துப்பாக்கி - போஸ்ட்மாட்டம் - பாகம் 02

9:39:00 AM


*** தலைவனுக்கு இன்று பிறந்தநாள். கனவு நிறைவேறும் நாளை எதிர்நோக்கி, லட்சக்கணக்கான தமிழர்களுள் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்! ***

துப்பாக்கி

போன பதிவில் விட்ட இடத்திலிருந்து தொடர்வதற்கு முன் ஒரு குட்டி செய்தி - "துப்பாக்கியின் வசூல் 100 கோடியைத் தாண்டியிருக்கிறது"


எந்திரனுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது துப்பாக்கி. எந்திரனைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த இடத்தில் நண்பர், சுரேஷ் கண்ணன் (பிச்சைப் பாத்திரம்) அவர்கள் எழுதிய - வெற்றுத் துப்பாக்கி பதிவை படிக்க வேண்டும். அவரது பதிவு இப்படி ஆரம்பிக்கிறது – “நம்மை நினைத்தால் பாவமாக இருக்கிறது…” – உண்மைதான்.

(டிஸ்கி: நான் இந்த பதிவிற்காக எழுதி வைத்திருந்த சில விஷயங்களை ஏற்கனவே நண்பர் தனது பதிவில் குறிப்பிட்டு விட்டதால், அவற்றை இங்கிருந்து நீக்கி விட்டேன். திரும்பத் திரும்பச் சொல்வதால் என்ன ஆகிவிடப்போகிறது?)

. . . 

கிளைமாக்ஸில் வில்லன், விஜய் யையே பல இடங்களில் பாம் வைக்க வைத்து, புத்திசாலித்தனமாக காய் நகர்த்தி, டபுள் ஏஜெண்ட் முத்திரை குத்தி சிக்க வைக்கிறான். “அட சூப்பர், இது செம புதுசா இருக்கே, இனிமே தான் கச்சேரியே” என்று நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். ஆனால் ஏற்கனவே 2 மணிநேரத்திற்கு மேல் ஓடிவிட்டதால், படம் அடுத்த 10 நிமிடத்திற்குள் முடிந்து விட்டது. அடப் பாவிகளா. ஜஸ்ட் லைக் தட் 12 தீவிரவாதிகளை ஒரே நேரத்தில் கொன்று மும்பையைக் காப்பாற்றிய ராணுவ வீரன், அதுவும் ஒரு டிபென்ஸ் இன்டலிஜெண்ட் ஏஜெண்ட், டபுள் ஏஜெண்ட் என்று முத்திரை குத்தப்பட்டால் என்ன ஆகும்? அருமையான ஆக்ஷன் த்ரில்லராக பட்டையைக் கிளப்பி இருக்க வேண்டிய படம். “என்ன அடிச்சே சாவடிக்கனும்னு” என்று விஜய் சொன்ன உடனே தெரிந்து விடுகிறது, வில்லனைக் கொன்று எஸ்கேப் ஆகி, சுபம் போட்டுவிடுவார்கள் என்று. அதுபோலவே விஜய்யும் தானே தனது உடைந்த கையை திருகி சரி செய்து (கில்லி சென்டிமெண்ட்?), ஹிந்தி பேசி வில்லனைக் கொல்கிறார். 

லீவில் ஊருக்கு வந்து, போகிற போக்கில் ஒரு தீவிரவாத செயலைத் தடுத்தவர், இப்பொழுது நாடே தேடும் தீவிரவாதி ஆனால், அவர் இதுவரை சம்பாதித்த பேர், புகழ், ராணுவ வீரன் என்னும் கௌரவம் அனைத்தும் ஒரு நிமிடத்தில் காணாமல் போகும். இது தான் வில்லன் பிளான். இடைவேளைக்கு அடுத்த காட்சியாக இதை வைத்து விட்டு, தொடர்ச்சியை இரண்டாம் பாகமாக வைத்திருந்தால் படம் பட்டையைக் கிளப்பியிருக்கும். ஆனால் என்ன செய்வது. அவ்வளவு புத்திசாலித்தனமான படங்கள் எல்லாம் தமிழில் வரும் நிலை தற்போது இல்லை. வந்தாலும் ஓடாது.

மற்றுமொரு விஷயம். போரில் தங்களது கை கால்களை இழந்து, நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் Unsung Heroes களைக் காட்டியது நிச்சயம் “ஆஹா” சொல்ல வைக்கும் விஷயம் தான். ஆனால் அவர்களை என்னமோ தெரியவில்லை, வெறும் “Bomb” செய்ய மட்டுமே பயன்படுத்துகிறார் விஜய். முதல் பாதியில் இவர் சொன்னவுடன் 12 பேரைக் சுட்டுக்கொன்றுவிட்டு பின் காணாமல் போனவர்களையே இப்பொழுது Bomb செய்து தரவும் சொல்லியிருந்தால் ஒரு continuity யாவது படத்தில் இருந்திருக்கும். ஆனால் புதுப்புது கேரக்டர்களை காட்டிக்கொண்டே போகிறார் இயக்குனர். நாட்டைக் காப்பதில் தங்களது வாழக்கையை இழந்தவர்களை ஒரு இடத்திலாவது காட்ட வேண்டும் என்று இயக்குனர் நினைத்தது நல்ல எண்ணம் தான்; ஆனால் அவர்களுடன் பேசும் இடத்தில் ஹீரோ, தன் உயிரை தியாகம் செய்து மும்பையைக் காப்பாற்றப் போவதாக வசனம் பேசுகிறார். ஆனால் லாஸ்ட் மினிட் ப்ளான் சேஞ்சால் வில்லனிடம் சண்டை மட்டும் போட்டு விட்டு தப்பித்து வந்து விடுகிறார். பொருத்தப்பட்ட பாம் வெடிக்கிறது. இதற்கு எதற்கு “நான் தியாகம் செய்யப் போறேன்” வசனம் எல்லாம்? “நான் அவர்களது சாம்ராஜ்யத்தையே அழித்துவிட்டு திரும்புவேன்” என்று மட்டும் கெத்தாக சபதமேற்பது போல் சொல்லிவிட்டு வரலாமே? விஜய்க்கு இருக்கும் மாஸிற்கும் அவர் முதல் பாதியில் செய்த அசாதாரண செயலுக்கும் இந்த வசனமும் ‘கெத்’ ஆகத்தானே இருக்கும்?

உயிர் போகாமல் கை கால்களை மட்டும் இழந்து கேட்பார் இல்லாமல், தாங்கள் செய்த தியாகங்கள் எதுவுமே வெளியில் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களிடம் போய் “நான் தியாகியாகப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு கைத்தட்டல் வாங்குகிறார் விஜய். அது தவறு என்று எனக்குப் பட்டது. அதற்கு பதில் இவர்களது உதவியுடன் டபுள் ஏஜெண்ட் முத்திரையிலிருந்து ஹீரோ தப்பித்து, நாட்டை தீவிரவாதிகளிடமிருந்து காக்கிறார் என்று கதை அமைத்திருக்கலாம். (என்னடா இவன் திரைக்கதையில் எல்லாம் ஓவரா கோளாறு சொல்றானேனு நினைக்க வேண்டாம். சும்மா ஒரு ஆர்வக் கோளாறு. அவ்வளவு தான் :-)

வசனங்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். படத்திலிருக்கும் பல ஓட்டைகளை திறமையாக அடைப்பதே வசனங்கள் தான். “14ஆம் நாள் அவன் தம்பி வந்துட்டான்டா மிலிட்டரிக்கு” என்று விஜய் சொல்லும் இடத்தில் எத்தனை ரசிகர்கள் மிலிட்டரியில் சேர வேண்டும் என்று சபதமேற்றிருப்பார்களோ, தெரியவில்லை. “உயிர எடுக்கிற அவனே யோசிக்காத போது, காப்பாத்த நினைக்கும் நாம் ஏன் யோசிக்கனும்”, “மாட்டிக்கிட்டு இருக்குறவங்களல் என் தங்கச்சியும் தான் இருக்கா”, “I’m waiting” போன்ற பன்ச் வசனங்களும் சரி, “அப்போ நான் வர்றது உனக்குப் புடிக்கலனு மறைமுகமா சொல்றியா” என்று விஜய் கேட்க “இதைவிட யாராலயும் நேரடியா சொல்ல முடியாது”, “ஐட்டத்திற்கே உன்ன புடிக்கல” போன்ற காமெடி வசனங்கள் உட்பட அனைத்தும் நன்றாக இருந்தது. “I’m waiting” வசனத்திற்கு முன் வில்லன் சொல்லும் வசனம் Takenதனமாக இருந்தாலும், சொல்லப்படும் இடம் அருமையானது என்பதாலும், இன்ட்ரவல் பிளாக் என்பதாலும் அப்ளாஸ் அள்ளுகிறது.


சந்தோஷ் சிவன் டச் சில இடங்களில் மட்டுமே தெரிகிறது. தங்கையை சிங்கிள் ஆளாக காப்பாற்றும் இடத்தில் துப்பாக்கி கக்கிய புகைக்குள்ளிருந்து விஜய் தெரியும் சீன் அல்டிமேட். இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் எதற்கு என்று எனக்கு இப்பொழுதும் புரியவில்லை.

இசை - ஹாரிஸ். யப்பா சாமீமீமீ வில்லனைக் காட்டும் போதெல்லாம் ஆதவன்’ படத்தில் சரோஜாதேவி கத்துவதாக வடிவேலு கத்திக்காட்டுவாரேஅய்ய்ய்ய்யோஓஓஓஎன்று ஒரு அலறல், அதை விட கர்ணகொடூரமாக ஒரு பின்னணி இசை. முன்பெல்லாம் தேவாலயங்களில் கேட்கும் இசை போலிருந்த ஹாரிஸின் பின்னணி இசை, இப்பொழுது கோவில்களுக்கு தாவியிருக்கிறது. மணியோசையும், ஓம் ரீங்காரம் போன்ற சவுண்டுகளுமே மாற்றானிலும் சரி, துப்பாக்கியிலும் சரி ஹீரோ யோசிக்கும் சீன்களின் பின்னணியில் போடப்பட்டுள்ளது. இவரது பின்னணி இசையில் Rubix Cubeஐ வேறு எதைப் பற்றியோ யோசித்துக்கொண்டே (கண்ணால் பார்க்காமலேயே) சால்வ் செய்து விட்டு பின்னர் அப்படியே தூங்கியும் விடுகிறார் விஜய். வாவ்… ஹாரி, வெரி ஸாரி, நீங்க வீட்ட காலி பண்ற நேரம் வந்துருச்சு!  

திரையில் நாம் பார்த்த படத்தை பற்றி முடிந்த வரை சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். இனி திரையில் நாம் பார்க்காத படத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

முதலில் விஜய் யை வைத்து ஒரு படத்தைத் தயாரிப்பதாய் இருந்தவர் விஜய் அப்பா எஸ்..சி. ஆனால் முருகதாஸ் கேட்ட சம்பளம் தயாரிப்பாளர் சங்க தலைவரான எஸ்..சி க்கே அதிர்ச்சியைக் கொடுக்கும்படி இருந்திருக்கிறது. அதுபோக விஜய் யும் தன் பங்கிற்கு அப்பாவை வெறுப்பேற்றி வைக்க, தயாரிப்பு தாணுவின் கைக்குப் போனது. “நான் விஜய் அப்பா, நான் விஜய் அப்பாஎன்று மார்தட்டி தன் மகனை சான்றோன் என்று கேட்க வைத்து மகிழ்ந்த தந்தை எஸ்..சி, பப்ளிக்காகவிஜய் இப்படி பண்ணிட்டார்என்று மெல்லவும் முடியோயாமல் துப்பவும் முடியாமல் துப்பாக்கி ஆடியோ ரிலீஸில் பேசியதன் பின்னணி இதுதான். தயாரிப்பை ஏற்ற தாணு போட்ட ஒரே கண்டிஷன், “பட்ஜெட் லிமிட்டைத் தாண்டினால் முருகதாஸ் சம்பளத்திலிருந்து தான் அது சரிசெய்யப்படும்என்பது தான். படத்தின் மொத்த பட்ஜெட் 70 கோடி. இதில் விஜய் சம்பளம் எவ்வளவு, முருகதாஸ் சம்பளம் எவ்வளவு, சந்தோஷ் சிவன் சம்பளம் எவ்வளவு, காஜல் அகர்வால் சம்பளம் எவ்வளவு என்பதையெல்லாம் கணக்கிட்டு பார்த்தால் மொத்தமாக படத்திற்காக செலவு செய்யப்பட்ட பட்ஜெட் எவ்வளவு என்பது தெரிந்து விடும். “பெரிய பட்ஜெட் படம்என்று விளம்பரம் செய்யப்பட்டு, மொத்த மொத்தமாக ரிலீஸ் செய்யப்படப்படும் படங்கள் எல்லாமே உண்மையில்பெரியநடிகர்-நடிகை நடிக்கும் படம், “பெரியஇயக்குனர் இயக்கும் படம் தானே தவிர உண்மையில் அவை ரசிகர்களாகிய நாம் எதிர்பார்க்கும் பிரம்மாண்ட, “பெரிய” படங்கள் அல்ல என்பது தியேட்டரில் பார்க்கும்போது தெரிந்து விடுகிறது. துப்பாக்கியும் அப்படித்தான். படத்தின் பட்ஜெட் திரையில் தெரியவில்லை. முக்கியமாக கிராபிக்ஸ் காட்சிகள் படு மட்டம். ஆனால் முதல் முறையாக தயாரிப்பாளர் தாணு ஒரு உஷார் பக்கிரி வேலையைச் செய்திருக்கிறார். எந்த ரிஸ்க்கையும் தாங்கிக்கொள்ளும் மனநிலை அவருக்கு இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் என்னவோ வந்த வரை லாபம் என்று ஜெமினி பிலிம்ஸிற்கு படத்தை விற்று விட்டு விலகிக்கொண்டார் என்று நினைக்கிறேன். ஆனால் இப்பொழுது ஜெமினி அள்ளிக்கொண்டிருக்கிறது கலெக்ஷனை என்பது வேறு விஷயம்.

விஜய்க்கு இருக்கும் மாஸிற்கு எந்த இயக்குனராலும் அவருக்கு கதை எழுத முடியும். ஆனால் அதை விஜய் அப்படியே இயக்க விடவேண்டும் என்பது தான் பிரச்சனையே. “முருகதாஸையும் வெறுப்பேற்றினார் விஜய்என்னும் செய்தி பல நாட்களாக அடிபட்டுக்கொண்டிருந்தது. குமுதம் நடுபக்கத்தில் துப்பாக்கி விளம்பரம் என்றால், முதல் பக்கத்தில் “யாரைச் சுடப்போகுது துப்பாக்கி” என்று செய்தி! கௌதம் மேனன் கதை சொல்லப் போய் பேரரசு டிவிடியை விஜயிடம் பதிலாக வாங்கிக்கொண்டு வந்த பழைய செய்தியும், யோகான் அத்தியாயம் ஒன்று இரண்டு போட்டோ எடுத்ததோடு நின்று போன புதிய செய்தியும் தமிழகம் அறிந்தது. இப்போது யோகானை விஜயின் ஒரிஜினலான மகேஷ் பாபுவை வைத்து இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார் கௌதம் மேனன். விஜய் படம் எடுப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் புதியவர்களாக இருப்பதன் பின்னணி ஒருவேளை இதுதான் போல. துப்பாக்கிக்கே இவ்வளவு ரிஸப்ஷன் என்றால் யோஹான் பற்றியெல்லாம் சொல்லவே வேண்டாம். Vijay – You missed it!


.ஆர்.முருகதாஸும் சளைத்தவர் அல்ல. நன்றாகத்தான் படம் எடுத்துக்கொண்டிருந்தார். தீனா, ரமணா, ஸ்டாலின், கஜினி வரை நன்றாகத்தான் இருந்தது. ஆனால் ஹிந்தி கஜினிக்குப் பிறகு அவருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. பாலிவுட் அப்படி என்ன எழவை இவர்களது மண்டைக்குள் திணித்து வைத்து அனுப்புகிறதோ தெரியவில்லை. போய் வந்ததும் பேச்சு தான் அதிகமாக இருக்கிறதே தவிர செயலில் சுத்தமாக ஒன்றும் இருப்பதில்லை. இதுவரை ஒரே ஒரு படம் தான் ஹிந்தியில் முருகதாஸ் எடுத்திருக்கிறார். அதுவும் அந்தப் படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு அமீர்கான்” என்னும் பாலிவுட் திமிங்கலத்தால் கிடைத்தது. கதை தான் முக்கியம் அல்லது ஏ.ஆர்.முருகதாஸின் திரைக்கதை யுக்தி தான் வெற்றி ரகசியம் என்றால் கஜினியை யாராவது சின்ன நடிகரை வைத்து எடுத்திருக்கலாமே, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’வை பிரதீக்கை வைத்து கௌதம் எடுத்ததைப் போல? அப்படி எடுத்திருந்தால் இந்த அளவு இமாலய வெற்றி எல்லாம் வேண்டாம், குறைந்த பட்ச லாபமாவது அடைந்திருக்குமா ‘கஜினி’? ஏன் அமீர்கான்? அவராக விருப்பப்பட்டுக் கேட்டார். பாலிவுட்டிற்கு அழைத்துப் போனார். அதனால் தான் முருகதாஸும், அசினும். அதுவும் தமிழில் மட்டமாக இருந்த கிளைமாக்ஸை ஹிந்தியில் அமீர்கான் தான் மாற்றியமைத்தார் என்றும் சொன்னார்கள். நிற்க. இப்படியெல்லாம் சொல்லி முருகதாஸ் திறமையே இல்லாதவர் என்று நான் சொல்ல வரவில்லை. ஹிந்தியில் ஆற்றல், ஆளுமை என்பதெல்லாம் முருகதாஸ் அங்கு அடுத்து ஒரு படம் இயக்கிய பின் தான் தெரியவரும். அதற்குள் எதற்கு இத்தனை பேச்சு. திறமைக்காரர்கள் அனைவரும் ஏன் இந்தப் பேச்சு பேசி தங்களது பெருமையை தாங்களே குறைத்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. (.: மிஷ்கின்) ஆச்சா ஊச்சா என்று இவர்கள் டி.வியில் பேசுவதைக் கண்டாலே எரிச்சல் தான் வருகிறது.

துப்பாக்கிக்கும் இதையே தான் செய்தார் முருகதாஸ். ஆரம்பத்திலேயே இந்தக் கதையே மும்பை கதை. ஹிந்திக்கு எழுதியது. அங்கு எடுத்துவிட்டு இங்கு வரலாம் என்று நினைத்தேன், அதற்குள் விஜய் யுடன் இணையும் வாய்ப்பு வந்துவிட்டது. அது இது வென்று அலப்பறை. ஹிந்திக்கு எழுதியது என்றால் முதலில் அங்கு எடுத்து விட்டு இங்கு வர வேண்டியது தானே? விஜய் என்ன ஓடியா போகப்போகிறார். இல்லை ‘டேட்’ கேட்டால் கொடுக்காமலா இருக்கப்போகிறார்? ஹிந்தி கஜினி எடுத்த பிறகு உலகளாவிய பேச்சு பேசி தமிழில் எடுத்த ஏழாம் அறிவைப் பார்த்திருந்தால்ஏன்டா இப்படி என் பேரச் சொல்லி சாவடிக்கிறீங்க, இதுக்கு நான் யார்னு மக்களுக்கு தெரியாமலேயே இருந்திருக்கலாம்என்று போதிதர்மரே சொல்லும் அளவிற்கு இருந்தது படம். ஆங்கிலத்தில் எழுதி வைத்து டமில் பெருமையை பேசிய படம் அது. 8 ஆம் வகுப்பு துணைப்பாடக் கதை போல நேரான சீர்கோட்டில் பயணிக்கும் திரைக்கதையை முருகதாஸிடமிருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. கஜினியில் நடித்த அசினே அடுத்தடுத்து 5, 6 படங்கள் ஹிந்தியில் வந்துபோய்விட்டார், முருகதாஸ் மட்டும் ஏன் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறார்? தமிழில் விட்ட இடத்தைப் பிடித்து விட்டு தான் அடுத்த வேலை என்று முடிவு செய்துவிட்டாரோ? அவர் தான் பதில் சொல்ல வேண்டும். இப்பொழுது துப்பாக்கியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஹிந்திக்கு போவதை இறுதியாக உறுதி செய்திருக்கிறார். அக்ஷய் குமார் – பர்ணீத்தி சோப்ரா என்று எல்லாம் ரெடி (ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் அல்ல) நடுவில் இப்பொழுது 1) அஜித் தை வைத்து படம் இயக்க ஆசையாக இருக்கிறது. கதை கூட ரெடி. அவர் சொன்னால் இருக்கிற வேலையை எல்லாம் விட்டு விட்டு அப்படியே வந்து விடுவேன், 2) விஜய், அஜித் இருவரும் நடிக்கும்படியான ஸ்கிரிப்ட் இருக்கிறது” என்று இருவேறு டிராக்கைப் போடுகிறார். இவ்வளவு பப்ளிசிட்டி ஸ்டண்ட் தேவை தானா? துப்பாக்கி இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர். இதனால் முருகதாஸின் பேச்சு இன்னமும் அதிகமாகி விடுமோ என்று பயமாக இருக்கிறது.

முருகதாஸ் ஸார், நீங்கள் உண்மையிலே ஒரு அற்புதமான கலைஞன். உங்களோட திரைக்கதைத் திறமைக்கு நான் ரசிகன். ஆனால் சமீபகாலமாக அந்தசினிமா மீது அதீத ஆர்வமுள்ள இளைஞன்முருகதாஸ் எங்கள் கண்களுக்கு தெரியவில்லை. மாறாக ஜப்பான்ல கூப்டாக, சிங்காப்பூர்ல கூப்டாக வசனம் தான் அளவிற்கதிகமாக உங்களிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது. ஒன்று ஹிந்தியில் ஒரு படம் எடுத்து, உங்கள் திறமையை அங்கும் காட்டி விட்டு நிதானமா இங்கு வாருங்கள், நாங்கள் பொறுமையாகக் காத்திருக்கிறோம். இல்லையா, பேசாமல் மீண்டும் உங்க ஸ்டைலில் அருமையான ஒரு தமிழ் படத்தை கொடுங்க. கொண்டாடுறோம். மாறாக இரண்டையும் செய்யாமல் எங்களை பேசிப் பேசியே சாவடிக்காதீங்க. ப்ளீஸ்

விஜய்க்கும் ஒரு மெசேஜ். தளபதி, “துப்பாக்கி” – நிச்சயம் நல்லதொரு ஆரம்பம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டைக் காமெடி, டூயட், funky காஸ்டியூம்ஸ், Zero gravity stunts, காது பனால் ஆகும் பன்ச் வசனங்கள், முக்கியமாக திணிக்கப்பட்ட கிளைமாக்ஸ் One-on-One fist fight இவற்றையெல்லாம் நீக்கிவிட்டால் சூப்பராக இருக்கும் (திருமலை முற்றிலும் தவறுதலான ஒரு ஆரம்பம் என்பது தான் இதன் அர்த்தம்) அடுத்தடுத்து நல்ல, கதையுள்ள, சென்சிபிள் திரைக்கதையைக் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து, டைரக்டர்ஸ் ஆக்டராக நடிக்க ஆரம்பித்தால், நிச்சயம் அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கள் தான்! நல்ல படம் உங்களிடமிருந்து மட்டுமல்ல யாரிடமிருந்து வந்தாலும் தலையில் வைத்து கொண்ட தயாராக நாங்கள் இருக்கிறோம். வாழ்த்துக்கள்...

You Might Also Like

4 comments

  1. ரசனையான விமர்சனம்... முடிவில் நல்ல யோசனைகள்...

    ReplyDelete
  2. விமர்சனத்தை பிச்சி உதறிட்டீங்க..படிக்க படிச்சிகிட்டே இருந்தேன்.
    விஜயின் கடந்த சில படங்களோடு (நண்பன், காவலன் தவிர) ஒப்பிட்டுப்பார்க்க துப்பாக்கி நல்ல படமாகத்தான் இருக்கிறது..ஆனால், மீடியாவுல இவங்க கொடுத்த பில்டப்பு தான் கடுப்பையே கலட்டியது..எப்போதுதான் பேசுவதை நிறுத்திவிட்டு அதிகப்படியாக செயலில் காட்டுவார்களோ எனத்தெரியவில்லை.ஒரு பார்வையாளராக தனிப்பட்ட பல கருத்துக்களை அள்ளி கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
    முதல் பாகம் படித்துவிட்டேன்..ரொம்ப நல்லா ரசிக்கும்படி சிறப்பாக பண்ணிருக்கீங்க.நன்றி.

    ReplyDelete
  3. நண்பரே உங்கள் தளத்துக்கு இன்றே வருகிறேன். அருமையாக எழுதுங்கள். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாலா, தொடர்ந்து வாருங்கள்!

      Delete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...