Midnight In Paris | 2011 | U.S

11:29:00 AM



அடுத்த காதல் கதை - Midnight in Paris. 76 வயதான பிரபல இயக்குனர் Woody Allen, இது நாள் வரை தான் எடுத்த படங்களிலேயே சிறந்தது என்று சொல்லும் இந்தப் படம் Gil Pender (Owen Wilson) என்னும் எழுதாளனைச் சுற்றியே நகர்கிறது.

சினிமா கதாசிரியராகப் பணியாற்றும் கில், தனக்கு மனைவியாகப் போகும் காதலி Inez (Rachel McAdams) மற்றும் அவளது பணக்கார பெற்றோருடன் பாரிஸ் நகருக்கு சுற்றுலா வருகிறான். பழைமை விரும்பியான கில்லிற்கு பாரிஸ் மிகவும் பிடித்துப் போகிறது. கலையுலகின் பொற்காலம் "20'களே" என்பது கில்லின் அசைக்க முடியாத நம்பிக்கை. எழுத்து, ஓவியம், நாடகம், சினிமா என அனைத்துமே பெர்ஃபெக்டாக இருந்தது 80களில் மட்டும் தான் என்று தொடர்ந்து வாதிடுகிறான் கில். அதனாலேயே எரிச்சலடைகிறாள் ஐனெஸ். இவளும் சதா ஸ்டேடஸ் பற்றி பேசும் இவளது பெற்றோரும் பாரிஸிற்கு வந்தது சுற்றிப் பார்க்க மட்டும் தான். ஆனால் கில் பாரிஸிறு வந்ததன் காரணமே வேறு. தனது முதல் நாவலை இங்கு எழுதி முடிக்கத் திட்டமிடுகிறான். ஆனால் பழைமை மாறாத பாரிஸின் அழகோ, நிரந்தரமாகவே கில்லை பாரிஸிற்கு குடியேறி விடத் தூண்டுகிறது.

பாரிஸின் பல இடங்களை சுற்றிப் பார்த்துக்கொண்டே இந்த ஜோடி பொகும் பொழுது ஐனெஸின் பழைய கல்லூரி நண்பன் Paul என்பவனை அவனது காதலியுடன் சந்திக்க நேர்கிறது. தன்னை பெரியவன் என்று காட்டிக் கொள்ள சகட்டு மேனிக்கு வரலாற்றை அடித்து நொறுக்கும் பாலை பார்த்த மாத்திரத்தில் பிடிக்காமல் போகிறது. ஆனால் ஐனெஸிற்கோ பால் ஜீனியஸாகத் தெரிகிறான். பாலைப் போல் கில் ஜனரஞ்சக ஆசாமியாக இல்லாமல் பழைமைவாதியாக இருக்கிறான் என்று கோபமும் கொள்கிறாள். நாளடைவில் கில் சொல்லும் எதயும் பொருட்படுத்தாத ஐனெஸ், பால் வாக்கையே வேதவாக்கு என்று அவன் பின்னாலேயே சுற்றத் தொடங்குகிறாள். ஒரு நாள் இரவு பால் சொன்ன கிளப்பிற்கு டான்ஸ் ஆட அனைவரும் கிளம்ப, அந்தக் கூட்டத்தில் ஒட்டாத கில், பாரிஸின் இரவு நேரஅழகை ரசிக்கச் செல்கிறேன் என்று தனியாக பாரிஸ் நகர வீதிகளில் நடக்கத் தொடங்குகிறான்.

வெகு நேரம் நடந்த கில்லிற்கு திரும்பி ஹோட்டலுக்குப் போகும் வழி தெரியவில்லை. நள்ளிரவு நெருங்கும் நேரமென்பதால், எதாவது டாக்ஸி வரும்வரை காத்திருக்கலாம் என்று அப்படியே ஓர் இடத்தில் அமர்கிறான். அப்போது சரியாக இரவு பன்னிரெண்டு மணிக்கு ஒரு பழைய மாடல் கார் வந்து நிற்கிறது. தனியாக இருப்பதற்கு இவர்களோடு செல்லலாம் என்று ஏதும் பேசாமல் காரில் ஏறிக் கொள்கிறான். அந்த டாக்ஸியில் இருப்பவர்கள் அனைவரும் 1920களைப் போல் உடயணிந்திருப்பதை கில் கவனிக்கத் தவறவில்லை. அந்த கார் சென்ற இடத்தில் 1920 களில் வாழ்ந்த புகழ் பெற்ற கலைஞர்களைச் சந்திக்கிறான் கில். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் Ernest Hemingway. தான் காண்பதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவிக்கும் கில், அடுத்த நாள் அதே இடத்திற்கு ஐனெஸையும் அழைத்து வருகிறான். ஆனால் அவளோ பன்னிரெண்டு மணியாவதற்குள் வெறுப்பாகி கில்லை லூசு என்று முடிவு செய்து அவ்விடத்தை விட்டுச் சென்று விடுகிறாள். ஆனால் நள்ளிரவு அந்தக் கார் மறுபடியும் வருகிறது. இம்முறையும் 1920களில் வாழ்ந்த பல முக்கியமான கலைஞர்களை கில் சந்திக்க நேரிடுகிறது முக்கியமாக Picasso மற்றும் அவரது ரகசிய காதலியான Adriana என்னும் அழகியையும்.

பின்னடப்பவையெல்லாமே கில் கனவில் மட்டும் இதுதினம் வரை கண்டு வந்த நிகழ்வுகள் தான். ஆனால் நடப்பவை அனைத்தும் நிஜத்தில், நம்புவதற்குத்தான் ஆள் இல்லை. தான் வாழ நினைத்த காலத்தை இரவில் காணும் கில். அதே உற்சாகத்துடன் தனது நாவலையும் முடிக்கிறான். முடித்துவிட்டு 1920ல் வாழ்ந்த Gertrude Stein னிடம் கொடுத்து 'ரெவ்யு' செய்கிறான்.ஆனால் காலப்போக்கில் பல உண்மைகள் தெரிய வருகிறது கில்லிற்கு. உண்மையான காதலை உணர்கிறான். பாரிஸிலேயே தங்கி விட முடிவு செய்கிறான்.

காதலின் அர்த்தத்தை இதை விட அழகாக யாராலும் சொல்லியிருக்க முடியாது. மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகள், அவர்களுக்கு முக்கியமானதாகத் தோன்றும் விஷயங்கள் (priorities), விட்டுக்கொடுக்கும் தன்மை போன்றவற்றை 1920களுக்குச் சென்று புரியவைக்கிறார் இயக்குனர். Picasso, Salvador Dali, Hemingway, Gertrude Stein போன்றவர்களைப் பற்றித் நமக்குக் கொஞ்சம் அதிகம் தெரிந்திருந்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது என் கருத்து. காதல் படமென்றால் காதலன்-காதலி அவர்களுக்குள் வரும் பிரச்சனைகள், அது தீர்ந்து பின் சேர்தல் என்று தான் இருக்க வேண்டுமென்றில்லை, இப்படியும் இருக்கலாம் என்று சொல்கிறது இந்தப் படம்

மேலும் பாரிஸின் அழகையும், மழை இரவில் அதன் பேரழகைக் காட்சியப் படுத்திய விதமும், படம் நெடுக மனதை வருடும் அந்த மெல்லிசையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்கள்.

மொத்தத்தில், Midnight in Paris - A walk in 1920's in the search of true LOVE! 

You Might Also Like

3 comments

  1. அருமையான பகிர்வுங்க சார்..விமர்சனம் அருமை..அழகான எழுத்துக்கள்..தொடரட்டும் தங்கள் பணி.

    சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

    ReplyDelete
  2. @Kumaran: "2012 ஒரு ஆரம்பம்!" பதிவிற்கு பிறகு நான்கு படங்கள் (Crazy Stupid Love, Midnight In Paris, A Seperation, 678) விமர்சனம் எழுதி பதிவிட்டேன். ஆனால் அதில் இனணத்த டிரைலர்கள், மட்டும் போட்டோக்களால் ஏதோ மால்வேர் பிரச்சனை வந்து Google Chromeல் எனது Blog ஓப்பன் ஆகவில்லை. ஆகவே அவற்றை அழித்துவிட்டு படங்கள் இல்லாமல் இப்போது மீள்பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  3. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_12.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...