தி மம்மி ரிட்டன்ஸ் | தமிழ் நாடு | 2011

11:23:00 PM

டிஸ்கி 1: இதைப் போன்றதொறு பதிவு எழுத வேண்டும் என்று பல நாள் கை பரபரத்துக்கொண்டிருந்தாலும், ரிசல்ட் வரட்டும் என்று தான் காத்துக்கொண்டிருந்தேன். இந்தப் பதிவு யாரையும் தாக்கிப் பேசுவதற்காகவோ, ஆதரித்து அணைப்பதற்காகவோ இல்லை. தமிழகத்தின் பிரஜையான, ஜனநாயக உரிமையுள்ள இந்த நாட்டின் குடிமகனான எனது தனிப்பட்ட கருத்துகளின் தொகுப்பே.

கிட்டத்தட்ட மன்னராட்சி காலம் தான் திரும்பி நடைமுறைக்கு வரப்போகிறது என்று தான் போன வருடம் வரை தமிழகமே நினைத்திருந்தது. ஆனால் இன்று நடந்திருப்பதோ தலைகீழ். 60 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள, இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், அரசியலில் சாணக்கியர் என்று பாராட்டப்பட்டவர் துக்ளக்கின் கணக்குப்படி வீழ்ந்திருக்கிறார். நாலும் நமதே நாற்பதும் நமதே என்றெல்லாம் கில்லியாக சொல்லியடித்தவர் இன்று தமிழக மக்கள் எனக்கு ஓய்வு அளித்துள்ளனர் என்று அமைதியாகக் கூறிவிட்டு தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தமிழக வரலாற்றில் மாபெரும் அரசியல் அத்தியாயம் ஒன்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த முதல்வர் என்று நினைத்திருந்தவர், உங்கள் காலில் விழுந்து ஓட்டு கேட்கிறேன் என்று மன்றாடி ஓட்டு சேகரித்தவர் இந்தப் பதிவு எழுதிக்கொண்டிருக்கும் போது "தோற்றுவிட்டார்!" என்று அறிவிக்கப்பட்டிருந்தார். எழுதி முடிபதற்குள் "இல்லை, இல்லை ஜெயித்துவிட்டார்" என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். தோற்ற ஒருவருக்கு கடை நேரத்தில் 'பிட்' கொடுத்து பாஸ் பண்ண வைப்பது தமிழகத்திற்கு புதியதில்லை தான். குடிகாரன், அரசியல் அனுபவம் இல்லை, கூட்டத்தில் பேசத் தெரியவில்லை, சொந்த கட்சியின் வாக்காளர் பெயரே தெரியவில்லை, கூட்டணிக் கட்சிகளை மதிக்கவில்லை என்றெல்லாம் சராமாரியாக குற்றம் சுமத்தப்பட்டு, மேடை மேடையாக அவமானப்படுத்தப்பட்டவர், இன்று மூன்றாம் பெரும் கட்சி நிலையிலிருந்து முன்னேறி, ஆளும் கட்சியின் கூட்டணியை விட தனிக்கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவராகும் நிலையை அடைந்திருக்கிறார். சென்ற முறை தனியாளாக சட்டமன்றம் சென்றவர் இன்று எதிர்கட்சித் தலைவர்! கடந்த ஐந்து ஆண்டு காலம் எங்கிருந்தார் என்றே தெரியாத முன்னால் எதிர்கட்சி தலைவர், இன்று கூட்டணிக் கட்சிகளின் தயவில்லாமலே தனிப் பெரும் ஆட்சி அமைக்குமளவிற்கு வரலாறு காணாத மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

எம்.ஜி. ஆருக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட நீயா நானா ஆட்டம் முடிவிற்கு வராமல் தொடர ஆரம்பித்திருக்கிறது. என்ன நடக்கிறது தமிழகத்தில்? பெரும் சூறாவளி ஒன்று அப்படியே புரட்டிப் போட்டது போல எல்லாம் அப்படியே மாறிபோனதற்குக் காரணம் என்ன?

"நியாபகம் வருதே" என்று வாகைக்காரரை சைக்கிள் ஓட்ட விட்டு 8 சேனல்களில் "நல்லாட்சி தொடர" என்று வகைவகையாக பிரச்சாரம் செய்தார்களே? எல்லாம் என்ன ஆயிற்று? காலை 9.30 மணி வரை பெரிய மீசை பத்திரிக்கையாளர், முன்னனி செய்தியாளர் என்று சிலரை ‘சேனலுக்கு’ அழைத்து சேர் போட்டு உட்காரவைத்து 'நான் சொல்றேன் பாருங்க, தலைவர் ஆட்சிதான்' என்று பேசவைத்து தேர்தல் நிலவரத்தை உடனுக்குடன் சொல்லிக்கொண்டிருந்தவர்கள், 9.45க்கு 'தேன் கிண்ணம்' என்று பழைய பாடல்களை போட ஆரம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது ஏன்? சாதாரணமாக 70% வாக்குப்பதிவாவதே பெரிய விஷயமாக இருக்குமிடத்தில் 85% வாக்குகள் பதிவாகியிருக்கிறது என்றால் மக்கள் எவ்வளவு கடுப்பாகியிருக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள். நான் 1991 நிலவரம் மீண்டும் வரும் என்று எதிர்பார்த்தேன். கிட்டத்தட்ட அதே நிலை தான் என்றாலும் மானம் சிறிது காக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

ஆளும் கட்சியின் மீதான அதிருப்தியாலும் எதிர்கட்சியனர் கொடுக்கப்போவதாக வாக்களிக்கும் சலுகைகளில் இருக்கும் கவர்ச்சியாலும் ஒவ்வொரு முறையும் இது நடப்பது தான் என்றாலும் 1,76,000 கோடி தான் இந்த முறை பிரதான காரணமாக இருந்திருக்கிறது. தனியொரு குடும்பம் மொத்தத் தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடத்தியிருந்த வசூல் வேட்டையின் உச்சகட்டம் தான் தமிழகத்தையே ஒட்டுமொத்தமாக தலைகுனிய வைத்த இந்திய ஊழல்களின் தாய்என்றழைக்கப்படும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். மாட்டிக்கொண்ட பிறகும் எல்லாத்துக்கும் அந்த மகராசன் தான் காரணம், நாங்கள் அப்பாவிகள், எங்கள் கவனத்திற்கு எதுவுமே கொண்டுவரப்படாது. தமிழகத்தில் என்ன நடக்கிறதென்றே தெரியாது என்று இவர்கள் கடைசிவரை கூறிக்கொண்டு வந்தாலும் தேசிய அளவில் மிகப்பெரியதான இந்த ஊழலில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பங்கு உண்டு, பெட்டி போகாமல் வேலையாகியிருக்காது என்பது கடைக்கோடி வாக்காளனுக்கும் தெரியும்.

சென்ற தேர்தலின் போது கடைச் நேரத்தில் அறிவித்து, அதனால் வெற்றி பெற்று, சொன்னது போல் தமிழகம் முழுவதும் இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகளை வாரி வழங்கி இலவசப் புரட்சியையே ஆரம்பித்து வைத்ததே இவர்கள் தான் எனலாம். கொடுக்கப்பட்ட தொலைக்காட்சியை போட்டுப் பார்பதற்கு போதிய மின்வசதி இல்லாதது இன்னொரு முக்கிய காரணம். மேலும் இந்தப் பக்கம் அரசின் வரிப்பணத்தில் தொலைக்காட்சியை கொடுப்பது போல் கொடுத்துவிட்டு அந்தப் பக்கம் கேபிள் டீவியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து மீண்டும் குடும்ப லாபத்தை ஏற்றிக்கொள்ள முடிவு செய்திருந்ததை தமிழகம் மறக்கவில்லை. அரசு சார்பில் இலவசமாக செய்யப்பட்ட 'உயிர் காக்கும் மருத்துவ'த்திலும் ஏகப்பட்ட இன்சூரன்ஸ் பணம் சுருட்டப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

விலைவாசியைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கு பக்கம் பணம் ஏற ஏற இங்கு விலை ஏறிக் கொண்டேயிருக்கிறது. "அரிசி ஒரு ரூபாய், சாப்பிட்டு விட்டு போவதற்கு இராண்டு ரூபாயா?" என்று ஒரு காமெடிகாட்சி உண்டு. அது உண்மையில் சிரிக்கவேண்டிய காமெடி இல்லை, உணர வேண்டிய தற்போதைய நிலை.

தன் மகனுக்கு மந்திரி சீட், மகளுக்கு எம்.பி சீட் என்று வாங்க மட்டும் தில்லியில் போய் வீல்சேர் கால்கடுக்கக் காத்திருந்தவர், முப்பது ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்தின் முடிவில் தமிழினத்தின் தலைவன் தலைவெடித்து சிதறியதாக அறிவிக்கப்பட்டபோது, நம் இனத்தவர் அக்கரையில் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட போது, "அம்மையார் அவர்களுக்கு," என்று ஒரே ஒரு கடிதம் எழுதியதோடு நிறுத்திக்கொண்டார். மறக்க முடியுமா அந்த துரோகத்தை? உயிரைக் காத்துக்கொள்ள வந்த தலைவனது தாயை விரட்டியடித்ததெல்லாம் மறக்கக் கூடிய செயலா? கூட்டணி நிலைக்க வேண்டும், மாநிலத்தில் ஒரு மகன், மத்தியில் ஒரு மகன் என்று கால்குலேஷன் போட்டதெல்லாம் புஸ்ஸ்ஸ் ஆனதற்கு இந்த துரோகம் தான் முக்கியக் காரணம். அன்று வக்கில்லாமல் வேடிக்கை மட்டும் பார்த்தவர்கள் இன்று நேரம் வந்ததும் வேலையை காட்டி விட்டார்கள்.

இன்னுமொரு சின்ன விஷயம், சின்ன உதாரணத்துடன். தேர்தல் முடிந்தவுடன் சன் பிக்சர்ஸின் 'மாப்பிள்ளை' ரிலீஸானது, அதற்கடுத்த வாரம் ரெட் ஜெயண்ட்டின் 'கோ', அதற்கடுத்த வாரம் கிளவுட் நைனின் 'வானம்', அதற்கடுத்த வாரம் மீண்டும் சன் பிக்சர்ஸின் 'எங்கேயும் காதல்' அடுத்தது இப்போது கிளவுட் நைனின் 'அழகர்சாமியின் குதிரை'. எப்படியிருக்கிறது கேட்க? சினிமாவையும் மொத்தமாக குத்தகைக்கு எடுத்துவிட்டிருக்கிறார்கள். தியேட்டர்கள் அனைத்தும் 'பிளாக்' செய்யப்பட்டு இவர்களது படங்களே ஓட்டப்படுகின்றன. அதிலும் இவரது கதை வசனத்தில் வெளிவந்த சரித்திர படத்தை ஓட விடாமல் சதி செய்து தியேட்டரை விட்டே தூக்கிவிட்டனர் என்று அவரே பேட்டி கொடுத்திருந்தார். 'சிரிப்பொலி' பார்த்து சிரிக்காதவன் கூட இதைக் கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பான். இந்தக் குடும்ப ஆட்சி வீழ்ந்தது தமிழ் சினிமா உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய சுதந்திரம் என்று கொண்டாடித் தீர்க்கிறார்கள் திரை உலகத்தினர். பல திரைத்துறையினர் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியிருப்பது தான் இதற்கு ஆதாரம்.

தமிழை செம்மொழியாக்கிக் கொண்டாடியவர்கள், தமிழ் பேசும் மக்களை ரோட்டில் நிற்க வைத்தார்கள். 'இலவசம்' என்கிற பெயரில் 'வரிசையாக கையேந்தி நில்லுங்கள்' என்றும் சொன்னார்கள். தமிழர்களுக்கு ஒன்றுமில்லை, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்து கிடைத்தது. சரி, தமிழகத்திற்கு இப்போது இந்தியாவில் என்ன பெயர்? செம்மொழி தேசமா? இல்லை தமிழகத்தின் பெயர் "ஊழலகம்"! அன்னா ஹசாரே ஊழலுக்காக உண்ணாவிரதம் இருந்ததே தமிழகம் போட்டபோடில் தான் என்று நினைக்கிறேன். ஒரு மாநிலமே 1,76,000 கோடி என்றால் ஒவ்வொருவனும் ஆரம்பித்துவிட்டால்?   

இரண்டு மாதங்களுக்கு முன் நடந்ததெல்லாம் தேர்தல் பிரச்சாரமா? சிரிப்பு நடிகரை வர வைத்து ஒரு கட்சியின் தலைவரை அசிங்கப்படுத்திப் பேச வைத்து, ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஏவி விடப்பட்ட சிரிப்பு நடிகர் வீட்டிற்கு இப்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. ஆள் எங்கிருக்கிறார் என்றே இப்போது தெரியவில்லை. எஸ்கேப்பாம்... 'சின்னக் கவுண்டர்' காலத்தில் குடை பிடித்து, கைகட்டி பின்னால் நின்றவர் ப்போது 'மைக்' கிடைத்தவுடன் "நானெல்லாம் நைட் ஆனா பச்சத்தண்ணி கூட குடிக்கமாட்டேன், அதனால தான் இவ்ளோ தெளிவா பேசுறேன், அந்த ஆள் ஃபுல்லா குஷ்ட்டு வந்து காலைல வேட்பாளர புடிச்சி அடிக்கிறாரு, வெளங்குமா" என்று பேசினார். "ராணாவோ, கோணாவோ அதல்லாம் எனக்குத் தெரியாது, நான் எங்க போனாலும் மக்கள் கூட்டம் கூட்டமா வந்தாங்க, அப்படியே என்ன அவுங்க வீட்டு புள்ளையா நெனச்சாங்க, நிச்சயமா நாங்க அமோக வெற்றி பெறுவோம்" என்று 'கைப்புள்ள வர்றான் பாருடா' என்று வேடிக்கைப் பார்க்க வந்தவர்களை 'எங்க வீட்டுப்புள்ளை' யாக நினைக்கிறார்கள் அது இதுவென்று என்று எதைஎதையோ சொல்லிவைத்து அங்கும் இங்கும் எங்கும் ஆதரவில்லாமல் இப்போது பதுங்கியிருக்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் இவருக்கு என்ன கிளைமாக்ஸ் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. "வீட்ல கல்லு விட்டவன சும்மா விடமாட்டேன்" என்று மேடை மேடையாகப் பேசி பழிவாங்கியவர், இன்று வீட்டிற்கு எதுஎது வரப்போகிறதோ! கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டோமோ? என்று உட்கார்ந்திருப்பார்!

சரி தோற்றவர்களை வேண்டுமான அளவு திட்டித் தீர்த்து, நமக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்காக சரியான பாடம் புகற்றியாயிற்று. அடுத்து நம் நிலைமை என்ன? இப்போது வந்திருப்பவர்கள் மட்டும் நல்லவர்களா? தமிழகத்தில் மீண்டும் ஒரு காமராஜர் ஆட்சி வந்து விடுமா? (அவர் ஆட்சி எப்படியிருந்தது என்று எனக்குத் தெரியாது. எல்லாரும் சொல்வதால் 'நல்லாட்சி' என்று நம்புகிறேன்), ஊழல் ஒழிக்கப்படுமா? விலைவாசி குறையுமா? இலவசங்கள் நிற்குமா? தமிழ் சினிமா காப்பாற்றப் பட்டு விடுமா அல்லது மீதமுள்ள சில ஆயிரம் சகோதர சகோதரிகளாவது மீட்கப்பட்டு வாழவைக்கப் படுவார்களா?

இந்தக் கேள்விகளுக்கு விடை இப்போது கிடைக்காது 2016ல் தான் கிடைக்கும்... நாம் இக்கரைக்கு அக்கரை பச்சை என்கிற ரீதியிலேயே பழக்கப்படுத்தப் பட்ட, ஒரே இடத்திற்கே திரும்பத் திரும்ப சுற்றிச் சுற்றி வந்து நின்றுகொண்டிருகும் செக்கு மாட்டுக் கூட்டம். "திரிஷா இல்லன்னா திவ்யா, ரெண்டும் இல்லன்னா உன்ன கொன்னுடவேண்டியது தான்".  இதுதான் நம் நிலை இல்லையா? "உங்களுக்கு ரெண்டே சாய்ஸ் தான்டா" என்று சென்ற ஆட்சியில் 'இல்லை' என்று சொல்லப்பட்ட, இந்த ஆட்சியில் 'இருக்கிறார்' என்று சொல்லப் போகிற கடவுள் நம் தலையில் எழுதியிருப்பது. இந்த நிலை மாறும் வரை எதிலும் மாற்றம் இருக்காது. சரி இப்போது என்ன செய்ய? இன்னிங்ஸ் இப்போது தானே ஸ்டார்ட் ஆகியுள்ளது, லெட்ஸ் வெயிட் அண்ட் வாட்ச்!

நமது நிலை என்ன என்பதை கீழே உள்ள படம் தெளிவாக உணர்த்தும். நான் எதுவும் சொல்லப்போவதில்லை. என்ன செய்ய, தோற்றவர்களைப் பற்றி பேசிய அளவிற்கு இங்கு ஜெயித்தவர்களைப் பற்றிப் பேச முடிவதில்லையே!


"அண்ணா நாமம் வாழ்க, எம்.ஜி,ஆர் நாமம் வாழ்க, அடுத்த 5 ஆண்டுகள் நமக்கு போடப்படப் போகும் நாமமும் வாழ்க"

டிஸ்கி 2 அல்லது சொந்த கெத்து: என்னப்பத்தியாடா தப்பா பேசுற, உன்ன என்ன பண்றேன் பாரு என்று ஆவேசப்பட்டு உடன்பிறப்புகளோ, கழகக்கண்மணிகளோ என் வீட்டிற்கு ஆட்டோ' அனுப்பிவிடாதீர்கள். நான் அந்த அளவிற்கெல்லாம் வொர்த் இல்லை :-)

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...