ஆயிரத்தில் ஒருவன் - மறக்கப்பட்ட / மறுக்கப்பட்ட சினிமா...

12:00:00 PM

இன்று செல்வாவின் “இரண்டாம் உலகம்” வெளியாகிறது. இந்த நேரத்தில் ஆயிரத்தில் ஒருவன் பற்றி பக்கம் பக்கமாக எழுதி என்ன ஆகப்போகிறது என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. படம் வெளியான சமயத்தில் பலரிடம் பேசி, புலம்பித் தள்ளிய விஷயங்களின் தொகுப்பு இந்தப் பதிவு. பல முறை எழுத நினைத்து பின் ஏதேதோ காரணங்களால் கைவிடப்பட்ட ஒன்று. நான் இதை முடிக்கும்முன் ஆயிரத்தில் ஒருவன் முற்றிலுமாக சேதப்படுத்தப்பட்டு, செல்வராகவன் என்னும் உண்மையான கலைஞன் முற்றிலுமாக முடக்கப்பட்டிருந்தான். பல நாட்களாக உறங்கிக்கொண்டிருந்த இந்த நீண்ட பதிவை வெளியிட இது சரியான தருணமா, தெரியவில்லை. 

இந்தப் பதிவு முழுக்க முழுக்க எனது பார்வை / கருத்து. யாரையும் குறை கூறவோ, மட்டம் தட்டி பேசவோ, ரசனையை கிண்டல் செய்யவோ இந்தப் பதிவை நான் எழுதவில்லை. செல்வராகவன் ஒரு ஜீனியஸ் – இது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. அவர் மேல் எனக்கு அபார நம்பிக்கை இருக்கிறது. இந்தப் பதிவு இரண்டாம் உலகம் / செல்வாவின் படங்களைப் புரிந்து கொள்ள “ஒருவருக்கு” உதவினாலும் நான் வெற்றியடைந்ததாகத்தான் அர்த்தம் (ஆயிரத்தில் ஒருவன்!).

வெளியான சமயம் அநாதை ஆக்கப்பட்டு பின்னர் சில வருடங்கள் கழித்து பார்ப்பவரெல்லாம் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும் படங்களைத் தான் கல்ட் படங்கள் என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். தமிழில் அன்பே சிவம், ஆரண்ய காண்டம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களின் நிலை இன்று இது தான். அன்பே சிவம் பற்றி நியாபகம் இல்லை. ஆனால் ஆரண்ய காண்டம் வெளியான போது திரும்பிப் பார்க்க ஆள் இல்லை. பெண்களுக்குப் பிடிக்காது என்றார்கள். வன்முறை என்றார்கள். கெட்ட வார்த்தை அதிகம் என்றார்கள். போஸ்டர் டிசைன் கூட சரியில்லை என்றார்கள். அடுத்த வாரமே பாலாவின் அவன் இவன் ரிலீஸ் ஆக, இதற்காகத்தான் காத்திருந்தோம் என்பது போல ஆரண்ய காண்டத்தை மொத்தமாக தூக்கிப் போட்டார்கள். திடீரென்று என்ன ஆனதோ தெரியவில்லை, தேசிய விருது பற்றிய அறிவிப்பு வர, ஆர்வம் தலைக்கேறி ரீ-ரிலீஸ் பண்ணுவாங்களா, பர்மா பஜாரில் டி.வி.டி கிடைக்குமா என்றும் தேடித்திரிய ஆரம்பித்தார்கள் நம்மவர்கள். அந்த ஆண்டு சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் கூட்டம் அதிகமாக இருந்ததால் காட்சி நேரம் மாற்றப்பட்டு பெரிய அரங்கில் ஆரண்ய காண்டம் வெளியானது. ஆரண்ய காண்டம் ஏற்படுத்திய அலை, அதைப் போன்ற வித்தியாசமான அடுத்த படைப்புகளுக்கு வழிவகுத்தது. மூடர் கூடம் அந்த வகைப்படங்களில் ஒன்று (கவனிக்க: ஆரண்ய காண்டத்திற்கு ஈடான படமில்லை) ஆரண்ய காண்டத்திற்கு நடந்தது, பின்னாளில் அந்தப் படத்திற்கு கொடுக்கப்பட்ட மரியாதையாவது பரவயில்லை. ஆயிரத்தில் ஒருவனுக்கு நடந்தது கொடுமை.

நமக்குப் பிடிக்காத ஒரு படம் யாருக்கும் பிடிக்கவே கூடாது என்கிற ரீதியில் தான் ஆயிரத்தில் ஒருவனுக்கு விமர்சனம் வந்தது. படம் சரியில்லை என்பதை விட படம் புரியவில்லை என்ற விமர்சனம் தியேட்டருக்கு வரும் கூட்டடத்தை கணிசமாகக் குறைக்கும். தமிழ் சினிமா வரலாற்றிலேயே புதிய வித்தியாசமானதொரு முயற்சிக்கு, ஒரு கலைஞனின் உண்மையான கனவிற்கு இப்படியொரு அநீதியை நாம் விளைவித்துவிட்டோமே என்பது தான் எனது வருத்தம். திறமையான ஒரு சிற்பக்கலைஞனின் கைகளை வெட்டிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்றது செல்வாவின் இந்தப் படைப்பை நாம் தோற்கடித்தது. அப்படி என்ன எடுக்கக் கூடாததை எடுத்து, காட்டக் கூடாததைக் காட்டிவிட்டார் செல்வராகவன் என்று தான் எனக்குப் புரியவில்லை. செல்வராகன் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று நாம் நம் மனதில் முடிவுகட்டிப் பதியவைத்திருக்கும் விஷயங்கள் என்ன? மனோத்துவ பிரச்சனை உள்ள ஒரு ஆண், அப்படிப்பட்ட பிரச்சனை இல்லை என்றாலும் அவனுக்கு சற்றும் குறைவில்லாமல் ரியாக்ட் செய்யும் பெண், இவர்களுக்குள் நடக்கும் உளவியல் ரீதியான ஈர்ப்புகள், உடல் ரீதியான தேடல்கள், செக்ஸ், கடைசியில் ஒரு மரணம் அல்லது இழப்பு. இவை மட்டும் தான் செல்வராகவனா? புதுப்பேட்டை – நூற்றுக்கணக்கில் தாதா / ரவுடியிஸம் பற்றிய படங்கள் தமிழ் சினிமாவை மூச்சுத் திணற வைத்துக்கொண்டிருந்த பொழுது உலகத்தரத்தில் செல்வா இயக்கிய படம். படத்தை தோல்வியடையச் செய்து செல்வாவின் மண்டையிலேயே ஓங்கி அடித்து உட்கார வைத்தோம். ஆனாலும் திருந்தாமல் கனவுகளைத் துரத்தி ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தை எடுத்தார். மீண்டும் அடித்த இடத்திலேயே இன்னும் சற்று பலமாக ஓங்கி அடித்தோம். அடுத்து பெரும் குழப்பங்கள், பிரச்சனைகளுக்கு இடையே ‘மயக்கம் என்ன’ எடுத்தார். மயக்கம் என்ன நல்ல படம் தான். ஆனால் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவனுடன் ஒப்பிடும் போது, அது மிகவும் சுமாரான ஒரு படைப்பு, செல்வாவின் தகுதிக்கு. “நீங்கள் இதுவரை எடுத்த படங்காளில் ஒன்றை மொத்தமாக அழிக்க வேண்டுமென்று என்று சொன்னால் எந்தப் படத்தை அழிப்பீர்காள்” என்று ஒரு நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு சற்றும் தாமதிக்காமல் “ஆயிரத்தில் ஒருவன்” என்றார். கொடுமை. இந்த நிலைக்குப் பிறகும் செல்வா திருந்துவதகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் நம்மை, தமிழ் ரசிகர்களை நம்பி புதிதாக கிளம்பி வந்து கொண்டே இருக்கிறார். அவரது புதிய கனவுலகம் “இரண்டாம் உலகம்”. சோழர்களை இழிவுபடுத்திவிட்டார் என்ற கலாச்சாரக் குற்றச்சாட்டை அசால்ட்டாக அவர் மேல் நாம் சுமத்தியதால் மொத்தமாக ஒரு புது உலகத்தை அவர் இந்தப் படத்திற்காக உருவாக்கிவிட்டார். ஒவ்வொரு முறை நாம் செல்வாவை தோற்கடித்தாலும், ஏதாவது ஒரு வகையில் நம்மை அவர் ஜெய்த்துக்கொண்டே தான் இருக்கிறார் தனது முயற்சிகளின் மூலம். புதுப்பேட்டை வரும் வரை செல்வாவையும், அவரது படங்களையும் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் புதுப்பேட்டை வந்த பிறகு தமிழ் சினிமாவை உயர்த்தப்போகும், சினிமாவின் மீது உண்மையான காதல் கொண்டிருக்கும் இயக்குனர்களில் செல்வாவிற்கு முக்கிய இடமுண்டு என்பதை நான் தெரிந்து கொண்டேன். முதலில் பிடிக்காத காதல் கொண்டேன், 7ஜி படங்கள் பிடிக்கத் தொடங்கின.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழர்கள் பேசிய தமிழ் புரியவில்லை என்று சொன்னார்கள். இதைப் பற்றி என்ன சொல்ல “தமிழ் இனி மெல்ல சாகும்” என்று அன்றே சொல்லி விட்டு சென்றுவிட்டனர். தமிழ் பாடத்தையும் +2 கட்-ஆப் மதிப்பெண்ணில் சேர்த்தால் பிறகு தெரியும் நம் தமிழ் மாணவர்களின் மொழிப் புலமையும், நமது மொழியார்வமும். பள்ளி முடித்து கல்லூரியில் சேரும் தமிழ் மாணவ, மாணவிகளில் நூற்றில் எண்பது பேருக்கு ஒரு வருடத்திற்குள்ளாகவே தமிழ் எழுத வரவில்லை. சட்டென ஒருவரைக் கூப்பிட்டு “தமிழ்” என்று ஒரு தாளில் எழுதச் சொன்னால் Tamil என்று தான் பலர் எழுதுகிறார்கள். இரண்டே வருடத்தில் “ச”கரம் போய் “ஷ”கரம் நாவில் ஒட்டிக்கொள்கிறது. நன்றி மறந்து thanks ஒட்டிக்கொள்கிறது. காதல் என்ற வார்த்தையில் இருந்த உணர்வு குறைந்து love என்ற வார்த்தையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் சோழர்கள் தமிழைத் தப்பாகப் பேசிவிட்டார்கள் என்று நாம் கோபப்பட்டோம்.

சோழர்களைப் பற்றி தவறாக காட்டிவிட்டார் என்று சொன்னார்கள். தெரியாமல் தான் கேட்கிறேன், சோழர்களைப் பற்றி முதலில் நமக்கு என்ன தெரியும்? சோழர்கள் வேண்டாம், நம்மில் எத்தனை பேருக்கு அவரவர் குடும்ப வரலாறு தெரியும்? தமிழும் தமிழ் உணர்வும் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை திணிக்கப்பட்ட ஒரு பாடமாக மட்டுமே தமிழகத்தில் இருந்துவரும் நிலையில் தமிழர் வரலாறு பற்றி நமக்கென்ன கவலை. நமது தாய்மொழியைக் கொண்டாடும் பாக்கியம் இல்லாத்தவர்களாகத் தான் நாம் மாற்றப் பட்டிருக்கிறோம். “என் மகனுக்கு டமில் மட்டும் சரியா வராது” என்று பீத்திக்கொள்ளும் பெற்றோர் தான் இங்கு ஏராளம். “அம்மா” என்ற வார்த்தையே நம் தலைமுறையோடு வழக்கொழிந்து போய்விட்டது. மம்மி, மாம், மா, மம்மா இப்படித்தான் அழைக்கின்றன இன்றைய குழந்தைகள். “அம்மா” என்ற வார்த்தையையே சொல்லித்தராத நாம், சோழர்களைப் பற்றியா பாடம் எடுக்கப் போகிறோம்? “ரொம்ப அதிகாரம் பண்ணான், சரிதான் போடானு வந்துட்டேன்” – ஆன்ட்ரியா பேசும் இந்த வசனம் தான் இன்றைய தமிழகத்தின், தமிழர்களின் மனநிலை கூறும் நிதர்சன உண்மை.

சோழர்களை அவமானப்படுத்திவிட்டார், பாண்டியர்களை கொடூர வில்லன்களாகக் காட்டினார் என்பது தான் பிரதான குற்றச்சாட்டாக இருந்தது. செல்வாராகவனைக் கண்டித்து போஸ்டர்கள் எல்லாம் கூட ஒட்டப்பட்டது. ஆம், சொந்த மண்ணை விட்டு வெளியேறி, பரதேசி போல் சோற்றுக்கே வழி இல்லாமல் அந்நிய நாட்டில் மறைந்து வாழ்ந்தாலும், “மன்னன் சொல்லே மந்திரம்” என்று தூது வர ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், பழைமை மாறாமல், கலாச்சாரம், பாரம்பரியம், மொழி கெடாமல் வழி வழியாக பசி, பட்டினி, சோகம், ஏக்கம் என அனைத்தையும் தங்களுக்குள்ளே வைத்துக்கொண்டு யார் கண்ணிலும் படாமல் குகைகளுக்குள் வாழும் பஞ்சத்தில் அடிபட்ட ஒரு கூட்டமாக “எம் தஞ்சை யாம் பிறந்த பொன்தஞ்சை, விரல் ஐந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்” என்று சொந்த நாடு திரும்பும் கன்வோடு வெதும்பி வாழ்பவர்களாக சோழர்களைக் காட்டியது செல்வா செய்த குற்றம் தான். பரம்பரை பரம்பரையாக தங்களது வம்சத்தின் பெருமையை ஊட்டி வளர்த்து, ராஜவம்சத்தின் அடையாளமாகவே உருவாக்கி, கலை, இலக்கியம், மந்திர தந்திர வித்தைகளை பாடமாகப் புகட்டி, தொலைந்து போன தங்களது குலதெய்வச் சிலையை இன்றும் விடாமல் தேடுபவர்களாக பாண்டியர்களைக் காட்டியதும் செல்வா செய்த மிகப்பெரிய குற்றம் தான் 

சோழர் பெருமை, சோழர் பெருமை என்று மார்தட்டும் தமிழ் மக்களுக்கு ஒரு கேள்வி. இன்றும் சோழர் பெருமையை உலகிற்கே சொல்லிக்கொண்டு நிற்பது தஞ்சை பெரிய கோவில். அந்தக் கோவிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன். அவனுக்கு நாம் செய்திருக்கும் மரியாதை என்ன? இறந்தும் இன்று தெய்வமாக வாழும் அவனது கல்லறை எப்படி இருக்கிறது தெரியுமா? செதுக்கப்பட்ட ஒரு கல்லை, கடவுளாக ஆயிரம் வருடங்களுக்கு மேல் கும்பிட்டுக்கொண்டிருக்கும் நாம், அந்த கல்லைக் கடவுளாக நமக்கு கும்பிடக் கொடுத்த சோழனுக்கு என்ன செய்தோம்? “சோழருக்கு ஒரு மணிமண்டபத்தை இந்த அரசு கட்டித் தர வேண்டும்” என்று வருடத்திற்கு ஒருமுறை டிவியில் பேட்டி கொடுக்கிறார்கள். மறுபடியும் கேட்கிறேன், என்ன தகுதி இருக்கிறது நமக்கு செல்வராகவன் சோழர் பெருமையைக் கெடுத்துவிட்டார் என்று சொல்ல?

சினிமாவை சினிமாவாகப் பார்க்காமல், நம் விருப்பதிற்கேற்ப வளைத்துக் கொள்ளவும் நெளித்துக் கொள்ளவும் நாம் பழகி வைத்திருக்கிறோம். “முழுக்க முழுக்க கற்பனை” என்று தெளிவாகச் சொல்லப்பட்ட ஒரு பேண்டஸி கதையில் ஒரு இயக்குனர், தன் கதைக்கு நியாயமாக தேவையானதைக் காட்டியதற்கு ஏதோ செய்யக்கூடாத துரோகத்தை செய்து விட்டதைப் போல நாம் ஏற்படுத்திய பிம்பம் இருக்கிறதே! அப்பப்பா… “சோற்றுக்கு வழி இல்லாத பிச்சைக்காரர்களைப் போல, நரமாமிசம் சாப்பிடுபவர்களைப் போல் சோழர்களை காட்டியிருக்கிறார்” என்று சொன்னார்களே, நான் தெரியாமல் தான் கேட்கிறேன் - பசி, பட்டினி, பஞ்சம் என்றால் என்னவென்றாவது தெரியுமா நமக்கு? தொடர்ந்து மூன்று வருடங்களுக்கும் மேலாக மழை பெய்யாமல், விவசாயம் செய்ய முடியாமல், எலிக்கறி தின்று, வாழ நாதியில்லாமல் தூக்குக் கயிறாலும், பூச்சி மருந்தாலும் தங்களையும் தங்களது குடும்பத்தவரையும் கொன்றார்களே அந்த விவசாயிகளைக் கேட்டால் தெரியும் பசி என்றால் என்ன, பட்டினி என்றால் என்று. பள்ளிக்கூடங்களில் சத்துணவு போடும் போது என்றைக்காவது வேடிக்கைப் பார்த்திருக்கிறீர்களா? தனக்கும் தன் தங்கைக்கும் சாப்பாடு வாங்க போட்டி போடும் சிறுமி, தனக்கும் வீட்டிலிருக்கும் தன் நோயாளி அம்மாவிற்கும் ஒரு கவளம் அதிகம் சோறு வாங்க மண்ணில் புரளும் சிறுவனிடம் தெரிவதற்குப் பெயர்தான் பசி. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று ஏன் சொல்கிறார்கள் என்று ஊருக்குள் ஏதாவது வெள்ளம், புயல், பூகம்பம் என்று வந்து போட்டுத்தாக்கிய பின், உலக நாடுகள் நமக்கு ஊற்றும் கஞ்சியை நாம் வாங்க முற்படும் பொழுது தெரியும். சர்வநாகரிகத்துடன் சுயமரியாதை கெடாமல் அதை எப்படி நாம் வாங்கிக் குடிக்கிறோம் என்று பார்க்கலாம். தாய் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாக முகாமில் சோற்றுப் பொட்டலம் வரக் காத்திருக்கும் நம் ஈழச் சகோதரர்களிடம் கேட்டால் தெரியும் பசி என்றால் என்ன என்று.

ஆனாலும் எங்கு “நரமாமிசம்” திண்பது போல் காட்டப்படுகிறது நானும் படத்தில் தேடித் தேடிப் பார்க்கிறேன், எனக்குப் தென்படவே இல்லை. நரன் என்றால் மனிதன். நரமாமிசம் என்றால் “மனிதக்கறி”. சோழ மன்னனாக பார்த்திபன் தோன்றும் காட்சியில், மாமிசம் கொண்டு வரப்படுகிறது. அதை வாங்கித் திண்ணக் கூட்டம் படாத பாடு படுகிறது. அது தான் நரமாமிசமா? தன் மக்களிலேயே சிலரைக் கொன்று, மீதமுள்ளவருக்கு திண்ணக்கொடுப்பது போலவா அந்தக் காட்சி இருந்தது? இந்த வேலையை ஏன் அரசன் செய்ய வேண்டும். மக்களே ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு தின்றுகொள்ள மாட்டார்காளா? ஆடு, மாடு, கோழிக்கு அந்த இடத்தில் வாய்ப்பில்லை என்பதால் அங்கிருக்கும் ஒரே மிருகமான ஒட்டக மாமிசமாகத்தான் அந்தக்கறி இருக்க முடியும். எதை வைத்து நரமாமிசம் என்று சொன்னார்கள் என்று தெரியவில்லை. முழு அலங்காரத்துடன், ஒரு மன்னன் - சோழ மன்னன், வேட்டையாடி தன் மக்களுக்கு “உணவு” கொண்டு வருகிறான் என்று தானே அந்தக் காட்சிக்கு அர்த்தப்படுத்தவேண்டும்? உணவிற்கு அவர்கள் அடித்துக்கொள்வது போல் காட்டப்பட்டதற்குக் காரணம் அங்கு நிலவும் பசி, பஞ்சம், பட்டினி தானே தவிர நரமாமிசம் தின்ன அலைகிறார்கள் என்பதல்ல.  

அதேபோல் தஞ்சை கிளம்பும் முன், அந்தக் கிழவர் தன்னைத்தானே பலி கொடுத்துக்கொள்ளும் காட்சி. ஏதோ காட்டக்கூடாததைக் காட்டி, “உயிர்பலி வாங்கும் காட்டுமிராண்டிகளா சோழர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்கள். கோவிலில்களில் “கிடா வெட்டு” என்பது இன்றும் இருக்கிறது. எதற்கு? நம் வேண்டுதல் பலிக்க சாமிக்கு கொடுக்கும் லஞ்சம் தான் அது. எந்த இறைவன் இறங்கி வந்து நம்மிடம் உயிர்பலி கேட்டிருக்கிறான் இது வரை? சாமிக்கு, பொங்கலும் புளியோதரையையும் மட்டும் படைத்துவிட்டு வேண்டியதை கொடுக்கச் சொல்லி வேண்டிக்கொள்ள வேண்டியதுதானே? ரத்தம் ஏன்? ஏனென்றால் இன்று சட்டம் போட்டும் தடுக்க முடியாத “உயிர்பலி” என்பது நமது பாரம்பரியம். இன்று ஆடு மாடு போல் அன்று மனிதன். அவ்வளவு தான் வித்தியாசம். “நேர்ந்து விடப்பட்ட ஆடு” என்பதைப் போல, நம் முன்னோர்கள் அன்று தம் மக்களிலேயே ஒருவரை பிரத்யேகமாகத் தேந்தெடுத்து, அவரையே கடவுளாகக் கும்பிட்டு, அலங்கரித்து, நினைத்த காரியம் நிறைவேற வேண்டி பலி கொடுக்கின்றனர் மழை பெய்ய வேண்டும், பகை நீங்க வேண்டும் என்று பொதுவான மக்கள் நலன் உள்ள பிரச்சனைகளுக்காக. தனிப்பட்ட பிரச்சனைக்காக உயிர்பலி கொடுக்கப்பட்டால் அதன் பெயர் “கொலை”. ஊர்ப்பிரச்சனைக்காக, மக்கள் நலனுக்காக உயிர்பலி கொடுக்கப்பட்டால் அதன் பெயர் “காணிக்கை”. மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காளி தேவியின் அருள் வேண்டி பலி கொடுக்கப்பட்டவனே அரவான்! தன் இனம் வெற்றி பெற தன்னையே மாய்த்துக்கொண்டு இன்று கடவுளாக இருக்கிறான் அரவான். அவன் பெற்ற வரம் அது. காட்டுமிராண்டித்தனமாக இருந்தாலும் இது தான் நமது வரலாறு. 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சட்டம் கொண்டு வந்து தடுக்கும் வரை நரபலி என்பது நமது சமூகத்தில் சாதாரணமாக நடந்து கொண்டிருந்த ஒரு சம்பவம். அதன் பிறகும் உடன்கட்டை ஏறுதல் இருந்தது. அது தனிக்கதை. நவநாகரிகம் கரைபுரண்டோடும் இந்தக்காலத்திலும் 6 மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு ஊரில் ஏதாவது ஒரு பூசாரியால் ஒரு சின்னக்குழந்தை நரபலிக்கு ஆளாவதாக செய்திகள் வந்து கொண்டு தானே இருக்கிறது. “யாரையாவது தேர்ந்தெடுத்து பலி கொடுப்பதற்கு பதில், 200 வயதான தன்னை பலி கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக மற்றவரனைவரும் தஞ்சைக்குச் செல்லுங்கள்” என்று கூறும் அந்தக் கிழவனார் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான் “சிந்தாத் திரையாகப் போங்கோள். தஞ்சையை எட்டியவுடன் அடியேனை ஒரு நிமிடம் நிண்டு நினையுங்கோள்” முதலாமானது தம் மக்கள் அனைவரும் எந்தத் தடையுமின்றி பிரிந்து விடாமல் ஒன்றாகப் பயணப் படவேண்டும், இரண்டாமாவது தான் செய்யும் தியாகத்திற்கு இவர் கேட்கும் விலை - தஞ்சையை அடைந்தவுடன் ஒரு நிமிடம் நின்று தன்னை நினைத்துக்கொள்ள வேண்டும். தஞ்சை திரும்பியிருந்தால் நிச்சயம் அந்தக் கிழவருக்கு கோவில் எழுப்பப்பட்டிருக்கும். நரபலி கொடுக்கப்படுவது நியாயம் தான் என்று சொல்ல வரவில்லை. அந்த மூடத்தனமும் நமது முன்னோர்கள் கடைபிடித்த பாரம்பரிய கலாச்சாரத்தில் ஒன்று தான் என்று சொல்ல வருகிறேன்.

சோழ மக்களை நாகரிகமற்றவர்களாக, அடிமைகளாகக் காட்டியிருக்கிறார் – சோழர் ஆட்சிகாலத்தில் மட்டும்மல்ல இன்றும் அடிமைத்தனம் இருக்கிறது. போரில் தோற்றவர்களில் ஆண்கள் பணியாட்களாகவும், பெண்கள் அந்தப்புரத்தில் அரசனின் காமக்களியாட்டதிற்காகவும் பயன் படுத்தப்பட்டனர் என்பது ஊரறிந்த வரலாறு. இதில் தவறாகக் காட்ட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. போரில் கைதானவர்களுக்கு பதில் இங்கு அத்துமீறி நுழைந்தவர்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். ராஜ துரோகம் செய்தவர்கள் ஊரறிய பலி கொடுக்கப்படுவார்கள். இது இன்றும் பல நாடுகளில் தொடர்கிறது. தென்கொரிய டி.வி சேனல்களை திருட்டுத் தனமாகப் பார்த்தற்காகவும், பைபிள் வைத்திருந்த குற்றத்திற்காகவும் தன் மக்களில் 80 பேரை பொதுமக்கள் பார்வையில் வைத்து சுட்டுக்கொன்றிருக்கிறது வடகொரியா. மாறி மாறி புறாக்களையும் ராக்கெட்டுகளையும் விட்டுத் திரியும் இன்றைய சூழலிலேயே இப்படி நடக்கிறதென்றால் அந்நாட்களில் தண்டனை எப்படி இருந்திருக்கும். 

“கல் குண்டு” காட்சி - ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். காளையை அடக்குவதென்பது நம் வீர விளையாட்டுகளில் ஒன்று (இப்போது நடப்பது போல் 10 பேர் ஒரு காளையை அடக்குவதல்ல). ஊரே கூடி நின்று கைதட்டி வேடிக்கைப் பார்த்து கொண்டாடும் ஒரு திருவிழாக்கால நிகழ்வு அது. இன்று பொங்கல் தினங்களில் மாடுபிடி போட்டிகள் நடப்பதைப் போல. இந்தப் படத்தில் அது கல் குண்டு எறியும் காட்சியாகக் காட்டப்படுகிறது. பல நூறு வருடங்களுக்குப் பிறகு சொந்த நாடான தஞ்சைக்குத் திரும்புவதைக் கொண்டாடும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. தண்டனை என்று மட்டும் சொல்லாமல் போட்டி என்று நான் சொல்லக் காரணம் இருக்கிறது. ஏனென்றால் முத்து (கார்த்தி) வென்ற பிறகு அவனை வீரனாக ஏற்று கொண்டாடுகிறார்கள் மன்னனும் மக்களும். ரோமானியர்கள் செய்வதைப் போல தமிழர்கள் செய்வதாகக் காட்டுகிறார் என்றால் தின்பதற்கே ஒட்டகம் தான் இருக்கும் இடத்தில், அடக்குவதற்கு காளைக்கு எங்கு போவது? எனவே இங்கு காளைக்கு பதில் கொம்பு சீவப்பட்டு காளையாகவே வளர்க்கப்பட்ட மனிதனை அடக்க விட்டிருக்கிறார்கள். வித்தியாசம் அவ்வளவே. ஏதோ காளையை அடக்கும் போது மயில் இறகைக்கொண்டு வருடுவதைப் போல் இருக்கும் என்பது போலவும், இங்கு ஒரு மனிதன் மற்றொருவனை கல் குண்டைக் கொண்டு தாக்குவது தான் கொடூரமாக இருக்கிறது என்றும் சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று தெரியவில்லை.

குடவோலை முறையைக் கண்டுபிடித்த சோழர்களை இப்படியா காட்டுவது என்று கூட படித்த நியாபகம் இருக்கிறது.  குற்றங்களை மட்டுமே கண்டுபிடிக்கப் பழகிய நம் கண்களுக்கு நல்லது எதுவுமே தெரிய மறுக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழர்கள் வாழ்வதாகக் காட்டப்படும் மிகப் பெரிய குகையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் தண்ணீர் வருகிறது. அதை வரிசையில் நின்று மக்கள் வாங்கிக்கொண்டு போகின்றனர். ஒரே ஒரு இடத்தில் மட்டுமே நெருப்பு விநியோகம் செய்யப்படுகிறது. அங்கிருந்தே வீட்டிற்கு ஒருவர் என்று நெருப்பு வாங்கிக்கொண்டு போவதாகக் காட்டப்படுகிறது. அதாவது “ரேஷன்” முறை. சிவலிங்கத்தையும், மன்னன் சிலையையும் வடிக்கும் சிற்பி அந்த குகையில் இருக்கிறான், ஓவியம் இருக்கிறது, மன்னர் வருகிறார் என்று கட்டியம் கூறுபவன் இருக்கிறான், படைத்தளபதி இருக்கிறான், படை வீர்ர்கள் இருக்கிறார்கள், அந்தப்புரம் இருக்கிறது, அதில் அழகிகள் இருக்கிறார்கள், யாழ் இசை இருக்கிறது, நடனம் இருக்கிறது. மந்திர வலிமை இருக்கிறது, தந்திர வலிமை இருக்கிறது. பசி பஞ்சம் இருந்தாலும் 200 வயது வரை நோய் நொடியில்லாமல் வாழும் மக்கள் இருக்கிறார்கள். மூலிகை வைத்தியம் இருக்கிறது, அக்குபன்ச்சர் வைத்தியமும் இருக்கிறது. வீரம் இருக்கிறது, போர்த்திறமை இருக்கிறது. முக்கியமாக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மன்னன் மேல் கொண்டுள்ள பக்தி மாறாத மக்கள் இருக்கிறார்கள், மக்களுக்காக உயிரை விடத் துணியும் மன்னன் இருக்கிறான், அழியாத மொழியாக தமி்ழ் இருக்கிறது. என்ன இல்லை இந்தப் படத்தில்? இவையெல்லாம் ஏன் நம் கண்களில் தென்படவில்லை? காட்டப்பட்ட தமிழர்கள் கருப்பாக இருந்ததனால் வெளிச்சம் போதவில்லையா? கதையில் காட்டப்படும் மக்கள் சோழ தேசமான தஞ்சையை விட்டு வந்து ஆயிரம் வருடங்கள் ஆவதாகச் சொல்கிறார் செல்வா. அவர்கள் இன்னும் மன்னன், அரண்மனை, விசுவாசம், பலி, இயல், இசை, நாடகம், சிற்பம் என்று இருக்கிறார்கள். அது தான் தவறோ? அன்றிலிருந்து இன்று ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு இன்று நாம் எப்படி இருக்கிறோம்? நம் மன்னர்கள் (அரசியல்வாதிகள்?) எப்படி இருக்கிறார்கள்? அதைத் தான் நம்மால் ஒத்துக்கொள்ள முடியவில்லையோ? மக்கள் பணத்தைச் சுரண்டி, எவன் செத்தாலும் எனக்கென்ன என்று அடுத்தவனை குறை கூறியே சோழ மக்கள் காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பது போல் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?

நிறத்தைப் பற்றிச் சொன்னவுடன் தான் நியாபகத்திற்கு வருகிறது. சோழர்களை கருப்பாகக் காட்டினார் என்பதெல்லாம் ஒரு குற்றச்சாட்டு. இன்று நாம் காணும் தமன்னா, ஹன்சிகா ‘கலர்’ நமது நிறமல்ல என்பது முதலில் நமக்குப் புரிய வேண்டும். ஆயிரம் துணை நடிகர்ளை வைத்து எடுக்கப்படும் ஒரு படத்தில் தினமும் ஒவ்வொருவருக்காக மேக்கப் போட்டு விட்டு தயார்படுத்துவதென்பதெல்லாம் முடியாத காரியம் என்பது சிறிது யோசனை செய்து பார்த்தாலே தெரியும். ஒழுகிக் கொண்டிருக்கும் தண்ணீரை வரிசையில் நின்று வாங்கும் கூட்டமானது தேய்த்துக் குளித்து எத்தனை நாளாகியிருக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும். ரோட்டில் திரியும் பிச்சைக்காரன் எந்த நிறத்தில் இருப்பானோ அதே நிறத்தில் தான் அந்த மக்கள் இருந்தார்கள். மன்னரும் மன்னர் குடும்பமும் விதிவிலக்கு!

தமிழகத்தில் இரண்டு மாபெரும் ராஜ்ஜியங்களுக்குள் நடக்கும் கதை ஆயிரத்தில் ஒருவன். சரி, சோழர்கள் பாண்டியர்கள் கூடாது என்று மறுக்கிறோம். குப்பன் ராஜ்ஜியம், சுப்பன் ராஜ்ஜியம் என்று வைத்துக்கொள்ளலாமா?

ஒரு வேளை செல்வா இப்படி எடுத்திருந்தால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இருந்திருக்காதோ?

“குப்பன்பாளையம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டுள்ள குப்பன் ராஜ்ஜியத்திற்கும், சுப்பனூர் என்ற ஊரைத் தலைநகரமாகக் கொண்ட சுப்பன் ராஜ்ஜியத்திற்கும் பகை. சதா போர் செய்து கொண்டே இருக்கிறார்கள். தோற்கும் ஒரு சமயத்தில் இளவரசனை ராஜ்ஜியத்தின் குடிமக்கள் சிலருடன், சுப்பனின் குல தெய்வவமான சுப்புசாமி சிலையையும் சேர்த்து வேறு இடத்திற்கு தப்பிக்க வைக்கிறான் குப்பன் ராஜ்ஜிய மாமன்னன். தூது வரும் வரை காத்திருங்கள் என்றும் சொல்கிறான். அவர்கள் போகும் இடம் வியட்நாம் அருகிலிருக்கும் ஒரு தீவு. குப்பன்பாளையம் சென்று தம் மக்களோடு சேர்வது எப்போது என்று காத்திருக்கிறார்கள் இந்த குப்பன் ராஜ்ஜிய மக்கள், முக்கியமாக இந்த மக்கள் கருப்பாகத்தான் இருப்பார்கள். சுப்பனூர் மக்கள் பளீர் கலர், குப்பனூர் மக்கள் கரிக்கலர். அதனால் தான் போரே வந்தது என்று கூட வைத்துக்கொள்வோம். நிறவெறி!” 

இப்போது எப்படியிருக்கிறது? யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்காதல்லவா? இவர்கள் என்ன தமிழ் பேசினாலும் பரவாயில்லை. ஏனென்றால் குப்பன், சுப்பன் அப்படி தான் பேசுவார்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். ஏன் அது தமிழே இல்லை என்று கூட நாம் சொல்லிவிடலாம். அது அவர்கள் மொழி, வேறேதோ வேற்று மொழி. ஆட்கள் கருப்பாக இருந்தால் என்ன? இம்மக்களின் நிறமே இது தான் என்று சொல்லிவிட்டோம். நரமாமிசம் தின்றால் என்ன? விஷத்தைக் குடித்துச் செத்தால் என்ன? அது அவர்கள் கலாச்சாரம். சொல்லுங்கள் இப்படித்தான் இருந்திருக்க வேண்டுமா ஆயிரத்தில் ஒருவனின் கதை? அது சரி, புனைவுக்கதைகளுக்கே இங்கு வக்கில்லாத பொழுது உண்மைக்கதைகளை எடுப்பது பற்றியெல்லாம் நாம் யோசிக்கக்கூட முடியுமா தெரியவில்லை.

ஆயிரத்தில் ஒருவன் படம் நிச்சயம் ஒரு தோல்விப்படம் தான். போட்ட காசை எடுப்பதற்குப் பெயரல்ல வெற்றி. 5 பாட்டு, 5 பைட், ஹீரோயினின் தொப்புள், பின்னி மில்ஸில் கிளைமாக்ஸ் பைட் என்று வரும் மாமூல் படங்களுக்கு வேண்டுமானால் இது சரியாக வரலாம். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் அந்த வகைப் படமல்ல. தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருக்க வேண்டிய படம். ஒரு சாதாரண படத்திற்கு கிடைக்கக்கூடிய பெருமைகள் கூட ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கும் அது சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கும் கிடைக்கவில்லை.

ஒரு சில இடங்களில் உட்டாலக்கடி செய்திருந்தாலும் ஜி.வி.பிரகாஷின் இசையை இன்று கேட்டாலும் இதயம் கனப்பது நிச்சயம். அதிலும் முக்கியமாக ரீமா தங்களை ஏமாற்றிவிட்டது தெரிந்து கண்களில் நீர் ததும்ப தன் மக்களிடம் மன்னன் வரும் அந்தக் காட்சியில் ஒளிக்கும் பின்ணணி இசை, இப்பொழுது கூடக்கேட்கிறது. சாகிறவரையில் கார்த்திக்கு இது போல் ஒரு படம் அமையாது. “மன்னனாக வாழ்ந்தேன்” என்று பார்த்திபன் சொன்னதன் முழு அர்த்தம் படத்தில் தெரிந்தது. பல இடங்களில் பார்வையிலேயே தன் நிலை மொத்தத்தையும் சொல்லியிருப்பார். தையல் அதிகம் இல்லாமல் அந்த காலத்தில் இருப்பது போலவே வடிவமைக்கப்பட்ட உடைகள், அணிகலன்கள், இடிபாடுகளுக்கிடையே அமைந்திருக்கும் அரண்மனை, அந்தப்புரம் என்று “கலை” அவ்வளவு அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகள் உச்சம் தொட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். பி.பி.சீனிவாஸ் குரலில் “பெம்மானே, பேருலகின் பெருமானே ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ” என்ற குரலுக்கு கரையாத நெஞ்சம் கல்நெஞ்சம். ரீமா சென் தமிழில் நடித்த ஒரே ஒரு உருப்படியான படம் ஆயிரத்தில் ஒருவன். மாமூல் தமிழ் சினிமாவில் ஹீரோயினை ஹீரோ படுத்தும் பாட்டையெல்லாம் இந்தப் படத்தில் இவர் செய்திருப்பார், கார்த்திக்கிற்கு. செல்வாவின் மாஸ்டர்பீஸ் இந்தப் படம். விஷுவல் எஃபெக்ட்ஸ் என்பதன் அர்த்தம் தெரிந்து பயம்படுத்தப்பட்டது இந்தப் படத்தில் தான். ஒளிப்பதிவில் விளையாடியிருப்பார் ராம்ஜி. தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர் -ஒளிப்பதிவாளர் கெமிஸ்டரி மட்டும் தான் படம் பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும். அப்படி ஒரு ஜோடி நம்பர் 01 செல்வா - ராம்ஜி. ஆனால் இத்தனை முயற்சிகளுக்கும் கேவலம் ஒரு விஜய் அவார்ட்ஸோ அல்லது மிர்ச்சி அவார்டோ கூடக் கிடைக்கவில்லை.

பெங்களூரில் பொங்கல் தினத்தன்று அலுவலகம் முடிந்தபின் நேராக இரவுக்காட்சி ஊர்வசியில் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தோம். இறுதிக்காட்சியில் “புலிக்கொடி வேந்தே, தஞ்சை செல்லக் கப்பல் காத்திருக்கிறது, சீக்கிரம் வாருங்கோள்” என்று பார்த்திபன் கேட்கும் குரலுக்கு எங்கள் கண்ணில் இருந்து நீர் வந்தது இன்றும் நினைவில் இருக்கிறது. வழியெங்கும் தடைகள், வழி காட்டும் நடராஜர் நிழல், சோழ மன்னனுக்காக, அவனைக் காப்பதாக எடுத்த சத்தியத்திற்காக கூண்டோடு சாகும் சிகப்பு மக்கள், போர்க்களத்தில் காட்டும் வீரம், கையாளும் உக்திகள், இறுதிக்காட்சியில் மன்னனை சுமந்து கொண்டு போய் உயிர்விடும் மிச்சசொச்ச மக்கள் என்று படத்தில் முக்கியமாக இரண்டாம் பாதியில் எண்ணி எண்ணி ரசிக்க ஆயிரம் விஷயங்கள் இந்த ஆயிரத்தில் ஒருவனில் உண்டு. 10 முறைக்கும் அதிகமாக முழுவதுமாக பார்த்துவிட்ட இந்தப் படத்தை காட்சி வாரியாகப் பிரித்து என்னால் மணிக்கணக்கில் பேச முடியும், பக்கம் பக்கமாக இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகளைப் பற்றி எழுத முடியும். தமிழில் வந்த மிகச்சிறந்த உண்மையான முயற்சி - ஆயிரத்தில் ஒருவன்.

படத்தின் இறுதிக்காட்சிகளில் ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்ட மக்களை என்ன செய்தார்கள் என்பதை செல்வா அன்றும் Channel 4 இன்றும் தெளிவாகப் படம் பிடித்துக்காட்டியிருக்கிறார்கள்.

திரைப்படத்தை திரைப்படமாக மட்டும் பார்த்து ஒரு இயக்குனர் சொல்ல வருவதை குறைந்த பட்சம் அமைதியாக அமர்ந்து கேட்கவாவது செய்தால் போதும், செல்வா போன்ற இயக்குனர்கள் நம்மை கூட்டிச் செல்லும் உலகங்களில் நம்மாலும் உலா வர முடியும். இரண்டாம் உலகையாவது சிதைத்துவிடாமல் ரசிப்பதற்கு முயற்சி செய்வோம். இதுவும் செல்வா என்னும் கிறுக்கனின் பல நாள் கனவு.

தொடரும்...


You Might Also Like

40 comments

  1. ஆயிரம் முறை தாங்கள் என்ன தான் சொன்னாலும், மூளை, ரசனை இல்லாதவன் என என்னைக் கருதினாலும் ஆயிரத்தில் ஒருவன் மகா மட்டமான படம், வரலாற்றுப் புனைவில் சறுக்கல், கதை ஓட்டத்தில் குழப்பம், முக்கியமாக இடைவேளைக்கு பிறகு இறுதிக் காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை அவ் உலகுக்கு கொண்டு போகத் தவறி விட்டார், செயற்கைத் தனங்கள் நிரம்பி இருந்தது. ஆனால் அன்பே சிவம், ஆரண்ய காண்டம் நிச்சயம் மெச்சப்பட வேண்டிய திரைப்படங்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இரண்டாம் உலகம் எப்படி இருக்கும் என பார்த்துவிட்டு தான் சொல்ல முடியும்.

    ReplyDelete
    Replies
    1. கனவிவரணன் நீலவண்ணன்கொஞ்சநாள்குளிக்காம சாப்டாம பட்டினி கிடந்து பாரு அப்ப தெரியும் இந்த படத்தோட தாக்கம்

      Delete
  2. அருமை அருமை அட்டகாசம் நண்பரே , ஆயிரத்தில் ஒருவன் செல்வாவின் ஆகா சிறந்த படைப்பு என்பதில் எனக்கு துளி சந்தேகமும் இல்லை ,என்னளவில் எதை சொல்ல நினைத்தேனோ அப்படியே சொல்லிவிட்டீர்கள் ஒவ்வொரு வரியும் படிக்கும் பொழுது சிலிர்த்தது நன்றி

    ReplyDelete
  3. உண்மையில் என் மன ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிற எண்ணங்களை படம் பிடித்து எழுதியது போல் இருந்தது. மொக்கை படங்களை எல்லாம் கொண்டாடிக்கொண்டு இருக்கிற நம் மீதுதான் குற்றம். ஏன்டா நல்ல படம் எடுக்கலைன்னு கேட்கிறோம். நல்ல படம் எடுத்தால், இவர்களே இயக்குனர்களாக மாறி, இங்கே இப்படி எடுத்திருக்கலாம், அங்கே அப்படி எடுத்திருக்கலாம் என நோட்டை சொல்வது. நல்ல படங்களை நாம் இது போல் புறக்கணிப்பதன் விளைவுதான் பல குப்பைகள் தமிழ் சினிமாவில் இன்றும் புரையோடிக்கொண்டு இருக்கிறது. ஒரு நல்ல படம் பார்க்க இரண்டு வருடமாவது காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. இன்றளவும் நான் வியந்து பார்க்கும் படம் ஆயிரத்தில் ஒருவன். ஒரு நாள் செலவராகவனும் கொண்டாடபடுவார். பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  4. அருமை அருமை... உங்களால் மட்டுமே இவ்வாறு ஆழ்ந்து அலச முடியும்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  5. அட்டகாசம் நண்பா..உனக்கு நான் ஆதரவு தர்ரேன்....

    ReplyDelete
  6. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்தப்பதிவுக்கான உங்கள் உழைப்பைக் கண்டு ஆச்சரியப்படுகிறேன். எந்த அளவு ஆயிரத்தில் ஒருவனை ரசித்தீர்கள் என்றால் இப்படி எழுதி இருப்பீர்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. எனக்கும் மிகப்பிடித்த ஒரு இயக்குனர் செல்வா தான். அதற்குப்பிறகு வெற்றிமாறன்.

    "ஆயிரத்தில் ஒருவனைக்" குறை கூறுபவர்கள் கூறிக்கொண்டே இருக்கட்டும். ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற காவியங்களை ரசித்து மகிழ்ச்சியாக இருக்கட்டும். விட்டுத்தள்ளுங்கள். நாம் இரண்டாம் உலகத்தை ரசிக்க ரெடி ஆவோம். இந்த அற்பப்பதர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் உறைக்காது.

    இரண்டாம் உலகம் இன்றைக்கு பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதைப்பற்றி எழுதுங்கள். காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  7. முதலில் இந்தப் பதிவை இவ்வளவு வருஷத்துக்குப் பின்னரும் எழுதியே தீருவேன் என்று எழுதியதற்கு பாராட்டுக்கள் நண்பா!
    உங்கள் ஆதங்கங்கள் ஒவ்வொன்றுமே 100வீதம் சரி. ஒரு சினிமாவை, அதுவும் "கதையில் நடப்பதெல்லாம் கற்பனையே" என்று ஆரம்பத்திலேயே காட்டப்பட்ட சினிமாவை மேற்கொண்டு எதிர்ப்பதென்பது பகுத்தறிவுள்ளவர்கள் பண்ணக்கூடிய வேலையா என்று தெரியவில்லை.
    ஆயிரத்தில் ஒருவன் முதன்முறை பார்த்த போது, கதைக்குப் பின்னால் இருந்த கற்பனாசக்தியை நினைத்து வியந்திருக்கின்றேன். தமிழ்ப்படங்களிலேயே நாவல்ப்படுத்தக்கூடிய சிறப்பு கொண்ட ஒரு சில படங்களில் ஒன்று அது. இருந்தாலும் படத்தின் இரண்டாவது பாதி எனக்கு அசௌகரியமாகப்பட்டதை ஒத்துக்கொள்கிறேன். அது மக்களை அப்படிக் காட்டியதாலோ, இல்லை மேலே நீங்கள் கூறிய காரணங்களாலோ இல்லை.. என்ன காரணம் என்று எனக்கே சரிவர சொல்லத் தெரியவில்லை. இடைவேளை முடிந்தவுடன் படத்தோடு திரும்ப ஒட்டுவதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது. இரண்டாம் பாதிக்கு மக்களைத் தயார்படுத்துவதற்கான போதிய காட்சிகள் இல்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் படத்துக்கு கிடைத்த reception மிக அநீதியானது என்ற எண்ணமே எனக்கும் இருக்கிறது... :(

    செல்வாவின் படங்களில் எனக்கு மிகப்பிடித்த படம் மயக்கம் என்ன. கதை நெடுகிலும் paceம் balanceம் படத்தில் கச்சிதமாக இருக்கும். தனுஷும் ஒரு போட்டோகிராபராக நம்பும்படியாக நடித்திருப்பார்.

    *இரண்டாம் உலகம் படத்தை யார் மட்டம் என்று சொன்னாலும், ஏன் அதை நீங்களே வந்து சொன்னாலும் தியேட்டரில் பார்ப்பதாக இருக்கிறேன்! :) படம் வெற்றியடைந்தே தீரவேண்டும். இல்லாவிட்டால் தமிழ் சினிமாவில் இன்னொரு ஹை பட்ஜெட் ஃபேன்டஸி வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்குமா என்றே தெரியவில்லை..

    ReplyDelete
  8. அருமையான பதிவு நண்பா!!!!! வாழ்த்துக்கள்.... "திரைப்படத்தை திரைப்படமாக மட்டும் பார்த்து ஒரு இயக்குனர் சொல்ல வருவதை குறைந்த பட்சம் அமைதியாக அமர்ந்து கேட்கவாவது செய்தால் போதும்".... இதைத்தான் நாம் எல்லா படத்திற்க்கும் செய்ய வேண்டும்....

    ஒரு படத்தைப் பார்த்த அனுபவம் உங்கள் பதிவை படிக்கும்பொழுது. நன்றி....

    ReplyDelete
  9. The way movie was taken was really good but I'm not sure how many of you ppl have watched the animation movie "Atlantis, the lost empire (2001)". Selvaragavan has copied the animation movie story (from the beginning till end) and made it as a tamil version. Copying a story is not the problem here but he just have to admit not keep telling in all the interviews as it is his own story. There is no way I can tell selvaragavan as a best director or story writer based on this movie.

    ReplyDelete
    Replies
    1. the first half of this movie was good; it was an assembled bits/pieces of various adventure movie scenes(yeah, enthiran 2, but still) ; but as said, its good attempt, enjoyable...second half, where the trouble started, as selva movd onto serious one, from adventure..it might/wud hav been good, had the transition been better; it was rough, and difficult to digest; liked mayakkam enna a lot and nw also irandam ulagam..as always, pudhupettai...aayirathil oruvan is a different attempt, but 2 reach out, he shud hav been somewat audience oriented; atleast in censoring some parts before release, like the heroine urinating scene; should he be that much explicit describing a particular tradition, which is been portrayed on-screen after a Long time...? and wat abt reema sen, it's ok fr me to accept foreigners speaking tamil in a well described imaginary world(irandam ulagam), than reema sen speaking pure dilect tamil; her actions/steps doesn't match the graciousness of a good actor like anushka.! reema sen was bold, and that wud hav been the main reason fr her bagging that role..!! its a bold attempt, but had some flaws, which wud hav been learning curves fr an ambitious film-maker of selva's calibre.!:)

      Delete
    2. There are times of coincidence. This is human mind of creativity. The physic path leads wil take anyone to that way. you cant say its a copy. the way they shot may be copied because of technology barriers and knowledge lag abt them

      Delete
    3. நல்ல முயற்சிக்கு நமது நாட்டில் என்றும் மதிப்பு இல்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

      Delete
  10. @ விவரணன் நீலவண்ணன் - நானும் நீங்கள் சொல்லும் அந்த பார்வையாளர்களில் ஒருவன்தான். பல முறை செல்வா அந்த உலகிற்கு அழைத்துச் சென்றார். நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை வரிசைபடுத்துங்கள், எனது கருத்தைச் சொல்லத் தயாராக இருக்கிறேன் :-)

    @ Arjith thala - பலரிடம் பேசிய விஷயங்கள் தான் இந்தப் பதிவு. உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒத்துப் போவதில் ஆச்சரியம் இல்லை.

    @ hari suj - நன்றி சகோ :-)

    @ அசோக் குமார் - செல்வாவின் புகழ் சொல்ல ஆயிரத்தில் ஒருவன் போதும். ஆனாலும் நம்மை ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்த அவர் தவறுவதே இல்லை...

    @ திண்டுக்கல் தனபாலன் - நன்றி DD ஸார் :-)

    @ சக்தி முருகேசன் - நன்றி சகோ:-)

    @ Andichamy G - படம் பிடிக்காதவர்கள் பற்றி பேசிப் பயனில்லை. பலருக்கு இந்தப் படம் ஏன் தங்களுக்குப் பிடிக்காது என்று கூட தெரியவில்லை. பிடிக்கவில்லை. அவ்வளவு தான் அவர்கள் சொல்லும் பதில் :-) இன்று இரவுக்காட்சி இரண்டாம் உலகம் செல்கிறேன். படம் எப்படி என்பதைப் பொறுத்து நிச்சயம் பதிவு எழுதுகிறேன் :-)

    @ JZ - முதல் பாதியில் ஆட்டமும் பாட்டுமாக ஹீரோயின்கள், சஸ்பென்ஸ், அட்வென்சர் என்று போகும் கதை இரண்டாம் பாதியில் நம்மை கூட்டிச் செல்லும் உலகம் அப்படியே தலைகீழ். சந்தோஷமாக சிரித்து மகிழ்ந்து பார்கார்ன், பெப்சி வாங்கிக்கொண்டு வந்து உட்கார்ந்து இரண்டாம் பாதியைப் பார்க்கத் தொடங்கியவர்களில் பலருக்கு ஜீரணிக்க முடிந்திருக்காது. அது தான் சிம்பிள் காரணம். பிரச்சனை படத்தில் இல்லை, படம் பற்றிய நமது எதிர்பார்ப்பில் தான் :-) இரண்டாம் உலகம் இரவுக்காட்சி செல்கிறேன். நிச்சயம் மட்டாமக இருக்காது, ஆயிரத்தில் ஒருவனை விட அருமையாக இருந்தால் பெருமகிழ்ச்சி, இல்லையென்றாலும் பரவயில்லை, I'm more than happy with AO :-)

    @ Pratheep Murugesan - நன்றி நண்பா :-)

    @ Anonymous - Seriously? Atlantis, the lost empire?? and u judge Selva as a writer / director based on this fact? Ok ya, even Eega was a rip-off of a short film named Cockroach. Wat's ur judgement on S S Rajamouli?.. anyways thanks for reading...

    ReplyDelete
  11. Correct boss.....wat ever in my mind u r replicate my thoughts......AO.is best movie from selva....always support Good movie from any director.....

    ReplyDelete
  12. இந்தப்படம் பற்றி ஒரு ஈழத்தமிழனாக நான் புரிந்து கொண்ட விதம் பற்றி அறிய,
    அறிந்தும் அறியாமலும் - ஆயிரத்தில் ஒருவன்
    http://www.chummaah.blogspot.ca/2010/01/blog-post_27.html

    ReplyDelete
  13. Intha por murai patri thaangal kooravillaiye.... Acha paducom endra?"

    ReplyDelete
  14. தல வழக்கம் போல பின்னிட்டீங்க.

    காதல் கொண்டேன் கதை மட்டுமே தெரிந்திருந்தேபோதே அந்த படம் மிகவும் பிடித்திருந்தது.. ஆனால் செல்வாவை மிகவும் பிடிக்க ஆரம்பித்தது 7Gரெயின்போ காலனியிலிருந்து தான். ஜீன்ஸ் படத்திருக்குப்பிறகு நான் படக்காட்சிகளால் திரையரங்கில் அழுத படம் இது தான்.

    எனக்கு ஆயிரத்தில் ஒருவன் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இவ்வளவு நுணுக்கமாக இதுவரை பார்த்ததில்லை. இதையே ஹாலிவுட்டில் காத்திருந்தால் முதல் ஆளாக நம்மாட்கள் பார்த்திருப்பார்கள்....

    படத்தில் கிராபிக்ஸ் சரி இல்லை என்று என் நண்பர்கள் பலரும் கூறினார்.. ஆனால் அவை இடத்திற்குப் பொருத்தமாக, காட்சிக்கு உருத்தாததாகவே எனக்குப்பட்டது...

    அதைப்போலே நிறையப்பேர் கூறியது இடைவேளைக்குப் பின் படம் தோய்ந்து வேற பாதைக்கு சென்றுவிட்டது என்று... கதையே அங்கு தானே ஆரம்பிக்கிறது. பின் எப்படி பாதை மாறும்?? நானும் படம் பார்க்கையில் கதையில் ஒன்றி ஆடாமல் அசையாமல் கண்ணீருடன் பார்த்தேன். அவ்வாறு பார்த்த வெகு சில படங்களில் இதுவும் ஒரண்டு...
    படத்துடன் ரசிகன் ஒன்றிப்போவதே படத்திருக்கு மிகப்பெரிய வெற்றி. அந்த வகையில் செல்வாவுக்கு தமிழ் பட உலகம் நிறைய கடமைப்பட்டிருக்கிறது....

    படம் பார்த்த உடன் எனக்குத் தோன்றியது நம் ரத்தசொந்தங்கள் இலங்கையில் பட்ட துன்பங்கள், துயரங்களே... படத்தில் நிறைய விஷயங்கள் ஹாலிவுட்டிலிருந்து எடுக்கப்பட்டவையாகவே தோன்றியது. அதை மட்டும் செல்வா முயன்ற அளவு தவிர்த்திருக்கலாம்.. எ.கா. கடைசி சண்டைக்காட்சியில் ஒரு மர இயந்திரத்தின் மூலமாக கற்களை தூக்கி எறியும் காட்சி. ஆனாலும் இதைப்போன்ற காட்சிகள் தமிழுக்குப் புதியவை...

    படம் முடிந்து வெளியில் வரும்போது ஒரு மனநிறைவு இருந்தது.. கூடவே படம் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகமாகவே இருந்தது..

    இரண்டாம் உலகத்திற்காக மிகவும் காத்திருந்தேன். அதிலும் முதல் trailerயை பார்த்தவுடன் Youtubeல் 1080pல் பதிவிறக்கம் செய்து பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. இன்று அல்லது நாளை சென்று பார்க்க முடிவு செய்துள்ளேன். விமர்சங்கள் பற்றி கவலை இல்லாமல் அதுவும் நிச்சயம் பிடிக்கும் என்று நம்பியே செல்கிறேன்.

    தங்களின் இரண்டாம் உலகம் விமர்சனத்திற்காக மிகவும் காத்திருகின்றேன்.

    ReplyDelete
  15. You are only able to perceive and relate if you go through the pain of experiencing ethnic cleansing and discrimination.. Well done sir.. your review definitely enlightens many wounded souls.. great job

    ReplyDelete
  16. Awesome narration bro...
    As like u, me too a great fan of Selvaraghavn and likes this movie a lot...
    Also my native is Thanjavur... I cry everytime when I watch this film in my system... U have told that u have watched around 10 times, but I have watched this around 25-30 times...
    Yes, We / I have more scenes and truth abt this movie... Even, the first half have excellent scnes like how they reached their place and for enemies they have created lot of stop points to the enemies...
    Selva is a great director... Our people just look into some english movies and saying that its a copy. They just want songs, comedy & fights.
    They can watch graphics and all in Hollywood movies and they will praise that too,, but if an Indain / Tamilan tries that, they wont accept,,, that too they will compare with hollywood. why r u comparing with them, they have money to produce for even 1000 billion... But if we try, our people wont accept, even Shankar tried Enthiran, most of the people compared with hollywood films, why do u think like that, a man who tries first in Kollywood.
    Coming to Aayirathil Oruvan & Selvaraghaven we should praise him for this awseome film forever, but our doesnt.. Even I do have a wish to just call or meet Selva to say and praise abt this movie...
    I have more & more things to say abt this, but words are not coming, even now, when i typing this, i am hearing, Thaai thindra manne song, what a lyrics, if someone really knows what film , lyrics are he will cry..., whta a tamil word have used in this... Enaku innum neraya irukku solla padam pathi and selva pathi, if i / we can we have praise selva,,,
    Pls reply to comment anandhan,,,,.... Neenga ithula sonnathum nalla irunthuchu,..... Sorry, ennala Tamil aa type panna mudiyala.....

    ReplyDelete
  17. தல, மிக மிக அருமையான பதிவு...உங்க உழைப்புக்கு தலை வணங்குகிறேன்...
    சோழர்களை அவமான படுத்தி விட்டார், அவர்களை காட்டுமிரண்டிகளாக காட்டி விட்டார், பலி காட்சி , கல் குண்டு சண்டை சரியில்லை என்கிற காரணத்துக்காக மட்டும் படம் ஓடவில்லை என்று நான் நினைக்கிறன்...அதையும் தாண்டி நிறைய காரணங்கள் இருக்கு. இப்ப அதை பற்றி பேச வேண்டாமேன்னு நினைக்கிறன்.... :-)
    நீங்க இரண்டாம் உலகத்தை பத்தி என்ன நினைகிறீங்க... வெறும் :-) மட்டும் பத்தாது..

    ReplyDelete
  18. romba azhaga sonnenga sir... selva is a genius.. i respect u sir..

    ReplyDelete
  19. vazlga valamudan baby anandhan, ungaiaipol iruvar vendam vendam neer oruvare podhum selva innum sadhipar

    ReplyDelete
  20. Arputham... en manathil irukum pala vishayangalai pathivu seithirukerer... Intha padangal indru prabalam adayathu! atharkana mana muthirchi inum makaluku erpadavillai! Selva oru genius! athil entha santhegamum illai... Avaruku endru oru thani rasigar patalam irukum epothum. Avar padangal periya nadigargalai kondu varuvathilai.. irunthalum opening miga siranthathaga irukum! ithu antha kalainganuku kidaikum mariyathai!

    ReplyDelete
  21. சோழ வரலாறை விரும்பி படிக்கும் எந்த ஒரு தமிழனுக்கு இறுதியில் ஒரு சொட்டு கண்ணீர் வந்து இருக்கும் .... இங்கே செல்வராகவன் வெறும் கதை எழுதவில்லை ... வரலாறை அலசி இருக்கிறார் ... குறிப்பாக " நவகண்டம் " போன்ற வார்த்தைகள் சோழர் மரபுகே உரியது .... இந்த அருமையான பதிவிற்கு நன்றிகள் பலகோடி நண்பரே !!!!

    ReplyDelete
  22. உண்மையான வரிகள்:
    "திரைப்படத்தை திரைப்படமாக மட்டும் பார்த்து ஒரு இயக்குனர் சொல்ல வருவதை குறைந்த பட்சம் அமைதியாக அமர்ந்து கேட்கவாவது செய்தால் போதும்"

    ReplyDelete
  23. negligence and carelessness are reason for underestimating a movie like this!

    ReplyDelete
  24. " ஜீன்ஸ் படத்திருக்குப்பிறகு நான் படக்காட்சிகளால் திரையரங்கில் அழுத படம் இது தான்."

    ஜீன்ஸ் படத்துக்கு அழுதவன் எல்லாம் இவங்க தான் செல்வராகவனுக்கு ரசிகர்களா.... இதை விட அசிங்கம் செல்வராகவனுக்கு வேறு கிடையாது

    ReplyDelete
  25. "தமிழில் அன்பே சிவம், ஆரண்ய காண்டம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களின் நிலை இன்று இது தான். "

    தமிழில் அன்பே சிவம், ஆரண்ய காண்டம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஐயும் போற்றி புகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் செல்வாவின் ஆயிரத்தில் ஒருவனையும் தற்போது இரண்டாம் உலகத்தை கிழித்து தொங்க போட்டார்கள்.

    ஆரண்ய காண்டத்தை இன்றுவரை உங்களுக்கு கடுப்பை கொடுத்து கொண்டு இருக்கும் விமர்சகர்கள் தமிழ் சினிமாவின் தலை சிறந்த படம் என்பதை கொண்டாடி கொண்டு இருப்பதை பார்க்கவில்லையா .... இப்ப கூட உங்க பேருக்கு ஏத்த மாதிரி குழந்தையாக இருக்கீங்க

    ReplyDelete
  26. இந்த படம் மிக அற்புதமான ஒன்று. என்னை 1000 வருடங்களுக்கு முந்தைய உலகத்துக்கே அழைத்து சென்றது. நான் எதை சொல்ல நினைத்தேனோ அதை அப்படியே சொல்லிவிட்டீர்கள். ஒவ்வொரு வரியும் படிக்கும் பொழுது சிலிர்த்தது. மிக்க நன்றி

    ReplyDelete
  27. நல்ல அலசல்...
    TECHPRAWIN.BLOSPOT.IN

    ReplyDelete
  28. அருமையான பதிவு நண்பா!!
    சோழ மக்களின் கதையாக இந்த படத்தில் கூறப்படும் கதை,
    உண்மையில் நம் தாய்த்தமிழ் நாட்டை விட்டு நீங்கி,
    இலங்கையில் பல ஆண்டுகளாக பல கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஈழத்தமிழர்களின் கதை!!!
    தம் தாய் நாட்டில் இருந்து வந்த மக்களே தங்களைக் கொடுமைப்படுத்தும் காட்சி,
    உண்மையில் இங்கே நம்மை ஆள்பவர்கள் செய்த சூழ்ச்சியால் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களின் கதை!!
    இந்த ஒரு காரணத்துக்காகவே நாம் இந்த திரைப்படத்தையும் இயக்குனர் செல்வராகவனையும் பாராட்டியிருக்க வேண்டும்!!

    ReplyDelete
  29. Nethi Adi, Ini avathu nalla padangalai kurai solvathai vida vendum.

    ReplyDelete
  30. Really Awesome one bro, i love movies!!! i will watch all the movies in theatre!!!! these words are in mind, you published!!! even for Irandam ulgam, bad reviews and wrong thoughts

    ReplyDelete
  31. உங்கள் பதிவை முற்றிலும் ஏற்கிறேன். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஆகச்சிறந்த படமே. என்னிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எவை என்று கேட்டால் அதில் முதல் 5 இடத்தில் இப்படம் வந்துவிடும். ஆனால் “இரண்டாம் உலகம்” உண்மையிலேயே என்னால் ஜீரணிக்க முடியவில்லை. படம் முழுவதும் பார்த்த பிறகும் கூட கதை தெரியாமல் வலைப்பூவில் நண்பர்கள் எழுதிய விமர்சனத்தில் இருந்து கதை தெரிந்து கொண்டேன். ஒருவேளை என் அறிவிற்கு எட்டவில்லை என தெரியவில்லை. உங்கள் பதிவை ரசித்து படித்தேன். நன்றி.

    ReplyDelete
  32. Today only I read your review about "Aaayirathil Oruvan" nanba...One of the finest movies in history of tamil cinema from Selva & team.Everyone should have praised them for that special movie,but they received a disappointment from the people and fans of tamil cinema (not everyone).
    His way of story narration was excellent in AO and Irndam Ulagam. :-)

    ReplyDelete
  33. I am expecting part2 Aaayirathil Oruvan. :-)

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...