சாட்டை - இது வெறும் படம் அல்ல, பாடம்

12:11:00 PM



முகமூடி பற்றி தான் எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் இன்று சாட்டை”யைப் பார்த்தவுடன், முகமூடியை ஓரமாகக் கழட்டி வைத்துவிட்டு சாட்டையைக் கையில் எடுத்திருக்கிறேன்.

இன்றைய சூழழுக்கு நிச்சயம் இந்த மாதிரி படங்கள் வேண்டும். இன்றைய அரசுப் பள்ளிகளில் நடக்கும் அவலங்களைப் பற்றி வில்லுப்பாட்டே பாடலாம். அவ்வளவு இருக்கிறது. அதில் பல விஷயங்களை அழகாக இந்தப் படத்தில் விமர்சித்திருக்கிறார்கள்; சத்தமே வராமல் சாட்டையைச் சுழற்றியிருக்கிறார்கள். தனயார் பள்ளிகளுக்கு ஒருதோனிஎன்றால் அரசுப்பள்ளிகளுக்கு இந்தசாட்டை(மொத்தத்தில் நமது அடுத்த தலைமுறையினருக்கு எங்கும் சரியான கல்வி கிடைக்கவில்லை என்பது தெரிகிறது. பணமும், தனி மனித பேராசைகளுமே பிரதானமாக இருக்கிறது)

சாட்டை நல்ல படம் தான் என்றாலும் சில சினிமாத்தனமான அபத்தங்கள் படத்திற்கு திருஷ்டியாக இருக்கிறது. வில்லனாக வரும் தம்பி ராமையாவின் நடிப்பு சில இடங்களில் ரசிக்க வைத்தாலும், பல இடங்களில் எரிச்சல் படுத்துகிறது. ‘கனாக்காணும் காலங்கள்பாண்டியும் அவரது மேனரிசம் மெளகு ரசத்தால் கொஞ்சம் எரிச்சலை வரவழைத்தார். முக்கியமாக காதல் மற்றும் சமுத்திரக்கனி மேல் விழும் ஓவர் ஹீரோ வொர்ஷிப் அக்மார்க் சினிமாத்தனம்.

ஓரேடியாக பள்ளிக் காதலைக் காட்டி, எடுத்துக்கொண்ட களத்தை வீணடிக்காமல், சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகச் சொல்லிவிட்டார்கள் தான். ஆனாலும் இந்தக் காதலுக்கு மெனக்கெட்டு 10 சீன், இரண்டு பாட்டு வைத்ததற்கு (D.மான் இசையில் இரண்டும் அருமையான பாடல்கள். ஆனால் படமாக்கியவித்தில் ஒன்றும் புதுமையில்லை) பதில், இன்னும் கொஞ்சம் ஆக்கப்பூர்வமான காட்சிகளைக் காட்டியிருந்தால் படம் இன்னமும் தரத்தில் உயர்ந்திருக்கும். டாக்குமெண்டரி போல் தெரியாமல் இருப்பதற்கு காதலை மட்டும் தான் காட்ட வேண்டும் என்றில்லை. சுவாரஸ்யமான காட்சிகளையும் காட்டலாம்.

தான் வேலைக்கு சேரும் பள்ளியை உருப்பட வைக்க நினைக்கும் ஆசிரியர் தயாளன் (சமுத்திரக்கனி) செய்யும் செயல்களை கொஞ்சம் சினிமாத்தனமாக சொல்லியிருக்கிறார்கள். +2 வகுப்பிற்கு வந்து Brain Teasers, Tongue Twisters, Reading Practice, English Practice, Cultural Practice என்று கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவர்களை +1 மாணவர்களாகவாவது காட்டியிருக்கலாம். அதை விட்டுவிட்டு முதல் பாதி முழுவதும் அதையும் இதையும் செய்துவிட்டு கடைசி நேரத்தில் மட்டும் நன்றாகப் படித்து 100% தேர்ச்சி பெருகிறார்கள் என்று காட்டியிருக்கலாம். +1 படிக்கும் மாணவர்கள் தயாளன் வாத்தியாரால் தங்களது கடைமையை உணர்ந்து, +2 வில் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுக்கிறார்கள் என்று காடியிருந்தாலும் வெற்றி தானே? ஒன்றாவதிலிருந்து +2 வரை உள்ள பெரிய பள்ளியாகத்தான் காட்டுகிறார்கள் (700 மாணவர்கள்). ஆனால் அனைத்தையும் செய்வதென்னவோ +2 மாணவர்கள் தான். அதுவும் குறிப்பாக 12B மாணவர்கள் மட்டும் தான். தயாளன் வாத்தியார் அந்த வகுப்பில் இல்லையென்றாலும் காட்சிகள் என்னவோ 12Bக்கு மட்டும்தான். சில இடங்களில் வருகிறார்கள் என்றாலும், மற்ற வகுப்பு மாணவர்களுக்கு காட்சிகளும் சரி, ஸ்கோப்பும் சரி கொஞ்சம் குறைவு தான். ஆனால் மொத்த பள்ளியுமே (மாணவர்கள் மட்டும்) தயாளன் வாத்தியாரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள், அவருக்காக போராடுகிறார்கள். மற்ற ஆசிரியர்கள் அவரை வெறுக்கிறார்கள், காமுகன் என்றெல்லாம் கூட பட்டம் கட்டுகிறார்கள். வில்லன் சிங்கப்பெருமாள் (தம்பி ராமையா) பல முறை போட்டுத்தள்ளக் கூட நினைக்கிறார். என்ன செய்ய, நல்லது செய்யும் ஒருனுக்கு கெட்டது நடக்க, அதிலிருந்து நல்லவன் எப்படி மீண்டு கெட்டவனையும் திருத்துகிறான் / வெல்கிறான் / கொல்கிறான் என்பது தான் தமிழ் சினிமாவின் எழுதப்படாத திரைப்பட விதி, டெம்ப்ளேட். எந்தப் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தப் படமும் கலெக்டர் கலந்து கொள்ளும் விழாவிற்கு கத்தியுடன் வரும் வில்லன் தம்பி ராமையாவை திடீரென்று நல்லவனாக்கி விடுகிறது.

படத்திலிருக்கும் குறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். படத்தில் நிறைகள் நிறையவே இருக்கிறது. குறைகள் கொஞ்சம் தான். அதனால்தான் முதலிலேயே அவற்றைச் சொல்லி முடித்துவிட்டேன். இனி படத்தின் நிறைகளைப் பார்க்கலாம்.

சமுத்திரக்கனி உட்பட படத்தில் நடித்திருக்கும் அனைவருமே நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். சமுத்திரக்கனியின் நிமிர்ந்த நடையும், அவரது குரலும் மிகப்பெரிய பிளஸ். சமுத்திரக்கனி மேல் வெறுப்பை உமிழும் அந்த P.E.T ஆசிரியை கக்கச்சிதப் பொருத்தம். எதுவும் செய்யமுடியாமல் தவிக்கும் தலைமை ஆசிரியர் பாத்திரத்திற்கு ஜூனியர் பாலையாவும் அப்படியே. ஹீரோ பையனைப் பார்க்க எனது நண்பனது பள்ளிவயது தோற்றம் நியாபகத்திற்கு வந்தது. போந்தா கோழி போல் இருக்கிறான். இந்த உடல்வாகும், முகவெட்டும் தமிழ் சினிமாவிற்கு ஒத்துவருமா என்று தெரியவில்லை. ஆனாலும் நன்றாகவே நடித்திருக்கிறான். ஹீரோயினாக வரும் பெண் கொள்ளை அழகு. நடிப்பும் வருகிறது. சரியான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் நிச்சயம் அருமையான எதிர்காலம் உண்டு. இன்னும் குட்டிகுட்டியாக நிறைய பேர் உண்டு என்றாலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள் இவர்கள் மட்டுமே. கதாபாத்திரங்கள் தவிர்த்து படமாக நிச்சயம்சாட்டை”, நிச்சயம் பார்த்து, ஆதரிக்கப்பட வேண்டிய, ஒரு நல்ல சினிமா. சந்தேகமேயில்லை (ஆனால் உலக சினிமா என்று முத்திரை குத்தி மற்ற நாட்டவர்களுக்கு இந்தப் படத்தைப் போட்டுக்காட்டினால் நம் வணடவாளம் தண்டவாளத்தில் ஏறும் அபாயம் இருக்கிறது)

தோப்புக்கரணம் போன்ற சாதாரண பயிற்சிகளுக்கு விளக்கம் (i-pad உதவியுடன்), மாணவிகள் கழிவறைக்குள் எட்டிப்பார்க்கும் சிறுவனின் ஆர்வக்கோளாருக்கு புதிதாக எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம்என்கிற க்கவழியிலான அப்ரோச், புதுமையான முறையில் கோச்சிங் முறைகள், Study Camp, மாணவர்கள் வீட்டிற்கே சென்று அவர்களை க்குவிப்பது, அபத்தமான தண்டனைகளை ஒழிப்பது, தேவையில்லாத விதிகளை உடைத்தெறிவது என்று ஒரு ஆசிரியர், ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்பதை இன்றைய அரசு பள்ளிகளுக்கு (ஆசிரியர்களுக்கு) படமாக எடுத்து பாடமாக கொடுத்திருக்கிறார்கள். படத்தில் வெறும் 30 நொடிகள் வந்து போகும் எத்தனையோ காட்சிகள் அருமையாக இருக்கிறது. உதாரணத்திற்கு ஆசிரியர்களை நக்கலடித்து வகுப்பு கரும்பலகையில் படம் வரைந்த மாணவன் ஒருவனை பின்னொரு காட்சியில் சுவற்றில் சாமி படம் வரைய வைத்து அதன் மூலம் மற்றவர்கள் சுவற்றில் சிறுநீர் கழிப்பதை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், அவன் படம் வரைவதை புகைப்படமெடுத்து பத்திரிக்கைக்கு அனுப்பி, அவனது புகைப்படத்துடன், அவன் வரைந்த படம் மற்றும் அவன் செய்த சமூகசேவையை செய்தியாக வெளியிடச் செய்வது என அட போட வைக்கும் காட்சிகள் நிறைய இருக்கிறது.

ஆனால் இதையெல்லாம் விட முக்கியமாக, இன்றைய அரசுப் பள்ளிகளில் இருக்கும் அவலங்களை உள்ளதை உள்ளபடி காட்சிப்படுத்திய விதத்தில் தான் மொத்த பாராட்டையும் அள்ளிச் செல்கிறார்கள். ஒரு அரசு ஒயின் ஷாப் பாரில் நடக்கும் விஷயங்களை படமாகக் காட்டுவது தமிழகத்திற்கு தேவையே இல்லை. ஒரு அரசு பள்ளியில் என்ன நடக்கிறது என்று தான் காட்ட வேண்டும். ‘அரசுப் பள்ளிகள் மட்டம்என்கிற பொதுவான கருத்து மட்டும் தான் நமக்குத் தெரியும். ஏன் மட்டமாக இருக்கிறது என்று தெரிய வேண்டாமா? சாட்டையில் பிரச்சனைகளுக்கு சொல்லப்பட்ட தீர்வுகள் சினிமாத்தனமானதாக இருந்தாலும் காட்டப்படுகிற பிரச்சனைகள் நூறு சதவிகிதம் உண்மையானதே.

சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வராமல் ரெக்கார்டில் கையெழுத்து போட மட்டுமே வரும் ஆசிரியர்களில் ஆரம்பித்து, ஆசிரியர் பள்ளியில் கொடுக்கப்படும் சத்துணவை வாங்கித் தின்பது, “இதெல்லாம் எங்க உருப்படப்போகுதுஎன்றும் சொல்லிக்கொடுத்துட்டா மட்டும் முதல் மார்க்கா வாங்கி கிழிச்சிடப்போகுதுகஎன்றும் ஆசிரியர்களே தங்களது மாணவர்களை ஏளனம் சொல்வது, ஜாதிப் பெயரைச் சொல்லி தரத்தை முடிவு செய்வது, சொந்த வேலையை வகுப்பறையில் அமர்ந்து கொண்டு பார்ப்பது, வீட்டு வேலைகளை மாணவர்களை விட்டுச் செய்யச் சொல்வது, டியூசன் படிக்கச் சொல்வது, ஆபாசமாக உடையணிந்து வருவது, படிக்க வந்த இடத்தில் விளையாட்டு எதற்கு என்று P.E..T ஆசிரியரே சொல்வது, மாணவியை வக்கிர ஆசிரியர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, அரசுடமையை ஏதோ பொதுவுடமை போல் சொந்த காரியங்களுக்குப் பயன்படுத்துவது, பயன்படுத்த அனுமதிப்பது என்று எவ்வளவையோ காட்டியிருக்கிறார்கள்.

இவையனைத்தும் நடைமுறை உண்மை. எதையும் மிகைப்படுத்திக் காட்டவில்லை. அதற்கு நானேகூட சாட்சிதான். இவையனைத்தையும் நானே பார்த்திருக்கிறேன்; கேள்விப்பட்டிருக்கிறேன். எங்களது இளம்பிறை மூலம் பல அரசுப்பள்ளிகளுக்கு சென்றிருக்கிறேன். அங்கு நடப்பவற்றை கவனித்திருக்கிறேன்.

அரசுப் பள்ளிகள் என்றாலே மக்களிடையே ஒரு ஏளனம், அங்கு வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு ஒரு மெத்தனம், மாணவர்களுக்கு ஒரு எகத்தாளாம். இதுதான் நிலைமை. அரசுப் பள்ளிகள் என்றாலே தரம் குறைவாகத்தான் இருக்கும் என்று அனைவருமே ஆணித்தரமாக நம்புகிறார்கள். காரணம் நிச்சயம் அங்கு படிக்கும் மாணவர்கள் அல்ல.
எல்லாக் குழந்தைகளுமே ஒன்று தான். மூளை என்பது அனைவருக்கும் ஒரே அளவு தான். திறமை என்பதும் தனியுடைமையல்ல; பொதுவுடைமை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல எந்தப் பள்ளி மாணவருக்கும் என்ன திறமை வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்குத் தகுந்த பயிற்சியும் ஊக்குவித்தலும் இருந்தாலே போதும். ஆனால் து நடைமுறையில் இங்கு யாருக்கும் புரிவதில்லை. திரையில் ஆசிரியர் தயாளானாக வரும் சமுத்திரக்கனி அதைச் செய்கிறார். இவ்வளவு தான் சாட்டை திரைப்படம். நடைமுறையில் ஒரு அரசுப்பள்ளிக்கு ஒரு ஆசிரியர் இப்படியிருந்தால் போதும், அரசுப்பள்ளிகளைப் பற்றிய மக்களது பார்வையில் நிச்சயம் மாற்றம் வரும்.  

இலவசமாகக் கிடைக்கும் எதற்கும் மதிப்பு இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பள்ளிகளின் தரம் என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. அதற்கு அரசாங்கமும், பணிபுரியும் ஆசிரியர்களும் தான் முழு பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். பாடம் நடத்தினாலும் சரி நடத்தாவிட்டாலும் சரி, வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலும் சரி பெறாவிட்டாலும் சரி, அரசு பணி, அதாவது Government Job என்பதால் வயது, சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று அனைத்தும் ஆசிரியர்களுக்கு தவறாமல் கிடைத்து விடுகிறது. எல்லாரையும் நான் குறை சொல்லவில்லை. என் குடும்பத்திலேயே பல அரசுப்பணி ஆசிரியர்கள் இருக்கிறார்கள் (என் அம்மா உட்பட). என் தாத்தா பாட்டி அர்சு உதவியுடன் இலவசமாக ஒரு பள்ளியையே நடத்தியவர்கள். பொத்தாம் பொதுவாக நான் ஆசிரியர்களை குறை சொல்லவில்லை. யாராவது ஒரு சிலர் தங்களது கடமை உணர்ந்து வேலை செய்ய நினைத்தாலும் ஒத்துழைப்பு இல்லாத்தால் அவர்களது கைகளும் கட்டப்படுகின்றன. தலைமை ஆசிரியர் மட்டும் போராடி என்ன பயன்? ஆசிரியர்கள் தானே பாடம் நடத்த வேண்டும்? ஆசிரியர் மட்டும் போராடி என்ன பயன்? தலைமை ஆசிரியர் தானே உதவ வேண்டும். இப்படி, அது இருந்தால் இது இல்லை, இது இருந்தால் அது இல்லை என்று மொத்தத்தில் எதுவும் நடப்பதில்லை.

ஆசிரியர்கள், மீட்டிங் என்ற பெயரில் அமர்ந்து கொண்டுஎப்படி தரத்தை உயர்த்தலாம்என்று வெட்டியாக விவாதிப்பது போல் நடிக்கும் நேர அளவு கூட வகுப்பறையில் பாடம் நடத்துவதில்லை.

இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (Rights of Children to Free and Compulsory Education) என்ற பெயரில் 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி பல்வேறு ஆணைகளை அரசு பிறப்பித்துள்ளது. அதில் முக்கியமான இரண்டு,

எட்டாம் வகுப்பு வரை All Pass. ஒரு மாணவன் தகுதியற்றவனாக இருந்தாலும் (படிக்கத் தெரியாவிட்டாலும் சரி, எழுதத் தெரியாவிட்டாலும் சரி) எட்டாம் வகுப்பு வரை நிச்சய தேர்ச்சி. பள்ளிக்கு வந்தால் மட்டும் போதும்.

மாணவர்களை ஆசிரியர்கள் அடிகக்கூடாது, மனம் நோகும்படி எதையும் பேசக்கூடாது.

இதை மாணவர்களிடமும் தெளிவாகச் சொல்லி புரியவைக்க வேண்டும். ‘பள்ளிக்கு வந்தலே பாஸ்என்றால் எந்தக் குழந்தை படிக்கும்? ஆணை இப்படியிருந்தால் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் எப்படி வேலை செய்யவார்கள்? ஏன் வேலை செய்ய வேண்டும்? வேலை செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அவர்களுக்கு சம்பளம் வந்துவிடும், மாணவர்களும் அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் சென்றுவிடுவார்கள். எட்டாவது வரை ஒன்றுமே படிக்காமல் இருந்து வந்தவன், ஒன்பதாவதிலிருந்து மட்டும் எதைப் படித்து, புரிந்து கொள்வான்? படிப்பை நிறுத்திவிட்டு பாழாய்தான் போவான்.

நீங்க வந்தா மட்டும் போதும்என்கிற ரீதியில் தமிழகத்தை கல்வித்தரத்தில் எப்படியாவது முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்று எத்தனையோ திட்டங்களை அரசு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. பல பெருச்சாளிகளைத் தாண்டி ஒதுகப்படும் நிதியும் ஓரளவிற்கு வரத்தான் செய்கிறது. ஆனாலும் பல அரசுப்பள்ளிகள் காற்று வாங்கத்தான் செய்கின்றன. சரியான வசதிகள் இல்லை. அரசுப்பள்ளிகளின் தரத்திற்கு ஒரு உதாரணம். மேற்பார்வையிட வந்த அரசு கல்வித்துறை அதிகாரி ஒருவர் ஒரு அரசுப்பள்ளியின் நிலையைப் பார்த்து விட்டு, “ஏதாவது NGO இருந்தா புடிச்சி, இந்த கட்டிட்த்த எல்லாம் சரிபண்ணுங்க, டாய்லெட் கட்டுங்க. இல்லன்னா ஸ்கூல மூடிறவேண்டியது தான்என்று சொல்லியிருக்கிறார். அந்த பள்ளி நிர்வாகிகள் வந்து நின்ற NGO எங்களது இளம்பிறை. எங்களால் அந்த அதிகாரியை அடையாளம் காட்ட முடியும். ஆனால் என்ன பிரயோஜனம்? அரசுப்பள்ளிக்கு அரசு தான் நிதி கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டுநிதியெல்லாம் வராது, நீங்களே ஏதாவது ஏற்பாடு செஞ்சிக்கோங்கஎன்று கல்வித்துறையே சொல்கிறது என்றால் நிலைமை எந்த லட்சணத்தில் இருக்கிறது பாருங்கள். சரியான கட்டிட, கழிப்பறை வசதி, இலவச உண்வு, சீருடை, நோட்டுப் புத்தகம், விளையாட்டு சாதனங்கள் தவிர ஒவ்வொரு அரசுப்பள்ளிக்கும் குறைந்தது இராண்டு லேப்டாப், இரண்டு கம்ப்யூட்டர் கொடுக்கப்படுகிறது. ஆனால் அவற்றை பயன்படுத்த மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆசிரியர்கள் இல்லை. இருக்கும் ஆசிரியர்களுக்கு எதுவும் தெரியவில்லை. கம்ப்யூட்டர் புத்தம் புதிதாக துணியால் மூடப்பட்டிருக்கிறது, லேப்டாப் பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டிலோ அல்லது சீனியர் ஆசிரியர் வீட்டிலோ அவர்களது சொந்தத் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

அரசுப்பள்ளிகளின் நிலை தான் இப்படி. சரி, எல்லாக் குழந்தைகளும் தனியார் பள்ளிகளுக்காவது செல்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. வசதியுள்ள குழந்தைகள் தனியார் பள்ளிக்குச் செல்லும். வசதியில்லாத குழந்தைகள் வீட்டில் சும்மா இருக்கின்றன அல்லது பெரும்பாலும் வேலைக்குச் செல்கின்றன. வேலைக்குச் செல்லும் பிள்ளைகளை காப்பாற்றி, குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்து, பள்ளியில் சேர்த்து விட்டால், அங்கு ஆசிரியர்கள் அவர்களை காய்கறி வாங்கச் சொல்வது, அவர்களது வீடு, பள்ளியறைகள், மைதானத்தை கூட்டிப்பெருக்க்ச் சொல்வது என்று வேலை வாங்குகிறார்கள். இதே வேலையை இந்தக் குழந்தைகள் தொழிலாளர்களாக வேறு இட்த்தில் செய்தால் காசாவது கிடைக்குமே?

மாணவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் இருந்து கொண்டே இருக்கிறது. எந்த வேலையும் கிடைக்கவில்லை என்றால் பெரிதாக கவலைப்பட வேண்டாம், ஆசிரியர் தொழில் இருக்கிறது. டீச்சர் டிரைனிங்கை முடித்து விட்டு, பெயரைப் பதிந்துவிட்டு, ஏதாவது ஒரு பள்ளியில் ஆசிரியராக சேர்த்துவிட்டு காத்திருந்தால் போதும். எப்படியும் அரசு வேலை கிடைத்துவிடும். கொஞ்சம் பணம் செலவு செய்தால், மிக விரைவாக வேலை நடக்கும். பிறகு ஜாலிதான். வருடாவருடம் Pay Commission வந்து கொண்டே இருக்கிறது. சம்பளத்திற்கு குறைவே இல்லை. போட்ட காசை எடுத்துவிடலாம். இப்படி பூட்ட கேஸ் எல்லாம் ஆசிரியர் வேலைக்கு வந்தால், எப்படி உருப்படும்? இதை மிகவும் தாமதமாக உணர்ந்திருக்கும் அரசு இயோப்பொழுது ஆசிரியர்களுக்கு வைக்க Eligibility Test  உத்தரவிட்டுள்ளது. ஆனால் இது புதிதாக்ச் சேரும் ஆசிரியர்களுக்கு தான். பழைய பெருச்சாளிகளுக்கல்ல.

அரசுப்பள்ளிகளுக்கு செலவு செய்யப்படும் பணம் (ஆசிரியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படும் பணம் உட்பட) நாம் கட்டும் வரிப்பணம் தானே? நமது பணம் தானே இப்படி கொள்ளையடிக்கப்படுகிறது. வீணடிக்கப்படுகிறது? நம் பணம் வீணாவதால் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையா? அந்த அளவிற்கா தமிழக மக்களிடையே பணம் கொட்டிக்கிடக்கிறது? அவ்வளவு சுலபமாகவா நம்மால் இங்கு பணம் சம்பாதிக்க முடிகிறது (நியாயமான வழியில்) ?

இதையெல்லாம் விட மிகப்பெரிய கொடுமை ஒன்று இருக்கிறது. மாணவர்களுக்கு அப்படியிருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று அரசு விதிகள் விதித்து தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்போது ஆசிரியர்கள் / ஆசிரியைகள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று சில ரசு ஆணைகள் நடப்பில் உள்ளது. அவற்றில் முக்கிய இரண்டு என்ன தெரியுமா? 

தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆண் ஆசிரியர்கள் யார் கூப்பிட்டு விட்டாலும்மாணிவிகள் தனியாக்ச் செல்லக்கூடாது. இரண்டு பேராகத் தான் செல்ல வேண்டும் (தலைமை ஆசிரியர் கூப்பிட்டால் பெண் ஆசிரியைகள் மட்டும் தனியாகச் செல்லலாமா என்று கேட்கிறார்கள், நியாயம் தானே?)

மாணவிகள் தனியாக பள்ளியில் உள்ள கழிவறைக்குக்கூட செல்லக் கூடாது. இரண்டு பேராகத்தான் செல்ல வேண்டும்

 ஆசிரிய / ஆசிரியைகள் ஒழுக்கமான முறையில் உடையணிந்து வர வேண்டும்.

பள்ளிகளில் நடக்கும் பாலியல் பிரச்சனைகளைத் தடுக்க இப்படிப்பட்ட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு கீழ்த்தரமான செயல்கள் நடந்திருந்தால் இப்படிப்பட்ட ஆணைகள் வழங்கப்படும்? ஒழுக்கம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் முதன்மையாக இருந்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய தமிழகத்தில், தமிழக அரசுப் பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு இப்படி பட்ட உத்தரவுகளைப் பிறப்பித்து கட்டுப்படுத்தும் அளவிற்கு தான் நமது லட்சணம் இருக்கிறது. கல்வி போதிக்க வேண்டிய இடத்தில் காமம் தலைவிரித்தாடுகிறது. பாலியல் ரீதியான தொல்லைகள் என்பது மாணவிகளுக்கு ஆசிரியர்களால் மட்டும் அல்ல, சில வேண்டாத ஆசிரியர்களை பழிவாங்க மாணவிகளுக்கு ஆயுதமாகவும் பயன்படுகிறது. யாரை இங்கு குற்றம் சொல்வது? எங்கு போய் முட்டிக்கொள்வது?

படமாகப் பார்த்தால் சாட்டைமேல் சொன்ன இந்த அத்தனை விஷயங்களையும் அலசியிருக்கிறது. ஆனால் படத்தில் காட்டப்படும் தீர்வு தான் நடைமுறைக்கு ஒத்துவராது. என்ன நடக்கிறது என்பதை தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். உண்மையான தீர்வு நம் கையில் தான் இருக்கிறது. இனி முடிவெடுக்க வேண்டியவர்கள் நாம் மட்டும் தான். நம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் தானே படிக்கின்றன, அரசுப் பள்ளிகள் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன என்று நாம் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. நல்ல கல்விக்காக ஏங்கும் ஏழைக் குழந்தைகளும், தங்களது குடும்ப நிலை தங்கள் பிள்ளைகளாலாவது உயராதா என்று தவிக்கும் வசதியில்லாத பெற்றோர்களும் இங்கு ஏராளம் உண்டு. அவர்களுக்காக நாம் கேள்வி கேட்க வேண்டும். ஆசிரியர்கள், செய்யும் தொழிலே தெய்வம் என்பதை மற்றவருக்கு சொல்லிக் கொடுக்கும் முன் தாங்கள் நன்றாக அந்த வாக்கியம் சொல்லும் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர்கள் வெறும் ரெக்கார்ட் எழுதி கணக்கை முடிக்க மட்டும் பள்ளிக்கு வராமல் தங்களது பள்ளியை முன்னுக்குக் கொண்டு வர ஆசிரியர்களுடன் சேர்ந்து பாடுபட வேண்டும். பெரிதாக ஒன்றும் இல்லை கொடுக்கும் சம்பளத்திற்கு ஆசிரியர்கள் வேலை செய்தாலே போதும்.

இதெல்லாம் நடந்தால் நிச்சயம் ஒரு மாற்றம் வரும். பணம் பிடுங்கும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளும் பெயர் வாங்கும்.

சாட்டை அருமையான திரைப்படம். தயரித்த இயக்குனர் பிரபு சாலமனுக்கும், நடித்த இயக்குனர் சமுத்திரக்கனிக்கும், இயக்கிய இயக்குனர் M. அன்பழகனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், பாராட்டுக்கள். அரசுப்பள்ளிகள் மட்டுமல்ல தமிழ் சினிமா உருப்படும் என்கிற நம்பிக்கை கூட இவர்களைப் போன்ற ஒரு சில இயக்குனர்களால் தான் எனக்கு வருகிறது.

ஓட்டுப் போடுவதும், வரியைக் கட்டுவதும் மட்டும் நம் கடமையல்ல. நம் வரிப்பணம் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளவும் வேண்டும். தப்பு என்றால் தட்டிக்கேட்க வேண்டும். மற்றவரையும் கேட்கத் தூண்ட வேண்டும். ஒருவனாக கத்திக்கொண்டிருந்தால் யாரும் கேட்காது. மொத்தமாக சேர்ந்து, சத்தமாகக் கேட்டால், நாடே திரும்பிப் பார்க்கும். நாம் கேள்வி கேட்க ஆரம்பித்தால் நிச்சயம் மாற்றங்கள் நிகழும். கனவு மெய்ப்படும். நான் கேட்பேன். நீங்கள் எப்படி?

You Might Also Like

4 comments

  1. படத்தின் பல இடங்களில் உண்மை நிகழ்வுகள் இருந்தன... கல்வி இன்றைக்கு 'சிறந்த தொழில்' ஆகி விட்ட நிலைமையில் 'சாட்டை' நல்ல படம் தான்... நன்றி...

    ReplyDelete
  2. மாசக்கணக்கா இங்கே காம்பஸ் எல்லாம் மூடிக்கிடக்கு....பொதுப் பரீட்சைகள் முடிந்தும் சம்பளம் போதாது என்பதால் வினாத்தாள்களை திருத்த முடியாது என்று அடம்பிடிக்கும் ஆசிரியர்கள், பல்கலைக்கழகம் வரமறுக்கும் பேராசிரியர்கள்...தினம் தினம் பிழையான பரீட்சை முடிவுக்கு நீதி கேட்டு வீதிக்கு இறங்கும் மாணவர்கள்...மலையக ஆசிரியர் பற்றாக்குறை...

    இப்படி இலங்கையின் கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு ஒரு சாட்டையை யாராவது எடுப்பார்களா???

    ReplyDelete
  3. படத்தை விட உங்கள் எழுத்தில்தான் ஆதங்கம் அதிகமாகப் படுகிறது!
    நானும் நேர்மையான, அன்பான ஆசிரியர்களைச் சந்தித்திருக்கிறேன் என்றாலும்,

    //மாணவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் இருந்து கொண்டே இருக்கிறது. எந்த வேலையும் கிடைக்கவில்லை என்றால் பெரிதாக கவலைப்பட வேண்டாம், ஆசிரியர் தொழில் இருக்கிறது. டீச்சர் டிரைனிங்கை முடித்து விட்டு, பெயரைப் பதிந்துவிட்டு, ஏதாவது ஒரு பள்ளியில் ஆசிரியராக சேர்த்துவிட்டு காத்திருந்தால் போதும். எப்படியும் அரசு வேலை கிடைத்துவிடும். கொஞ்சம் பணம் செலவு செய்தால், மிக விரைவாக வேலை நடக்கும். பிறகு ஜாலிதான். வருடாவருடம் Pay Commission வந்து கொண்டே இருக்கிறது. சம்பளத்திற்கு குறைவே இல்லை. போட்ட காசை எடுத்துவிடலாம். இப்படி பூட்ட கேஸ் எல்லாம் ஆசிரியர் வேலைக்கு வந்தால், எப்படி உருப்படும்?//

    இந்த வரிக்கு பெரிய்ய்ய சல்யூட்!

    ReplyDelete
  4. பாஸ் படத்தின் குறைகளை அழகா சுட்டி காட்டி இருந்திர்கள் நீங்க கூட டைரேக்சன் முயற்சிக்கலாம் பாஸ்

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...