6 ஆவது பெங்களூரு சர்வதேச திரைப்படவிழா (BIFFES '13) - படங்கள் - பாகம் 01

11:51:00 AM

இந்தியா முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு ஒரு பெரும் சுற்று சுற்றிவிட்டு ஆண்டு இறுதியில் பெங்களூருக்கு வந்த உலக சினிமாக்களில் சுமார் 20 படங்களைப் பார்க்கும் வாய்ய்பு எனக்கு ஆறாவது பெங்களூரு சர்வதேச திரைப்பட திருவிழாவின் மூலம் கிடைத்தது. நாம் தினம் பார்க்கும் கமர்ஷியல் படங்களைப் போல் ஆரம்பிப்பதும் தெரியாமல் முடிப்பதும் தெரியாமல் மறப்பதும் தெரியாமல் இருப்பவையல்ல உலக சினிமாக்கள். அவற்றைப் பார்க்க பொறுமை மிக மிக அவசியம், அவை நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம் என்பது நான் பல நாட்களுக்கு முன் கண்டுபிடித்த ஒரு மாபெரும் உண்மை, ரகசியம். பிறகு எதற்கு இவ்வளவு ஆர்பாட்டமாக திரைப்பட விழாவிற்கு கிளம்ப வேண்டும், சோறு தண்ணி தூக்கம் இல்லாமல் நத்தை வேகத்தில் பொறுமையாகப் போகும் படங்களாகப் பார்த்துத் தள்ள வேண்டும். வெறுமனே பெருமைக்காகவா? நிச்சயமாக இல்லை நண்பர்களே. கடவுள் பக்தி உடையவர்களுக்கு தூணிலும் துரும்பிலும், வீட்டருகிலேயே இருக்கும் கோவிலிலும் இருக்கும் கடவுளை ஒரு நிமிடம் நின்று கும்பிட பொறுமை, நேரம் இருக்காது. அதே ஆபீஸில் லீவ் சொல்ல வேண்டும், செலவு செய்து மலையேற வேண்டும், மணிக்கணக்கில் க்யூவில் நிற்க வேண்டும் என்று தெரிந்தும் வருடத்திற்கு ஒரு முறையாவது ஏழுமலையானையோ மற்ற இஷ்டதெய்வத்தையோ தரிசிக்க கிளம்பிப் போகும் பொறுமை இருக்கும். அப்படித்தான் உலக சினிமாக்களும். எங்கும் இருக்கும் இறைவன் தான் என்றாலும், அவனுக்கான வழிபாட்டுத் தளங்களில் சென்று தரிசிக்கும் பொழுது ஒரு தனி இன்பம் + திருப்தி கிடைக்கும், பொறுமை + நேரம் இருக்கும். வீட்டிலேயே அருமையாக டவுண்லோட் செய்து சாவகாசமாக எந்த வித தொந்தரவும் இல்லாமல் உலக சினிமாக்களைப் பார்க்க முடியும். ஆனால் அந்த அளவிற்கு எனக்கு நிச்சயம் பொறுமை கிடையாது. 90 நிமிடங்கள் ஓடும் ஒரு உலக சினிமாவைப் பார்ப்பதற்கு எனக்கு குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். நல்ல சினிமாக்களை எப்படியும் பார்த்து விட வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும், பொறுமை இருப்பதில்லை. ஒரு மனதாக, நிலையாக ஒரே இடத்தில், அமர்ந்து, pause பட்டனை உபயோகிக்காமல், படம் சொல்லும் விஷயத்தை உள்வாங்கி என்னால் நல்ல சினிமாக்களைப் பார்க்கவே முடிவதில்லை. ஆக்ஷன், த்ரில்லர், அட்வென்சர், வார் படங்களை என்னால் எந்தச் சிரமும் இல்லாமல் பார்க்க முடியும். ஆக, பெர்சனலாக நல்ல சினிமா பார்த்துக் கற்றுக்கொள்ள எனக்கிருக்கும் ஒரே சாய்ஸ், இதுமாதிரியான திரைப்பட விழாக்கள் மட்டும் தான். வேறு எந்த நினைப்பும் இல்லாமல் ஐந்து நாட்கள் சினிமா சினிமா சினிமா மட்டும் தான், அதுவும் நல்ல சினிமாக்கள் என்பது தான் தனிச்சிறப்பு. சினிமா எனக்கிருக்கும் ஒரே பொழுதுபோக்கு. ஒரு அருமையான ஆண்டை சந்தோசமாக வழியனுப்பி வைக்க இதைவிட ஒரு சிறந்த வழி எனக்கு இருக்க முடியாது. மனதார அனுபவித்து ரசித்து சந்தோஷமாகக் கழித்தேன் அந்த ஐந்து நாட்களையும்.

சரி சொந்தக் கதை போதும். விஷயத்திற்கு வருகிறேன். இந்த திரைப்பட விழாவில் 20 படங்களைப் பார்த்தேன் என்று சொன்னேன் அல்லவா - அவற்றை 5 பதிவுகளில் உங்களுக்கும் அறிமுகம் செய்து வைப்பது தான் எனது நோக்கம். சில படங்கள் இணையத்தில் இப்பொழுதே கிடைக்கின்றன. தரவிறக்கிப் பார்த்து விடுங்கள். திருப்பதிக்கு சென்ற திருப்தி கிடைக்காது, ஆனாலும் பரவாயில்லை, போட்டோ பார்த்தாவது கும்பிட்டுக் கொள்ளுங்கள்.

Dozakh in search of heaven | Zaigham Imam | 2013 | India


இன்னும் விடிந்திராத ஒரு அதிகாலைப் பொழுதில் ஒரு பெரியவர் தூங்கி எழுந்து பொறுமையாகக் கிளம்புகிறார். அவர் முஸ்லீம் என்பது தெரிகிறது. அதிகாலைத் தொழுகைக்காக மசூதிக்கு கிளம்புகிறார். ஆனால் அவருக்கு முன்னமே எழுந்து பூஜைகளை முடித்து மணியடித்துக்கொண்டே மைக்கில் சத்தமாக காயத்ரி மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார் தெருவில் இருக்கும் இந்து பண்டிதர். மந்திர சத்தம் பலமாக ஒலிப்பதால் மைக்கில் இறைவணக்கம் சொல்ல முடியாமல் சிரமப்படுகிறார். ஒருவழியாக சகித்துக்கொண்டு “அல்லாஹு அக்பர்” என்று தன் தொழுகையைத் தொடங்குகிறார். காயத்ரி மந்திரமும் தொழுகைச் சத்தமும் மணியோசையுடன் கலந்து கேட்கிறது. ஊர் வாரனாசி – இப்படித்தான் தொடங்குகிறது Dozakh – In Search of Heaven திரைப்படம். Dozakh என்றால் நரகம் என்று பொருள். அந்த முஸ்லீம் பெரியவருக்கு 12 வயதில் ஒரு மகன் இருப்பதும் அவன் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததும் தெரிகிறது. முன் பின் நான்-லீனியராகப் போகும் கதையில் அந்தச் சிறுவனைப் பற்றியும், அவனது தாயைப் பற்றியும், இரண்டு மதங்களும் அவை சார்ந்த சடங்குகளும், மனிதர்களும், நம்பிக்கைகளும், கதைகளும் அந்தச் சிறுவனுக்குள் ஏற்படுத்தும் குழப்பங்களை நாம் தெரிந்துகொள்கிறோம். அந்த சிறுவன் கிடைத்தானா, அவனுக்கு என்ன ஆனாது, ஏன் காணாமல் போனான் என்பதை அருமையாக, உருக்கமாக சொல்லியிருக்கிறார்கள்.

உலக சினிமா பார்க்க வந்துவிட்டு முதல் படமே இந்தியப் படமாக இருக்க வேண்டுமா என்று யோசித்துக்கொண்டே தான் உள்ளே சென்றேன். இந்தப் படத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. முற்றிலும் அன்-பிளான்டாகத்தான் இந்தப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். ஆனாலும் படம் என்னை அசத்திவிட்டது. படத்திலிருக்கும் ஒரே மாபெரும் குறை வசனங்களும், டப்பிங்கும் தான். அருமையான கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, கதாப்பத்திரத் தேர்வு, நடிப்பு என்று மற்ற ஏரியாக்களில் எல்லாம் கலக்கியவர்கள் ஒலியமைப்பில் சொதப்பிவிட்டார்கள். ஆனாலும் படம் எனக்குப் பிடித்திருந்தது. அதனால் நான் பார்த்த முதல் படமே நல்ல படம் என்ற சர்டிபிக்கேட் பெறுகிறது.

Harmony Lessons | Emir Baigazin | 2013| Kazakhstan

படம் முழுக்க சிறுவர்களைப் பற்றித்தான் என்றாலும் இது முழுக்க முழுக்க கஸகஸ்தான் நாட்டின் அரசியல் சூழலை பற்றிப் பேசும் / துகிலுரிக்கும் படம். படத்தின் முதல் காட்சியே படம் எப்படி இருக்கப் போகிறது என்பதை நமக்குச் சொல்லிவிடுகிறது. பனி படர்ந்த ஒரு இடம். அங்கு பொறுமையாக ஒரு ஆட்டை துரத்தி துரத்தி பிடித்து, அதன் கால்களைக்கட்டி, கழுத்தை அறுத்து, ரத்தத்தை ஒரு பாத்திரத்தில் பிடித்து, உடலை தலைகீழாகத் தொங்கவிட்டு, தோலுரித்து, பாகங்களை வெளியே எடுத்துப்போட்டு, மாமிசத் துண்டுகளாக வெட்டி தன் பாட்டியிடம் கொடுக்கிறான் 13 வயதுச் சிறுவனான அஸ்லான் (Aslan). மறுநாள் பள்ளியில் நடக்கும் ஒரு மருத்துவ பரிசோதனையின் போது போலாட் (Bolat) என்கிற ஒரு அடாவடிச் சிறுவனது சதியால் மற்ற சிறுவர்கள் தங்களது லுல்லாவை விட்டு எடுத்த தண்ணீரைக் குடித்துவிடுகிறான் அஸ்லான். அன்றிலிருந்து மற்ற சிறுவர்களின் கேலிக்கூத்திற்கு ஆளாகிறான். போதாத குறைக்கு அவனிடம் யாரும் பேசக்கூடாது என்று தடை வேறு விதித்து விடுகிறான் ‘கேங்லீடர்’ போலாட். மனதளவில் வெகுவாக பாதிக்கப்படும் அஸ்லான் தன்னை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக தீவிரம் காட்டுக்கிறான். அசிங்கம் / நோய் இவற்றைப் பரப்புவதே கரப்பான்பூச்சிகள் தான் என்று டி.வியில் சொல்ல, விதவிதமாக அவற்றைப் பிடித்துக் கொல்கிறான் (மரண தண்டனை விதிக்கிறான் என்று சொன்னால் சரியாக இருக்கும்). நாளுக்கு நாள் போலாட் மீதான வெறுப்பும் அதிகமாகிறது. அந்தச் சமயத்தில் நகரத்திலிருந்து மிர்ஸயன் (Mirsayan) என்ற சிறுவன் புதிதாக பள்ளியில் வந்து சேர்கிறான். ஆஸ்லானுடன் நட்புடன் பழகுகிறான். ஆஸ்லான் – போலாட் - மிர்ஸயன் இவர்களுக்கு என்ன ஆனது என்பதை பொறுமையாக, உலக சினிமாக்களுக்கான இலக்கணம் மாறாமல் சொல்லியிருக்கிறார்கள்.

பள்ளியில் இளம்பவயதிலேயே எப்படி வன்முறை வளர்கிறது என்பதை அருமையாக பொறுமையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். போலாட் சிறுவன் வருங்காலத்தில் மிகப்பெரிய மாஃபியா தலைவனாக வரும் அனைத்து தகுதிகளும் கொண்ட கதாப்பாத்திரம். இந்தப் படத்தில் இசையே கிடையாது. நம் “வீடு” திரைப்படம் போல பல முக்கிய காட்சிகளை நமது கற்பனைக்கே விட்டுவிடுகிறார் இயக்குனர். வசனங்களாகப் பேசித் தள்ளாமல் பொறுமையாக நம்மை அந்த உலகிற்குள் கூட்டிச் செல்கிறார் தனது காட்சிகளின் மூலம். வன்முறையை கதைக்களனாகக் கொண்ட படங்கள் எனக்குப் பிடிக்காது. இருந்தாலும் இந்த ஹார்மொனி லெசன்ஸ் படத்தை என்னால் மறக்க முடியவில்லை.


The Amazing Catfish | Claudia Sainte-Luce | 2013 | Mexico

தனிமையிலேயே வாழ்க்கையைக் கழிக்கும் இளம்பெண், கிளாடியா (Claudia) – சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்கிறாள். வய்ற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவளுக்கு பக்கது பெட் மார்த்தா (Martha) உடன் பழக்கம் ஏற்படுகிறது. மார்த்தாவிற்கு மூன்று கணவன்கள் மூலம் பிறந்த நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு விதம். வேலை, காதலனுடன் பிரச்சனை என்றிருக்கும் சீரியஸாகவே சுற்றும் மூத்த பெண், வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம் என்பதே தெரியாமல் தேமே என்று எது கிடைத்தாலும் வாயில் போட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கும் குண்டுப் பெண், சதாசர்வகாலமும் மேக்கப், அலங்காரம் என்று கண்ணாடி + சீப்பிலேயே + போன் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பருவப் பெண், மூன்று அக்காக்களுடன் வளரும், பருவ வயது சந்தேகங்கள் அனைத்தும் உள்ள ஒரு சிறுவன். இவர்கள் தான் மார்த்தாவின் பிள்ளைகள். ஒருவர் மீது மற்றவருக்கு எந்த அக்கறையும் இல்லை. போதாதகுறைக்கு மார்த்தாவிற்கு எய்ட்ஸ் நோய். இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் மார்த்தா தனது குடும்பத்தை வெகுவாக விரும்பும் ஒரு பெண். தேரோத்திருவிழாவாக இருக்கும் அந்தக் குடும்பத்தில் வலுக்கட்டாயமாக பக்கத்து பெட் கிளாடியாவையும் இழுத்து விடுகிறாள் மார்த்தா. கொஞ்சம் கொஞ்சமாக கிளாடியாவும் அந்தக் குடும்பத்தில் ஒரு அங்கமாகிறாள். அங்கம் என்றால் “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” என்றில்லை. எல்லாரும் அந்த வீட்டில் இருப்பார்கள் அவரவரது வேலையைச் செய்வார்கள், கிளாடியாவும் சேர்ந்து கொள்கிறாள். குடும்பம் என்பதே புதிதாக இருக்கும் கிளாடியா கொஞ்சம் கொஞ்சமாக மார்த்தாவின் நான்கு பிள்ளைகளுடனும் நெருக்கமாகிறாள், அவர்களுக்கு உதவுகிறாள். மார்த்தாவின் நோயும் தீவிரமடைந்துகொண்டே வருகிறது. இறுதியில் என்ன ஆனது என்பது தான் கதை.

“மகளிர் மட்டும்” என்று பெயர் வைத்திருக்கலாம். அந்த சிறுவன் மட்டும் தான் பிரதான ஆண் கதாப்ப்பாத்திரம். படத்தில் ஏகப்பட்ட பெண்கள். கிளாடியாவை வழுக்கட்டாயமாக இழுத்து வந்துவிட்டு மயிராப் போச்சு என்று அவரவர் வேலையைப் பார்க்கும் பொழுது எரிச்சல் தான் வரும். ஆனால் கிளாடியா மார்த்தாவிற்காக மீண்டும் மீண்டும் அந்தக் குடும்பத்திற்குள் வருகிறாள். தன்னால் முடிந்தவற்றைச் செய்கிறாள். அடித்து தூள் கிளப்பியிருக்க வேண்டிய விக்ரமன் கதை. ஆனால் சொதப்பிவிட்டார்கள் என்பதே எனது கருத்து. அடுத்து என்ன நடக்கும் என்பதை குழந்தை சொல்லும் அப்படியொரு அசதியான, வீக்கான திரைக்கதை. பிடிக்கவில்லை.


Like Father, Like Son | Hirokazu Koreeda | 2014 | Japan

முதல் நாள் நான் பார்த்த படங்களிலேயே ஒரு அட்டகாசமான படமென்றால் அது லைக் ஃபாதர் லைக் சன் தான். உலக சினிமாவும் வணிக சினிமாவும் சரியான விகிதத்தில் கலக்கும் பொழுது இப்படி ஒரு மேஜிக் நிகழும். சதாசர்வகாலமும் வேலை, பணம் என்று கெத்தாக இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒரு கூட்டிற்குள் வாழ்ந்துகொண்டிருப்பவன் ரயோட்டா (Ryota). அவனது அன்பான, அமைதியான மனைவி மிடோரி (Midori) இவர்களது 6 வயது மகன் கெய்டா (Keita). ஒரு நாள் கெய்டா பிறந்த மருத்துவமனையிலிருந்து போன் வருகிறது. விஷயத்தைச் சொல்லாமல் கிளம்பி வாருங்கள் என்று மட்டும் சொல்கிறார்கள். சென்று பார்த்தால் “ஒரு சின்ன தப்பு நடத்துபோச்சு... கெய்டா உங்க மகன் இல்ல. அன்னிக்கி பிறந்த ருய்ஸி (Ryuse) தான் உங்களுக்கு பிறந்த மகன். குழந்தைகள் மாறிப் போச்சு” என்று நிதானமாகச் சொல்கிறார்கள். ருய்ஸி வளர்வது யுடாய் - யுகாரி என்ற நடுத்தர வர்கத்து தம்பதியிடம். அவர்களுக்கும் விஷயம் சொல்லப்படுகிறது. பெற்றவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எப்படியும் ஒரு முடிவிற்கு வந்துதான் ஆக வேண்டும் என்பதால் சில சந்திப்புகளுக்குப் பிறகு, தங்களிடம் வளரும் மகன்களை வாரம் ஒரு நாள் மாற்றிக்கொள்ள முடிவு செய்கிறார்கள். 6 வருடங்கள் ஆசையாக வளர்த்த மகனா அல்லது பெற்ற மகனா, என்ன நடந்தது என்பது தான் மீதிக் கதை.


டாரெண்டில் படம் வந்தவுடன் படக்கென்று டவுண்லோட் செய்து பார்த்தே தீர வேண்டிய படம் இது. இரண்டு தந்தைகளுக்கும் உள்ள வித்தியாசம், இரண்டு தாய்களுக்கும் இருக்கும் ஒற்றுமை, இரான்டு மகன்களும் வளர்ந்த விதத்தால் நடந்து கொள்ளும் விதம் என்று படம் முழுக்க பல அருமையான விஷயங்கள் உள்ளன. இரண்டு சிறுவர்கள் உட்பட முக்கிய கதாப்பாத்திரங்கள் அனைவரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஐந்து நாட்களில் நான் கண்ட அற்புதமான சினிமாக்களில் இந்தப் படமும் ஒன்று.

You Might Also Like

1 comments

 1. ‘அமேசிங் கேட்பிஷ்’ என்ற திரைப்படம் பற்றி நீங்கள் எழுதியதில் மாறுபடுகிறேன்.
  இப்ப்டத்தின் திரைக்கதை, பார்வையாளரின் யூகத்திற்கேற்ப திருப்பங்கள் இல்லைதான்.
  எல்லா திரைக்கதைகளும் அவ்வாறு வடிவமைக்கப்படுவதில்லை.
  நீங்கள் யூகிக்க முடிந்த திரைக்கதைக்குள் ‘அபூர்வ தருணங்கள்’ இருக்கும்.
  அந்த தருணங்கள் தரும் ‘பரவசமே’ முக்கியம்.
  நான் அடிப்படையில் ‘கிளாடியாக’வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
  எனக்கு ‘மார்த்தாவின்’ குடும்பம் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளையை’ நினைவு படுத்தி குதூகலப்படுத்தியது.
  மார்த்தாவின் ‘மனித நேயம்’ என்னை ‘அகலப்படுத்தியது’

  திரைப்பட விழாக்களிலேயே நான் இரண்டு முறை பார்த்த ஒரே படம் இதுதான்.

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...