விஸ்வரூபமும் பிரச்சனைகளும் - ஒரு அலசல்...

12:29:00 PMபதிவிற்குப் போகும் முன் இந்த வாக்கியங்களைச் சொல்லிவிடுதல் அவசியம் என்று நினைக்கிறேன் - “நான் விஸ்வரூபம் பார்த்துவிட்டேன்! படத்தைப் பார்த்த பிறகு தான் கருத்து சொல்லக் கிளம்பியிருக்கிறேன்”

விஸ்வரூபம் தமிழக்கத்தில் வெளியாகும் வரை படத்தின் கதை, காட்சிகள் பற்றி எழுதுவது சரியாக இருக்காது. என்னைப் பொறுத்த வரை ஒரு திருட்டு விசிடியைக் கொடுத்துப் படம் பார்க்கச் சொல்வதும், படத்தின் மொத்தக் கதையைச் சொல்லிவிட்டு படம் பார்க்க விடுவதும் ஒன்று தான். படம் பார்க்கும் உண்மையான உணர்வை அது கெடுக்கும். எனவே கதையைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. மேலும் படத்தை உண்மையாகவே ரசித்துப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்திருந்தால், தயவு செய்து கதையைச் சொல்லும் அல்லது அந்தக் கதையைப் பற்றிய கருத்துகளை அலசும் எந்த விமர்சனத்தையும் படிக்க வேண்டாம். அது நிச்சயம் படம் பார்க்கும் உங்களது அனுபவத்தைக் கெடுக்கும். ஜூனியர் விகடனில் பிரச்சனையை விளக்குகிறேன் பேர்விழி என்று நீட்டி முழக்கி முழுக்கதையையும் விலாவாரியாக விவரித்திருக்கிறார்கள். படத்தின் முக்கியமான டுவிஸ்ட் ஒன்றைச் சொல்லித்தான் கதையைச் சொல்லவே தொடங்குகிறார்கள். கஷ்டகாலம்...

பெங்களூரில் விஸ்வரூபம் வெளியாகவிருந்த ஊர்வசி தியேட்டர் முகப்பு
பெரிய சிரமம் இல்லாமல், ஒரே ஒரு சிறிய ஏமாற்றத்துடன் மட்டும் விஸ்பரூபத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சிரமம் இல்லை என்று சொன்னதற்குக் காரணம் படத்தை ஓரளவிற்கு சுமாரான தியேட்டரில், பெங்களூரிலேயே பார்த்தேன். முட்டல் மோதல் இல்லாமல், சாகசம் / அட்வென்ச்சர் ஏதுவும் செய்யாமல் (சிவாஜி வெளியான போது நான் கர்நாடகாவில் இருந்தேன், படம் வெளியாகவில்லை, டிரெயின் ஏறி கேரளாவில் படம் பார்த்தேன் - சாகசம்) என்று எதுவும் இல்லாமல் ஆன்-லைனிலேயே முதல் நாள் இரவு புக் செய்து, அடுத்த நாள் மதியம் நிம்மதியாகப் போய் படம் பார்த்து விட்டு வந்தேன். சாப்பிடாமல் கொள்ளாமல் தியேட்டருக்கு போய் வெயிலில் வண்டியை நிறுத்துவதற்கு 20ரூ, ஆறிப்போன 10ரூ கூட மதிப்பு பெறாத முட்டை பப்ஸ் 30ரூ, வெகுவாக தண்ணீர் கலக்கப்பட்ட பெப்ஸி 50ரூ, மொக்க தியேட்டருக்கு டிக்கெட் விலை மட்டும் 180ரூ - என்பதெல்லாம் எந்தப் படம் பார்க்கப் போனாலும் நடப்பது தான் (ஐ மீன் கொடுப்பதுதான்) என்பதால் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. சிறிய ஏமாற்றம் என்னவென்றறால் படத்தை சென்னையில் AURO 3Dயில் நல்ல தியேட்டரில், முதல் நாளே பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். என் (துர்)அதிர்ஷ்ட்டம், இதுவரை நான் ஒதுக்கியே வைத்திருந்த பெங்களூரு INNOVATIVE MULTIPLEXல் படம் பார்த்தேன். சின்ன திரை, ஓக்கே வான சவுண்ட் (சில வசனங்கள் புரியவில்லை), முன்னால் தலை மறைக்கும் சீட்கள் என்று மிகவும் சுமாரான மல்டிபிலெக்ஸ் அது. யாரும் வந்து பிரச்சனை செய்ய வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. திடீரென்று புரொஜெக்டர் சரியில்லை, ஸ்பீக்கர் சரியில்லை என்று தியேட்டர் காரர்களே படத்தைப் பாதியில் நிறுத்துவார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நல்லவேளை நான் படம் பார்த்த பொழுது அப்படி எதுவும் நடக்க வில்லை. நான் படம் பார்த்த பிறகு அந்தத் தியேட்டரையும் சேர்த்து பெங்களூரில் வேறு எங்கும் விஸ்வரூபம் ஓடவில்லை. காவல்துறையின் வேண்டுகோளுக்கு இணங்க (கலவரக்காரர்களுக்கு பயந்து) திரையிடலை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். I’m a lucky guy!

விஸ்வரூபம் படம் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் அதன் பின்னணியில் நடப்பதாக பல்வேறு ஊடகங்கள் நமக்குச் சொல்லும் விஷயங்கள், தனிப்பட்ட முறையில் நான் வெகுநாட்களாகச் சொல்லவேண்டும் என்று நினைத்திருந்தத சில கருத்துக்ககளைத் தான் எழுதத் தொடங்கினேன். நான் மொத்தமாக எழுதித் தள்ளியது அளவிற்கதிக பெரிதாக இருந்ததாலும், நண்பர்கள் சிலர் பதிவு வெளிவதற்கு முன்பே படித்து, சில கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று "சுதந்திர நாடான இந்தியாவில் இப்போதிருக்கும் கருத்து சுதந்திரத்தின் நிலைமையக் கணக்கில் கொண்டு" என் நலன் கருதி, “தடை” போட்டிருப்பதாலும், பதிவை இரண்டு பாகங்களாக வெளியிடுகிறேன். முதல் பாகம் விஸ்வரூபத்தின் பின்னணியில் நடப்பதாக ஊடகங்கள் சொல்வது (கீழே நீங்கள் படிக்கப்போவது). இரண்டாம் பாகம் எனது கருத்துக்கள். தணிக்கை முடிந்து நாளை அல்லது மறுநாள் வெளிவரும் என்று நம்பலாம் :-). சர்ச்சைக்குரிய பாகங்களை நீக்கி வெளியிடலாமா என்று மேல்முறையீடு செய்திருக்கிறேன். தீர்ப்பு தெரியவில்லை. (ஓவராத் தெரியுதோ?). எது எப்படியோ இரண்டையும் பொறுமையாகப் படித்து, உங்களது கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதை தன்மையான முறையில், யார் மனதும் புண்படாத வகையில் பதிவு செய்யவும். விருப்பமில்லாதவர்கள் தாராளமாக இங்கேயே விலகிவிடுங்கள். தயவு செய்து உங்களது "கமல் எதிர்ப்பை" பின்னூட்டத்தில் காட்டி பிரச்சனை செய்யாதீர்கள்.

64 ஆவது குடியரசு தினத்திற்கு ஒரு நாள் முன்பு, மதத்தின் பெயரைக் காரணம் காட்டி, சாதாரண ஒரு திரைப்படத்தை, மிகப்பெரிய கலவரம் ஒன்றை வெடிக்கச் செய்யும் அபாயம் இருப்பதாகக் குற்றம்சாட்டி, நம் அரசு தடை செய்திருக்கிறது. படம் பார்த்தவன் என்ற முறையில் (கெத்து!) நான் அடித்துச் சொல்கிறேன்… ஸாரி, நோ வயலன்ஸ்... சத்தியமாகச் சொல்கிறேன் விஸ்வரூபம் எந்த விதத்திலும் முஸ்லீம் சமூகத்தையோ இஸ்லாமையோ இழிவு படுத்தவில்லை. இது முழுக்க சர்வதேச தீவிரவாத இயக்கமான அல்-கொய்தா சம்பந்தப்பட்ட படம். முஸ்லீம்கள் உட்பட (ரிலீஸிற்கு முன் ஸ்பெஷல் ஷோ பார்த்த தலைவர்களைத் தவிர) படம் பார்த்தவர்கள் அனைவரும் இதைத்தான் சொல்கிறார்கள். படத்தில் காட்டப்படும் தீவிரவாத இயக்கம் தங்களது அடையாளமாக தங்களது மதத்தைதான் கொண்டுள்ளன. பிறகு அவர்களை வேறு எப்படி தான் காட்டுவது? உலக அமைதியை குலைக்கும் சர்வதேசத் தீவிரவாதிகளைப் பற்றிய படத்தைப் பார்துவிட்டு நாம் எப்படி நமது பக்கத்து வீட்டுக்காரர்களையும், உடன் வேலை செய்பவர்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்போம் என்று பிரச்சனையை ஆரம்பித்துள்ள “மதவாதிகள்” கூறுகிறார்கள் என்று எனக்குச் சத்தியாமாகத் தெரியவில்லை. வேண்டுமென்றால் “இந்து மதச் சங்கங்கள்” பிரச்னை செய்யலாம். சில இடங்களில் செம்ம ஓட்டு ஓட்டியிருக்கிறார் கமல். திரைப்படமாக மட்டும் அதைப் பார்த்ததால் எனக்கு சிரிப்பு மட்டுமே வந்தது. “என் சாமிய வாடா நக்கல் பண்ற” என்று கோபமெல்லாம் வரவில்லை.

படத்திற்கு இப்பொழுது ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. காரணம் இது 95 கோடி பட்ஜெட்டில் உருவான பிரம்மாணட பட்ஜெட் படம் என்பதாலோ, கமல் படம் என்பதாலோ அல்ல. படத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த “மதம் சார்ந்த தடை” மட்டும் தான். இந்தக் தடை மட்டும் இல்லையென்றால் படம் இந்த அளவு எதிர்பார்க்கப்பட்டிருக்குமா? அந்தத் தகுதி விஸ்வரூபத்திற்கு உண்டா?

எனது பதிலை பதிவின் இறுதியில் சொல்கிறேன்.

சரி, ஆரம்பத்திலிருந்து என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது விஸ்வரூபத்தைச் சுற்றி? கேட்டதை, படித்ததை, புரிந்துகொண்டதைச் சொல்கிறேன்.

முதலில் செல்வராகவன் இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. அதுவே முதல் முரண். செல்வாவால் இந்தப் படத்தை இயக்கியிருக்கவே முடியாது. சொல்லப்போனால் கமலைத் தவிர வேறு எந்த இயக்குனராலும் இந்த மாதிரி ஒரு சப்ஜெக்ட்டை படமாக, அதுவும் இந்தத் தரத்தில் எடுக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. மேலும் கமல் - செல்வா இருவருமே எதிரெதிர் துருவங்கள். இவர்கள் இணைவதால் என்னைப் பொறுத்த வரை யாருக்கும் எந்த லாபமும் இருக்கப் போவதில்லை.

“தலைவன் இருக்கிறான்” – இது தான் முதலில் வைக்கப்பட்ட பெயர் (அது வேறு கதையா என்று தெரியவில்லை). Hannibal படத்தின் காப்பி என்றார்கள். “விஸ்வரூபம்” என்று பெயரை அறிவித்தார் கமல். "சமஸ்கிருத பெயரை மாற்று" என்று அப்பொழுதே ஆரம்பித்தார்கள். ஆனால் அது எடுபவைல்லை. முதல் காணொளியும் வெளியானது. விஸ்வரூபம் என்று டைட்டில் வருவதைப் பார்த்தே நானெல்லாம் மிரண்டு போனேன்.

ஹீரோயின் தேடல் பல நாட்களாக நடந்தது. யார் யார் பெயரெல்லாமோ அடிபட்டு கடைசியில் கௌதமி சிபாரிசு செய்த "பூஜா குமார்" தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தெலுங்கு தயாரிப்பாளர்களான PVPயுடன் இணைந்து தனது சொந்த நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பில் விஸ்வரூபத்தை ஆரம்பித்தார் கமல். பட்ஜெட் எகிறவே பாதிலேயே கழண்டுகொண்டது PVP. செலவழித்த பணத்தை படம் வந்தவுடன் கொடுத்தால் போதும் என்று PVP சொன்னதாகத் தகவல். தனியாளாக கையில் இருக்கும் காசை எல்லாம் கொட்டி ஒரு வழியாக ரூ95 கோடி பட்ஜெட்டில் விஸ்வரூபத்தை எடுத்து முடித்தார் கமல். படம் முடிந்த நிலையில் திடீரென்று “பிரமிட் சாய்மீரா” தயாரிப்பு நிறுவனம் வேறு ஒரு பெயரில் கமல் மீதும் ராஜ்கமல் நிறுவனத்தின் மீதும் கேஸ் ஒன்றைப் போட்டது. அது - கமல் தனது "மர்மயோகி" படத்திற்காக எங்களுடன் ஒப்பந்தம் போட்டிருந்தார். ஆனால் படமும் எடுக்கப்படவில்லை, பணமும் செட்டில் செய்யப்படவில்லை, ரூ10 கோடி வேண்டும் என்பதாகும். பதிலுக்கு “படம் கைவிடப்பட்டதால் அந்த நிறுவனம் தான் எனக்கு ரூ40 கோடி தர வேண்டியிருக்கிறது” என்று கேஸ் போட்டார் கமல். பெரிய சத்தம் இல்லாததால் கேஸ் என்ன ஆனதென்று தெரியவில்லை. விஸ்வரூபத்தை வெளியிட இடைக்காலத் "தடை" விதிக்க வேண்டும் என்று முதன்முதலில் திருவாய் மலர்ந்தவர்கள் இவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் தமிழ் சினிமாவிற்கு தன் படங்கள் தவிர்த்து கொடுத்த மற்றவை
படத்தின் தரம் தமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நம்பிய கமல் AURO 3D என்னும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். இதெல்லாம் சாத்தியமா? எத்தனை தியேட்டர்களில் இதெல்லாம் இருக்கு. சும்மா வெட்டி பந்தா என்கிற ரீதியில் தான் விமர்சனங்கள் வந்தது. ஆனால் என்னைப் போன்ற சினிமா ஆர்வலர்கள் நிச்சயம் விஸ்வரூபத்தை AURO 3D யில் மட்டுமே பார்ப்பது என்று முடிவு செய்திருந்தோம். விஸ்வரூபத்தில் AURO 3Dயை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய கமல்,வேறு எதையெல்லாம் அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்பதன் பட்டியல் தான் மேலே நீங்கள் பார்க்கும் படம்.

அடுத்து DTH. இது நிச்சயம் தோல்வித் திட்டம் தான். ஆனால் பின்னாட்களில் இது தான் தமிழ் திரையுலகை ஆளப் போகிறது. ஒரு பேச்சுக்கு சொல்கிறேன். இப்பொழுது மட்டும் தாத்தா ஆட்சி நடந்துகொண்டிருந்து, கமல் தன் படத்தின் DTH உரிமையை சன் குழுமத்துடன் சேர்ந்து நடத்தியிருந்தால் எதிர்ப்பு கிளம்பியிருக்குமா? கிளம்ப விட்டிருப்பார்களா? ஊடக அதிகாரத்தைப் பொறுத்த வரை “அவர்கள்” மட்டும் தான். எவ்வளவு முயன்றாலும் அம்மாவால் தன் ஆட்சியில் அந்த இடத்தை அடைய முடியாது. வேண்டுமென்றால் முடக்கி வைக்கலாம். இந்த இடத்தில் வேறு ஒரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். கமல் ஒரு நல்ல நடிகர் என்பதையும் தாண்டி நல்ல வியாபாரியும் கூட. அவர் இயக்கும் படங்கள், தயாரிக்கும் படங்கள், அவர் நடிக்கும் படங்கள், அவர் பிறர் தயாரிப்பில் நடிக்கும் படங்கள் என்பதையெல்லாம் சற்று உற்று கவனித்தால் மனிதரின் சாணாக்கியத்தனம் (அல்லது குள்ளநரித்தனம். எப்படிவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்) தெரியும். உதா: மன்மதன் அம்பு. தசாவதாரம் கொடுத்த இயக்குனரும் நடிகரும் மீண்டும் இணைந்து இப்படி ஒரு படத்தை எடுத்திருப்பார்களா? அதுபோலவே சரியாக விலை போகாத தன் விஸ்வரூபம் படத்தை விலையேற்றத்தான் கமல், இந்த DTHஐ கையில் எடுத்து தியேட்டர்காரர்களைக் குழப்பியிருக்கிறார் கமல் என்கிறார்கள். அப்படியே இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. DTH பூச்சாண்டி தியேட்டர்காரர்களை ஏகத்திற்கும் பயமுறுத்தியது உண்மை. அதனாலேயே விஸ்வரூபத்தின் வியாபார விலைம் ஏறியது. தனது பிறந்த நாளின் போது பெரிய மலர்க்கொத்துடன் அம்மாவை கமல் சந்தித்ததையும், சேட்டிலைட் உரிமத்தை ஜெயா டிவிக்கு கொடுத்ததும், ஜெயா டிவி முத்திரையுடன் மூன்று பெருநகரங்களில் ஆடியோ ரிலீஸை நடத்திக் காட்டியதையும் “தனக்கு சப்போர்ட் இருக்கிறது” என்பதை கமல் தெரிவிப்பதற்காகத்தான் என்கிறார்கள், விவரம் தெரிந்தவர்கள் (ஏதோ புலனாய்வு பத்திரிக்கைக் கட்டுரை மாதிரி, "விவரம் தெரிந்தவர்கள்" "விஷயம் அறிந்தவர்கள்" என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். கேள்விப்பட்ட விஷயத்தை வேறு எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. மன்னிக்கவும்).

சரி, அம்மாவைச் சந்தித்து "ஆசி" வாங்கிய பிறகும் ஏன் கமலுக்கு படத்தை இப்போது வெளியிடுவதில் இவ்வளவு பிரச்சனைகள்? காரணம் “கமல் வாய்” தான் என்கிறார்கள். தமிழரான டில்லி அரசியல் தலைவர் சம்பந்தப்பட்ட ஒரு விழாவிற்கு சென்ற கமல் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் “அடுத்த பிரதமர் ஆவதற்கு எல்லா தகுதியும் உடையவர் இவர்தான்” என்று பேசி வைக்க, பிரச்சனை ஆரம்பமானது. அம்மாவிற்கு பிரதமர் ஆசை இருக்கிறதா என்றெல்லாம் தெரியவில்லை (இருந்தாலும் ஆச்சரியமில்லை) ஆனால் அந்த டெல்லி அமைச்சருக்கும் அம்மாவிற்கும் இடையில் இருக்கும் பிரச்சனை ஊரறிந்த ஒன்று. டெல்லிக்கே சென்று அவரை மாற்ற வேண்டும் என்று சத்தம் போட்டு விட்டு வந்தவர் இவர். நிச்சயம் கமலின் பேச்சு எரிச்சலைக் கொடுத்திருக்கும. சரி, இது ஒன்று மட்டும் தான் பிரச்சனையா?

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கலயாண், விஸ்வரூபம் தடை சமந்தமாக வெளியிட்ட அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “சேட்டிலைட் உரிமத்திற்கான நிழல் யுத்தம் தான் இந்தத் தடை!” - என்னடா இவர் புதிதாக எதையோ சொல்கிறார் என்றால், “விஷயம் இல்லாமல் இல்லை கமல் தனது விஸ்வரூபம் படத்தை ஜெயா டிவிக்கு தான் கொடுப்பதாக இருந்தது, ஆனால் இப்பொழுது அது விஜய் டிவிக்கு கைமாறியுள்ளது” என்கிறார்கள். அம்மா அதனால் செம்ம டென்ஷன். யோசித்துப் பார்க்கையில் ஒருவேளை இது தான் காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இந்து மதத்தின் பெரிய தலைவர் என்று கருதப்பட்ட காஞ்சிபுரத்துக்காரரையே கைது செய்து இழுத்துக்கொண்டு போனவர் அம்மா. தாத்தாவை நடுராத்திரியில் கைது செய்ததையெல்லாம் மறக்கவே முடியாது. இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. அப்படிப் பட்டவருக்கு சினிமாவைக் காரணம் காட்டி போராட்டத்தில் குதித்திருக்கும் இந்த மதவாதிகள் செய்யும் பிரச்சனைகள் எல்லாம் நிச்சயம் ஜுஜுப்பி தான். “கமலுக்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகளுக்கு படத்தைப் போட்டுக்காட்டும் ஐடியாவே இல்லை, அரசு உத்தரவின் பேரில் தான் படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. இல்லையென்றால் தான் எது செய்தாலும் எதிர்ப்பவர்களுக்கு, மதவெறி பூச்சு பூச்சுபவர்களுக்கு தனது “இந்தப்” படத்தை போட்டுக்காட்ட கமல் என்ன முட்டாளா?” என்றொரு வாதம் இருக்கிறது - வாஸ்தவம் தானே? சொந்த செலவில் யாராவது, அதுவும் "கமல்" சூனியம் வைத்துக்கொள்வாரா? வைத்துக்கொள்ள ஆணையிடப் பட்டிருக்கிறார், என்கிறார்கள். மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த ஒரு படத்திற்கு 144 தடை போடப்பட்டு ஊரெல்லாம் போராட்டம், அறிக்கை, முற்றுகை என்று நடந்துகொண்டிருக்கும் இந்நேரத்தில் முதல்வர் எதுவும் பேசாமல் இருப்பதும், நடிகர் சங்கங்கமும் அதில் உள்ல பெரிய தலைகளும் பட்டும் படாமல் இந்த விஷயத்தில் நடந்துகொண்டிருப்பதும், தீர்ப்பு சொல்ல வேண்டிய நீதிபதி "அரசுடன் பேசி சுமூகமாகுங்கள்" என்று சொல்வதெல்லாம் எதற்கு? தன் ஊரில் தன் படத்திற்கு நடப்பதை கவனிக்காமல் கமல் இத்தனை நாள் அமெரிக்காவில் இருந்து கொண்டு “சட்டம் தன் கண்கட்டை அவிழ்க்கும்” என்று வசனப்பேட்டி மட்டும் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் பொழுது வெளியில் நமக்கு தெரிவதை விட (காட்டப்படுவதை விட) உள்ளுக்குள் பல பெரிய பிரச்சனைகள், உரசல்கள் இருப்பது உண்மைதான் என்று தெரிகிறது.

இதன் உச்சகட்டம், இந்தப் பிரச்சனைகளால் கமலுக்கு கொடுக்கப்படவிருந்த பத்மபூஷன் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது என்று வெளிவந்த செய்தி. இது உண்மை என்றால் நிச்சயம் கமல் பாவம் தான்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க மறுபுறம் மிக சுவாரஸ்யமான கதை ஒன்று வலம்வருகிறது. விஸ்வரூபம் திரைக்கதையை விட அதிக சுவாரஸ்யம் உள்ள கதை இது. இது கமலின் ஹாலிவுட் பிரவேசத்தை சுற்றி அமைக்கப்பட்ட கதை. ஹாலிவுட் அல்லது அமெரிக்காவிற்கு விருப்பமான சப்ஜெக்ட் “முஸ்லீம்கள் - தீவிரவாதம்”. ஹாலிவுட் இயக்குனர்களுக்கு இந்த ஏரியா அல்வா சாப்பிடுவது மாதிரி. அமெரிக்க மக்களும் தங்களது நாட்டைத் தாக்கும் தீவிரவாதிகளை ஹீரோக்கள் அழிப்பதை எத்தனை படங்களில் காட்டினாலும் கண்கொட்டாமல் பார்த்து ரசிப்பார்கள். அதனாலேயே, கமல் தனது நீண்ட நாள் ஆசையான ஹாலிவுட் (ஆஸ்கார்) கனவை நிறைவேற்ற, அதாவது அமெரிக்கர்களை மகிழ்விக்கவே இப்படி ஒரு படத்தை / சப்ஜெக்ட்டை எடுத்தார் என்கிறார்கள். இந்தப் படம் நிச்சயம் கமலுக்கு ஹாலிவுட்டில் நுழைய ஒரு அருமமையான விசிட்டிங் கார்டாக அமையும். இத்தனை நாள் இல்லாமல் சரியாக இந்தப் படத்தின் பொழுது மட்டும் திடீரென்று “பேரி ஆஸ்போர்ன்” உள்ளே வந்ததும், கமலின் ஹாலிவுட் பயணம் உறுதிசெய்யப்பட்டதும் எப்படி? “சரி, அப்படியே இது உண்மையாக இருந்தாலும், சொந்தக் காசு 95 கோடியைப் போட்டா ஒருவர் தன்னை ஹாலிவுட்டுடன் இணைத்துக்கொள்வார்?” என்று நாம் கேட்கலாம். அதற்கும் “கொள்வார்” என்றே பதில் தருகிறார்கள். போட்ட காசை எடுப்பதற்குத் தான் “தடை” என்கிற ஆயுதம் இருக்கிறதே. நிச்சயம் படத்தின் “கன்டென்டிற்காக” தமிழகத்தில் பிரச்சனை வரும். படம் முடக்கப்படும். ஏற்கனவே DTH முயற்சியில் “தனியாளாக நின்று போராடியவர்” என்ற பெயர், ஆதரவு இருக்கிறது, இப்பொழுது இந்தத் “தடை”யும் அதில் சேர்ந்தது கொண்டால் பெரிய அளவில் அனுதாப அலை அடிக்கும் (அடித்தது), ஆதரவு பன்மடங்கு பெருகும் (பெருகியிருக்கிறது), எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தும் (உயர்ந்திருக்கிறது). அதை வைத்தே போட்ட காசையும் எடுத்துவிடலாம், ஹாலிவுட்டிற்கும் போய் விடலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். எப்புடி?” என்கிறார்கள். இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. காரணம், சொன்ன தேதியில் படம் வெளியாகாததால், கமலுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. திருட்டு டிவிடி பரபரப்பாக வெளியாகி சக்கை போடுபோட்டுக் கொண்டிருப்பபதும் அதைத் தடுக்க தமிழ் சினிமா ஆர்வலர்களும், கமல் ரசிகர்களும் போராடிக்கொண்டிருப்பதும் உண்மை. மதவாதிகளோ "கட்" எல்லாம் இல்லை, மொத்தமாகவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். இதெல்லாம் என்னைக் கேட்டால் கமலை தெருவில் தான் நிறுத்தும். ஹாலிவுட்டில் அல்ல!

இவையெல்லாம்தான் விஸ்வரூபத்தின் விஸ்வரூப பிரச்னைகளைச் சுற்றிச் சொல்லப்படும் விஷயங்கள். எது எப்படியோ நமக்குச் சொல்லப்படும் ஆயிரம் கதைகளில் எது உண்மை என்பது மட்டும் இன்று வரை தெரியவே இல்லை என்பது மட்டும் நிஜம்.

படம் பற்றி இறுதியில் சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா. இதோ…

எந்தத தடையும் இன்றி சொன்ன தேதியில் வெளிவந்திருந்தால் நிச்சயம் எடுத்துக்கொண்ட களத்திற்காகவும், எடுத்த விதத்திற்காகவும் மிகுந்த பாராட்டுக்களையும், நல்ல லாபத்தையும் நிச்சயம் படம் கொடுத்திருக்கும். தமிழ் சினிமா இதுவரை கண்டிராத ஒரு நல்ல, புதிய never seen before முயற்சி தான், விஸ்வரூபம். “ஹாலிவுட்! ஹாலிவுட்!!” என்கிறார்களே அந்தத் தரத்தில் (பிரம்மாண்டத்தில் மட்டும்) எங்களாலும் படம் எடுக்க முடியும் என்று வென்று காட்டிய ஒரே காரணத்திற்காக கமலுடன் சேர்ந்து நாமும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். இப்போதிருக்கும் தமிழ் சினிமாவின் நிலையில் ஓடும் அத்தனை படங்களையும் தடை செய்துவிட்டு விஸ்வரூபத்தை மட்டும் எல்லாத் திரையரங்குகளிலும் திரையிடலாம். அவ்வளவு தகுதிகள் இருக்கிறது விஸ்வரூபத்திற்கு. ஆனால்…


கமல் இயக்கிய முந்தைய படங்களான “ஹேராம்”, “விருமாண்டி” படங்கள் அல்லது அவர் நடிதத படங்களான “சலங்கை ஒலி”, “நாயகன்”, “தேவர் மகன்”, “மகாநதி”, “அன்பே சிவம்” போன்ற படங்களை வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது “விஸ்வரூபம்” நிச்சயம் கமலின் “மாஸ்டர் பீஸ்” அல்ல. இது கமலின் மற்றுமொரு கமர்ஷியல் படம், அவ்வளவே. மற்றபடி ஹேராம் எடுக்கும் பொழுது நாம் பார்த்த அந்தக் கமல், அவருக்கு இருந்த கட்ஸ், விருமாண்டியில் நாம் பார்த்த கமல், கதையைச் சொன்ன விதத்தில் அவருக்கு இருந்த ஆளுமை - இரண்டும் விஸ்வரூபத்தில் இல்லை. முதல் முயற்சி என்பதால் இதையெல்லாம் நாம் தாராளாமாக ஏற்றுக்கொள்ளலாம். சொந்தக் காசை போட்டு கமல் இவ்வளவு உழைத்திருக்கிறார். தாராளமாக தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். இந்தக் கொண்டாட்டங்கள் தான் நாளைய மாஸ்டர் பீஸ் (மேலே படம் காண்க) களுக்கு அஸ்திவாரம்! 

ஆனால் மதவாதிகளின் வேண்டாத செயல்களால் படம் முடங்கிக்கிடக்கிறது. பல்வேறு வகையில் ஒரு நல்ல படைப்பு தியேட்டரை அடையும் முன்னரே தொடர்ந்து கருக்களைப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறாது. எது எப்படியோ கமலுக்கு விஸ்வரூபத்தால் மிகப்பெரிய நஷ்டம் என்பது மட்டும் உறுதி. நம்மால் ஆன சிறு உதவி படம் தியேட்டரில் வெளியாகும் வரை காத்திருப்பது. இணையத்தில் விஸ்வரூபம் திரைப்படத்தின் தரவிறக்க "லின்க்"குகள் எங்கேனும் தென்பட்டால் உடனே maiam360degree@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அந்த  அந்த "லின்க்"கை  அனுப்பிவையுங்கள். இது தமிழ் சினிமாவிற்கு, கமலுக்கு நாம் செய்யும் பேருதவி.

என்னைக் கேட்டால் கமல் இனி தமிழ் படமே எடுக்க வேண்டாம், ஹாலிவுட்டிற்கே போய்விடட்டும். திறமைக்காரராக இருந்தால் நிச்சயம் உலகப் புகழ் பெருவார். அல்லது சிலர் சொல்வது போல் கமல் “போலி” என்றால் சுவற்றில் அடித்த பந்து போல் திரும்பி வருவார். எதுவாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்மை தான்.

“தடை சரியா?" என்பதைப் பற்றியும் மேலும் எனது கருத்துக்கள் சிலவும் விரைவில்…

You Might Also Like

14 comments

 1. நன்கு பொறுமையாக அலசி ஆராய்ந்து எழுது உள்ளீர்கள். உண்மையில் தேவையின்றி ஒரு பிரச்சினையை உருவாக்கி அதை பெருதுபடுத்தி உள்ளனர். ஒருவேளை படம் எப்போதும் போல வந்திருந்தால் கூட ஒன்றும் நடந்திருக்காது. ஆனால் இப்போது வெளியிட்டால், மத இயக்கத்தினர் உடனே படத்தை தடை செய்ய வேண்டும் என்று பேரணி, ஊர்வலங்கள் நடத்துவர். சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக சீர்குலையும். படம் நிரந்தரமாக தடை செய்யப்படும்.

  நாட்டில் இதுவரை படங்களால் இந்து முஸ்லிம் ஒற்றுமையோ, சாதிப் பிரச்சினையோ ஏற்பட்டதில்லை. குண்டுவெடிப்பு, வேறு பல பிரசினைகளின்போதுதான் கலவரமே ஏற்பட்டது. மக்கள் யாரும் படங்களைப் பார்த்து அப்படியே நம்புவதற்கு கமல் ஒன்றும் எம்.ஜி.ஆர். அல்ல. இப்போது கமல் ரசிகர்கள் அனைவரும் தேவையின்றி பாரம்பரிய முஸ்லிம்களை ஒரு எதிரி போல பாவிப்பர்.

  தேர்தலின்போது கமலுக்கு 200 கோடியும், மருதநாயகம் படத்தை முடிக்க பணமும் தருவதாக ஒரு அரசியல் கட்சி சொன்னதாக ஒரு வதந்தி வந்தது. இப்போது அதை ஒருவேளை ஓசியிலேயே நடத்தி விடுவார்களோ?

  ReplyDelete
  Replies
  1. 100% உங்களது கருத்துக்களோடு நான் ஒத்துப்போகிறேன். ஒரு திரைப்படம் ஒருவனை மாற்ற வாய்ப்பே இல்லை. போக, ஜாதிப்பிரச்சனைகள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகிறது. நம்மையே அறியாமல் நாம் அதற்கு பலியாவது தான் கொடுமை...

   Delete
  2. இதைப் பற்றி நானும் ஒரு பதிவிட்டிருக்கிறேன். தங்களது கருத்தை எதிர் பார்க்கிறேன்.

   http://www.sivigai.blogspot.in/2013/01/blog-post.html

   Delete
 2. படத்தில் காட்டப்படும் தீவிரவாத இயக்கம் தங்களது அடையாளமாக தங்களது மதத்தைதான் கொண்டுள்ளன. பிறகு அவர்களை வேறு எப்படி தான் காட்டுவது?
  இதற்க்கு புதிய தலைமுறை சேனலில் ஒரு விவாதம் நடந்தது. இந்த கேள்வியை படத்தைஎதிர்க்கும்ஒரு முஸ்லிம் தலைவரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் "கமலை யார் ஆப்கானில் நடப்பதை எல்லாம் படமாக எடுக்க சொன்னது.இங்கேயே எடுக்க வேண்டிய கதைகள் நிறைய இருக்கே .அதை எல்லாம் விட்டு அதை ஏன் இவர் எடுக்க வேண்டும்.

  என்ன கொடுமை பாருங்கள்.

  பிரச்சனையின் கமல் பக்க தரப்பு விஷயங்களை மட்டுமே கூறி இருக்கிறீர்கள்.எதிர் தரப்பு பற்றி விளக்கமாக சொல்லி இருக்கலாம்.இருந்தாலும் நல்ல அலசல்.

  ReplyDelete
  Replies
  1. முஸ்லீம் தலைவர்களாது வாதம் ஆரம்பத்திலிருந்தே அர்த்தமற்றதாக இருக்கிறது. இவர் பரவாயில்லை இன்னொருவர் "படத்தில் பாடல் இல்லை,சண்டைக்காட்சிகள் இல்லை, காதல் காட்சிகள் இல்லை, இது தமிழ் படமே இல்லை" என்றெல்லாம் பேட்டி கொடுத்திருக்கிறார். விட்டால் "தமிழில் இனி படமே வரக்கூடாது" என்று கூட யாராவது சொல்வார்கள் போல...

   கமல் தரப்பு விவாதத்தை மட்டும் சொல்லக் காரணம் தோற்றுக்கொண்டிருப்பது கமல் தான். கமல் தோற்றால் தமிழ் சினிமா தோற்கும். எனது முழு கருத்துக்களை எனது அடுத்த பதிவில் சொல்ல இருக்கிறேன்...

   Delete
 3. aiya oru film ku ivlo detaila solringa konjam social issue pathi write panna nalla irukum (note:if i am try to write no one will not read my blog so that i ask you i write small as www.manmohansin.blogspot.com )

  ReplyDelete
  Replies
  1. According to me... The things happening around Viswaroopam is also a social issue. Some people are poring oil to Communal Terrorism in the name of a Religion. This is a social issue. So as a blogger I thought I should be explaining things to my readers and that's what I did.

   Blogging is just my hobby and have no clue how many are reading my blog. Of course I don't care how many people read your blog too... If it's good enough to attract more people, you will be noticed. Try to link your to blog to Tamil Blogging Bookmark sites like Tamilmanam etc...

   தமிழ்ப் பதிவிற்கு கமெண்ட் செய்யும் போது, முடிந்தால் தமிழில் எழுதுங்கள். அல்லது ஆங்கிலஹ்ட்திலேயே சொல்லவந்ததை சொல்லிவிடுங்கள். இப்படி தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது பல சமயம் புரிவதில்லை - என் கருத்து. அவ்வளவு தான். பிறகு உங்கள் இஷ்டம்...

   Delete
 4. agriculture problem ,farmer problem,water problem ,special economic zone problem ippadi enaku therinju neriya problem iruku but nan write panna yarum padika vara matanga sorry boss if u angry (i write as www.manmohansin,blogspot.com ) pls just read delete my blogspot id sir thanking you

  ReplyDelete
 5. உங்களுடைய திரையுலக ஞானம் என்னை வியப்படைய செய்கிறது . :-) அருமை அருமை !!!

  நன்றாக அலசப்பட்ட பதிவாக இருக்கிறது. ஆனால் கமல் தரப்பு வாதம் மட்டுமே எழுதி இருக்கீர்கள் . படத்தை எதிர்க்கும் இஸ்லாமிய மத தலைவர்களின் வாதத்தை பற்றியும் உங்களது அடுத்த பதிவில் கூறுவீர்கள் என்று நம்புகிறேன்.

  ஓருவருக்கு தெரிந்த, ஒருவருக்கு பிடித்தமானதை பற்றி எழுதுவதே நல்லது. அதைத்தான் நீங்களும் செய்து இருக்கீர்கள் . கூடுதலாக இந்த பதிவில், சமூக அக்கறையுடன், அதில் இருக்கும் பிரச்சனைகளை பற்றியும் நீங்கள் எழுதி இருக்கீர்கள் என்பதை நான் மிகவும் ஆமோதிக்கிறேன்.

  [என் தமிழில் பிழை இருந்தால் மன்னிக்கவும். இதுவே நான் இணையதளத்தில் எழுதும் முதல் கமெண்ட். இதுவே 25 நிமிடம் எடுத்தது :( ]

  ReplyDelete
  Replies
  1. கமலை, விஸ்வரூபத்தை எதிர்க்கும் இஸ்லாமியத் தலைவர்களைப் பற்றிச் சொல்ல எதுவுமே இல்லை. அர்த்தமற்ற வாதம் அவர்களுடையது. முஸ்லீம்களின் உண்மையான பிரச்சனை விஸ்வரூபம் அல்ல. எனக்குத் தெரிந்ததை அடுத்த பதிவில் எழுதுகிறேன் :-)

   கருத்துக்களில் பிழையேயில்லை, தமிழில் முதல் முயற்சி என்பதால் மன்னிக்ககூடிய பிழைகள் தான் தெரிகிறது... வருகைக்கும் நன்றி :-)

   Delete
 6. நீங்கள் கூறியதில் ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை. அது கமல் ஒரு மிகச்சிறந்த வியாபாரி என்பது. DTH விவகாரத்தில் அது நன்று புலப்பட்டது. என்னதான் கமல் 95 கோடி போட்டு இந்த படத்தை எடுத்து இருந்தாலும் கமல் பட வியாபாரம் என்பது அதிகபட்சமாக 40 கோடிதான். இதை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டுதான் கமல் நேரடியாக படத்தை வெளியிட முயற்சி செய்தார். அனாலும் அவருக்கு போதுமான அளவு தியேட்டர் கிடகைவில்லை (percentage காரணாமாக). அதனால்தான் DTH ஐ கையில் எடுத்தார். தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஒரு பயத்தை ஏற்படதுவே அவர் இதை கையில் எடுத்ததாக எனக்கு படுகிறது. சில பல தள்ளு முல்லுகளுக்கு பிறகு 500 தியேட்டர் கிடைத்தது அவரின் வியாபார உத்திக்கு கிடைத்த வெற்றி தான்.

  ReplyDelete
 7. Comment continued. Typing in English as I find typing in Tamil really takes a lot of time. I think the 15 days ban on Vishwaroopam was just a time frame the Government gave to Kamal to sort out the issue with Muslim groups. But, Kamal knew that in that stage, Muslim groups would have wanted at least 1 hour of the movie to be chopped out. So, only all these press meets and crying that he might lose all his money if the movie doesn't release in time, he is leaving for a Secular country, blah, blah, blah and all. Do u think it is not possible for Kamal to get a a few more days exemption from his financier. But now, the tide has changed in Kamal's favor and with people sympathizing him, he has the upper hand and I think he can now negotiate better and can have only 5-10 mins chopped off. Also, the expectation for the movie is greater, the movie will definitely do better than if it had released without any problem. Yes, Kamal has a very good business mind.

  ReplyDelete
 8. hello sir,
  I reading your blog for last six months. taking concepts and writing depth in that concepts in superb.../. plz post the review for viswaroopam. expecting your posts soon.

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...