முகமூடி போஸ்ட்மார்ட்டம் - பாகம் 01 - காஸ்டியூம்

9:55:00 AM


சூப்பர் ஹீரோ உடைக்கு மட்டும் தான் இந்தப் பதிவு. இன்னும் கதை, திரைக்கதை, வில்லன், களம், சூப்பர் ஹீரோவின் அவசியம், படத்தில் இருக்க வேண்டியவை, இருக்கக் கூடாதவை போன்றவற்றைப் பற்றிய எனது கருத்தை வாசகர்களாகிய நீங்கள் இந்தப் பதிவை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பார்த்துவிட்டு அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன்.

a Superhero needs an outfit. people should see you. they should love you. a police officer wears a police outfit. a doctor wears a doctor’s outfit. the outfit shows your commitment to the Job!

Hancock படத்தில் வரும் வசனம் இது. ஒரு சூப்பர் ஹீரோவிற்கு காஸ்டியூம் என்பது மிகவும் அவசியம். அது தான் அவனை வேறுபடுத்திக் காட்டும். எனவே தான் முகமூடியின் சூப்பர் ஹீரோ உடையிலிருந்து போஸ்ட்மார்ட்டத்தை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.

சூப்பர்மேன் ஒரு ஆரம்பகால சூப்பர் ஹீரோ என்பதால் அவர் பேண்ட் போட்டு அதன் மேல் ஜட்டி போட்டார். ஆனால் அவருக்கும் பின் வந்த சூப்பர் ஹீரோக்கள் எல்லாம், தங்களது தேவைக்கேற்ப தங்களது உடையை வடிவமைத்துக்கொண்டனர்.

Spiderman எளிதில் அங்கும் இங்கும் நகர, ஓட, நழுவ வசதியாக ஒரு எலாஸ்டிக் டைப் டிரஸ். Superman, Spiderman போன்ற விஷேச சக்திகளைக் கொண்ட சூப்பர் ஹீரோக்களை விட்டுவிடுவோம். தங்கள் பலத்தை நம்பும் நமது ‘முகமூடி’ டைப் சூப்பர் ஹீரோக்களின் காஸ்டியூம் பற்றி மட்டும் பார்ப்போம்.

Mask of Zorro, ஆள் பலசாலி, கத்தி சண்டையில் தேர்ந்தவன். காஸ்டியூம் என்று பார்த்தால், முழுக்க பிளாக் டிரஸ், தான் யார் என்பது தெரியாமல் இருக்க, முகத்தில் கண்களை மட்டும் மறைக்க ஒரு கருப்புத் துணி, கௌபாய் டைப் தொப்பி, எக்ஸ்டிராவாக அங்கும் இங்கும் தாவி ஓட ஒரு ‘சாட்டை’. இவனது வாகனம் ஒரு கருப்பு குதிரை. ஆயுதம் வாள். இருப்பதிலேயே சிம்பிளான காஸ்யியூம் என்றால் அது Mask of Zorro வினுடையது தான்.

Batman – குண்டு துளைக்காத ஒரு உடை மிக முக்கியம். ஏனென்றால் அவன் வாழும் இடமும், போராடும் வில்லன்களும் அப்படி. பின்னால் தொங்கும் போர்வை (Cape) கூட வெறுமனே தொங்கிக் கொண்டிருக்காது. அதற்கென்று ஒரு மிகப்பெரிய வரலாறே இருக்கிறது. மின்சாரத்தின் உதவியால் wingsuit ஆக மாறும் அந்த போர்வையின் உதவியால் பேட்மேனால் பறக்க (glide) முடியும். இதுதவிர பேட்மேனின் Utility Belt. கிரைம் ஃபைட்டிங்க் (Crime Fighting) தேவையான பல விஷயங்களை தனது இந்த பெல்ட்டில் தான் வைத்திருப்பார் பேட்மேன். இவை தவிர ஏகப்பட்ட ஐட்டங்களை தனது காஸ்டியூமிற்குள் வைத்திருப்பார் பேட்மேன். தேவையில்லாத ஒன்று என்பது பேட்மேனிடம் இருக்கவே இருக்காது. வாகனமும் Batmobile, Batwing, Batpod போன்ற அதீத அறிவியல் சாதனங்கள் தான். மிகவும் காஸ்டலியான காஸ்டியூம்களில் பேட்மேன் உடைக்கு நிச்சயம் இடம் உண்டு. ஆள் நல்ல பணக்காரன் என்பதால் வாங்க முடிகிறது (பார்க்க படம்)
Iron Man னின் பலமே அவன் அணிந்திருக்கும் அவனது காஸ்டியூம் (கவசம்) தான். அந்தக் கவசம் தான் அவனுக்கு நூறு ஆள் பலத்தைக் கொடுக்கிறது, அதைப் போடுக்கொண்டு தான் சண்டையிட முடிகிறது, பறக்க முடிகிறது, குண்டு வீசி எதிரிகளைத் தாக்க முடிகிறது. முழுக்க முழுக்க அறிவியலின் அற்புதம் இரும்பு மனிதனின் கவசம். அதே சமயம் செம காஸ்டலியான காஸ்டியூமும் Iron Man உடையது தான்.
நமது சக்திமானிற்கும் சரி மாயா மச்சீந்திராவிற்கும் சரி, காஸ்டியூம் என்பது மிகவும் சிம்பிள். ஐந்து மீட்டர் வெல்வெட் துணியால் தைக்கப்பட்ட ஒரு டிரஸ். சக்திமானிற்கு அதில் தங்க பார்டர், நெஞ்சில் சூரியனின் படம் கொடுத்திருப்பார்கள். சூரிய புத்திரன் என்பதைக் காட்ட. ‘மாயா’விற்கு அந்த தங்க பார்டரும் கிடையாது. டி-சர்ட் போல கர்ணனின் கவசத்தை அணிந்து கொண்டால் போதும். சண்ட போட வாள் இருக்கிறது. இருவருமே பறக்கும் சக்தி, மாயமாக மறையும் சக்தி கொண்டவர்கள். எனவே வாகனம் தேவையில்லை.
Krrish படத்தில் சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்பதோ, தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதோ ஹீரோவின் நோக்கம் அல்ல. அவனது ஒரே நோக்கம் தன் காதலை வெல்ல வேண்டும். ஆக அது ஒரு சூப்பர் ஹீரோ படமே அல்ல. சூப்பர் பவர்ஸ் உள்ள ஒருவனின் காதல் கதை என்பது தான் பொருத்தமாக இருக்கும். எனவே காஸ்டியூமிலும் மெனக்கெட்டிருக்க மாட்டார்கள். உடைந்த ஒரு மாஸ்க், திருப்பி ஆணியப்பட்ட ஒரு பெரிய லெதர் (?) ஜாக்கெட். அவ்வளவு தான்.

கந்தசாமி காஸ்டியூம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்த படமே முதலில் எந்த genre படம் என்றுப் பிடிபடவில்லை. ஏழைகளுக்கு உதவ நினைக்கும் நண்பர்கள் சிலர் கடவுளையும், சூப்பர் ஹீரோ கான்செட்டையும் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் படத்தின் இரண்டாம் பாதி, கிளைமாக்ஸ், குழப்பம் தான் மிஞ்சியது. உடையும் முருகனை (கந்தசாமியை) பிரதிபலிக்கும்படி இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மாதிரி இன்ன்வென்று சொல்ல முடியாத வகையில் இருக்கும்.

கருப்பு சாமி கடவுள் என்பதால் மக்கள் அருகிலேயே வரமாட்டார்கள். முகத்தை மறக்கவோ, வேறு தோற்றத்தில் இருக்கவேண்டிய அவசியமோ இல்லை. ஆனாலும் வெள்ளை வேஷ்டி, கையில் லெதர் பட்டை, சந்தன பூச்சு, மணிகள் என்று அணிகலன்கள் இருக்கும். வாகனம் வெள்ளைக் குதிரை. ஆயுதம் அரிவாள்.

ஏன் இவ்வளவையும் சொல்கிறேன் என்றால், முகமூடி படம் வெளியாவதற்கு முன் பெரிதாக பேசப்பட்ட விஷயம் இந்த காஸ்டியூம் தான்.

சுமார் 10 கிலோ எடையுள்ள இந்த காஸ்டியூமை வடிமைக்க 4, 5 மாதங்கள் அலைந்து, ஹாங் காங்கிலிருந்து ஸ்பெஷலாக ஒரு fabricator ஐ எல்லாம் வரவழைத்து வடிவமைத்ததாகச் சொன்னார்கள். இந்த மேக்கிங் வீடியோவில் எவ்வளவு சிரமப்பட்டு இந்த உடையை செய்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். பேட்மேனின் உடை 122 பாகங்களைக் கொண்டது, ஆனால் முகமூடியின் உடை ஐந்தே பாகங்களால் செய்யப்பட்டது என்று மிஷ்கின் சொன்னார். காஸ்டியூமும் மிகவும் அற்புதமாக, பார்க்கவே சூப்பர் ஹீரோவிற்கே உரிய ‘கெத்’துடன் தான் இருந்தது. ஆனால் அதற்கான ‘ஜஸ்டிஃபிகேஷன்’ படத்தில் இருந்ததா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஜீவாவின் முழு பலமும் குங்ஃபூ. குங்ஃபூ மட்டும் தான். ஜப்பான் ‘சாமுராய்’கள், நிஞ்சாக்கள் பயன்படுத்துவது போல வாள், கத்தி, வில்/அம்பு, குட்டி கத்தி (பேட்மேனிடம் இது இருக்கும், வவ்வால் வடிவத்தில்), பூமராங் (Boomerang) போன்ற ஆயுதங்களை கூட அவர் வைத்துக்கொள்ளவில்லை. அல்லது புரூஸ் லீ யைப் போல நுன்சக்கும் (nunchaku) வைத்துக் கொள்ளவில்லை. அப்படியிருக்க அவருக்கு எதுக்கு 10 கிலோ எடையுள்ள ஒரு உடை? 10 கிலோ எடையைத் தூக்கிக்கொண்டு எப்படி குங்ஃபூ சண்டையிட முடியும்? பின்னால் ஒரு போர்வை வேறு தொங்குகிறது. அதை போட்டுக்கொண்டு ஓடுவதே சிரமம், இதில் எப்படி குங்ஃபூ சாத்தியம்? படத்தின் ஸ்டில்கள், டிரைலர்களைப் பார்த்து விட்டு, முகமூடியின் இந்த காஸ்டியூமிற்குள் ஏகப்பட்ட விஷயம் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கடைசியில் ஒன்றுமே இல்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றம்!
கராத்தே, குங்ஃபூ உடை என்பதே மிகவும் லைட்டாக, பொதுவாக கொஞ்சம் லூசாகத் தான் இருக்கும். நான் பார்த்த வரை புரூஸ் லீ, ஜெட் லீ, ஜாக்கி சான், டோனி யென் ஆரம்பித்து அத்தனை குங்ஃபூ பைட்டர்களும் எடை கம்மியுள்ள, லூசான உடையையே அணிந்திருப்பார்கள். புரூஸ் லீ கூட சண்டை போடும் போது ஃப்ரீயாக இருக்க வேண்டும் என்று பாதியில் சட்டையைக் கழட்டி விடுவார். வேகமாக செயல்பட எடை அதிகமுள்ள டிரஸ் ஒத்துவரவே வராது. டைட்டாக, எலாஸ்டிக் போன்று இருந்தால் கூட பரவாயில்லை (முகமூடி வீரர் மாயாவி, Spiderman போல). முகமூடி காஸ்டியூமிற்கு, வில்லன் கோஸ்டி காஸ்டியூம் எவ்வளவோ தேவலாம் (நரேன் காஸ்டியூம் அல்ல). டைட்டாக உடலோடு ஒட்டிய விதமாக கயிறு, கத்தி, துப்பாக்கி எல்லாம் வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடுவதற்கும், தாவுவதற்கும் வசதியாக இருந்தாகத் தெரிகிறது.

துப்பாக்கி துளைக்காமல் இருக்கத் தான் அந்த உடை என்று படத்தில் சொன்னார்கள். ஆனால் அந்த உடையைப் போட்டுக் கொண்டு ஜீவா நடித்த 6 ஸீன்களில் (மருத்துவமனை, ஹீரோயின் வீட்டு மொட்டை மாடி, மாஸ்டர் வீடு, கடற்கரையில் ஓட்டம், கமிஷனர் அலுவலகம், கிளைமாக்ஸ்) ஒரு இடத்தில் கூட அவர் மீதோ அல்லது அந்த உடை மீதோ துப்பாக்கி குண்டு படவோ, பட்டுத் தெறிக்கவோ அல்லது துளைக்கவோ இல்லை. ஒரே ஒரு இடத்தில் சண்டையிடும் போது எதிராளி குத்தும் கத்தி உள்ளே இறங்காது. ஜீவா ஏளனப் பார்வை பார்க்க, குத்தியவன் ஆச்சரியப்படுவான். கண் இமைக்கும் நேரத்தில் இந்த சீன் வந்து போய்விடும். அந்த ஒரு சீனிற்கு தான் இந்த டிரஸா?

ஜீவா மீது கொலை பழி விழுந்து விட்டது. அதனால் அவரால் சாதாரணமாக வெளியில் நடமாட முடியாது. ஏற்கனவே ஒரு முகமூடியைப் போட்டுக்கொண்டு (கன்றாவியான காஸ்டியூம்) ஹீரோயினைப் பார்க்கப் போய், ஒரு திருடனை வேறு பிடித்துக் கொடுத்து ‘சூப்பர் ஹீரோ முகமூடி’யாக ஃபார்ம் ஆகிவிட்டார். ஆகவே அவருக்கு தேவை அதே போன்றதொரு முகமூடி. அவ்வளவு தான். பின்னால் போர்வை எல்லாம் தேவையே இல்லை. ஒரு சூப்பர் ஹீரோ என்றாலே போர்வை வேண்டும் என்று அர்த்தமா? சக்திமான், கிருஷ், மாயா மச்சீந்திரா யாருக்குமே போர்வை இல்லையே? (கந்தசாமி போர்வையில் சேவல் இறக்கை வரையப்பட்டிருக்கும். அவர் அடிக்கடி டான்ஸ் மூவ்மெண்ட் போடும் போது அதை விரித்து விரித்து ஆடுவார்) முதல் துரத்தலில் கூட போர்வை, கம்பியில் தாவிக் குதிக்கும் போது மாட்டிக்கொண்டு கிழிந்து விடும். அந்த துரத்தல் முடிந்து ஜீவா வீட்டிற்கு வந்து அதை தரையில் விரித்து படுப்பாரே. அதற்கு மட்டும் தான் ‘போர்வை (cape)’ படத்தில் பயன்பட்டிருக்கிறது. சூப்பர் ஹீரோ ஆன பிறகும் அதற்கு மட்டும் தான் பயன்பட்டிருக்கும்.

என்னைக் கேட்டால் முதல் சீனில் வரும் ‘கர்சீப்’ மாஸ்கே முகமூடிக்கு போதுமானது (பின் பாதியில் சூப்பர் ஹீரோ ஆன பிறகும் கூட கர்சீப் சீன் உண்டு, ஆயுதமாக மம்மி டெக்ஸ்டைல்ஸ் கவரில் கொண்டு வரப்பட்ட வாழைப்பழம்). சரி, ஆவேசமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது கர்சீப் கழண்டு விட வாய்ப்பிருக்கிறது. அதனால் ஒரு நிரந்தர மாஸ்க் வேண்டும். வாஸ்தவம் தான். ஆனால் அதில் எதற்கு ஒரு சின்ன வாக்கி டாக்கி செட்டிங்? ‘One man down’ என்று சயின்டிஸ்ட் (watch / radio  ரிப்பேர்?) தாத்தா காதில் சேதி சொல்வதற்கா? இந்த ரேடியோ பிட்டிங்கிற்காகத்தானா அவர் படம் முழுவதும் எதையோ சால்டரிங் செய்து கொண்டே இருந்தாரா? கவனிக்க: உடை தைத்துக் கொடுத்தது கூட இவர் இல்லை. இன்னொரு குறுந்தாடி தாத்தா தான். இவர் வெறும் மாஸ்க் பிட்டிங் மட்டும் தான் செய்து கொடுத்தார். என்னைக் கேட்டால் Mask of Zorro போல ஒரு துணியில் இரண்டு ஓட்டை போட்டு அதை டைட்டாக கட்டிக்கொண்டிருக்கலாம். நன்றாக இருந்திருக்கும். சட்டைக்குள் வேண்டுமானால் ஒரு புல்லட் புரூப் வெஸ்ட் மாட்டிக்கொண்டிருக்கலாம். அதை விட்டு விட்டு இரும்பைக் காய்ச்சி ஊற்றி, டிசைனிங்காக லெதர் டச்சிங் எல்லாம் செய்து, மாஸ்க் ரெடி செய்து – இவையெல்லாம் நடப்பது ஒரே ராத்திரியில். ஜீவா இது எதிலுமே கலந்து கொள்ளவில்லை. சும்மா தேமே என்று உட்கார்ந்திருப்பார். கிழவர்கள்தான் ஜீவாவை சூப்பர் ஹீரோ ஆக்குவார்கள். 

“நீ என்ன ஆக வேண்டும் என்பதை நீயே தான் தீர்மானிக்க வேண்டும்” என்று முதலில் சொல்லிவிட்டு, வெளியில் கிளம்பும் ஜீவாவை தடுத்து உடை தைத்துக் கொடுத்து, மாஸ்க் செய்து கொடுத்து, M ஃபார் முகமூடி என்று லோகோவெல்லாம் பெல்ட்டில் பிட் செய்து கொடுத்து வெளியில் அனுப்புகிறார்கள். ஜீவா ஏற்கனவே ஒரு காஸ்டியூமில் வில்லன்களைத் துரத்தியிருக்கிறார். அவருக்கு அப்படிப்பட்ட ஒரு காஸ்டியூமின் பிளஸ் – மைனஸ் நன்றாகத் தெரியும். அவரல்லவா தாத்தாக்களிடம் வந்து தன் வசதிக்கேற்ப ஒரு காஸ்டியூமை வடிவமைத்துத் தரக் கேட்க வேண்டும். சரி திரைக்கதையில் அதற்கு வாய்ப்பில்லை என்று வைத்துக்கொண்டால் கூட, லாஜிக் பயங்கரமாக இடிக்கிறதே! “நீ என்ன ஆக வேண்டும் என்பதை நீதான் தீர்மானிக்க வேண்டும்” Be aware of your own limitations; know what you are capable of doing – Know Thyself என்பது தான் படத்தின் மெசேஜ் என்றால் ஜீவா தான் தானே தனது கடமை உணர்ந்து, ஒரு சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்து, வில்லன்களை ஒழிக்கப் புறப்பட வேண்டும். ஆனால் அவரோ தன் நண்பனைக் கொன்றவர்களை பழிவாங்க மட்டுமே கிளம்புகிறார். உடையையும் (காஸ்டியூம்) ஒளிந்து கொள்ள மட்டுமே பயன்படுத்த எண்ணுகிறார் (இந்த டிரஸ்ஸுக்குள்ள ஒளிஞ்சிகுவேன் தாத்தா!). ஆனால் சூப்பர் ஹீரோ உடை வந்தவுடன் நாசரைக் காப்பாற்றுகிறார், பைலைத் தேடி அலைகிறார், மாஸ்டரிடம் கதை கேட்கிறார், நரேன் கோஸ்டியைப் போலீஸிடம் போட்டுக்கொடுக்கிறார். வெறுமனே பழிக்கு பழி வாங்க இவையெல்லாம் எதுக்கு செய்ய வேண்டும்?

நிற்க.

ஆங்கிலப் படங்களுடன் ஒப்பிட்டு நமது முயற்சியை நானே ஏளனம் செய்வதாக நினைக்க வேண்டாம். அது எனது நோக்கம் அல்ல. நான் உண்மையில் உதவத்தான் நினைக்கிறேன். இதை Criticism ஆக மட்டும் நினைத்துக்கொள்ளாமல், Constructive Criticism ஆக நினைக்க வேண்டும். உண்மையில் இந்த உடை / காஸ்டியூம் எப்படி வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும்? (படத்தின் அடித்தளமான கதையே என்னைப் பொறுத்த வரை சரியில்லை. அதைப் பிறகு பார்க்கலாம்)

படத்தில் மொத்தம் ஒரே தாத்தா தான். அது ஜீவாவின் தாத்தாவாகவே இருந்து விட்டுப் போகட்டும். அவர் ஒரு சயின்டிஸ்ட். அதுவும் ரோபோடிக்ஸில் கை தேர்ந்தவர். அவருக்கும் ஜீவாவிற்கும் பிடித்த ஒரே நபர் “புரூஸ் லீ”. 
Bruce Lee was an Alien! He was not an Ordinary person

மற்ற மனிதர்களைப் போல் புரூஸ் லீ இல்லை. அவர் ஒரு Legend! புரூஸ் லீ அளவிற்கு பலம், வேகத்துடன் இன்னொரு மனிதன் வர வாய்ப்பேயில்லை என்பது தான் இவர்களது கருத்து. இவர்களது உரையாடல்களும் இதைச் சுற்றியே அமைகிறது. புரூஸ் லீ மேல் தீராக் காதல் கொண்டிருப்பதால் தான் ஜீவா குங்ஃபூ கற்கிறார். இதற்கு தந்தையிடமிருந்து பெரிய வரவேற்பு இல்லையென்றாலும், தாத்தாவிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கிறது. தன் பங்கிற்கு தாத்தா, புரூஸ் லீ அளவிற்கு மனித உடலின் சக்தியைப் பெருக்குவதற்கு அறிவியலைக் கொண்டு ஆராய்ச்சி செய்து வருகிறார். புரூஸ் லீ போல் இன்னொருவனை அறிவியலின் துணையோடு உருவாக்க முடியும் என்று முழுவதுமாக நம்புகிறார். (inspired from: கி.மு வில் சோமு சித்திரக்கதையில் சோமுவின் தாத்தா காலையந்திர ஆராய்ச்சியில் ஈடுபடுவார் :-)

படத்தில் ஜீவாவிற்கு மட்டும் தான் புரூஸ் லீ பிடிக்கும் என்பது போல் காட்சியப்படுத்தப்பட்டுள்ளது. தாத்தாவின் ஏரியா ரோபாடிக்ஸ் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் தாத்தாவின் ‘லேப்’பில் புரூஸ் லீ படங்கள் இருக்கிறது. தாத்தாவிற்கு புரூஸ் லீயைப் பிடிக்குமா அல்லது தாத்தா, ஜீவாவிற்கு ஒரே அறையா? (அதுவும் காலனி டைப் வீட்டு மொட்டை மாடியில்)
இடைப்பட்ட சமயத்தில் ஏகப்பட்ட சம்பவங்களுக்குப் பிறகு, ஜீவா தன்னைவிட பன்மடங்கு சக்திகொண்ட வில்லன்களை எதிர்கொள்ள நேர்கிறது. நேரடியாக வில்லன்களை தன்னால் எதிர்கொள்ள முடியாது என்பது தெரிகிறது. முதல் முறை முகத்தை மறைத்து, வில்லன்களை எதிர்க்க முயற்சி செய்து, தோற்கும் ஜீவா, தாத்தாவிடம் வருகிறான். ஜீவாவிற்கு தெரிந்த குங்ஃபூ மட்டும் போதாது என்று சொல்லும் தாத்தா, தான் நீண்ட நாட்களாக ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதை பரிசோதித்துப் பார்க்கும் தருணம் வந்துவிட்டதெனச் சொல்கிறார். தான் வடிவமைத்து வைத்திருக்கும் உடை / கவசம் / skeleton (எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்) ஒன்றை ஜீவாவிற்குக் கொடுக்கிறார். 

ஜாக்கிசான்னின் Tuxedo போல், அல்லது GI Joeவில் வருவது போல் (கவனிக்க: உடையைச் சொல்லவில்லை concept மட்டும் தான்) அல்லது The Dark Knight Rises இல் Bruce Wayne தன் கால்களில் பொருத்திக் கொள்வாரே அதைப் போல, மனித உடலின் சக்தியை பெருக்கக் கூடிய சாதனமாக அது செயல்படும் என்கிறார். ஒரு Robotic Arm செயல்படுவது போல (Iron Man இதன் உச்சம் எனக்கொள்ளலாம்). இதனால் ஜீவாவின் வேகம் அதிகரிக்கும் என்கிறார். ஜீவா அந்த சாதனத்தை அணிந்து குங்ஃபூ பயில்கிறான். நுன்சக் குற்றுகிறான் (CG யாய நமக). குங்ஃபூ உடன் ஆறிவியலும் இணையும் பொழுது மனித சக்திக்கு அப்பாற்பட்ட பெரும் சக்தி (ஆற்றல்) கிடைக்கிறது. கிட்டத்தட்ட புரூஸ் லீயே மீண்டும் உருவாகி வந்ததைப் போல

வெறும் skeleton ஆக இருப்பதை தாத்தாவும் ஜீவாவும் சேர்ந்து தேவைக்கேற்ப ஒரு சூப்பர் ஹீரோ காஸ்டியூமாக வடிவமைக்கிறார்கள். சாமுராய்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் (முக்கியமாக அந்த குட்டி கத்தி), நுன்சக், ஆகியவை உடைக்குள் பொருத்தப்படுகிறது. மாஸ்க் தயார் செய்யப்படுகிறது. அதிலும் சில பிட்டிங்கிஸ் இருத்தல் நலம் (பட ஆரம்பத்தில் கொள்ளையர்கள் இருட்டில் பார்த்துக் கொண்டு வருவார்களே. அது போல). 100 சாமுராய்கள் / நிஞ்சாக்கள் சக்தியுடன் ஒரு “முகமூடி” உருவாகிறான். 

புதிதாக ஒருவனை உருவாக்குவதற்கு பதில் ஒரு "நிஞ்சா"வையே முகமூடியாக உருவாக்கியிருக்கலாம். நன்றாக இருந்திருக்கும். சென்னையில் தப்பைத் தட்டிக்கேட்கிறான் ஒரு மர்ம முகமூடி. Actually அவன் ஒரு NINJA! இது சும்மா எனது கற்பனை :-)

இப்படித் தான் இருக்க வேண்டும் என்றில்லை, இப்படி கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக, justified ஆக இருக்கும் என்பதே என் கருத்து. எனது இந்தக் கருத்துக்கள் பல ஆங்கிலப் படங்களில் இருந்து சுட்டது போல் தெரியலாம். ஆனால் Necessity is the mother of Invention பார்முலா தான் இங்கும் எங்கும்! இங்கு புரூஸ் லீ போல அசுர சக்தி கொண்ட ஒரு சூப்பர் ஹீரோ வேண்டும். அவ்வளவுதான்!

தொடரும்...

You Might Also Like

11 comments

 1. நமக்கும் சின்னவயசுல சூப்பர்ஹீரோ ஆகனும்னு ஆசை இருந்துச்சு. இப்போ ஆகனும்னா பேர் “கர்சீப்”னு தான் பேர் வச்சுக்கணும். கஸ்ட்டியும் செலவுக்கு கட்டுப்படியாகாது.

  அயன்மேன், பேட்மேன் உடை வாகன செலவுகளைப் பார்த்தா தலை சுத்துது சாமீ...

  http://cdn1.screenrant.com/wp-content/uploads/cost-of-iron-man.jpg

  http://cdn1.screenrant.com/wp-content/uploads/cost-of-batman.jpg


  முகமூடி படம் பார்த்திருந்தா ஏதாச்சு கமெண்ட்ல படம் பத்தி ஏதாச்சு உளறியிருக்கலாம். இணைய விமர்சனம் எல்லாம் படிச்சதும் இந்தப் படத்தைப் பார்க்கும் மூடே போய்டுச்சு தல. உங்க பதிவுகள் மூலமாவே தெரிஞ்சிக்கிறேன். :)

  ReplyDelete
  Replies
  1. முகமூடிய ஒரு தரம் பாருங்க... இன்னும் நிறைய என்னுடன் சேர்ந்து அலசலாம், சூப்பர் ஹீரோ genre தமிழுக்கு ஒத்துவராதுனு யாரும் அதை திரும்பவும் முயற்சி பண்ணாம இருந்திரக்கூடாதுனு தான் இந்த தொடர் பதிவே...

   நமது அலசலைப் பார்த்து அடுத்து வரும் சன்னதியர் பயனடைந்து, அருமையான திரைக்கதையுடன் ஒரு சூப்பர் ஹீரோவை நமக்குத் தர வேண்டும் :-)

   Delete
 2. தல,
  Excellent Analysis... படத்திருக்கு நல்ல Constructive Criticism குடுத்து இருக்கீங்க.....இப்படி இருந்தா நல்லா இருக்கும் என்கிற உங்க கருத்தை நான் அப்படியே ஏற்று கொள்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தல... இத்தோட நிறுத்திக்காம, உங்க கருத்து எதாவது இருந்தாலும் மறக்காம சொல்லுங்க... சினிமா ஆட்கள் யார் இதைப் பார்த்தாலும், ரசிகர்களின் பல்ஸ், எதிர்பார்ப்பு என்னன்னு புரிஞ்சிக்கிட்டு படம் எடுப்பாங்க... நான் மட்டும் எழுதி கிட்டே இருக்குற மாதிரி இருக்கக் கூடாது... கூட்டாவே Constructive Criticism பண்ணுவோம்!

   Delete
 3. தல,
  உங்களுக்கு தமிழ்மணதில் ஏன் பிரச்னை என்பதை கண்டுபிடிச்சுட்டேன்....
  உங்க ப்ளாக் தமிழ்மணத்தில் லிஸ்ட் ஆகி இருக்கு.. இந்த லிங்க்ல பாருங்க..
  http://tamilmanam.net/bloglist.php?char=20
  அங்க இருக்கிற "Babyஆனந்தன்" லிங்கை கிளிக் செய்தால் "http://www.babyanandan.in/" என்று ஓபன் ஆகிறது..
  உங்க ப்ளாக் இன்னும் "blogspot" ஆக தான் இருக்கு. அதனால தான் நீங்க பதிவை இணைக்க முடியாமல் இருக்கு..
  இந்த லிங்க் http://www.tamilmanam.net/blog_ranking.php போய் "http://www.babyanandan.in/" என்று குடுத்தால் கீழே இருப்பது போல் வருகிறது..
  பதிவின் பெயர் : Babyஆனந்தன்
  பதிவரின் பெயர் : Baby ஆனந்தன்
  தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட நாள் : 2010-09-04
  Not ranked based on the last three months data

  டொமைன் தான் பிரச்சினை என்று நினைக்கிறன்...தமிழ்மணத்தில் இணைக்கும் போது டொமைன் வாங்கி இருந்தீர்கள் போல்...அப்புறம் blogspot க்கு மாறிட்டீங்க.. :)
  மறுபடியும் டொமைன் வாங்கிருங்க...Problem solved... :)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... சூப்பர், எனக்காக மெனக்கெட்டு என்ன பிரச்சனைனு கண்டுபிச்சிட்டீங்க... ரொம்ப நன்றி... நிச்சயம் டொமைன் வாங்கிடுறேன்...

   Delete
 4. வாவ்.. செம அனாலிஸிஸ் ரொம்ப மெனகெட்டு எழுதி இருப்பிங்க போல, really a gud job :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி தல... முகமூடி பாத்தாச்சுன்னா உங்க கருத்துக்களையும், எப்படி இருந்திருக்கனும்கிறதையும் கொஞ்சம் இங்க எழுதுங்க...

   Delete
 5. காஸ்டியூமுக்கே இவ்வளவு யோசிச்சிருக்கீங்க.. சூப்பர் நண்பா! படம் மொக்கையா இருந்தாலும் ஒருவாட்டி பார்த்துரனும் போலயிருக்கு. அப்பத்தான் உங்க கருத்துக்கு பின்னால இருக்க வால்யுவை புரிஞ்சுக்க முடியும் :)
  அடுத்து.. அடுத்து..

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் ஒரு தரம் பாத்துருங்க... நான் ரெண்டு தரம் பாத்துட்டேன். பாத்துட்டு தான் அனலைஸ் பண்ணி, நோட்ஸ் எழுதி வச்சு, பதிவா எழுதிகிட்டு இருக்கேன். ஏதோ தமிழ் சினிமாவிற்கு நம்மால் ஆன ஒரு உதவி :-)

   Delete
 6. அடடா! காஸ்டியூமிலயே இம்புட்டு ஆய்வா? கலக்குங்க! அப்புறம் தியேட்டருக்கு போய் முகமூடி பார்க்கும் மூட் இல்ல எனவே டொரண்டில இறக்கி பார்த்தேன். இடக்கிடையே ஓடவிட்டு 10 நிமிஷத்தில் மொத்த படத்தையும் முடிச்சிட்டன். சரின்னு கடைசி ஸீன்ஐ விட்டுப் பார்த்தேன் அதில நரேன் பாட் மான்.சூப்பர் மான்,ஐயன் மான்னு டயலாக் பேசுறது கண்றாவி!

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...