2014 தமிழ் சினிமா - எனக்குப் பிடிக்காத 10 படங்கள்
6:01:00 AM
2014 ஆம் ஆண்டு தமிழில் 200க்கும் அதிகமான
படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் 80+ படங்களை நான் பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஆண்டின்
இறுதியில் நேரம், பணம் செலவழித்து நான் பார்த்த அந்தப் படங்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள்
சொல்லவே இந்தப் பதிவு. என்னைப் பொறுத்த வரை தியேட்டரில் போய் நாம் பார்க்கும்
ஒரு படம் ஒன்று நம்மை மகிழ்விக்க வேண்டும் அல்லது பிரம்மிப்பு, ஆச்சரியம் போன்ற பேருணர்ச்சிகளைக்
கிளறி வாய்பிளக்க வைக்க வேண்டும் அல்லது கருணை, பாசம், நட்பு, காதல் போன்ற நல்லுணர்ச்சிகளை
வெளிக்கொண்டு வந்து இதயம் கனக்கவோ, லேசாகவோ வைக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் டைம்-பாஸாகவாவது
இருக்க வேண்டும். இவை தவிர எந்தவொரு படத்தையும், சினிமாவில் இதுவரை நான் பார்க்காத, எனக்குத் தெரியாத எதையாவது புதிதாகக் கற்றுத்தரும் அந்தப் படம் கற்றுத் தரும் என்ற நம்பிக்கையுடனேயே அணுகுகிறேன். தமிழ் படங்களில் இந்த ஏரியா 100க்கு ஒன்று என்ற கணக்கில் தான் ‘கவர்’ ஆகும் என்பதால் மேல் சொன்னவற்றில் ஏதாவது ஒன்றையாவது செய்து என்னை திருப்தி செய்தால்
அது நல்ல படம். இவை எதிலுமே சேராமல் தண்டமுண்டமாக என்னை உட்கார வைத்துக் கழுத்தறுத்தால்
அது மோசமான படம்.
தியேட்டரில் பார்த்த போது எனக்குப்
பிடித்த சில படங்கள், அவற்றைப் பற்றி நண்பர்களுடன் பேசும் பொழும், விவாதிக்கும் பொழுது
பிடிக்காமல் போயிருக்கிறது. அந்த ரசனை மாற்றக் குழப்பங்களை எல்லாம் புறம்தள்ளிவிட்டு
தியேட்டரில் பார்த்த போது என்னை திருப்தி படுத்திய படங்கள், என்னை வெறுப்படைய வைத்த
படங்கள், ஓக்கே சுமார் என்று சொல்லவைத்த படங்களை இங்கு கொடுக்கிறேன்.
இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்து
மட்டுமே. எனக்கு பிடிக்காத பல படங்கள் கமர்ஷியலாகவும், மற்ற ரசிகர்களது பார்வையிலும்
பிடித்த, வெற்றி பெற்ற படங்களாக இருக்கலாம். அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.
எனக்கு அவை பிடிக்கவில்லை. அவ்வளவு தான். எனக்குப் பிடித்து, மற்றவருக்குப் பிடிக்காமல்
போன படங்களுக்கு அது பொருந்தும்.
முதலில் 2014 ஆம் ஆண்டு என்னை வெறுப்படைய
வைத்த படங்களைப் பற்றி அதன் தர வரிசையில் சொல்லிவிடுகிறேன்.
லிங்கா
நான் ஒரு மிகத்தீவிரமான சூப்பர் ஸ்டார்
ரசிகன். எனது சிவாஜி, எந்திரன் பட அனுபவங்களைச் சிலாகித்து நான் எழுதிய பதிவுகளைப்
படித்தவர்களுக்கு அது நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் லிங்கா என்றொரு ‘தலைவர்’ படம்
பார்த்ததையே நான் மறக்க விரும்புகிறேன். பாபா எனக்குப் பிடித்த படம். வள்ளியைக் கூட
சிலாகித்துப் பார்த்திருக்கிறேன். சந்திரமுகியை ஒரே வாரத்தில் 6 முறை தியேட்டரில் பார்த்த
எனக்கு லிங்காவை ஒரு முறை கூடக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. கடினமாக உழைத்திருக்கிறார்கள்,
அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதற்காகவெல்லாம் லிங்காவை ஏற்றுக்கொள்ளாவே முடியாது. “பரவாயில்லை,
அடுத்த முறை சரியாகச் படம் எடு ஒக்கே” என்று தட்டிக்கொடுக்க இவர்கள் என்ன நேற்று படமெடுக்க
வந்த சிறுவர்களா? அல்லது தயாரிப்பாளர் கொடுப்பதையே சம்பளம் என்று வாங்கிக்கொள்ளும்
புதியவர்களா? ஒரு சூப்பர் ஸ்டார் ரசிகனாக மட்டுமல்ல, ஒரு கே.எஸ்.ரவிக்குமார் ரசிகனாக,
ஒரு ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகனாக, ஒரு தமிழ் சினிமா ரசிகனாக லிங்கா பார்த்து பெருமளவில் ஏமாந்து
போய், புலம்பிப் புலம்பி நொந்து போனவர்களில் நானும் ஒருவன். சூப்பர் ஸ்டார் ஒன்று படம்
நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் அல்லது வயதிற்கேற்ற கதாப்பாத்திரங்களில் பட்டையைக்
கிளப்ப வேண்டும். இருக்கும் ரசிகர்களை இழந்துவிடக்கூடாது.
யான்
இந்தப் படத்தில் ஜீவா தனது நண்பர்களுடன்
சேர்த்து உட்கார்ந்து அரட்டையடிக்கும் அந்த ரூம் நன்றாக டெக்கரேட் செய்யப்பட்டிருந்தது
– இதைத் தவிர இந்தப் படத்தில் எனக்கு எதையுமே பிடிக்கவில்லை. கதை, திரைக்கதை அப்படியே
ஹாலிவுட் படம் ஒன்றின் காப்பி என்று தெரியவந்த போது மேலும் வெறுப்பானது. காப்பி அடிப்பது
என்று முடிவுசெய்த பிறகு எதற்கு இப்படி ஒரு மொக்கையான கதையைச் சுட வேண்டும். நல்ல கதையாக,
தமிழுக்கு ஏற்ற கதையாக நன்றாக அலசி ஆராய்ந்து தேந்தெடுத்திருக்கலாமே!
ஆடாம ஜெயிச்சோமடா
ஒரு படம் நன்றாக நடித்த சிம்ஹாவையும்,
சில படங்களில் நன்றாக காமெடி செய்த கிருபாகரனையும் மொத்தமாக கீழே இழுத்துப் போட்டு
உதைத்திருக்கிறது இந்தப் படம். ஒன்றுமே நன்றாக இல்லாத படத்தில் ஆங்காங்கே வலுக்கட்டாயமாகச்
சிரிக்க வேண்டி இருக்கிறது, நம்மை நாமே திருப்தி படுத்திக்கொள்ள. ‘மிர்ச்சி’ சிவாவின்
வசனத்தை மட்டுமே நம்பி இந்தப் படத்தை எடுத்திருப்பார்கள் போல.
ஜில்லா
சமீபத்திய விஜய் படங்கள் எனக்கு பிடித்திருந்தன.
ஆனால் சத்தியமாக ஜில்லாவைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. போதாத குறைக்கு மோகன்லால்
வேறு. டிசம்பர் மாதம் ஜார்ஜ்குட்டியாகப் பார்த்தவரை ஜனவரி மாதம் இப்படிப் பார்க்க எவ்வளவு
வெறுப்பாக இருந்தது என்பதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. முதல் நாள் முதல் காட்சி வேறு. காஜல் கொள்ளை அழகு. அதைத் தவிர படத்தில் ஒன்றுமே இல்லை.
பொங்கலன்று வெறுப்பானது தான் மிச்சம்.
அஞ்சான்
முதல் காட்சியில் இடைவேளையின் போதே
ரிசல்ட் தெரிந்து விட்டது என்றாலும் படத்ததைப் பார்த்தேன். இணைய ரசிகப்பெருமக்கள் கிழித்தெறிந்த
அளவிற்கு படம் மோசமில்லை என்றாலும் நிச்சயம் அஞ்சான் ஒரு மோசமான படம் தான். அளவுகோல்
மட்டும் தான் வேறுபடுகிறது. கருத்து ஒன்று தான்.
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
ரீமேக் படங்களான கண்டேன் காதலை, சேட்டை
தவிர இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கிய ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான் இரண்டுமே
எனக்குப் பிடித்த படங்கள். அதிலும் முதலாவது எனது ஆல்-டைம்-பேவரிட். அவரது ஒரு ஊர்ல
ரெண்டு ராஜா இவ்வளவு மொக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. முதல் பாதியில்
என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. விமல் – ஐய்யோ அம்மா, இவர் டைரக்டர்ஸ் ஹீரோவாக இருக்கலாம்
ஆனால் நிச்சயம் ரசிகர்களது ஹீரோ அல்ல. சூரி – இப்படியே போய்கிட்டு இருந்தா சீக்கிரம்
சிறப்பா வந்திரலாம்.
நான் சிகப்பு மனிதன்
‘நார்கோலப்சி’ என்ற கான்செப்டை மட்டும்
கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மிகவும் மோசமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
80களோடு தமிழ் சினிமா விட்டொழிந்த கற்பழிப்புக் காட்சியை படத்தின் பிரதானமாக வைத்தது
கூடப்பரவாயில்லை, அப்படிச் செய்ததற்கு வில்லன் சொன்ன காரணம் இருக்கிறதே, அது தான் படத்தை
என்னை வெறுக்க வைத்துவிட்டது. விஷாலின் மிக அருமையான நடிப்பு சாக்கடையில் களுவி ஊற்றப்பட்டிருக்கிறது.
தியேட்டரில் முதல் பாதி முழுக்க ஜாலியாக கொஞ்சி கொஞ்சிப் பேசி சுற்றியிருந்தவர்களை
டிஸ்டர்ப் செய்து கொண்டிருந்தது ஒரு ஜோடி. இடைவேளைக்கு முன் வரும் காட்சிகளைப் பார்த்து
அந்த பெண் தன் கணவன் / காதலனிடம் இப்படிச் சொன்னாள் “எனக்கு பயமா இருக்குது மாமா, போயிடலாம்”
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
Maryada Ramanna எனக்கு மிகவும் பிடித்த
S S ராஜமௌலி படம். அதை எவ்வளவு தூரம் கெடுக்க முடியுமோ அவ்வளவு தூரம் கெடுத்து எடுக்கப்பட்ட
படம் தான் சந்தானம் ஹீரோவாக நடித்த இந்தப் படம். சுடுநீர் கொண்டு வரும் வேலைக்காரனிடம்
“அக்குள்ள என்னடா கட்டி” என்றதும் அவன் கையைத் தூக்கி சுடுநீரைத் தன்மேல் ஊடிக்கொள்வான்
– இந்தக் காமெடி மட்டும் தான் எனக்கு படத்தில் இப்போது நினைவிருக்கிறது. குதித்து குதித்து நடந்த அந்த அழகான ஹீரோயின் முகம் கூட போஸ்டர் பார்த்த பின்பு தான் நியாபகத்திற்கு வந்தது. மிக மிக மோசமாக
ரீமேக் செய்யப்பட்ட படத்தில் முதலிடம் இந்தப் படத்திற்குத் தான்.
அரண்மனை
மசாலா கஃபே – சந்தேகமே இல்லாமல் ஒரு
laugh riot. தீயா வேலை செய்யனும் குமாரு கூட நன்றாகத் தான் இருந்தது. விஷால்-அஞ்சலி-வரலட்சுமி
நடித்திருக்கும் மதகஜராஜாவைப் பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன். ஆனால் ‘அரண்மனை’ மிக
மோசமான ஒரு படம். மனோபாலா - கோவை சரளா ஜோடி, ஹன்சிகாவின் வெள்ளந்தி நடிப்பு, லட்சுமி
ராயின் கிளாமர் இல்லையென்றால் இந்தப் படம் இந்த லிஸ்டில் நம்பர் ஒன் இடத்தைப் பெற்றிருக்கும்.
ஜஸ்ட் மிஸ்.
நீ எங்கே
‘Kahaani’ என்ன ஒரு அருமையான படம்!
அந்தப் படத்தை தெலுங்கு Anand, Happy days, Leader, Life is Beautiful படங்களைக் கொடுத்த
Sekhar Kammula நயன்தாராவை வைத்து ரீமேக் செய்யப்போகிறார், அது தமிழிலும் வரப்போகிறது
என்று தெரிந்ததும் நான் பரவசமானேன். முதல் நாளே படத்தையும் போய் பார்த்தேன். வெளியே
வந்து சுவற்றில் மோதிக்கொண்டு சாகாத குறை. நயன்தாரா நன்றாக நடித்திருக்கிறார். ஆனால்
தமிழுக்கு (அல்லது தெலுங்கிற்கு) ஏற்றவாரு மாற்றுகிறேன் என்று ஒரிஜினல் ஸ்கிரிப்டிற்கு
மிகப்பெரிய துரோகத்தைச் செய்திருக்கிறார்கள். படத்தில் ஒன்றுமே இல்லை.
மேல் சொன்ன படங்களுக்கு சற்றும் குறைவில்லாமல்,
ஜஸ்ட் மிஸ்ஸில் லிஸ்டிற்கு வெளியே போன படங்கள் கீழே. இந்தப் படங்களில் ஏதோ ஒன்று எனக்குப்
பிடித்திருந்தது. தரவரிசையெல்லாம் கிடையாது. அனைத்தையும் No#11 என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
புலிவால்
டமால் டுமீல்
தெனாலிராமன்
திருமணம் என்னும் நிக்காஹ்
பர்மா
பூஜை
திருடன் போலீஸ்
காடு
ஆ
மஞ்சப்பை
பொதுவாக படம் பார்த்தே அதன் தரத்தை
முடிவு செய்யும் பழக்கமுடைய நான், ரசிகர்களின் ஒருமித்த விமர்சனங்களாலே பார்க்காமல்
பயந்து ஒதுங்கிய அல்லது ஒதுக்கி வைத்த படங்கள்
ரம்மி
பட்டைய கெளப்பணும் பாண்டியா
வானவராயன் வல்லவராயன்
இரும்புக் குதிரை
பிரம்மன்
ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி
0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...