Demystifying LUCIA - A film making workshop by Pawan Kumar

11:11:00 AM

இயக்குனர் பவன் குமார் தனது 'லூசியா' திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்த விதம், அதில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்தப் பதிவை எடுத்துக் கொள்ளலாம். அதாவது பார்ட் 2.

மற்ற இயக்குனர்களைப் போல வரிசையாக படங்கள் எடுப்பதோடு மட்டும் நின்று விடாமல், சினிமாவை (முக்கியமாக கன்னட சினிமாவை) வளர்ப்பது தொடர்பான பல்வேறு முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் இந்த இயக்குனர். சாண்டல்வுட்டில் இதுபோல் எதையாவது யாராவது செய்யவில்லை என்றால் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகிவிடும். லூசியாவின் வியாபாரத்தை பெருக்கும் பணி ஒருபக்கம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும் (சமீபத்தில் தான் சிங்கப்பூரில் வெளியிட்டிருக்கிறார்கள்), சினிமா என்னும் கலையை, அதன் நுட்பங்களை, அதில் தான் தெரிந்து கொண்ட விஷயங்களை, பின்பற்றிய முறைகளை, பட்ட அவதிகளை அடுத்தவருக்கு எடுத்துச்கொல்லும் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டுவருகிறார், பவன் குமார். அந்த வகையில் சென்ற மாதம் பெங்களூரில் பவன் நடத்திய "Demystifying Lucia" என்ற சினிமா பயிற்சிப் பட்டறைக்கு (Film Making Workshop) சென்றிருந்தேன். கட்டணம் ரூ.4000. 

நண்பர்கள் பலருக்கும் இந்தக் கட்டணம் பெரும் உருத்தலாக இருந்தது. "How to make films in poverty when rich with ideas" என்று விளம்பரப் படுத்தப்பட்ட, மக்கள் பணத்தில் படம் எடுத்த ஒரு இயக்குனர் நடத்தும் பயிற்சிப் பட்டறைக்கு எப்படி 4000 ரூபாய் வசூலிக்கலாம் என்று சிலர் கோபம் கொண்டனர். இலவசமாக நடத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்களா தெரியவில்லை. கோயம்பத்தூரில் நடந்த "Meet the Film Makers" கருத்தரங்கிற்கு வாங்கப்பட்ட கட்டணம் ரூ120. கட்டணம் வசூலித்ததற்கான காரணத்தை மேடையேறியவுடன் தெளிவாகச் சொன்னார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான இயக்குனர் கமலக்கண்ணன் - "வெறுமனே பொழுதைக் கழிக்க வராமல், கொடுத்த பணத்திற்காவது நியாயமாக இந்தக் கருத்தரங்கைப் பயன்படுத்திக்கொள்ளும் கூட்டத்தை எதிர்நோக்கியே இந்த ஒரு சிறிய விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது". துணை இயக்குனர்கள் / சினிமா ஆர்வலர்களின் சொர்க்கமாகத் திகழும், இலவசமாக உலகத் திரைப்படங்களைத் திரையிடும் தமிழ் ஸ்டூடியோ குழுமம் சமீபத்தில் நடத்திய ஒளிப்பதிவுப் பட்டறைக்குக் கட்டணம் ரூ.1200. காரணம் ஒன்று தான். இலவசங்களுக்கு என்றுமே பெரிய மதிப்பு இருப்பதில்லை. அதனால் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வாங்குவது என்னைக் கேட்டால் சரிதான். ரூ4000 கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் இயக்குனரின் வெற்றி அவருக்கு கொடுத்திருக்கும் தகுதியையும் (Brand) பகிர்ந்துகொள்ளப்பட்ட விஷயங்களையும் (content) வைத்துப் பார்க்கும் பொழுது இது நியாயமான விலை தான் என்பேன். 4000 வசூலித்தே சுமார் 70 பேர் கலந்துகொண்ட இந்தப் பட்டறையில் எத்தனை பேர் பயனடைந்தார்கள் என்பது தெரியவில்லை. காரணம் ஏனோ தானோ என்று இங்கும் சிலர் வந்தமர்ந்திருந்தார்கள். மதிய சாப்பாட்டிற்கு மேல் சிலரால் கண்களையே திறக்க முடியவில்லை. இதில் இலவசமாகவோ, குறைந்த கட்டணம் வசூலித்தோ நடந்தியிருந்தால் எத்தனை பேர் வந்து, இருந்துவிட்டு போயிருப்பார்கள் என்று தெரியவில்லை.

இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை. முழுவதும் ஆங்கிலத்தின் தான் நடந்தது. நான் சென்றது பவன் நடத்திய 4ஆவது பட்டறை என்று தெரிந்தது. "10 மணிக்குத் தொடங்கிவிடுவோம்" என்று முதல் நாள் தொலைபேசியில் கேட்டபோது சொன்னார்கள். 9.15 மணிக்கே நான் சென்றிருந்தாலும் எனக்கு முன்னரே பத்திற்கும் அதிகமானோர் காத்துக்கொண்டிருந்தார்கள். 9.40க்கு மாருதி 800 ஒன்றில் வந்திறங்கினார் பவன். அவரது உதவியாளர் ஒருவர் வந்திருந்தவர்களது பெயர்களை சரிபார்த்தார். சரியாக 09.55 க்கு அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து, அனைத்தும் தயாரான நிலையில், 10:05 க்கு தொடங்குவோம் என்று கூறி SAMSARA படத்தை ஓட விட்டார் பவன். ஒளிப்பதிவு பற்றி தெரிந்து கொள்ள / படிக்க நினைப்பவர்கள் தவறவே விடக்கூடாத ஆவணப்படம் இது. இதன் முதல் பாகம் BARAKA. பத்து நிமிடங்கள் Samsaraவில் திளைத்த பிறகு, தொடங்கினார் பவன்.

சம்பிரதாய அறிமுகங்கள், பகட்டுகள் எதுவும் இல்லாமல், நேரடியாக விஷயத்திற்கு வந்தார். கூட்டத்தினரைப் பார்த்து கேட்கப்பட்ட முதல் கேள்வி "Why do we make Films?" பல்வேறு பதில்களுக்குப் பிறகு இதனைத் தொடர்ந்து, ஒரு கதை எப்படி உருவாகிறது என்பதை கூறத் தொடங்கினார். எங்கள் மனதை விட்டு அகலாமல் மண்டைக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை, ஏதாவது ஒரு DISTURBANCE அல்லது EXCITEMENT ஐ அன்றைய கருவாக எடுத்துக் கொண்டு அதை நோட் பேடில் எழுதச் சொன்னார். தான் LUCIA கதையை எழுதத் தூண்டிய ஒரு வரியாக பவன் சொன்னது - If I'm dreaming about your life, what are you dreaming about. (கனவில் தொலைதல் என்று தமிழில் நான் இதை அர்த்தப்படுத்திக்கொண்டேன்). அப்படி எங்களுக்கு தோன்றிய அந்த ஒரு சிந்தனையைப் பற்றி சில வரிகளை (free writing) எழுத வைத்துப் பின்னர் அதில் கதாப்பாத்திரங்களைப் புகுத்தி (Characters), ஒரு ஆரம்பம் - ஒரு பிரதான குறிக்கோள் -  ஒரு முடிவு கொண்ட ஒரு முழுக்கதையாக (Story  - Conflicts and Conclusions) அதை வளர்த்து, திரைப்படத்திற்கு ஏற்றபடி திரைக்கதையாக்கி (Screenplay), வசனங்கள் சேர்த்து ஒரு முழு சினிமா ஸ்கிரிப்டாக (Script / Story divided into scenes) உருமாற்றுவது எப்படி என்பதை படிப்படியாக நிதானமாக அன்றைய தினம் முழுவதும் பகிர்ந்துகொண்டார். 

கதையில் அனைத்து கேரக்டர்களும் நாம் நினைப்பதை மட்டுமே பேசிக்கொண்டும், சாதித்துக்கொண்டும் இருக்காமல் ஒரு கதைக்கு தேவையான பல்வேறு விதமான கதாப்பாத்திரங்களை எப்படி உருவாக்க வேண்டும், பொருத்தமான நடிகர் - நடிகைகளை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும், நம் பக்க நியாயங்களை மட்டுமே பேசும் வசனங்களாக இல்லாமல் கதையை நகர்த்தும் கதைக்குத் தேவையான வசனங்களை எப்படி எழுத வேண்டும், ஸ்கிரிப்டிற்க்கு ஏற்ற அதேசமயம் பட்ஜெட்டை ஏற்றாத லொக்கேஷன்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும், கதாசிரியராக இல்லாமல் ஒரு பார்வையாளனாக எழுதிய கதையை எப்படி அணுக வேண்டும் என்று தான் இயக்கிய இரு வெற்றிப்படங்களாக Lifeu Ishtane மற்றும் Lucia படங்களை, அதன் காட்சிகளை மேற்கோள் காட்டித் திறமையாக விளக்கினார் பவன்.

படப்பிடிப்பிற்குப் போவதற்கு முன் செய்ய வேண்டியவை (pre-production), படப்பிடிப்பு அட்டவணை (shooting schedule), லொக்கேஷனுக்கு சென்றவுடன் செய்ய வேண்டியவை (location plan), ஒளிப்பதிவு - இலக்கணம் (Grammar of Visual Narratives), ஷாட் வகைகள் (Types of Shots), காட்சிகளைப் பிரித்தல் (Shot division), முழு படப்பிடிப்பும் முடிந்தவுடன் செய்ய வேண்டியவை (post - production) போன்றவற்றை முதலில் விளக்கினார். பின்னர் எடுத்துக்காட்டாக ஒரு காட்சியை மட்டும் எடுத்துக்கொண்டு விளக்கத் தொடங்கினார். குறிப்பிட்ட அந்தக் காட்சியை விளக்கும் முன் அந்தக் காட்சி எப்படி உருவானது, முதலில் எப்படி எழுதப்பட்டது பின்னர் எப்படி மாறி எடுக்கப்பட்டது, பின்னர் படத்தொகுப்பு முடிந்த பின் அந்தக் காட்சி எப்படி இறுதியானது என்று அந்தக் குறிப்பிட்ட காட்சிக்காக முதலில் தான் கைப்பட எழுதிய ஸ்கிரிப்ட், பின்னர் ஷாட் பிரிக்கப்பட்ட பின் எழுதப்பட்ட பிளான் (shot division), லொக்கேஷன் செல்லும் முன் எழுதிய பிளான் (shooting), சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து, தொகுத்த ஆர்டர் என்று அனைத்தையும் வழங்கினார். அவற்றை வாசித்த பிறகு அந்தக் குறிப்பிட்டக் காட்சியை திரையில் போட்டுக்காட்டிய போது, ஒரு 2 நிமிடக் காட்சிக்கு எப்படியெல்லாம் மெனக்கெட வேண்டி இருக்கிறது என்பது தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சினிமா மொழியை புரிந்து கொள்ளவும் முடிந்தது. இறுதியில் Lucia படத்தின் மொத்த Shot Division Sheet எங்களுக்கு வழங்கப்பட்டது. "இது நாளை பயன்படும்" என்றார் பவன். இவ்வாறாக முடிந்தது முதல் நாள்.

இதற்கு முந்தைய பட்டறை வரை இரண்டாம் நாள் வந்திருப்பவர்களை சிறு சிறு குழுக்களாகப் பிரித்து, குழுவிற்கு ஒரு கதையை தேர்தெடுத்து அதை ஒரு குறும்படமாக எடுப்பது தான் வழக்கம். ஆனால் நான் சென்றிருந்த பொழுது அப்படி நடக்கவில்லை. வந்திருந்தவர்கள் அனைவருக்கும் பவன் குமாரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது என்பது தெரியும். ஒரு சிலரைத் தவிர அநேகம் பேருக்கு குறும்பட அனுபவம் இருந்தது. எனவே இரண்டாம் நாளை வேறு விதமாகப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதாவது Demystifying Lucia. Demystify என்றால் புரியாத விஷயத்தை தெளிவு படுத்துதல் என்று பொருள் (Google). 

காலையிலேயே படத்தை பிரித்துப் போட்டு விவாதிப்பதைத் தொடங்கிவிடாமல், தனது உதவி இயக்குனரை விட்டு படத்தொகுப்பு சம்பந்தமாக சில டெக்னிக்கல் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். 22 வயதே ஆன அந்த இளைஞன் (பெயர் - அரவிந்த்) சொல்லிவைத்தார் போல் காலேஜ் டிராப் அவுட், Lucia சூட்டிங் பார்க்க வந்தவன் அப்படியே இயக்குனருடன் இணைந்து கொண்டதாகச் சொன்னான். இன்னும் இரு வருடம் பொறியியல் படிப்பு பாக்கியிருந்தாலும் பவனுடன் சேர்ந்து Lucia வை வியாபாரப்படுத்துவதிலும், அடுத்தப் பட வேலையிலும் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளான். வயதில் சிறுவன் என்றாலும் தொழில் ரீதியாக அவனுக்கு இருந்த அறிவு அபாரமாக இருந்தது. "வெறும் ஆர்வம் மட்டும் போதாது ஏதாவது ஒரு துறையிலாவது தேர்ச்சி வேண்டும்" என்று என்ன ஏது என்று தெரியாமலே சினிமாவில் சேர்ந்துவிட, சம்பாதித்துவிடத் துடிப்பவர்களுக்கு அரவிந்தை எடுத்துக்காட்டாகக் கூறினார் பவன். "ஆர்வத்தை மட்டும் நம்பி ஒருவனை வேலைக்குச் (அசிஸ்ட்டெண்டாக) சேர்த்தால் அவனால் எனக்கு என்ன பயன் இருக்கப்போகிறது. ஸ்கிரிப்டை ஜெராக்ஸ் எடுக்கவும், சூட்டிங்கில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் மட்டுமே அவன் பயன்படுவான். உதவி இயக்குனர் அனுபவமென்றில்லை; குறும்பட அனுபவம், டெக்னிக்கல் அனுபவம், அல்லது ஏதாவது ஒரு துறையில் முழுமையான தேர்ச்சி இப்படி ஏதாவது ஒரு அனுபவம் / திறமை இருப்பவனே பயன்படுவான், தொழிலைக் கற்றுக்கொண்டு மேலே வருவான்" என்றார். 100/100 உண்மை. "என்னை இம்ப்ரெஸ் பண்ண வராதீங்க’னு சொல்றேன். 'எனக்குத் தெரியாத நிறைய விஷயங்கள் இருக்கு. அதை நான் கத்துக்கிட்டு இருக்கேன். நீங்களும் அதைப் பண்ணுங்க’னு சொல்றேன். ஆனா, இப்படி நான் சொல்றதைப் கேட்டுட்டு அதிர்ச்சியாகி திரும்பி ஓடுற பசங்கதான் அதிகம்" என்று தன்னிடம் வாய்ப்பு கேட்டு வருபவர்களைப் பற்றி சமீபத்திய விகடன் பேட்டியில் சொன்னார் நம் மிஷ்கின். இது தவறா? சினிமாவை வெறும் பணம் செய்யும் தொழிலாக மட்டும் பார்க்காமல் அதனால் சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் சொண்டு வர முடியும் என்ற சிந்தனை உள்ள எந்த ஒரு இயக்குனரின் பார்வையும் இப்படியே இருக்கிறது - சினிமாவில் சேர, ஜொலிக்க வெறும் ஆர்வம் மட்டும் போதாது. திறமையும் தேடலும் வேண்டும். பணமும் சம்பாதிக்க வேண்டும், கலையையும் வளர்க்க வேண்டும். அதுதான் வளர்ச்சி.

படத்தொகுப்பு மென்பொருள்கள் - அவற்றின் பயன்பாடுகள் (காட்சிகள் எடிட் செய்து, கலர் கரெக்ஷன் செய்து காட்டினார்), கேமராவில் செய்யப்பட்ட மாற்றங்கள் - மென்பொருள்கள், கேமரா லென்ஸ்கள், அவற்றின் பயன்பாடுகள், டிப்ஸ் அன் டிரிக்ஸ், வாசிக்க வேண்டிய புத்தகங்கள் என்று தனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் அடுக்கினார் அரவிந்த். கதை கேட்கலாம் என்று வந்த பலர் கண்களை திறந்து கொண்டே தூங்கியது இந்த இடத்தில் தான். பாதிக்கு பாதி எனக்குத் தெரிந்த / கேட்ட விஷயங்களாக இருந்தாலும் அனைத்தையுமே வாயைத் தவிர சகலத்தையும் அகலத்திறந்து உள்வாங்கி, நோட்ஸ் எடுத்துக்கொண்டேன்.

அரவிந்த் பேசி முடிக்க மதியமாகிவிட்டதால் உணவு இடைவேளைக்குப் பிறகு Luciaவைப் புரிந்து கொள்ளத் தயாரானோம். பள்ளிநாட்களுக்குப் பிறகு பாடம் நடத்துபவர் சொன்ன ஒரு வாக்கியம் கூட விடாமல் பக்கம் பக்கமாக விடாமல் நான் நோட்ஸ் எடுத்தது அன்று தான். ஒவ்வொரு வரியும் பாடமாக அமைந்தது. அன்றைய தினம் நான் எடுத்த நோட்ஸ் எனது பைபிள். நமக்கு பிடித்த ஒரு படம், நாம் பார்த்து வியந்த ஒரு படம் உருவான விதத்தை சூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்று பார்த்து, உணர்ந்து, அதிலிருந்து கற்பது போன்ற இனிமையான அனுபவமாக இருந்தது. படம் பார்க்கும் பொழுது நான் கவனிக்கத் தவறிய பல விஷயங்கள் அப்பொழுது புலப்பட்டன. 2.15 மணி நேரப் படத்தை சுமார் 4 மணிநேரம் பார்த்தோம் (பாடல்கள் பாஸ்ட் பார்வேர்ட் செய்யப்பட்டன) சுருங்கச் சொல்ல வேண்டுமானால் Director's Commentaryயுடன் ஏதாவது படத்தை முழுதாகப் பார்த்த அனுவம் உண்டா? அதை விடச் சிறந்த அனுபவமாக இருந்தது.

நான் பெரிதும் எதிர்பார்த்த Crowd Funding பற்றி மிகவும் குறைவாகவே பேசப்பட்டது. அது சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விக்கு "பலர் முயன்றிருக்கிறார்கள். இந்த முறையில் தோல்வியே அதிகம். எனக்கு நடந்தது மற்றவருக்கும் நடந்தால் மகிழ்ச்சி தான். என்னை நம்பி இத்தனை பேர் எப்படி பணம் தந்தார்கள் என்பது நிச்சயமாக எனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் கண்டிப்பாக பகிர்ந்துகொள்கிறேன்" என்பதோடு முடித்துக்கொண்டார்.

அத்தோடு நின்றுவிடாமல் மேலும் ஒரு சிறிய தகவலையும் பகிர்ந்து கொண்டார். Audience Films என்ற தனது Crowd Funded தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் குறும்படங்கள் எடுக்கவும், அது வெற்றியடைந்தால், மக்கள் (ஆர்வலர்கள்) பணம் கொடுக்க முன்வந்தால் சினிமா தயாரிக்கும் திட்டமும் இருப்பதாகச் சொன்னார். 

Luciaவின் ஹிந்தி ரீமேக்கை பவனே இயக்கப் போவதாகவும் சொன்னார். அந்தப் படம் இதை விட பிரம்மாண்டமாக, தயாரிப்பு சமரசங்கள் இல்லாமல் இருக்கும் என்று உறுதியளித்திருக்கிறார்.

ஒரு வழியாக முடிவிற்கு வந்தது Demystifying Lucia. கலந்துகொண்ட அனைவருக்கும் அருமையான சான்றிதழ் ஒன்று வழங்கப்பட்டது. 4000 ரூபாயிக்கு ரசீதும் கொடுத்தார்கள். மொத்தமாக நின்று போட்டோ எடுத்துக்கொண்டோம். இயக்குனர் பவன் குமாரின் இந்தப் பட்டறையில் பங்கு பெருபவர்கள் கலந்து பேசிக்கொள்ள ஒரு Facebook Group உள்ளது. மேலும் அன்று வந்திருந்த அனைவரது மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டது.

இந்த இரண்டு நாட்களில் நான் தெரிந்து கொண்ட விஷயம் இது தான் - வாய்ப்பிற்காக காத்திருப்பது முட்டாள்தனம். திறமையை சரியான முறையில் வளர்த்துக்கொண்டு அதை வெளிப்படுத்தினால் வாய்ப்பு தானாக வரும் - எனக்கிருப்பது ஆர்வம் மட்டும் தான். அடுத்து செய்ய வேண்டியது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டிய தேடலில் ஈடுபடுவது.

வந்திருந்தவர்களைப் பற்றிச் சொல்கிறேன். சிலர் காரிலும், பலர் பைக்களிலும் வந்திருந்தனர். பெரும்பாலும் பார்த்தாலே “வசதியான குடும்பம், படமெடுக்க ஆசை” கும்பல் தான். ஒரு சிலர் மாணவர்களாக இருக்கலாம். ஒரு சிறு இடைவேளை கிடைத்தாலும், இயக்குனரைச் கேள்வியாகக் கேட்டுக் கொன்றனர் சிலர். ஆர்வம் தவிர வேறொன்றுமில்லை. இயல்பறிவை (common sense) பயன்படுத்தினாலே பல கேள்விகளுக்கான விடை நமக்கே தெரிந்துவிடும். ஆனால் அதையும் பவன் வாயால் கேட்கவே அவர்கள் விரும்பினார்கள். அப்படி கேட்கப்பட்ட மொக்கை கேள்விகளுக்கும் கர்மசிரத்தையாக பவன் பதிலளித்துக்கொண்டிருந்த பொழுது நான் வந்திருந்தவர்களை நோட்டம் விட்டேன். தெரிந்தவர் யாரும் இல்லை என்பதால் வந்திருந்தவர்கள் செய்கையை நோட்டம் விடும் வாய்ப்பு கிடைத்தது. இது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு. ஒரு சிறிய கூட்டத்தினர் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் இயக்குனர் அருகில் நிற்க வேண்டும், அவர் தங்களை கவனிக்க வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருந்தனர். அந்த இரண்டு தினங்களை அவர்கள் வேறு எப்படிப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. ஒரு சின்னத்தம்பி சீரியஸாக, Luciaவில் வரும் போலீஸ்காரர்களைப் பார்த்து “எப்படி ஒத்துக்கொண்டார்கள், போலீஸ்காரர்கள் கேட்டால் நடிக்க வருவார்களா?” என்று கேட்டான். அவர்கள் ஜீனியர் ஆர்டிஸ்ட்கள் என்று பவன் சொல்ல “ஓ, அப்படியா சரி சரி” என்றான். அவனுக்கு ஒரு ஷொட்டு. ஒருவர் வரிசையாக உலகப்படங்கள், இயக்குனர்கள் பெயர்களாக மேற்கோள் காட்டி கவனிக்க வைத்தார். சப்ப மேட்டரு எனக்கு எல்லாம் தெரியும் என்ற "கெத்து" இயல்பாக இருந்தது. அனைவரும் வந்த கடனுக்காவது ஏதாவது எழுதிக்கொண்டு இருக்க, அவர் இரண்டாம் நாள் நோட்பேடே எடுத்துக்கொண்டு வரவில்லை. ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு, கால்மேல் கால் போட்டு அவரைச் சுற்றியிருந்த சிறுவர்கள் பேசுவதை வேடிக்கைப் பார்த்தார். இரண்டு தெலுங்கு நண்பர்களை கவனிக்க நேர்ந்தது. புதிதாக பெங்களூர் வந்த சாப்ட்வேர் இஞ்சினியர்கள் என்பது முகத்தில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. அவ்வபோது ஏதாவது கேட்க நினைப்பது போல் பாதி கையை உயர்த்திக் காத்திருப்பது போல் காத்திருந்து விட்டு பின் அமைதியாக பம்மிக்கொண்டும் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டும் திருப்திபட்டுக்கொண்டு இருந்தனர். இவர்களை கவனிப்பது செம்ம ஜாலியாக இருந்தது. ஒரு கும்பல் கும்பலாக உள்ளே வந்து இரண்டாம் வரிசையில் கொண்டு வந்திருந்த பைகளை வைத்து இடம் போட்டுக்கொண்டு வெளியே சென்று விட்டது. திரும்பி வந்த போது பவன் ஏற்கனவே பேசத்தொடங்கியிருந்தார். கேமரா, லென்ஸ், மைக் என்று எதை வெளியில் எடுத்தாலும் அதென்ன விலை, எங்கே கிடைக்கும் என்று அனைத்தையும் எழுதி வைத்துக் கொண்டார் ஒருவர். 70 பேரில் சுமார் 7, 8 பெண்கள் வந்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். இயல்பாக அவர்களிடம் கடலை போட்டுக்கொண்டிருந்தது ஒரு கும்பல்.

முதல் நாள் காலையில் பிஸ்கட்டுடன் டீ / காஃபி, மதிய உணவாக வெஜ்-பிரியாணி, தயிர்சாதம், சப்பாத்தி, இனிப்பு, மாலை மீண்டும் பிஸ்கட்டுடன் டீ / காஃபி வழங்கப்பட்டது. மறுநாள் அதே பிஸ்கட்டுடன் டீ / காஃபி, மதியத்திற்கு மட்டும் சாம்பார் சாதம் (பிசிபேலேபாத்), ரசம், தயிர், இனிப்பு. குறை இல்லை. ஆனாலும் இரண்டு நாளும் ஒரு பத்து பேராவது வெளியில் போய் சாப்பிட்டு விட்டு வந்தனர்.

முதல் நாள் சீக்கிரமே சென்று விட்டாலும் இடித்துக்கொண்டு முன்னேறியவர்களுடன் போட்டி போட விரும்பாத காரணத்தினால் நான்காம் வரிசையில் தான் இடம் கிடைத்தது. நான் கொஞ்சம் குள்ளம். எட்டி எட்டி பார்த்து எழுதுவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. போதாத குறைக்கு என் பின்னால் அமர்ந்திருந்த ஆறடிக்காரன் ஒருவன் விடாமல் என் நாற்காலியை டொக் டொக் என்று தட்டிக்கொண்டே இருந்தான். தியேட்டருக்கு போனாலும் சரி, பேருந்தில் பயணித்தாலும் சரி எனக்கு என்று எங்கு தான் வருமோ இம்சை.

இரண்டாம் நாளும் முதல் வரிசையில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் பின்னால் இருந்த ஒரு நாற்காலியை முன்வரிசையில் இழுத்துப் போட்டு அமர்ந்துகொண்டேன். அங்கும் ஒரு இம்சை. அன்று என்னருகில் அமர்ந்திருந்தவனுக்கு அரவிந்த் பேசிய டெக்னிக்கல் விஷயங்கள் ஏற்படுத்திய அசதியால் ஒரு நிமிடம் கூட அமைதியாக உட்கார முடியவில்லை. சதா அப்படி இப்படி என்று அசைந்து கொண்டும் கைகளை விரித்து நெட்டி முறித்துக்கொண்டும், அங்கும் இங்கும் நீட்டிக் கொண்டும் இருந்தான். 70 பேர் நெருக்க நெருக்கமாக அமைந்திருக்கும் ஒரு இடத்தில் இது போன்ற ஜென்மங்களால் ஏற்படும் துன்பம் மிக அதிகம். நெட்டி முறிப்பவன் முட்டி எப்பொழுது என் கண்ணாடியில் பட்டு அது தெரிக்கும் என்று பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியதாகிப் போனது என் நிலைமை. பவன் / அரவிந்த் சொல்வதை கவனிப்பேனா அல்லது என் ப்ரேம்-லெஸ் கண்ணாடியை நான் பாதுகாப்பேனா. "அமைதியா உட்காருடா ங்கோ#$#" என்று அவனைத் திரும்பிக் கத்தவும் முடியவில்லை. நாம் ஏதாவது சொல்லப்போய், அதற்கு அவன் நானும் புடுங்கிதாண்டா என்று ஏதாவது ரியாக்ட் செய்து, இருக்கும் நேரத்தைப் பயன்படுத்தி நிற்காமல் போய்கொண்டிருக்கும் பட்டறை தடைபட நான் விரும்பவில்லை. பல்லைக்கடித்து ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு எருமை மாடாக அமர்ந்திருந்தேன். பவன் பேசி முடித்து, சான்றிதழை வாங்கிய அடுத்த நிமிடம் அவன் வெளியேறி விட்டான். "இந்த மசுத்துக்கு எதுக்கு இடிச்சிக்கிட்டு வந்து மொதோ வரிசைல ஒக்காந்த $%##$$" என்று நான் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

இப்படி முற்றிலும் ஒரு புதிய அனுபவமாக, முக்கியமாக பயனுள்ள ஒரு வாரயிறுதியாக அந்த இரண்டு நாட்களும் அமைந்தது. சினிமாவில் சேர நினைப்பவர்கள் மட்டுமல்ல், சினிமா ஆர்வமுள்ள நண்பர்களும் அடுத்து நடக்கும் பட்டறைக்குச் சென்று பயனடைந்து கொள்ளுங்கள். 

இறுதியாக, 

Lucia பற்றி நான்கு முக்கிய தகவல்கள்.

1) படம் வெளிவருவதற்கு முன்னர் பவன் வெளியிட்ட வீடியோ பதிவு - http://www.youtube.com/watch?v=OPNPucQFHNk முழுவதையும் பொறுமையாகக் கேட்டால் பல விஷயங்களைத் தெர்ந்து கொள்ளலாம்.

2) சென்ற வாரம் சென்னை மாயாஜாலில் Lucia திரையிடப்படுவதாக பவன் தனது FBயில் சொல்லியிருந்தார். விசாரித்ததில் மூன்றே மூன்று டிக்கெட் மட்டுமே விற்றதால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாம். குட்.


3) C.V குமார் தயாரிக்கும் Lucia தமிழ் ரீமேக்கில், அதே பெயரில் ஹீரோவாக சித்தார்த் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதியவர் இயக்குகிறார். சந்தோஷ் நாராயண் இசை. சித்தார்த் - பாரின் ரிட்டன், டாக்டர், லவ்வர் பாய், ஐ.டி டூட் போன்ற கேரக்டர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியவர் மேன்லியான சூப்பர் ஸ்டார் + யாரும் திரும்பி முகம் கூடப் பார்க்காத தியேட்டர் ஊழியர் கேரக்டர்களில் பொருந்துவாரா என்று தெரியவில்லை. ஆர்வம் இருக்கலாம் ஆனால் திறமையும் வேண்டும். பார்க்கலாம்.
4) Lucia 50 நாள் தாண்டி இன்னமும் பெங்களூர் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.



பெர்சனல் தகவல் ஒன்று

10,000 ஹிட்ஸ் என்பதெல்லாம் இதுவரை நான் பார்த்திராத ஒன்று. ஆயிரத்தில் ஒருவன் பற்றிய எனது பதிவிற்கு நண்பர்கள் கொடுத்த பேராதரவிற்கு நன்றி. இனி உங்கள் தயவால் நானும் ரவுடி தான் :-) 

(பதிவின் ஆரம்பத்தில் தான் முதலில் இதை எழுதியிருந்தேன் ஆனால் அது எழுத வந்த விஷயத்தை பாதிப்பது போல் இருந்தது. அதால் தான் கடைசியில் சேர்த்துள்ளேன். மீண்டும் நன்றி - உங்களின் இணையில்லா அன்பிற்கு...)

You Might Also Like

8 comments

  1. இயக்குனர் பிரதீப் எனது நண்பர் எனச்சொல்லி மகிழும் தருணத்திற்காக காத்திருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே... உங்கள் காத்திருப்பிற்கான பலன் இல்லாமலா போய்விடப்போகிறது :-)

      Delete
  2. வாய்ப்பிற்காக காத்திருப்பது முட்டாள்தனம் .. :-)

    ReplyDelete
    Replies
    1. இது அந்த வாய்ப்பு அல்ல, வேற :-)

      Delete
  3. சூப்பர் அண்ணா..!! எல்லா விஷயத்தயும் சொன்ன மாதிரியே எழுதியிருக்கீங்க.. ஆனா எந்த டெக்னிகல் டீட்டெயிலும் சொல்லல.. உங்களின் ராஜ தந்திரம் பலே பலே.. :) :) (4000 ரூவா கொடுத்து நீங்க கத்துகிட்டத, ஓசில எல்லாருக்கும் சொல்லிர முடியுமா என்ன ?)

    ஒருவேளை ஒர்க் ஷாப் அட்டெண்ட் பண்ணிருக்கலாமோனு இப்போ தோணுது.. என்னமோ போங்க..!!

    ReplyDelete
    Replies
    1. //4000 ரூவா கொடுத்து நீங்க கத்துகிட்டத, ஓசில எல்லாருக்கும் சொல்லிர முடியுமா என்ன// - க.க.க.போ :-)

      //ஒருவேளை ஒர்க் ஷாப் அட்டெண்ட் பண்ணிருக்கலாமோனு இப்போ தோணுது.. // இந்த டகால்டி தான் வேணாம்கிறது. அடுத்த முறையாவது நிச்சயம் சென்று பார்க்கவும். சினிமா ஆசை இருந்தால் பயன் நிச்சயம்.

      Delete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...