THE TIGER : AN OLD HUNTER'S TALE (2015)

5:25:00 AM

உலக கமர்ஷியல் சினிமா சந்தையில் தென்கொரிய சினிமா தொடர்ந்து முன்னிலையில் இருப்பதற்கும், உலகம் முழுவதும் கொரிய சினிமாவிற்கு ரசிகர்கள் இருப்பதற்கும் இது போன்ற படங்கள் தான் காரணம்.

மலைத்துப்போய் உகார்ந்திருக்கிறேன். ஹாலிவுட்டிற்கு ஒரு Life of Pi (2012) என்றால், தென்கொரியாவிற்கு இந்த படம். CG இல் கொரியர்கள் உருவாக்கியிருக்கும் புலி(கள்) அவ்வளவு தத்ரூபம். முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு ஹாலிவுட்டிற்கு சவால் விட்டிருக்கிறது தென்கொரியா.

தனது குகையை விட்டு வெளியே வந்து காட்டைப் பார்த்து கர்ஜிப்பதாகட்டும், கம்பீரமாக பாறையின் மேல் ஏறி நிற்பதாகட்டும், தனது குட்டிகளுடன் விளையாடுவதாகட்டும், கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு படையையே துவம்சம் செய்வதாகட்டும், அடிபட்டு நகர முடியாமல் படுத்துகிடப்பதாகட்டும் - வெவ்வேறு நிலைகளில் நிஜப்புலி ஒன்றை கச்சிதமாக நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள். குட்டிப்புலிகள் கொள்ளை அழகு. வெள்ளை பனிசூழ்ந்த மலைப்பிரதேசத்தில் சிவப்பு ரத்தத்தால் புலி நடத்தும் கோர வேட்டையின் அழகியலை விவரிக்க வார்த்தகள் இல்லை. கிளைமாக்ஸ் காட்சி சினிமா ரசிகனுக்கு கிடைக்கூடிய உச்சகட்ட காண் அனுபவம். உபரித் தகவல்: புலிகளைத் தவிர ஓநாய்க்கூட்டம் ஒன்றும் படத்தில் உண்டு!

கொரியாவை ஜப்பான் ஆண்டு கொண்டிருந்த சமயம் நடக்கிறது கதை. புலிகள் கொரியாவின் பெருமை சொல்லும் மிருகமாகக் கருதப்படுகிறது. அதனாலேயே புலிகளைக் கொன்று குவிப்பதில் அதிக கவனம் செல்லுத்துகிறார்கள் ஜப்பானிய அதிகாரிகள். மொத்தக் கொரியாவிலுள்ள புலிகளும் வேட்டையாட்டப்பட்டிருக்க, Jirisan மலைபிரதேசத்தில் இருக்கும் ஒரே ஒரு ‘ஒற்றைக்கண்’ புலியை மட்டும் யாராலும் வேட்டையாட முடியாமல் இருக்கிறது. அந்த மலையில் ராஜா என்றழைக்கப்படும் அந்தப் புலியை வீழ்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறான் ஜப்பானிய கவர்னர் ஒருவன். வேட்டைக்குழுக்கள் பல அந்தப் புலியை மடக்க முயற்சித்துத் தோற்றுப்போக முன்னால் வேட்டைக்காரனான Man-duk என்பவனைத் தேடி வருகிறாரகள். Man-duk ஆல் அந்தக் கடைசிப் புலியைக் கொல்ல முடிந்ததா இல்லையா என்பது தான் கதை.

மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையே நடக்கும் இந்தக் கதையில் ஏகப்பட்ட லாஜிக் இல்லா, க்ளீஷே சென்டிமென்ட் விஷயங்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மறைத்துவிடுகிறது படத்தின் டெக்னிக்கல் சமாச்சாரங்கள். மலைப்பிரதேசத்தின் பிரம்மாண்டத்தை வைட் ஆங்கிள் ஷாட் மூலமும், மற்ற காட்சிகளைப் பெரும்பாலும் க்ளோஸ்அப் (close-up) அல்லது மிட் (mid) ஷாட் மட்டுமே பயன்படுத்தி காட்டியதிலும் – இப்படிக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு புதியதொரு அனுபவத்தைக் கொடுத்தது படம். இசை படத்தில் பெரும்பங்காற்றியிருக்கிறது.

Man-duk ஆக நடித்திருப்பவர் கொரிய சூப்பர் ஸ்டார் Choi Min‑sik. படத்திற்குப் படம் பட்டையைக் கிளப்புகிறார். வயதான, மனைவியை இழந்த, தனது ஒரே மகனுக்காக மட்டுமே வாழும் மலைவாசியை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். Choi Min‑sik’யே தூக்கிச்சாப்பிட்டு விடுகிறது கிராபிக்ஸ் புலி. வேட்டைக்காரர்கள் வைக்கும் ஒவ்வொரு பொறியிலிருந்து தப்புவதும், அவர்களது கண்களில் மண்ணைத் தூவி விட்டு யாரும் எதிர்பாராத நேரத்தில் தாக்குவதுமாக புலி “கதாப்பாத்திரத்தை” பக்காவாக ஸ்கெட்ச் செய்திருக்கிறார்கள்.

Choi Min‑sik க்கு அடுத்து, அதிகம் கவர்ந்தது Jung Man-sik. இவரது முகத்தில் இருக்கும் தழும்பு மேக்-அப்’பும் அதற்கான பிளாஷ்பேக்கும் – சூப்பர்! பல படங்களில் துணைக்கதாப்பாத்திரங்களில் பார்த்திருந்தாலும் இந்தப் படத்தில் மட்டும் தான் மனதில் நின்றார்.

படத்தை இயக்கி இருப்பவர் I saw the Devil (2010), The Unjust (2010) போன்ற அட்டகாசமான படங்களுக்குத் திரைக்கதை எழுதியவரும், இதே Choi Min‑sik நடித்த New World (2013) படத்தின் இயக்குனருமான Park Hoon-jung.

‘பாகுபலி’ இல் கதை, லாஜிக் போன்ற இல்லாத, அந்தப் படத்திற்குத் தேவையில்லாத சமாச்சாரங்களைத் தேடிக்கொண்டிருந்தவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டாம். Avatar, பாகுபலி, Life of Pi போன்ற படங்களில் இருந்த மேஜிக்கை ரசித்துப்பார்த்தவர் நீங்கள் என்றால் இந்தப் படம் உங்களுக்கானது. மற்றபடி இந்தப் படத்தில் ‘ஒன்றுமே’ இல்லை.

படத்தின் டிரைலர் - https://www.youtube.com/watch?v=4pVW4zm9hPQ

பி.கு:

VFX காட்சிகாளைச் வடிவமைத்திருப்பது The Host, Old Boy, Thirst, Jeon Woochi: Taoist Wizard, I'm a Cyborg But That's Ok, The Warrior போன்ற படங்களில் பணியாற்றிய தென்கொரியாவின் 4th Creative Party என்ற கம்பெனி.

இந்தக் கம்பெனி வெளியிட்டுள்ள படத்தின் VFX Breakdown பற்றிய காணொளி - http://www.cgmeetup.net/…/the-tiger-an-old-hunters-tale-vf…/. படம் பார்த்தபின் இந்த வீடியோவைப் பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...