காவியத்தலைவன் - மார்தட்டிச் சொல்வேன் இது என் மொழி சினிமா என்று...!

5:41:00 AMமுதலில் கொஞ்சம் சுயபுராணம். அதைப் படிக்க விருப்பமில்லாதவர்கள் நேரடியாக விமர்சனத்திற்கு செல்லலாம். விமர்சனம் என்று சொல்வதை விட இந்தப் படம் பார்த்த அனுபவத்தை எழுதியிருக்கிறேன்.

********* Start of சுயபுராணம் *********

நான் படித்தது தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி. அங்கு முக்கிய நிகழ்வாக வருடாவருடம் நடப்பது ‘Parents Day’ என்று அழைக்கப்படும் ஆண்டுவிழா. அதில் முக்கியமானது தமிழ் டிராமா. இந்த நாடகத்தைக் காணவே பலர் விழாவின் இறுதிவரைக் காத்திருப்பார்கள் என்பதால் ஒவ்வொரு வருடமும் The Closing Act, தமிழ் நாடகமாகத்தான் இருக்கும். நாடகத்தை எழுதுபவர் எங்களது தமிழாசிரியையான திருமதி. மாரியம்மாள் அவர்கள். நான் அந்தப் பள்ளியில் இருந்தவரை நாடகத்தின் ஹீரோ (ராஜபாட்) ‘சபரிநாத்’. என்னைவிட ஒரு வகுப்பு சீனியர்.

மிகத் திறமையான நடிகன் சபரி. தமிழ் அவன் வார்த்தைகளில் விளையாடும். மேடையில் அவன் பேசி நடிப்பதைக் கேட்கக் கேட்க அவ்வளவு அற்புதமாக இருக்கும். கதாப்பாத்திரமாகவே மாறுவது என்றால் என்ன என்று அவனைப் பார்த்தால் தெரியும். 8 ஆவது படிக்கும் போது Parents Day ஆங்கில டிராமாவில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று வசனம் பேசியிருந்தேன். 11 ஆவது படிக்கும் போது தான் எனது தமிழ் ஆர்வம் கண்டு என்னை தமிழ் நாடகத்தில் சேர்த்துக்கொண்டார் மாரியம்மாள் மிஸ். வழக்கம்போல அப்போது 12ஆவது படித்துக்கொண்டிருந்த சபரி தான் நாயகன். சரித்திர நாடகம். எனக்கு சகுனிக்கு இணையான நயவஞ்சக வில்லன் கதாப்பாத்திரம் (சைடுபாட்), பெயர் இலாஹி. ஒத்திகையின் போதெல்லாம் சபரியைப் பார்த்துப் பார்த்து பொறாமைப் படும் சகநடிகர்களில் நானும் ஒருவன். சத்தியமாக அப்போது எனக்குச் சிவாஜியைத் தெரியாது, நடிப்பு என்றால் எனக்கு சபரி என்று தான் தெரியும். நாடகத்தின் கிளைமாக்ஸில் என்னைக் கொன்று, கைதாகும் முன் வெள்ளையனை எதிர்த்து, அவனுக்கு உதவும் தேசத்துரோகிகளைக் காரி உமிழ்ந்து சபரி பேச வேண்டிய நீண்ட வசனக்காட்சி ஒன்று இருந்தது. என்னைக் கொல்ல அட்டைக்கத்தி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதுசரியாக இல்லை. வீட்டில் அலங்காரத்திற்காக வைக்கப்படும் உரையுடன் கூடிய ஒரிஜினல் கத்தி ஒன்றை நான் கொண்டு வருகிறேன் என்று சொன்னதற்கு, “வேண்டாம்டா, அவன் உணர்ச்சிவசப்பட்டு நெஜமாவே உன்னக் குத்துனாலும் குத்திடுவான்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் மிஸ். அட்டைக்கத்தி திருப்தியே ஆகாததால், சின்னதாக ஒரு கத்தியை நானே ஏற்பாடு செய்து சபரி கையில் கொடுத்தேன்.

ஒத்திகையின் போதே “தயவு செஞ்சு எழுதிக்கொடுத்தத மட்டும் பேசு, இதுக்கே அதிக நேரம்னு HM சொல்றார்” என்று சொல்லியிருந்தார் மாரியம்மாள் மிஸ்.

சொன்னது போலவே கிளைமாக்ஸில் என்னை முறுக்கி வளைத்து, கீழே தள்ளியது மட்டுமல்லாமல் பொம்மைக்கத்தியால் என் கையையும் கீறிவிட்டு பேசத் தொடங்கினான் சபரி. நிஜக்கத்தியாக இருந்திருந்தால் என்னைக் கொன்றாலும் கொன்றிருப்பான். கண்களில் தீப்பொறி பறக்க, கனீர்க்குரலில் ஏற்ற இறக்கத்துடன் எழுதிக் கொடுத்த வசனத்தையும் தாண்டி சொந்தமாக சபரி பேசப் பேச நேரம் அதிகமாவது கூடத் தெரியாமல் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தோம். பின்னணிக்கு கீ-போர்டு வாசித்துக்கொண்டிந்தவர் கூட அப்படியே நிறுத்திவிட்டு கவனிக்கத் தொடங்கிவிட்டார். “எக்காலத்திலும் உன்னைப்போலெல்லாம் என்னால் நடிக்க முடியாது” என்று மனதிற்குள் நினைத்தபடி சரண்டைந்து அவன் காலடியில் ‘டெட் பாடியாக’ கிடந்ததேன் நான். அரங்கம் அதிரக் கைத்தட்டல்களுடன் முடிந்தது நாடகம். அதுதான் சபரி நடித்து நான் பார்த்த கடைசி நாடகம்.
 
இதில் சபரி யாரென்று சொல்லித் தெரியவேண்டியதில்லை!
அதன்பிறகு 12 ஆவது படிக்கும்போதும் எனக்கு வில்லன் வேடம் தான் கிடைத்தது. கல்லூரியில் தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் Mime, Adzap, குறும்படங்கள் என்று ஏதோ எனக்கு வந்த வரை நடித்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் அது எங்கள் பள்ளி தமிழ் நாடகத்திற்கு ஈடாகாது. இருபது தடவைக்கு மேல் ஒத்திகை பார்த்து, அப்படியே கேரக்டரை உள்வாங்கி, கேக்கப் எல்லாம் போட்டு, ஆயிரம் பேருக்கு முன்னால் முகத்தில் அறையும் லைட் வெளிச்சம், அதனால் ஏற்படும் பெரும் புளுக்கம், வியர்வை அனைத்தையும் மீறி மைக்கில் உரக்கப் பேசி நடித்து கைத்தட்டல் வாங்கியதெல்லாம் மறக்கவே முடியாத நினைவுகள். கடைசியாக சபரியைப் பார்க்கும் பொழுது அப்படியே ‘கற்றது தமிழ்’ ஜீவா போல தாடி மீசை ஜோல்னா பையுடன் TVS50 யில் போய்க்கொண்டிருந்தான். ஆண்டு 2004. இப்போது சபரி எங்கு, என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று தெரியாது. Facebookல் தேடிய போது கடாமீசை போட்டோ வைத்த ஒரு காலி Profile தான் கிடைத்தது. நன்றாக இருக்கிறான் என்று திருப்திபட்டுக்கொண்டேன்.

********* End of சுயபுராணம் *********

பள்ளி, கல்லூரியில் மேடை ஏறி நடித்திருந்ததாலோ என்னவோ “காவியத்தலைவன்” எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படியே 10 வருடம் பின்னோக்கிப் போய் நினைவுகளில் மூழ்கிக்கிடந்தேன். 18 ஆம் நூற்றாண்டுக் கள்ளர்களின் வாழ்க்கையைச் சொன்ன ‘அரவான்’ தோற்றபின்பும் கூடக் கலங்காமல் தனது அடுத்த படத்தை நாடக நடிகர்களான கிட்டப்பா – சுந்தராம்பாள் வாழ்க்கையைத் தழுவி எடுக்கத் துணிந்த இயக்குனர் வசந்தபாலனின் துணிச்சலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழுக்கு, தமிழ் சினிமாவிற்கு அவர் செய்துகொண்டிருக்கும் இந்தத் தொண்டிற்கு நான் தலை வணங்குகிறேன். அளவிற்குமீறி கொப்பளிக்க வேண்டிய நடிப்பு, பத்திற்கும் அதிகமான பழைய மெட்டுப் பாடல்கள், நீண்ட நாடக வசனங்கள், மேக்கப், செட், மேடை, ஆடல், பாடல் என்று இப்போது வரும் அடிதடி, காதல், பேய் படங்களை முற்றிலுமாக ஒதுக்கி, தனித்து நிற்கிறது காவியத் தலைவன். இது போன்ற படங்கள் தான் நாம் இழந்ததை, மறந்ததை மீண்டும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். அந்த வகையில் காலத்திற்கும் அழியாவண்ணம் ஆவணமாக்கப்பட வேண்டிய மிகமுக்கியமான படம் காவியத்தலைவன்.

காவியத் தலைவனின் ‘ராஜபாட்’ நிச்சயம் சித்தார்த்தோ, பிருத்விராஜோ அல்ல. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தான். சமீபகாலமாக ரஹ்மானின் பாடல்களோ, பின்னணியசையோ என்னைக் கவரவே இல்லை. கடைசியாகத் தமிழில் இந்த இரண்டும் சூப்பராக அமைந்தது ‘ஆய்த எழுத்து’. அதன்பிறகு ‘வின்னைத்தாண்டி வருவாயா’. இப்போது ‘காவியத் தலைவன்’ மூலம் மீண்டும் நிமிர்ந்தது நிற்கிறார். ஒரு தடவைக்கு மேல் கூட நான் கேட்காத பாடல்கள் ஒவ்வொன்றையும் படத்துடன் சேர்த்துப் பார்க்கும் போது அவ்வளவு அருமையாக இருந்தது. முக்கியமாக வாணி ஜெயராம் பாடும் அருணகிரிநாதரின் பாடல், அதற்கு வேதிகாவின் அபினயங்கள், அப்பப்பா… அருமை! அமரர் திரு வாலி அவர்கள் எழுதிய, மேடைப் பாடலான ‘அல்லி வருகிறாள்’, செம ஜாலியாக எடுக்கப்பட்டிருந்த ‘ஹே சண்டிக்குதிர’, இளமைத் ததும்ப மயக்கிய ‘ஏ மிஸ்டர் மைனர்’, பிரிவின் துயரத்தைக் காதலுடன் சேர்த்துக் கொடுத்த ‘யாருமில்லா தனியறையில்’ என மொத்த ஆல்பமுமே படத்தோடு பார்க்கையில் அருமையாக, ஜாலியாக இருந்தது.

ரஹ்மானுக்கு அடுத்து பாராட்டப்படவேண்டியவர் ‘ஒளிப்பதிவு ஆளுமை’ என்று வசந்தபாலன் பாராட்டும் நீரவ் ஷா. படம் பார்க்க உடன் வந்த என் நண்பன் சொன்னது போல “படத்துல எந்த ஃப்ரேமை வேண்டுமானாலும் போட்டாவாக எடுத்து வீட்டில் தொங்கவிட்டுக்கோங்கடா” என்று நீரவ் ஷா ஒவ்வொன்றையும் அழகாக மிக அழகாகப் படம்பிடித்திருக்கிறார். ஹாட்ஸ் ஆஃப்!

‘காவியத்தலைவன்’ காளியப்ப பாகவதராக சித்தார்த். சமீபகாலமாக தொடர்ந்து அருமையான கதாப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சித்தார்த்தின் திரைப்பயணத்தில் இந்தப் படம் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகிறது என்பதில் சந்தேகமே இல்லை. முதல் பாதி முழுக்க இவர் பிருத்விராஜுடன் போட்டிப் போட்டு நடித்திருக்கிறார். மிக அருமையான நடிப்பு, உணர்ச்சி, வசன வெளிப்பாடு. முக்கியமாக இடைவளைக்குப் பின் வரும் கர்ணமோட்ச நாடத்தின் கிளைமாக்ஸில் அர்ஜுனனாக இவர் பாடும் பாடல், அதனைக் கொடுத்த விதம் மனதை உருக்கிவிட்டது. ஆனால் இரண்டாம் பாதியில் சுதேசிக் கலைஞனாக ஏனோ சித்தார்த்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கர்ண மோசத்தில் அர்ஜுனனாக, கர்ணனின் நடிப்பையே மிஞ்சிய இவரால், சுதந்திர வேட்கைப் பொங்க நடிக்க முடியவில்லை. அந்தத் “தீ” இல்லை. சுமை தாங்காமல் இவர் தடுமாறுவது வெளிப்படையாகவே தெரிந்தது. அதற்காக சித்தார்த் நடிப்பை குறைத்து எடைபோட்டு விடக்கூடாது. தன்னால் முடிந்ததை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். "இவ்ளோ நல்லா நடிக்கக்கூடிய ஆளா சித்தார்த்...!" என்று என்னையும் சேர்த்து பலபேர் வாய்பிளந்தது உண்மை. 

கோமதிநாயகம்பிள்ளையாக பிருத்விராஜ். அத்தனை திறமையும், அர்பணிப்பும் இருந்தும் தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் அனைத்தும் காளிக்கே செல்வதைக் கண்டு தினம் தினம் வெந்து சாகும் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். மிக அருமையான நடிப்பு. குரு சிவதாஸ் சுவாமிகளுக்கு காளி, கோமதி இருவருமே சாபமிடுகிறார்கள். ஆனால் அதில் காட்டப்பட்டிருக்கும் வித்தியாசம் அருமை. “நீங்க இன்னும் அனுபவிப்பீங்க சாமி” என்று கண்களில் நீர் ததும்ப மனம் நொந்து கோமதி கொடுக்கும் சாபம் தான் அடுத்து நடப்பதனைத்துமே. கடாமாட்டு உடம்பை வைத்துக்கொண்டு பெண்வேடமிட்டு நடிப்பதற்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும். அது இவரிடம் நிறையவே இருக்கிறது. சித்தார்த் போல இரண்டாம் பாதியில் தடுமாறாமல் கிளைமாக்ஸ் வரை ஒவ்வொரு இடத்திலும் கைத்தட்டலகளை அள்ளுகிறார். ஒவ்வொரு முறை இவர் நடித்து முடிக்க, அடுத்து வரும் சித்தார்த் அதைவிடச் சிறப்பாக நடிக்க, அதைக் கண்டு இவர் மருகும் இடங்கள் அனைத்திலுமே இவர்தான் ஸ்கோர் செய்கிறார். படத்தில் இவரது ‘வளர்ச்சி’ அருமையாகக் காட்டப்பட்டிருக்கிறது.

குரு தவத்திரு சிவதாஸ் சுவாமிகளாக நாசர் – “இந்த வேடத்திற்கு என்னைவிட்டால் வேறு எவன் இருக்கிறான் இங்கு” என்று சவால் விட்டிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகப் பொருத்தமான கதாப்பாத்திரம் ஒன்றில் மிகப் பிரமாதமாக நடித்திருக்கிறார். காளியை அடித்துப் புரட்டும் இடத்திலும், சிஷ்யனிடம் சாபம் வாங்கி அப்படியே சரியும் இடத்திலும் அப்படியே உச்சத்திற்குப் போகிறார்.

வடிவாம்பாளாக வேதிகா. சித்தார்த், பிருத்விராஜைச் சுற்றியே நடக்கும் கதையில் கிடைக்கும் இடங்களிலெல்லாம் சொக்கவைக்கும் தனது அழகை துணைக்குச் சேர்த்துக்கொண்டு தனது அருமையான நடிப்பால் கவர்ந்துகொண்டே இருக்கிறார். அறிமுகக்காட்சியில் இவர் ஆடிப்பாடும் காட்சியில் இவர் கொடுக்கும் ரியாக்ஷன்கள் அருமையோ அருமை. ராணி வேஷம் கண்பட்டுவிடுமளவிற்குப் பொருத்தமாக இருக்கிறது. ஆனாலும் ‘பரதேசி’ தான் இன்றும் இவரது பெஸ்ட். இவரை ஏன் தமிழ் சினிமா தொடர்ந்து புறக்கணித்து பாவத்தைச் சேர்த்துக்கொள்கிறது என்று தெரியவில்லை.

மதுரை ஜமீன் இளவரசியாக ராம்கோபால் வர்மா நாயகி ‘அனைகா’ – பார்த்தவுடன் முத்தம் கேட்கத் தோன்றும் அழுகுப் பதுமை. Angelina Jolie உதட்டுக்காரி. இவரது உதடுகளுக்கு மட்டும் தனிச்சம்பளம் கொடுக்க வேண்டும். நன்றாக நடிக்கவும் செய்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்கிறார்.

100 மேடை கண்ட ராஜபாட்டாக வரும் பொன்வண்ணன், தானும் ஒரு திறமையானக் கலைஞன் என்பதை ஜஸ்ட் லைக் தட் நிரூபித்து விட்டுப் போகிறார். இன்னும் சில காட்சிகளில் இவரை நடிக்க வைத்திருக்கலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு மன்சூரலிகான் சொல்லிக்கொள்ளும்படி ‘காரைக்குடி கன்னையா’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தம்பி ராமையா, சிங்கம்புலி, குயிலி படம் முழுக்க வந்தாலும், இவர்களது பெஸ்ட் இதுவல்ல.

இயக்குனர் வசந்தபாலன் இந்தப் படத்தை எடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை மட்டுமல்லாது வசனமும் எழுதியிருக்கிறார். மிக அழகாக கிட்டப்பா – சுந்தராம்பாள் வாழ்க்கையைத் தழுவி திரைக்கதை அமைத்திருப்பதை நிச்சயம் பாராட்ட வேண்டும். அழுதமில்லாத காட்சிகளாக நகர்ந்த இரண்டாம் பாதியை மட்டும் இன்னும் கொஞ்சம் மெருக்கேற்றியிருக்கலாம். பக்கம் பக்கமாக நாடகத்தனத்துடன் கூடிய வசனங்கள் எழுதப்பட்டிருந்தாலும் அதில் ஒரு ‘fire’ (தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை) இல்லாதது வருத்தமே. முதல் பாதியாவது பரவாயில்லை, இரண்டாம் பாதியில் காட்சிகளைப் போலவே வசனங்களும் மிகச் சாதாரணமாகவே இருந்தது. சரித்திர நாடகங்களில் நடிப்பிற்கு, ஆட்டத்திற்கு, பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் ஆனால் சுதேசி நாடகங்களில் வசனங்கள் தான் பார்ப்பவரது மனதில் சுதந்திரத் தீயை மூட்டும். ஆனால் அது படத்தில் மிஸ்ஸிங். காதல் வசங்களும் அவ்வளவு பிரமாதம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் அந்த காலத்து மொழி வழக்கில் வசனங்களை எழுதியதுவரை நிச்சயம் ஜெயமோகன் பாராட்டப்படவேண்டியவர் தான். ஆனால் அது போதாது.

குறை என்றால் அது இரண்டாம் பாதி தான். திடீரென்று சுதந்திரப் போராட்டத்தில் குதிக்கும் காளியப்பன் கதாப்பாத்திரத்தின் மேல் ஒரு ஒட்டுதலே வரமறுக்கிறது. குருசாபமிட்டு வெளியே துரத்தப்படும்போது பார்வையாளனாக நமக்கு வரும் பரிதாபம், இரண்டாம் பாதியில் போலீஸிடம் நாயடி பேயடி வாங்கும்போது வர மறுக்கிறது. எதிர்பார்த்த கிளைமாக்ஸ் திருப்தியாகத் தான் இருந்தாலும், முழுமையாக இல்லை. மேலும் பல நாடகங்களை ‘ஸ்ரீலஸ்ரீபாலசண்முகானந்தா நாடக சபா’ அரங்கேற்றுவதாகக் காட்டினாலும், எதுவுமே முழுமையாகக் காட்டப்படவில்லை. அவசரவசரமாக ஓடிவிடுகிறது நாடகங்கள். முழுதாகக் காட்டிக்கொண்டிருக்க முடியாது என்றாலும் கொஞ்சம் விரிவாக, ஒரேயொரு நாடகத்தையாவது, குறைந்தது ஐந்தாறு நிமிடமாவது காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். முதல் பாதியில் இல்லையென்றாலும், சுந்தந்திரப் போராட்டம் என்று கையில் எடுத்த பிறகு கிளைமாக்ஸ் ‘பகத்சிங்’ நாடகத்தையாவது முழுதாகக் காட்டியிருக்க வேண்டும். குறை தான் என்றாலும் தாராளமாக அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு காவியத் தலைவனையும், இயக்குனர் வசந்த பாலனையும் கொண்டாடலாம்.

தயாரிப்புச் செலவு அதிகம் வைக்கக்கூடிய, சுத்தமாக டிரெண்டில் இல்லாத நடிப்பு, இசை, மேக்கப், காஸ்டியூம், செட் வகையராக்களுக்கு அதிக முக்கியத்துவமுள்ள இப்படிப் பட்ட கதையை எடுக்கத் துணிந்தது மட்டுமல்லாமல் திறமையான கலைஞர்களை ஒப்பந்தம் செய்த வகையிலும் பாராட்டப்பட வேண்டியவர்கள் தயாரிப்பாளர்களான Y NOT Studios காரர்கள். படத்தில் ரஹ்மானின் பங்கு எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவிற்கவ்வளவு முக்கியத்துவமுள்ள மேக்கப்மேன் பட்டணம் ரஷீத், காஸ்டியூம் டிசைனர்கள் பெருமாள் செல்வம், நிரஞ்சனி அகத்தியன், கலை இயக்குனர் டி.சந்தானம் ஆகிய அனைவருமே பாராட்டப்படவேண்டியவர்கள். கூடவே இந்தப் படத்திற்காக பெரும் உழைப்பைச் சிந்தியிருக்கும் உதவி இயக்குனர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்

1960 களுக்கு ஒரு ‘தில்லானா மோகனாம்பாள்’ என்றால் நம் காலத்திற்கு ‘காவியத் தலைவன்’. தி.மோ விற்கு எந்த அளவும் குறையாமல் இந்தப் படத்தையும் ஒரு கிளாஸிக் ஆக்குவது தமிழ் சினிமா ரசிகர்களது கடமை. என்னைப் பொறுத்தவரை படம் அருமை. மீண்டும் ஒரு முறை பார்த்து நினைவுகளில் மிதக்க நான் தயாராக்கிக்கொண்டிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல படம் பார்த்த திருப்தி. 

Trailer - https://www.youtube.com/watch?v=ia3dOZf8h2M

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...