#100நாடுகள்100சினிமா #WW2Cinema #25.AUSTRIA - THE COUNTERFEITERS (2007)

9:47:00 AM

Stefan Ruzowitzky | Austria/Germany | 2007 | 98 min.


யூதர்களை, அரசியல் எதிரிகளை, கிளர்ச்சியாளர்களைக் கண்டிபிடித்துக் கொல்ல ஹிட்லரது நாஜிப்படை ஐரோப்பா முழுவதும் பல சித்திரவதைக்கூடங்களை (Concentration Camps) நிறுவியது. இந்தக் கூடங்களுக்குள் நடக்கும் கதைகளாக பல படங்கள் பல்வேறு மொழிகளில் வெளிவந்திருந்தாலும், Schindler's List (1993), The Pianist (2002), Life Is Beautiful (1997), Fateless (2005), The Boy in the Striped Pajamas (2008) போன்ற படங்கள் அதிக கவனம் பெற்ற, அவசியம் பார்த்தே தீர வேண்டிய படங்கள். அந்த வரிசையில் The Counterfeiters (2007) படமும் ஒரு முக்கியமான படம். படம் பற்றிச் சொல்வதற்கு முன் வழக்கம்போல கொஞ்சம் அதனைச் சுற்றிய ஹிஸ்டரியைத் தெரிந்து கொள்வோம்.

எதிரிகளை கொத்துக்கொத்தாக வெறுமனே கொலை மட்டும் செய்யவில்லை நாஜிப்படை. கொலை செய்துவிட்டால் பரவாயில்லை என்று சொல்லுமளவிற்கு அவர்களை சோதனை எலிகளாக்கி மருத்துவ ஆராய்ச்சி என்ற பெயரில் பல்வேறு விதமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியிருக்கின்றனர். டக்கென்று உயிர் பிரிந்து விட்டால் பரவாயில்லை. கைகால்கள் முடமாகி, கண்கள் பிதுங்கி வெளியே வந்து, தோல் எரிந்து, மனநிலை பாதிக்கப்பட்டு - அப்படியும் விடாமல் இப்படி எது நடந்தாலும் அது நடந்ததற்கான காரணங்களைக் கண்டறிய மீண்டும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு உயிருடன் இருக்கும்போதே உடல் கூறாக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள் மட்டும் ஆயிரக்கணக்கில் உண்டு. Nazi Human Experimentation என்றழைக்கப்பட்ட இந்த அராய்ச்சிகள் பெருமளவில் அந்தக் கூடங்களில் நடைபெற்றிருகிறது. விஷவாயூவை வைத்து கொத்துக்கொத்தாக மக்களைக் கொல்வது பிரபல மெதட். அதுகூட பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே நடைமுறைபடுத்தப்பட்டது. இவ்வளவு ஏன் - நாஜி வீரர்கள் யுத்தக்களத்தில் அணியும் பூட்ஸ்களின் தரத்தைப் பரிசோத்திக்க நூற்றுக்கணக்கான கைதிகளை வெவ்வேறு நிலப்பரப்புகளில் தினம் 25 முதல் 40 கி.மீ நடக்க வைத்தே கொன்ற கதையெல்லாம் நடந்திருக்கிறது.

Edward Teller
இன்னொரு தகவல்: முதன்முதலில் அணுகுண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஜெர்மனி தான் என்று அடித்துச் சொல்லிவருகிறது அமெரிக்கா. அணுவைப் பிளவு சாத்தியம் (Nuclear Fission) என்று கண்டுபிடித்தவரே ஜெர்மனியர்களான Otto Hahn மற்றும் அவரது உதவியாளர் Fritz Strassmann. ஆண்டு 1938, டிசம்பர் மாதம். ஏப்ரல் 1939 வாக்கிலேயே அதனை வெடிகுண்டாக்கும் முயற்சியில் ஈடுபடத்தொடங்கியிருந்தனர் நாஜி இயற்பியல் வல்லுனர்கள். அவர்களுக்கு முன் எப்படியும் அணுப்பிளவையும், அதனை பேரழிவு ஆயுதமாக்கும் முறையையும் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்பு காட்டி அணுஆயுதங்கள் ஆராய்ச்சிக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஆராய்ச்சித்திட்டமான 'Manhattan Project' கொண்டு ஜூலை 1945 இல் உலகின் முதல் அணுகுண்டை உருவாக்கி, ஆகஸ்ட் மாதம் அதை ஜப்பான் மேல் வீசி பரிசோத்தித்தும் விட்டது அமெரிக்கா. இந்த அணுகுண்டு ஆராய்ச்சியில் முக்கிய பங்குவகித்தவர் 'Father of Hydrogen Bomb' என்றழைக்கப்படும் Edward Teller என்பவர். இவரை இன்ஸ்பிரேஷனாக வைத்துத்தான் Stanley Kubrick தனது Dr. Strangelove (1964) கதாப்பாத்திரத்தை உருவாக்கினார் என்று சொல்வார்கள்.

அழிவுவேலைகள் ஒரு பக்கம் இருக்க, ரயில்பாதைகள் அமைப்பது, கட்டிடங்கள் கட்டுவது, கைப்பற்றிய நாடுகளின் எல்லைகளில் கன்னிவெடிகளைப் புதைத்து வைப்பது என்று பல வேலைகளைச் செய்திருக்கிறார்கள் கைதிகள்.

Original Photo - Sachsenhausen Camp
Sachsenhausen Concentration Camp - ஜெர்மனியில் அமைந்திருந்த இந்தக் கூடம் நாஜிக்கள் கட்டுப்பாட்டில் ஐரோப்பா முழுவதுமிருந்த சித்திரவதைக்கூடங்களுக்கெல்லாம் தலைமையகம் போல செயல்பட்டிருந்திருக்கிறது. 1936 ஆல் கட்டப்பட்ட இந்த கூடம் மே 1945 வரை இயங்கிவந்திருக்கிறது. இங்கு டிரைனிங் பெற்ற அதிகாரிகளே (SS Officers) பல கூடங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். ஜெர்மன் வளர்ச்சிக்குத் தேவையான பல ஆராய்ச்சி வேலைகள் இந்தக் கேம்பில் தான் நடந்திருக்கிறது. போலாந்தில் Auschwitz கூடம் தயாரான பிறகு, தீர்த்துக்கட்டும் பணி மொத்தமாக அங்கு விடப்பட்டது. Sachsenhausen உள்ளிட்ட பிற இடங்களில், மனித ஆராய்ச்சி உள்ளிட்ட பிற வேலைகளே ஜரூராக நடந்துவந்திருக்கிறது. இன்றும் புகழ் பெற்று விளங்கும் ஜெர்மன் கம்பனியான Siemens ற்காக இந்தக் கூடத்தில் வேலை நடந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட Heinkel போர்விமானங்கள் (He 177) தயரானது இங்கு தான். இந்தப் பெரிய கம்பெனிகளைத் தவிர ஒரு பிரம்மாண்ட செங்கல் ஆலையும் அங்கிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஹிட்லரது கனவு நகரமான Welthauptstadt Germania கட்டமைப்பிற்காக செங்கல்களைத் தயார் செய்தனராம்! இவை தவிர Sachsenhausen இல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பணி ஒன்று நடந்திருக்கிறது. அதன் பெயர் - Operation Bernhard.      

இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு முன்பே (1936), பிரிட்டன், அமெரிக்கா என்ற இரு பெரும் சக்திகளை பொருளாதார ரீதியாக வீழ்த்தி உலகளவில் சக்திவாய்ந்த நாடாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல வழிகளை கண்டுபித்து நடைமுறைபடுத்தி வந்தது ஜெர்மனி. அதில் ஒன்று - போலிப் பத்திரங்கள், கள்ள நோட்டுகள்.

Bernhard Krueger
ஆயிரக்கணக்கில் பிரிட்டன் போலிப் பத்திரங்களையும் (Bank of England Pond Notes), அமெரிக்க டாலர்களையும் அச்சடித்து புழக்கத்தில் விட்டது ஜெர்மனி. உலகளவில் மிகப்பெரிய காலனித்துவப் பேரரசான பிரிட்டனின் பணத்திற்கு பெரிய மதிப்பிருந்த காலம் அது. போலிகளை புழக்கத்தில் விட்டால் உலகளவில் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் பிரிட்டன். போருக்கும் முன்பே அனைத்து வகையிலும் தயாராக இருந்திருக்கிறது ஜெர்மனி. Bernhard Krueger என்ற இளம் SS அதிகாரி, 142 கள்ளநோட்டு ஸ்பெஷலிஸ்ட்கள் கொண்ட டீம் ஒன்றை Sachsenhausen இல் உருவாக்கி, துல்லியமாக வேலை பார்த்து கோடிக்கணக்கில் போலிப்பத்திரங்களையும், கள்ளநோட்டுகளையும் அச்சடித்திருக்கிறார். 1943 இல் இருந்து மாதம் சுமார் 10 லட்சம் கள்ளநோட்டுகள் பிரிண்ட் செய்யப்பட்டு புழகத்தில் விடப்பட்டிருக்கிறது. இது தவிர, நோட்டுகளை விமானம் மூலம் பிரிட்டன் பகுதிகளில் கொட்டிவிடும் திட்டமும் இருந்திருக்கிறது. நோட்டுக்களை மக்கள் பொறுக்கிப் பயன்படுத்துவார்கள். எது ஒரிஜினல் எது போலி என்று கண்டுபிடிக்கவே முடியாமல் தலையில் துண்டு போட்டுக்கொள்ளும் பிரிட்டன் என்பது தான் பிளான். ஏதோ காரணங்களால் இந்த டெர்ர் பிளான் செயல்படுத்தப்படவில்லை.

இன்றைக்கு இந்த நோட்டுகள் கோடிகளில் ஏலம் விடப்படப்படுவது தனிக்கதை.

படத்திற்கு வருவோம்.


பிரபல மோசடி மன்னன் Salomon Sorowitsch போலீஸாரால் பெர்லின் நகரில் வைத்துக் கைதுசெய்யப்படுகிறான். யூதன் என்பதால் முகாமில் அடைத்து கடுமையாக வேலை வாங்குகிறார்கள். இப்படியே போனால் நிச்சயம் ஒரு நாள் செத்துவிடுவோம் என்பதால் அங்கிருக்கும் அதிகாரிகளை அப்படியே படமாக வரைந்து, தனது திறமைகளை வெளிப்படுத்தி, அவர்களது கவனம் பெற்று படிப்படியாக தன்னை மேலேற்றிக்கொள்கிறான். சாலோமனின் ஓவித் திறமை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே பரவுகிறது. வேறொரு முகாமிற்கு மாற்றப்படுகிறான். அது Sachsenhausen Concentration Camp. ஹிட்லரின் ஆட்சிக்கு முன்பு அச்சுத்தொழிலில் பிரபலமாக இருந்த பல யூதர்கள் அங்கு வேலைசெய்வதைப் பார்க்கிறான் சாலோமன். உயிர் பிழைக்க வேண்டுமானால் ஒரிஜினலை விஞ்சும் கள்ள நோட்டுக்களை அச்சடித்துத் தர வேண்டும். வேலை தொடங்குகிறது. அந்த முகாமில் என்ன நடந்தது, சாலோமனுக்கு என்ன ஆனது? என்பது தான் The Counterfeiters படத்தின் கதை.


சாலோமனாக நடித்திருக்கும் Karl Markovics மொத்த படத்தையும் தாங்கியிருக்கிறார். எவன் செத்தால் என்ன நான் பிழைத்தால் போதும் என்ற சுயநல மனப்பான்மையுடையவராகவே இவரது கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அந்தக் கதாப்பாத்திரம் மீது நமக்குக் கோபம் வரவில்லை. மாறாக எந்தப் பொறியிலும் சிக்காமல் 'சர்வைவல்' என்பதையே லட்சியமாகக் கொண்டு ஓடும் அவரை ரசிக்கத்தொடங்கிவிடுகிறோம். நாஜி அதிகாரிகளின் காட்டுமிராண்டித்தனம், கைதிகளுக்கிடையே கருத்துவேறுபாடு, பற்றியெரியும் கிளர்ச்சி, அதனால் ஏற்படும் பிரச்சனைகள், திடீர் நட்பு என்று ரெகுலர் சமாச்சாரங்களும் படத்தில் உண்டு. சுலபமாக இப்படிச் சொல்லிவிட்டாலும் பல நுணுக்கமான விஷயங்கள் படத்தில் கொட்டிக்கிடக்கிறது. ஒரு நிமிடம் கூட போர் அடிக்காமல் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் நம்மைப் படத்துடன் கட்டிப்போட்டுவிடுகிறது.

Stefan Ruzowitzky என்பவரது இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றிருக்கிறது. Adolf Burger என்ற யூத அச்சுக்கலைஞரது (Typographer) அனுபவக்கட்டுரைகளான 'Number 64401 Speaks' அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது. போலிச் சான்றிதல்கள் தயாரித்து பல யூதர்களைக் காப்பாற்றிய பலே கில்லாடி இவர். 1942 இல் கைதுசெய்யப்பட்டு Operation Bernhard இல் வேலை செய்வதற்காக Sachsenhausen அனுப்பப்பட்டு நேசப்படைகளால் விடுவிக்கப்பட்டவர்.   

அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்.

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரை செய்யுங்கள்

The Jews, Political Prisoners, POWs and Enemies of State were not just killed by the Nazis but were used for several other purposes also. Most of them were brutal medical experiments were Live Humans were used as lab rats.

Sachsenhausen Concentration Camp in Germany was considered the administrative center of all Nazi camps across Europe. It even served as a training centre for Schutzstaffel (SS) officers who were sent to oversee other camps afterwards. Apart from Medical Exoeriments and manual labour, Sachsenhausen is famous for one particular secret operation made by the Nazis, Operation Bernhard - a secret plan run by a young Nazi Officer Bernhard Krueger during the Second World War to destabilize the United Kingdom by flooding its economy with forged Bank of England pound notes. 

Original like fake notes were printed in millions every month and went sent to England and its other colonial countries. It was too late before Bank of England found the forgery. This is considered as one of the largest currency counterfeiting operations ever recorded In History.

The Counterfeiters (2007) centres around a Jewish counterfeiter, Salomon 'Sally' Sorowitsch, who is arrested in Berlin and forced to assist Operation Bernhard at the Sachsenhausen concentration camp. Unlike other Nazi Camp movies like Schindler's List (1993), The Pianist (2002), Life Is Beautiful (1997), Fateless (2005), The Boy in the Striped Pajamas (2008) this movie focuses on a unique area which made a big impact in WW2 History. The movie strongly speaks about Survival and one man’s struggle to fight till the end.  
Dir. Stefan Ruzowitzky
Written and Directed by Stefan Ruzowitzky, the movie is based on the real-life memoirs Adolf Burger, a Jewish Slovak typographer who was imprisoned in 1942 for forging baptismal certificates to save Jews from deportation, and was later interned at Sachsenhausen to work on Operation Bernhard.

The Counterfeiters (2007) is also the winner of Best Foreign Language Film at the 80th Academy Awards.

A must watch movie.

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...