பிசாசு - நன்றி மிஷ்கின்!
6:00:00 AM
சில நாட்களுக்கு முன் ஒரு சம்பவம்.
காலை உணவு வாங்குவதற்காக வீட்டருகே இருக்கும் உணவகத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.
நான் தான் தூக்கம் கலையாமல் மிதந்து கொண்டிருந்தேனே தவிர, காலை நேரப் பரபரப்பில் பெங்களூர்
கதறிக்கொண்டிருந்தது. அப்போது எனக்கெதிரே, ரோட்டிற்கு அந்தப் பக்கம் இரண்டு “யுவதிகள்”
வந்து கொண்டிருந்தனர், மிகச் சிறிய ட்ரவுசர்களை அணிந்து கொண்டு. பெங்களூரில் இது சாதாரணம்
என்றாலும், அந்தக் காலை வேளைக்கு அது ஓவர் கவர்ச்சியாக இருந்தது. அவர்கள் என்னைக் கடந்து
போகும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைக் கடந்து சென்றவர்கள், அங்கு நின்று கொண்டிருந்த
ஒரு வயதான பெரியவரின் கைகளில் தாங்கள் வைத்திருந்த பார்சல் கவரைக் கொடுத்துவிட்டு,
“புலாவ்… சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றனர். பெரியவர் மெதுவக நடந்து, என்னைக்
கடந்து சென்றார். காலில் கிடந்த செருப்பைக் கழற்றி என்னை அந்தப் பெண்கள் மாறி மாறி
அறைந்ததைப் போல உணர்ந்தேன். அப்படித் தான் இருந்தது மிஷ்கினின் “பிசாசு” படத்தை இன்று
பார்த்த பொழுது.
தினம் தினம் பெங்களூரில் நான் பார்க்கும்
ஹை-கிளாஸ் பெண்கள் மேல் எனக்கிருந்ததைப் போலத் தான் “தமிழ் சினிமா” பற்றிய ஒரு மேலோட்டமான
ஒரு போலியான பிம்பம் ஒன்று நம் அனைவருக்குள்ளும் இருக்கிறது. அன்று நான் பார்த்த அந்தப்
பெண்களைப் போல ஒரு சில சினிமாக்கள் அந்த பிம்பத்தை மாற்றிப் போடும் போது, மிஷ்கின்
சொல்வது போல “நம் ஆன்மா சுத்தமாகிறது!”. சினிமாவை விடுங்கள், பேய்களைப் பற்றிய நமது
எண்ணம் என்ன? நமக்குத் தெரியாத விஷயத்தை நாம் இரண்டு விதமாகத் தான் பிரிக்கிறோம் ஒன்று
கடவுள், மற்றொன்று பிசாசு. ஆனால் அந்தப் பிசாசிற்குள் இருக்கும் கடவுளை வெளிச்சம் போட்டுக்
காட்டியிருகிறார் மிஷ்கின். அழகுப் பதுமையாக வலம் வந்த தாயில்லாத தனது ஒரே மகள் அகோர
உருவமெடுத்து ஆவியாக அலைவதைப் பார்க்கும் வயதான தந்தை தவழ்ந்து கொண்டே கதறுகிறார்,
“இங்க வேணாம்மா… வீட்டுக்கு வந்துரும்மா… நம்ம வீட்ல வந்து என் சாமியா இரும்மா என்
சாமீ…” என்று. இது தான் நமக்குச் சொல்லப்பட்ட பேய்க்கதைகளா?
பேயை விடுங்கள். பேய்ப்படங்கள்? ஒரு
படம் ஹிட்டாகி விட்டக் கொடுமையால் வதவதைவென்று வெளியேறிய பேய்ப்படங்களில் ஏதாவது ஒன்றாவது
தேறியதா? ‘ஆ’ பட விமர்சனத்தில் நான் சொன்னதையே தான் இங்கும் சொல்கிறேன் - // ‘பீட்ஸா’ஓடியதற்குக் காரணம் பேயல்ல, திகில். ‘யாமிருக்க பயமே’ஓடியதற்குக் காரணம் பேயல்ல, காமெடி. ‘முனி, ‘அருந்ததி’படங்களை மக்கள் பேய்க்காகப் பார்க்கவில்லை. ‘அரண்மனை’பேய் படமென்று சொன்னால் ‘லட்சுமி ராய், ‘ஹன்சிகா, ‘ஆன்ட்ரியா’கோபித்துக்கொள்வார்கள் (இம்மூவர் இருந்தும் படம் ஓடவில்லை)
// நாம் நிஜமாகவே பார்த்து பயந்த பழைய (முக்கியமாக Exorcist) பேய்படங்களைப் போலவே தொடங்கி,
அப்படியே வேறொரு நிலைக்குச் செல்கிறது படம். புதிதாக எதுவுமே இல்லை. அடுத்து என்ன நடக்கும்
என்று குழந்தை கூடச் சொல்லிவிடும். இறுதியில் ஒரு சின்ன டுவிஸ்ட் இருக்கிறது. ஆனால்
அதையெல்லாம்விட பல பெரிய பெரிய படா டுவிஸ்ட்களையெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். ஆனாலும்
படம் மனதில் நிற்கிறது. படத்தின் காட்சிகள் மனத்திரையில் ஓடுவது நிற்க மறுக்கிறது.
“என்னடா படம் எடுக்குறீங்க. பேய்ப்படம்னா எப்படி இருக்கனும் தெரியுமா?” என்று மிஷ்கின்
அந்த இயக்குனர்களைப் பார்த்து கேட்பது போல் இருக்கிறது.
படம் பற்றிய எனது பார்வையைப் பார்க்கும்
முன் - நீண்ட பதிவிற்கு முதலில் மன்னிக்கவேண்டும். மிஷ்கின், மிஷ்கின் படைப்புகள் பற்றி
நான் எழுதிய பிற கட்டுரைகளையும் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் படித்துவிடுங்கள். சொன்னதையே
சொல்ல வேண்டாமென்று சில விஷயங்களை இந்தக் கட்டுரையில் தவிர்த்திருக்கிறேன். ஏற்கனவே
எழுதிவிட்ட அவற்றை நீங்கள் தவற விட்டு விடக்கூடாது.
படத்திற்கு வருகிறேன்.
முதல் ஷாட் – “தேவதை எப்படி இருக்கும்?”
என்று யாராவது கேட்டால் “இவளைப் பார்” என்று கைகாட்டலாம் - அப்படியொரு அழகுப் பெண்ணின்
முகம் திரையில் தெரிகிறது. அப்படியே zoom out ‘ல் பின்னந்தலையில் ரத்தம் கசிய ரோட்டோரமாக
அவள் அடிபட்டுக் கிடப்பதைக் காண்கிறோம். அவளைப் பார்த்தபடி ஓடி வரும் நல் உள்ளங்களைக்
காண்கிறோம். அதில் நாயகனான சித்தார்த்தும் ஒருவன். இந்த முதல் காட்சியிலேயே மிஷ்கினின்
‘டச்’ ஒன்று இருகிறது. ஓடிவரும் கூட்டத்தில் ஒருவன், கர்பிணி மனைவியுடன் ரோட்டில் நடந்து
வந்து கொண்டிருக்கும் இளம் கணவன். மனைவியை பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு அடிபட்டவளை
சித்தார்த்துடன் சேர்ந்து ஆட்டோவில் அவன்தான் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்கிறான்.
உயிர் பிரியும் தருணத்தில் தன்னை மடியில் வைத்துத் தாங்கிச் செல்லும் நாயகனைக் காண்கிறாள்
அந்த தேவதை. அவன் கைகளை வாங்கி கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறாள். ஸ்டெச்சரில் கிடத்திய
அவளை மருத்துவர் வந்து பரிசோதிப்பதற்குள் உடல் மேலேறி இறுதியாக ஒரு முறை மூச்சு வாங்கி,
நாயகனைப் பார்த்து “அப்பா…” என்று கூறி உயிரை விட்டுவிடுகிறாள். மருத்துவர் “She
is dead. Parents க்கு inform பண்ணுங்க, ‘இத’ உள்ள தள்ளுங்க” என்று சொல்லிவிட்டுப்
போகிறார். நாயகன் கையில் அந்தப் பெண்ணின் ஒருகால் செருப்பு. அதில் கம்பெனி பெயர் ‘Princess’
என்று எழுதியிருக்கிறது
இந்த மிஷ்கினைச் செருப்பால் அடிக்க
வேண்டும். ஏ.ஸி தியேட்டரில், ஈஸி சேர் ஸோபாவில் அமர்ந்து வரிசையாக வீடு வாங்கு, கார்
வாங்கு, துணி வாங்கு, நகை வாங்கு என்று கூவும் விளம்பரக்காரர்களை எல்லாம் கடந்து, புகை
பிடித்து இருமிச் சாகுபவனையும் பொறுத்துக்கொண்டு, ஒரு வழியாக படம் பார்க்கத் தொடங்கினால்,
ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே இதயம் கனத்து, கண்கள் தானாகக் கலங்கத் தொடங்கிவிடுகிறது.
இதற்கு பாலா தேவலாம். இறுதியில் தான் அழ வைத்து அனுப்புவார். ‘குதூகலம்’, ‘சந்தோஷம்’,
‘ஆனந்தம்’ போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் என்னவென்றே தெரியாத மிஷ்கின் போன்றவர்களின்
படத்தைப் பார்ப்பதற்கென்றே ஒரு தனி மனநிலையைச் ‘செட்’ செய்து வைத்துக்கொண்டுப் போக
வேண்டும்.
நாயகி இறந்து, அவள் நினைவால் நாமும்
நாயகனும் கலங்கியிருக்கும் நேரத்தில் நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது தமிழச்சி எழுதிய
அந்தப் பாடல்…
“போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள் விலகும் அகஒளியில்
அன்னம் பகிர்ந்திடு
அன்னம் பகிர்ந்திடு”
அருள் (எ) Arrol Corelli. “இவன பார்த்த
உடனே தெரிஞ்சிருச்சு. எப்படி ‘பிசாசு’ அப்படின்ற டைட்டில் எனக்காக காத்திருந்துச்சோ,
அதே மாதிரி எனக்காகவே அஞ்சு வயசிலருந்து வயலின் பழகியிருக்கான் இவன்” – Maestro இளையராஜாவை
தனது முந்தைய படத்திற்கு இசையமைக்க வைத்தவர், ஒரு சிறுவனை, புதியவனை இப்படிச் சொல்கிறார்.
மிஷ்கினின் கணக்குத் தப்பவில்லை. படம் முழுவதும் பயணிக்கிறார் Arrol. நாயகனே ஒரு வயலினிஸ்ட்
தான் என்பதால் படம் முழுக்க மிக மிக அருமையான வயலின் நோட்ஸ்கள் இரைந்து கிடக்கிறது.
படத்தின் இசை எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு மிஷ்கின் சத்தமில்லாமல் வெளியிட்ட சின்னச்
சாம்பிளான அந்தப் பாடல் ஏற்படுத்திய உணர்வு அலையை எந்த ஒரு பெரிய இசை வெளியீட்டு விழாவும்
ஏற்படுத்தியிருக்காது. கேட்டுக்கொண்டே இருக்கிறேன் அந்தப் பாடலை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
போல் படத்தை இசையால் நிறைத்து விடாமல், தேவையான இடங்களில் நிசப்தத்தையும் அருமையாகப்
பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் தியேட்டரில் யாரும் கமெண்ட் செய்து மொமென்டைக்
கெடுக்காமல் இருக்க இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்.
ஒரு பாட்டு வைத்தாயிற்று. படத்தில்
ஒரு ஃபைட்டும் உண்டு. சண்டைக்காட்சிகள் எடுப்பதில் மிஷ்கினிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’ போல் இல்லாமல், நன்றாக, ‘இயற்கையாக’ அதே சமயம் முகமூடி போல்
Perfect ஆகவும் இல்லாமல், ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ விட நேர்த்தியாக, உண்மையாக இருக்கிறது
அந்த ஒரு சண்டைக்காட்சி. பாட்டு, ஃபைட்டு ஓக்கே. காமெடி? காதல்? இரண்டும் இருக்கிறது.
காமெடி ஓக்கே. ஆனால் மிஷ்கின் சொல்லியிருக்கும் அந்தக் காதல், அவரால் மட்டுமே கொடுக்கக்கூடிய
ஒன்று, அவர் படங்களைப் புரிந்தவர்களால் மட்டுமே அனுபவிக்கக்கூடிய ஒன்று. குத்துப்பாடல்
இல்லை.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய P C ஸ்ரீராமை
அணுகியிருக்கிறார்கள். அவர் தனது சிஷ்யனைக் கைகாட்டியிருக்கிறார். ஒளிப்பதிவில் மிஷ்கினின்
‘டச்’ உம் இருக்கிறது, அதே சமயம் புதுமையாகவும் இருக்கிறது. கேட்டதைச் செய்து கொடுத்திருக்கிறார்
ஒளிப்பதிவாளர் ரவி ராய். ஷாட்-பை-ஷாட் முழுவதுமாக Story Board, Shots with lighting
description எல்லாம் கொடுத்திருக்கிறார் மிஷ்கின். இயக்குனர் மனதில் நினைத்தைதைக் கொண்டுவந்துவிட்டால்
மட்டுமே போதும். கொண்டுவந்திருக்கிறார். சொல்லப்போனால் இது வரை வந்த மிஷ்கின் படங்களிலேயே
கொஞ்சம் அதிகமான weird angles நிறைந்த படமென்று பிசாசைச் சொல்லலாம். ‘Fish Eye’ எனப்படும்
கேமரா கோணத்தை மிக நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார்கள். பிசாசின் பார்வையில் வரும்
காட்சிகளில் ஒருவிதக் குழப்ப மனநிலையைத் தரும் காட்சியமைப்பு, ஒளிப்பதிவு, லைட்டிங்
அருமை.
நாயகன் சித்தார்த்தாக ‘நாகா’. படத்தில்
அவன் ஒரு வயலினிஸ்ட் (Violinist). ஒற்றைக் கண்ணை முற்றிலுமாக மறைக்கும் நீண்ட முடி,
சரியாக வளராத கசமுசா காட்டுத்தாடி என்று போஸ்டரில் பார்க்கவே ‘கஞ்சா குடிக்கி’ போல்
இருந்தான். “எதற்கு இவ்வளவு மோசமான ஒரு ஹேர்ஸ்டைல்?” என்று தோன்றியது. அந்த கெட்டப்பிற்கு
மிஷ்கின் கொடுத்த விளக்கம், படம் பார்க்கும் போது அதையே ரசிக்க வைத்துவிட்டது. “ஒரு
கண்ணை மூடிக்கொண்டு, ஒற்றைக்கண்ணால் தான் என் நாயகனும் சரி, நாமும் சரி இந்த உலகத்தையும்,
ஆன்மாக்களையும் பார்க்கிறோம். நம் பார்வையத் தாண்டி அங்கு வேறு விஷயங்கள் இருக்கிறது.
அதனால் தான் ஹேர்-ஸ்டைலை அப்படி வைத்தேன்” என்பது தான் அந்த விளக்கம். புதியவர் என்பதால்
படத்தில் நான் மிஷ்கினைத் தான் பார்த்தேன். ‘ஓ.ஆ’ ஸ்ரீக்கும் இவருக்கும் உருவத்திலும்
சரி, நடிப்பிலும் சரி பெரிய வித்தியாசமில்லை. இருவருமே மிஷ்கின் சொல்பேச்சு கேட்டு
அவர் சொன்னதைச் செய்திருக்கிறார்கள். சில இடங்களில் இவரது ரியாக்ஷன்களிலும், நடவடிக்கைகளிலும்
மிஷ்கின்தன weirdness இருந்தது என்றாலும், முந்தையப் பட நாயகர்களுக்கு நாகா எவ்வளவோ
பரவாயில்லை.
தேவதையாக ‘பிரயாகா’. அழகுப் பெண். ஆனால்
இவரது அழகு முகம் இரண்டே காட்சிகளில் தான் காட்டப்படுகிறது. ஆனால் அதுவே போதுமானதாக
இருக்கிறது. ஸ்கூட்டியில் வரும் அந்த ஒரு காட்சியில் இவர் முதுகிற்குப் பின்னால் இறக்கைகள்
இருக்கிறதா என்று நான் தேடிக்கொண்டிருந்தேன்.
அன்புத் தந்தையாக ராதாரவி. இதுவரை நாம்
பார்த்த வில்லன் ராதாரவி காணாமல் போய், ஒரு கேரக்டர் ஆர்டிஸ்டாக புதிதாக அறிமுகமாகியிருக்கிறார்.
மகளைத் தொடர்ந்து சென்று அவர் பேசும் இடங்களில் - அழ வேண்டாம், சிரித்தால் அவனெல்லாம்
மனிதனே இல்லை. உச்சகட்ட உணர்ச்சிமயமான நடிப்பு. இவரும் எண்ணி ஐந்தே காட்சிகளில் தான்
வருகிறார், ஆனால் கலங்கடித்து விடுகிறார்.
மிஷ்கினின் படத்தில் இருக்கும் பிரச்சனையே
இதுதான். அனைவரும் நல்லவர்களாக இருக்கிறார்கள். பெரும் தவறு செய்தவர்கள் கூட மிகச்
சுலபமாக மன்னிக்கப்படுகிறார்கள். படத்தில் இரு நண்பர்கள் கதாப்பாத்திரம் உண்டு. கிட்டத்தட்ட
படம் முழுக்க நாயகனுடன் பயணிக்கும் அவர்களும் நம்மை வசீகரிக்கத் தவறவில்லை. முதன் முதலில்
பேயுடனான encounterல் இவர்களது ரியாக்ஷன்கள் அருமை. ‘சித்தார்த அம்மா’ என்று அன்பாக
அழைக்கும் பக்கத்துவீட்டு அம்மா, தன்னை அடித்துத் துன்புறுத்தும் கணவன் அடிபட்டுக்கிடப்பதைப்
பார்த்துத் துடித்து, அவன் மானம் மறைக்கும் மனைவி, காசு வாங்க மறுக்கும் ஆட்டோகாரர்,
திருடனாக இருந்தாலும் தன் மனைவியை உயிராக நேசிக்கும் கணவன் என்று கையடக்கக் கேரக்டர்களாக
இருந்தாலும், மனதில் நிற்கிறார்கள். என்ன ஒரு குறை அந்த அப்பார்ட்மெண்ட் சிறுவனை இன்னும்
கொஞ்சம் உபயோகித்திருக்கலாம். “ப்ரோ உங்கள பத்திதான் பேசிகிட்டு இருந்தோம் ஒரு நூறு
ருவா சில்லர கிடைக்குமா” குரூப் தேவையில்லையென்றாலும், interesting ஆக இருந்தது.
‘The Shining’ பட Lift Lobby யை நினைவுப்படுத்தும் அந்த அப்பார்மெண்ட் வீடு அருமை. மிஷ்கின் படங்களில் காலியாகக் கிடக்கும் தெருக்களுக்கு பதில் இங்கு காலியாகக் கிடக்கும் ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பு. ஐந்தாறு பேரைத் தவிர அங்கு ஆளே இல்லை. மிஷ்கின் இந்த விஷயத்தை அவசியம் கவனிக்க வேண்டும்.
‘The Shining’ பட Lift Lobby யை நினைவுப்படுத்தும் அந்த அப்பார்மெண்ட் வீடு அருமை. மிஷ்கின் படங்களில் காலியாகக் கிடக்கும் தெருக்களுக்கு பதில் இங்கு காலியாகக் கிடக்கும் ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பு. ஐந்தாறு பேரைத் தவிர அங்கு ஆளே இல்லை. மிஷ்கின் இந்த விஷயத்தை அவசியம் கவனிக்க வேண்டும்.
குறையே இல்லையா என்று கேட்பவர்களுக்கு
– இது ஒரு மிஷ்கின் படம். மிஷ்கினின் முந்தைய படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால்
இந்தப் படமும் உங்களுக்குப் பிடிக்கும். “மிஷ்கின் ஒரு திமிர் பிடித்த அடாவடி, ஃபாரின்
படத்துலருந்து சுடுறவன்” போன்ற தனிமனித பிம்பங்களைத் தள்ளி வைத்துவிட்டு ஒரு படைப்பாக,
சினிமாவாக மட்டும் இந்த படமென்றல்ல எந்த ஒரு படத்தையும் அணுகுபவர் நீங்கள் என்றாலும்
இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும். படைப்பு தாண்டி “தமிழ் சினிமா உருப்படாது, கமல் ஒரு பொம்பள பொறுக்கி, பார்த்திபன்
ஒரு கிறுக்கன், செல்வா ஒரு சைக்கோ, கௌதம் தமிழ்ல இங்கிலீஷ் படம் எடுக்குறவன்” போன்ற
கலை தாண்டி தனிமனித பிம்பம் தான் உங்களது சினிமா ரசனையை தீர்மானித்துக்கொண்டிருக்கிறது
என்றால் இந்தப் படம் சத்தியமாக உங்களுக்குப் பிடிக்காது. படத்தைப் பார்க்காமல் இருப்பதே நல்லது.
படத்தில் எனக்குப் பிடிக்காத விஷயங்கள்
என்றால், கிளைமாக்ஸில் ‘ரோப்’ உபயோகித்திருப்பதற்கு பதில் சி,ஜியில் கலக்கியிருக்கலாம்.
என்ன காரணமோ தெரியவில்லை ஆளைக் கட்டிப் பறக்க விட்டிருக்கிறார்கள். அது எடுபடவில்லை.
அதே போல படம் சட்டென்று முடிந்துவிட்டதைப் போலவும் தெரிந்தது. இரண்டு மணிநேரத்திற்குள்
முடிக்க வேண்டும், தேவையில்லாமல் எதையும் காட்டிக்கொண்டிருக்கக்கூடாது என்று முடிவு
செய்து ‘கட்’ (படத்தொகுப்பு கோபினாத்) செய்திருப்பது சரிதான் என்றாலும், இன்னும் கொஞ்சம்
காட்சிகளைச் சேர்த்திருக்கலாம், முக்கியமாக பேயோட்ட முயற்சிக்கும் காட்சிகளை இன்னும்
கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாம். ஆவி அமலா நெத்தியடி.
போஸ்டர்களில் மிஷ்கின், படத்திற்காக
உழைத்த மற்ற கலைஞர்களின் பெயர்களைப் போடாதது இப்பவும் எனக்கு வருத்தம் தான். படம் வெளியாகிவிட்டது.
அவர்கள் அனைவரும் நிச்சயம் கவனிக்கப்படுவார்கள் என்றாலும், போஸ்டரில் பெயர் வருவது
அவசியம். போஸ்டரில் தான் இப்படி படத்தில் வழக்கம் போல எல்லாம் ஓடி முடிந்த பிறகு கடைசியாக
‘எழுத்து-இயக்கம்’ மிஷ்கின் என்று வருகிறது. முதல் நாள் முதல் காட்சி பார்த்த 20 சொட்சம்
பேரில் என்னைப் போலவே மிஷ்கின் பெயருக்காக காத்திருந்தது ஒரே ஒரு ஜோடி மட்டும் தான்.
“கிளைமாக்ஸ் பிடிக்கலையா எந்திருச்சு போ” என்று சொல்லும் மூத்த இயக்குனர் இருக்கும்
இதே தமிழ் சினிமாவிலிருந்து ஒரு இயக்குனர் தன் பெயரைப் பார்க்க இருபதில் மூன்றுபேரை
காத்திருக்க வைத்தார். அதுதான் உண்மையான வெற்றி.
விட்டால் நான் எழுதிக்கொண்டே போவேன்.
மனம் முழுக்க “பிசாசு” தான் குடிகொண்டிருக்கிறது. படத்தை அவசியம் தியேட்டரில் பாருங்கள்.
ஒரு நல்ல படம், நல்ல பேய் படம், மிஷ்கின் படம் அனைத்தும் பார்த்த திருப்தி கிடைக்கும்.
அஞ்சாதே, யுத்தம் செய் படங்களுடன் இதை ஒப்பிட வேண்டாம். அவை வேறு, இந்தப் ‘பிசாசு’
வேறு. இப்படி ஒரு படத்தைத் தயாரிக்க முன் வந்த இயக்குனர் பாலாவுக்கு நன்றி (இனம் இனத்தோடு
தான் சேரும்). அர்த்தமில்லாக் காமெடிக்குச் சிரித்து ஒரு ‘பேய்’ படத்தை வெற்றி பெற
வைத்த நமக்கு இந்தப் படத்தையும் வெற்றி பெற வைக்க வேண்டிய கடமை இருக்கிறது. என் கடமை
ஒரு நல்ல படத்தை, “நல்ல படம் மறக்காம தியேட்டர்ல போய் பாருங்க” என்று 4 பேருக்காவது
சொல்வது. சொல்லிவிட்டேன்.
“Movie making is not an ambitious
rat-race. Movie making is getting melted in a creative process” என்று சொல்கிறார்
மிஷ்கின்.
“I was truly melted” என்று சொல்கிறேன்
நான்.
நன்றி மிஷ்கின்.
10 comments
“ப்ரோ உங்கள பத்திதான் பேசிகிட்டு இருந்தோம் ஒரு நூறு ருவா சில்லர கிடைக்குமா” sir ella scene laum avan T shirt paruga..... America Flag T shirt potu irupan...... so America Karan Ivolo Decent a Kevalapaduthi..... kadaisila kundila kuthu vaganu varaikum..... superb myskin sirrr
ReplyDeleteஇது மாதிரியான nuances படம் முழுக்க இருக்கு. மிஷ்கின் மிஷ்கின் தான் :)
Deleteரொம்ப நாளாச்சு இவ்வளவு அழகான ரிவ்யூவை படிச்சு..என் ட்விட்டர்ல ஷேர் பண்ணிருக்கேன்.
ReplyDeleteநன்றி :)
DeletePadam suparo super
ReplyDelete:) மிஷ்கின் _/\_
Deleteபடம் பார்த்த பிறகு, ஒரு வேளை விமர்சனம் எழுத நினைத்தால் அதையும் முடித்து விட்ட பின் ........... இங்கே வந்து வாசிக்கிறேன்.
ReplyDeleteநன்றி... அவசியம் வாசித்து விட்டு உங்களது கருத்துக்களைக் கூறுங்கள்...
Deleteஅருமையான விமர்சனம்ணா ! நா நாளைக்குத்தான் பார்க்கனும் . பார்க்கற ஆவல் அதிகரிச்சிடிச்சி உங்க விமர்சனத்தால !
ReplyDeleteநன்றி :) அவசியம் படம் பாருங்க. உங்க கருத்தையும் சொல்லுங்க...
Deleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...