கயல் - Come Fall in Love...!

11:49:00 AM


(படத்தின் கதையைத் தெரிந்து கொள்ள விருப்பமில்லாதவர்கள் ‘ஒன்-லைன்’ பத்திக்குச் சென்றுவிடவும்)

பறவையாக உலகத்தை (இப்போதைக்கு இந்தியாவை) சுற்றி வரும் இரு நண்பர்கள். 6 மாதம் கடினமாக உழைப்பது, 6 மாதம் ஊர் சுற்றி நினைவுகளைச் சேர்ப்பது என்று இவர்களைப் பார்ப்பவர்களும், இவர்களைப் பற்றிக் கேட்பவர்களுமெல்லாம் பொறாமைப்படும்படி நாடோடியாக வாழ்ந்து வரும் கடவுளின் குழந்தைகள். கிருஸ்துமஸிற்கு ‘கன்னியாகுமரி’ என்று டார்கெட் செய்து பயணம் செய்கிறார்கள். வடநாடெங்கும் பயணம் செய்து கடைசியாக கன்னியாகுமரியில் வந்து இறங்குபவர்கள், வசமாக ஜமீன் வீட்டுப் பிரச்சனைக்கிடையே சிக்கிக்கொள்கிறார்கள். முதல் பாதியில் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கும் அந்தக் காட்சிகளை நன்றாகவே எடுத்திருக்கிறார்கள். அங்கு ஒரு ஐந்து நிமிடம் விளக்கொளியில் ஜமீன் வீட்டில் வேலைசெய்யும் நாயகியைச் சந்திக்கும் நாயகன், இருக்கும் பிரச்சனை போதாதென்று மறுநாள் நாயகியைப் பார்த்தவுடன் தனக்குள் நிகழ்ந்த பெருமாற்றங்களை, உச்சக்கட்ட உணர்ச்சி வெளிப்பாட்டில் அனைவர் முன்னும் கெத்தாகப் போட்டுடைக்கிறான். விரட்டியடிக்கிறார்கள். அவனது அந்த காதல் வெளிப்பாடு வெள்ளந்தியான நாயகியின் மனதைக் குழப்புகிறது. நாயகனைத் தேடிப் பிறப்படுகிறாள். இது தான் முதல் பாதி. இந்த இடத்தோடு கதை கிட்டத்தட்ட முடிந்து விட்டது. நாயகனைச் சந்தித்து விட்டால் படமும் முடிந்து விடும். ஆனால் இரண்டாம் பாதி முழுக்க இதைத் தான் காட்டுகிறார்கள்.

தேடுவது, பாடுவது, காதலில் உருகுவது – இதையே தனித்தனியே இருவரும் செய்கிறார்கள். ***SPOILER இருவரும் சந்திக்கும் அந்த கடைசி நேரத்தில் சுனாமி வருகிறது. மீண்டும் பிரிகிறார்கள். காதல் அவர்களை ஒன்று சேர்க்கிறது*** SPOILER. முழுக்கதையையும் எழுதிவிட்டதற்குக் காரணம் பிரபு சாலமன் என்றாலே திணிக்கப்பட்ட சோக கிளைமாக்ஸ் வெறுப்பேற்றும் என்ற முடிவோடு படத்தைச் சிலர் புறகணிக்கலாம். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்வதற்காகத் தான். (பிரபு சாலமன் எனது விருப்பமான இயக்குனர் தான் என்றாலும், இந்த ‘திணிக்கப்பட்ட சோகம்’ காரணத்தினால் எனது முதல் சாய்ஸ் கிட்டத்தட்ட ‘மீகாமன்’ ஆகத் தான் இருந்தது)

ஒன்-லைன்

நாயகியைச் சந்திக்கும் நாயகன், அவள் மேல் காதல் வயப்பட்டு காதலை வெளிப்படுத்திவிட்டுச் செல்கிறான். காதலை உணரும் நாயகி, நாயகனைத் தேடிப் புறப்படுகிறாள். இவ்வளவு தான் படம். இதைத் தான் உருக உருக இரண்டேகால் மணிநேரம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.

படம் முழுக்கக் காதல் காதல் காதல் மட்டும் தான். முதல் பாதியின் முதல் பாதியில் நாயகனையும் அவனது நண்பனையும் பற்றித் தெரிந்து கொள்ளும் இடத்தில் நமது வாழ்க்கையைக் கொஞ்சமேனும் ரசித்து வாழ வேண்டுமென்ற என்ற எண்ணம் எழாமல் இருக்காது. வசனங்களால் மட்டும் விளையாட்டுக்காட்டாமல் நிஜமாகவே “பறவையா பறக்கிறோம்” பாடலில் அழுத்தமாக தான் சொல்ல வந்த விஷயத்தைப் பதிவு செய்திருக்கிறார். கிட்டத்தட்ட இந்தியா முழுக்க பயணிக்கும் கதை அதன் பின் இடைவேளை வரை ஒரே வீட்டிலேயே நிற்கிறது. இரண்டாம் பாதியின் பெரும் பகுதி நடப்பது கன்னியாகுமரியில்.

நாயகன் ஆரோனாக புதுமுகம் சந்திரன். பார்ப்பதற்கு ஒரு சாயலில் தெலுங்கு வில்லன் ‘அஜய்’ போல இருந்தாலும் நடிப்பில் பின்னியிருக்கிறார். எந்த இடத்திலும் குறையில்லாமல் காதல் உணர்ச்சிகளையெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.

நாயகி ‘கயல்’ ஆக ஆனந்தி. ஏற்கனவே இவர் நடித்த ‘பொறியாளன்’ வெளியாகி விட்டாலும், ‘அறிமுகம்’ ஆனந்தி என்று தான் போடுகிறார்கள். எத்தனைப் பெரிய கண்கள் இந்தப் பெண்ணிற்கு! பொறியாளனை விட 100 மடங்கு நன்றாக நடித்திருக்கிறார். அதிலும் ஆரோன் தன்னிடம் காதலைச் சொன்ன விதத்தை லாரி டிரைவர் அண்ணன் ஒருவரிடம் அவர் கண்கள் படபடக்க விவரிக்கும் காட்சியில் சூப்பர். லைலா அல்லது ஜெனிலியாத்தனமான ஹீரோயின்களே நிறைந்திருக்கும் தமிழ் சினிமாவில் இந்த வெள்ளந்திக் ‘கயல்’ தனித்து நின்று ரசிக்க வைக்கிறாள். கண்களே பாதி செய்தி சொல்லிவிடுவதால் நடிப்பில் இன்னும் கொஞ்சமே கொஞ்சம் பயிற்சி எடுத்தால் போதும் பிரபுசாலமனின் ஹிட் ஹீரோயின்களான அமலா பால், லட்சுமி மேனன் வரிசையில் இவரும் சுலபமாகச் சேர்ந்துவிடுவார்.

இவர்கள் இருவரைத் தவிர படம் முழுக்க வரும் மற்றொரு கதாப்பாத்திரம் நாயகனின் நண்பனாக வரும் சாக்ரடீஸ். புதுமுகம். பெயர் தெரியவில்லை. ஆனந்தியை விடப் பெரிய முட்டைக்கண் இவருக்கு. நாயகனுக்கு இணையாக இவரும் உருகுகிறார். நன்றாக நடித்திருக்கிறார்.

இசை D. இமான் – இரண்டாம் பாதி முழுவதையுமே இவரது கைகளில் கொடுத்துவிட்டார் இயக்குனர். குறையில்லாமல் செய்திருக்கிறார் இமான். பாடல்களைப் பொறுத்தவரை மைனா, கும்கி இரண்டு ஆல்பங்களும் மொத்தமாகவே நன்றாக இருக்கும். கயலில் 7 பாடல்கள் இருந்தும் 3 தான் எனக்குப் பிடித்தது. அதில் “என் ஆள பாக்கப் போறேன்” பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனத்தியை வைத்து அதைப் படம்பிடித்திருந்த விதமும் அருமை.

படத்தின் மற்றொரு தூண் ஒளிப்பதிவாளர் மகேந்திரன். ஒளிப்பதிவாளருடன் சேர்ந்து பிரபு சாலமன் வைக்கும் ‘ஷாட்’களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். இந்தப் படத்திலும் ஆச்சரியம் தொடர்கிறது. பல காட்சிகள் கண்களுக்கு விருந்து. கிளைமாக்ஸ் சுனாமிக்காட்சிகளைப் படமாக்கியிருந்த விதம் அபாரம். ஆரம்பக்காட்சிகளில் பரந்து விரியும் wide-anglesகள் அற்புதம். என்ன தான் சூப்பர் என்றாலும் இடைவேளைக்குப் பின்பு, நாயகனின் நண்பன் நாயகனிடம் அவன் காதலின் ஆளம் பற்றிப் பேசுவதைப் போன்ற ஒரு காட்சியில் நண்பனது முகத்தை அநியாயத்திற்கு குளேஸப்பில் காட்டுகிறார்கள். சிறிது நேரம் என்றால் பரவாயில்லை, அவரோ பேசிக்கொண்டே இருக்கிறார். பார்ப்பதற்கு பயமாக இருக்கிறது. இது போன்ற பயமுறுத்தும் குளோஸப்கள் சில படத்தில் உண்டு. அதைத் தவிர்த்திருக்கலாம். பெரிய திரையில் பார்க்க பயந்து வருகிறது.

மைனாவில் பஸ் விபத்து, கும்கியில் யானைச் சண்டை, கயலில் சுனாமி – கிராபிக்ஸில் நல்ல முன்னேற்றம்.

படம் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் சிலருக்குப் பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. காரணம் படத்தில் புதிதாக எதுவும் இல்லை. தமிழ் சினிமா ரசிகன் பார்க்காத காதல் காவியங்களா? இது மற்றொரு காவியம் அவ்வளவுதான். மேலும் இரண்டாம் பாதி கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கலாம். இரண்டு காட்சிகளுக்கு ஒரு பாட்டு வருகிறது. பிரதான மூன்று கதாப்பாத்திரங்களைத் தவிர நிலையான கதாப்பாத்திரங்கள், ஸ்கோப் இருந்தும் இல்லை. வில்லன் கிடையாது. தன் ஊரில் இருக்கும் பஸ் ஸ்டாண்டிற்கே வழி தெரியாத நாயகி, யாரென்றே தெரியாத நாயகனைத் தேடித் தனியே புறப்படுகிறாள். சிலர் அவளை "படுபயங்கரமாகவே" எச்சரிக்கிறார்கள், ஆனால் அவளே அதை சட்டைச் செய்வதாகவே தெரியவில்லை. நல்லவேளை அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை, சினிமா என்பதால். ஆனால் நிஜத்தில் இப்படியெல்லாம் ஒருத்தி கிளம்பி வந்தால், கிளைமாக்ஸ் ஒன்றுதான்.

மேலும் மிக முக்கியமாக நாயகன் நாயகியைக் காணும் அந்தக் குறிப்பிட்டக் காட்சியை இமானின் துணையுடன் உணர்ச்சிகளால் நிரப்பித் தள்ளாமல், காமெடிக்காட்சியைப் போல் எடுத்திருக்கிறார்கள். படத்தின் உயிர்நாடியே நாயகன் அவன் தந்தை சொன்ன “வெளிச்சத்தை” காணும் அந்த இடம் தான். அது மகா சொதப்பல். நெஞ்சில் பதியவில்லை. இந்தக் காட்சியே படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக பெரும் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் இரண்டாம் பாதி முழுக்க அவனைத் தேடி அவளும், அவளைத் தேடி அவனும் அலையப்போகிறார்கள். அழுத்தம் இல்லாத காதலுக்கு ஏனிந்த அலைச்சல், அலம்பல் என்று ரசிகன் எண்ணிவிடக்கூடாது. எனக்கு சந்திப்பு நிகழந்த அடுத்த காட்சியில் உணர்ச்சி பொங்க நாயகன் தன் காதலை வெளிப்படுத்திய விதமும், அதற்கு நாயகி கண்கள் கலங்கி, அதிர்ச்சி, பயம், ஆர்வம் கலந்து கொடுத்த ரியாக்ஷனுமே போதுமானதாக இருந்தது. அதை வைத்துக்கொண்டே படத்தை ரசிக்க முடிந்தது. ஆனால் என்னைப்போல் ஈஸியாக பலர் சமதானமடையவில்லை என்பது விமர்சனங்களைப் படிக்கும் போது தெரிகிறது. 

(வயதுக்கு வந்த பிறகு முதன்முதலாக சுருளி மைனாவைப் புடவையில் பார்க்கும் அந்தக் காட்சி நினைவிற்கு வருகிறது. That's the defining moment...!)  

பிரபு சாலமன் – 1999 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ படம் தான் இயக்குனராக பிரபு சாலமனுக்கு முதல் படம். அதன்பிறபு கிங், கொக்கி, லீ, லாடம் போன்ற நல்ல படங்களை எடுத்திருந்தாலும் ‘மைனா’ தான் பிரபு சாலமனின் அடையாளமானது. அதுவரை யாரென்றே தெரியாமலிருந்த பிரபு சாலமன் அதிகம் எதிர்பார்க்கப்படும் இயக்குனர் ஆனது மைனாவிலிருந்து தான். அதற்குக் காரணம் உதயநிதி ஸ்டாலின் – மைனா பார்த்து அவர் அழுத கதை படத்திற்கு பெரும் விளம்பரமானது. குருவி, ஆதவன், மன்மதன் அம்பு என்று படா பட்ஜெட்டில் கடாமொக்கைகளைத் தயாரித்துக் கொண்டிருந்தவர், மைனாவை விலைக்கு வாங்கி பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்தார். இன்று மைனா தான் தனது முதல் படம் என்று பிரபு சாலமனே நம்பும் அளவிற்கு மற்ற 6 படங்களையும் (கன்னடத்தில் ஒன்று) அனைவரும் மறந்து விட்டனர். ஆனால் நான் சொல்கிறேன். மைனாவிற்கு முன் தமிழில் பிரபு சாலமன் இயக்கிய 5 படங்களுமே நல்ல படங்கள், வித்தியாசமான கதைக்களன்களைக் கொண்ட படங்கள்.

மைனாவிற்கு வருவோம். 2010 ஆம் ஆண்டு வெளியான படங்களில் எனக்குப் பிடித்த 10 படங்கள் வரிசையில் முதலிடம் பிடித்தது மைனா – அன்று நான் எழுதியது - திரையில் கதநாயகன் அழும் போது நானும் சேர்ந்து அழுது, அவன் சிரிக்கும் போது நானும் சேர்ந்து சிரித்ததெல்லாம் எனது விபரம் தெரியாத வயதில் தான். ஆனால் மைனாவின் 'கையப் புடி, கண்ணப் பாரு' பாடலில் என்னுள் ஏற்பட்ட மகிழ்ச்சி வெள்ளத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியில் கதநாயகியைப் பிணமாகப் பார்க்கும் கதாநாயகன் அதற்குக் காரணமானவர்களைக் கொல்ல அரிவாளோடெல்லாம் புறப்பட மாட்டான். இதற்கு மேல் எதுவுமே இல்லை என்று ரெயிலின் குறுக்கே விழுந்து விடுவான். அதே மனநிலை தான் எனக்கும் இருந்தது. அது தான் இந்தப் படத்தை மறக்க முடியாமல் செய்து விட்டது. 'மைனா' - இந்த வருடத்தின் தலைசிறந்த படம், எந்த வித சந்தேகங்களும் இன்றி...//


படங்கள் பார்க்கும் போது அழுத்தமான காட்சிகள் வந்தால் பொசுக்கென்று கண்ணீர் முட்டும் பழக்கம் இன்றும் இருக்கிறது. காலைக்காட்சி ‘பிசாசு’ பார்த்துவிட்டு அழுதழுது தலைவலி வந்து ஆபீஸிற்கு லீவ் போட்டு விட்டு படுத்துக்கிடந்தேன். ‘கத்தி’க்கு (விவசாயிகள் தற்கொலை) கூட அழுதேன் என்றால் எமோஷனலாக நான் எவ்வளவு வீக் என்று பார்த்துக்கொள்ளுங்கள். சோகத்திற்கு மட்டுமே அழுது அந்த நான், சந்தோஷத்தில் என்னையறியாமல் தாரைதாரையாகக் கண்ணீர் ஊற்றிய படம் மைனா. சரியாகச் சொல்லவேண்டுமானால் மைனாவைத் தனது கைகளில் சுருளி தாங்கிக் கொண்டு கொண்டிருக்க இருவரும் சேர்ந்து பாடும் வரிகளான - “உன்ன நெனக்கையில பசி எடுக்கல, நடுநிசியில் விழி ஒறங்கல” என்ற இடம். கே.எஸ்.ரவிக்குமார் சொன்னது போல, அந்த பாடலோடு எனக்கு படம் முடிந்து விட்டது. அதன் பின் வந்த கிளைமாக்ஸை நான் மறந்துவிட்டேன்.

மைனாவிற்குப் பிறகு வந்த ‘கும்கி’ சின்ன ஏமாற்றத்தைக் கொடுத்தது. கும்கி யானையின் மேல் காட்டப்பட்ட கவனத்தை நாயகன் – நாயகி காதல் மேலும் காட்டியிருந்தால், மைனாவிற்கு இணையான காதல் காவியமாகியிருக்கும் கும்கி. இமானின் இசையும் பாடல்களும் இல்லையென்றால் அந்த ஜோடிக்கு இடையே காதலென்று ஒன்று இல்லவே இல்லை என்பது என் கருத்து. கொம்பன் யானையை மாணிக்கம் யானை கொன்று வெல்வதையும் சரியாகக் காட்டாமல், காதலையும் சரியாகக் காட்டாமல், திணிக்கப்பட்ட சோகத்துடன் படம் முடிந்தது.

அதன் பிறகு பிரபு சாலமன் ‘சுனாமி’ யைக் கையில் எடுக்கிறார் என்றதும் நான் ஜெர்க் ஆனது உண்மை. பாலா, வசந்தபாலனுக்குப் பிறகு “வலியைக் காட்டுகிறேன் பேர்விழி” என்று வரிசையில் நிற்பது பிரபு சாலமன் தான். எல்லாம் நன்றாகப் போய் கொண்டிருக்கும் வேளையில் பெரும் அதிர்ச்சி முகத்தில் அறைந்து அழ வைக்கும். அப்படித்தான் ‘கயல்’ கிளைமாக்ஸும் இருக்கும் என்று நம்பினேன். ஆனால் இது பரவாயில்லை.


மைனா, கும்கி, கயல் படங்களைக் கொடுத்து தமிழில் ஒரு Love Trilogy யை முடித்திருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். அவரது முந்தைய படங்களுக்கும் ரசிகனாக எனது விருப்பம் - பிரபு சாலமன் காதலிலிருந்து வெளியே வந்து மற்ற ஏரியாக்களையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும். திகட்டத்திகட்டக் காதலைச் சொல்லியாகிவிட்டது. இனி மீண்டும் மீண்டும் காதல் தான் என்றால் கட்டாயம் அலுத்துவிடும். காதலுக்கு இந்த மூன்று படங்கள் போதும். 

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...