சூப்பர் ஹீரோ படங்கள் நமக்கு ஒத்துவருமா?

1:07:00 PM


முதலில் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துவிடுகிறேன். நண்பர் ராஜ் அவர்களது ஹாலிவுட் பக்கங்கள் பற்றி விகடன் ‘என் சினிமா’ மின் இதழில் கட்டுரை வந்துள்ளது. பார்த்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துக்கள் தல. இனிமே தான் நீங்க தீயா வேல செய்யோனும் :-)

போன பதிவில் விட்ட இடத்திலிருந்து தொடருவோம்.

தமிழுக்கு ‘சூப்பர் ஹீரோ’ சப்ஜெக்ட் ஒத்துவருமா? நிச்சயம் ஒத்து வரும் என்று சொல்லியிருந்தேன். எப்படி என்று விவரமாகச் சொல்கிறேன்.

முதலில் சூப்பர் ஹீரோ என்பவன் யார்? இந்தக் கேள்விக்கு நான் புரிந்து கொண்டவரை, எனக்குத் தெரிந்த பதிலைச் சொல்கிறேன்.  
How to become a Super Hero?
உங்களால், என்னால் செய்ய முடியாதவற்றைச் செய்பவனைத் நாம் ஹீரோ என்று சொல்கிறோம். சிம்பிளாகச் சொல்ல வேண்டுமானால் தப்பை தட்டிக்கேட்டால் அவன் ஹீரோ. அல்லது வில்லனை தைரியமாக எதிர்த்து நின்றால் அவன் ஹீரோ. ஏனென்றால் சாமானியர்களான நாம் அதை செய்யவே மாட்டோம். நமகேன் வம்பு என்று ஒதுங்கித் தான் போவோம். திரைப்படங்களில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்விலும் நிறைய ஹீரோக்கள் இருக்கிறார்கள்.

அதுவே, வில்லன்களில் ஒரு பத்து பன்னிரெண்டு பேரை அடித்து துவம்சம் செய்து வீழ்த்திய பின் தப்பைத் தட்டிக்கேட்டால் அவன் ‘சூப்பர் ஹீரோ’. ஏனென்றால் சாதாரணமாக தப்பைத் தட்டிக் கேட்கும் ஹீரோவால் (நிஜ வாழ்விலும்) ‘சாகஸங்கள்’ எல்லாம் செய்ய முடியாது. ஆக, எம்.ஜி.ஆர் காலம் தொட்டே நமது திரைப்படங்களில் ஹீரோக்கள் கிட்டத்தட்ட அத்தனை பேருமே சூப்பர் ஹீரோக்களாகத் தான் சித்தரிக்கப்பட்டு வருக்கிறார்கள்.

இவர்கள் முகமுடி அணிய வேண்டிய அவசியமே இருந்ததில்லை. ஆனால் உலக அளவில் உண்மையான சூப்பர் ஹீரோ என்பவன் யாரென்று பார்த்தால், நான் புரிந்து கொண்டவரை, 

தான் யார் என்பது பிறருக்குத் தெரியாமல் இருக்க ஒரு முகமுடியை அணிந்து கொண்டு, சாகசங்கள் புரிந்து தப்பைத் தட்டிக் கேட்பவன்” 

ஒரு சூப்பர் ஹீரோவின் இலக்கணம் என்பதே தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல் இருப்பது தான். ஏதோ ஒரு இடத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு தப்பு நடக்கிறது. அங்கு திடீரென்று குதிக்கும் ஒருவன், தப்பு செய்பவர்களைப் பந்தாடுகிறான். கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மறைந்தும் விடுகிறான். அவன் யார், எங்கிருந்து வந்தான், எப்படி அந்த இடத்திற்கு வந்தான், எப்படி மறைந்து போனான் – யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனால் தப்பு நடக்கும் போதெல்லாம் சரியாக வந்துவிடுகிறான். அடி துவம்சம் செய்து வில்லன்களின் காரியங்களைக் கெடுக்கிறான். பின் வில்லன்கள் அவனை வலைவீசி தேடுகிறார்கள். இது தான் Superhero Ethics. இது மேலுள்ள நான்கு கேட்டகரிகளுக்கும் பொருந்தும்.

உதாரணத்திற்கு, இதே ஊருக்கு நல்லது செய்யும் அந்த ‘ஹீரோ’ யாரென்பது எல்லாருக்கும் தெரிந்தே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும்?

அவன் மேல் அதீத லைம்லைட் விழும்.

வில்லன்கள் மட்டுமல்லாமல் மீடியா, பொதுஜனம், ரசிகர்கள் என்று அனைவரும் அவன் பின்னாடியே அலைந்து கொண்டிருப்பார்கள்.

ஒன்றுக்கு போவது கூட ஒன்-லைன் நியூஸ் ஆகும்.

இப்படி இருக்கும் போது ஒரு கூட்டம் அவனையும், அவனால் பாதிக்கப்பட்ட மற்றொரு கூட்டம் அவனைச் சார்ந்தவர்களையும் போட்டுத் தள்ள துடிக்கிறது. இன்னொரு கூட்டம் ஊரின் ஏதாவதொரு மூலையில் இன்னொரு தீய செயலை அரங்கேற்ற பிளான் செய்கிறது. இப்பொழுது அந்த சூப்பர் ஹீரோ என்ன செய்வான்? தன்னைக் காப்பற்றிக்கொள்வானா இல்லை தன் குடும்பத்தைக் காப்பாற்றுவானா இல்லை ஊரைக் காப்பாற்றுவானா? அவன் எது செய்ய நினைத்தாலும் அது எல்லாருக்கும் தெரியும்படி தான் இருக்கும். மொத்தத்தில் அவனால் எதுவுமே செய்ய முடியாது.

ஆக, ஒரு சூப்பர் ஹீரோ யார் என்பது தெரிந்துவிட்டாலே, MISSION FAILED என்று தான் அர்த்தம். எனவே ‘முகமூடி’ வாழ்க்கை தான் சூப்பர் ஹீரோ வாழ்க்கை.

ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஆசை, அதை யாருக்கும் (நல்லவர்களுக்கு, தன்னைச் சார்ந்த, சேர்ந்தவர்களுக்கு) எந்தத் தீங்கும் இல்லாமல் செய்ய ‘முகமூடி’ ஒன்று வேண்டும். சிம்பிளாக சொல்லவேண்டுமானால் ஊருக்குள் ‘சப்பையாக’ இருக்க வேண்டும், ஆனால் எதிரிகளுக்கு ‘சிம்மசொப்பனமாக’ இருக்க வேண்டும். அப்பொழுதான் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. ஆங்கிலத்தில் வந்த காமிக்ஸ் கதைகளிலும் சரி படங்களிலும் சரி ஒரு சூப்பர் ஹீரோவின் உண்மையான identity யாருக்கும் தெரியாது. ஊரறிய வலம் வரும் சூப்பர் ஹீரோக்களும் உண்டு. Iron Man, Captain America என்று. அவர்கள் கதை வேறு. பிரச்சனைகள், வில்லன்களும் வேறு.

All Super Heroes!
உலக அளவில் சூப்பர் ஹீரோக்கள் என்பவர்கள் முதன்முதலில் அறிமுகமானது காமிக்ஸ் புத்தகங்களில் தான். அந்த வரலாறை புரட்டிப் பார்த்ததிலிருந்து சூப்பர் ஹீரோ கதைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம் என்று தெரிகிறது.

1) வேற்று கிரகவாசிவாசிகள். உதாரணம் - Superman, Green Lantern, Wonder Woman, He-Man, Hancock

2) ஆராய்ச்சியால் செயற்கையாக உருவாக்கப்பட்டவர்கள். உதாரணம் - Hulk, Captain America, Fantastic Four

3) பூச்சி கடித்து பவர்ஸ் பெற்றவர்கள். உதாரணம் - Spiderman

4) தன் பலத்தை (உடல், மனம், மூளை) மட்டும் நம்பி மட்டும் நம்பி களத்தில் இறங்குபவர்கள். உதாரணம் - Batman, Iron Man, Mask of Zorrow, Kick Ass

ஓ.கே. சூப்பர் ஹீரோக்களைப் பற்றி எனக்குத் தெரிந்ததை சொல்லிவிட்டேன். இனி ‘நமக்கு’ இவை ஒத்துவருமா என்று பார்ப்போம். 

சூப்பர் பைட்!
சில தமிழ் படங்களில் ஹீரோ தான் யார் என்பதை வெளிக்காட்டாமல், எதிரியை துவம்சம் செய்யவான். சமீபத்திய உதாரணம்: ‘தடையற தாக்க’. அருண் விஜய் மம்தாவை ஹோட்டலில் உட்காரவைத்து விட்டு, ஜன்னல் ஏறி குதித்து, முகத்தை மட்டும் ஒரு நீளமான துணியால் மறைத்துக் கொண்டு எதிரிகளை துவம்சம் செய்வார் (அருமையான பைட்). நீண்ட கால பிரபல உதாரணம் ‘திருப்பாச்சி’. விஜய் தன் முகத்தில் சந்தனம் பூசிக்கொண்டு பைட் செய்வார் (மொக்க பைட்). சாதாரணமாகவே இவர்கள் ஆளுக்கு பத்து பேரை துவம்சம் செய்யும் வல்லமை கொண்டவர்களாகத் தான் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். பிறகு ஏன் முகத்தை மூடிக் கொண்டு பைட் செய்ய வேண்டும்? மேல் சொன்ன ரீசன்கள் தான். ஏனென்றால், அருண் விஜய்க்கு தப்பைப் தட்டிக்கேட்க வேண்டும். ஆனால் அதை நேரடியாகச் செய்தால் சாமானியனான அவனுக்குப் பிரச்சனை வரும். எதிரிகள் நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். எனவே தான் முகத்தை மூடி அடிக்கும் ‘முகமூடி’ டெக்னிக். விஜய்க்கு என்ன பிரச்சனை என்பது ஊருக்கே தெரியும். ஆக பல சமயங்களில் தப்பைத் தட்டிக் கேட்க விரும்பும் ஒரு ஹீரோ, தான் யார் என்பதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பது தான் அனைவருக்கும் நல்லது. அது நம் நாடாக இருந்தாலும் சரி, வெளிநாடாக இருந்தாலும் சரி.

நம்ம 'கந்தசாமி' மாதிரியே இல்ல?
(படங்களுக்குப் போகும் முன்) வெளிநாடுகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் பல சூப்பர் ஹீரோ காமிக்ஸ்கள் வந்துள்ளன, வந்து கொண்டிருக்கின்றன. இன்றும் Raj Comics நிறுவனத்தினர் Nagraj, Super Commando Dhruva, Doga, Parmanu, Shakti, Bhokal, Super Indian என்று பல இந்தியன் சூப்பர் ஹீரோக்களை உருவாக்க்கி காமிக்ஸ் கதைகளை வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். நமக்குத் தான் தெரியவில்லை. இந்தியாவிலும் வெளிநாடுகளில் நடப்பது போல் காமிக்ஸிற்கென்று பிரத்யேகமாக கண்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாம் நடப்பதாகத் தெரிகிறது (Indian Comicon).

மண்டை ஓட்டுக் குகையில் மாயாவி!

தமிழில் என்று பார்த்தால் ஆரம்ப காலத்தில் ராணி, முத்து, லயன் காமிக்ஸ்கள் செய்த தொண்டு மிகப் பெரியது. இவர்கள் தயவால் நமக்கு அறிமுகமாகாத சூப்பர் ஹீரோக்களே அல்ல. அதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு சூப்பர் ஹீரோ முகமுடி வீரர் ‘மாயாவி’. மங்கோலியா காடு, மண்டை ஓட்டு குகை, ஹீரோ, டெவில், ரெக்ஸ், டயானா, சூரன் என்று எனது பள்ளி விடுமுறை நாட்கள் பெரும்பாலும் மாயாவியுடன் தான் கழிந்தது. எங்கள் சொந்த ஊரில், குறிப்பிட்ட ஒரு கடையில் மூன்று ரூபாய் காமிக்ஸ் புத்தகத்தை 50 பைசாவிற்கு ஒரு நாள் வாடகைக்குத் தருவார்கள் (5 ரூபாயோ என்னவோ டெப்பாஸிட் வேறு). காமிக்ஸ்களை எனக்கு அறிமுகம் செய்தது அந்தக் கடைதான். ஒரு புத்தகம் விடாமல் வாசித்திருக்கிறேன். இன்று அந்தக் கடையும் இல்லை. அந்தப் புத்தகங்களும் இல்லை.
சக்திமான்!
காமிக்ஸ் தாண்டி திரையில் வந்தவர்கள் என்று பார்த்தால், இந்தியாவின் முதல் பிரபல சூப்பர் ஹீரோ - ‘சக்திமான்’. இவருக்கு முன் ‘கேப்டன் வியோம்’ என்று ஒருவர் இருந்தார். கி.பி 2220 கால ஹீரோ. இவர் சூப்பர் ஹீரோவா அல்லது சாதா ஹீரோவா என்றொரு குழப்பம் எனக்கு இருக்கிறது.

ஆனால் சக்திமான் நிச்சயம் ஒரு அக்மார்க் சூப்பர் ஹீரோ. சக்திமானை கிட்டத்தட்ட சூப்பர்மேனின் இந்திய பிரதி எனலாம். ஒரே ஒரு சின்ன வித்தியாசம். சூப்பர் மேன் ஒரு ஏலியன். சக்திமான், தீய சக்திகளை எதிர்த்துப் போராட யோகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதன். நம்மில் ஒருவன். குண்டலினி யோகத்தால் சூப்பர் பவர்ஸ் பெற்றவர். மற்றபடி இருவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான். இருவருமே மொக்கையான ஒரு தோற்றத்தில், செய்தித்தாள் கம்பெனி ஒன்றில் வேலை செய்பவர்கள். அதே செய்தித்தாளில் வேலை செய்யும் ஹீரோயினைக் காதலிப்பார்கள். ஆனால் ஹீரோயின்களோ சூப்பர் ஹீரோக்களைத் தான் காதலிப்பார்கள். நம்மாட்களை வெறும் பிரண்டாகத் தான் பார்ப்பார்கள்.

சக்திமானிற்கு இந்தியாவில் இருந்த வரவேற்பு சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஹிந்தியில் மட்டுமல்லாமல், இந்திய மொழிகள் அனைத்திலும் சக்திமான் ஒளிபரப்பப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. சனிக்கிழமை மதியம் சக்திமான் தூர்தஷனில் வருவார் என்பதற்காகவே பள்ளிக்கு போகாமல் கட்டடித்த சிறுவர்கள் அன்று ஏராளம். அதில் நானும் ஒருவன். Pandit Gangadhar Vidyadhar Mayadhar Omkar Nath Sasthri – இன்றும் நினைவில் இருக்கிறது. விதவிதமான வில்லன்கள் பூமியை (இந்தியாவை) அழிக்க வருவார்கள் (அவர்களுக்கு இங்கு ஒரு லீடர் உண்டு, பெயர் மறந்து விட்டது) சக்திமான் அவர்களோடு சண்டையிட்டு உலகத்தைக் காப்பாற்றுவார். சக்திமான் ஸ்டிக்கர் இலவசமாக கொடுக்கிறார்கள் என்பதற்காகவே Parle-G பிஸ்கட், பாக்கெட் பாக்கெடாக வாங்கித் தின்றவன் நான். “சக்திமான் காப்பாற்று” என்று தனக்குத்தானே தீ வைத்துக்கொண்ட, மாடியில் இருந்து குதித்த பக்கிகள் கதையெல்லாம் உண்டு. இது போன்ற சம்பவங்களால் சீரியல் சிறிது நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

Krrish!
சக்திமான் தொடர் தவிர்த்து ஹிந்தியில் திரைப்படமாக வந்து சக்கைபோடு போட்ட சூப்பர் ஹீரோ படம் - Krrish. இயற்கையிலேயே சூப்பர் பவர்ஸ் உள்ளவன் கிருஷ்ணா. ஒரு சமயம் மக்களுக்கு ஆபத்து வருகிறது. தான் யார் என்பது தெரிந்தால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும். அதனால் உடைந்து போன ஒரு மாஸ்கை எடுத்து போட்டுக்கொண்டு “கிருஷ்” ஆக மாறி உதவி செய்கிறான். ஆகா, ஓகோ அல்டாப் பில்டப்புகள் எதுவுமே இல்லாமல் மிகவும் யதார்த்தமாக (?) வந்த ஒரு படம். ஆங்கிலத்தில் வந்த ‘Unbreakable’ இதை விட யதார்த்தமான ஒரு சூப்பர் ஹீரோ படம். இதில் இயற்கையாகவே ஹீரோ மிகவும் பலசாலி.
சக்திமான் முதன்முதலில் வெளியான வருடம் 1997. ஆனால், சமீபத்தில் கூட சுட்டி டிவியில் சக்திமான் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். Krrish சூப்பர் டூப்பர் ஹிட். எனவே சூப்பர் ஹீரோ கதைகள் என்பது இந்தியாவிற்கு புதிதல்ல என்று தான் நான் நினைக்கிறேன்.

சக்திமான், Krissh எல்லாம் ஆயிரம்தான் இருந்தாலும் ஹிந்தி கதாப்பாத்திரங்கள். முகமுடி வீரர் மாயாவி கூட வெளிநாட்டுக்காரர் தான். தமிழில் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் உண்டா? உண்டு!

காமிக்ஸ் பற்றி தெரியவில்லை ஆனால், எனது பள்ளி நாட்களில் ரசித்துப் பார்த்த ஒரு சூப்பர் ஹீரோ தொடர் இருக்கிறது - ‘மாயா மச்சீந்திரா’. கர்ணன், இந்திரனுக்கு தானமாகக் கொடுத்த கவசகுண்டலத்தை மானிடகுலத்தோர் (யோகிகள்) பாதுகாத்து வருகின்றனர். அந்த கவசமும் குண்டலமும் ஒரு சந்தர்பத்தில் சாதாரண மனிதன் (பெயர்: சுயம்பு, கிராமத்தான்) கையில் கிடைக்க அவனுக்கு சூப்பர் பவர்ஸ் கிடைக்கிறது. வாளேந்தி ‘மாயா மச்சீந்திரா’வாக அவதாரம் எடுக்கிறான். With great power there must also come great responsibility. தீய சக்திகளைக் கொண்ட ஒரு மந்திரவாதி வில்லன் மாயாவை அழிக்க நினைக்கிறான், மக்களுக்கு தீங்கு விளைவிக்கிறான். அவனை எதிர்த்து மக்களைக் காப்பாற்ற வேண்டியது மாயாவின் கடமை. மாயாமச்சீந்திராவாக நடித்தவர், நாகேந்திர பிரசாத். புதன்கிழமை தோறும் இரவு 8:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

மற்றுமொரு சூப்பர் ஹீரோ டிவி சீரியல் மாயாவி மாரீசன். ராமாயணத்து மாயமான் மாரீசனை சிறுமி ஒருத்தி சாபத்திலிருந்து காப்பாற்ற அவளுக்கு உதவி செய்ய பூமியிலேயே தங்கிவிடுவார் மாரீசன். இதே கான்செப்டில் ‘பஞ்சாமிர்தம்’ என்று ஒரு படம் கூட வந்தது. ‘மாஸ்டர் மாயாவி மணிகண்டன்’ என்ற பெயரில் மகன் கேரக்டர் ஒன்றை உருவாக்கி இராண்டாம் சீசன் கூட வந்தது!

கர்ணன், மாரீசன் மட்டுமல்ல. மகாபாரதம், ராமாயணத்தை கொஞ்சம் நோண்டினால் ஆயிரம் சூப்பர் ஹீரோக்கள் நமக்கு கிடைப்பார்கள். இந்துக் கடவுள்கள் அனைவருமே சூப்பர் ஹீரோக்கள் தான்.


மாயா மச்சீந்திரா, மாயாவி மாரீசன் இவர்கள் இருவருமே சூப்பர் ஹீரோ சக்திகளைக் கொண்டவர்கள். ஆனால் அப்படி எதுவுமே இல்லாமல், தான் யார் என்பதையே வெளிக்காட்டாமல் ஒரு ஊரெயே காக்கும் ‘பேட்மேன் டைப்’ சூப்பர் ஹீரோ தொடர் ஒன்று தமிழில் உண்டு. அது நாகாவின் மர்ம் தேசத்தில் வந்த “விடாது கருப்பு” (இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய ‘விட்டு விடு கருப்பா’ கதை). ஊருக்கு பயந்தாங்கொள்ளி ராஜேந்திரன். ஆனால் உண்மையில் ஊரைக் காத்து தர்மத்தை நிலைநாட்டும் கருப்பன சாமி. தப்பு செய்தால் தெய்வம் தோன்றும், தண்டனை கொடுக்கும். அது யாராக இருந்தாலும் சரி!
கருப்புங்கிறது சத்தியமான சாமி! நாம நம்பி கூப்பிடா வந்து நிக்கும்!
கருப்பன சாமி தோன்றும் ஒவ்வொரு காட்சியும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள். டைட்டில் மியூசிக்கே அவ்வளவு அற்புதமாக இருக்கும். கதை, திரைக்கதை, வசனம், பின்னனி இசை, ஒளிப்பதிவு, பாத்திரத்தேர்வு, நடிப்பு , எபெக்ட்ஸ் என்று விடாது கருப்பு இன்றும் எனது ஆல் டை பேவரிட். விடாது கருப்பு டிவியில் ஒளிபரப்பான போது ஒரு முறை பார்த்ததோடு சேர்த்து இதுவரை மொத்தம் மூன்று முறை இந்தத் தொடரை நான் முழுதாகப் பார்த்திருக்கிறேன். இன்னொரு முறையும் பார்க்கலாமென்று இருக்கிறேன். விடாது கருப்பு பற்றி தனி பதிவே எழுதலாம். அவ்வளவு விஷயங்களைச் சொல்லியிருப்பார்கள்.

மொத்த சீரியலும் YouTube இல் கிடைக்கிறது. அதிலும் இந்த எப்பிசோடில் (17:00 ஆவது நிமிடத்திலிருந்து) திருவிழாவின் போது கருப்பு தோன்றும் காட்சி! ஆஹா இன்று பார்த்தாலும் எனக்குப் புல்லரிக்கும்… கடவுள் என்று ஒருவர் இருந்தால் நன்றாக இருக்குமே என்று இதைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும்.

ஆனால் இந்தக் கதையில் தான் தான் ஊரைக்காக்கும் சாமி என்பது ஹீரோவிற்கே தெரியாது. ஏனென்றால் அவர் ஒரு மனநோயாளி (Split Personality) ஆனால் ஒரு சூப்பர் ஹீரோவிற்கான அத்தனை விதிகளும் பொருந்தி வந்த அற்புதமான தொடர், விடாது கருப்பு. 

சக்திமான், மாயா மச்சீந்திரா, கருப்பு இவர்கள் யாரும் முகமுடி அணிந்திருக்க மாட்டார்கள். ஆனால் இவர்கள் உண்மையில் யார் என்பது மக்களுக்கு தெரியாது. எப்படிப் பார்த்தாலும் இவர்கள் சூப்பர் ஹீரோக்களே.

மர்ம தேசத்தில் மற்றுமொரு தொடரான இயந்திரப் பறவையில் வரும் ‘ஆசான்’ கேரக்டர் கூட சூப்பர் ஹீரோ கேரக்டர் தான். வர்மக்கலையை முகமூடி போட்டுகொண்டு தவறாகப் பயன்படுத்தும் தனது சிஷ்யனை அதே வர்மத்தால் கொல்லும் கேரக்டர்.

தமிழுக்கு சூப்பர் பவர்ஸ் அல்லாத சூப்பர் ஹீரோ கதை சாத்தியம் என்பதற்கு விடாது கருப்பை விட வலுவான ஆதாரம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

சூப்பர் ஹீரோ?
'கந்தசாமி' படத்தை சூப்பர் ஹீரோ படம் என்று தான் விளம்பரப்படுத்தினார்கள். படமும் கிட்டத்தட்ட ஒரு சூப்பர் ஹீரோ படம் தான். சாதா சூப்பர் ஹீரோ என்பதை விட 'கூட்டு முயற்சி சூப்பர் ஹீரோ' கதை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். அதிலும் இடைவேளையிலேயே முகமுடி கிழிக்கப்பட்டுவிடும் என்பதால், படம் வேறு டிராக்கில் போய்விடும். சூப்பர் ஹீரோ காணாமல் போய் விடுவார்! இந்த படம் பிளாப் ஆனதற்கும் ஏகப்பட்ட காரணங்கள், அதில் முக்கிய காரணம் படத்தை சூப்பர் ஹீரோ படம் என்று விளம்பரப்படுத்தியது!

ஏமாற்றம்!
மேலே சொன்ன அனைத்தும், சூப்பர் ஹீரோவின் இலக்கணம் என்று நான் புரிந்துகொண்டது. அந்த வகையில் ‘முகமூடி’ படத்தில் ஜீவா தான் யார் என்பதை மறைத்து முகமூடி அணிந்து வில்லனை எதிர்த்தார் என்பதற்குகூட ஒரு விளக்கம் இருக்கிறது. 

ஆனால் அது மட்டும் போதும் என்று மிஷ்கின் நினைத்தது தான் முகமூடி தோற்றதற்குக் காரணம். 

தொடரும்...

டிஸ்கி: முகமூடியைப் பற்றி எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.  மன்னிக்கவும். முன்னுரைகள் அவ்வளவு தான். படம் பற்றி மட்டும் தான் இனி. அடுத்து பதிவுகளில் முகமூடியைப் பற்றிய எனது பார்வையை எழுதி விடுகிறேன். 

You Might Also Like

15 comments

  1. அருமை! நான் உங்கள் ப்ளாக்கின் ஒரு புது ரசிகன். முந்தைய பதிவான ’என் தமிழ் சினிமா - ஒரு ரசிகனாக எனது ஆசைகள்...’ மற்றும் இப்பதிவை மட்டும் வாசித்தவன். ரொம்ப அனுபவிச்சு எழுதிறீங்க. பதிவின்னா அது இதான்யான்னு முகத்தில் அறைவது போல் உள்ளது! தங்களது பதிவுகளை பார்த்துதான் என் போன்ற கன்னி பதிவர்கள் முன்னேற வேண்டும்.

    சரி! விசயத்துக்கு வருவம். #தமிழுக்கு ‘சூப்பர் ஹீரோ’ சப்ஜெக்ட் ஒத்துவருமா? நிச்சயம் ஒத்து வரும்# நானும் இதற்கு ஒத்து. அதை தெளிவாக நம் தமிழ் சமூகத்திற்கு ஏற்ப முறையில் காட்ட நம் இயக்குனர்களால் முடியவில்லையா? நான் இன்னும் முகமூடி பார்க்கல!எல்லா ப்ளாக்கும் நாறடிச்சிட்டாங்க! சரி நீங்க என்ன சொல்றீக்கண்ணு பார்க்க வந்தா அது மிஸ்ஸிங். பட் அதை விட பதிவு அருமையாக இருந்தது.அழகாக கட்டுரையை கொண்டு சென்றிருக்கிறீர்கள். சூப்பர் ஹீரோன்னா யார்? அவன் ஏன் ஒளிய வேண்டும்? எனக்கு எல்லா சூப்பர் ஹீரோஸையும் விட Iron man ரொம்ப பிடிக்கும் பிகோஸ் ஒலகத்துக்கு முன்னாடி “யோ! நாந்தான்யா Iron man” என்று தெனாவட்டாக சொல்லும் அந்த கிராக்கு ரொம்ப பிடிக்கும். பட் பாட்மான்,ஸ்பைடர் மான் விடயத்தில் அது சாத்தியமில்லை அதனால்தான் அக்கதைகள் விறுவிறுப்பாக போகின்றன என்பது என் எண்ணம்.

    தடையற தாக்கஐ குறிப்பிட்டது நல்லது. அவனவன் தனக்கென்று காஸ்டியூம் தயாரித்து படம் காட்டிக்கொண்டிருக்க வெறும் கர்ச்சீப்பை கட்டிக்கொண்டு பைட் பண்ணும் ஹீரோ அசத்தல்! அப்புறம் மாயாவி என்னோட முதல் ஹீரோ. ‘முகமூடி வீரர் மாயாவி தோன்றும்’ என்ற வசனத்துக்காகவே உப்புச்சப்பிலாத சில மாயாவி காமிக்ஸ்களை வெறித்தனமாக வாசித்து சேமித்திருந்தேன். #இன்று அந்தக் கடையும் இல்லை. அந்தப் புத்தகங்களும் இல்லை.# சேம் ஃபீலிங்


    கந்தசாமி விடயம் கூட்டாக சூப்பர் ஹீரோ செய்வது தமிழுக்கு புதிதாக இருந்தாலும் இன்ரவெலுக்கு பிறகு மொக்கை அதுவும் கடைசி க்ளைமாக்ஸ் ஸீனில ஒரு ஐடம் ஸாங்கிற்கு பிறகு விக்ரம் வந்து ஷங்கர் படம்போல தத்துவம் பேசுவார். தியேட்டர்ல என்கூட இருந்தவனெல்லாம் அந்த ஐடம் சாங்கிலயே வேற ஃபீலிக்கிற்கு போயிருந்தனர் அதில் அந்த சமூக சீர்திருத்த வசனங்கள் சிவபூசையில் கரடி..!

    இன்னும் குறிப்பிட நிறய விடயம் இருக்கு சக்திமான் அந்தக் காலத்தில் இலங்கையில் யாழ்ப்பாணம் வரை அது எவ்வளவு பெரிய தொடர் தெரியுமா? யாழ்ப்பாணத்தின் அப்போதைய ஒரே சனல் தூதர்சன்.நான் கொஞ்சம் ஹிந்தி தெரிஞ்சதும் அதனால்தான் ஹி...ஹி...

    என்னைப் பொறுத்தவரை காந்தி,அன்னை தெரசால்லாம் சூப்பர் ஹீரோஸ்த்தான். ‘லிங்கன்’ படம் இந்த மாசம் ரிலீஸ் போல... நெஜ சூப்பர் ஹீரோ படம் அதுதான்! எனிவே உங்கள் பதிவுப்பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களோட கருத்துக்கள விளக்கமா சொல்லி இந்த பதிவ நிறைவு பண்ணிட்டீங்க... நன்றி :-)

      எழுதுறதுல கன்னி, கிழவினெல்லாம் எதுவும் இல்ல. எழுதுறது படிக்கும்படியா, சுவாரஸ்யமா இருக்கனும் அவ்வளவு தான். கலக்குங்க...

      Delete
  2. நல்ல அலசல்... பழைய (நடிகர்களையும்) சூப்பர் ஹீரோக்களையும் எதிர்ப்பார்த்தேன்...

    இன்றைக்கு உண்மையான சூப்பர் ஹீரோ : மம்முட்டி அவர்கள்...

    ReplyDelete
    Replies
    1. நான் 90களில் வளர்ந்தவன். அதனால் இவ்ளோ தான் தெரிஞ்சிருக்கு, மன்னிக்கவும் :-)

      மம்மூட்டி தான் ஒரு ஹீரோ என்பதையும் தாண்டி சூப்பர் ஹீரோ என்று நிரூபித்து விட்டார்!

      Delete
  3. இத்தனை தகவல்களுக்கும், அலசல்களுக்கும் எவ்வளவு உழைத்திருக்கிறீர்கள் என்பது எழுத்திலேயே தெரிகிறது.. சுவாரஷ்யம் குறையாத செமத்தியான பதிவு!
    மாயா மச்சீந்திரா பார்த்திருக்கிறேன்.. "விடாது கருப்பு"ஐ ஏன் மிஸ் பண்ணிட்டேன்னு இப்போ வருத்தப் படவேண்டியிருக்கு முகமூடி படம் இன்னும் பார்க்கவில்லை.. உங்க பார்வைக்கு வெயிட்டிங்!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவிலிருந்து முகமூடி அலசல் தான்... சும்மா ஒரு பதிவுல 'நல்லா இல்ல'னு மட்டும் சொல்லிட்டு போயிட விரும்பல.. பார்ட் பார்ட்டா பிரிச்சு பாத்துரதுனு முடிவு பண்ணிட்டேன் :-)

      Delete
  4. //விதவிதமான வில்லன்கள் பூமியை (இந்தியாவை) அழிக்க வருவார்கள் (அவர்களுக்கு இங்கு ஒரு லீடர் உண்டு, பெயர் மறந்து விட்டது)//
    அவர் பேரு தம்புராஜ் கில்விஷன்... ஏன்னா எங்க ஸ்கூல் ல தம்புரஜ்னு ஒரு சார் இருந்தாரு.... ஹி ஹி

    நண்பர் JZ சொன்ன முதல் இரண்டு வரிகளை வழிமொழிகிறேன்...

    ReplyDelete
  5. நல்ல பதிவு ..

    //அவர்களுக்கு இங்கு ஒரு லீடர் உண்டு
    தம்ராஜ் கில்விஷ். இருள் நீடிக்கிறது . எப்படி மறக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. 'தம்புராஜ்' - இந்தப் பேர மறந்தது கூட பரவாயில்ல... "இருள் நீடிக்கிறது" - இத எப்படி மறந்தேன், what a bad memory mama...

      Delete
  6. லீடர் தம்ராஜ் கில்விஸன்,டாக்டர் ஜெகோல்....
    அதுசரி சில சூப்பர் ஹீரோக்கள் இங்கே நம்முடன் இருந்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனைசெய்திருக்கின்றேன்....ஸ்பைடெர் மான் தாவுவதற்கு யாழில் அவ்வளவு பெரிய கட்டிடங்கள் இல்லை இந்தியாவிலும் நகர்ப்புறத்தைத்தவிர கிராமப்புறத்தில் இருந்திருந்தால் பாவம் அவர் மரத்திற்கு மரம் தாவியிருப்பார்...

    ReplyDelete
    Replies
    1. கிராமத்து சூப்பர் ஹீரோன்னா அது நம்ம 'கருப்பு' மட்டும் தான். வல வுடுறது, அங்க இங்க தாவுறதுதெல்லாம் சிட்டிக்கு தான். கிராமத்தில் எல்லாம் அருவா ஒன்லி :-)

      Delete
  7. முகமூடிப் பதிவுக்கு இன்ட்ரோ எல்லாம் பலமாக இருக்கிறதே நண்பா??? வெயிட்டிங். அருமையாக எழுதியிருக்கிறீங்க. :)

    எந்த மர்மதேச தொடரையும் முழுதாகப் பார்த்து முடிக்கவில்லை. :( மூன்றுமே அரைகுறையாக விட்டது தான். அண்மையில் ஒரு கடையில் முழுத் தொடரும் டிவிடியாக கண்டேன். எடுத்துப் பார்க்கணும். :)

    ReplyDelete
    Replies
    1. இயந்திரப் பறவைன்னு ஒரு தொடர் கொஞ்சம் பார்த்த ஞாபகம். செமயா இருக்கும். உங்களுக்கு அந்த தொடரின் லிங்க் தெரியுமா?

      Delete
    2. மர்ம தேசத்தில் வந்த எல்லா தொடருமே அருமையாக இருக்கும். அதிலும் விடாது கருப்பு தி பெஸ்ட்! இயந்திரப் பறவை முழுதாக எங்குமே இல்லை. சில எப்பிசோட்கள் இருக்கும் லின்க் இதோ - http://blog.techsatish.net/2012/03/enthira-paravai-serial-index.html

      Delete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...