2013 படங்கள் - ஒரு பார்வை 02 - மலையாளம்

9:51:00 AM

வழக்கம்போல இந்த வருடமும் ரசிகர்களை திருப்தி படுத்தியதில் முதல் இடத்தில் இருப்பவர்கள் மலையாளிகளே. வித்தியாசமான கதைகள், கதைக்களன்கள், கதாப்பத்திரங்கள், சுவாரஸ்யமான திரைக்கதைகள், பரிசோதனை முயற்சிகள், வெவ்வேறு வகைகள் (Genre) என்று அசத்திவிட்டார்கள்.

மலையாள 'வின்னைத்தாண்டி வருவாயா' என்று புகழக்கூடிய வகையில் அமைந்த படம் ANNAYUM RASOOLUM. ஃபகத் பாசில் - ஆண்ட்ரியா ஜோடி. முஸ்லீம் இளைஞனுக்கும் கிருஸ்தவ பெண்ணிற்குமான இதயம் கனக்கும் காதல் கதை. முதல் பாதியில் மிகவும் பொறுமையாக நகரும் கதை இரண்டாம் பாதியில் இதயத்தில் பதிகிறது. இந்த வருடம் மலையாளத்தின் முதல் ஹிட் அன்னயும் ரசூலும்.

திரைக்கதையில் கபடி ஆடிய படம் NATHOLI ORU CHERIYA MEENALLA. எழுதாளனாக விரும்பும் ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பின் பணியாளன், தன்னை அசிங்கப்படுத்திய குடியிருப்பாளர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக புதிதாக ஒரு கேரக்டரை உருவாக்கி கதையில் உலாவவிடுகிறான். நிஜத்தில் நடப்பது ஒன்று, இவன் கதையில் அந்தக் கதாப்பாத்திரத்தோடு சேர்ந்து நடப்பது ஒன்று. நெத்திலி மீனைப் போல சிறிய உருவம், முன்வழுக்கைத் தலை என்று சுமார் ஹீரோ ரேஞ்சிற்கு இருக்கும் பகத் ஃபாசில்தான் தற்போது மலையாளத்தின் மோஸ்ட் வாண்டட் ஹாட் ஹீரோ. இந்த வருடம் மட்டும் 12 படங்களில் இவர் நடித்துள்ளார். கிட்டத்தட்ட எல்லா படங்களுமே ஹிட் தான்.

கேமரா கோணங்களுக்காகவே நான் விரும்பிப் பார்த்த படம் AMEN. அதே பகத் ஃபாசில் தான் ஹீரோ. மேல் சொன்ன படங்களைப் போலவே உருவத்திற்கேற்ற, கிட்டத்தட்ட உதாவாக்கரை கேரக்டர் தான். நன்றாகப் பொருந்திப் போயிருந்தது. டார்க் காமெடி வகையறா என்று நினைக்கிறேன் (எனக்குப் புரிந்த வரை) மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்.

ஆண் வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் உடன் வரும் பெண்களைப் பற்றிய 5 குறும்படங்களைக் கொண்ட படம் 5 SUNDARIKAL. முதல் கதையின் பாதிப்பு இன்னும் என் நெஞ்சில் உள்ளது. குள்ளனும் மனைவியும் கதையும் அப்படியே. மற்ற கதைகளும் பரவாயில்லை.

இந்த வருடம் பிருத்விராஜிற்கு நச்சென்று 3 படங்கள் அமைந்துள்ளது. மூன்றும் அருமையான படங்கள், எனக்குப் பிடித்த படங்கள். மலையாள சினிமாவின் தந்தையான ஜே.சி.டாணியலைப் பற்றிச் சொன்ன படம் CELLULOID. இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன்.

நிச்சயம் எந்த ஒரு பெரிய ஹீரோவும் நடிக்கத் தயங்கும் கதாப்பாத்திரத்தில் ஜஸ்ட்-லைக்-தட் பிருத்விராஜ் நடித்திருக்கும் படம், MUMBAI POLICE. செம்ம ஸ்டைலான போலீஸ் படம், இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர். விபத்திற்கு முன், விபத்திற்கு பின் என்று கிட்டத்தட்ட ஒரே கதாப்பாத்திரம், இரண்டு ரோல்கள் என்று அசத்தியிருக்கிறார் மனிதர். திரைக்கதையை அமைத்திருந்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. "மர்டரர்" என்ற ஹாங் காங் படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம் என்று சொல்லப்படுகிறது.

அடுத்த படம் MEMORIES. மனைவியும் மகனும் தன் கண்முன்னே சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்ட ஒரு போலீஸ்காரனின் கதை. வாழ்கையை இழந்து, குடிக்கு அடிமையாகி, உடல் மட்டுமே உயிரைத் தாங்கிக்கொண்டு திரிபவனுக்கு ஒரு வழியைக் காட்டுகிறது ஒரு சீரியல் கில்லர் கேஸ். செர்லாக் பாணியில் மற்றுமொரு இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர். மற்றுமொரு நல்ல படம்.

செம்ம ஜாலியாக என்ஜாய் செய்து நான் பார்த்த படம் KILI POYI. படம் முழுவதும் போதையும் போதைப் பொருளும் தான். போதாதக்குறைக்கு இனிமையான தமிழ் கெட்டவார்த்தைகள் வேறு. நாம் நம் திரைப்படங்களில் U பெருவதற்காக தமிழ் பெயரையும், தமிழ் கலாச்சாரத்தைத் திணிக்கப் போராடிக்கொண்டிருக்க, அசத்திக்கொண்டிருக்கிறார்கள் சேரநாட்டினர். இந்தப் படமெல்லாம் தமிழில் வந்தால் நிலைமை என்ன ஆகும் என்று யோசித்துப்பார்க்கக் கூட முடியவில்லை. ஆனால் கேரளாவில் ஹிட்.

மோட்டார் சைக்கிள் டைரீஸ் பட பாதிப்பில் உருவான ஒரு குளிர்ச்சியான படம் NEELAKASHAM PACHAKADAL CHUVANNA BHOOMI படம். மம்மூக்கா மகன் துல்கர் சல்மான் நடித்த படம். இரண்டு நண்பர்கள் தங்களது புல்லட்டை எடுத்துக்கொண்டு கேரளாவிலிருந்து நாகாலாந்திற்குப் பயணப்படுவதுதான் கதை. நடுவில் ஹீரோவிற்கு ஒரு சின்ன லவ் டிராக். கதை பெரிய அளவில் ஈர்க்கவில்லையென்றாலும், ஒளிப்பதிவு அருமை. ஒரு ரோட் மூவிக்கு என்ன வேண்டுமோ அது இருந்தது.

டிரைலர் கூடப் பார்த்திராமல், நன்றாக உள்ளது என்று கேள்விப்பட்டதால் மட்டும் சென்று பார்த்த படம், DRISHYAM. இந்த வருடம் மட்டும் 6 படங்களில் நடித்துள்ள மோகன்லாலிற்கு நிஜமான, தரமான, ஹிட் படம் இது. குருவிக்கூடு போன்றதொரு குடும்பத்தில் கல்லெறியப்பட, அந்தக் குருவிகள் எப்படி தங்கள் கூடு சிதறிவிடாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்கின்றன என்று சொன்ன படம். பொறுமையாக நகரும் முதல் பாதி, அடுத்து என்ன நடக்குமோ என்று பதற வைக்கும் இரண்டாம் பாதி. லாலேட்டன் கலக்கியிருக்கிறார். சினிமா ஒருவனது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்று சொன்ன படம். அருமையான த்ரில்லர். இந்த வருடம் ஆங்கிலத்தில் பெரிதாகப் பேசப்பட்ட PRISONERS படத்தை விட இந்தப் படம் எனக்குப் பிடித்திருந்தது.

மேல் சொன்னவை அனைத்தும் நான் இந்த வருடம் திரையரங்குகளிலும், ஒரிஜினல் டி.வி.டி வாங்கியும், ஒன்றிரண்டு தரவிறக்கியும் பார்த்த படங்கள். இவை தவிர நல்ல படங்கள் என்று கேள்விப்பட்டு பார்க்க வேண்டும் என்று வைத்துள்ள படங்கள் - SHUTTER, RED WINE, ROMANS, ENGLISH, ABCD, LEFT RIGHT LEFT, PHILIPS AND THE MONKEY PEN, NORTH 24 KAATHAM, THIRA. இந்த இடத்தில் ஒரு தகவல் - தியேட்டரில் டிக்கெட் விலை 250ரூ. ஆனால் படம் வெளியாகி சரியாக இரண்டு மாதங்களில் வெளியாகும் மலையாள ஒரிஜினல் டி.வி.டியின் விலை 120ரூ மட்டும் தான். அதிக பட்சம் 150ரூ. நான் பார்த்ததாக மேல்சொன்ன படங்களில் ஏறக்குறைய அனைத்துமே ஒரிஜினல் டி.வி.டியாக என்னிடத்தில் உள்ளது. தமிழில் இல்லாத பல விஷயங்கள் மலையாளத்தில் உண்டு, அதில் ஒரிஜினல் டி.வி.டியும் ஒன்று. மதுரை கீஸ்டுகானத்தில் அதிகம் விற்பவை மலையாள டி.வி.டிக்கள் தான். நான் ஒவ்வொரு முறை மதுரை செல்லும் போதும் குறைந்தது 6, 7 மலையாளப் புதுப்பட டி.வி.டிக்களாவது வாங்கிவிடுவேன். மற்றுமொரு சிறந்த ஆப்ஷன் அயங்கரன் வெப்சைட்.

மேல் சொன்னவை தவிர்த்து வேறு நல்ல, பார்க்க வேண்டிய 2013 மலையாளப் படங்கள் இருந்தால் நண்பர்கள் பரிந்துரைக்கவும், டி.வி.டி வாங்கிப் பார்க்கக் காத்திருக்கிறேன்.

You Might Also Like

9 comments

 1. ‘அன்னயும் ரசூலும்’ ,த்ருஷ்யம், ஷட்டர் பார்க்க வேண்டும் என நினைத்து இருக்கிறேன்.
  மூன்றுமே ஒரிஜினல் டிவிடி வந்து விட்டனவா?

  திருவனந்தபுரத்தில் உள்ள ‘பீமாபள்ளிக்கு’ போக வேண்டும் என திட்டமிட்டு இருந்தேன்.
  போக முடியவில்லை.
  அங்கே போயிருந்தால் நீங்கள் எழுதிய படங்கள் அனைத்துமே எனக்கு ‘ ஒசியில்’ கிடைத்து இருக்கும்.
  எனது நண்பன் ஒருவன் டிவிடி கடை வைத்து இருக்கிறான்.
  என் மேல் அவனுக்கு அளவு கடந்த அன்பு.
  அவன் ‘பக்கா’ விஜய் ரசிகன்.
  அவன் எனக்கு சரியாக பரிந்துரைப்பான்...
  ’ஏட்டா இது உங்க படம்’.
  அவனது பரிந்துரை இது வரை என்னை ஏமாற்றியதே இல்லை.

  ReplyDelete
  Replies
  1. அன்னயும் ரசூலும், ஷட்டர் ஒரிஜினல் டிவிடி வந்துவிட்டது, என்னிடமும் உள்ளது. த்ருஷ்யம் புதிய படம், சென்ற வார தான் வெளியாகி இருக்கிறது. இன்னும் இரண்டே மாதங்களில் டான்ன்ன் என்று வந்துவிடும் :-) உங்களது பீமாபள்ளி நண்பரிடம் எனக்கு அறிமுகம் கிடைக்குமா ;-)

   Delete
 2. அருமையான திரைப்பட பகிர்வுகள்.... மிக்க நன்றி....

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜாக்கி சார்...

   Delete
 3. till nw i dnt watch any of the movie u said.......pls give idea to watch it.......

  ReplyDelete
 4. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 5. All the movies u have watched and the list of movies yet to be watched are the best Malayalam movies of the year.
  few exceptions :
  Kil Poyi and natholi cheriya meenala was flop.
  Red wine is average. you can watch t for fahad fazil.
  Romans is a decent comedy thriller but was a huge hit.
  Honey bee,Immanuel,Nadan, also you can watch.

  and jeethu joseph's memories and drishyam are the best thrillers I have ever seen. especially DRISHYAM. ITs a block buster. ..not even getting tickets omnweekends and holidays

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...