HAEMOO aka SEA FOG (2014)

6:28:00 AM

மீன்பிடி தொழில் கைகூடாததால், தனது படகின் மூலம் திருட்டுத்தனமாக சீன அகதிகளை கொரியாவிற்குள் கடத்திக்கொண்டு வந்து பணம் பண்ண முடிவு செய்கிறார் Captain Cheol-joo. முதலில் பயப்படும் குழு (crew), நெருக்கும் பணத்தேவை காரணமாக வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவிக்கின்றனர். ஏஜெண்ட் கொடுக்கும் முன் பணத்தை வாங்கிக்கொண்டு சீன எல்லையிலிருந்து (நடுக்கடலில்) 25 அகதிகளை தங்களது படகில் ஏற்றுகின்றனர். முதல் முறையாக இப்படி ஆட்கடத்தலில் ஈடுபடுவதால் குழுவிற்கும் சரி கேப்டனிற்கும் சரி எதை எப்படிச் செய்ய வேண்டும், அகதிகளை எப்படி அணுகவேண்டும் என்று ஒன்றும் தெரியவில்லை. கடற்போலீஸார் தொல்லை ஒருபுறமிருக்க, பனியும், மழையும் ஒரு பக்கம் படாதபாடு படுத்துகிறது.

இப்படியான ஒரு மோசமான சூழலில் அந்தப் படகில் இருப்பவர்களுக்கு அந்த தினம் என்ன ஆனது என்பது தான் Haemoo படத்தின் கதை.

சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படம்.

2011 ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற செய்தி பேரதிர்ச்சியாக இருந்தது. படத்தின் கிளைமாக்ஸ் (சுமார் அரைமணிநேரம்) நம்மை உலுக்கப்போவது உறுதி. படத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு வர எனக்கு சிறிது நாட்களானது. நம்மவர்களும் இப்படித்தான் உயிரைப்பணயம் வைத்துக் குழந்தைகளையும் பெரியவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு பிழைக்க வேண்டி கடல் தாண்டி பயணித்தனர் என்று நினைக்கும் போதே மனம் பதறுகிறது. 25 பேர் கதையை ஆவணப்படுத்தி, அதை மேடை நாடகமாக்கிப் பிரபலப்படுத்தி, சினிமாவாக எடுத்து இப்போது உலகத்திற்கே சொல்லியிருக்கிறார்கள். லட்சம் பேருக்கு நடந்த லட்சம் கதைகளை என்று, எந்த வகையில் நாம் ஆவணப்படுத்தப்போகிறோம் என்பது தான் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இயக்குனர் Shim Sung-boo
இயக்குனர் Shim Sung-boo விற்கு இது முதல் படம். ஆனால் - Memories of Murder (2003) திரைப்படத்தை இயக்குனர் Bong Joon-hoo வுடன் சேர்ந்து எழுதிய வித்தைக்காரர் இவர். Captain Cheol-joo ஆக Kim Yoon-seok. இவரைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் (பார்க்க The Classified File -https://goo.gl/S1jZLI). ஒவ்வொரு படத்திலும் அசத்துகிறார். இவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் பார்க்க வேண்டிய படங்கள். இந்தப் படத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

ஒளிப்பதிவைப் பற்றிக்குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் மூடுபனியினூடே நடக்கிறது. கண்ணாமூச்சி ஆடும் இயற்கையும் அந்த இடத்தில் படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாக மாற்றியிருப்பது ஒளிப்பதிவின் சிறப்பு.

அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம். படத்தைப் பற்றி மேலும் எதையும் படிக்க வேண்டாம். அந்த அகதிகளுக்கு என்ன ஆனாது என்ற சஸ்பென்ஸ் தெரியாமல் படம் பார்த்தால் இம்பாக்ட் இன்னும் நன்றாக இருக்கும்.

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...