தங்களது வேர்களைச் சொல்லும் இரண்டு மலையாளச் சினிமாக்கள்

5:34:00 AM

நமது நாட்டிற்குச் சிறிதும் சம்பந்தமில்லாத பல விஷயங்களை நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள். இந்தியர்கள் நன்றாக இருந்துவிட்டுப் போகட்டும் என்ற நல்லெண்ணமெல்லாம் அதில் இருந்ததாகத் தெரியவில்லை. அவர்களது தேவைக்காகவும், களிப்பிற்காகவும் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டவை தான் அநேகம். ஒரு உதாரணம் - தேயிலை. தேயிலைக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை. காலம் காலமாக வடிநீர் அருந்திக் கொண்டிருந்தவர்கள் நாம். இன்று டீயும் டீக்கடையும் இல்லையென்றால் இந்தியன் இல்லை. தேயிலை அப்படி ஒரு அத்தியாவசியப் பொருளாகி விட்டது. தேயிலை இந்தியாவை ஆக்கிரமித்ததற்குப் பெரிய வரலாறெல்லாம் ஒன்றும் இல்லை. இந்தியாவின் வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியாத வெள்ளையர்கள், சொகுசாக வாழ மலைப்பிரதேசங்களில் குடியேறினர். குடியேறினர் சரி. செலவு செய்ய பணத்தை எலிசபத் மகாராணியா மணிஆர்டர் அணுப்புவார்? "பாத்து பொழச்சுக்க" வேண்டியது துரைமார்களின் சாமர்த்தியம். அதனால் மலைப்பிரதேசங்களில் என்ன விளையுமோ அதை இந்திய அடிமைகளைக் கொண்டு விளைவித்தார்கள். இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய மற்றுமொரு முக்கிய விஷயம். பிற நாட்டவர் வணிகம் என்ற பெயரில் நம்மை மயக்கி, வீழ்த்தக் காரணமாக இருந்தது இந்திய மலைப்பிரதேசங்களில் மட்டுமே கிடைக்கும் "மிளகு"தான். வாஸ்கோ டகாமா தான் பிள்ளையார் சுழி போட்ட புண்ணியவான். இறுதியில் அவனைக் கொன்றதும் ஒரு இந்திய இளைஞன் தான். இந்த வரலாறு மலையாளத்தில் வெளியான “உருமி” படத்தில் காணக் கிடைக்கிறது. சரி, நாம் தேயிலைக்கு வருவோம். “சீனா” தான் அப்போது தேயிலை வியாபாரத்தில் நெ.1 ஆக இருந்தது. அதை உடைக்கும் பொருட்டு அதே சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தேயிலை விதைகள், சீன முறைப்படியே இந்தியாவின் குளிர்ந்த பிரதேசங்களில் விளைக்கப்பட்டது. வெள்ளையன் அறிமுகம் செய்த தேயிலையால் இந்தியர்கள் முக்கியமாக தென்னிந்தியாவில் வாழந்த மக்கள் என்ன ஆனார்கள் என்பதை பாலாவின் ‘பரதேசி’ படத்தில் பார்த்தோம்.

புகை வண்டி, தபால், அச்சு இயந்திரம், பாடமுறை, நரபலி தடுப்பு, உடன்கட்டை, நரபலி தடுப்பு என்று வெள்ளைக்காரன் கொண்டு வந்து நமக்காக விட்டுச் சென்ற நல்ல விஷயங்களும் உண்டு. இவையெல்லாம் வெள்ளையன் இல்லை என்றால் நிச்சயம் இன்றும் இந்தியாவில் இருக்குமா என்பது சந்தேகம் (அதற்காக வெள்ளையன் நம்மை ஆண்டதை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் இல்லை) அப்படி வெள்ளைக்காரன் கொண்டு வந்த மற்றுமொரு முக்கியமான அருமையான விஷயம் தான் சினிமா. நாம் எதைப் பருக வேண்டும் என்பதிலிருந்து எதைப் பார்க்க வேண்டும் என்பது வரை முடிவெடுப்பது அவனாக இருந்ததால் தான் 1878 ஆம் ஆண்டு Eadweard Muybridge என்பவரால் முதன்முதலில் பரிசோதிக்கப்பட்டு பின்னர் 1895 ஆம் ஆண்டு Lumière சகோதரர்களால் மக்களுக்குக் காட்டப்பட்ட முதல் சினிமா, அடுத்த ஆண்டே அதாவது 1896 லேயே பம்பாயில் காட்டப்பட்டுவிட்டது. இரண்டே ஆண்டுகளுக்கடுத்து அதாவது 1898 ஆம் ஆண்டே இந்தியாவின் முதல் சினிமா (The Flower of Persia - டாக்குமெண்டரி) Hiralal Sen என்பவரால் எடுக்கப்பட்டது. முதல் இந்திய சினிமா, Shree pundalik 1912 ஆம் ஆண்டு Dadasaheb Torne என்பவரால் எடுக்கப்பட்டது. வெள்ளையன் மட்டும் அன்று இல்லையென்றால் சினிமா, உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின் குறைந்தது 50 வருடங்களுக்கு பிறகு தான் இந்தியாவிற்குள் வந்திருக்கும்.


இன்று சினிமா இல்லாமல் நாம் இல்லை. இந்திய சினிமாவின் பெருமை உலகறிந்தது. அந்தப் பெருமையில் பெரும் பங்கு வகிப்பது நல்ல சினிமா மட்டுமே எடுக்கத் தெரிந்தவர்கள் என்று பெயரெடுத்த மலையாள சினிமாக்காரர்கள். மலபாருக்கு சினிமா எப்படி அறிமுகமானது? அதன் வரலாறு என்ன? இந்தக் கேள்விகளுக்கு இரண்டு அருமையான படங்களைக் கொடுத்து தாங்கள் நேசிக்கும் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர் கேரளர்கள்.

முதல் படம் - BIOSCOPE. K M மதுசூதனன் என்பவரால் 2008 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம். கேரளாவில் முதன்முதலாக கொட்டகை அமைத்து சினிமாக்காட்டிய "வருன்னி ஜோசப்" என்பவரது வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.

1897 ஆம் ஆண்டே தென்னிந்தியாவிற்கு சினிமா வந்துவிட்டது. Du Pont என்ற ப்ரென்சுக்காரரிடமிருந்து வாங்கிய பயாஸ்கோப்பைக் கொண்டு “சாமிக்கண்ணு வின்சென்ட்” என்பவர் ஊரூராகப் பயணித்து கொட்டகை அமைத்து சினிமா காட்டிக்கொண்டிருந்தார். அப்படி கோழிக்கோட்டில் திரு வின்சென்ட்டின் அரங்கில் சினிமா பார்த்த கேரளரான K W ஜோசப் எனபவர், 1907 ஆம் ஆண்டு வின்சென்ட்டிடமிருந்து வாங்கிய பயாஸ்கோப்பைக் கொண்டு கேரளமெங்கும் சினிமா காட்டத் தொடங்கினார். இவரது கதை தான் “பயாஸ்கோப்”. திரு ஜோசப் அவர்களின் இந்த முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. ஏன் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தியாவில் பரவியிருந்த மூட நம்பிக்கைகள் அப்படி. பயாஸ்கோப் வழியாக திரையில் தெரிவது வெள்ளைக்கார பேய்கள் என்றும் இறந்த பின் ஆவி சென்று திரையில் புகுந்துகொள்கிறது என்றும் அதைப் பார்த்தாலே நாம் பாவம் செய்தவர்கள் ஆவோம் என்று தான் கேரளர்கள் முழுமனதாக நம்பினார்கள். ஆர்வம் இருந்தாலும் மக்கள் படம் பார்க்க பயந்தார்கள்.

பயாஸ்கோப் படத்தில் காட்டப்படும் கதாநாயகனின் பெயர், திவாகரன். அவர் பயாஸ்கோப்பைப் பெறுவதும் Du Pont வாயிலாகத்தான், வின்செண்டிடம் அல்ல. ஏன் இப்படி எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

பெயர் தெரியாத நோயால் மனைவி படுத்த படுக்கையாக இருக்க, புதுச்சேரியில் Du Pont - என்பவரிடமிருந்து வாங்கிக்கொண்டு வந்த manually operated பயாஸ்கோப்பைக் கொண்டு ஊர் ஊராகச் சென்று படம் போட்டுக் காட்டுகிறார் திவாகரன். வீட்டில் மனைவியின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போக, மந்திரவாதியைக் கூட்டிக்கொண்டு வந்து குறி கேட்கின்றனர் திவாகரன் வீட்டில் இருப்பவர்கள். வந்தவன் பயாஸ்கோப் சனி தான் காரணம் என்று கொளுத்திப் போட்டு விட்டுப் போக திவாகரனின் தந்தை, கடல் கடந்து வந்த சாத்தானான அந்த பயாஸ்கோப்பை தலையைச் சுற்றி எரியும்படி கண்டிக்கிறார். தன் மனைவிக்கு சிறு வயதிலிருந்து இருக்கும் நோய்க்கும் நேற்று வந்த பயாஸ்கோப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று திவாகரன் கேட்கும் கேள்விக்கு பதில் இல்லை. சிறிது நாட்களில் மனைவியும் இறக்க, தனது பயாஸ்கோப்பை கடலில் வீசிவிடுகிறார் திவாகரன்.

ஒரு படமாகப் பார்த்தால் நிச்சயம் பொறுமையைச் சோதிக்கும் "அவார்டு" படம்தான் பயாஸ்கோப். இது டாக்குமெண்டரி படமும் அல்ல. ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஓடினாலும் ஒரு நாள் முழுதும் ஓடிய படத்தைப் பார்த்த அலுப்பு ஏற்படுகிறது. படத்தின் கதாப்பாத்திரங்கள் மெதுவாக, மிகவும் மெதுவாகப் பேசுகின்றார்கள். காட்சிகள் நத்தை + ஆமை வேகத்தில் தான் நகர்கிறது. ஒளிப்பதிவு அருமையாக இருந்தாலும் காட்சிகள் மெதுவாக நகர்வதால் அதை குறிப்பிட்டு ரசிக்க முடியவில்லை. இந்தப் படத்தை கடமைக்கு பார்க்க வேண்டி நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும். படத்தில் நான் கண்ட ஒரே ஒரு சிறப்பான விஷயம், உலகின் ஆரம்பகால சலனப்படங்களை (Workers Leaving the Lumière Factory, Raja Harishchandra etc) திவாகரன் தன் பயாஸ்கோப்பில் காட்டுவதாக நமக்குக் காட்டப்படுகிறது. அதைப் பார்ப்பதே ஒரு தனி அனுபவம். விளக்குகள் அணைக்கப்பட்ட பெரிய அரங்கில் வெள்ளைத்திரையில் ஓடும் படங்களைப் பார்க்க இன்றே இவ்வளவு பரவசமாக இருக்கிறதே, ஆரம்ப காலத்தில் எப்படி இருந்திருக்குமென்று பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இந்த பயாஸ்கோப் படத்தில் காட்டப்படும் "ஆடியன்ஸ்" பெரும்பாலும் 'தேமே' என்று தான் உட்கார்ந்து இருக்கிறார்கள். ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள் என்று நாமே நினைத்துக்கொள்ள வேண்டியது தான்.

BIOSCOPE படத்தின் காணொளி - http://www.youtube.com/watch?v=L-cecVI49GU

இரண்டாவது படம் - CELLULOID. கமல் என்பவரால் 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம். “கேரளா சினிமாவின் தந்தை” என்று அழைக்கப்படும் J C டேனியலைப் பற்றிய படம்.

வடக்கே தாதாசாகேப் பால்கேவும் தெற்கே நடராஜ முதலியாரும் படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருக்க, மலாபாரின் முதல் படத்தை எடுத்தே தீருவது என்ற முனைப்பில் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டுச் சென்று பால்கேவை சந்திக்கும் இளைஞன் J C டேனியலின் (ப்ருத்விராஜ்) அறிமுகத்தோடு தொடங்குகிறது படம். பால்கே படம் எடுப்பதபதை (கர்ணன் - விஸ்வாமித்திரர் - வண்டுகடி கதை) அருகிலிருந்து பார்க்கும் டேனியல் பரவசத்துடன் ஊர் திரும்புகிறார். மலையாளத்தின் முதல் படத்தை எடுக்க குறைந்தது ஒரு லட்சமாவது செலவாகும் என்பதைக் கணக்கிட்டு குடும்பச் சொத்தை விற்க முடிவெடுக்கிறார். கணவனின் ஆசைக்கு எந்தத் தடையும் சொல்லாமல் முழு ஆதரவு தருகிறார் ஜேனட் (மம்தா மோகந்தாஸ்). கேமரா வாங்க வேண்டி சென்னையில் நடராஜ முதலியாரை (தலைவாசல் விஜய்) சந்திக்கிறார் டேனியல். அவர் மூலம், அவருக்கு படமெடுக்கும் வெள்ளைக்காரர் உதவியால் கல்கத்தாவிலிருந்து கேமராவை வரவழைக்கிறார். 1926 ஆம் ஆண்டு கேரளாவின் முதல் ஸ்டுடியோவான Travancore National Pictures நிறுவப்படுகிறது.

மலையாள சினிமாவின் தந்தை திரு J C டேனியல்
பால்கே முதல் முதலியார் வரை அனைவரும் சரித்திரக்கதைகளாக எடுத்துக்கொண்டிருக்க, டேனியலுக்கு சிலம்பாட்டத்தைப் பற்றிய படமெடுக்க வேண்டுமென்று ஆசை. ஆனால் சாப்ளினின் “தி கிட்” ஆல் கவரப்பட்டு அது போல் ஒரு சமூகக்கதை ஒன்றை முதலில் எடுக்க முடிவு செய்கிறார். அப்படி அவர் எழுதிய கதை தான் - விகதகுமாரன். சிறு வயதில் பூதநாதன் என்பவனால் கடத்தப்பட்டு சிலோனிற்கு கொண்டு செல்லப்படுகிறான் பணக்கார வீட்டுச் சிறுவனான சந்திரகுமாரன். சந்திரகுமாரனின் அக்கா சரோஜினி. காலம் கடக்கிறது. சிலோனில் பூதநாதன் ஜெயசந்திரன் என்பவரின் உடைமைகள் அனைத்தையும் காளவாடிக்கொண்டு போக, சந்திரகுமாரனைச் சந்திக்கிறான் ஜெயச்சந்திரன். இருவரும் நண்பர்களாகி கேரளம் திரும்புகின்றனர். சரோஜினியின் எதிர்வீட்டில் குடிவரும் ஜெயச்சந்திரன் சரோஜினியை விரும்புகிறான். ஒரு கட்டத்தில் சரோஜினியைக் கடத்த முயலும் பூதநாதனை ஜெயச்சந்திரனும் சந்திரகுமாரனும் தடுக்கின்றனர். முதுகில் இருக்கும் பெரிய மச்சத்தை அடையாளமாகக் கொண்டு தன் தம்பியைக் கண்டுபிடிக்கிறாள் சரோஜினி - இது தான் விகதகுமாரன் (The Lost Child) படத்தின் கதை.

இந்தக் கதையில் தொலைந்து போகும் சிறுவனாக தன் மகனையும், ஜெயச்சந்திரனாக தானும் நடிக்க முடிவு செய்கிறார் டேனியல். பூதநாதனாக கிறிஸ்தவ மேடை நாடகங்களில் நடிக்கும் தனது நண்பர் ஜான்ஸனையும், சந்திரகுமாரனாக தனது உறவினரான சுந்தரராஜன் என்பவரையும் தேர்ந்தெடுக்கிறார். மிச்சமிருப்பது "சரோஜினி" மட்டும் தான். கேரளாவில் சினிமாவில் நடிப்பதற்கு எந்த பெண்ணும் உடன்படமாட்டாள் என்பதால் வட இந்தியாவில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை ஒருவரை பெரும் பொருட்செலவில் அழைத்து வருகிறார். ஆனால் தன் தாயுடன் வந்திறங்கும் நடிகையோ மோட்டார் காரில் தான் பயணம் செய்வோம், அரண்மனையில் தான் தங்குவோம் என்று கண்டிசன்களை அடுக்க, அவர்களைத் திருப்பி அனுப்பி விடுகிறார் டேனியல். அந்த சமயத்தில் தான் மேடை நாடங்களில் நடிக்கும் "ரோஸம்மா" அறிமுகமாகிறார். தினம் ஐந்து ரூபாய் சம்பளம் என்று பேசப்பட்டு, படப்பிடிப்பும் தொடங்குகிறது. பிறப்பால் தலித்தான ரோஸம்மாவிற்கு நாயர் பெண் வேடமிடப்படுகிறது. மற்ற அனைவரையும் விட அருமையாக நடிக்கிறார் கேரளாவின் முதல் கதாநாயகியான ரோஸி. படமும் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்படுகிறது. கேரள மக்களுக்கு திரையிடுக்காட்ட, Capitol Cinema Hall - ல் தடபுடலாக ஏற்பாடும் செய்யப்படுகிறது. அங்குதான் வெடிக்கிறது பிரச்சனை.

மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி P K ரோஸி
படம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் தலித் பெண்னை நாயர் பெண்ணாக நடிக்க வைத்துவிட்டதாகக் கூறி படத்தை திரையிட விடாமல் தடுக்கின்றனர் மேல் ஜாதி மடையர்கள். இன்றைய அசின், நயன்தாரா, அமலா பால்களின் முன்னோடியான ரோஸிக்கு வேசி பட்டம் கட்டித் துரத்துகின்றனர். அவள் தந்தையைத் தாக்கி, வீட்டையும் எரிக்கின்றனர். உயிருக்கு பயந்து இருட்டிற்குள் ஓடி மறையும் ரோஸி இன்று வரை என்ன ஆனாள் என்பதே யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. தனது முதல் படத்தை ஜாதிவெறிக்கு பலி கொடுக்கும் டேனியல், மனமுடைந்து குடும்பத்துடன் ஊரைக்காலி செய்து விட்டு பாளயம்கோட்டை வருகிறார் (இந்த இடத்தில் வரும் “காட்டே காட்டே” என்று ஆரம்பிக்கும் பாடல் அற்புதமாக இருக்கும்). பல் மருத்துவம் பயின்று மருத்துவராகி எல்லாம் நன்றாகப் போய் கொண்டிருக்கும் பொழுது அங்கு மருத்துவம் பார்க்க வரும் பி.யூ.சின்னப்பாவின் (மதன் பாப்) ஆசை வார்த்தையில் மயங்கி மீண்டும் சென்னையில் சினிமா எடுக்கச் சென்று, ஏமாற்றப்பட்டு பெரும் கடனாளியாகத் திரும்பி வருகிறார். தந்தையின் இந்தப் போக்கால் மகன்களும் அவருடன் ஒட்டாமல் இருக்க, பல வருடங்களுக்குப் பிறகு இறக்கும் தருவாயில் இருக்கும் டேனியலைச் சந்திக்கிறார் பத்திரிக்கையாளர் கோபாலகிருஷ்ணன் (ஸ்ரீனிவாசன்).

விகதகுமாரனில் மிச்சமிருக்கும் ஒரே ஒரு புகைப்படம் (இடது)
மலபாரின் முதல் படத்தை எடுத்த டேனியலைப் பற்றி உலகிற்கு சொல்ல பாடாய்ப் படுகிறார் கோபாலகிருஷ்ணன். அந்நேரத்தில் கோவை மார்டன் தியேட்டர்ஸ் T R சுந்தரம் தயாரித்த"பாலன்" (பேசும் படம் - 1938) தான் கேரளத்தின் முதல் சினிமாக அங்கீகாரம் பெற்றிருந்து. நியாயமாகக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் அங்கும் ஜாதி பெயரால் நசுங்கிப் போகிறது. மேலும் டேனியல் தமிழ் பேசும் கிருஸ்தவ குடும்பத்தில் பிறந்த நாடார் என்பதால் அவர் மலையாளியே இல்லை, பிறகெப்படி அவர் எடுத்த படத்தை முதல் கேரள சினிமாவாக எடுத்துக்கொள்ள முடியும்? என்ற வாதம் எழுகிறது. விகதகுமாரனின் பிரிண்ட் இருந்தால் மலையாளிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட நாயர் படம் என்பதை நிரூபிக்கலாம் என்று டேனியலிடம் ஓடுகிறார் கோபாலகிருஷ்ணன். ஆனால் டேனியலிடம் விகதகுமாரன் நினைவாக ஒரே ஒரு புகைப்படமும், நோட்டீஸும் தான் மிஞ்சி இருக்கிறது. தன் கண் முன்னாலேயே தனது இளைய மகனால் விகதகுமாரன் பிலிம் ரோல் எரிக்கப்பட்டுவிட்டதாகக் கூறுகிறார் டேனியல். கேரள அரசின் எந்த உதவியும் இல்லாமல், வறுமையின் பிடியில் 1975 ஆம் ஆண்டு தனது 75 ஆவது வயதில் இறக்கிறார் டேனியல். அவர் இறந்த பிறகு 1992 ஆம் ஆண்டு 'கேரள சினிமாவின் தந்தை' என்று அங்கீகரிக்கப்படுகிறார். விளையாட்டுப் பொருள் என்று நினைத்து தனது தந்தையின் சாதனையை சிறு வயதில் எரித்து விட்டதாக அவரது இளைய மகன் ஹாரிஸ் டேனியல் கதறி அழுவதுடன் முடிகிறது செலுலாய்ட் படம்.

பயாஸ்கோப் போல இந்தப் படம் அவார்டுக்காக எடுக்கப்பட்டதல்ல. சாமானியனும் பார்த்து ரசிக்கும்படியான திரைக்கதையுடன், அருமையான இசை + கலை அமைப்பின் மூலம் மெறுகூட்டப்பட்டு அருமையான நடிகளைக் கொண்டு அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கும் படம். "ஈதானு பிலிம். செலுலாய்ட்டுன்னு சாய்பு பரையானது" - J C டேனியல் தன் மனைவியிடம் பிலிம் ரோலைக் காட்டி சொல்லுவதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சியில் ப்ருத்விராஜின் கண்களில் தெரியும் மின்னல் நமக்குச் சொல்கிறது இந்த அருமையான நடிகனைப் பற்றி. தன் கண்முன்னே தன் மகன் விகதகுமாரன் பிலிம் ரோலை விளையாட்டாக எரிப்பதைப் பார்த்தும் ஒன்றும் செய்யாமல், அமைதியாக, மிகவும் அமைதியாக கண்களில் நீரைத் தேக்கிக்கொண்டு பார்க்கும் இடத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் மனிதர். தமிழில் இவருக்கு பேர் சொல்லும்படியான படங்கள் இன்னும் அமையாதது வருத்தம். அன்பான மனைவியாக அழகாக வந்து போகிறார் மம்தா. கேரளத்தின் முதல் கதாநாயகி ஆகப் போகிறோம் என்ற கனவில் கருமையான தனது முகத்தை வெட்கத்துடன் பார்த்து பூரிப்பதில் ஆரம்பித்து அசத்துகிறார் ரோசியாக நடித்திருக்கும் புதியவரான சாந்தினி. மேக்கப் போட்டு சரோஜினியாக அவரைப் பார்க்கும் போது நமக்கே அவர் மேல் காதல் வருகிறது. அருமையாக வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார்கள். கதாநாயகி என்றாலும் வீட்டிலிருந்து தான் கொண்டு வரும் பழைய சாதத்தை தனியாக உட்கார்ந்து சாப்பிடுகிறார். கொண்டு வந்த பாத்திரத்தை கழுவி வைத்து விட்டு, அப்படியே அங்கு மீதமிருக்கும் பாத்திரத்தையும் தன்னிச்சையாக கழுவத் தொடங்குகிறார். படப்பிடிப்பின் இறுதி நாளில் தான் அடுத்து வாழ்நாளில் காண முடியாத உயர்ரக நாயர் சேலையையும், நகைகளையும் ஆசையாகப் பார்த்து விட்டு வைக்கிறார். விகதகுமாரன் வெளியாகிறது என்ற அறிவிப்பைக் கேட்டு பூரிப்பதிலும், படம் காட்டப்படும் அரங்கிற்குள் செல்லக்கூடாது என்று மேல்ஜாதி வெறியர்கள் பிரச்சனை செய்யும் போது "சினிமாவிலுமா" என்று அவர் மருகும் இடத்திலும் அசத்துகிறார். தான் நடித்த படத்தை ஒரு முறை கூட பார்க்க முடியாமல் உயிருக்குப் பயந்து வேசி பட்டம் சுமந்து இருட்டில் ஓடி மறைகிறார்.

படம் முடிந்தவுடன் ஒவ்வொரு சினிமா ஆர்வலரின் கண்களிலிருந்தும் ஒரு துளி கண்ணீராவது நிச்சயம் வந்து விழும். பல போராட்டங்களுக்குப் தங்களது முதல் சினிமாவை எடுத்து வைத்து விட்டு அதை வெளியிட முடியாமல், வாழ்க்கையைத் தொலைத்த விரக்தியில் இருக்கும் ஒவ்வொரு இயக்குனரும் கதறி அழுவர். அவர்களது கதைக்கும் J C டேனியலின் கதைக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. அன்று ஜாதி, இன்று ஜாதியுடன் அரசியல், பணம் என்று வேறு காராணங்கள். தேசிய விருது வென்ற முதல் மலையாள சினிமா "செம்மீன்" என்ற அறிவிப்பைக் கேட்கும் பொழுது டேனியலின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும் பொழுது தொண்டையை அடைக்கிறது.

CELLULOID படத்தின் காணொளி - http://www.youtube.com/watch?v=i-BZVhZ-wFM
திரு J C டேனியலைப் பற்றிய ஆவணப்படம் - http://www.youtube.com/watch?v=OxmdzrXmMgs
திரு P K ரோஸியைப் பற்றிய ஆவணப்படம் - http://www.youtube.com/watch?v=dnE8Ip37LPw

சரி, தமிழகமே இன்று அடிமையாகிப் போயிருக்கும் சினிமாவை முதன்முதலில் திரையிட்டுக் காட்டிய காட்சியாளர் யார் தெரியுமா? திரு. சாமிக்கண்ணு வின்செண்ட் (18 ஏப்ரல் 1883 - 22 ஏப்ரல் 1942) அவர்கள் தான். 

கோவை கோட்டைமேட்டில் பிறந்து தனது 21 ஆம் வயதில் திருச்சி ரயிஸில் ரூ25க்கு ஊழியராக வேலை செய்து கொண்டிருந்தவர், சினிமா ஆசையால் படாதபாடுபட்டு ரூ2,250 சேர்த்து ஒரு ப்யாஸ்கோப்பை Du Pont என்பவரிடமிருந்து 1905 பிப்ரவரி மாதம் வாங்கியிருக்கிறார். தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு தனது பயாஸ்கோப்பைத் தூக்கிக்கொண்டு லாகூர், மியான்மர் வரை சென்று கொட்டைகை அமைத்துப் படம் காட்டியிருக்கிறார். ஆசியா முழுதும் பயணித்தவர் தென்னிந்தியாவின் (தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா) முதல் திரையரங்கைத் தனது சொந்த ஊரான கோயம்பத்தூரில் 1914 ஆம் ஆண்டு தொடங்கி இருக்கிறார். அந்தத் திரையரங்கின் பெயர் - Variety Hall Talkies.    

தமிழக்திற்கு 5 முதலமைச்சர்களைக் கொடுத்த தமிழ் சினிமாவின் தந்தை யார் என்றே நம்மில் பலருக்குத் தெரியாது. அவர் பெயர் திரு R நடராஜ முதலியார். வேலூரில் 1885 ஆம் ஆண்டு பிறந்த திரு நடராஜ முதலியாரின் தந்தை புகழ் பெற்ற மருத்துவர் எம். ஆர். குருசாமி முதலியார். ஆரம்பத்தில் சென்னை மவுண்ட்ரோட்டில் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்கத் தொடங்கி (1906) பின் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் கார்களை வியாபாரம் (1911) செய்து வந்த நடராஜ முதலியார், சினிமாவால் ஈர்க்கப்பட்டு, Stewart என்பவரிடம் ஒளிப்பதிவு பற்றி தெரிந்து கொண்டு, 1915 ஆம் ஆண்டு திரு S M தர்மலிங்கம் என்பவரது உதவியுடன் India Film Company என்னும் ஸ்டுடியோவை சென்னை மில்லர்ஸ் ரோட்டில் நிறுவியுள்ளார். 1916 ஆம் ஆண்டு “கீசகவதம்” என்ற சலனப்படத்தை எடுத்து தமிழ், ஹிந்தி, ஆங்கிலத்தில் inter-title கொடுத்து வெளியிட்டிருக்கிறார். கீசகவதத்திற்கு கோபாலகிருஷ்ணன் என்ற படத்தை 1915 ஆம் ஆண்டே எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்தப் படம் என்ன ஆனது என்ற தகவல் எங்குமே இல்லை. ரூ 35,000 செலவு செய்யப்பட்டு 35 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட கீசகவதம் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் என்று சகலமும் நடராஜ முதலியார் தான். அடிப்படையில் வியாபாரி என்பதால் கதை - திரைக்கதைக்கு நாடகக் கம்பெனி நடத்தி வந்த தனது நண்பர் ரங்கவடிவேலு என்பவரை உதவிக்கு வைத்துக்கொண்டார். முதலியாரது படங்களின் பிலிம் ப்ராஸசிங் பெங்களூரில் நடந்தது. வேலூரில் சொந்தமாக நடத்தி வந்த ஸ்டுடியோ 1923 ஆம் ஆண்டு தீக்கு இரையாக, அதில் முதலியாரது மகனும் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. அத்துடன் இவரது திரைவாழக்கையும் முடிவிற்கு வந்திருக்கிறது. நடராஜ முதலியாரைப் பற்றிய பேட்டி ஒன்று இயக்குனர் ஸ்ரீதர் நடத்திய “சித்ராலயா” என்ற இதழில் 1970ம் ஆண்டு வெளியாகியிருக்கிறது. பேட்டி எடுக்கச் சென்ற பொழுது தனது 86 ஆவது வயதில் சென்னை அயானாவரத்தில் ஆதரவு ஏதுமின்றி வறுமையின் பிடியில் இருந்திருக்கிறார் நடராஜ முதலியார். திரௌபதி வஸ்திரபரனம் (1917), மைத்திரேயி விஜயம் (1918), லவ குசா (1919), மஹிரவனன் (1919), மார்க்கண்டேயன் (1919), கலிங்க மர்தனம் (1920), ருக்மணி கல்யாணம் (1921) ஆகிய படங்களை எடுத்த முதலியார் 1972 ஆண்டு இறந்தார்.

செலுலாய்ட் படம் "ஜே.சி.டேனியல்" என்னும் பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. "தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக புறக்ககணிக்கப்பட்ட ஒரு மனிதரின் கதை" என்று விளப்படுத்துகிறார்கள். அது முற்றிலும் தவறு. விகதகுமாரன் தோல்விக்கும் முக்கிய காரணம் ஜாதி வெறி மட்டும் தான். இறந்த பிறகாவது ஒரு வழியாக அங்கீகரித்து, "மலையாள சினிமாவின் தந்தை" என்று பெயர் சூட்டி, புத்தகம் வெளியிட்டு, ஆவணப்படங்கள் எடுத்து, இப்பொழுது அவர் நினைவாக ஒரு திரைப்படத்தையும் எடுத்து திரு J C டேனியல் அவர்களின் பெருமையை உலகறியச் செய்துவிட்டார்கள் கேரளர்கள். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நம்மவர்களைப் பற்றிய தகவல்களை உலகிற்குச் சொல்லாமல் யாரோ எடுத்த ஒரு படத்தை தமிழனைப் பற்றிய படம் என்று விளம்பரப்படுத்தி காசு பார்க்கப் பார்க்கிறோம்.

திரு வின்சென்ட் சாமிக்கண்ணு பற்றி நான் கண்ட ஒரே ஆவணப்படம் - http://www.youtube.com/watch?v=WOzduVAcAJEதிரு நடராஜ முதலியாரைப் பற்றிய புத்தகங்களோ, ஆவணப்படங்களோ, திரைப்படங்களோ, குறும்படங்களோ இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் சொல்லுங்கள். தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

தகவல்களுக்கு உதவிய தளங்கள்:

You Might Also Like

15 comments

  1. செலுலாய்ட் - படம் பார்த்த திருப்தி... தமிழில் வருகிறது சந்தோசம்... உங்கள் ஆதங்கம் புரிகிறது... பணம் தவிர வேறு சிந்தனை இல்லை இங்கு உள்ளவர்களுக்கு... இத்தனை தகவல்களை தொகுத்தமைக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் ஸார்...

      Delete
  2. மீண்டும் பதிவு பக்கம் வந்ததிற்கு வாழ்த்துக்கள். இந்த படம் பற்றி நீங்கள் FB இல் சொன்னபோதே ரசித்தேன்.
    ஆனால் தமிழ் சினிமாவில் சினிமா எடுப்பதை மையமாக கொண்டு படம் எடுத்தால் நிச்சயம் தோல்வி தான்.
    இதற்க்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.சமீப படம் பிரகாஷ் ராஜ் தயாரித்த வெள்ளித்திரை .

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதும் உண்மைதான் விஜய். இது மாதிரியான சினிமா சம்பந்தபட்ட படங்கள் வெற்றியடைந்ததாக எனக்கும் நினைவில் இல்லை. ஆனால் சரியான முயற்சிகள் இல்லாதது தான் காரணமோ என்று தோன்றுகிறது. Celluloid போல கொஞ்சம் கிரிப்பிங்கான திரைக்கதை அமைத்து எடுத்தாலே இது மாதிரியான படங்களுக்கு போதுமானது. பார்க்கலாம்...

      Delete
  3. am waiting long fr ur writing .............bt nw u came back.......gud ...am happy.

    ReplyDelete
  4. நான் விரும்பும் தமிழ் சினிமாவின் "வரலாற்றை இந்த பதிவின் முலம் கொஞ்சம் தெரிந்து கொண்டேன் ...தொடர்ந்து சினிமா வரலாற்று தொடரை எழுதுங்க தல...அப்படியே என் தமிழ் சினிமா இன்று தொடரையும் அப்ப அப்ப எழுதுங்க..

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் தொடர்ந்து எழுத முயற்சி பண்றேன் தல :-)

      Delete
  5. CELLULOID படம் கண்டிப்பாய் பார்கிறேன்..தமிழுலும் இது போன்ற முயற்சிகள் வர வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. தமிழில் இது போல ஒரு திறமையான இயக்குனர், திறமையான நடிகர்களைக் கொண்டு இது போன்ற வரலாறுகளைப் படமாக எடுப்பதெல்லாம் கொஞ்சம் சிரமம் தான். ஆனால் நம் ஆட்கள் முயற்சிக்கவே மாட்டார்களே அது தான் பிரச்சனையே. அட படம் கூட எடுக்க வேண்டாம். ஒரு அவார்டாவது கொடுக்கலாம் அல்லவா? மலையாளத்தில் J C Daniel Memorial Award உள்ளது, இந்திய அளவில் பார்த்தால் Dadasaheb Phalke Award உள்ளது. திரு நடராஜ முதலியார் பெயரில் என்ன உள்ளது அவரது பெருமையை உலகிற்குச் சொல்ல?

      Delete
  6. Very good post bro keep in touch..

    ReplyDelete
  7. பாலன் படத்தை எடுத்தவர் சேலம் மாடர்ன் தியேட்டர் அதிபர் t .r .சுந்தரம்.அவர் பிராமணர் அல்ல.இதுபோல் சில பிழைகள் இருந்தாலும் selluloid அற்புதமான வரலாற்று பதிவு.சீனிவாசன் ,பிரிதிவி ,மம்தா,சாந்தினி great .அற்புதமான லட்சியங்களை கொண்ட மனிதர்களின் முடிவு நம்மை பயத்தில்ஆழ்த்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. விஜயன் - தவறான தகவலாக இருந்தால் மன்னிக்கவும். படத்தில் காட்டியதை நான் எழுதினேன். உண்மை விவரம் எனக்குத் தெரியாது. மேலும் 'பாலன்' படத்தைத் தயாரித்தவர் தான் கோவை T R சுந்தரம், இயக்கியவர் பெயர் S. Nottani என்று விக்கிபீடியாவில் உள்ளது. தவறை பதிவில் திருத்தியுள்ளேன். வேறு சில பிழைகளும் இருப்பதாகச் சொல்லியுள்ளீர்கள். என்னவென்று சொன்னால் அவற்றையும் சரிபார்த்து உடனே திருத்தி விடுகிறேன். நன்றி.

      Delete
  8. அருமையான பதிவு...

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...