6 ஆவது பெங்களூரு சர்வதேச திரைப்படவிழா (BIFFES '13) - பாகம் 02

7:49:00 PM

2013 ஆம் ஆண்டு 6 ஆவது பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் நான் கண்ட உலகத்திரைபடங்களைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் தொடரில் இது இரண்டாவது பதிவு.

முதல் பதிவை இங்கு க்ளிக்கிப் படிக்கலாம்.

படங்களுக்குப் போகும்முன் சில விஷயங்கள். இந்தியாவின் மற்ற நகரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது சர்வதேசத் திரைப்பட விழாக்கள் நடத்துவதில் பெங்களூரு தான் கடைக்குட்டி. அதனால் படங்களைக் கொண்டுவருவதிலும், விழாவை ஒருங்கிணைப்பதிலும் சில குழப்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடப்பது சகஜமே. அப்படி இந்த வருடம் நடந்த ஒரு மிகப்பெரிய குளறுபடி, தொடக்க விழா. "கமல் வருகிறார்" என்று ஊரெல்லாம் பெருமையாக தம்பட்டம் அடித்துவிட்டார்கள். அந்த நாளுக்கு காத்திருந்த ரசிகர்களும் விழா நடக்கும் இடத்தில் வந்து குவியத் தொடங்க, யாரும் எதிர்பாராத விதமாக டக்கென்று போலீஸை விட்டு வந்த ரசிகர்களை (உலக சினிமா பார்க்க ரூ500 கொடுத்து 'பாஸ்' வாங்கியிருந்த ரசிகர்களை) அடித்து விரட்டிவிட்டார்கள். சோகம் என்னவென்றால் ஒரு மாதத்திற்கு மேல் நாய் போல் வேலை செய்த விழா ஒருங்கிணைப்பாளர்கள், வாலண்டியர்களுக்கும் இதே நிலைமை தான். அரசியல்வாதிகள் அவர்களது குடும்பங்கள், திரை உலகத்தில் ஒரு சிலர், வி.வி.ஐ.பி க்கள் என்று ஒருசில வர்க்கத்தினர் மட்டும் தான் அனுமதிக்கப்பட்டனர். 2013 ஆம் ஆண்டு கன்னட சினிமா (சாண்டல்வுட்) என்ற ஒன்றும் இருக்கிறது என்று உலகத்திற்குச் சொன்ன 'லூசியா' பவன்குமாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 'போங்கடா நீங்களும் உங்க விழாவும்' என்று பஜரங்கி பார்க்கச் சென்றுவிட்டதாக எழுதியிருந்தார். ஆரம்பமே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருத்தியை ஏற்படுத்தியது. இதே கூத்து தான் சென்னையிலும் நடந்தது என்று கேள்விப்பட்டேன். எங்கும் அரசியல் எதிலும் அரசியல் என்றால் என்ன தான் செய்வது.

அடுத்த பிரச்சனை - 130 படங்களை 7 நாட்கள் திரையிட்டார்கள். ஒரு நாளைக்கு 5 படங்கள் பார்க்கலாம். மொத்தம் 7 இடங்களில் திரையிடல் நடந்தது - FUN சினிமாஸ் - 3 ஸ்கிரீன்கள், INOX LIDO - 2 ஸ்கிரீன்கள், SULOCHANA INFORMATION CENTER, PRIYADARSHINI. இதில் ஃபன் மாலிற்கும் லிடோவிற்கும் இடையே 5 கி.மீ தூரம். சுலேச்சனா, ப்ரியதர்ஷினி எல்லாம் வேறு வேறு ஏரியாக்கள். அதனால் முடிந்தவரை ஒரே இடத்தில் திரையிடப்படும் படங்களைப் பிளான் செய்ய வேண்டும். இல்லையென்றால் பெரும் பிரச்சனை தான். என் வீட்டிற்கும் இந்த தியேட்டர்களுக்கும் குரைந்தது 12 கி.மீ ஆவது இருக்கும். ஆக எனக்கு எல்லாம் ஒன்றுதான். ஆனால் எனக்கும் அந்த ஏரியாக்களுக்கும் சம்பந்தமே இல்லையென்பதால் நான் முழுக்க முழுக்க Google Maps உதவியுடன் தான் படம் பார்த்தேன். ஃபன் மாலிலிருந்து சுலோச்சனாவைத் தேடிக்கண்டுபிடிக்க எனக்கு ஒரு மணிநேரம் ஆனது. டிராபிக் போலீஸ், ஆட்டோகாரன் யாருக்கும் சுலோச்சனா தெரியவில்லை. Google Maps நன்றாக சுற்றலில் விட்டது. ஒருவழியாக உள்ளே சென்றால் ஒரு சின்ன ஆடிடோரியத்தில் ப்ரொஜெக்டர் வைத்து படம் காட்டினார்கள். எதிர்பார்த்து அரும்பாடு பட்டு சென்ற படம் - செம மொக்கை. வாழ்க்கை வெறுத்துவிட்டது. அருகருகில் வென்யூ இருந்திருந்தால் டக்கென்று அடுத்த படத்திற்கு தாவியிருக்க முடியும். ஆனால் அது முடியாமல் போனது.

அடுத்து Synopsis புத்தகம். வழக்கமாக முதல் நாள் உள்ளே வரும்பொழுதே திரையிடப்படும் படங்களைப் பற்றிய அறிமுகப்புத்தகத்தை ஒரு பையில் போட்டுக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் இந்த முறை அப்படிக் கொடுக்கவில்லை. குறுகிய நேரத்திலேயே தீர்ந்துவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. 2000 பேர் பணம் கட்டி பாஸ் வாங்கியிருக்கிறார்கள் என்றால் 2100 பிரிண்ட்களாவது அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இதுகூடவாடா தெரியாது என்று கேட்டால், "ஸார், புத்தகத்தில் 100 பக்கம் மாற்றி பிரிண்ட் செய்யப்பட்டு வந்தது. அதனால் 2000 புத்தகங்களை திருப்பி அனுப்பி இருக்கிறோம்" என்றார்கள். எனக்கு புத்தகம் கைக்கும் வந்தது 4 ஆம் நாள் இரவு. நான் மொத்தம் 5 நாட்கள் தான் படமே பார்த்தேன்.

வெறும் குறைகளாக சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். குறைகள் குறைவு. அதனால் முதலிலேயே எழுதிவிட்டேன். நிறைகள் நிறையவே இருக்கிறது. அதை அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன். படங்களுக்குச் செல்வோம்.

13 Semesters | Frieder Wittich | 2009 | Germany

அப்படியே என் கல்லூரி வாழ்க்கைக்கு திரும்பப் போய்விட்டு வந்த உணர்வை இந்தப் படம் தந்தது. இதை உலகப்படம் என்றெல்லாம் சொல்லமுடியாது. அக்மார்க் வணிகப்படம். எடுக்கப்பட்ட விதத்தில் உலகத்தரம் இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். Moritz and Dirk இருவரும் நண்பர்கள். ஒரே கிராமத்தில் படித்து வளர்ந்தவர்கள். ஜெர்மனியின் பெரிய பல்கலைக்கழகத்தில் Business Arithmetics படிக்க வருகிறார்கள். படம் இதிலிருந்து தான் தொடங்குகிறது. பல்கலைக்கழகத்தில் இருக்கும் பல்வேறு விதமான மாணவர்களைக் காட்டுகிறார்கள். முதல் நாளே ரூம் விஷயத்தில் நண்பர்கள் பிரிந்து விடுகிறார்கள். Dirk படிப்பில் கவனத்தை செலுத்த Moritz கேளிக்கைகளிலேயே குறியாக இருக்கிறான். ஒவ்வொரு செமஸ்டராக கடந்து போகிறது. பால்ய நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேறு வேறு ஆட்களாகிக்கொண்டே வருகிறார்கள். நடுவில் காதல், காதலிகள், புதிய நண்பர்கள், தொழில்கள் என்று அப்படியே 13 செமஸ்டர்கள் ஓடுகிறது. முழு படமும் ஹீரோவின் பிளாஷ் பேக் ஒன்றில் ஆரம்பித்தாலும் காட்சிகள் லீனியராகவே பயணிக்கிறது. சுவாரஸ்யமான சீக்வென்ஸ்கள் பல இந்தப் படத்தில் உண்டு. தன் காதலியை எப்படி சந்தித்தான், எப்படிப் பிரிந்தான். M-L-M டைப் வியாபாரம் ஒன்றில் மாட்டிக்கொண்டு முழிப்பது என்று அவற்றை எடுத்த விதத்தில் கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டார் இயக்குனர். அப்படி செம ஜாலியாக அமைக்கப்பட்ட ஒரு சீக்வென்ஸ், ஹீரோ ஆஸ்திரேலியாவிற்கு ஒரு செமஸ்டர் படிக்கப் போவது. ஹீரோவின் வாய்ஸ் ஓவரில் போட்டோக்களாக அவை காண்பிக்கப்பட்டது. தன் கேர்ள் பிரண்டிற்கு சொல்லும்பொழுது ஒரு விதமாக, நண்பனிடம் சொல்லும் பொழுது ஒரு விதமாக, வாத்தியாரிடம் சொல்லும்போது ஒரு விதமாக என்று செம ஜாலி போட்டோ சீக்வென்ஸ் அது. கல்லூரி நாட்களை நினைத்து ஏங்குபவர்களுக்கு இந்தப் படம் பிடிக்காமல் போக வாய்ப்பே இல்லை.


Hush…Girls Don’t Scream | Pouran Derakhshandeh | 2013 | Iran

இந்தத் திரைப்பட விழாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் இதுவும் ஒன்று. படத்தின் இயக்குனர் வந்திருந்தார். கையைத்தட்டி ஆரவாரம் செய்து அசத்திவிட்டார்கள் ரசிகப்பெருமக்கள். இரண்டு வருடங்களுக்கு முன் நான் பார்த்த 678 என்ற படத்தின் கரு தான் இதுவும். ஆனால் மனம் கனக்கும் வகையில் அதைச் சொன்ன விதத்தில் தான் இயக்குனர் ஜெய்த்துவிட்டார். திருமணத்திற்கு இன்னும் சிறிது நேரமே இருக்க, மணமகள் மிஸ்சிங். அனைவரும் அவளைத் தேடிக்கொண்டிருக்க வெள்ளை உடை முழுக்க ரத்தக்கரையுடன் மணமேடைக்கு பேயறைந்ததுபோல் வருகிறாள் மணமகள். கொலை குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் தள்லப்படுகிறாள். என்ன ஆனது? யாரைக் கொன்றாள்? ஏன் கொன்றாள் என்பது தான் படம். படம் நிச்சயம் நம் மனதை இறுக்கும். இதுபோல் ஏதாவது ஒரு சென்சிடிவ் விஷயத்தை எடுத்து எதையாவது எடுத்து ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை இயக்குனர். பெண் என்பதால் அவர் எடுத்துள்ள காதல் காட்சிகள் அவ்வளவு அழகாக இருந்தது. பெண் உணர்வைச் சொன்ன விதமும் அருமை. படம் நிச்சயம் பார்க்க வேண்டிய படம், முக்கியமாக வீட்டில் பெண் குழந்தை உள்ளவர்கள்.


Walesa: Man of Hope | Andrzej Wajda | 2013 | Poland

ாலிவுட்டிற்கு ஒரு ஸ்கார்ஸேஸி என்றால் போலாந்திற்கு ஆந்ரே வாய்தா (Andrzej Wajda). முதலாமவருக்காவது வயது 71. ஆனால் தலைவருக்கு வயது 87. இன்னும் நின்று விளையாடுகிறார். போலாந்தின் ஹீரோ - லே வாலேசா (Lech Wałęsa)வின் வாழ்க்கை பற்றிய பயோ-பிக் இந்தப் படம். சாதாரண எலெக்டிரீசியனான வாலேசா எப்படி கம்யூனிச நாடான போலாந்தில் தொழிற்கூடங்களில் நடைமுறையில் இருந்த விதிகளை எதிர்த்து தொழிற்சங்கங்கள் அமைய போராடினார் என்பது தான் இந்தப் படம். ஒரு பத்திரிக்கையாளருக்கு பேட்டி கொடுப்பது போல் தொடங்குகிறது படம். கேள்விகளுக்கேற்றாற்போல வாலேசா வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் விளக்கப்படுகின்றன (Slumdog Millionare போல). செம்ம ஜாலியான, கெத்தான, தனது பேச்சால் செய்கைகளால் எவரையும் கவர்ந்திழுக்கும் ஆசாமியாக வாலேசாவை மிக அருமையாக பிரதிபலித்திருக்கிறார்கள். அவரது மனைவி கதாப்பாத்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் இருக்கிறார்கள். அனைவரையும் எப்படி இந்த 87 வயது இளைஞர் சமாளித்து வேலை வாங்கினார் என்பது தான் ஆச்சரியம். வாலேசா பற்றி கொஞ்சமாவது தெரிந்தால் இந்தப் படம் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. முதலில் எனக்கு படம் கொஞ்சம் விளங்கவில்லை. சட்சட்டென்று காட்சிகள் தவ்வுவது போலிருந்தது. பின்னர் வாலேசா பற்றி படித்துத் தெரிந்து கொண்டு, பார்த்தவற்றை ரிலேட் செய்து பார்த்த பொழுதுதான் வாய்தாவின் அருமை புரிந்தது.


The Patience Stone | Atiq Rahimi | 2012 | Afghanistan

ந்தத் திரைப்பட விழாவிலேயே என்னை மிரள, மறக்க நினைக்கும் ஆனால் மறக்க முடியாத ஒரு படம் என்றால் அது இந்தப் படம் தான். படம் முழுக்க இரண்டே பிரதான கதாப்பாத்திரங்கள் தான். அதில் ஒன்று பின்னங்கழுத்தில் குண்டடிபட்டு படுத்தபடுக்கையாக இருக்கும். மற்றொரு கதாப்பாத்திரம் அவனது மனைவி. வெளியே தாலிபான்களுக்கும் ராணுவத்திற்கும் நடக்கும் சண்டையில் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்க, கிட்டத்தட்ட பிணமாகிப் போயிருக்கும் தனது கணவனை கவனித்துக்கொண்டு வறுமையில், தனிமையில் தவிக்கும் ஒரு பெண்ணின் கதை தான் The Patience Stone. படம் முழுக்க பெயர் கூடச் சொல்லப்படாத அந்தப் பெண்ணைச் சுற்றித்தான் நடக்கிறது. தன் மனதில் உள்ள ரகசியங்களையெல்லாம் தன் கணவனிடம் அந்தப் பெண் சொல்கிறாள். தங்க்குள்ளே சிரித்துக்கொள்கிறாள், வெட்கப்பட்டுக்கொள்கிறாள், பயப்படுகிறாள், கோபப்படுகிறாள். காதல், காமம், பெண்களின் நிலை, அவர்களுக்கு இருக்கும் மதிப்பு, அவர்கள் நடத்தப்படும் விதம் என்று அனைத்தையும் தன் கணவனுடன் மனம்விட்டு பகிர்ந்துகொள்கிறாள். Golshifteh Farahani என்கிற அழகிய ராட்சசி தான் அந்தப் பெண். ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாடுகளை உடைக்க வேண்டும் என்பதற்காகவே டாப்லெஸாக நடித்து, போஸ் கொடுத்து தடை செய்யப்பட்ட நடிகை இவர். நம் சோனியா அகர்வால் போன்ற சோகம் கலந்த ஒரு அழகிய முகம் இவருக்கு. கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கதாப்பாத்திரத்தின் உணர்வுகளுக்குள் நம்மை இழுக்கும் சக்தி இந்தப் பெண்ணின் நடிப்பிற்கும் குரலுக்கும் இருந்தது. படத்தில் இசையும் இல்லை. அந்த அமானுஸ்ய உணர்வு, குரலிருந்து நான் இன்னும் மீளவில்லை. சினிமா ஒருவனுக்குள் ஏற்படுத்தக்கூடிய உணர்வுகள் மிக அதிகம் என்பதை எனக்கு மீண்டும் உணர்த்திய படமிது. Don't miss it!

You Might Also Like

1 comments

  1. வணக்கம் நண்பர்களே

    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...