ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - எனது அனுபவம் (படப்பெட்டி இதழில் வந்த எனது முதல் கட்டுரை)

5:27:00 AM


// திரு. சரோ லாமா அவர்களது உதவியால் "படப்பெட்டி" இதழில் வெளிவந்த எனது "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" அனுபவக் கட்டுரை. புத்தகத்தில் வெளிவந்த முதல் கட்டுரை //

இயக்குனர் மிஷ்கின் பற்றி நான் முன்பு எழுதிய கட்டுரை - மிஷ்கின் எனும் ஒரு தனித்த ஓநாய் - A tribute to the Master...

"எல்லாம் எடுத்துவிட்டாலும் ஒரு இயக்குனருக்கு ஓவராலாக ஒரு மிஸ்டரி (மர்மம்) இருக்கும். இந்தப் படம் ஓடுமா என்று. எந்த படம் ஓடும், எது ஓடாது என்று தெரிந்துவிட்டால் there is no point in working. இங்கு Confidence என்று எதுவுமே கிடையாது, sincerity தான் முக்கியம். முகமூடி படம் பயங்கரமாக ஓடும் ஓடும் என்று தான் பேசிக்கொண்டு இருந்தேன். ஆனால் பெரிதாக ஓடவில்லையே. It's always like that and that's why it's interesting. இப்படிப்பட்ட சினிமாவில் இருப்பதையே நான் எனது அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். நான் எனது படங்காளுக்காக sincere ஆக உழைக்கிறேன். Any aspect of Movie making is always a mystery and that is why it is so interesting to be in Movie making.”

மிஷ்கினின் அடாவடி பேச்சுக்களை மட்டும் தான் நாம் அதிகம் கேட்டிருப்போம். மேல் உள்ளவற்றை சொன்னதும் மிஷ்கின் தான். சினிமாவை நேசிக்கும், சினிமா என்னும் கலையின் மீது தீராக்காதல் கொண்டிருக்கும் ஒரு கலைஞனின் பார்வை இப்படித்தான் இருக்கிறது. இதுவரை எனது படங்களின் டி.வி ரைட்ஸ் 1 கோடிக்கு கூட போனதில்லை என்று மிஷ்கின் சொல்வதிலிருந்து அவரது படங்களின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என்பது தெரிகிறது. ஆனாலும் அவர் தன்னையோ தனது படமெடுக்கும் முறையையோ மாற்றிக்கொள்ளவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் தனது முந்தைய படங்களில் இருந்த மஞ்சள் சேலை குத்துபாடலையும் தூக்கி தனது சமீபத்திய படத்தை மேலும் செம்மைப்படுத்தியிருக்கிறார். அது ஏனோ தெரியவில்லை மிஷ்கினின் ஒரு பக்கத்தை மட்டுமே ஊடகங்கள் தொடர்ந்து வெளிச்சமிட்டுக் கொண்டிருக்கிறது. கோபக்காரர், மேடைகளில் பேசத் தெரியாதவர், கொரிய - ஜப்பானிய படங்களை காப்பி அடிப்பவர், கால்களையே படமெடுப்பவர், அவரது படங்களில் அனைவரும் தரையையே பார்த்துக்கொண்டிருப்பார்கள், வரிசையாக வந்து அடிவாங்குவார்கள் என்று ஒரு சில குறிப்பிட்ட விஷயங்கள் மட்டும் தான் மிஷ்கின் பற்றி அநேகம் பேருக்குத் தெரிந்தவை. கொரியன் படங்களைக் காப்பியடிக்கிறார் என்று சொல்பவர்களில் எத்தனை பேருக்கு எந்தெந்த கொரியப் படங்களைக் அவர் தனது 6 படங்களில் காப்பியடித்தார் என்று சொல்லத்தெரியாது. சினிமாவை ஒரு பொழுதுபோக்காக, பணம் பண்ணும் தொழிலாக இல்லாமல் ஒரு கலையாக அணுகும் வெகு சில இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர். அவரது படங்களில் வயதானவர்கள், ஊன்முற்றவர்களை கிண்டலடிக்கும் / அடிக்கும் காமெடி இருக்காது, களமே வன்முறையாக இருந்தாலும் பெண்களுக்கெதிரான நேரடி வன்முறைக் காட்சிகள் இருக்காது, முதல் காட்சியிலேயே கதாப்பாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டு கதை ஆரம்பித்துவிடும். ஹீரோக்காளுக்கென்று தனியாக ஓப்பனிங் பாடல், சண்டைக்காட்சி என்று எதுவும் திணிக்கப்பட்டிருக்காது. ஆனால் இவர் படங்களில் காட்டப்படும் ஹீரோயிசம் போல் வேறு எந்தப் படத்திலும் இருக்காது. பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா, மணிரத்னம், பாலா ஆகியோர் வரிசையில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக்கொண்டு வலம்வருபவர் மிஷ்கின். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பார்த்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் அந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்பு இன்னமும் குறையவில்லை. இத்தனைக்கும் இது மிஷ்கினின் மிகச்சிறந்த படம் என்றெல்லாம் சொல்ல முடியாது. இந்தப் படத்திலும் பிழைகள் உண்டு. விடையில்லா சில கேள்விகள் கூட உண்டு. This is not his Masterpiece. ஆனாலும், இன்றைய தமிழ் சினிமா சூழலில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் நிச்சயம் ஒரு மிகச்சிறந்த படம். தமிழில் அதிகம் கையாளப்படாத க்ரைம் திரில்லர் வகையில் வல்லவரான மிஷ்கினின் இந்தப் படம் மிகவும் முக்கியமான ஒரு படம். அந்த வகையில் கொண்டாடப்பட வேண்டிய ஒரு உண்மையான சினிமாவும் கூட. இந்தப் பதிவு முழுக்க முழுக்க ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பற்றி, படம் பார்த்துவிட்டவர்களுக்காக மட்டும்.

பெங்களூர் பூலோக சொர்க்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தமிழ் சினிமா என்று வரும்பொழுது சமீபகாலமாக எனக்கு பெங்களூரில் இருப்பது பெரும் அவஸ்தையாகத் தெரிகிறது. பல மாதங்களாக எப்பொழுது வெளிவரும் என்று காக்கவைத்த "தங்கமீன்கள்" பெங்களூரில் மட்டும் வெளியாகவில்லை. அதற்கு அடுத்த வாரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "மூடர்கூடம்" வெளியாகவில்லை. அதற்கு அடுத்த வாரம் "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" படமும் வெளியாவதாகத் தெரியவில்லை. நான் மேல் சொன்ன படங்கள் எல்லாம் அமெரிக்கா, மலேசியா, சிங்கபூரில் மட்டும் உடனுக்குடன் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஓநாய் படம் தமிழகத்திலேயே லிமிடட் ரிலீஸ் என்று தான் சொன்னார்கள். போதாத குறைக்கு QUBE'ற்கு பணம் கட்டவில்லை என்பதால் தமிழகத்தில் பல திரையரங்குகளில் வெள்ளிக்கிழமை காலை காட்சிகள் ரத்து என்றும் செய்திகள் வந்தது. பெங்களூரைப் பொறுத்த வரை ஒரு படம் இங்கு வெளியாகவில்லை என்றால் அருகில் உள்ள ஒசூரிலும் பெரும்பாலும் வெளியாகாது. அடுத்துள்ள கிருஷ்ணகிரிக்குச் செல்லவே இரண்டரை மணிநேரங்களுக்கு மேல் ஆகும். அப்படியே சென்று அங்குள்ள தியேட்டர்களில் படம் பார்த்தாலும் வெறுப்பு தான் மிஞ்சும். ஓநாய் படம் பற்றி முகப்புத்தகத்திலும் இங்குள்ள நண்பர்களிடமும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததிலிருந்து படம் பெங்களூரில் 4 தியேட்டர்களில் மட்டும் வெளியாவது தெரிந்தது. நண்பன் ஒருவனை விட்டு படம் வெளியாவதாகச் சொல்லப்பட்ட திரையரங்கைக் கண்டுபிடித்து, படம் திரையிடப்படுவதை உறுதி செய்துகொண்டு தயாராகியிருந்த போதிலும் இரவு பணி முடிந்து வீடு திரும்பி, டிராப்பிக்கில் காத்திருந்து, தியேட்டரைக் கண்டுபிடித்து, டிக்கெட் வாங்கி உள்ளே செல்வதற்குள் மிஷ்கினை சுமந்து கொண்டு ஸ்ரீ தனது வீட்டு மாடிப்படி ஏறிக்கொண்டிருந்தார். கூட்டம் குறைவு என்பதால் படத்தை சீக்கிரமே ஆரம்பித்திருந்தனர். இருட்டில் உடைந்திராத ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை தேடித் தடவி நான் உட்கார்ந்த பொழுது ராஜாவின் இசை அலறிக்கொண்டிருந்தது (ஆம் அலறித்தான் கொண்டிருந்தது). படம் ஓடிக்கொண்டிருந்த திரை நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து வெகுதூரத்தில் மங்கலாக, இருள் சூழ்ந்து கிட்டத்தட்ட திருட்டு வி.சி.டியில் படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது. நான் படம் பார்த்த "ரவி தியேட்டர்" இல் என்னுடன் சேர்ந்து மொத்தமாக 30 பேர் அமர்ந்திருந்தார்கள். மிகவும் பழையதாக ஜமீன் பங்களா போல பெரிய அரங்கம், ஆனால் சிறிய திரை, உடைந்த நாற்காலிகள், வசனம் சரியில்லாமல் பின்னணிக்கு மட்டும் அதிகமாக அலறும் ஸ்பீக்கர்கள், டொடக் டொடக் என்று எக்ஸ்ட்ரா எஃபெக்ட்டில் ஓடும் காற்றாடிகள், சரியாகக் கழுவப்படாத கழிவறை நாற்றம் என்று ஒரு பக்கா டூரிங் டாக்கீஸ் ("வெயில்") செட்டப்பில் இருந்தது ரவி டாக்கீஸ். டிக்கெட் விலை 50, 60 தான். ஆனால் கூல்டிரிங்ஸ், சிப்ஸ் என்று எதை எடுத்தாலும் 30 ரூபாய் என்றார்கள் (நியாய விலை (M.R.P) கூல்டிரிங்ஸ் - 12ரூ, சிப்ஸ் - 10 ரூபாய்). கொஞ்சம் கொஞ்சமாக நிதானித்து ராஜாவின் இசையை உள்வாங்கி அனுபவித்து அதனுள் மூழ்க ஆரம்பித்து படத்தோடு நான் ஒன்றுவதற்குள் ஸ்ரீ கதாப்பாத்திரத்தை போலீஸ் பிடித்துக்கொண்டு போய் மிரட்டிக்கொண்டிருந்தது. இவ்வளவு மோசமான ஒரு தியேட்டரில், அரையும் குறையுமாகத்தான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பார்த்தேன்.

எனது தியேட்டர் இந்த மோசமான தியேட்டர் அனுபவத்தை விலாவாரியாகச் சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. மிகவும் சுமாரான, “மற்றுமொரு தமிழ்படம்” என்ற தகுதி மட்டுமே பெறக்கூடிய பல படங்கள் பெங்களூரின் அனைத்து மல்டிபிளக்ஸ்களிலும் ஏகபோகமாக வெளியாகும் பொழுது, அவற்றை வாங்கி வெளியிட ஆட்கள் இருக்கும் பொழுது, 'நல்ல படம்' என்று நிச்சயமாகத் தெரிந்தும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களுக்கு வரவேற்பு இல்லை. நல்ல படம் எடுப்பவர்களும் சரி, அதைப் பார்த்து விட்டு பேட்டிகளில் “ஆஹா, ஓஹோ” என்று புகழ்பவர்களும் சரி, அந்தப் படங்களை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. தமிழகத்திலேயே மொத்தமாக 100 திரையரங்குகள் கூட வெளியாகாத ஒரு "நல்ல" படத்தை வெளிமாநிலங்களில் வெளியிடுவதைப் பற்றி யாரும் நினைப்பதில்லை. பெரிய நடிகர்கள், வெற்றிக் கூட்டணி இல்லை என்பதால் இங்கிருப்பவர்களும் அந்தப் படங்களை வாங்க எந்த முனைப்பும் காட்டுவதில்லை. ரவி தியேட்டர் தவிர்த்து படம் வெளியான மற்ற மூன்று தியேட்டர்களும் தரத்தில் ரவியுடன் போட்டி போடுவதாகவே இருந்ததாகத் தெரிகிறது. கர்நாடகா ரைட்ஸ் என்று மொத்தமாகத்தான் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். பிறகெப்படி பெங்களூரில் வேறு எங்கும் வெளியாகாத "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" படம் இந்த 4 டப்பா டாக்கீஸ்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது? நிச்சயம் எங்கோ தவறு நடந்திருக்கிறது. ஒரு பக்கம் படத்தை எப்படியோ தியேட்டரில் பார்த்துவிட்ட மகிழ்ச்சி இருந்தாலும், நல்ல படங்களுக்கு ஆதரவு இல்லையே என்ற வருத்தமும் மிகையாக இருக்கிறது.

தியேட்டர் அனுபவம் மிக மோசமானதாக இருந்தாலும், மிஷ்கின் தனது திரைமொழியால் என்னை மயக்கத் தவறவில்லை. நல்ல படம் எந்த சூழ்நிலையிலும் ஒரு ரசிகனை கவரத் தவறுவதில்லை. ஒவ்வொரு காட்சியாக, நிதானமாக என்னை திரைக்குள் இழுத்தார் மிஷ்கின். அது தான் மிஷ்கினின் பலம். பக்கம் பக்கமாக வசனங்கள் வர வேண்டிய இடங்களில் எல்லாம் சிம்பிளான காட்சிகளின் மூலமாகவும், காட்சிகளால் நிரப்பியிருக்க வேண்டிய முக்கிய பிளாஷ்பேக் காட்சியை நிதானமாக ஒரு குழந்தைக்கு சொல்லும் கதையாகவும் சொல்லியிருக்கிறார்.

“ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” - மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரண தலைப்பு. குழந்தைகளுக்கான "ஒரு ஊர்ல ஒரு ஓநாய் இருந்துச்சாம்." என்று தொடங்கும் நீதிக்கதை தலைப்பு. இந்தப் படமும் ஒரு நீதிக்கதை தான். அதானாலேயே மிகப் பொருத்தமாகி விடுகிறது. தலைப்பிலேயே முழுக்கதையையும் தெரிந்து விடுகிறது. முரண்பாடான இரண்டு கதாப்பாத்திரங்கள், அவற்றுக்குள் இருக்கும் மாறி மாறி வெளிப்படும் ஓநாய் + ஆட்டுக்குட்டி குணம், அதனால் நடக்கும் சம்பவங்கள், வன்முறை, துரத்தல், தேடல், மாற்றம் - இவை தான் கதை. படத்தைப் பார்த்தால் மிஷ்கினின் "உல்ப்" கதாப்பாத்திரம் தான் பிரதானமாகத் தெரியும். ஆனால் படம் முழுக்க ஸ்ரீ யைச் சுற்றித் தான் பின்னப்பட்டிருக்கிறது. கொடிய மிருகங்கள் வாழும் இந்த காட்டில் உங்களைப் போல என்னைப் போல சாதாரண ஒரு ஆட்டுக்குட்டியாக சுற்றித்திரியும் “சந்ரு” என்ற கதாப்பாத்திரம் செய்யும் மனிதாபிமான அடிப்படையில் செய்யும் ஒரு செயலால், அவன் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பது தான் கதை. அந்தக் கதாப்பாத்திரம் வேறு யாருமில்லை நாம் தான். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் படத்தில் வேறு எந்தக் கதாப்பத்திரத்துடனும் நம்மை நம்மால் பொருத்திப் பார்க்க முடியாது, சந்ரு கதாப்பாத்திரத்தை தவிர்த்து. அந்த கதாப்பாத்திரத்தில் தான் நாம் திரைப்படங்களில் தேடும் "யதார்த்தம்" பொதிந்து கிடக்கிறது. மற்ற அனைவரும் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு அமைதியாக செல்லும் பொழுது சந்ரு மட்டும் தான் குண்டடிபட்டவனை காப்பாற்ற முயற்சிக்கிறான், தேர்வுகளுக்கும் சரி சிகிச்சை அளிப்பதற்கும் சரி பயந்து போதைப்பொருள் பயன்படுத்துகிறான், குடும்பத்திற்காக தான் காப்பாற்றியவனையே கொல்லப் புறப்படுகிறான், சுலபமாக மிரட்டப்படுகிறான், சரணடைகிறான், கோபப்படுகிறான், இவ்வளவு ஏன் ஓரிடத்தில் கண் தெரியாத ஒரு குழந்தையைக் கூட பணயக்கைதியாக பிடித்து வைத்துக் கொள்கிறான், கதை கேட்டவுடன் தன் நிலை மறந்து அந்தக் குடும்பதிற்காக தனது உயிரையே கொடுக்கக் கூடத் துணிகிறான். பல இடங்களில் தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் திருதிருவென்று முழிக்கிறான் சந்ரு. அவன் ஒரு சாதாரண நல்லவன், உங்களைப் போல என்னைப் போல. அவனை யார் வேண்டுமானாலும் மிரட்டலாம், ஆட்டிவைக்கலாம், கலங்க வைக்கலாம். வாழ்க்கை அவனுக்கு இன்னும் பல பாடங்களைக் கற்றுத் தரக்காத்தி்ருக்கிறது. அருமையான நடிப்பு + உடல்மொழியால் அசத்தியிருக்கிறார் 'வழக்கு எண்' ஸ்ரீ. அவரது கண்களுக்கு மிஷ்கின் தனி சம்பளம் தர வேண்டும். பாதி நடிப்பை அந்தக் கண்களே கொடுத்ததுவிடுகிறது. “உல்ப்” ஆக நடித்திருக்கும் மிஷ்கின் - இவரின் உருவம் கொஞ்சம் நெருடல் தான் என்றாலும் தமிழ் சினிமாவில் இப்பொழுது உள்ள நடிகர்களில் யாராலும் இவரளவிற்கு இந்தக் கதாப்பாத்திரத்தை ஜஸ்ட்- லைக்-தட் செய்திருக்க முடியாது. அளவான உணர்ச்சிகளுடன் அலட்டிக்கொள்ளாத நடிப்பு, ஆக்ஷன் காட்சிகளில் அசத்தும் வேகம், நாற்பது வயது கதாப்பாத்திற்கேற்ற உடல்மொழி என்று ஒரு நடிகனாக அசத்தியிருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி இவரே வடிவமைத்தது என்று ஒரு பேட்டியில் சொல்லக் கேட்டேன்! 

சினிமா என்பதே மிகையதார்த்தம் தான் என்பதை தனது படங்களில் தொடர்ந்து உறுதிபடுத்திக்கொண்டே இருப்பவர் மிஷ்கின். தனது கதைக்கேற்ற களத்தில் தான் உருவாக்கிய கதாப்பாத்திரங்களை உலவவிடுவது மிஷ்கினின் சிறப்பு. இருளில் பொதிந்திருக்கும் இவரது கதாப்பாத்திரங்களை ஏதாவது ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு கொண்டு வரும். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் பிரதான கதாப்பாத்திரங்களில் ஒன்றான உல்ப் பற்றிச் சொல்லவேண்டுமானால், அவன் 40 வயதைத் தாண்டிய ஒரு கொலைகாரன். பணம் கொடுத்தால் யாரையும் கொலை செய்யத் தயங்காதவன். அப்படிப்பட்டவனை மாற்றுவது ஒரு மரணம். அது எட்வர்ட் என்னும் கண் தெரியாத 18 வயது சிறுவன் ஒருவனின் மரணம். ஓநாயான உல்ப், நரி வேட்டைக்கு போன இடத்தில் குறுக்கே வந்து பலியான ஒரு கண் தெரியாத ஆட்டுக்குட்டி தான் இந்த எட்வர்ட். மற்றொரு கதாப்பாத்திரமான சந்ரு, ஒரு சாதாரண மருத்துவக் கல்லூரி மாணவன். தான் காப்பாற்றியவனையே தனது குடும்பத்திற்காக கொலை செய்யக் கிளம்பிகிறான். முடிவு செய்கிறான். அவனால் அது முடியவில்லை என்றாலும், மற்றவர் உல்ப்'ஐ கொல்ல வரும் பொழுது அவன் தடுப்பதும் இல்லை, எச்சரிப்பதும் இல்லை. இவனது இந்த குணம் மாறுவதும் ஒரு மரணத்தால் தான். அது, 'பாரதி' என்னும் திருநங்கைக் கதாப்பாத்திரத்தின் மரணம். இறக்கும் தருவாயில் பாரதி பார்க்கும் ஒரு பார்வை சந்ரு'வை மொத்தமாக மாற்றிவிடும். உல்ப் சொல்லும் ஆட்டுக்குட்டி கதை second impact தான். இந்த இரண்டு மரணங்களும் தான் ஓநாயை ஆட்டுக்குட்டியாக்கும் சம்பவங்கள். மிஷ்கினது வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் – Redemption. படம் சொல்லும் "மனிதநேயம்" துளிர்வது இந்த மரணங்காளால் தான். மரணம் + இழப்பு மிஷ்கினின் திரைப்படங்களில் தொடர்ந்து வரும் க்ளிஷேக்கள். சித்திரம் பேசுதடி - கதாநாயகியின் தந்தை, அஞ்சாதே - ரோட்டில் கிடக்கும் யாரோ ஒருவன், யுத்தம் செய் - பேராசியரின் மகள், முகமூடி - லீ'யின் நண்பன் என்று மரணங்கள் மிஷ்கின் படங்களில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கின்றது.

இந்த இடத்தில் மற்றுமொரு முக்கிய காட்சியைப் பற்றிச் சொல்ல வேண்டும். படம் பார்க்கத் தொடங்கியவுடன் என்னை மிகவும் கவர்ந்த காட்சி அது. சந்ரு தனது பேராசிரியரை கைப்பேசியில் தொடர்பு கொள்ளும் காட்சி. வழக்கமான சினிமாக்களில் இது போன்ற காட்சிகளுக்கென்றே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அருகில் மனைவியுடன் படுத்திருக்கும் ஆசிரியருக்கு போன் வரும். மனைவி தான் போனை எடுப்பார். "என்னங்க... என்னங்க... உங்களுக்குத்தான் போன்" என்று தூங்கிக்கொண்டிருக்கும் தனது கணவரை எழுப்பி ரிஸீவரைக் கொடுப்பார். ஆனால் இந்தப் படத்தில் நாம் காண்பதோ ஒரு இழவு வீடு! உதவி கேட்கும் சந்ருவிடம் முதலில் சாதாரண ஒரு மனிதனாக கோபப்பட்டு, பின் ஒரு மருத்துவனாக தனது கடமையைச் செய்ய முன்வந்து, பின் ஒரு ஆசிரியராக தனது மாணவனை வழிநடத்தும் அருமையான கதாப்பாத்திரம் இது. இந்தக் கதாப்பாத்திரத்தை செய்திருப்பவர் நடிகை / இயக்குனர் திருமதி. லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காட்சியிலும் மரணம் படத்தின் கதையோட்டத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. கதையில் நிகழும் மற்றொரு மரணத்தையும் காட்சிகளால் நிரப்பியிருப்பார் மிஷ்கின். அது ஒரு போலீஸ்காரரின் மரணம். அவரது உயிர் பிரிவதை பாட்டிலில் இருக்கும் தண்ணீர் சிந்துவதைக் காட்டிக் காட்சியப்படுத்தியிருப்பார். இது ஒரு சாதாரண குறியீடு.

படத்தில் வரும் மற்றுமொரு முக்கிய கதாப்பாத்திரம் கண் தெரியாத அந்த அம்மா. "எட்வர்ட்" என்று அவர் அழைக்கும் அந்த தருணத்திலிருந்தே ஓநாய் மேல் அதுவரை நமக்கிருந்த பார்வை மாறத் தொடங்குகிறது. கண் தெரியாத அவர், உல்ப் தாக்கப்படுவது தெரிந்து தரையில் விழுந்து அழும் காட்சி இன்னமும் மனதை கனத்து நிற்கிறது. "வலி தாங்காமல் நீ இருக்கும் இடத்தை சொல்ல வாயெடுத்துவிட்டேன். ஆனால் நல்லவேளை அதற்குள் ஒருவன் என் மாரொய்ல் மிதிக்க, நான் அப்படியே மயங்கி விழுந்துவிட்டேன்" - சிரித்துக்கொண்டே எந்தவொரு அதீத பகட்டு உணர்ச்சிகளும் இல்லாமல் அவர் சொல்லும் இந்த இடத்தில் கல்லும் கரையும். அவரது பாதங்களில் சூடிட்டவர்களை உல்ப் குதறும் பொழுது நமக்கு எந்த சங்கடமும் ஏற்படுவதில்லை.

இந்தக் கதாப்பாத்திரத்திற்கு சற்றும் குறையாத மற்றொரு பாத்திரம் குழந்தை கார்த்தி. "எட்வர்ட் அண்ணா அம்மாக்கு என்ன ஆச்சு" என்று அந்தக் குழந்தை கேட்கும் பொழுது கண்ணீர் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. "நாமளும் செத்துப்போயிடலாமா" என்று அவள் கேட்கும் பொழுதே உல்ப் கதாப்பாத்திரத்துடன் சேர்ந்து அந்தக் குடும்பத்தில் அவளையாவது காப்பாற்றிவிட நாமும் மனதளவில் தயாராகிறோம். குழந்தை கார்த்தியாக நடித்திருப்பவர் ‘சைத்தன்யா’. நான்காம் வகுப்பு படிக்கும் இவர் எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் 'கால் முளைத்த கதைகள்' புத்தகத்தை 'Nothing But Water' என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்! 

மற்ற சிறு சிறு கதாப்பாத்திரங்களும் நம்மைக் கவரத்தவறுவதில்லை. மனிதாபிமானமும் கடமையுணர்ச்சியும் உடைய சி.பி.சி.ஐ.டி கதாப்பாத்திரம். இதில் நடித்திருப்பவர் இசை விமர்சகர் ஷாஜி - இவரது குரலும், உடல்மொழியும் பல இடங்காளில் அருமையாகவும் சில இடங்களில் நெருடலாகவும் இருந்தது. படம் பார்ப்பவர்களுக்கு வரும் நியாயமான கேள்விகள் இந்தக் கதாப்பாத்திற்கும் வருகிறது. "உல்ப் நன்றி சொல்ல வேண்டுமென்றால் போனிலேயே சொல்லவேண்டியது தானே, போலீஸ் தன்னைத் தேடுவது தெரிந்தும் ஏன் இரவில் தனியாக அழைக்க வேண்டும்?", "மொத்த போலீஸ் டிபார்ட்மெண்டும் அங்கு தானே செல்கிறது. நாமும் அங்கே போய் என்ன செய்யப் போகிறோம்?", "ஜூன் 6ஆம் தேதிக்கும் இந்தக் கேஸிற்கும் எதோ சம்பந்தம் இருக்கிறது. ஆப்ரேஷன் செய்யப்பட்ட உல்ப் ஏன் இந்தத் தேதியை தேர்ந்தெடுத்து அவசரமாக வெளியே வரவேண்டும்?" - இப்படி படம் பார்க்கும் நமக்கு வரும் பல கேள்விகள் இந்த கதாப்பாத்திரத்திற்கும் வருகிறது. இந்தக் கேள்விகளுக்கு நியாயமான பதிலும் கிடைக்கிறது. ஓரே இரவில் நடக்கும் கதையில் பிளாஷ்பேக் எதுவும் இல்லாமல் முழுக்கதையையும் ரசிகர்களுக்கு புரிய வைப்பதென்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. மிஷ்கின் ஷாஜியின் (லால்?) கதாப்பாத்திரத்தின் மூலம் படத்தை புரித்து கொள்ள நமக்கு உதவுகிறார்.

கல்லூரி நண்பனுக்காக சந்ருவை முதலில் ஆதரித்துப் பேசிவிட்டு, பின்னர் அதே சந்ரு நடுவில் சாகடிக்கப்பட்டாலும் பரவாயில்லை, உல்ப் சுடப்பட வேண்டும் என்று சொல்லும் போலீஸ் உயரதிகாரி, அழகாக இருபக்கமும் வேலை செய்து இறுதியில் சாகும் 'பிச்சை' கதாப்பாத்திரம், பைபிள் வைத்திருக்கும் கில்லர் (இவர் இறக்கும் இடம் அபாரம்), இறக்கும் தருணத்திலும் கொடுத்த வேலையை முடித்துவிட்டே சாகும் மற்றொரு கில்லர் என்று ஒவ்வொரு கதாப்பாத்திரமும் புதுமை, அருமை. ஒரே ஒரு திருஷ்டி கதாப்பாத்திரம் என்றால் அது மெயின் வில்லனான தம்பா. கதாபாத்திர அமைப்பில் புதுமை இருந்தாலும், உடல்மொழி படத்தோடு ஒன்றவில்லை.

இசை - ஆரம்பத்தில் ரவி தியேட்டர் ஸ்பீக்கர்களால் இரைச்சலாக கேட்ட ராஜாவின் இசை போகப்போக படத்தை உள்வாங்குவதற்கு உதவிக்கொண்டே இருந்தது. வசனங்கள் சொல்ல வேண்டிய விஷயங்களை இந்தப் படத்தில் வாத்தியங்கள் சொன்னது. "I dedicate this original score composed by our beloved master Ilaiyaraja to everyone who loves music - Mysskin" என்று எழுதி இந்தப் படத்தின் பின்னணி இசையை தனது தளத்திலும், ஒரிஜினல் சி.டிக்களாகவும் இலவசமாக வெளியிட்டுள்ளார் மிஷ்கின். இசை மேதை திரு. இளையராஜா அவர்களுக்கு இதைவிட பெரிய பெருமையை யாராலும் தேடித் தந்துவிட முடியாது. மிஷ்கின் வெளியிட்டிருக்கும் இலவச ஆடியோ சி.டி யில் அந்த இசைக்கோர்ப்புகளுக்கு அவர் வைத்திருக்கும் பெயர்களே கவிதை. Compassion (கருணை), Firefly (மின்மினிப் பூச்சி), Growl (உறுமல்), The Threshold Guardian (காவலன்), Grim Reaper (இறப்பு), I killed an Angel (தேவதை ஒன்றைக் கொன்றுவிட்டேன்), A Fairy Tale (தேவதைக்கதைகள்), Walking Through Life and Death (பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே ஒரு பயணம்), Redemption (பிராயசித்தம்), Somebody Love Us All (நம்மை நேசிப்பவர் இந்த உலகத்தில் உண்டு). இந்தத் தலைப்புகளே நமக்கு கதை சொல்கின்றது. அப்படியென்றால் அந்த இசை எப்படி இருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. முன்னணி இசைக்கோர்ப்பு என்று மிஷ்கின் சொன்னதன் அர்த்தம் படம் பார்க்கும் பொழுது நன்றாகத் தெரிந்தது. அதற்காக இசை, படத்தை dominate செய்தது என்று நான் சொல்லவில்லை. ராஜாவின் இசை படத்தை அணுகும் விதத்தை மாற்றுகிறது. இப்படியொரு படத்திற்கு ராஜாவைத் தவிர யாராலும் இசையமைத்திருக்க முடியாது என்று தான் நான் நினைக்கிறேன்.

ஒளிப்பதிவு - பாலாஜி வி.ரங்கா - மிஷ்கினின் முந்தைய ஒளிப்பதிவாளர்காளான மகேஷ் முத்துசாமி, சத்யா ஆகிய இருவருக்கும் சற்றும் குறையாமல் சொல்லப்போனால் இன்னும் சவாலான பல காட்சிகளைக் கொடுத்து கண்காளை குளிர்வித்துள்ளார். காட்சிகள் வழியாகவே கதை சொல்லப்பட்ட இந்தப் படத்தில் ஒளிப்பதிவு பெரும் பங்கு வகித்தது. படம் முழுக்க இரவிலேயே நடந்தாலும் புரியாத காட்சிகள் கூட ஒன்றிரண்டு இருந்ததே தவிர சரியாகத் தெரியாத காட்சிகள் என்று எதுவும் இருந்ததாய் தெரியவில்லை. இரவு, அதன் சூழல், இருள் கலந்த மஞ்சள் சிகப்பு நிற வெளிச்சம், வெளிச்சத்தில் தொடங்கி இருளில் நீண்டு முடியும் சாலைகள் என ஒளிப்பதிவு தனியாகத் தெரியாமல், படத்துடன் சேர்ந்து மெருகேற்றியது.    

குறை என்று பார்த்தால் படம் ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் நிறைய கேள்விகள் வருகிறது. வசனங்களும் குறைவு. படம் பார்க்கும் பொழுது விடையில்லை என்பது போல் தெரிந்தாலும், நிதானமாக யோசித்துப்பார்த்தால், மிஷ்கின் ஒரு இயக்குனராக ரசிகர்களுக்கு எழக்கூடிய கேள்விகளுக்கு முடிந்தவரை பதில் சொல்ல முயற்சித்திருக்கிறார். முழுக்கதையையும் ஆங்காங்கே உரையாடல்கள் மூலம் சொல்லியிருக்கிறார். கண் தெரியாத சிறுவனைக் கொன்ற குற்றவுணர்ச்சியில் திருந்தி வாழ நினைக்கும் உல்ப், தம்பாவால் பிரச்சனைகளை எதிர்கொள்கிறான், தம்பாவை எதிர்க்கிறான். உல்ப் மனம் மாறியதற்கு காரணம் தெரிந்து தம்பா அந்தக் குடும்பத்தை மிரட்டும்பொழுது வேறு வழியில்லாமல் உல்ப் தம்பாவை சுட வேண்டிவருகிறது. குண்டடிபட்ட தம்பாவை போலீஸ் கைது செய்து "இரட்டைக் கொலை" கேஸ் போட்டு (ஒன்று உல்ப் கொல்லச் சென்ற நரி, மற்றொன்று குறுக்கே வந்து உயிரைவிட்ட ஆட்டுக்குட்டி எட்வர்ட்) கஸ்டடியில் வைக்கிறது. போலீஸ் தன்னை நெருங்குவதை உணரும் உல்ப், தம்பாவின் ஆட்களிடமிருந்து அந்தக் குடும்பத்தை நிரந்தரமாகக் காப்பாற்ற முடிவு செய்கிறான். அப்படி அந்தக் குடும்பத்தை பாதுகாப்பான வெவ்வேறு இடங்களுக்கு மாற்றும்மொழுது போலீஸ் சுடுகிறது. குண்டடிபட்டு ரோட்டில் விழுகிறான் உல்ப். இங்கு தான் சந்ரு அவனை காப்பாற்றுகிறான். அதற்குள் கோவில் வாசலில் அந்த அம்மாவைக் கண்டுபிடித்து விடும் தம்பா ஆட்கள், உல்ப் வர்கைக்காகக் காத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட அந்த தேதியில் உல்ப் சந்ருவை வரச் சொல்வது, மொத்த போலீஸையும் திசை திருப்பி, அந்த குடும்பத்தை பத்திரமாக வெளியேற்றுவதற்குத் தான். சந்ரு "உல்ப்'ஐ சுட்டுவிட்டேன்" என்று போன் செய்தவுடன் மொத்த போலீஸும் அந்த இடத்தில் வந்துவிடுகிறது, அதைப் பயன்படுத்தி உல்ப் தப்பித்துவிடுகிறான். ஆனால் அங்கிருந்து கதை நகர்வது ஓநாயை ஆட்டுக்குட்டி துரத்துவதிலிருந்துதான். இது உல்ப் எதிர்பார்க்காதது. தன் குடும்பத்திற்காக தன்னை சந்ரு துரத்துவதை நிறுத்தமாட்டான் என்பதைத் தெரிந்து கொண்டு அவனையும் பணயக்கைதியாக உடன் அழைத்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. படத்தில் மிகப் பெரிதாகக் குறைகளோ லாஜிக் மீறல்களோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அவை கதையோட்டத்தில் காணாமல் போய் விடுகிறது. உதாரணத்திற்கு ஆப்ரேஷன் செய்யப்பட்ட ஒருவன் எப்படி காலையில் எழுந்து காணாமல் போக முடியும்? உல்ப் போன்ற ஒரு கொலைகாரனுக்கு இல்லாத மன + உடல் வலிமையா? எப்படியோ சென்றுவிட்டான் என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான். சென்றவன் உடனே ஆக்ஷனில் இறங்கவில்லை. 5 நாட்கள் காத்திருந்து தான் வெளிவருகிறான். இது சாத்தியம் தான்.

மொத்தத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் மனதை விட்டு நீங்காத படமாக அமைந்துவிட்டது. படம் பார்த்த ரசிகர்கள், விமர்சகர்கள் அனைவரும் ஏறக்குறைய "நல்ல படம்" என்றே தங்களது கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். படம் வெளியாகும் அரங்குகளின் எண்ணிக்கைகளும் அதிகரித்திருக்கிறது (பெங்களூரில் வெளியாகவில்லை!) இதே வேகத்தில் மிஷ்கின் படத்தின் ஒரிஜினல் டி.வி.டி யை, சரியான முறையில் விளம்பரம் செய்து, நியாயமான விலையில் வெளியிட்டால், முழுமையான லாபம் தந்த ஒரு வெற்றிப்படமாக இந்தப் படம் அமைந்து விடும். ஒரிஜினல் டி.வி.டி வெளிவருவதால் மீண்டும் இந்தப் படத்தை முதலிலிருந்து நிதானமாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்கும், முதல் முறை பார்க்கும் வாய்ப்பு என்னைப் போல வெளிமாநிலங்களில், சிறு ஊர்களில் படம் பார்க்க முடியாமல் இருக்கும் பலருக்கும் கிடைக்கும். நிச்சயம் மிஷ்கின் அதையும் செய்வார்.

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...