தமிழ் சினிமா 2011 - பாகம் 02

8:53:00 AM


2011 தமிழ் சினிமாவில் என்னை பெரிதும் ஏமாற்றிய 10 படங்களின் பட்டியல் கீழே

ராஜபாட்டை
இந்த வருடம் என்னை வெறித்தனமாக வெறுப்பேற்றிய படம் என்றால் அது ராஜபாட்டை தான். குழந்தையாக தெய்வத்திருமகளில் நடித்த விக்ரமின் அடுத்த அவதாரம், ‘நான் மகான் அல்ல’விற்குப் பிறகு வந்த ‘அழகர்சாமியின் குதிரை’ சரியாகப் போகாததினால் தன்னை நிரூபிக்க சுசீந்திரன் அடுத்து தரவிருந்த மாஸ் படம் என்ற இரண்டே முக்கிய காரணங்களால் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்ட நாளிலிருந்தே எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். ஆனால் கடைசியில் கடுப்பானது தான் மிச்சம். விக்ரமைச் சொல்லி குற்றமில்லை. நான் மகான் அல்ல அதன் திரைக்கதைக்குப் பெயர் போனது. அழகர்சாமியின் குதிரை கதை இரண்டு பக்க சிறுகதையினுடையது. திரைக்கதை தான் படமே! இவற்றைக் கொடுத்த சுசீந்திரனா இப்படி? திரைக்கதை என்னும் வஸ்து மருந்துக்குக் கூட இல்லை. மூன்று நல்ல படங்களைக் கொடுத்து நல்ல பெயர் வாங்கிய பிறகு படு மொக்கையாக ஒரு ப்ளாப் கொடுக்க வேண்டும் என்பதென்ன தமிழ் சினிமாவின் இன்னொரு சென்டிமெண்டா?

ஏழாம் அறிவு
தீனா, கஜினி, ரமணா கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸின் கதை, திரைக்கதை, சூர்யா, ரெட் ஜெயண்ட், ஸ்ருதிஹாசன், அசாதரண சைனீஸ் வில்லன், தமிழர்கள் அறியாத தமிழன் போதிதர்மன், மிகப் பெரிய பட்ஜெட், அதற்கும் பெரிதான எதிர்பார்ப்பு, வியாபாரம்... இத்தனை இருந்தும் படம் என்னவோ சுமார் ரகம் தான். பேசிய பேச்சிற்கு நான் என்னென்னவோ எதிர்பார்த்து போயிருந்தேன். யாரும் இதுவரை சொல்லாத போதிதர்மரைப் பற்றி மட்டும் காட்டிவிட்டு “பொறுத்தது போதும் பொங்கி எழு தமிழா” என்று சொன்னால் போதும், திரைக்கதையெல்லாம் தேவையேயில்லை என்று முருகதாஸ் நினைத்திருப்பார் போல. கதையின் போக்கை நேற்று படம் பார்க்க ஆரம்பித்த குழந்தை சொல்லிவிடும். அவ்வளவு பெரிய ஓட்டை. நீங்களே இப்படி பண்ணலாமா முருகதாஸ்... எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தோம்...

அவன் இவன்
தேசிய விருதை வாங்கித் தந்த ‘நான் கடவுள்’ படத்தை எடுக்க மூன்று வருடம் ஆகிவிட்டது, பணம் வேஸ்ட், ஆர்டிஸ்ட் டேட்ஸ் வேஸ்ட் அது இதுவென்று குறை சொல்லி பாலாவை வெறுப்பேற்றி அவசரவசரமாக ஒரு படத்தை எடுக்க வைத்தார்கள். முடிவு பாலாவே விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளில் வந்தமர்ந்து விளம்பரப்படுத்தியும் படம் ஓடவில்லை. விஷாலின் அருமையான நடிப்பு விரயமானது தான் மிச்சம். காக்காவிற்கு வெள்ளை பெயிண்டை வலுக்கட்டாயமாக அடித்துவிட்டாலும் அதனால் காக்கா என்று தான் கத்த முடியும். ஒரு படைப்பாளியை அவரது போக்கில் விட்டுவிட வேண்டும். இம்சிக்கக்கூடாது...

நடுநிசி நாய்கள்
விண்ணைத்தாண்டி வருவாயாவிற்குப் பிறகு கௌதம் மேனன் இப்படி ஒரு முயற்சியை எடுப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த முயற்சியை தைரியமாக பாராட்டலாமென்றாலும், படத்தை பாராட்ட முடியவில்லை.

பொன்னர் சங்கர்
பிரசாந்தின் மீதோ, அவரது தந்தை நடிகர்/இயக்குனர் தியாகராஜன் மீதோ, கலைஞரின் கதை வசனத்தின் மீதோ எனக்கொன்றும் பெரிதாக ஈடுபாடு இல்லையென்றாலும், பொன்னர் சங்கரை நான் பெரிதும் எதிர்பார்த்தேன். ரிசல்ட் ஏமாற்றமே. ஏற்கனவே பக்கம் பக்கமாக இங்கே புலம்பியிருக்கிறேன்.

ரௌத்திரம் / வந்தான் வென்றான்
சத்தியமாக ரௌத்திரம் படத்தின் டிரைலரைப் பார்த்து நான் மிரண்டது உண்மை. போலீஸ் கதை தான் என்று நினைத்தேன். ஆனால் போய் பார்த்ததில்தான் தெரிந்தது வேலையில்லாமல் திரியும் கோபக்கார இளைஞனின் கதை என்று. காட்சிப்படுத்திய விதம் அருமை தான் என்றாலும் கதை இல்லாததால் படுத்துவிட்டது.

ஆர்.கண்ணனின் ஜெயம் கொண்டானை இப்பொழுது போட்டாலும் அலுப்படையாமல் பார்ப்பேன். கண்டேன் காதல் காமெடி பற்றி சொல்ல வேண்டியதில்லை. அந்த நம்பிக்கையில் சென்ற வந்தான் வென்றான் வெறுப்பேற்றி அனுப்பியது தான் மிச்சம். அடுத்து சிம்புவை வைத்து டெல்லி பெல்லியை எடுக்கப் போகிறார் என்ற பேச்சு வேறு அடிபடுகிறது.

வேங்கை
சிங்கத்திற்காக ஒரு வருடம் கதை விவாதம் நடத்திய ஹரி மீண்டும் ஃபார்முக்கு வந்து விட்டதாக நினைத்து இரண்டே மாதத்தில் வேங்கை படப்பிடிப்பைத் தொடர்ந்தார். ஊரையே ஆட்டி வைக்கும் அப்பா, அவருக்கு மட்டுமே அடங்கும் பையன், இவர்களை அழிக்க நினைக்கும் ஒரு வில்லன், நடுவே ஒரு காதல், அருவாள்... போரடிக்கிறது!

எங்கேயும் காதல்
பாடல்களை கேட்டு ஏமாந்து விட்டேன். ஹன்ஸிகாவை தவிர்த்து படத்தில் ஒன்றுமே இல்லை.

வெடி
எங்கேயும் காதல் படத்தைப் பார்த்த பிறகும் பிரபுதேவாவை நம்பி இந்தப் படத்திற்கு போனது என் தவறே!


ஓஸ்தி
சல்மான் கான் இடத்தில் சிம்பு. இதெல்லாம் தேவையா?

என்னைப் பெரிதும் ஏமாற்றிய இந்த ஆண்டின் 10 படங்களுக்கு அடுத்து அடுத்த ஆண்டில் நான் மிகவும் எதிர்பார்க்கும் 10 படங்களையும் சொல்லிவிடுகிறேன்...

தலைவரின் கோச்சடையான், கமலின் விஸ்வரூபம் - இந்த இரு படங்களின் எதிர்பார்ப்புகளுக்கு எல்லையே கிடையாது. அவை தவிர்த்து மற்றவை

அரவான்
வசந்த பாலன் காட்டப்போகும் பழந்தமிழர் வரலாறு என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. நிச்சயம் ஏமாற்றாது என நம்பலாம்.

நீதானே என் பொன்வசந்தம்
மீண்டும் ஒரு விண்ணைதாண்டி வருவாயாவாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை. யோஹான் அத்தியாயம்: ஒன்று வருவதற்கு 2013 ஆகலாம் என்றாலும், கௌதம் மேனன் இயக்கப் போகும் விஜய் படம் என்பதால் அதற்கும் ஆர்வம் அதிகமாகத் தான் இருக்கிறது.

ஒரு கல் ஒரு கண்ணாடி
சந்தானம்-ராஜேஷ், நம்பிப் போகலாம்

அன்னக்கொடியும் கொடிவீரனும்
பாரதிராஜாவின் கனவுப் படம். ஏமாற்றாது!

எரியும் தணல்
அவன் இவன் தந்த தோல்வி பாலாவை தூங்க விடாது. முரளி மகன் அதர்வா தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் ஹீரோவாகப் போவது நிஜம்

முகமூடி
மிஷ்கின்-சூப்பர் ஹீரோ. எப்படியிருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பே பி.பியை எகிற வைக்கிறது.

பில்லா 2
விஷ்ணுவர்தனின் ஸ்டைலிஷ் மேக்கிங் வேண்டுமா இல்லை அஜித் மட்டும் போதுமா என்பது இந்தப் படம் வந்தால் தெரிந்து விடும்

மாற்றான்
கே.வி.ஆனந்த் - சூர்யா!

இரண்டாம் உலகம்
செல்வா அண்ட் செல்வா ஒன்லி!

வடசென்னை
வெற்றிமாறன் முதன்முதலில் படமாக்க விரும்பிய கதை என்று சொல்லப்படுகிறது. இம்முறை தனுஷ் தவிர்த்து சிம்புவுடன் இணைந்திருக்கிறார். பார்க்கலாம்.

இவை தவிர ஏ.ஆர்.முருகதாஸின் துப்பாக்கி (ஏழாம் அறிவு எனது போன வருட எதிர்பார்ப்பு லிஸ்டில் முதலாம் இடத்தில் இருந்தது), லிங்குவின் வேட்டை, இயக்குனர் விஜய்-விக்ரம் மீண்டும் இணையும் தாண்டவம், விகரமின் சரித்திரப் படமான கரிகாலன், பாலாஜி சக்திவேலின் புதிய படம், குறும்படங்களில் பட்டையைக் கிளப்பிய பாலாஜி மோகனின் ‘காதலில் சொதப்புவது எப்படி’ போன்றவையும் லிஸ்டில் உள்ளது. ஷங்கரின் நண்பன் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை. 3 இடியட்ஸ் எனக்கு மிகவும் பிடித்த படம். அதைக் கெடுக்காமல் இருந்தால் சரி. பலர் பல விதமாக இணைந்து பூஜை போடுகிறார்கள்; சொன்னது போல் டிரைலர் கூட அற்புதமாக கட் செய்து வெளியிடுகிறார்கள். ஆனால் என்ன படம் தான் பப்படமாகவே இருக்கிறது. பார்ப்போம் 2012 மகிழ்விக்குமா அல்லது வழக்கம்போல வேதனைப்படுத்துமா என்று.

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...