Crazy Stupid Love | 2011 | U.S

8:23:00 AM


பொதுவாக காதல் திரைப்படங்கள் என்னைக் கவர்வதில்லை. திரையில் கதாநாயகன்  கதாநாயகி பார்த்தவுடன் காதல் வயப்பட்டு அடுத்த செக்கெண்டிலிருந்து உருக ஆரம்பிப்பதைப் பார்த்தாலே அடங்கோ... என்று எனக்குக் கடுப்பாகிவிடும். ஆனால் என்னவோ இந்தப் படம் எனக்குப் பிடித்திருந்தது. காரணம், வெறுக்கவே முடியாத அளவிற்கு இந்தப் படத்தில் கண்டாமேனிக்கு காதல் கொட்டிக் கிடக்கிறது. மொத்தமாகப் பார்த்தால் ஐந்து காதல் டிராக்குகளுக்கு மேல் இந்தப் படத்தில் உள்ளது.


முதல் காதல் படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான கேலினுடையது (Cal - Steve Carell). தன்னுடைய 15 ஆவது வயதில் எமிலி (Emily - Julianne Moore) என்னும் பெண்ணை சந்தித்து அவளையே தன்னுடைய 17 ஆவது வயதில் திருமணம் செய்து கொண்ட கேல், தன் மனைவியைத் தவிர வேறு பெண் வாசம் அறியாதவன். அப்படியாப்பட்ட கேலிடம் படம் ஆரம்பித்தவுடன் எமிலி தான் தன்னுடன் வேலை செய்யும் டேவிட் (David - Kevin Bacon) என்பவனுடன் படுத்துவிட்டதாகவும், தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் கேட்கிறாள். மனமுடையும் கேல் எதுவும் பேசாமல் சரக்கே என்னுயிர் சகா என்று பாரில் தவம் கிடக்கிறான்.


 இரண்டாவது காதல், இரண்டாவது பிரதான கதாப்பாத்திரமான ஜேகப்பினுடையது (Jacob - Ryan Gosling). பெண்களை ஜஸ்ட் லைக் தட் உஷார் செய்து படுக்கையில் விழவைக்கும் மன்மதனான இவன் பாரில் தன் மனைவி அடுத்தவனுடன் படுத்துவிட்ட சோகக்கதையை சத்தமாக புலம்பிக் கொண்டிருக்கும் கேலுடன் தானாகப் போய் பேசுகிறான். 17 வயதிலேயே திருமணமானதால் வாழ்க்கையில் பலவற்றை இழந்துவிட்டதாக கேலுக்கு புரிய வைக்க முயற்சியும் செய்கிறான். ஜேகப்பின் டிப்ஸ் அண்ட் டிரிக்ஸ்களால் முழுமையாக மாறிய கேலும் தற்காலிக மன்மதனாகி சில பல பெண்களை கரெக்ட் செய்கிறான், படுக்கையில் வீழ்த்துகிறான். ஆனால் அப்படியாப்பட்ட மன்மத குருவான ஜேகப், ஹன்னா (Hannah - Emma Stone) என்னும் பெண்ணை சந்திக்கும் பொழுது மட்டும் காதல் வயப்படுகிறான்.


மூன்றாவது காதல் கேலின் மகனுடையது. பன்னிரெண்டு வயதான ராபி (Robbie) பதினேழு வயதான தனது பேபி சிட்டர் ஜெசிக்காவை (Jessica) காதலிக்கிறான். அதை அவளிடம் வெளிப்படுத்தி, பல வழிககளில் அவளைக் கவரவும் முயற்சி செய்கிறான். ஆனால் ஜெசிக்காவின் கதையோ வேறு.


நான்காவது காதலான ஜெசிக்காவினுடையதோ வேறு கதை. ஜெசிக்கா மேல் பல வருடம் ராபிக்கு காதல் இருப்பது போல், ஜெசிக்காவிற்கு பல வருடம் கேல் மேல் காதல். ஆனால் அதை அவள் வெளிப்படுத்தியதில்லை.


ஐந்தாவது காதல் கேலின் மனைவி எமிலி மேல் டேவிட்டிற்கு இருக்கும் காதல். திருமணமானவளாக இருந்தாலும், எமிலி மேல் டேவிட்டிற்கு விருப்பம் உண்டு. தன்னால் கேல்-எமிலி பிரிந்துவிட்டார்கள் என்பது தெரிந்தவுடன் எமிலியை எப்படியாவது கவர்ந்து விட வேண்டும் என்று முயற்சியும் செய்கிறான்.

இந்தப் பிரதான ஐந்து காதல் கதைகள் தவிர்த்து, கேல் முதல் முதலில் வீழ்த்திய பெண்ணான கேட் கேல் மேல் கொண்டுள்ள காதல், ஜேகப்பைச் சந்திக்கும் முன் ஒரு பழத்தின் மேல் காதல் கொண்டிருந்த ஹன்னாவின் காதல் என்று பலப்பல காதல்கள் இந்தப் படத்தில் உள்ளது.


படத்தில் காதல் அனைவரையும் பாடாய்ப் படுத்திகிறது. சரியான பெயராகத் தான் வைத்திருக்கிறார்கள் படத்திற்கு  Crazy, Stupid, Love!


படத்தில் முறையில்லா உறவுகளாகவே பல காதல்கள் தெரிந்தாலும் அவற்றை காட்சியப்படுத்திய விதத்தில் விரசமில்லாமல் வித்தியாசப்பட்டிருக்கிறார்கள். என்னதான் யாரென்றே தெரியாத ஒரு சின்னப் பையனின் பேச்சைக் கேட்டு ஆளே மாறி பத்து பெண்களை கேல் படுக்கையில் வீழ்த்தினாலும், தன் மனைவி மேல் மேல் அவன் கொண்டுள்ள காதலை எல்லா இடங்களிலும் அவன் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறான். சொல்லப் போனால் இவன் புலம்பல்களைக் கேட்டுத் தான் முதல் இரண்டாவது பெண்ணான கேட்டிற்கு காதலே வருகிறது. இதே கேட் கேலின் மகனான ராபியின் டீச்சராக வருவது தனி காமெடி டிராக்!


பார்த்துப் பேசிய பத்தாவது நிமிடத்தில் பெண்களை மயக்கி “Can we get out of here” என்றழைக்கும் ஜேகப், புல் போதையில், எதற்கும் தயாராக வந்திருக்கும் ஹன்னாவிடன் ஒரு நாள் இரவு முழுவதும் வெறுமனே பேசிக்கொண்டு மட்டும் இருந்து விட்டு உண்மையான காதலை உணருகிறான்.


என்னதான் டேவிட்டுடன் ஒரு முறை அத்துமீறி அது இதுவென்று கசமுசா நடந்துவிட்டாலும், தன் கணவனை மறக்க முடியாமல் எமிலி தவிக்கும் தவிப்பும், அதை வெளிப்படுத்தும் விதமும் அருமை. வெளியில் தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் கேல் இருப்பதை அறியாமல் அவனை அழைத்து, ஹீட்டர் ரிப்பேர் செய்வதெப்படி என்று கேட்பதும், தன்னுடன் பேச வேண்டும் என்பதற்காகவே தன் மனைவி அழைக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டு அழகாக அதைச் சமாளிக்கும் கேல் என்று போகும் அந்த இடத்தில் காதலை உணர்ந்து கேல்-எமிலிக்கு மட்டுமல்ல நமக்கும் சந்தோஷக் கண்ணீர் வந்தாக வேண்டும்.


 தன்னை விட வயது மூத்த பெண்ணைக் காதலிக்கும் ராபி, அவள் என்னதான் சின்னப் பையன் அது இதுவென்று சொன்னாலும் விடாமல் லவ்வுவது பிஞ்சில் பழுத்திருந்தாலும் அழகான காதல்! அதே பெண் லவ்வுவது தன் தந்தையை என்று தெரிந்தவுடன், காதல் தோல்வியில் பள்ளி விழாவில் இந்த உலகில் மோசமான ஒரே விஷயம் காதல் என்று ராபி புலம்ப, அவனைத் தடுத்து இந்த உலகில் அற்புதமான விஷயம் காதல்தான் என்று அதே மேடையில் பேசி எமிலி மேல் தனக்கிருக்கும் காதலை கேல் வெளிப்படுத்த, தந்தையும் மகனும் தங்களது காதலிகளைப் பற்றிப் பேசும் அந்த இடம் கவிதைக் கல கல... 


கிளைமாக்ஸிற்கு கொஞ்சம் முன்பு படத்தின் கேரக்டர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்கும் இடத்தில் நிகழும் குழப்பமும், கை கலப்பும் மற்றுமொரு சிறப்பான கலகல...

இப்படிப் படத்தில் பல அருமையான தருணங்கள் உள்ளது. மேலும் இந்தப் படத்தில் அனைவரும் நல்லவர்கள். வில்லன்களே இல்லை என்பது இன்னொரு விஷயம் (டேவிட் அடுத்தவன் மனைவி மேல் காதல் கொண்டாலும், அது அவளின் விருப்பத்தோடு தான் என்பதால் அவனை வில்லனாக்க முடியாது)


ஆக மொத்தத்தில் காதிலில் இருப்பவர்கள் காதலின் மகத்துவத்தை உணரவும், காதலில் இல்லாதவர்கள் காதலின் அருமையை உணரவும் ‘Crazy, Stupid, Love’ ஒரு அற்புதமான திரைப்படம்!


You Might Also Like

2 comments

  1. விமர்சனம் படித்ததில் ஒன்று தெரிந்துக்கொண்டேன் சகோ..நான் உங்களிடம் கற்றுக்கொள்ள கொஞ்சம் நிறையவே உள்ளது..
    அருமையான விமர்சனம்.நன்றி.

    ReplyDelete
  2. @Kumaran: தல நீங்க கலாய்க்கிறது நல்லா தெரியுது... இருந்தாலும் பரவாயில்ல, எதுவா இருந்தாலும் சந்தோஷமா ஏதுக்குறேன் :-) வருகைக்கும் தொடர் ஆதரவிற்கும் நன்றி!

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...