ஆதலால் காதல் செய்வீர்... 04

12:12:00 PM


ஆதலால் காதல் செய்வீர்...  0102, 03


அமுதா - 02

“என்ன சொல்றார் மிஸ்டர்.கிஷோர்? இந்த முறையும் கண்ணீர் காவியம் தானா?” அமுதா முறைப்பதைப் பொருட்படுத்தாமல் சிரித்துக் கொண்டே கேட்டான் பாஸ்கர்.

“உங்களுக்கு என்ன பாத்தா கேனச்சி மாத்தி இருக்கா?”

“இல்லையே... ஏன், என்னாச்சு?”

“உங்களுக்கெல்லாம் என்ன பாத்தா நக்கலா போச்சு”

“இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இவ்ளோ கோபப்படுற? ரிலாக்ஸ்… கேஸ் எந்த லெவல்ல இருக்குனு தெரிஞ்சிக்க கேட்டேன். தப்பா?”

“கேஸ் என்ன ஆச்சுனு நேரடியா கேட்கவேண்டியது தான? மிஸ்டர் கிஷோர் மயிரெல்லாம் எதுக்கு உங்களுக்கு”

“அடிப்பாவி... என்ன மயிருகியிருனெல்லாம் பேசுற?”

“என்னது ‘டி’ யா?”

“ஐய்யையோ, வேண்டாம்டா சாமி! நேரடியா, தெளிவா கேக்குறேன். கேஸ் என்னம்மா ஆச்சு?”

“வழக்கம்போல தான். வாய்தா... அடுத்த மாசம் மறுபடியும் போகனும்”

“புது வக்கீல். எஃப்பீஸியண்ட்... அது இதுனு சொன்ன”

“ஆமா சொன்னேன். என்னை என்ன பண்ணச் சொல்றீங்க?”

“ஹும். சரி இந்த வீக் எண்ட் எங்க வீட்டுக்கு வாங்க”

“வாராவாரம் வந்துக்கிட்டு தான இருக்கேன். இதுல என்ன இருக்கு புதுசா?”

“நீ வர்ற சரி. இந்த தடவ உங்க அப்பா அம்மாவையும் கூட்டிட்டு வா”

“முதல்ல நீங்க உங்க அப்பா அம்மாவ எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க. அப்புறம் நான் கூட்டிட்டு வர்றேன்”

“நான் தான் மொதல்ல கேட்டேன். அண்ட், உனக்கே தெரியும் அப்பாவுக்கு முன்னமாதிரி இல்ல. உடம்பு அடிக்கடி சரியில்லாம போகுது. அம்மா வேற கவலைல இருக்காங்க”

“இந்த நிலைமைல நான் உங்க வீட்டுக்கு வந்தா நல்லாவா இருக்கும்? அம்மாவுக்கு தான் கஷ்டம்”

“கஷ்டமெல்லாம் ஒன்னுமில்ல. அம்மா சந்தோஷம் தான் படுவாங்க. வேணும்னா கொஞ்ச நேரம் வீட்ல பேசிட்டு இருந்துட்டு, வெளிய எங்கயாவது போகலாம். ம்ம்ம்... ரெஸ்டாரண்ட்! என்ன சொல்ற”

“ரெஸ்டாரெண்டெல்லாம் வேண்டாம்... கோவிலுக்கு போலாம்”

“சரி கோவிலுக்கு போய்ட்டு அப்படியே ரெஸ்டாரெண்ட்ல டின்னர் முடிச்சிக்கலாம்”

“ஓக்கே... ப்ளான்ல எதுவும் சேஞ்சஸ் இருக்காதே. எல்லாரும் கிளம்பி ரெடியா இருக்கும் போது. நாங்க வெளிய போறோம் நீ வராதனு போன் பண்ணக்கூடாது”

“அதெல்லாம் ஒன்னும் பண்ணமாட்டேன். ப்ளான் கன்பார்ம்ட்”

அந்த வாரம் முழுவதும் இந்த ‘ப்ளான்’ பற்றிய பேச்சாகவே இருந்தது. இருவருக்குள்ளும் நிச்சயமான முடிவு எதுவுமில்லை என்றாலும், தங்களது பெற்றோர்கள் சந்திப்பதை இருவருமே விரும்பினர். அமுதாவிற்கு இப்படியானதொரு ‘மீட்டிங்’ நிச்சயம் தேவைப்பட்டது. தன் தாய் தந்தையரது மனவருத்தங்கள் இதனால் நிச்சயம் குறையுமென்று நம்பினாள். இடையில் ஒரு நாள் பாஸ்கரது அம்மாவே போன் செய்து அழைத்துவிட்டதால் அமுதாவை கையில் பிடிக்க முடியவில்லை. ‘வரமட்டேன்’ என்று சொன்ன தன் அப்பாவையும் ‘என் வாழ்க்கை’ அது இதுவென்று பேசி சம்மத்திக்க வைத்தாள். அந்த நாளும் வந்தது. அமுதா தன் அப்பா அம்மா சகிதம் பாஸ்கர் வீட்டிற்கு ஆட்டோவில் வந்திறங்கினாள்.

பாஸ்கர் உள்ளேயே நிற்க, வாசலுக்கு வந்து கதவைத் திறந்து வரவேற்றார் பாஸ்கரின் அம்மா. உள்ளே படுத்திருந்தார் பாஸ்கரின் அப்பா. இவர்கள் உள்ளே வந்ததும் மெதுவாக எழுந்து வந்தார். நலம் விசாரிப்புகள், சிரிப்புகள் முடிந்து என்ன பேசுவதென்பது தெரியாமல் இருந்த சமயம் ‘காஃபி’ எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று பாஸ்கரின் அம்மா உள்ளே சென்று விட்டார். அப்பா எதுவும் பேசாமல் இருக்க பாஸ்கர் ஆரம்பித்தான்.

“ஒரு அரைமணி நேரத்துல கோவிலுக்கு கெளம்பிரலாம். லேட் ஆச்சுன்னா கூட்டம் அதிகமா இருக்கும்”

“ம்” அமுதா தான் தலையசைத்தாள்.

“ரெண்டு ஆட்டோ எடுத்துக்கலாம்” என்று பாஸ்கர் சொல்ல “நான் வரல” என்று அவனது அப்பாவிடமிருந்து பதில் வந்தது. “சரி அப்போ நானும் அம்மாவும் பைக்ல வந்துற்றோம்” என்றான் பாஸ்கர். பாஸ்கரது அப்பாவின் பதில் அமுதாவின் பெற்றோர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தினாலும், அவரது உடல் நிலையையும், அதற்கு மேலாக ஏதாவது சொல்லப்போய் அதனால் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அமுதாவின் பேச்சையும் மனதில் கொண்டு எதுவும் பேசாமல் மௌனம் காத்தனர். “அப்பா வரவில்லை என்று சொன்னதற்கு பாஸ்கர் ஏன் எதுவும் சொல்லவில்லை” என்ற நினைப்பு அமுதாவின் மனதிலும் எழுந்தது. பிறகு தனியாகக் கேட்டுக் கொள்ளலாம் என்று அமைதியானாள்.

காப்பி குடித்து விட்டு இருபது நிமிடத்திலேயே கோவிலுக்குக் கிளம்பிவிட்டனர். கோவிலில் கூட்டம் அதிகமில்லை என்பதால் சீக்கிரமே பிரகாரத்தைச் சுற்றிவிட்டு ஒரு இடத்தைப் பார்த்து உட்கார்ந்தனர். பாஸ்கரின் அம்மா அமுதாவின் நெற்றியில் குங்குமமிட்டு ‘என் வீட்டு மஹாலட்சுமி’ என்று வாழ்த்தினார். அமுதாவே இதை எதிர்பார்க்கவில்லை. நீண்ட நாள் மறைந்திருந்த வெட்கம் இன்று சந்தோஷத்துடன் கலந்து தானாகவே வெளிவர, தலை குனிந்து, சிரித்து ‘தாங்க்ஸ் ஆண்டி’ என்றாள். அமுதாவின் தாய் புடவை தலைப்பால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை. அதுவரை எல்லாம் சரியாகவும் சந்தோஷமாகவும் தான் நடந்து கொண்டிருந்தது.

“அப்போ கிளம்பலாமா” பாஸ்கர் கேட்க “வீட்டுக்கு தான” என்று கேட்டார் அவரது அம்மா.

“இல்லம்மா ஹோட்டலுக்கு, சொல்லிதான கூட்டிட்டு வந்தேன்” அமுதா தன்னை முறைப்பதை பாஸ்கர் கவனிக்கத் தவரவில்லை.

“எப்போடா சொன்ன? வீட்ல அப்பா தனியா இருக்கார். அவருக்கு யார் சாப்பாடு கொடுப்பா? அமுதாம்மா நீங்களும் எங்க வீட்லயே சாப்பிடலாம் பரவாயில்ல. எதுக்கு ஹோட்டல் ஹீட்டல்லெல்லாம் சாப்பிட்டுகிட்டு”

"இல்ல... இல்லங்க இன்னொரு நாள் வர்றோம். இன்னிக்கி வேண்டாம்" நல்ல விதமாகத் தான் பதிலளித்தார் அமுதாவின் அம்மா. ஆனால் பாஸ்கரின் அம்மா என்ன நினைத்தாரோ தெரியவில்லை சொல்லியிருக்கக்கூடாத வார்த்தைகளை சொல்லிவிட்டார் "இன்னிக்கி என்ன வந்துச்சு அமுதா அம்மா, இன்னிக்கி வந்தா சாப்பாடு போடமாட்டேன்னா சொன்னேன்" சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டார்.

அதுவரை அமைதியாக இருந்த அமுதாவின் அப்பா விருட்டென்று எழுந்தார் "போலாம்!" மகளையும் மனைவியையும் பார்த்தார். பாஸ்கருக்கு நிலைமை சுரீரென்று உறைத்தது. ஏதோ சொல்ல வந்தவன் அமுதாவைப் பார்த்தான். அதிர்ச்சியிலிருந்து அமுதா மீளவில்லை. இந்த நேரத்தில் தன் அப்பாவிடம் எதுவும் பேச முடியாது என்று அவளுக்குத் தெரியும். தான் உபயோகித்தது கொஞ்சம் தவறான வார்த்தைகள் என்பதை பாஸ்கரின் அம்மா உணர்ந்திருந்தாலும், எதுவும் பேசாமலே நின்றிருந்தார்.

"சோத்துக்கு இல்லாம நாம என்னமோ வீடு வீட போய்க்கிட்டு இருக்குற மாதிரியில்ல அந்த அம்மா பேசுது. எப்படி இருக்கு என்ன பார்த்தா எல்லாருக்கும்? அந்த ஆளு என்னடான்னா வீட்டுக்கு வந்தவங்கள 'வா' னு கூட கூப்பிடல, இந்த பாஸ்கர் என்னடான்னா வீட்ட விட்டு வெளிய கூட்டிட்டு போறதிலேயே குறியா இருந்தான். நீ என்ன சொல்லி என்ன கூட்டிட்டுப் போன?" அமுதா வெகு நாட்களுக்குப் பிறகு தன் தந்தை கோபப்பட்டுப் பார்த்தாள்.

"நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அந்த ஆளுக்கு இவ்ளோ கோவம்? அந்த ஆளுக்ளே சரியில்ல" பாஸ்கர் வீட்டிலும் சத்தம் அதிகமாகத்தான் இருந்தது.

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...