என்று பெயரெடுத்திருக்கிறார்கள். இவ்வளவு ஏன் டீவி சீரியல்களும், குறும்படங்களும் கூட இன்று குடிகாட்சி இல்லாமல் வருவதில்லை. நொடிக்கு நொடி வரும் விளம்பரங்களில் ஏன் இன்னும் குடி கான்செப்ட் புகுத்தப்படவில்லை என்பது தான் எனது தலையாய வருத்தம். அங்கும் குடி இருந்தால் ஒரு முழுமை கிடைத்து விடும்.  

பத்து வருடங்களுக்கு முன்பு வரை கூட திரைப்படங்களில் குடி சம்பந்தமான காட்சிகள் வில்லன்களின் கொடூர குணத்தைக் காட்டத்தான் பயன்படுத்தப்பட்டது. கையில் மதுக்போப்பையுடன் பக்கத்தில் அரை டவுசர் போட்ட ஒரு "அழகியுடன்" வில்லன் "ஆஹ்ஹ்ஹாஹா" என்று சிரித்துக் கொண்டிருப்பான். அன்றெல்லாம் ஹீரோ குடிக்கிறான் என்றால் ஒன்று அவன் “காதலில் தோற்றிருப்பான்” அல்லது “விரக்தியில் வாழக்கையை வெறுத்திருப்பான்”. ஹீரோ குடிக்கிறான் என்றாலே ஏதோ ஒரு மிகப்பெரிய சம்பவம் பின்னால் நடக்கப்போகிறது என்று தான் அர்த்தம். மிக மிக நல்லவனாக இருக்கும் கதாநாயகன் தவறு செய்ய வேண்டுமென்றாலோ அல்லது இந்த உலகில் வாழப்பிடிக்காமல் தன்னை மாய்த்துக்கொள்ள நினைக்கிறான் என்றாலோ மட்டும் தான் அவன் குடியை நாடினான். அதே ஹீரோயின் என்றால் “என்னவென்று தெரியாமல் குடித்திருப்பாள்” அல்லது “நயவஞ்சகமாக வில்லன் அவளை குடிக்க வைத்திருப்பான்”; அதனால் அவள் மயக்க நிலையில் இருப்பாள். படத்தில் அடுத்து இரண்டே இரண்டு காட்சிகள் தான். ஒன்று – தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஹீரோவுடன் ஆடிப் பாடுவாள் (எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களில் இந்த சீன் உண்டு) அல்லது அவளது கற்பு வில்லனால் சூரையாடப்படும். தன்னிலை மறந்து தான் ஹீரோயின் மது அருந்தினாள். ஆனால் இன்று குடிக்காத கதாநாயகன் / கதாநாயகி இல்லை. தூங்கி எழுந்தவுடன் லுங்கியைக் கட்டுவது எவ்வளவு அத்தியாவசியமோ அவ்வளவு அத்தியாவசியத்துடன் ஹீரோ குடிக்கக் கிளம்பிவிடுகிறான். குடிபெருமை பேசும் ஒரு வசனத்தையாவது சொல்லி விடுகிறான் (குடிக்கிற நான் குழந்தை மாதிரி – ஆம், அவன் தாயிடம் குடித்தது மது என்கிறான்). ஹீரோயின் குடித்துவிட்டு வந்தால் ரசிக்கிறான். உடனே டூயட் பாடக் கிளம்பிவிடுகிறான். விதவிதமாக, ரசனை பெருக்கெடுத்து டிசைன் டிசைனாக டாஸ்மாக் காட்சிகளைப் படம்பிடிக்கிறார்கள், பன்ச் வசனமெழுதுகிறார்கள்.

“குடிக்கும் காட்சியைக் காட்டியவுடன் மக்கள் கைதட்டுகிறார்கள். ஊரில் நடக்காததையா காட்டுகிறார்கள். உண்மைக்கு நெருக்கமாக இருப்பதால் தான் இவ்வளவு ஆதரவு” - என்று நீங்கள் கூறுவதாக இருந்தால், அநியாயத்தைக் கண்டு பொங்கி, கண்கள் சிவந்து, நரம்பு புடைத்து, பறந்து வந்து ஒரே அடியில் ஹீரோ வில்லனை வீழ்த்துவதைப் பார்த்தும் தான் மக்கள் கைத்தட்டுகிறார்கள். அதற்காக அப்படித்தான் ஊரெல்லாம் நடந்து கொண்டிருக்கிறதா? லஞ்சம் கேட்கும் ஒரு சாதாரண பியூனை இங்கு நம்மால் எதிர்க்க முடியுமா? அல்லது கவுண்டரில் நாம் கால்கடுக்க நின்று கொண்டிருக்கும் போது நம்மை மீறிச் செல்பவரைப் பார்த்து அட்லீஸ்ட் முறைக்கத்தான் முடியுமா? சினிமாவில் வசதிக்கேற்றாற்போல் "இது உண்மை" - "இது சினிமா" என்று பிரித்து வைத்துக் கொண்டு நம்மை நாமே எத்தனை நாள் முட்டாளாக்கிக் கொள்ளப் போகிறோம்? “என் அளவு தெரிந்து தான் குடிக்கிறேன். என்னால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வந்தது கிடையாது” – என்று சொல்பவர்களால் நிச்சயமாகச் சொல்ல முடியுமா, தங்களது “அளவால்” இதுவரை யாருக்கும் ஒரு சிறு பிரச்சனையும் வந்ததில்லை என்று.

அலுவலகங்களில் "டீம் பார்ட்டி" என்றாலே குடி என்று தான் அர்த்தம். ஒரேடியாக பழி போடுவது போல் தெரிந்தாலும் ஐ.டி'ல் இந்த கலாச்சாரம் அளவிற்கதிகம் இருப்பது உண்மை (இதற்கு ஒரு பெயரும் இருக்கிறது - IT Culture). பெங்களூரில் எனது அலுவலகத்தில் சென்ற மாதம், அவுட்டிங் என்ற பெயரில் ஒரு ரிசார்டிற்குப் போகலாம் என்று இரண்டு வாரங்களாக இதைப் பற்றியே பேசி தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தனர். உடன் வேலை செய்பவர்களை ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அவுட்டிங்; அனைவரும் வர வேண்டும்; “பெர்பாமன்ஸ் அப்ரைசலில்” டீம் அவுடிங்கிற்கு வந்ததும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றெல்லாம் மிரட்டி வரச் சொன்னார்கள். ரிசார்டினுள் நுழைந்தவுடன் அனைவரும் நுழைந்தது பாருக்குள் தான். மூன்றரை மனி நேரம். ஒரே குடி தான். மனைவிமார்களுடன் வந்தவர்கள் குடும்பமாகக் குடித்தார்கள். குடிக்கக் கொடுக்கிறார்கள் என்பதற்காக மட்டும் தான் நான் இந்த அவுட்டிங்கிற்கே வந்தேன் என்று தெத்துப்பல் தெரிய சிரித்தாள் 21 வயதே ஆன புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண். எப்பொழுதிலிருந்து குடிக்கிறாள் என்று அவளைக் கேட்க விரும்பவில்லை. பார்ட்டி முடிந்து அவள் எப்படி வீட்டிற்குப் போவாள், யாருடன் போவாள் என்பது அவளுக்கே தெரியுமா தெரியவில்லை. “பப்”களிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டவர்கள், பெண்கள் மேல் கை வைத்து முகத்தில் குத்து வாங்கியவர்கள், ஜாஸ், ப்ளூஸ், ராக் என்று கதறும் இரைச்சல்களுக்கு ஆடுகிறேன் என்ற பெயரில் தலைகுப்புற விழுந்தவர்கள், வண்டியில் ஏற மாட்டேன் என்று மண்ணில் விழுந்து புரண்டவர்கள், வாந்தியெடுத்து அதன் மேலேயே புரண்டவர்கள், கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துக்கொண்டவர்கள் (ஆணும் ஆணும்), மீதமிருக்கும் சரக்கை வாட்டர் பாட்டில்களில் ஊற்றி எடுத்து போய் வாசலில் அசிங்கப்பட்டவர்கள், டக் டக்கென்று டக்கீலா அடித்துவிட்டு அருகிலிருப்பவன் மேல் மயங்கிச் சரியும் பெண்கள் என்று எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கிறேன். தயவு செய்து பெங்களூரில் மட்டும் தான் இப்படி. தமிழ் நாடு படுசுத்தம் என்று அபத்தமாக எந்த வாதத்தையும் வைக்க வேண்டாம். சென்னையும் கொஞ்சம் கூட குறைவில்லாமல் கெட்டிருக்கிறது. சொல்லப் போனால் நான் மேலே சொன்னவற்றில் பெரும்பாலானதச் செய்தவர்கள் தமிழர்கள்! சென்னையில் எத்தனையோ பப்களில் இளையராஜாவின் இசையையும் மதுவையும் இணைத்து “ராஜா நைட்” என்று குடிக்க அழைக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். கேட்கக் கேட்கப் புல்லரிகிறது. இசையும் மதுவும் ஆஹா என்னவெரு டெட்லி காம்பினேஷன்! 

ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள அலுவலகச் செலவில் சென்ற பார்ட்டிகளில் நான் தெரிந்து கொண்டவை தான் இவையெல்லாம். நான் தெரிந்த கொண்ட அந்த மூஞ்சிகளைப் பார்த்து அடுத்த நாள் எப்படி வேலை செய்ய முடியும் என்று தான் தெரியவில்லை. பத்து பேர் சாப்பிட்டு விட்டு கைகழுவிய தண்ணீரை கிளாஸில் ஊற்றி “காக்டெயில்” என்று குடிக்கக் கொடுத்தார்கள். அதையும் வாங்கி ரசித்துக் குடித்தான் என் டீம் லீடர். நாளை அவன் நான் வாழ்க்கையில் எப்படி உயர வேண்டும், நான் எப்படி நடக்க வேண்டும் எதைப் புடுங்க வேண்டும் என்று எனக்கு கிளாஸ் எடுக்கும் போது எனக்கு வாயில் வண்டைவண்டையாக வருமா வராதா?

சரி, “உத்தமனான உனக்கு அந்த இடங்களில் என்ன நொட்டுகிற வேலை” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நான் இதுவரை இரண்டே இரண்டு அலுவலக பார்டிகளுக்கு மட்டும் தான் சென்றிருக்கிறேன். அங்கு நான் கண்டவற்றை மட்டும் வைத்து ஒரு திரைப்படமே எடுக்கலாம் (அது செம்ம ஹிட்டும் ஆகும். குடி இருக்கிறதல்லவா, மக்கள் ரசிப்பார்கள்).  குடித்து விட்டு வண்டி ஓட்டிச் சென்று கீழே விழுந்து மண்டை உடைந்த கேஸ்கள் எல்லாம் எத்தனையோ உண்டு, அது தனிக்கதை. இவை அலுவலகங்களில் மட்டும். வேறு லொக்கேசன்களுக்கு போக விரும்பவில்லை.

என் தனிப்பட்ட பிரச்சனைக்கு வருகிறேன் - “நீ ஏன் குடிப்பதில்லை? என்னது பீர் கூட குடிக்க மாட்டியா? பெண்கள் முன் ஸ்மார்ட் ஆக நடிக்கிறாயா? வேண்டுமென்றால் உனக்கு பால் ஆர்டர் செய்யவா? உன்னை இன்று நான் குடிக்க வைக்காமல் விடப்போவதில்லை. பெண்களே குடிக்கிறார்கள், நீயெல்லாம் என்ன, சுத்த வேஸ்ட், சோஷியலாக யாருடனும் ஒட்டாமல் நீ ஒதுங்கி இருப்பது உன் கேரியருக்கு எவ்வளவு பெரிய பிரச்சனை தெரியுமா? வெளிநாட்டிற்கெல்லாம் நீ போகும் பொழுது குடிக்க வில்லையென்றால் அவர்கள் உன்னை அருகிலேயே சேர்க்கமாட்டார்கள், நீ அவர்களை அவமதிப்பதாகத்தான் எடுத்துக்கொள்வார்கள், சும்மாவாவது வந்து உட்கார்ந்து நீ கம்பெனி கொடுத்தே தீர வேண்டும்“ – இவையெல்லாம் அந்த இரண்டு பார்டிகளிலும், பின் வேறெந்த பார்டிக்கும் வர மாட்டேன் என்று நான் சொன்ன போதும் பிறர் என்னைக் கேட்டவை. இதில் பாதிக்கு பாதி உடன் வேலை செய்யும் பெண்கள் கேட்ட கேள்விகள். குடிப்பவர்கள் தான் வீரர்கள்; நான் “ஆண்” என்பதையே குடித்து தான் ப்ரூவ் செய்ய வேண்டும் என்று சொல்பவர்களிடம் நான் தெரியாமல் தான் கேட்கிறேன் எனது ஆண்மையை ப்ரூவ் செய்ய நான் சொல்லும் வழிகளைக் கேட்டால் அவர்கள் முகத்தை எங்கே போய் வைத்துக் கொள்வார்கள்?

நான் குடிப்பதில்லை. டீ டோட்லர் மயிறு டோட்லர் என்று எதுவும் இல்லை. குடிப்பவர்கள் அருகில் கூட செல்வதில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் என் அருகில் அனுமதித்ததில்லை. நான் குடிகாரனில்லை என்பதில் எனக்கு அளவுகடந்த “கர்வம்” உண்டு. சுயநினைவில்லாமல், குடிப்பது மதுவா மூத்திரமா என்பது கூட தெரியாமல் இருப்பவர்களே இவ்வளவு பெருமை பட்டுக்கொள்ளும் பொழுது, எந்த ஒரு சூழ்நிலையிலும் நிதானம் தவறாமல், நான் என்ன பேசுகிறேன், என்ன செய்கிறேன் என்பதைத் தெரிந்து செய்யும் ஆணாக எனக்கு கர்வம் இருப்பதில் தப்பேயில்லை. யாரும் குடிக்கக்கூடாது என்றெல்லாம் நான் சொல்லவில்லை. யார் குடிப்பதிலும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. குடியுங்கள், கூத்தடியுங்கள் ஆனால் அதை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். தனியறையில் யாருக்கும் எந்தக் கேடும் விளைவிக்காமல் எஞ்சமாய் பண்ணுங்கள். யார் உங்களைத் தடுத்தது? குடித்துவிட்டு வண்டி ஓட்டிச் சாகக் கிளம்புபவன் செயலுக்கு எதற்கு ரோட்டில் “சிவனே” என்று போகும் என்னைப் போன்றவன் பலியாக வேண்டும்? இரவு முழுதும் அதீத சத்தம் வைத்து பாட்டு போட்டு, கொட்டமடித்து, வாந்தி எடுத்து, காட்டுக்கத்து கத்தி பக்கத்துவீட்டுக்காரன் தூக்கத்தை ஏன் கெடுக்க வேண்டும்? குடிப்பவர்காளால் தினம் தினம் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாக்கப்படும், சுயமரியாதை சீண்டிப் பார்க்கப்பட்டு வம்பிற்கிழுக்கப்படும் என்னைப் போன்றவர்கள் ஏன் சினிமாவிலும் அதையே பணம் கொடுத்துப் பார்க்க வேண்டும்? அங்கும் எனக்கருகில் ஒருவன் குடித்துவிட்டு வந்து அமரலாம். வாயில் வந்ததை எல்லாம் பெண்கள் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கூட பாராமால் படம் நடுவில் கத்தலாம். நான் ஏன் அதைச் சகித்துக்கொண்டு படம் பார்க்க வேண்டும்? இரவுப் பேருந்துப் பயணங்களில் என் அருகில் இருப்பவன் மட்டும் நன்றாகக் குடித்துவிட்டு, முழு ஜன்னலையும் திறந்து வைத்துக்கொண்டு, மிருகத்தனமாக கொறட்டை விட்டு தூங்கலாம், நான் ஏன் மூக்கைப் பொத்திக்கொண்டு அவனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டும்? காமவெறி பிடித்து ரோட்டில் அலையும் மிருகங்களுக்கு அலுவலகம் முடிந்து வரும் எம்வீட்டுப் பெண்கள்  ஏன் பலியாக வேண்டும்? "குடிக்கும் நாங்கள் எல்லாம் மாவீரர்கள், நீ கோழை" என்று ஏன் எங்களது சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்க வேண்டும்?

தான் அழிந்தது போதாதென்று ஏன் ஒன்றும் தெரியாதவனுக்கு "சும்மா குடிரா. ஒன்னும் ஆகாது. பொண்ணுங்களே இப்பொல்லாம் குடிக்கிறாங்க " என்று குடிப்பழக்கத்தைக் கற்றுக்கொடுத்து ஏன் அவன் வாழ்க்கையையும் சீரழிக்க வேண்டும்? "பெண்கள்" என்று அவன் இந்த இடத்தில் கூறுவது அவன் தாயையும், சகோதரியையும் சேர்த்து தானா? எதற்கு இந்த கீழ்தரமான அடுத்தவனைக் கெடுக்கும் புத்தி? 

இத்தகைய மட்டமான ஒரு தொழிலை ஏன் தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்? உயிர்க்கொல்லும் மதுக்கடையை ஏற்று நடத்தும் அரசு ஏன் உயிர் காக்கும் மருந்துக்கடைகளை ஏற்று நடத்தக்கூடாது? எதற்கு வம்பு “டூபிள்கேட் சரக்கு” என்றால் வாந்தியுடன் நின்று விடும், போலி மருந்து மாத்திரை என்றால் குழந்தைகள், பெரியவர்கள் என்று பாராமல் காவு வாங்கிவிடுமோ?

“சோஷியலாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்கள். எனக்குப் புரியவில்லை. எதை நான் சோஷியலாக, சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்? “ஒரே டென்ஷன்” என்று என் நண்பர்கள் குடித்துவிட்டு வருவதையும் “வைன் குடிச்சா வெள்ளையாகலாமென்று” பெண்கள் ஜாலியாக சீரழிவதையுமா நான் சோஷியலாக எடுத்துக்கொள்ள வேண்டும்? எதையெதையோ இழந்து விட்டு நிற்கும் நாம் இன்று சுயகௌரவத்தையும், தன்மானத்தையும், மரியாதையையும், குடும்பத்தையும் குடியால் இழந்து நிற்கிறோமே, நம்மை விட பாவப்பட்டவர்கள் யாராக இருக்க முடியும்? கண்டதையும் செய்து கொண்டு அதைக் “கலாச்சாரம்” என்று சொல்பவர்கள் மத்தியில் நிம்மதியாக அல்ல வெறுமனே வாழ்வதே பெரும் பிரச்சனையாகி வருகிறதே!

என்ன புலம்பி என்ன பயன். நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும். த்தூ...

(எனது இந்தப் பதிவைப் படித்துவிட்டு குடியை ஆதரிக்கும், அதன்பால் எனக்கு அறிவுரை சொல்லும் பின்னூட்டமிடக் கிளம்பி இருப்பவர்கள் தயவு செய்து அப்படியே போய்விடவும்)

You Might Also Like

18 comments

  1. நல்ல பதிவு! Very well written!
    சிகரெட்டை தனி மனிதனை அழிக்கும்; குடி ஒரு குடும்பத்தை, குலத்தை, சமூகத்தை அழிக்கும். அதுவும் தமிழ்நாட்டில் குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறார்கள். போலீஸ் லஞ்சம் வாங்கி உட்டர்றான். அப்புறம் என்ன சட்டம் நீதி?

    ReplyDelete
    Replies
    1. சட்டம் நீதி எல்லாம் யாருக்கு என்பதில் எனக்கும் பல சந்தேகங்கள் உண்டு. குடி நீங்கள் மேல் சொன்ன அனைத்தையும் ஏற்கனவே அழித்து விட்டது. பாக்கி ஒன்றும் இல்லை :-(

      வருகைக்கு நன்றி..

      Delete
  2. அமெரிக்கா வரும் வரை நானும் அங்கெல்லாம் எல்லோரும் எப்போது வேண்டுமானாலும் தண்ணி அடிப்பார்கள், எல்லா இடத்திலும் எளிதாக கிடைக்கும் என்றெல்லாம் நினைத்து வந்தேன். இங்கு வந்த பிறகு தெரிந்து கொண்டது. எளிதில் கிடைக்கிறது என்பது உண்மை. ஆனால் குடித்து விட்டு வண்டி ஓட்டினால் லைசென்ஸ் ரத்து செய்துவிடுவார்கள். அதனால் யாரும் பொதுவாக மிக குறைந்த அளவு மட்டுமே குடிக்கிறார்கள். வண்டி ஓட்ட முடியவில்லை என்றால் பொதுவாக வெளியே செல்வது பெரிய பிரச்சனையை என்பதால் தான் இப்படி என்றும் புரிந்து கொண்டேன்.
    இன்னொன்று. நம் ஊரில் ஏன் அளவுக்கதிகமாக குடிக்கிறார்கள் என்று புரிய மாட்டேன் என்கிறது. குடிப்பது தவறு என்ற நிலையில் இருந்து, எல்லோரும் தான் குடிக்கிறார்கள், அதனாலென்ன என்று முதலில் ஆனது. இப்போது, இவன் குடிக்கலயா. இவன் எல்லாம் மனுஷப்பிறவி தானா? வெளி மனிதர்களிடம் பழகத் தெரியாதவன் என்ற நிலைமைக்கு வந்திருக்கிறோம்.
    குடித்து விட்டு பொது இடத்தில் நடமாடக்கூடாது என்ற ஒரு சட்டம் போதும். நிலைமை கைக்குள் வந்து விடும். பூனைக்கு யார் மணி கட்டுவது?

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்கர்களிடம் "உங்களைப் பார்த்துத்தான் நாங்கள் இப்படியெல்லாம் செய்கிறோம், நடந்துகொள்கிறோம்" என்று சொன்னால் நிச்சயம் அவன் நம்மைக் கல்லால் அடிப்பான். செய்வதெல்லாம் நாம், ஆனால் பழி மட்டும் அடுத்தவர் மீது...

      மக்களாகப் பார்த்து திருந்தினால் தான் ஆச்சு. சட்டமெல்லாம் இங்கு செல்லுபடியாகாது. "பான்பராக்" விற்கக்கூடாது என்று சட்டம் போட்டார்கள். வெளியில் தெரியும்படி வைத்து விற்றுக்கொண்டிருந்ததை இப்பொழுது மறைத்து வைத்து விற்கிறார்கள். விற்பவனுக்கும் வாங்குபவனுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. பொருள் வைக்கப்பட்டிருந்த இடம் மட்டும் தான் மாறியதே தவிர பழக்கம் மாறவில்லை. அதனால் தான் நாசமாய் போக வேண்டும் என்று முடிவெடுத்தவர்கள் நாசமாகவே போகட்டும், எங்களை விட்டு விடுங்கள் என்கிறேன்.

      வருகைக்கு நன்றி...

      Delete
  3. பதிவு அருமை. என் மனதில் இருப்பதை அப்படியே வாசிப்பது போல் இருக்கு!

    //சிகரெட்டை தனி மனிதனை அழிக்கும்// இல்லை. அருகில் இருப்பவர்களையும் மெள்ள மெள்ள அழிக்கும். அதிலும் ஆஸ்துமாக்காரர்களை விடவே விடாது. இங்கே எங்க நாட்டில் பொது இடங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

    குடியைப் பொறுத்தவரை அது மகா கேவலம். அதிலும் கள்ளச்சாராயம் குடித்து இத்தனைபேர் சாவு என்பதுடன் இல்லாமல் இறந்தவன் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு கொடுப்பது பார்த்து.......

    என்னமோ அவன் உயிரோடு இருந்து குடும்பத்துக்குச் சம்பாரிச்சுக் கொட்டினமாதிரியும் இப்போ போனதால் குடும்பம் கஷ்டப்படப்போகுது என்பது மாதிரியும்.... என்னமோ போங்க.

    இப்படியாப்பட்டவன் இருந்துதான் நாட்டுக்கும் வீட்டுக்கும் என்ன சாதிக்கப்போகிறான். போய்த் தொலையட்டும் என்றுதான் நினைக்கிறேன். மக்கள் என்னை இதயமில்லா அரக்கி என்று தூற்றட்டும்.

    ReplyDelete
    Replies
    1. சிகரெட் "தனி மனிதனை" மட்டும் தான் அழிக்கும் என்று சொன்னது. அவனையும் அவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் மட்டும். ஆனால் குடித்து விட்டு வண்டி ஓட்டும் மடையனால் அவனுக்கு கொஞ்சம் கூடச் சம்பந்தமே இல்லாத என்னைப் போன்றவர்கள் பலியாகிறார்களே அதைத் தான் சொல்ல வந்தேன்.

      உங்களை, என்னை தூற்றுவதற்கு யாருக்கு யோக்கியம் இருக்கிறது?

      வருகைக்கு நன்றி..

      Delete
  4. Dear Mr. Baby Anathan,

    Very good article. Keep up the good work.

    With regards,

    Abdul Azeez

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி திரு. அப்துல்...

      Delete
  5. ந்ல்ல சிந்தனை, நல்ல கருத்துதான் ஆனா, யார் திருந்த போறாங்க?! அரசாங்கமா? மக்களா?

    ReplyDelete
    Replies
    1. யாரும் திருந்த மாட்டார்கள் என்பது எனக்கும் தெரியும் :-( இருந்தும் என் மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்த்த ஒரு சிறு நிம்மதியாவது இருக்குமல்லவா. அதற்காகத் தான் இந்தப் பதிவு. மேலும், எனது இந்தப் பதிவை படித்தவர்கள், குடித்துவிட்டு என்னிடம் வந்தால் அவர்களை நான் எப்படிப் பார்ப்பேன் எப்படி நடத்துவேன் என்பதும் தெரியவேண்டும் என்பதற்கும் இந்தப் பதிவு.

      Delete
  6. தல,
    ரொம்ப ரொம்ப அருமையான பதிவு. உங்க ஆதங்கம் எனக்கு ரொம்ப நல்லாவே புரியுது. ஒரே ஒரு பழமொழி தான் ஞாபகம் வருது, " ஊரே அம்மணமாய் திரிய, அங்க நம்ம மட்டும் உடை உடுத்தி இருந்தா அவன பைத்தியகாரன்னு சொல்லுவாங்க" அது தான் இங்க நடக்குது. சிட்டி பக்கம் பரவாயில்லை. எங்க ஊர் பக்கம் எல்லாம் நிலைமை ரொம்பவே மோசம். டாஸ்மாக் கடையை வேற இடத்துக்கு மாத்த கூடாதுன்னு பயங்கர போராட்டம்.

    ReplyDelete
  7. //நான் குடிகாரனில்லை என்பதில் எனக்கு அளவுகடந்த “கர்வம்” உண்டு. //

    Same blood...:-))

    நல்ல பதிவு.....வாழ்த்துக்கள்

    -Maakkaan.

    ReplyDelete
  8. // நான் குடிகாரன் இல்லை என்பதில் எனக்கு அளவு கடந்த "கர்வம்" உண்டு //

    படிக்கும் போதே ரொம்ப சந்தோஷம் "அண்ணா" .... உங்களை "அண்ணா" என்று கூப்பிடவே நான் மகிழ்ச்சி அடைகிறேன் ... நிச்சயமாக என்ன செய்கிறோம் என்றே அறியாமல் தன மலத்தில் தானே உருளும் பன்றி போல் நடந்து கொள்ளும் குடிகார , குடிகாரிகளுக்கு மத்தியில் "குடிப்பதில்லை" என்று சொல்ல நாம் பெருமித படுவோம் அண்ணா . குடிப்பதற்காக சொல்லப்படும் காரணம் அனைத்துமே சும்மா எதோ சாக்கு சொல்வது தான் அண்ணா . உண்மையில் தினக்குடிகாரர்கள் , so called social drinkers எல்லோருமே குடிக்கு அடிமையானவர்கள் தானே ஒழிய குடி அவர்களுக்கு எந்த நன்மையையும் பயப்பதில்லை . எனக்கும் குடி பற்றின நம் சமூகத்தின் இன்றைய பார்வை பற்றி பெரும் கோபம் உண்டு அண்ணா. எனக்கு கோபம் எல்லாம் அரசாங்கத்திடமோ , குடிகாரர்களிடமோ கிடையாது. குடி பல நூற்றாண்டு காலமாக நம் நாட்டில் இருந்து வந்துள்ளது , ஆனால் இந்த தலைமுறையில் மட்டும் தான் எல்லாருமாக சேர்ந்து குடிப்பது ஒன்றும் தப்பே இல்லை என்ற மனோபாவத்தை உண்டுபண்ணி வைத்துள்ளனர். ஆணும் பெண்ணும் பெரும் குடிகாரர்கள் ஆகி கொண்டு இருப்பது இந்த மனோ நிலையால் தான் அண்ணா ... நீங்கள் குடியுங்கள், அது உங்கள் இஷ்டம் , ஆனால் குடிப்பது தவறு இல்லை என்று மட்டும் சொல்லாதீர்கள் .....

    பை தி வே ... வார்த்தைக்கு வார்த்தை உங்களை அண்ணா என்று அழைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன், ஏனென்றால் உங்கள் பதிவு பல நாளாக என் மனதிலும் கழன்று கொண்டு இருந்தது தான். உங்களை முக நூலில் தேடி பார்த்தேன் , கிடைக்க வில்லை . நான் viscus quasso என்ற பெயரில் உள்ளேன் , ஒரு ரெக்வஸ்ட் அனுப்பவும் , இல்லையேல் viscusquasso@gmail.com ற்கு மெயில் அனுப்பவும் . உங்களிடம் தொடர்பில் இருக்க விரும்புகிறேன் அதனால் தான்

    ReplyDelete
  9. Welcome back to blog...:-)

    ReplyDelete
  10. i like to see you in blog rather than in fb page... :-)

    ReplyDelete
  11. தல கலக்கிடீங்க.. இதை நான் வன்மையாக ( :D ), மிக ஆழமாக ஆதரிக்கின்றேன்..

    // treat/pub/party/hangout -> pasangaluku ellame onu thaan // நீங்கள் கூறுவது மிகவும் உண்மை...
    சரக்கு இல்லாம ஐ.டி யில் எந்த பார்ட்டியும் நடப்பதில்லை.. அவ்வளவு ஏன் சரக்கு இல்லைனா அது பார்ட்டியே இல்லன்றனுவ....

    TASMAC in வரலாறும் அதனுடைய விளைவுகள், நடப்பு அரசியல், அவற்றிக்குப் பணம் எல்லாவற்றின் விளக்கங்களும் அருமை... நமக்கு கிடைக்குற சலுகைகள், ஆதாயங்கள், இலவசங்கள் (மன்னிக்கவும்) விலை இல்லா பொருட்கள் அனைத்துமே மக்களின் வரிப்பணம் அல்ல... பலரை சாகடிக்கும் பாவப்பணம், காவு வாங்கு காசு.... எந்த அரசும் இதற்காக வருந்தப் போவது இல்லை.. இதை மாற்றப்போவதும் இல்லை.... :(

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...