துப்பாக்கி - போஸ்ட்மார்ட்டம் - பாகம் 01

2:52:00 AM



பதிவு தான் கொஞ்சம் “டிலே” ஆகிவிட்டதே தவிர, படத்தை இரண்டாம் நாளே பார்த்துவிட்டேன். படம் வெளியாகி வெகுவாகி வாரிக் குவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இதோ போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் போல எனது பதிவு. 2012 ஆம் ஆண்டின் ஒரே, உண்மையிலேயே “வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும்” படத்தைப் பற்றி நாம் எழுதவில்லை என்றால் எப்படி?

.ஆர்.முருகதாஸ்விஜய். இதுவே கொஞ்சம் புருவத்தை உயர்த்தும் காம்பினேஷன். இவர்களோடு சந்தோஷ் சிவன் வேறு சேர்ந்து கொண்டார். நிச்சயம் எதிர்பார்ப்பு எகிறியிருக்க வேண்டும். ஆனாலும் என்னவோ தெரியவில்லை, பில்லா II மற்றும் இதர மொக்கை படங்களுக்கு இருந்த ப்ரீ-ரிலீஸ் “ஹைப்” இந்தப் படத்திற்கு கம்மியாகவே இருந்தது அல்லது மெயின்டெய்ன் செய்யப்பட்டு இருந்தது. கூடவே வரலாறூ காணாத டைட்டில் பிரச்சனை வேறு. தாணு – விஜய் – எஸ்.ஏ.சி உடன் கள்ளத்துப்பாக்கிச் சிறுவர்கள் மல்லுக்கு நின்றனர். அவர்கள் பின்னணியில் யார் இருந்தார்களோ தெரியவில்லை. எவ்வளவு அல்லது எது கைமாறியதோ தெரியவில்லை. பத்தாத குறைக்கு “விஜய் அப்பா” எஸ்.ஏ.சி வேறு மேடையேறி மகனை அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தார். விஜய் படம் என்றாலே பாடல்கள் தான். ஹாரிஸ் புண்ணியத்தில் “கூகிள் கூகிள்” மட்டும் தான் கேட்கும்படி இருந்ததால் பாடல்கள் குறித்தும் ஒரு பெரிய எதிர்பார்ப்போ, அவற்றை வைத்து விளம்பரமோ கூட இல்லை. படத்தின் ஒரே ஹைப் முருகதாஸின் பேச்சு தான், “விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் இதுவரை விஜய்யைப் பிடிக்காதவர்களுக்கும் இந்தப் படத்திற்குப் பிறகு அவரைப் பிடிக்கும் “கமர்சியல் படங்கள் பக்கம் தலைகாட்டாத சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒத்துக்கிட்டதே அந்த கடைசி காட்சில சொல்லப்பட்டிருக்கிற மெசேஜ் னாலதான் “இது பாலிவுட் சப்ஜெக்ட். அங்க தான் முதல்ல பண்ணியிருக்கனும். விஜய் க்காக சில சேஞ்சஸ் பண்ணி முதல்ல இங்கயும் பிறகு அங்கயும் எடுக்கப் போறோம் இப்படி அது இது வென்று ஏதேதோ சொன்னார். போதிதர்மரை மட்டும் காட்டிய படத்தையே ஹாலிவுட்காரர்கள் ரீமேக் செய்யக் கேட்பார்கள் என்று பேசியவர் என்பதால், யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. சரி, ரைட்டு ஏதோ பிளான் பண்றாங்க, பண்ணட்டும் என்று தமிழகம் சற்று மந்தமாகவே காத்திருக்க ஆரம்பித்தது. காத்திருப்பிற்கு பாக்ஸ் ஆபீஸ் ரிசல்ட் தெரிந்துவிட்டது. படம் மேசிவ் ஹிட்!

பதிவின் இறுதியில் சொல்ல வேண்டியதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன். துப்பாக்கி நிச்சயம் ஒரு நல்ல படம். இந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் ஆக எல்லா தகுதிகளும் இருக்கிறது.

நிற்க.

இப்போதிருக்கும் தமிழ் சினிமாவின் நிலையில் துப்பாக்கி இந்தளவிற்கு மிகப்பபெரிய ஹிட் ஆகியிருப்பதில் ஆச்சரியமே இல்லை. பசியுடன் பிரியாணிக்கு (வெங்கட் பிரபு – கார்த்தி பிரியாணி அல்ல) காத்திருந்தவனுக்கு வெறும் வாழைப்பழம் மட்டும் கிடைத்தது போல தான் இப்பொழுது தமிழ் சினிமாவிற்கு துப்பாக்கி கிடைத்திருக்கிறது. பசியுடன் இருப்பவனுக்கு ஒரே ஒரு வாழைப்பழம் என்றாலலும் அது நிச்சயம் பெரிய விஷயம் தான். விஜய் யிடமிருந்து இதை விட பெட்டராக ஒரு படத்தை எதிர்பார்க்கவே முடியாது. ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் - He can do much much better!

சரி, விமர்சனமாக ஏற்கனவே பலர், பலவாராக எழுதித் தள்ளிவிட்டதால், சில பல முக்கிய கருத்துக்களை (?) மட்டும் இந்தப் பதிவில் சொல்கிறேன்.

படத்தின் பிளாட் என்ன? தீவிரவாதம்.

கதை? மும்பை நகரில் ரகசியமாகப் பரவிக் கிடக்கும் தீவிரவாத்தை மொத்தமாக அழிக்க நினைக்கிறான் ஒரு ராணுவ வீரன்.

ரமணா - லஞ்சம் வாங்குபவர்களில் 10 பேரைக்கடத்தி அதில் முதலில் வருபவரை கொல்வது, ஸ்டாலின் - செய்த உதவிக்கு நன்றி சொல்வதற்கு பதில் வேறு மூவருக்கு உதவி செய்யச் சொல்லி அதைத் தொடரச் செய்வது, கஜினி - Short Term Memory Loss உள்ள ஒருவன் தன் காதலியைக் கொன்றவனைப் பழி வாங்குவது, போதிதர்மர், தமிழ், தமிழன், சைனா – ஏழாம் அறிவு போல இந்த முறை Sleeper Cells எனப்படும் தீவிரவாதிகளின் ஒரு பகுதியினரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் முருகதாஸ். தீவிரவாதம்(வாதிகள்) பற்றி ஆயிரம் கதைகள் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்பட்டிருந்தாலும், இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கக்கூடிய ஒரு கதையாகவே இருக்கிறது. Men In Uniform மேல் எப்பொழுதும் ஒரு ஈடுபாடு தமிழகத்திற்கு / இந்தியாவிற்கு / உலகிற்கு உண்டு. விஜய்காந்த், அர்ஜுன், சரத்குமார் எல்லாம் ஆளானதே யூனிபார்ம் மினால் தான் என்று சொல்லாம். இப்பொழுது விஜய் யும்.

விஜய், லீவிற்கு பிரஞ்ச் தாடி விட்டு ஊருக்கு வரும் ஒரு ராணுவ அதிகாரி (அவர் வீட்டில், ராணுவ உடையில் அவர் முறைக்கும் போட்டோவிலும் பிரஞ்ச் தாடி! ஒரு வேளை அது போன லீவில் எடுத்ததோ? டேய்…) எந்தப் படத்திலும் இல்லாத அளவிற்கு விஜய் இந்தப் படத்திற்கு குறைந்த பட்ச ஒத்துழைப்பையாவது நிச்சயம் கொடுத்திருக்கிறார் என்பது ஸ்கிரீனில் தெரிகிறது. மிகவும் அடக்கி வாசித்திருக்கிறார். செவிகிழியும் கத்தல், மட்டரகமான கேட்க சகிக்காத வசனங்கள் பன்ச் வசனங்கள் இல்லை. பிழிய பிழிய தங்கைப் பாசம், தாய்ப் பாசம், நண்பன் பாசம் எல்லாம் இல்லை. முக்கிய கேரக்டர்கள் யாரையும் சாகடித்து விஜய்யை வம்படியாக கிளைமாக்ஸிற்கு யாரும் இழுத்துச் செல்லவில்லை. ஆங்காங்கே கிழிந்து தொங்கும் பேண்ட், பார்டர் வைத்த, பூ போட்ட சட்டை, பட்டுத்துணியில் தைக்கப்பட்ட பாடல் காட்சி உடைகள் எதுவுமே இல்லை. மிகவும் ஸ்டைலான, போக்கிரியை விட ஸ்மார்ட்டான உடைகளில் வலம் வருகிறார் விஜய். வெரி குட் இம்ப்ரூவ்மண்ட். ஆளும் படு சுமார்ட். சமீப காலமாக விஜய் படு ஹேண்ட்சமாக தெரிகிறார். ஆனால் இந்த ஹேண்ட்சம்னஸ் மிலிட்டரி ஃபிட்டுக்கு இல்லை என்பது வருத்தமே. உடன் இருப்பவர்கள் எல்லாம் ஒரிஜினல் மிலிட்டரி ஆட்களோ என்று நினைக்கும் அளவிற்கு படாவாக இருக்கும் போது அவர்களுக்கு ஆர்டர் கொடுக்கும் விஜய் மட்டும் ஸ்கூல் பாய்ஸ் மாதிரி அங்கும் இங்கு ஓடிக்கொண்டு இருப்பதாகத் தெரிந்தது.

காஜல்நிஜமாகவே க்யூட், ஹாட், சுவீட் அண்ட் செக்ஸி! ஆனால் என்ன செய்வது, நடிப்பது விஜய் படமாயிற்றே! லூசுப் பெண் வேடம் தான் இதிலும். முருகதாஸ் பற்றியும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கஜினி, ஏழாம் அறிவு பரவாயில்லை. இவரது ரமணா, ஸ்டாலின் படங்களில் எல்லாம் எதற்கு ஹீரோயின் என்றே தெரியவில்லை. மஹதீராவில் வாங்கிய பெயரைப் காப்பாற்ற காஜலுக்கு அடுத்து ஒரு படம் கூட இல்லை. சோ சேட். டப்பிங் குரல் கூட கொஞ்சம் பிரியாமணித்தனமாக இருந்தாலும், திருப்பாச்சி த்ரிஷா போல் மொத்தமாக 5 காட்சிகள், 5 பாடல்களில், 2 காமெடியில் மட்டுமே வருகிறார் என்பதால் படத்திற்கு பெரிய பாதிப்பில்லை. ஆனால் காஜல் வரும் காட்சிகளிலெல்லாம் அவர் மட்டுமே திரையில் தெரிகிறார். அவ்வளவு அழகு, அவ்வளவு பொளிவு. “ஒரு தடவை ஓட்கா கூட ட்ரை பண்ணியிருக்கேன்என்று சொல்லி விட்டு கண்ணடிக்கும் இடத்தில் ஓட்காவே அடித்திருந்தாலும் ரசிகனுக்கு அவ்வளவு போதை ஏறியிருக்காது. முத்தம் கேட்டு அவர் கிறங்கி நிற்கும் இடத்தை சொல்லாமல் போனால் துப்பாக்கியைப் பற்றிய எந்தப் பதிவும் நிறைவடையாது. விஜய் இந்தப் படத்தில் ஆடாத நடனத்தையும் ஆடி பட்டையைக் கிளப்புகிறார் காஜல். வெறும் கிளாமர் டால்” ஆக மட்டும் வலம் வராமல் கொஞ்சமாவது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் அடுத்த சிம்ரன்ஜோ, காஜல் தான்.

ஜெயராம் - நல்ல நடிகர். வழக்கம்போல் மொக்கைக் காமெடிக்கு மட்டுமே பயன்படுகிறார். படத்தில் இவர் விஜய்க்கு சீனியர் ஆபீசர். ஆனால் சிரிப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்யனுக்கு தெரிந்தது கூட இவருக்கு தெரிவிக்கப்படவில்லை.

நிச்சயம் ஏழாம் அறிவை விட திரைக்கதை ஓட்டத்தில் இந்தப் படம் பன்மடங்கு புத்திசாலித்தனமான ஒன்று தான். பல விமர்சகர்கள் சொல்வது போல எந்தப் படத்திற்கும் திரையில் நாய் ஒன்று என்ட்ரி கொடுத்தவுடன், படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் இவ்வளவு சந்தோஷத்துடன் கைதட்டியிருக்க மாட்டார்கள். துப்பாக்கியில் கதை டிராவல் பண்ணுவதே பல இடங்களில் அழகாகவும், ரசிக்கும்படியாக இருந்தது. காஜலை ஃபாலோ செய்யப் போய் தான் முதல் தீவிரவாத செயலையே விஜய் கண்டுபிடிக்கிறார். இது ஓக்கே. பல படங்களில் பார்த்ததுதான். ஆனால், நண்பனின் திருமணத்திற்கு போகிறவர் அப்படியே ஒரு 12 தீவிரவாதிகளை திருமணத்திற்கு வந்த தனது 12 ராணுவ நணபர்களது உதவியுடன் மொத்தமாக பரலோகம் அனுப்புகிறார். ஜஸ்ட் லைக் தட் வில்லனின் ஒரு மிகப்பெரிய மாஸ்டர் பிளான் தகர்த்தெறியப்படுகிறது. பிறகு ஒரு அருமையான இண்டர்வல் பிளாக். இது நிச்சயம் எந்தப் படத்திலும் பார்க்காதது. சூப்பர். அது போல விஜய்க்கு பாதுகாப்பு ஏற்படுத்திக்கொடுத்து விட்டு சத்யன் நகர, விஜய் வீட்டிற்குள் போய் கதவை சாத்திவிட்டு திரும்ப, கேமரா ரொடேஷனில் தீவிரவாதி, கட்டப்பட்ட நிலையில். சூப்பர். முருகதாஸின் திரைக்கதை வித்தைக்கு இவையெல்லாம் சோற்றுப் பதங்கள். ஆனால் இந்த “விஜய் படமா இப்படி” ஆச்சரியங்கள் எல்லாம் முதல் பாதியில் மட்டும் தான். இரண்டாம் படம் டிபிக்கல் விஜய் சினிமா. சுவாரஸ்ய, அட போட வைக்கும் காட்சிகள் இல்லை. கரெக்டாக தங்கையை ஒற்றை ஆளாக காப்பாற்றுவது, மீண்டும் ஒற்றை ஆளாக வில்லனைக் கொன்று தப்பிப்பது. நோ. நாட் குட். வழக்கம் போல நடுநடுவே வரும் மொக்கை காமெடிகள் (ஐட்டத்திற்கே உன்ன புடிக்கல – that was a good one), பாடல் காட்சிகள் படத்தின் நீளத்திற்கும், பலவீனத்திற்கும் முக்கிய காரணம். அதுவும் ப்ரீ-கிளமாக்ஸ் காட்சிக்கு முன் ஒரு மெலடி பாடல். அடப்பாவிகளா, ஒரு விஜய் ஆக்ஷன் படத்தில் இந்த மாதிரி ஒரு வேகத்தடை பாடலை எப்படி வைத்தார்கள் என்றே தெரியவில்லை. கிளைமாக்ஸ் இந்தப் பாடலால பாதிப்படைந்தது உண்மை. காமெடி, பாடல்கள் இரண்டையும் வெட்டி எறிந்த்து விட்டு கிளைமாக்ஸை இன்னமும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருந்தால் (கிளைமாக்ஸ் சண்டையை அல்ல, காட்சிகளை) காஜலுக்கும், ஜெயராமிற்கும் வேலை இருந்திருக்காது, ஆனால் படம் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

படத்தின் அடிநாதம் தீவிரவாதம். .ஆர்.முருகதாஸின் ஏழாம் அறிவில் சைனாவில் இருந்து வருவான் வில்லன். அதுவும் தீவிரவாதம் தான். விஜய் யின் முந்தைய படமான வேலாயுதம் பக்கா தீவிரவாதிகள் சப்ஜெக்ட். அவரது “உதயா”வும் இந்த ஏரியா தான். தமிழ் சினிமாவிற்கு இது மிகப் பழைய ஏரியா. தீவிரவாதிகள்(வாதம்) குறித்த எனது பார்வையைச் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். தீவிரவாதம் பற்றி பேசினாலே தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படும் நிலையில் நம் நாடு இருக்கிறது. “லைக்” போட்டாலே சிறை, என்கிற சர்வாதிகார நிலையால் எதைப் பற்றியும் சுதந்திரமாக பேச பயம் என்பதைவிட, எரிச்சலாக இருக்கிறது என்பது தான் உண்மை. கோபத்தை எல்லாம் இப்படி உள்ளுக்குள்ளேயே அடக்கி அடக்கி வைத்திருந்து, ஒரு நாள் அது மொத்தமாக வெடிக்கும் போது, நம் வாழக்கையும் முடிந்து போகும். இது தான் ஒவ்வொரு முறையும் நடந்து கொண்டிருக்கிறது.

தீவிரவாதிகள் என்றாலே முஸ்லீம்கள் தான், முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் தான்இந்த இரண்டுமே முழுக்க முட்டாள்தனமான, அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களை பல நாட்களாக ஏமாற்றப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் வாதங்கள். “சாமி கண்ண குத்திரும்” - இதை நம்பும் எவனும் இந்த அரசியலால்(வாதிகளால்) ஏமாற்றப்படுவான். இந்திய / தமிழ் திரைப்படங்களில் முஸ்லீம்களை மட்டுமே தீவிரவாதிகளாக காட்டுவதையும் என்னைப் பொறுத்த வரை தப்பு சொல்ல முடியாது. நக்சல்கள், மாவோயிஸ்ட்கள் என்று இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் முஸ்லீம்கள் என்பது போல் காட்டினால் அது மிகவும் கண்டனத்திற்குரிய, மிகப்பெரிய தப்பு. விவரம் தெரிந்த நாள் முதல் நம் நாட்டின் ஒரே எதிரி என்றால் அது பாக்கிஸ்தான் தான். சுத்தமான முஸ்லீம் நாடு. இந்தியா என்ற ஒரு நாடு உருவானவுடன் முதன்முதலாக நம் அரசின் அனுமதியில்லாமல் ரகசியமாக ஊடுருவி நாச வேலைகளை காஷ்மீரில் செய்தவர்கள் அவர்கள் தான். கடைசியாக மும்பையில் நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்தவர்களும் பாகிஸ்தான் காரர்கள் தான். ஆக தேசிய அளவிளான தீவிரவாதம் தொடர்பாக இந்தியர்கள் படம் எடுத்தால் நிச்சயம் பாகிஸ்தான் தீவிரவாதிகளைத்தான் காட்ட முடியும். பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் என்றால் அவர்கள் முஸ்லீம்களாகத்தான் இருக்க முடியும். இந்துக்கள் என்றோ, சீக்கியர்கள் என்றோ இல்லை புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றோ பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் காட்ட முடியுமா? அதற்காக முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் அனைவரும் பாக்கிஸ்தான் காரர்கள், தீவிரவாதிகள் என்று நாம் முடிவு கட்டுகிறோம், கட்ட வைக்கப்படுகிறோம் என்றால் அது நமது மூடத்தனம்.

சாதாரணமான ஒரு விஷயத்தை ஏன் இப்படி மதத்தின் பெயரால் விஷமாக மாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. இதுவரை வந்த படங்களையெல்லாம் விட்டுவிட்டு, துப்பாக்கிக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு? விஜய் படங்களை புறக்கணிப்போம், ரசிகர் மன்றத்திலிருந்து வெளியேறுவோம் – தேவையா இதெல்லாம்? சரி செய்ய வேண்டிய விஷயங்கள் ஆயிரம் இருக்கும் போது, இதெல்லாம் இப்பொழுது தேவையா?

இது இந்தியாவில் மட்டுமல்ல. உலகில் முழுவதும் அதிகம் அறியப்பட்ட, தங்களது எல்லைகளைத் தாண்டி தங்களை வெளிப்படுத்திக் கொண்ட தீவிரவாத இயக்கங்கள் பலவும் தங்களது மதத்தையே தங்களது அடையாளமாகக் காட்டுகின்றன. மதம் என்பது மனிதனுக்கு மதம் பிடிக்கும் போது போடப்படும் முகமுடியாக மட்டுமே இங்கு இருக்கிறது. தங்களது மத நண்பர்கள் இதனால் உலகளவில் பாதிப்படுவார்கள் என்ற எண்ணமே அவர்களிடம் இல்லை. மாறாக இப்பொழுது எல்லாம் கைமீறிப் போன பிறகு முஸ்லீம் என்றாலே சந்தேகப்படுகிறார்கள், சுட்டுக்கொள்கிறார்கள் என்று தங்களது வெறிச் செயலுக்கு வக்கனையாக அடுத்தவர்களை காரணமாகக் காட்டுகிறார்கள், அந்தக் காரணிகள். இது அவர்களாக அவர்களது மதத்தினருக்கு தேடிக்கொடுத்த சாபம். வேறு யாரையும் அவர்களால் குற்றம் சொல் முடியாது. விஸ்வரூபத்தில் பின் லேடனைப் பற்றிக் காட்டினால் இந்திய முஸ்லீம்கள் எப்படி கலங்கப்பட்டுப் போவார்கள்? எனக்குச் சுத்தமாக புரியவே இல்லை!

பி.கு: பாக்கிஸ்தான் டம்மி பீஸ் என்பது முடிவாகிவிட்டது. அல்லது பாக்கிஸ்தானை நமக்கு மட்டுமல்ல உலக நாட்டாமையான அமெரிக்காவிற்கு எதிரியாகி விட்டதால் நாம் வேறு பிரச்சனையை கவனிக்கும் நேரம் வந்துவிட்டது. காங்கிரஸ் அரசு வழக்கம்போல் பேன் பார்த்துக்கொண்டிருக்க, ஊடகங்கள் தான் சீனா” என்னும் வலுவான நமது அடுத்த எதிரி குறித்த அபாயச் சங்கிலியை அடித்துக்கொண்டே இருக்கின்றன. கூடிய விரைவில் நாம் முஸ்லீம்களை கைவிட்டு விட்டு பௌத்தர்கள் பக்கம் திரும்பப்போகிறோம். பௌத்தர்கள் என்றாலே தீவிரவாதிகள் – இதுவும் நடக்கும். முருகதாஸ் கூட தனது முந்தைய படத்தில் சீன வில்லனைத்தான் காட்டினார். சீனர்கள் வித்தை கற்றுக்கொடுத்த போதிதர்கரையே விஷம் வைத்துக்கொன்ற வெறியர்கள், மொத்த சீன அரசும் சேர்ந்து ஒருவனை, இந்தியாவையே அழிக்க அனுப்புகிறது - அது இது வென்று! அடப்போங்கடா, உருப்பட்டா மாதிரிதான்

துப்பாக்கிக்கு வருவோம்இங்கு காட்டப்படும் ஏரியா மும்பை. வில்லன்கள் தீவிரவாதிகள். தங்களது மதத்தை வைத்து தாங்கள் செய்யும் நாச வேலைகளை நியாயப்படுத்தும் ஜீஹாத் தீவிரவாதிகள். அவர்களை எதிர்கொண்டு பின் முழு பலத்துடன் எதிர்க்கும் மும்பை வாழ் தமிழ் குடும்பத்து ராணுவ வீரன், ஜகதீஷ். தீவிரவாதத்தின் ஒரு அங்கமான “Sleeper Cell” களை மறைவிடத்திலிருந்து இயக்குகிறான் ஒரு தலைவன். மும்பையே ஸ்தம்பிக்க வைக்க நினைக்கும் அவன் என்னவோ படித்து முடித்து விட்டு ஊர் சுற்றித் திரியும் ஜிம்பாய் ரோமியோ போலிருக்கிறான். (ரௌத்திரம் - கௌரி) அவ்வளவு பெரிய நெட்வொர்க்கை மெயின்டெய்ன் செய்கிறவனை இவ்வளவு சாதாரணமாக காட்டியிருக்க வேண்டாம். (அதற்காக பாகிஸ்தான் பார்டர்ல பெரிய தாடி, ஜிப்பா போட்ட ஒரு வயசான ஆனா கொடூரமான, பார்த்தாலே முஸ்லீம்னு தெரியுற மாதிரி ஒருத்தனையா காட்டனும் என்று தயவு செய்து கேட்க வேண்டாம்) போக்கிரியில் கடைசியில் விஜய்யைப் பார்த்து உச்சா போய்விடும் பிரகாஷ்ராஜிற்கு கூட ஆரம்பத்திலிருந்து செம “கெத்” கொடுக்கப்பட்டிருக்கும். அது கூட இந்தப் பட வில்லனுக்கு இல்லை. 12 ஆபீஸர்கள் ஒரே நேரத்தில் எங்கு இருக்கிறார்கள் என்பதை ஈஸி சேரில் சாய்ந்தபடி கண்டுபிடித்து சொல்ல முடியும் என்கிற அளவிற்கு பவர்ஃபுல்லான தலைவன் இவன் என்பதை ஜஸ்டிபை செய்யும் காட்சிகள் படத்தில் குறைவு. ஆக்ஷன் வில்லனாக இல்லாமல் டெக்னாலஜி வில்லனாக இருக்கிறான் இவன். முதல் இரண்டு காட்சிகள் எதையோ சால்டரிங் செய்கிறார், டிவி பார்க்கிறார், சாட்டிலைட் போனில் வந்து மெசேஜ் அனுப்புகிறார். பின்பு கிளம்பி மும்பை வருகிறார். இருவருடன் இரண்டு வார்தை பேசுகிறார். விஜய் யுடன் போனில் இரு முறை பேசுகிறார், கூட்டாளிகள் செத்து கிடக்கும் அறையை கிளைமாக்ஸ் போலீஸ் போல் ரவுண்ட் அடித்துப் பார்க்கிறார். அவ்வளவுதான். கிளைமாக்ஸில் மீண்டும் ஒரு போனைப் போட்டு விஜய் யை வர வைத்து, வாயைக்கொடுத்து, சண்டையிட்டு சாகிறார். அட பாவிகளா, காஜலுக்கு இருந்த அளவு காட்சிகள் கூட Sleeper Cell” தலைவனுக்கு இல்லையே! படம் முழுக்க விஜய் யை மட்டுமே காட்டவேண்டும் எங்கிற சபதம் தான் காரணமோ?

வில்லன் போக, Sleeper Cell பற்றிய விளக்கம் சற்று தெளிவாக இல்லை என்றும் சொல்லலாம். படத்தின் அடிநாதமான இந்த விஷயத்தை (சந்தோஷ் சிவனை ஒத்துக்கொள்ள வைத்த விஷயம்?) பற்றி நம் பதிவர்கள் கூட அவ்வளவாக கோடிட்டு எழுதவில்லை என்பதிலேயே “சரியான விளக்கம் இல்லை என்பது தெரிகிறது. இரண்டு முறை வசனமாக இந்த குரூப் பற்றி படத்தில் சொல்லப்பட்டாலும், காட்சிகளாக பெரிதாக எதுவும் இல்லை. “கடைசி வரை ஆர்டர் வராமல் இவர்களது நெட்வொர்க்கே அழிந்து விடும் என்று விஜய் எப்படி சொல்கிறார் என்றே தெரியவில்லை. யார் இவர்கள்? எப்படி தீவிரவாதிகளாக மாறினார்கள்? எங்கு பயிற்சி பெற்றவர்களா அல்லது சாதாரண மக்கள் தானா? அரசாங்கத்தின் மீதும், அரசியல்வாதிகளின் மீதும் (இரண்டும் ஒன்றுதானோ) கோபமாகி தீவிரவாதிகளாக மாறிய இவர்கள் ஆர்டர் வரும் வரை ஒன்றும் செய்யாமல் காத்துக்கொண்டே இருப்பார்களா? அவர்களது கோபம் எல்லாம் அவ்வளவு பொறுமையானதா? ப்படியெல்லாம் நடக்க சாத்தியமே இல்லை, ஏதோ இல்லாத்தைக் காட்டுகிறார்கள் என்று சொல்லவில்லை. இந்த நெட்வொர்க் எப்படி செயல்படுகிறது எனபதை கொஞ்சம் தெளிவாக, காட்சிகளாக காட்டியிருக்கலாம் என்று தான் சொல்ல வருகிறேன். ஏழாம் அறிவில் கூட தெரு நாய் உடம்பில் ஏற்றப்பட்ட கிருமி எப்படி பரவுகிறது என்பதை பத்தே ஷாட்களில் காட்டியிருப்பார்கள். அது போல் ஏதாவது ஒரு சின்ன மேஜிக்கை இங்கும் காட்டியிருக்கலாம். முக்கியமாக பல வருடங்களாக மக்களோடு மக்களாக இவர்கள் காத்திருப்பார்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே, இவர்களது தலைவன் என்பவன் ஒருவன் தான். அவனும் ஏதோ லன்ச் பிரேக்கில் தீவிரவாதம் செய்பவன் போல அசமந்தமாக இருக்கிறான்.

வில்லனாவது பரவாயில்லை. ராணுவத்தின் நிலை படு மோசம். கடைசிக் காட்சியில் கிட்டத்தட்ட ஒரு ரயில் முழுக்க ராணுவ வீரர்கள் மும்பையிலிருந்தது கிளப்புகிறார்கள். ஆனால் முதல் பாதியில் 11 பேரை விஜய் கூட்டு சேர்த்துக்கொண்டதைத் தவிர முழுக்க முழுக்க ஒரே ஆளாக ஒரு நெட்வவொர்க்கையே காலி செய்கிறார். அதே போல் ஜெயராமை சீனியர் என்கிறார் விஜய். நான் கூட முதலில் ஓட்டுகிறார் என்று நினைத்தேன். ஆனால் சீரியஸாகவே ஜெயராம் சீனியர் ஆபீஸர் தான் போல. ஆனால் விஜய் செய்யும் எதுவுமே அவருக்குக்கூட தெரியவில்லை. அவர் தான் ஊருக்கு வந்த காரியமான திருமணத்தை முடிப்பதிலேயே குறியாக இருக்கிறார். சரி, விஜய் ஆர்மி இன்டலிஜன்ஸ் ஸ்பெஷல் ஆபீசர் என்றால் அவர் யாருக்குத தான் ரிப்போர்ட் செய்கிறார்? அல்லது ஒருவேளை திருப்பாச்சி போல பெர்ஷனல் களையெடுப்பா? அப்படியென்றால் ஏன் Sleeper Cells பற்றி எல்லாம் சொல்ல வேண்டும்? ஒரு முக்கிய தீவிரவாதி; அவனை அழிக்க வேண்டும். அத்தோடு நிறுத்திக்கொண்டிருக்கலாமே? முதல் பாதியில் 12 தீவிரவாதிகளைக் கொன்று எஸ்கேப் ஆன ராணுவ வீரர்களும், ஏதோ "நண்பன் கூப்டதுக்காக போனோம், அவன் சொன்னதுக்காக 12 பேரைப் போட்டோம், மத்தபடி எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" என்பது போல் அடுத்து எந்த சீனிலேயுமே இல்லாமல் போய் விட்டார்கள். நாடே பேசிக்கொண்டிருக்கும் ஒரு ஆப்பரேஷனை ரகசியமாக நடத்தியவர்கள் இந்த அளவிற்கா மந்தமாகி லீவை என்ஜாய் செய்யப் போய் விடுவார்கள்?

இப்படி எத்தனையோ வழக்கமான ஓட்டைகள் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் யோசிக்கவே நேரம் கொடுக்காமல் பரபர வென்று திரைக்கதை பறப்பதால் படம் மொத்தத்தில் நன்றாக இருக்கிறது என்று சொல்லும்படி இருக்கிறது.

முடியவில்லை. இன்னும் நிறைய இருக்கிறது. பதிவு பெரிதாகிவிட்டதால், இரண்டாம் பாகத்தை இரண்டு நாள் கழித்து ரிலீஸ் செய்கிறேன் :-)

You Might Also Like

11 comments

  1. நல்ல பதிவு.. படமும் செம யாத்தான் இருந்துதுசு..
    நல்ல கலெக்சன். நம்ம மாரத்தள்ளி மல்டிப்ளெக்ஸ் ல மட்டும் ஞாயிற்று கிழமை ஷோ.


    படம் முழுக்க காமெடி தான்.. நீங்க சொன்ன மேட்டர் காமெடிக்கு அரங்கம் அதிரும் கிளாப்ஸ்.

    காஜல், ஜெயராம், பாடல்கள் - இவை எல்லாமே வேகத்தடைகள்.. ஆனா இத ப்ரிவ்யு ஷோ ல கூடவா பாத்து சரி பண்ணிருக்ககூடாது???? கடைசி டூயட் வரும் போது பக்கதுல இருந்த நண்பன் கடுப்பாகிட்டான்... வாங்குன 6 பாட்டையும் எப்படியோ பில் பண்ணிட்டாங்க...

    வழக்கமா விஜய் படம் போலையும் இதுலயும் எந்த லாஜிக்கும் பாக்க கூடாது...


    1.முதல் பாட்டு முடிஞ்ச உடனே எல்லாரும் ஓடிப் போய் ரயில்ல ஏறிடுறாங்க.. அது என்ன பபஸ்ஸா?? ரன்னிங்ல ஏற????

    2. ரோட்ல காஜல் கூட பேசும் போது அவுங்க கை ல சாவி இருக்காது... ஆட்டோல போகும் போது மட்டும் எப்படி வந்துச்சு??

    3. விஜய் நாய் வச்சு தீவிரவாதி இருக்குற இடத்தை கண்டுபுடிக்குறாரு... ஆனா இவ்ளோ போலீஸ் ஆபீசர்ஸ், தீவிரவாதிகள் இறந்தது இருக்குறத போலீஸ் கண்டுக்காமயா இருப்பாங்க.. அவங்ககிட்டலாம் நாய் இல்லையா???

    4. கிளைமாக்ஸ் ல பாம் வைக்க சொல்லிடு தீவிரவாதிய பாக்க போய்றாரு தலைவரு... ஆனா அவங்க ப்ளான் போட்டது தரை ல (கார் ல) பாம் வச்சிட்டு காரை விட்டு போய்டணும்னு.. கடைசி வில்லன் கப்பல்ல இருகாரு. பாம் வைக்க வந்த தம்பியும் நீச்சல் டிரஸ்லாம் மாட்டிக்குது... பாமும் தண்ணில கூட வெடிக்குது (இதுல பெரிய சந்தேகம் இருக்கு.. தரைல வைக்க உருவாக்கினது தண்ணி ல எப்படி வெடிக்கும்???)

    படத்தில் எந்த இடத்துலயும் முஸ்லிம் மட்டும் தான் இப்படி செய்றாங்கன்னு எங்கயும் சொல்லப்படல..
    ஆனா அதுக்கு இந்த பிரச்சனை வந்துச்சுன்னு தான் புரியல??


    உட்காந்து யோசிச்சு பாத்தா எல்லா விஜய் படம் மாதிரி இதுவும் நாட்டுக்கு கேடு விளைவிக்கிற எதிரிகள் அழிச்சு (தனி ஒரு ஆளா) நாட்டுக்கு நல்லது பண்ணற ஒரு கதை (யாருக்கும் தெரியாம).

    கடைசியா ஒரு சந்தேகம்.. இதுல தான் ஸ்லீப்பேர் செல்ஸ் தலைவனையே அழிச்சு, இனி அவுங்களுக்கு எந்த ஒரு தகவலும் போகாது.
    இனி எப்படி துப்பாக்கி-2 வரும்??? உங்களுக்கவவது தெரிஞ்சா சொல்லுங்க பேபி....

    ReplyDelete
  2. ///நம்ம மாரத்தள்ளி மல்டிப்ளெக்ஸ் ல மட்டும் ஞாயிற்றுகிழமை 5 ஷோ.///

    ReplyDelete
  3. @ KaniB - நான் எனது அடுத்த பதிவிற்கு எழுதி வைத்திருக்கும் பல விஷயங்களை இங்கு கேள்விகளா எழுதிட்டீங்களே தல :-)

    // படத்தில் எந்த இடத்துலயும் முஸ்லிம் மட்டும் தான் இப்படி செய்றாங்கன்னு எங்கயும் சொல்லப்படல..
    ஆனா அதுக்கு இந்த பிரச்சனை வந்துச்சுன்னு தான் புரியல??//

    இதே சந்தேகம் தான் எனக்கும்...

    துப்பாக்கி-2 வந்தால் பில்லா 2 நிலைமை தான். இது அவங்களுக்கும் தெரியும்னு நினைக்கிறேன். சிங்கம் 2 அநேகமாக நமது சந்தேகத்தை தெளிவு படுத்தும் என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. //சிங்கம் 2 அநேகமாக நமது சந்தேகத்தை தெளிவு படுத்தும் என்று நினைக்கிறேன்!//

      கலக்கிட்டீங்க பேபி... கண்டிப்பாக எதிர்ப்பார்ப்போம்

      Delete
  4. Really good one I liked this review very much. One thing I want to share here knowingly or unknowingly (I dunno know u r doing it knowingly) u r touching all grounds of the current situation thats prevailing in the country in your review thats really a good thing. Keep it up. Proud to be your friend. (Sample: ஊடகங்கள் தான் “சீனா” என்னும் வலுவான நமது அடுத்த எதிரி குறித்த அபாயச் சங்கிலியை அடித்துக்கொண்டே இருக்கின்றன.)
    --Velukal

    ReplyDelete
  5. உங்களுக்கும் விஜய் பிடிக்காது என்று ஏற்கனவே தெரிந்திருந்தாலும்,சரி படம் ஓகே,ஆச்சே விஜய் பற்றி கிண்டல் தோணி இருக்காது என்று நினைத்து படிக்க தொடங்கினேன்.ஆனால்

    விஜய், லீவிற்கு பிரஞ்ச் தாடி விட்டு ஊருக்கு வரும் ஒரு ராணுவ அதிகாரி (அவர் வீட்டில், ராணுவ உடையில் அவர் முறைக்கும் போட்டோவிலும் பிரஞ்ச் தாடி! ஒரு வேளை அது போன லீவில் எடுத்ததோ? டேய்…) எந்தப் படத்திலும் இல்லாத அளவிற்கு விஜய் இந்தப் படத்திற்கு குறைந்த பட்ச ஒத்துழைப்பையாவது நிச்சயம் கொடுத்திருக்கிறார் என்பது ஸ்கிரீனில் தெரிகிறது.
    விஜய் மட்டும் ஸ்கூல் பாய்ஸ் மாதிரி அங்கும் இங்கு ஓடிக்கொண்டு இருப்பதாகத் தெரிந்தது.
    “விஜய் படமா இப்படி”

    இப்படி பதிவெங்கும் பரவி கிடக்கும் விஜய் எதிர்ப்பை நீக்கி பார்த்தல் நல்ல பதிவு,அதுவும் பாகிஸ்தான் பற்றி சொன்னது 100% உண்மை.விஜய் மட்டமான படங்களில் நடித்து உண்மை (சுறா,வேட்டைக்காரன்,இன்ன சில).இப்போது கடந்த 4 படங்களாக (காவலன்,வேலாயுதம்,நண்பன்,துப்பாக்கி ) என்று பார்க்கும்படியான படங்களில் தான் நடித்து வருகிறார். அதென்ன பிற நடிகர்கள் படங்கள் என்றால் நிறைய பதிவர்கள் முந்தய படங்கள் மறந்து விடுகிறார்கள்? விஜய் என்றால் மட்டும் பழைய flash back வந்து விடுகிறது?
    Vijay cannnot do anything better than this, but ARM he can do much much better!
    இதை நீங்களே மறுக்கும் காலம் வரும்

    ReplyDelete
    Replies
    1. தல, முதலில் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் சினிமாவின் ரசிகன். அவ்வளவு தான். விஜய், அஜித், சூர்யா, விக்ரம், இன்னும் யார் யார் இருக்கிறார்களோ - நான் யாருடைய ரசிகனும் இல்லை. விஜய் தொடர்ந்து நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. அதன் வெளிப்பாடு எனது இந்தப் பதிவில் இருக்க வேண்டும் என்பதை முதலிலேயே முடிவு செய்துவிட்டேன். காரணம் இதனால் தமிழ் சினிமா வளரும் என்பதால் தான். விஜய் இதற்கு முன் நடித்த படங்கள் அப்படி. ஜஸ்ட் லைக் தட் 100 கோடியைத் தொட்டிருக்கிறது துப்பாக்கி. விஜய்க்கு இருக்கும் பிரம்மிக்க வைக்கும் "மாஸ்" இதிலிருந்தே தெரிகிறது. துப்பாக்கியை ஆரம்பமாக வைத்து சென்சிபிள் படங்களைத் தொடர்ந்து விஜய் கொடுத்து, அதனால் தமிழ் சினிமா வளர்ந்தால், சந்தோஷப்படும் முதல் தமிழ் சினிமா ரசிகனாக, விஜய் ரசிகனாக நான் தான் இருப்பேன். வெறும் கோட் சூட் போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் நடக்கும் அஜித்தும் கொஞ்சமே தனக்கிருக்கும் பொறுப்பு உணர்ந்து நல்ல படங்களைக் கொடுத்தால் நான் நிச்சயம் அஜித் ரசிகனும் ஆவேன்.

      எனது தேவை, ரொம்ப சிம்பிள் - தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வர வேண்டும். அவ்வளவு தான். அது விஜய் கொடுத்தாலும் சரி, விஜய் சேதுபதி கொடுத்தாலும் சரி. நான் சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன் :-)

      // அதென்ன பிற நடிகர்கள் படங்கள் என்றால் நிறைய பதிவர்கள் முந்தய படங்கள் மறந்து விடுகிறார்கள்? விஜய் என்றால் மட்டும் பழைய flash back வந்து விடுகிறது? // - இந்தக் குற்றச்சாட்டு என் மீது வைக்கப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது நண்பரே!

      //Vijay cannnot do anything better than this, but ARM he can do much much better!
      இதை நீங்களே மறுக்கும் காலம் வரும்// - காத்திருக்கிறேன்.

      ஆனாலும் குறுந்தாடி வைத்த மிலிட்டரி ஆபீஸரையும், பெல் பாட்டம் போட்ட போலீஸ் ஆபீஸரையும் ஏற்றுக்கொள்ள முடியாது ;-)

      Delete
  6. செம்மையான விமர்சனம்..பல விஷயங்களை லாவகமாக எடுத்துச்சொல்லி இருக்கீங்க..தரமான சினிமாவை வரவேற்பவர் தாங்கள் என்பது நான் ஏற்கனவே அறிந்த ஒன்று..இந்த விமர்சனம் அதை கண் முன் கொண்டு வருகிறது.நன்றி.

    ReplyDelete
  7. தரமான விமர்சனம்...வாழ்த்துகள்...
    இந்த படத்தில் முஸ்லீம் குடும்பத்தில் உள்ளவர்கள் தீவரவாதிகள் எனவும் முஸ்லீம் பெண்கள் அதை ஆதரிக்கின்றனர் என்ற காட்சியும் உருவாக்கியுள்ளனர். மற்றும் விஜய்யின் தங்கையை கொல்லும் முன் அரபிக் வார்த்தைகளை அடங்கிய பேனரை காட்டுவார்கள். இது ஆப்கான் மற்றும் முஸ்லீம் நாடுகளில் உள்ள தீவிரவாதிகள் இது போல் செய்வார்கள். ஆனால் இந்தியாவில் எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை செய்ததில்லை.
    இந்த படத்தில் இதுவரையில் தமிழ் சினிமாவில் சொல்லாத ஸ்லீப்பர் செல்ஸ் என்ற வார்த்தையை சொல்லி இருக்குறீர்கள்....ஆனால் ஸ்லீப்பர் செல்ஸ் பற்றி விரிவாக சொல்லவில்லை..சமுகத்தின் மீதும், அரசாங்கத்தின் மீதும் வெறுப்பில் உள்ளவர்கள்தான் ஸ்லீப்பர் செல்களாக மாறுகிறார்கள் என இந்த படத்தில் போகிற போக்கில் சொல்லி இருக்கீறீர்கள்

    இந்த சமுகத்தின் மீதும் அரசாங்கத்தின் மீதும் அரசியல்வாதிகள் மீதும் வெறுப்படைந்தவர்கள் உங்கள் பார்வையில் வெறும் முஸ்லிம்கள் மட்டும்தானா? பிறகேன் ஸ்லீப்பர் செல்களாக கட்டப்படும் 12 பேரையும் முஸ்லிம்களாக காட்டி உள்ளார்கள். இதுவரை பாகிஸ்தான் தீவிரவாதிகளாக காட்டி கொண்டு இருந்த முஸ்லிம்களை இப்போது இந்தியாவில் உங்கள் ஊரில் உங்கள் கடைகளுக்கு பக்கத்திலயே அவர்கள் ஸ்லீப்பர் செல்களாக இருக்கலாம் என மறைமுகமாக பொதுமக்களுக்கு பயமுறுத்தும் விதமாக இப்படத்தில் காட்டி இருக்கீறீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, சரியான விளக்கம் இல்லாமல் வெறும் முஸ்லீம்கள் என்று மட்டும் காட்டியுள்ளது தவறான செயல் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. Sleeper Cells க்கான சரியான விளக்கமும் இல்லை. அதனால் மதத்தின் பெயரால் மூளைச்ச்லவை செய்யப்பட்டவர்களாக இவர்கள் காட்டப்படுகிறார்களா அல்லது அரசாங்கத்தின் மேல் உள்ள கோபத்தினால் மாறினார்களா என்பது போன்ற விளக்கங்கள் எல்லாம் படத்தில் இல்லை. அது போல சுட்டுக்கொல்லப்பட்ட 12 பேரையும் முஸ்லீம்கள் என்று காட்டியதாக எனக்கு நினைவில்லை. அப்படிச் செய்திருந்தால், அவர்கள் Sleeper Cells ற்கு சொல்லும் விளக்கத்தின்படி சமுகத்தின் மீதும், அரசாங்கத்தின் மீதும் வெறுப்பில் உள்ளவர்கள் எல்லாருமே முஸ்லீம்கள் என்றாகிவிடும். அது முழுக்க முட்டாள்தனம். இந்த அரசாங்கத்தின் மேல் யாருக்குத்தான் கோபம் இல்லை?

      முஸ்லீம்கள் மட்டும் தான் மோசமானவர்கள், அவர்கள் இல்லையென்றால் எங்குமே தீவிரவாதம் இருக்காது என்று சொல்வதைப் போன்ற அரசியல் தனங்களெல்லாம் மக்களை ஏமாற்ற மட்டும் தான். ஏதோ மற்றவர்கள் அனைவரும் அண்ணன் தம்பிகளாக கொஞ்சிக் குழாவிக்கொண்டிருப்பதைப் போல! மதம், ஜாதி, மொழி, நிறம், குலம், கோத்திரம், ஏழை, பணக்காரன் என்று இன்னும் எத்தனையோ கருமங்கள் நம்மை பிளந்து கொண்டுதான் இருக்கின்றன. மதம் சற்று சுலபமான, வீரியமான ஒன்று என்பதால் அதை அடிக்கடி உபயோகித்து, தங்களது அரசியலை நடத்துகின்றனர் நம் "தமைவர்கள்". ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுக்காரர்காளும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். நமது உணர்வு தீயில் அவர்கள் உல்லாசமாகக் குளிர் காய்கிறார்கள். அவ்வளாவு தான்.

      சில இடங்களில் // சொல்லி இருக்குறீர்கள் // இப்படத்தில் காட்டி இருக்கீறீர்கள்// என்று எழுதியிருக்கிறீர்கள். நான் எதையும் சொல்லவும் இல்லை, காட்டவும் இல்லை; இயக்குனர் தான் இதற்கு முழுபொறுப்பு ஏற்க வேண்டும், விமர்சகன் அல்ல :-)

      Delete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...