2014 தமிழ் சினிமா - எனக்குப் பிடித்த 10 படங்கள்

7:27:00 AM

முதல் 5 படங்களை வெகுசுலபமாகத் தேர்ந்தெடுத்து விட்டேன். ஆனால் அடுத்த ஐந்தை தேர்தெடுப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. உடனே “அவ்வளவு நல்ல படங்களா வந்துச்சு?” என்று யோசிக்க வேண்டாம். சென்ற வருடங்களை வைத்துப் பார்க்கும் பொழுது 2014 ஆம் ஆண்டு பெரும் மொக்கைகள் பல வந்திருக்கின்றன. முழுவதும் சுவாரஸ்யமாக இல்லாமல், முதல் பாதி மட்டும் சுவாரஸ்யமாக ஏகப்பட்ட படங்கள் வந்திருக்கிறது. ஆக பெரும்பாலான படங்கள் சுமார் அல்லது ஒரு முறை பார்க்கலாம் ரகம் தான். நான் கொடுத்திருக்கும் இந்த லிஸ்டில் உள்ள படங்கள் அனைததும் நல்ல படங்கள் கிடையாது. ஆனால். இந்தப் படங்களைப் பார்த்து விட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்த பொழுது திருப்தியாக இருந்தது. அது தானே முக்கியம்.

10) யாமிருக்க பயமே 
TOP 10 இடத்திற்குள் நிச்சயம் இந்தப் படத்தைக் கொண்டு வந்துவிடவேண்டும் என்று படம் பார்த்த அன்றே முடிவு செய்துவிட்டேன். தியேட்டரே விழுந்து விழுந்து சிரித்த படத்தைப் பார்ப்பதெல்லாம் வெகு அபூர்வம். அவ்வளவு தரமான படமெல்லாம் கிடையாது என்றாலும் வெகுவாக ரசித்துப் பார்த்த படம். ‘பேய் காமெடி’ என்ற பெயரில் இந்த ஒரு படம் ஹிட் ஆனாலும் ஆனது தமிழில் வதவதவென்று பல பேய்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவை எதுவுமே இதன் அருகில் கூட வர முடியாது என்பதே உண்மை. பத்து பேர் சேர்ந்து எழுதியது போல கலவையான, புதிதான டிராக்குகள் படம் முழுக்க வந்து வயிறைப் பதம் பார்த்தது. “பாஸ்… உங்க மேல யாரோ குத்த வச்சு ஒக்காந்திருக்காங்க” – Laugh Riot. “வாடா வாடா பன்னி மூஞ்சி வாயா” ஹிட் ஆகும் என்று நினைத்த இயக்குனரைன் கர்ஸை பாராட்டியே ஆக வேண்டும். ஒரே மாதிரி இருந்தாலும் கருணாகரனது காமெடி ரசிக்கும்படி இருக்கிறது. ஆனால் இதே டிரெண்ட் எத்தனை நாளைக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை. ‘கழுகு’ புகழ் கிருஷ்ணா தமிழ் சினிமா பரமபதத்தில் இந்தப் படம் மூலம் சட்டென்று ஒரு ஏணியைப் பிடித்து மேலேறிவிட்டார். ஓவியா – களவாணியில தாவணில வந்த சின்னப்பொண்ணு, இதுல ஜெயமாலினி, சில்க் செய்த வேடம். வெகு நாட்களுக்குப் பிறகு தீபா மஞ்சரி, அழகு. சிறந்த படமெல்லாம் இல்லை ஆனால் சிரிப்பு கியாரண்டி.

9) மான்கராத்தே
படத்தில் ஒன்றுமே இல்லை. ஆனால் பரம திருப்தி. சிவகார்த்திகேயனைத் தவிர இந்தப் படத்தில் வேறு யாரையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை. அதன் அவசியமும் இல்லை. முந்தைய படங்களை விட செம ஸ்டைலாக, யூத் ஆக இருந்தார். அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு அசுர பலம். ஹிந்திப்பட தரத்தில் இருந்த ஒளிப்பதிவும் அபாரம். ஹன்சிகாவிற்கு இது மற்றுமொரு படம். அவ்வளவு தான், டார்லிங்கு டம்பக்கு பாடல் மட்டுமே இவர் அந்த படத்தில் நடித்தார் என்பதை எனக்கு நினைவுபடுத்துகிறது. சிவகார்த்திகேயனுக்கு இன்னும் சில படங்கள் கூட இதே ஃபார்முலாவில் ஒர்க் அவுட் ஆகும் என்றே தோன்றுகிறது. மிகச் சுலபமாக பேமிலி ஆடியன்ஸைக் கவர் செய்துவிட்டார்.

8) கயல்
பலருக்கு ‘கயல்’ பிடிக்கவில்லை. ஆனால் எனக்குப் பிடித்திருந்தது. கும்கிக்கு இந்தப் படம் பரவாயில்லை என்றே தோன்றியது. காரணம் தெரியவில்லை. மிகச் சிம்பிளான கதை, முதல் பாதியில் காதல் காதலி சந்திக்கவேண்டுமே என்பதற்காக ஒரு கல்யாண வீடு செட்டப், இரண்டாம் பாதியில் சேர வேண்டுமே என்பதற்காக சுனாமி பின்புலம். புதிதாக எதுவும் இல்லை என்றாலும் காதலை உணர முடிந்தது. ‘கயல்’ ஆனந்தி மனதிற்குள் கூடாரம் போட்டு உட்கார்ந்திருக்கிறார். ஆனால் அடுத்த படத்திலும் பிரபு சாலமன் காதலைத் தான் காட்டுவார் என்றால் கட்டாயம் அந்தப் படம் எனக்கும் அது பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. காதலும் திகட்டும். அதுவும் ஒரே இயக்குனரிடமிருந்து திரும்பத் திரும்ப வந்தால் கட்டாயம் திகட்டும். இப்போது ஓரளவிற்கு அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய இயக்குனர் ஆகிவிட்டதால் தைரியமாக லீ, கொக்கி போன்ற படங்களை இயக்குனர் பிரபு சாலமன் மீண்டும் முயற்சி செய்யலாம் என்பது என் கருத்து.

எனது விமர்சனம் - http://www.babyanandan.in/2014/12/come-fall-in-love.html

7) காவியத் தலைவன்
தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்த பொழுது என்னுள் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனது பள்ளி / கல்லூரி நாட்களை நினைத்துக்கொண்டே படம் பார்த்தது அலாதியான ஒரு அனுபவம். ஆனால் இரண்டாம் பாதி கற்பனை வறட்சி. சுலபமாக முதல் 5 படங்களில் ஒன்றாக இடம் பெற வேண்டியது மிகவும் வீக்கான திரைக்கதையால் இரண்டு இடம் இறங்கிவிட்டிருக்கிறது. படத்தில் ஏகப்பட்டக் குறை இருந்தாலும், அவற்றைப் பட்டியலிட்டு ‘விவரம் அறிந்த’ விமர்சகர்கள் படத்தைக் கழுவி ஊற்றிவருகிறார்கள் என்றாலும் எனக்குப் படம் பிடித்திருந்தது. முதல் பாதியில் சித்தார்த் சூப்பர். ஆனால் படம் நெடுக ப்ரித்விராஜ் சூப்பர். வேதிகாவை இன்னும் சில படங்களில் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. ப்ளீஸ் யூஸ் பண்ணுங்கப்பா…

எனது விமர்சனம் - http://www.babyanandan.in/2014/11/blog-post.html

6) வேலையில்லா பட்டதாரி
இந்தப் படத்திலும் சுத்தமாக ஒன்றுமே இல்லை. காலம்காலமாக தமிழ் சினிமாவில் நாம் பார்த்த அதே கதை. தனுஷ் இதே போன்ற வேடத்தில் இதற்கு முன்பு 101 படங்களில் நடித்திருக்கிறார். இது 102 ஆவது படம். ஆனாலும் நன்றாக இருந்தது. முதல் பாதி செம்ம ஜாலி. ஒவ்வொரு சீனும் அதகளம், அதை தனுஷ் வெளிக்கொண்டு தனது மிக ‘யதார்த்தமான’ நடிப்பால் ப்ரசெண்ட் செய்த விதம் சூப்பரோ சூப்பர். வழக்கம்போல சரண்யா மேடம் செம்ம ஆக்டிங். அப்பாவாக சமுத்திரகனியை தனுஷ் தான் ஆஹோ ஓஷோ என்று விழாக்களில் புகழ்ந்து கொண்டிருந்தார். எனக்கு அப்படியொன்றும் பெரிதாகத் தெரியவில்லை. மான்கராத்தே போலவே ஹீரோ தனுஷ் + இசையமைப்பாளர் அனிருத் இல்லையென்றால் இந்தப் படம் இல்லை. மற்றபடி ‘இன்ஜினியர்கள் கொண்டாடும் படம்’ என்று போஸ்டர் அடிப்பதெல்லாம் ரொம்ப ஓவர்.

5) கத்தி
திருட்டுக்கதை குற்றச்சாட்டைத் தள்ளி வைத்து விட்டுப் பார்த்தால் கத்தியில் கொண்டாட ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. திருமலைக்குப் பிறகு வந்த படங்களைப் பார்த்து விட்டு இனியொரு விஜய் படம் பார்த்து நான் கண்கலங்குவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. அப்பட்டக்காப்பியான காயின் ஃபைட் தியேட்டரில் பார்க்க அவ்வளவு சூப்பராக இருந்த்து. குழாயில் உட்கார்ந்திருக்கும் விஜய் & கோ வைக் காட்டியவுடன் தியேட்டரே அதிரும் விதமாக கைத்தட்டி விசிலடித்தவர்களில் நானும் ஒருவன். அனிருத் இந்தப் படத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். எது எப்படியிருந்தாலும் இந்தப் படத்தின் கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திருடியது உண்மையென்றால் ரசிகர்களை ஏமாற்றிய பாவம் ஒருநாள் அவரையும் சூளும், கீழே தள்ளும். இதைச் தமிழ் சினிமா ரசிகன் ஒருவனது சாபம் என்று எடுத்துக்கொள்ளலாம். போலிக்குற்றச்சாட்டு என்றால் எந்தப் பழிபாவத்திற்கும் அவர் அஞ்சவேண்டியதில்லை. காலம் ‘கோபி’க்கு பதில் சொல்லும்.


4) ஜிகர்தண்டா
மிக மிக அதிகமாக எதிர்பார்த்துவிட்டதாலோ என்னவோ இன்றும் இரண்டாம் பாதியை முழுமையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியிருந்தும் இதுவரை மூன்று நான்கு முறைக்கு மேல் படத்தை முழுதாகப் பார்த்துவிட்டேன். இந்த வருடத்தின் சிறந்த பின்னணி இசை, ஒளிப்பதிவு இரண்டும் ஜிகர்தண்டாவில் இருந்தது. பாபி சிம்ஹா புத்திசாலித்தனமாக படங்களைத் தேர்வு செய்தால் இந்தப் படம் கொடுத்த புகழை விட பன்மடங்கு உயரத்திற்கு செல்லலாம். ஆனால் அடுத்து வந்த சிலப்படங்களைப் பார்த்தால் அவசரப்படுகிறாரோ என்று தோன்றுகிறது. தமிழ் சினிமா ஆவலுடன் எதிர்பார்க்கு இளம் தலைமுறை இயக்குனர்களில் முதலில் வருபவர் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் தான். தீவிர ‘தலைவர்’ வெறியரான இவர், சூப்பர் ஸ்டார் வயதுக்கு ஏற்றார்போன்ற ஒரு கதையை எழுதி இயக்க வேண்டும் என்பது என் ஆசை, பலரது ஆசை இது தான் என்பது இணையத்தில் தெரிந்தது.

எனது விமர்சனம் – http://www.babyanandan.in/2014/08/blog-post.html

3) மெட்ராஸ்
இந்த லிஸ்டில் உள்ள மற்ற படங்களைப் போல இந்தப் படம் என் நினைவில் தங்கிவிடவில்லை. ஆனால் தியேட்டரில் முதல் முறை படம் பார்க்கும் பொழுது அவ்வளவு திருப்தியாக இருந்தது. ஆல் ஏரியாவும் அற்புதம். சந்தோஷ் நாராயணின் பாடல்கள் என்னை அவ்வளவாகக் கவரவில்லை என்றாலும், பின்னணி இசை சூப்பர். சுவர் அரசியல், அதைச் சுற்றி நடக்கும் நார்த் மெட்ராஸ் கதை, கார்த்தி மற்றும் பிற கதாப்பாத்திரங்களின் மிக அருமையான நடிப்பு எல்லாமே சூப்பர். இந்த வருடத்திற்கான ‘சிறந்த ஜோடி’ சந்தேகமே இல்லாமல் அன்பு-மேரி தான். எந்த ஹீரோ ஹீரோயினிடமும் இல்லாத ஒரு அற்புதமான கெமிஸ்ட்ரி இவர்களிடம் இருந்தது. ‘ஜானி’ பேரைச் சொல்லாமல் மெட்ராஸ் பற்றி எதையும் எழுத முடியாது. சூப்பர் மாமே!


2) கதை திரைக்கதை வசனம் இயக்கம்
இந்தப் படத்தின் இரண்டாம் பாதி எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் முதல் பாதி நான் ஆசையாசையாக ஒரே ஒரு மாதம் வாழ்ந்து பார்த்த வாழ்க்கை. இந்த வருடம் வெளியான படங்களில் இருமுறை தியேட்டருக்குச் சென்று பார்த்த ஒரே படம். இருமுறையும் என்னுள் எழுந்த மகிழ்ச்சி வெள்ளத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இரண்டாம் பாதியும் சளைத்ததல்ல என்றாலும், இன்னும் கொஞ்சம் சிறப்பாகச் செய்திருக்கலாம். மற்றபடி மறக்க முடியாத ஒரு படத்தைக் கொடுத்த இயக்குனர் பார்த்திபனுக்கு கோடி நன்றிகள். மேலே நீங்கள் பார்ப்பது படத்தைப் பார்த்துவிட்டு நான் ‘போஸ்ட்’ செய்த போஸ்டர்.

1) பிசாசு
நிறைய சொல்லிவிட்டேன். மீண்டும் - நன்றி மிஷ்கின்.

எனது விமர்சனம் - http://www.babyanandan.in/2014/12/blog-post_19.html

***********************************************

தியேட்டரில் நான் பார்த்து பொழுது பெரிதும் ரசித்த படங்கள் தான் மேல் சொன்னவவை. இவை தவிர சில படங்களையும் நான் ரசித்தேன். நிச்சயம் அவ்வளவு மோசமில்லை ரகப் படங்கள். இவையனைத்தையுமே #11 ஆவது இடத்தில் வைக்கலாம்.

குக்கூ

முதல் பாதி அபாரம். காரணம் இருவர் – ராஜா ஸார் மற்றும் சந்தோஷ் நாராயணன். தினேஷ் – மாளவிகா இருவரது நடிப்பும் அபாரம். மற்றபடி இது மற்றுமொரு பார்க்கக்கூடிய படம். அவ்வளவு தான்.

ஜீவா

மிக மிக சிம்பிளான கதை. அதை சரியாகச் சொன்னவிதத்தில் சுலபமாக ஜெயித்துவிட்டார் இயக்குனர் சுசீந்திரன்.


கோலி சோடா

சின்ன கல்லு, பெத்த லாபம் இந்தப் படம். எந்தவித எதிர்பார்பும் இல்லாமல் சென்றேன். படம் சொல்லியிருந்த கருத்து பிடிக்கவில்லை ஆனால் மேங்கிங்கில், நடிப்பில் அசத்தியிருந்தார்கள். அது மட்டும் பிடித்திருந்தது

முண்டாசுப்பட்டி

எனது பேவரிட் குறும்படம். ஓரளவிற்கு ஒரிஜினலை அசிங்கப்படுத்தாமல் எடுத்திருந்தார்கள். இரண்டாம் பாதியில் என்ன செய்வதேன்று தெரியாமல் திரைக்கதை கையைப் பிசைந்து கொண்டு நின்றது பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

பூவரசம் பீப்பி

அருமையான முயற்சி. இன்னும் கொஞ்சம் ஓடியிருக்கலாமோ என்று தோன்றியது. Coming of Age Films என்ற ஒரு Genre இருக்கிறது. தமிழ் சினிமா ஒதுக்கி வைத்திருக்கும் ஒரு ஏரியா அது. அந்த ஏரியாவை மையப்படுத்தி ஒரு அருமையான, பெரியவர்கள் பார்க்க வேண்டிய குழந்தைகள் திரைப்படம்.


நெடுஞ்சாலை

‘ஜில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா படமென்றால் நம்ப முடியவில்லை. ஆரி-ஷிவதா இருவருமே பட்டையக் கிளப்பியிருந்தார்கள். நல்ல படமென்றாலும் திரைக்கதையில் வேகம் + சுவாரஸ்யம் இரண்டும் மிஸ்ஸிங். இரண்டாம் பாதியில் ஏதேதோ எதிர்பார்த்து சப்பென்று இருந்தது ஏமாற்றம்.

தெகிடி

நிறைய பேர் இந்தப் படத்தை தங்களது Top 10 இல் வைத்திருக்கிறார்கள். சந்தேகமில்லாமல் நல்ல படம்தான். ஆனால் – White Collar Criminals என்பதைத் தவிர எனக்கு சுவாரஸ்யமாக, புத்திசாலித்தனமாக படத்தில் எதுவும் இருந்ததாய்த் தெரியவில்லை.

வாயை மூடி பேசவும்

தமிழ் சினிமாவிற்கென்று ஒரு மட்டமான ஃபார்மேட் இருக்கிறது. அதிலிருந்து தனித்து நின்ற படம். அருமையான முயற்சி என்றாலும் ரொம்ப நீளமாக ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்பப் பார்ப்பதைப் போல இருந்தது. ஆங்காங்கே சுவாரஸ்யமாக இருந்தது.

நெருங்கி வா முத்தமிடாதே

இந்த வருடம் நான் பார்த்த sensible திரைப்படங்களில் இதுவும் ஒன்று. கதாப்பாத்திரங்களை அருமையாகத் தேர்ந்தெடுத்த இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் காட்சிகளில் இன்னும் கொஞ்சமே கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் எனது Top 10 ற்குள் இந்தப் படம்.


என்னமோ நடக்குது

தெகிடி போலத் தான் இந்தப் படமும். White Collar Criminals. ஓரளவிற்கு சிரப்பாகவே செய்திருந்தார்கள். அம்மா சரண்யா, ‘ஹீரோ’ விஜய் வசந்த் இருவரும் அருமை. ரஹ்மான் கூட சொல்லிக்கொள்ளும்படியான வில்லனாக மிரட்டியிருந்தார். தாராளமாக ஒரு முறை பார்க்கக்கூடிய படம்.

ஒரு கண்ணியும் மூன்று களவாணியும்

சிம்புதேவனால் நிச்சயம் இதை விடச்சிறப்பான கான்செப்டில் படமெடுக்க முடியும். ஆனாலும் இந்தப் படம் ஒரு வித்தியாசமான, பார்க்க வேண்டிய முயற்சி.

சதுரங்கவேட்டை

டிசைன் டிசைனாக ஏமாறுபவர்களையும் அவர்களை ஏமாற்றுபவனையும் மிகச் சிறப்பாகக் காட்டியிருந்தார்கள். அதை மட்டும் காட்டியிருந்தால், அதை மட்டும் வைத்து கதையை நகர்த்தியிருந்தால் இந்த ஆண்டின் சிறந்த படமாக வந்திருக்கும். தேவையில்லாமல் ஒரு ஹீரோயின், அவளால் இவன் திருந்துவது என்று சுத்திவிடப்பட்டதால் படம் செம போரடித்தது.

Honorable Mentions – பரவாயில்லை ஒரு முறை பார்த்து வைக்கலாம் என்று நான் நினைக்கும் படங்கள்.

பண்ணையாரும் பத்மினியும்
ஆஹா கல்யாணம்
சைவம்
கோச்சடையான்
நிமிர்ந்து நில் (முதல் பாதி மட்டும்)
சலீம்
சரபம்
வீரம்
அரிமா நம்பி
வடகறி

இன்னும் பலப் படங்களை பார்த்தேன் என்பது மட்டும் நியாபகம் இருக்கிறது. என்னென்ன படங்கள் என்று நியாபகத்தில் இல்லை, அது தேவையுமில்லை என்பது என் கருத்து.

(பி.கு – கடைசியாக வெளியான மீகாமன், கப்பல், வெள்ளைக்காரத்துரை இன்னும் பார்க்கவில்லை. இனம், தலைமுறைகள் படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை)

சிறந்த நடிகர் – ஆரி (நெடுஞ்சாலை)
சிறந்த துணைநடிகர் – பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா) Special Mention – ஹரிகிருஷ்ணன் (மெட்ராஸ் ‘ஜானி’), ராதாரவி (பிசாசு)
சிறந்த நடிகை – ஷிவதா (நெடுஞ்சாலை)
சிறந்த ஜோடி – அன்பு / மேரி (கலையரசன் – ரித்விகா) மெட்ராஸ்
சிறந்த இசை ஆல்பம் – ஜீவா
சிறந்த பின்னணியிசை – ஜிகர்தண்டா
சிறந்த பாடல் – ‘போகும் பாதை’ (பிசாசு)
சிறந்த ஒளிப்பதிவு – Gavemic U Ary (ஜிகர்தண்டா). Special Mention - George C Williams (கத்தி), Manoj Paramahamsa (பூவரசம் பீப்பீ)
சிறந்த படத்தொகுப்பு – சுதர்சன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்)
சிறந்த வசனம் – பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்)
சிறந்த நடனம் – ராகவா லாரன்ஸ் (Live the Moment)
சிறந்த சண்டைக்காட்சி – அனல் அரசு (கத்தி)
சிறந்த கலை இயக்கம் – மெட்ராஸ், நெருங்கி வா முத்தமிடாதே (பெயர்கள் தெரியவில்லை)
சிறந்த உடையலங்காரம் - Perumal Selvam / Niranjani Agathiyan (காவியத்தலைவன்)
சிறந்த மேக்கப் - Pattanam Rasheed (காவியத்தலைவன்)
சிறந்த அறிமுகம் - Arrol Corelli (இசையமைப்பாளர் - பிசாசு)
சிறந்த கதை – சைவம்
சிறந்த திரைக்கதை – கார்த்திக் சுப்பராஜ். Special Mention – பார்த்திபன் (க.தி.வ.இ) & வேல்ராஜ் (VIP) - முதல் பாதி மட்டும்
சிறந்த படம் – பிசாசு
சிறந்த இயக்குனர் – மிஷ்கின். Special Mention – கார்த்திக் சுப்பாராஜ்

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...