Taegukgi - The Brotherhood of War | South Korea | 2004

11:53:00 AM


1950 களில் தென் கொரியாவிற்கும், வட கொரியாவிற்கும் நடந்த போரின் கொடூரத்தை விளக்கும் பல படங்களை கொரியர்கள் எடுத்துத் தள்ளியுள்ளனர். அதில் முக்கியமானதாகக் கருதப்படும் படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சக்கைபோடு போட்ட The Brotherhood of War என்னும் தென்கொரிய திரைப்படம். நான் ஏற்கனவே எழுதியிருந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 71: Into the Fire திரைப்படமும் இந்தப் போரை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான். வடகொரிய படைகளை 11 மணிநேரம் முன்னேற விடாமல் தடுத்து நாட்டிற்காக உயிர் நீத்த 71 மாணவர்களின் சாதனையைப் பற்றியது அந்தப் படம். இந்தப் படம் தாய் நாட்டிற்காக போருக்குச் சென்ற அண்ணன் தம்பி இருவரைப் பற்றியது. போரின் கோர முகத்தை சரியான விகிதத்தில் காட்டிய வெகு சில படங்களில் இந்தப் படமும் ஒன்று. சிறுவனான தன் தம்பியை போர் சூழலில் இருந்து காப்பாற்றி வீட்டிற்கு அனுப்புவதற்காக தன் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு அண்ணணின் பாசம் தான் இந்தப் படத்தின் கரு.

ஜின் சியோக் (Jin-Seok) கல்லூரிக்குச் செல்லும் மாணவன். அவனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, தன் படிப்பை விட்டு விட்டு ‘சூ பாலிஷ்’ செய்து சம்பாதிப்பவன் ஜின் சியோக் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன் ஜின் டே லீ (Jin-Tae Lee), கணவன் இறந்த துக்கத்தால் வாய் பேச முடியாமல் இருந்தாலும் தன் பிள்ளைகளுக்காக கடினமாக உழைக்கும் தாய், பெற்றோர்கள் இல்லாமல் இவர்களையே நம்பி, தன் தம்பி தங்கையருடன் வந்து வாழ்ந்துகொண்டிருக்கும் ஜின் டேவை திருமணம் செய்யப்போகும் யங் சின் (Young Shin). கஷ்டப்படும் சூழ்நிலையிலும் சந்தோஷமாக வாழும் இந்தக் குடும்பத்திற்கு ‘போர்’ அறிவிப்பு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. நெருங்கி வரும் எதிரிப் படையை எதிர்கொள்ள போதிய வீரர்கள் இல்லாத காரணத்தினால் 18 முதல் 30 வயது வரையிலான அனைத்து ஆண்களையும் வலுக்கட்டாயமாக போரிட அழைக்கிறது தென்கொரிய ராணுவம். போர் சூழல் காரணமாக ஊரையே காலி செய்து புலம்பெயரும் சமயத்தில் ராணுவம் 18 வயதான தம்பி ஜின் சியோக்கை வலுக்கட்டாயமாக இழுத்து ரயிலில் ஏத்திவிடுகிறது. மருந்து வாங்க கூட்டத்திற்குள் சென்றிருந்த ஜின் டே, திரும்பி வந்து தன் தம்பியை மீட்க ரயிலில் ஏறுகிறான். “தம்பி சிறுவன், அவனுக்கு உடல் நலம் சரியில்லை, நான் போருக்கு வருகிறேன்” என்று ஜின் டே எவ்வளவு கூறியும் தம்பியை ராணுவம் விட முறுப்பதால் கைகலப்பாகிவிடுறது. இறுதியில் அண்ணன் தம்பி இருவரையும் ராணுவம் அழைத்துச் சென்று விடுகிறது.

இவர்கள் பங்குகொள்ளும் முதல் சண்டையிலேயே ஜின் சியோக்கிற்கு காயம் ஏற்பட இதயதக் கோளாறு காரணமாக மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. தம்பியைக் காப்பாற்றும் ஜின் டே, உயரதிகாரிகளிடம் தன் தம்பி உடல் நலக் குறைவு உடையவன் என்றும், அவனுக்கு பதில் மற்றவர் செய்யத் தயங்கும் எந்த வேலையையும் தான் செய்யத் தாயார் என்றும் தன் தம்பியை மட்டும் விடுவிக்கும்படி மன்றாடுகிறான். நாடு போரில் இருக்கும் போது உடல் ஊனமுற்றவர்கள் மட்டுமே போருக்கு தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள். உடல் நலக்குறைவை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்துவிடுகிறது ராணுவத் தலைமை. சிறு ஆறுதலாக, ராணுவத்தில் சிறப்பாகப் பணியாற்றினால் கொடுக்கப்படும் ‘மெடல் ஆஃப் ஹானர்’ பதக்கத்தை ஜின் டே வாங்கினால் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் படும் என்கிறார்கள். அந்த நிமிடம் முதல் அந்த பதக்கத்தை வாங்குவதற்காக ஜின் டே செய்யும் காரியங்களும் அதனால் அண்ணன் தம்பி இருவரைச் சுற்றி நடக்கும் சம்பவங்களே கதை.

அடுத்தடுத்து நடக்கும் சண்டைகளில் தனியாளாக பல சாதனைகளை நிகழ்த்தி தென் கொரிய படைக்கு வெற்றியைத் தேடித் தரும் ஜின்-டே ஒரு ஹீரோவாகக் கொண்டாடப் படுகிறான். பணி உயர்வும் அளிக்கப்படுகிறது. தம்பி ஜின்-சியோக்கிற்கு முதலில் அண்ணன் தனக்காகத் தன் உயிரை இப்படி ‘ரிஸ்க்’ எடுக்கிறான் என்று வேதனைப்பட்டாலும் நாளடைவில் அண்ணனது ராணுவச் செயல்பாடுகளாலும் அவனுக்குக் கிடைக்கும் வரவேற்பாலும் தன்னை விட்டு அவன் வெகுதூரம் விலகிச் செல்வதாக நினைக்கிறான். அனைவரும் தன்னைக் கொண்டாட வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவே ஜின் டே இப்படி நடந்துகொள்கிறான் என்று எண்ணுகிறான். ஆனால் ஜின் டேயின் ஆசை அன்றிலிருந்து இன்று வரை ஒன்றாகத் தான் இருக்கிறது. “தன் தம்பியை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்பது தான் அது.

இப்படியாகப் போய்க்கொண்டிருக்கும் கதையில் ஒரு முறை வடகொரிய வீரர்கள் சிலரை கைதிகளாகப் பிடிக்கிறது ஜின்-டே தலைமையிலான படை. அந்தக் கைதிகளில் ஒருவன் ஜின்-சியோக்கின் நண்பன். ஜின்-டேவிற்கும் அவனை நன்றாகத் தெரியும். ஆனால் இப்பொழுது படைக் குழுவின் தலைமை பொறுப்பில் இருப்பதால் பிடிபட்ட எதிரிகளை கொல்லத் துணிகிறான் ஜின் டே. ஜின் சியோக் கத்திக் கதறி, மிரட்டி ஒரு வழியாக தன் நண்பன் உயிரை தற்காலிகமாக காப்பாற்றுகிறான். அந்த நண்பன் மூலம் தன் தாய் புலம் பெயராமல் இவர்கள் வருகைக்காக ஊரிலேயே காத்திருக்கிறாள் என்பதையும், இவனும் வேறு வழியில்லாமல் தான் எதிரிப்படையில் சேர்ந்திருக்கிறான் என்பதையும், அவனது அண்ணியான யங் சின்னும் எதிரிகளை ஆதரிக்கும் கூட்டங்களுக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் தான் பிழைத்துவருவதையும் அறிந்து கொள்கிறான். அடுத்தடுத்து எதிரிப்படை நடத்தும் தாக்குதல்களால் ஏற்படும் குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு கைதிகள் வீரர்களை கொல்ல ஆரம்பிக்க, ஒன்றும் செய்யாமல் நிராயுதபாணியாக நிற்கும் ஜின் சியோக்கின் நண்பனையும் சேர்த்து சுட்டுக் கொன்றுவிடுகிறான் ஜின் டே.

தன் நண்பனின் மரணத்தால் பெரும் கோபம் கொள்ளும் ஜின் டே, தன் அண்ணனை ‘கொலைகாரன்’ என்று அழைக்கிறான். அவனை வெறுத்து ஒதுக்குகிறான். அடுத்து நடக்கும் பெரும் சண்டை ஒன்றில் மீண்டும் தன் உயிரைப் பணயம் வைத்து, கூட இருப்பவனது உயிரையும் காவு கொடுத்து, எதிரிப் படைத் தளபதியைக் கைது செய்கிறான் ஜின் டே. இந்த வீர தீர செயலால் அவனுக்கு ‘மெடல் ஆப் ஹானர்’ பதக்கம் கிடைக்கிறது. சொன்னது போலவே ஜின் சியோக்கை விடுவிக்கவும் சம்மதிக்கிறது மேலிடம். ஆனால் அடுத்தவர் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் ரத்தவெறி பிடித்து ஆடும் தன் அண்ணனைப் பிடிக்காமல் தன் தாயைத் தேடிச் செல்கிறான் ஜின் சியோக். தன் தாயைக் காணும் ஜின் சியோக்கின் கண்முன்னே யங் சின் “எதிரிக்கு உதவியவள்” என்று குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்படுகிறாள். அதைத் தடுக்கும் ஜின் சியோக்கும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறான்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் ஜின் சியோக் காவலாளியைக் கொன்று தப்பி வெளியே வர, அங்கே போர்க் குற்றம் புரிந்தவர்களை வரிசையாக நிற்க வைத்து சுட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டதில் யங் சின்னின் தலையிலும் துப்பாக்கி வைக்கப்பட, சரியான சமயத்தில் ஜின் சியோக்கும், ஜின் டே அந்த இடத்திற்கு வருகிறார்கள். யங் சின் எதிரிகள நடத்திய பிரசாரத்தில் கலந்து கொண்டதால் போர்க்குற்றம் சுமத்தப்படுள்ளதாக கூறுகிறார்கள் காவலாளிகள். தான் ஒரு தென் கொரிய போர் வீரன் என்றும் யங் சின்னை விட்டு விடும் படியும் கேட்கிறான் ஜின் டே. ஆனால் போர்க் குற்றவாளிகளுக்கு உதவுவதும் குற்றம் தான் என்று கூறி தாக்குகின்றனர் காவலாளிகள். அங்கு நடக்கும் சண்டையில் குண்டடிபட்டு ஜின் டேவின் மடியில் இறக்கிறாள் யங் சின். அண்ணன் தம்பி கைது செய்யப்படுகிறார்கள். தம்பியை சிறை வைத்துவிட்டு, அண்ணனை விசாரணை செய்கிறார்கள். ‘மெடல் ஆப் ஹானர்’ பதக்கத்தைக் காட்டும் ஜின் டே, தன் தம்பியை விடுவிக்கும்படி கேட்கிறான். ஆனால் மறுக்கிறான் இங்கிருக்கும் தலைமை அதிகாரி. கோபமடையும் ஜின் டே உயர் அதிகாரியைத் தாக்கி, தன் தம்பியை விடுவிக்கும் ஆணையைப் பிறப்பிக்கும்படி சொல்கிறான். அதற்குள் எதிரிகள் தாக்க ஆரம்பிக்க பிடித்து வைத்திருக்கும் போர்க்கைதிகளை எரித்துக்கொன்று விடும்படி ரேடியோவில் ஆணையிடுகிறான் அதிகாரி. அவனை அடித்துத் துவைத்துவிட்டு தன் தம்பியைத் தேடி ஓடுவதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது. மொத்தக் கூடமுமே சாம்பலாகக் கிடக்கிறது. அங்கு தான் தன் தம்பிக்கு கொடுத்த பேனாவைக் கண்டெடுக்கிறான் ஜின் டே. அடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகளால் காயமுற்று பித்து பிடித்தவனாக ரோட்டிற்கு வந்து மயங்கி விழுகிறான் ஜின் டே.

அடுத்தக் காட்சியில் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் ஜின் சியோக்கைக் காண்கிறோம். ஜின் டேயின் படைவீரர்களால் எரியூட்டப்படுவதற்கு முன் காப்பற்றப் பட்டிருக்கிறான் ஜின் சியோக் என்பதை அறிகிறோம். சக படை வீரன் ஒருவன் ஜின் டே என்ன ஆனான் என்பதே தெரியவில்லை என்று இவனிடம் சொல்ல, தன் அண்ணியின் இறப்பிற்கு காரணமானவன் ஜின் டே என்றும் அவன் எக்கேடு கெட்டுப் போனாலும் கவலையில்லை என்றும் கூறுகிறான். ஜின் டே தன் தாய்க்கு எழுதிவிட்டுப் போன கடிதம் ஒன்று இவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதனை அப்போது படிக்க மறுக்கிறான் ஜின் சியோக். அப்போது தென் கொரிய ராணுவம், ஜின் டே வட கொரியப் படையில் சேர்ந்து விட்டதாகவும், “கொடிப் படை” தளபதியாக பொறுப்பேற்று பல நூறு தென் கொரிய வீரர்களை கொன்று குவித்துக்கொண்டிருப்பதாகவும் கூறுகிறது. ரத்த வெறி பிடித்த தன் அண்ணனுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுகிறான் ஜின் சியோக். ஆனால் தனிமையில் தன் அண்ணனின் கடிதத்தைப் படிக்கும் ஜின் சியோக் தான் இறந்து விட்டதாக நினைத்து ஒட்டு மொத்த தென் கொரியாவையும் பழிவாங்கவே வடகொரிய படையில் தன் அண்ணன் சேர்ந்துள்ளான் என்பதை அறிகிறான். எப்படியாவது தன் அண்ணனைக் காப்பாற்றி விட வேண்டுமென்று மீண்டும் படையில் சேர்ந்து, எதிரிகளிடம் சரணடைகிறான். முதலில் ஒற்றன் என்று சந்தேகப்படும் எதிரிகள் பின் ஜின் டே வை சந்திக்க அனுமதிக்கின்றனர்.

அதற்குள் போர் தீவிரமடைய, மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தன் அண்ணனை சந்திக்கிறான். ஆனால் ஜின் டேவோ தன் வாழ்வின் ஆதாரமான தன் தம்பி ஜின் சியோக்கும், தன் மனைவி யங் சின்னும் கொல்லப்பட்டதால் வெறிபிடித்த மிருகமாக மாறிப் போயிருக்கிறான். கண்ணில் படும் தென் கொரியர்களையெல்லாம் கொன்று குவிக்கிறான். அவனால் தன் சொந்த தம்பியையே அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அவனது மனன் அவ்வளவு பாதிப்படைந்திருக்க்கிறது. தனது தம்பியையே மூர்க்கமாகத் தாக்குகிறான். வேறு வழியில்லாமல் திருப்பித் தாக்கும் ஜின் சியோக், அவனை அடக்கி தான் இறக்கவில்லை என்று புரியவைக்கிறான். பித்தம் தெளிந்து பெருமகிழ்ச்சியடையும் ஜின் டே, அங்கும் தன் தம்பியைக் காபாற்ற வேண்டும் என்றே நினைக்கிறான். “நான் நிச்சயம் திரும்பி வருவேன். நீ அம்மாவுடன் போய் பத்திராமாக இரு” என்று அனுப்பிவைக்கிறான். “நிச்சயம் வர வேண்டும்” என்று சத்தியம் வாங்கிக்கொண்டு திரும்பிச் செல்கிறான் ஜின் சியோக். தம்பி செல்வதை காணும் ஜின் டே, அவனை பத்திரமாக அனுப்பிவைக்கும் பொருட்டு ஒரு பெரிய துப்பாக்கியை எடுத்து தனது படையை நோக்கி சுட ஆரம்பிக்கிறான். இதைப் பார்க்கும் மற்ற வீரர்கள் ஜின் டேவை சராமாரியாகச் சுட, சல்லடையாய் துளைக்கப்பட்டு கீழே விழுகிறான் ஜின் டே.

முற்றிலும் சேதமடைந்திருக்கும் தனது ஊரில் தன் தாயுடன் சேரும் ஜின் சியோக், தான் கல்லூரிக்கு போட்டுக் கொண்டு போக அண்ணன் பாதி செய்து வைத்திருக்கும் ஷூவைக் காண்கிறான். பல வருடங்களுக்குப் பிறகு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஜின் டே உடலின் மீதத்தைக் கண்டுபிடித்து ஜின்சியோக்கிற்கு தகவல் தெரிவிக்கிறார்கள். நிச்சயம் திரும்பி வருவதாகச் சொன்ன தன் அண்ணனைப் பார்த்து கதறி அழுகிறான் ஜின் சியோக். படம் நிறைவடைகிறது.

மற்ற படங்களைப் போல் இல்லாமல் இந்தப் படத்தின் மொத்தக் கதையையும் நான் சொல்லக் காரணம் இந்த படம் எனக்கு ஏற்படுத்திய பாதிப்பு தான். உண்மையில் இது தான் 'அண்ணன்மார்களின்' கதை.

Taegukgi என்னும் சொல் கொரிய கொடியைக் குறிக்கிறது. அரசியல் காரணங்களால் உருவாகும் போர்கள், இனக்கொலைகளாக மாறி எப்படி ஒரு சாமானியனுக்கும் பேரிழப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்தப் படம் சரியான உதாரணம். சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்திருக்க வேண்டிய இந்த அண்ணன் தம்பிகள் போரினால் தங்கள் வாழ்க்கையையே இழப்பது சோகத்தின் உச்சக்கட்டம். Saving Private Ryan படத்தின் சாயல்கள் ஆங்காங்கே தெரிந்தாலும் அவையெல்லாம் தவிற்க முடியாதவையே.

எனக்கும் ஒரு தம்பி இருக்கிறான். அவனுக்காக இதை விடவும் நான் செய்வேன் என்பது எனக்குத் தெரியும். அவனுக்கும் தான்...  

You Might Also Like

2 comments

  1. //எனக்கும் ஒரு தம்பி இருக்கிறான். அவனுக்காக இதை விடவும் நான் செய்வேன் என்பது எனக்குத் தெரியும். அவனுக்கும் தான்... //

    அழகான வரிகள், கொரிய படம் அனைத்தும் ரத்தம் அதிகமாகத்தான் இருக்கும் ஆனால் அதில் சொல்லப்படும் மனித உணர்வுகளின் வெளிப்பாடு பல சமயங்களில் நம் தூக்கத்தை கெடுக்கும் உதாரணமாக கிம் கிடு டுக் படங்கள்.

    ReplyDelete
  2. @ராஜகோபால்: வருகைக்கு நன்றி நண்பரே... ஏனென்று சொல்லத் தெரியவில்லை கிம் கி டுக் படங்களுக்கு நான் பெரிய விசிறி கிடையாது :-) அவர் எடுத்தவை அல்லாத பல நல்ல கொரிய திரைப்படங்கள் உள்ளன. ஒவ்வொன்றாக எழுதுகிறேன்.

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...