2013 - விஸ்வரூபம் தொடங்கி எதிர்பார்ப்பிற்குரிய படங்கள்

10:39:00 AM


2013 ஆம் ஆண்டில் எனது முதல் பதிவு அட்டகாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அலெக்ஸ் பாண்டியன், கண்ணா லட்டு தின்ன ஆசையா, சமர் பார்த்தேன். ஒரு பெரிய பதிவும் எழுதினேன். ஆனால் அந்தப் பதிவை எனது முதல் பதிவாகப் போட மனம் வரவில்லை. 2012 ல் சூடு போட்டுக்கொண்ட பிறகும் புத்தியில்லாமல் மீண்டும் அதே பாணிப் படங்களை வெளியிடுகிறார்கள் என்றால் தமிழ் சினிமா ரசிகனை எவ்வளவு மட்டமாக நினைக்கிறார்கள் இன்றைய சினிமாக்காரர்கள் என்பது தெரிகிறது. வந்த மூன்றில் வழக்கம் போல ஸ்டுடியோ கிரீன் பிரம்மாணடமாக வெளியிட்ட அலெக்ஸ் பாண்டியன் “மஹா மட்டம்”, சமர் “பரவாயில்லை”, கண்ணா லட்டு தின்ன ஆசையா “சூப்பர்” என்ற விமர்சனங்ககளைப் பெற்றிருக்கிறது. சரி, இந்த மூன்று படங்களுக்கும் ஒரே டிக்கெட் விலையைக் கொடுத்து தான் பார்த்திருப்பார்கள். இந்த வாரம் வெளியாகும் விஸ்வரூபத்திற்கும் அதே பணத்தை தான் கொடுக்கப் போகிறார்கள். ஆனால் க.ல.தி.ஆ என்ற பவர் ஸ்டார் நடித்த காவியத்திற்கு கிடைத்த பெருந்தன்மையான “சூப்பர் படம்” என்கிற அந்தஸ்த்து விஸ்வரூபத்திற்குக் கிடைக்குமா? தெரியவில்லை. காரணம் இது கமல் படமாயிற்றே. பவர் ஸ்டாருக்கு இருக்கும் மரியாதை கூட கமலுக்கு இல்லை அப்படித்தானே? சரி அது அடுத்த வாரக் கதை. அப்பொழுது பார்த்துக்கொள்வோம். இப்போதைக்கு தமிழ் சினிமாவிற்கு 2013 ஆம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்பதை ஒரு முன்னோட்டம் போல் பார்த்து கணக்கை ஆரம்பித்து வைப்போம்.

விஸ்வரூபம்
நிச்சயமாக இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய படம் விஸ்வரூபம் மட்டும் தான். இந்தப் படத்தைப் பற்றிய முன்னோட்டம் எல்லாம் அனைவருக்கும் தெரிந்ததே. படம் வந்த பிறகு நிச்சயம் ஒரு அனுபவப் பதிவு, முடிந்தால் போஸ்ட்மார்ட்டம் தொடர் எழுத நினைத்திருக்கிறேன். விமர்சனம் எழுத வேண்டிய அவசியமே இருக்கப்போவதில்லை. ஏனென்றால் இப்பொழுதே நண்பர்கள் சிலர் தங்களது கீ-போர்டுகளைத் துடைத்து வைத்து முன்னுரையையும் எழுதி வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பார்ப்போம், கமல் இந்த வசிஷ்டர்கள் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெருகிறாரா, இல்லையா என்று.


பரதேசி
விஸ்வரூபத்திற்கு அடுத்து இந்த ஆண்டு நான் அதிகம் எதிர்பார்க்கும் படம். பாலாவின் படம். பாலா ஸ்டாண்டர்ஸ்டை வைத்துப் பார்த்தால் "அவன்-இவன்" மிகவும் சுமாரான ஒரு படம். ஆனால் விஷாலிடமிருந்து வெளிப்பட்ட நடிப்பில் பாலா டச் இருந்தது. எத்தனையோ படங்கள் விஷால் நடித்து விட்டார். ஆனால் இந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் பாவம் படம் பிளாப் என்பதால் கேவலம் ஒரு விஜய் அவார்டு கூட கிடைக்கவில்லை விஷாலுக்கு. அதை எல்லாம் சரிகட்டி வீடு கட்டி அடிக்கும் “பரதேசி” என்பது டிரைலரிலேயே தெரிகிறது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் ஆங்கிலேயர்களின் தேயிலைத்தோட்டத்திற்கு கொத்தடிமைகளாகப் போகும் கூட்டத்தினரின் கதை. முரளி மகன் அதர்வா நடித்திருக்கிறார். இதே கொத்தடிமை கான்செப்ட்டை வைத்து முரளி நடித்த வாட்டக்குடி இரணியன் படம் “ரா” தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று. பரதேசி அந்தப் படத்தை விடம் பன்மடங்கு பெரிதாக இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. அழகிருந்தும் அடையாளமில்லாமல் போன வேதிகாவிற்கும், திறமையிருந்தும் சரியான படங்கள் அமையாமலிருக்கும் தன்ஷிகாவிற்கும் பரதேசி தான் புதிய விசிட்டிங் கார்டு. பரதேசி படம் பார்த்த பிறகு ஒரு கப் தேநீர் குடிக்கவே நாம் யோசிப்போம் என்கிறார் பாலா. விரும்பிச் சென்று, மனம் கனத்து, திருப்தியாக மனம் விட்டு அழுது வரும் அனுபவத்தை பாலாவால் மட்டுமே கொடுக்க முடியும். நான் கடவுள் பார்த்த பிறகு எனக்குக் கிடைத்த இந்த வாழ்க்கை எவ்வளவு பெரிய வரம் என்பதை நான் மனதார உணர்ந்தேன். பரதேசியை எதிர்கொள்ள உண்மையில் எனக்கு பயமாக இருக்கிறது. போன வருடமே வெளியாக வேண்டியது, என்ன நடந்ததோ அடுத்த மாதம் தான் திரைக்கு வருகிறது.



கடல்
மணிரத்னம் – இந்த ஒரு பெயரைத் தவிர படத்தில் எதிர்பார்க்க ஒன்றுமே இல்லை. இது மற்றுமொரு அலைபாயுதே வாக இருக்கலாம் அல்லது உணர்வுகளை மெலிதாக தாக்கிச் செல்லும் "கன்னத்தில் முத்தமிட்டால்" போலும் இருக்கலாம். ஆனால் டிரைலரைப் பார்த்தால் மீனவர் பிரச்சனையைப் பேசும் படமாகவெல்லாம் தெரியவில்லை. எங்கெல்லாமோ பயணிக்கும் கதையின் கிளைமாக்ஸில் ஹீரோ கடைசியில் சிங்கள குண்டடிபட்டு இறக்கிறார் என்று காட்டினால், எழுதி வைத்துக்கொள்ளுங்கள் படம் பிளாப். மற்றுமொரு முக்கிய விஷயம். வசன உச்சரிப்பு. மணி படங்களில் வசனங்கள் வர வர ஏன் இப்படி கேட்பரைச் நோகடிப்பதாக இருக்கிறது என்று தெரியவில்லை. தமிழ் 'குரு', ‘ராவணன்’ இப்பொழுது ‘கடல்’; கேரக்டர்களை வலுக்கட்டாயமாக 'ஏலே மக்கா என்ன சொல்லுத' என்று நெல்லைத் தமிழ் பேச வைத்து "நேட்டிவிட்டி டச்" கொடுக்க வேண்டும் என்று நினைப்பது தப்பே இல்லை. ஆனால் இது அளவிற்கதிக நேட்டிவிட்டியாகப் படுகிறது. நானும் தூத்துக்குடியில் வளர்ந்தவன் தான். எங்கும் இவ்வளவு இன்டென்சிவ் ஸ்லாங் கேட்டதில்லை (மீனவர்கள் உட்பட). டிரைலரிலேயே பாதி வசனங்கள் புரியவில்லை, படத்தில் எப்படியோ. மணிக்கு இன்றும் சாதாரண தமிழே சரியாக வராது என்கிறார்கள். பிறகு எதற்கு இப்படி? அதிலும் அர்ஜுன், அரவிந்த்சாமி எல்லாம் நெல்லைத் தமிழ் பேசுவது… பார்ப்போம் படத்தில் எப்படி இருக்கிறது என்று. மேலும் தமிழுக்கு வெறும் மூக்கு, முதுகு என்று அறிமுகப்படுத்திவிட்டு தெலுங்கில் போய் கதாநாயகன் - கதாநாயகியை அறிமுகப்படுத்தியதும் கடுப்பேற்றிய ஒரு விஷயம். இத்தனைக்கும் தைழிற்கென்று தனியாகவெல்லாம் எடுக்கவில்லை. வெறுமனே டப் மட்டும் தான் செய்துள்ளார்கள். அதற்கே இவ்வளவு அலப்பறை. தேவையா?


இரண்டாம் உலகம்

செல்வராகவன் – ஆயிரத்தில் ஒருவனுக்கு கிடைக்காத மரியாதை இந்தப் படத்திற்கு கிடைக்க வேண்டும். அதை விட பிரம்மாண்டமான படமாக இந்தப் படம் இருக்க வேண்டும். மற்றபடி படத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, ரிலீஸ் தேதி உட்பட…

ஆதிபகவான்

அமீர் நடித்த “யோகி” பார்த்த பிறகு அமீரின் மீதிருந்த மரியாதை குறைந்தது உண்மைதான். உலகமே கொண்டாடும் உலகப்படமான பருத்திவீரனை எடுத்து விட்டு வேறொரு உலகப் படத்தை அட்டைக்காப்பி அடித்த படத்தில் அவர் எப்படி நடித்தார் என்றே தெரியவில்லை. ஆதிபகவான் அந்த கரையைப் போக்கலாம். பருத்திவீரனுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத களம். ஆனாலும் அமீர் கலக்கியிருப்பார் என்று நம்பலாம். காரணம் அவரது முதல் படம் மௌனம் பேசியதே சிட்டி சப்ஜெக்ட், இரண்டாவது ராம், ஊட்டியில் நடக்கும் கதை. மூன்றாவது பருத்திவீரன். இப்பொழுது மாபியாவை கையில் எடுத்து பாங்காக் சென்றிருக்கிறார். படம் அடுத்த மாதம் (மாவது) வெளியாவதாகத் தெரிகிறது.



தங்க மீன்கள்
“கற்றது தமிழ்” ராம் – இன் இரண்டாவது படம். படத்திலும் இவரே நடித்திருக்கிறார். தந்தைக்கும் மகளுக்குமான பாசப் போராட்டம் இந்தப் படம். ராமிற்கு சினிமா மீதிருக்கும் கிறுக்கிற்கு “கற்றது தமிழ்” படம் ஒன்றே போதும். ஆனால் இந்தப் படத்திலும் அது கொஞ்சம் கூடக் குறையவில்லை என்பதற்கு சான்றாக ஒரு செய்தியைப் படித்தேன். படத்தில் ராமின் மகளாக 5 வயதில் ஒரு குழந்தை நடித்திருக்கிறது. கதை மூன்று வருடங்களுக்கு பின் நகர வேண்டும். வளர்ந்த வேறோரு குழந்தையைப் போட்டு மற்றவர்களைப் போல படமெடுக்காமல் 5 வயதில் நடித்த குழந்தை 8 வயதாகும் வரை காத்திருந்து, அவரை வைத்தே படமெடுத்திருக்கிறார். இது உண்மையாக இருக்குமெனில் ராமின் சினிமா கிறுக்கை நான் தலைவணங்குகிறேன். இந்தப் படதின் தயாரிப்பாளர் கௌதம் மேனன் என்பது படத்தை கவனிக்க வைக்கும் கூடுதல் சிறப்பு. இயக்குனர் ராம் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.

டேவிட்
பிஜாய் நம்பியார் – ஹிந்தி “ஷைத்தான்” படம் கொஞ்சம் குழப்படியான கதை என்றாலும் வித்தியாசமான படம். முக்கியமாக கேமரா கோணாங்கள் இசை, மேக்கிங்கில் அசரடித்த படம். டிசைன் டிசைனாக பிளாப் கொடுத்துக்கொண்டிருக்கும் விக்ரமிற்கும் ஜீவாவிற்கும் இந்தப் படம் ஆறுதல் அளிக்கும் என்று நம்பலாம். வெவ்வேறு காலகட்டங்களில் ஒரே பெயருள்ள இருவருக்குள் நடக்கும் இரு கதைகள் என்கிற ஒன்-லைனே திரைக்கதை எப்படி இருக்குமோ என்று எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. மேலும் ஷைத்தானில் இருந்தது போலான அதீதபோதை தரும் இசையினூடே காட்டப்படும், நமக்குள் இருக்கும் மிருகத்தை மிருதுவாக வருடி வெளிக் கொண்டுவரும், ரசிக்ககூடிய வயலன்ஸ் காட்சிகள் இந்தப் படத்திலும் நிச்சயம் இருக்கும் என்று நம்பலாம்.



ஷங்கர் – பிரம்மாண்ட இயக்குனர் என்பதைத் தாண்டி இவரது பழைய படங்களில் இருந்த அந்த “செய்தி” சமீபத்திய படங்களில் இல்லை. எல்லோரும் காதலைக் கட்டி அழுது கொண்டிருந்த காலத்தில் இவர் காட்டிய காதலன் நிச்சயம் வேறு விதமாக இருந்தது. ரஜினுக்கு எழுதிய “முதல்வன்” எல்லாம் வரலாறு. இந்தியன் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. ஆனால் இவரது சமீபத்திய படங்களில் அப்படி எதுவுமே இல்லை. பிரம்மாண்டம் பிரம்மாண்டம் என்று இவர் சொல்வதெல்லாம் 15ரூபாய்க்கு ஹாலிவுட் பட டிவிடிகளாக பர்மா பஜாரிலேயே காணக்கிடைக்கிறது. தமிழுக்கு சங்கருக்கு பெருமை அவர் சொல்லும் கதை. ஐ எப்படி என்று வந்தால் தான் தெரியும்.

ராதாமோகனின் "கௌரவம்” - தமிழகத்தில் பலகாலமாக நடந்துகொண்டிருந்தாலும் திடீரென்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் கெளரவக் கொலைகளைப் பற்றிய படம். ராதாமோகன் படம் என்பதால் நம்பி போகலாம். சசியின் “555” – பூ படத்திற்குப் பிறகு வெகு நாட்கள் கழித்து வரும் படம். பரத் தனது மொத்த உழைப்பையும் போட்டு நடித்திருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. V.Z.துரையின் “6 மெழுகுவர்த்திகள்” – துரைக்கும் நடித்திருக்கும் ஷியாமிற்கும் முக்கியமான படம். டிரைலர் நம்பிக்கை தருகிறது. பாண்டிராஜின் “கேடி பில்லா கில்லாடி ரங்கா” – முழுக்க முழுக்க காமெடி படமாக எடுக்கப்பட்டிருக்கும் இது நிச்சயம் பாண்டிராஜ் ஏரியா இல்லை என்றாலும் நன்றாக இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது, எனது நண்பர் ஒருவர் இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார் என்பதாலும் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஹரியின் “சிங்கம் II” – வேங்கை அடித்த அடி ஹரிக்கு நினைவில் இருக்கும் என்று நம்பலாம். சுசீந்திரனின் “ஆதலால் காதல் செய்வீர்” – "தமிழக மக்கள் என்னை மன்னிக்க வேண்டும்" என்று பேட்டி கொடுக்க வைத்த படம் ராஜபாட்டை. என்ன நினைப்பில் அவர் இந்தப் படத்தை எடுத்தார் என்றே தெரியவில்லை. வெண்ணிலா கபடிக் குழுவில் இருந்த வெள்ளந்திக் காதல், நான் மகான் அல்ல வில் இருந்த அந்த கியூட் லவ் இரண்டும் இந்த காதல் செய்வீரில் இருக்கும் என்று நம்புவோம். வசந்தின் “மூன்று பேர் மூன்று காதல்” – நல்ல இயக்குனராக இருந்தாலும் இவரது படங்கள் சீரியல்களைப் போல் இருப்பதை மறுக்க முடியாது. அதிவேகமாகப் போய்க்கொண்டிருக்கும் நம் மக்களும் வசந்த் காட்டும் மெல்லிய உணர்வுப்பூர்வமான காட்சிகளை திரும்பிப்பார்க்கக்கூட நேரமில்லை. பாடல்கள் அற்புதமாக இருக்கிறது. படம் எப்படி என்று வந்த பிறகு தான் தெரயும். சமுத்திரகனியின் “நிமிர்ந்து நில்” – அனைவரும் ரசிக்கும் வண்ணம் நல்ல படங்களைக் கொடுக்கும் ஓரளாவிற்கு சென்சிபிளான இயக்குனர் சமுத்திரகனி. நம்பலாம்.

வெங்கட் பிரபுவின் “பிரியாணி”, விஜய் யின் “தலைவா”, விஷ்ணுவர்தனின் “வலை”, சுந்தர்.சி யின் “மதகஜராஜா”, ராஜேஷ்.M இன் "ஆல் இன் ஆல் அழகுராஜா" படங்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. தனிப்பட்ட முறையில் எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை. நன்றாக இருந்தால் கொண்டாடலாம். மட்டமாக இருந்தால் அதில் ஆச்சரியம் ஒன்றும் இருக்கப்போவதில்லை.

மேற் சொன்னதில் ஐந்திற்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்யவிருப்பது சூர்யா-கார்த்தி மாமா கம்பெனி (?) யான ஸ்டுடியோ கிரீன் தான். யார் இவர்கள் என்றே தெரியவில்லை. திடீரென்று தமிழ் சினிமாவின் அசுர சக்தியாக உருவெடுத்து நிற்கிறார்கள்.

இந்தப் படங்கள் தவிர்த்து இரண்டு மிக முக்கியமான படங்கள் இந்த ஆண்டு எனது எதிர்பார்ப்பு லிஸ்டில் இருக்கிறது. இவை இரண்டும் கொஞ்சம் ஸ்பெஷல்.

சூது கவ்வும்
நாளைய இயக்குனர் முதல் சீசனின் டைட்டில் வின்னர் நளனின் முதல் முழுநீளத் திரைப்படம். நளனின் குறும்படங்களைப் பார்த்தவர்களுக்கு தெரியும் இவர் யார் என்று. எந்தப் படம் ஜெஇக்குமோ இல்லையோ இந்தப் படம் நிச்சயம் பட்டையைக் கிளப்பும்.

பண்ணையாரும் பத்மினியும்
அதே நாளைய இயக்குனரின் மற்றுமொரு பேமஸ் குறும்படம் திரைப்படமாகிறது. பிரீமியர் பத்மினி கார் ஒன்றை வைத்திருக்கும் பண்ணையாருக்கும் அந்த ஊர் மக்களுக்கும் இருக்கும் உறவை செம ஜாலியாகச் சொன்ன அருமையான குறும்படம் இது. S U அருண் குமார் இயக்கத்தில் பண்ணையாராக நம்பண்ணையாராக நம் ஜெயப்பிரகாஷும், பத்மினியின் டிரைவராக விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார்கள்.

முக்கியமான இரண்டு படங்களை நான் விட்டுவிட்டதாக நினைக்கலாம். காரணம் உண்டு.

கோச்சடையான் 
வெளியிடப்பட்ட ஸ்டில்களில் இருப்பது தலைவரைப் போலவே தெரியவில்லை. ஒரு சின்ன டிரைலராவது வந்தால் தான் இந்தப் படம் எப்படிப்பட்டது என்பதை யூகிக்கவாவது முடியும். பிறகு தான் எதிர்பார்க்க முடியும். மற்றபடி ரஜினி மகள் சௌதர்யா அஸ்வின் படத்தில் எதிர்பார்க்க ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. பொம்மைப்படம் என்று பெயர் பெற்று ஒன்றுமில்லாமல் போய்விடகூடாது என்கிற வருத்தமும் இருக்கிறது. 

அன்னக்கொடியும் கொடிவீரனும்

பாரதிராஜாவின் கம்பேக். பார்க்கலாம்…

இவர்களைத் தவிர எனது விருப்ப இயக்குனர்களான மிஷ்கின் (இவர் இருக்கும் இடம் தெரியவில்லை) கௌதம் மேனன், வெற்றிமாறன் போன்றவர்கள் அடுத்து என்ன படம் எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

தமிழ் சினிமாவிற்கு விஸ்வரூபம் தொடங்கி மேற்சொன்ன படங்கள் 2012 ஆம் ஆண்டின் சாபத்திலிருந்து மீண்டு ஒரு நல்ல கம்-பேக் ஆக இருக்கும் என்று நம்புவோம். விஸ்வரூபம் படத்தை மட்டும் கமல் படமாகப் பார்க்காமல் மற்றுமொரு தமிழ் படம், புதிய முயற்சி என்று நம்மவர்கள் எதிர்கொண்டாலே படம் இமாலைய வெற்றி பெரும். அடுத்தடுத்து பல கதவுகளைத் திறந்து வைக்கும். அதை விட்டு விட்டு பவர் ஸ்டாருக்கு கொடுக்கும் மரியாதை கூட கமல் ஹாசனுக்கு கொடுக்க முடியாது என்று சொன்னால், சொல்பவர்களைப் பார்த்து “அய்யோ பாவம்…” என்று சொல்வதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது. படம் நன்றாக இல்லை என்றால் ஒட்டுமொத்தமாக கிளம்பி காரி உமிழ்கிறோம் இல்லையா? அது போலவே ஒரு படம் வெற்றி பெற்றாலும் சேர்ந்தே கொண்டாடுவோமே!


You Might Also Like

9 comments

  1. தாங்கள் சொன்ன கருத்தோடு
    முழுமையாக ஒத்துப் போகிறேன்.
    கமலுக்கான ஞாயமான இடத்தை
    அறிவுஜீவிகள் கொடுப்பதில்லை
    என்பது உண்மையே. கற்றோரை கற்றோர்
    கண்டு கொள்வதில்லை என்பது தான் தமிழ்
    பதிவுலகின் நடைமுறை

    ReplyDelete
    Replies
    1. விஸ்வரூபம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது :-( என்று தீருமோ இந்தப் பிரச்சனை!

      Delete
  2. இரண்டாம் உலகம் chaos theory சம்பந்தப் பட்ட கதைன்னும், அனுஷ்கா ஃபிளாஷ்பேக் சீன்களில் அபோகலிப்டோ மாதிரி மேக்கப்பில் வருகிறார் என்றெல்லாம் எங்கேயோ வாசித்தேன்.. உறுதியா தெரியலை.

    நீங்கள் குறிப்பிட்ட படங்கள் தவிர தில்லு முல்லு 2 (மிர்ச்சி சிவாவை ரொம்பவே புடிக்கும்), தனுஷின் மரியான் (ஸ்டில்ஸ் வித்தியாசமா இருக்கு + ஏ.ஆர்.ரஹ்மான்), பிரபுதேவாவின் ஹிந்தி ABCD படத்தின் 'டப்' ஆன "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்" என்பவைக்கும் எதிர்பார்த்திருக்கிறேன்!!

    ReplyDelete
    Replies
    1. "மரியான்" படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டிருந்தால் படம் பற்றிய ஒரு சிறிய அறிமுகமாவது இருக்கும். ஸ்டில்களையும் க்ரூவையும் மட்டும் வைத்து எதையும் முடிவு செய்ய முடியாதல்லவா :-)

      தில்லு முல்லு 2 - மன்னிக்கவும், மூலத்தின் பெருமையை குலைக்கப்போவது உறுதி :-(

      ABCD படத்தை நான் தமிழ் படமாக எடுத்துக்கொள்ளவில்லை :-(

      Delete
  3. Really a good post and a short info about the upcoming movies.
    video about "Kaatrathu Tamil" Ram is missing . Can you give the link ?
    Thanks,
    Pravin C

    ReplyDelete
  4. நிச்சயம் ஆர்வத்தை தூண்டும் திரைப்படங்கள். நன்றி

    ReplyDelete
  5. இன்னும் சில படங்கள் இருக்கு பாஸ்...
    1. ஹை டா
    2. ஈகோ
    3. பொன்மாலைப் பொழுது
    4. 555

    முதல் இரண்டு படங்களின் டிரைலர்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. நான் ரசித்தவை...
    பொறுத்திருந்து பார்க்கலாம் .... :)

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...