தமிழ் சினிமா 2011 - பாகம் 01

8:23:00 AM

இந்த வருடம் வெகுவாக வலைப் பக்கம் வராமல் இருந்ததற்கு பெரிய காரணம் ஏதுமில்லாததால், "அடுத்த வருடம் நிச்சயம் தொடர்ந்து எழுதவேண்டும்" என்ற உறுதிமொழியை மட்டும் தற்சமயம் எடுத்துவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வருவோம். "தமிழ் சினிமா இந்த வருடம்" என்று பார்த்தால் "பெரிதாக ஒன்றுமில்லை" என்று தான் சொல்வேன். சென்ற வருடமே மோசம் என்று சொல்லியிருந்தேன். இந்த வரும் அதற்கும் மோசம். எதிர்பார்த்த படங்கள் பல ஊத்திக்கொண்டது. சில நல்ல முயற்சிகளும் வந்து வெற்றியடந்திருக்கிறது என்றாலும், பிரியாணி எதிர்பார்த்திருந்தவனுக்கு போனால் போகட்டும் என்று தயிர் சாதம் போட்ட கதை தான் அந்த சில படங்களின் வெற்றிகள்.

இந்த வருடத்தின் பெஸ்ட் 10 ஆக நான் பார்க்கும் படங்கள் கீழே

10) அழகர்சாமியின் குதிரை
சுசீந்திரன் - 'வெண்ணிலா கபடிக்குழு'விற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் வெளிவந்தது 'நான் மகான் அல்ல'. அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் வந்தது இந்த அழகர்சாமியின் குதிரை. நிச்சயம் நல்ல முயற்சி தான் என்றாலும், இந்தக் கதைக்கு இதற்கு மேல் எதுவும் கொடுக்க முடியாதுதான் என்றாலும் இன்னும் கொஞ்சம் பெட்டராக எடுத்திருக்கலாம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

9) வாகை சூட வா
இந்த வருடத்தின் பெஸ்ட் முயற்சி என்றால் அது வாகை சூட வா தான். களவாணியின் இமாலய வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சற்குணம் நினைத்திருந்தால் பெரிய மாஸாக ஒரு படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் தனது அடுத்த படத்தையும் சத்தமே இல்லாமல் வித்யாசமாக கொடுத்ததற்கு வாழ்த்துக்கள். இவரது அடுத்தடுத்த படங்காள் நிச்சயம் தமிழ் சினிமாவின்  போக்கை மாற்றி அமைக்கும் என்று நம்பலாம். வாகை சூட வா - 1960 களில் படிப்பறிவு கொஞ்சம் கூட இல்லாத ஒரு செங்கசூலை கிராமத்திற்கு வரும் ஆசிரியரைப் பற்றிய கதை. கதைக்களனுக்கு எதெல்லாம் தேவையோ அதையெல்லாம் மிக நுணுக்கமாகவும் அற்புதமாகவும் காட்டிய இயக்குனர், கதையின் அடிநாதமான "ஒரு சமூகத்திற்கே கல்விகண் திறக்க வரும் ஆசிரியர்" என்னும் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டார் என்றே சொல்வேன். மெயின் மேட்டர் நெஞ்சில் பதியவில்லை :(

8) சிறுத்தை
இந்த வருடத்தின் மாஸ் ப்ளாக் பஸ்டர் என்றால் அது சிறுத்தை தான். போன வருடம் அண்ணன் சிங்கம் செய்த வேலையை இந்த வருடம் தம்பி சிறுத்தை செய்திருக்கிறது. ஆனாலும் பல முறை பார்த்து சிலாகித்த 'விக்ரமார்குடு' ரிமேக் தான் என்பதால் எட்டாம் இடம் தான் கொடுக்க முடிகிறது.

7) யுத்தம் செய்
'நந்தலாலா' ரிசல்ட் ஏற்படுத்திய கோபத்தால் சேரனை வைத்து மிஷ்கின் செய்த யுத்தம் இந்த யுத்தம் செய். டிபிக்கல் மிஷ்கின் படம். கிட்டத்தட்ட அஞ்சாதேவின் Sequel என்றே சொல்லலாம். லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஜெயப்பிரகாஷ், ஒய்.ஜி, சேரன் ஆகியோரின் அருமையான நடிப்பில் அசத்தலான திரில்லராக வந்திருக்க வேண்டியது. ஆனால் ஏதோ மிஸ்ஸிங். அதற்குக் காரணம் மிஷ்கினின் அந்த டச்சாகக் கூட இருக்கலாம். ஆனாலும் எனக்குப் பிடித்திருந்தது.

6) மயக்கம் என்ன
இதுவும் மேல் சொன்ன மாதிரி தான். ஆயிரத்தில் ஒருவனின் ரிசல்ட் ஏற்படுத்திய வெறியில், விக்ரமை வைத்து 'சிந்துபாத்' என்னும் கதையை ஆரம்பித்து ஆரம்பிபதற்குள் நிறுத்திவிட்டு, தனது பழைய 'டாக்டர்ஸ்' கதையையே இரண்டாம் உலகம் என்று எடுக்க ஆரம்பித்து, பின் ஆன்ட்ரியா உடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் (வதந்திதான்!) அதையும் பாதியிலேயே நிறுத்திவிட்டு புது மனைவி கொடுத்த தெம்பின் காரணமாக அவருக்கே சமர்ப்பணம் செய்ததுபோல் 'மயக்க என்ன' படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். "யாருக்கு வேணும்னாலும் வி.தா.வி ஜெஸ்ஸி மாதிரி ஒரு லவ்வர் கிடைப்பா, ஆனா யாருக்காவது தான் மயக்கம் என்ன யாமினி மாதிரி ஒரு மனைவி கிடைப்பா, அப்படிக்கிடச்சவன் தான் உண்மையில் லக்கி" - இது நான் FBயில் படித்த ஒரு கமெண்ட். யாமினி ரிச்சா வின் நடிப்பு சான்ஸ்லெஸ், "ஆடுகளத்துல அப்படி என்ன பெருசா நடிசிட்டான்னு தேசிய விருது..." என்று தனுஷின் நடிப்பைப் பார்த்து முணங்குபவர்களுக்கு 'மயக்கம் என்ன' ஒரு நல்ல பதில். காதல் கொண்டேன், 7ஜி, மயக்கம் என்ன என்று அடுத்தவன் பிகரை உசார் செய்வதாக Trilogy கதையை எடுத்து விட்டார் செல்வா என்றும் சொல்லலாம் :)

5) கோ
இந்த வருடத்தின் முதல் ப்ளாக் பஸ்டர் என்றால் அது கோ தான். அயன் கொடுத்த தெம்பில் ஜம்மென்று ஒரு படத்தை தந்திருகிறார் கே.வி.ஆனந்த். அயன் கதை 'Catch Me If You Can' படத்தின் தழுவல் அல்ல, அதற்கு முன்னமே எழுதப்பட்ட 'சுபா' கதைதான் என்று சொன்னார்கள். 'கோ' படத்தின் பாதி காட்சிகள் 'State of Play' படத்திலிருந்து எடுக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதற்கு எந்த பதிலும் இல்லை. என்றாலும் அனைவருக்கும் பிடித்த மாதிரி எனக்கும் கோ ரொம்பவே பிடித்திருந்தது. காரணம் நான் கோ பார்த்த பிறகு தான் 'State of Play' பார்த்தேன்!

4) பயணம்
அருமையான படம். குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக்கூடிய லைட்டான படங்களை கொடுத்துக்கொண்டிருந்த ராதாமோகன் என்னடா விமானக்கடத்தல் கதையெல்லாம் எடுக்கிறாரே என்று நினைத்தால் தன் பாணியிலிருந்து சற்றும் விலகாமல் அருமையான் நகைச்சுவை, செண்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த கதை கொடுத்து இந்த முறையும் அசத்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

3) ஆரண்ய காண்டம்
'இந்த வருடத்தின் சில நல்ல முயற்சிகள்' என்று முதலில் சொல்ல முக்கியக் காரணம் ஆரண்ய காண்டம். அருமையான கதை, திரைக்கதை, கேமரா கோணங்கள், நடிப்பு எக்ஸட்ரா எக்ஸட்ரா எக்ஸட்ரா என்று ஒரு புல் பேக்காக வந்த படம். சரியான விளம்பரம் இல்லாததால் வியாபாரம் சற்றுக் குறைவுதான் என்று தெரிகிறது. இந்தப் படத்தைப் பற்றிய எனது விமர்சனம் இதோ

2) எங்கேயும் எப்போதும்
முதலிடத்தைதான் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். சத்தமில்லாமல் வந்து பம்பர் ஹிட் அடித்த படம். படம் பார்த்த பின் ஒவ்வொரு முறை பேருந்தில் பயணம் செய்யும் பொழுதும் திக் திக் கென்று இருப்பது உண்மை. இரண்டு அருமையான, வெவ்வேறு விதமான காதல் கதைகள், ஒரு விபத்து என்ற சாதாரண கதையை வைத்துக் கொண்டு அசால்ட் காட்டிவிட்டார் புது இயக்குனர் சரவணன். ஏழாம் அறிவிற்கு முன் விளம்பரங்களிலெல்லாம் நிரம்பி வழிந்த ஏ.ஆர். முருகதாஸ் ரிலிஸிற்குப் பிறகு ஆள் அட்ரஸே காணோம். ஆனால் ரிலீஸிற்குப் பிறகு எங்கேயும் எப்போதும் விளம்பரங்கள் அனைத்திலும் ஏ.ஆர். முருகதாஸ் தான். இது ஒன்றே போதும் படத்தின் வெற்றியைப் பற்றிஷ் சொல்ல.

1) ஆடுகளம்
சந்தேகமே இல்லாமல் நம்பர் ஒன் ஆடுகளம் தான். இரண்டாம் பாதி தான் கிளாஸிக் என்கிறார்கள் பலர். ஆனால் எனக்கோ முதல் பாதிதான் வெகுவாகப் பிடித்திருந்தது. சேவல் சண்டையில் கே.பி.கருப்புடன் சேர்ந்து அவன் சேவல் ஜெய்ப்பதற்காக நானும் தியேட்டரில் கடவுளை வேண்டிக் காத்துக் கொண்டிருந்தேன்!

ஓக்கே பார்க்கலாம் என்று நான் நினைக்கும் பத்து படங்களின் பட்டியல் கீழே

1) வானம் - சிம்பு கோவில், வி.தா.வி க்குப் பிறகு நன்றாக தனது நடிப்புத் திறமையை அழகாக வெளிக்காட்டிய படம். சந்தானத்தின் காமெடி சரவெடி மிகப்பெரிய பிளஸ்.

2) மங்காத்தா - "தல" ஒருத்தரை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட படம். சூப்பர் வில்லன் அஜித், சூப்பர் காப் அர்ஜுனை வைத்துக் கொண்டு ஒரு அருமையான ராபெரியைக் காட்டாமல், சின்னப் பசங்களை வைத்து கூத்தடித்ததனால் பெஸ்ட் 10ல் இடம் பெறமுடியாமல் போய்விட்டது.

3) போராளி - "நாடோடிகள்" அருகில் கூட வர முடியாது என்றாலும் முதல் பாதிக்காக ஓக்.கே லிஸ்டில் மூன்றாமிடம். ஈழக் கதையாக இருக்குமோ என்று நினைக்க வைத்து வெகுவாக ஏமாற்றிய படம். சுப்ரமணியபுரத்திற்குப் பிறகு வந்த ஈசனை விட, இது எவ்வளவோ பரவாயில்லை. வெகுவாகக் கவர்ந்த புரோட்டா சூரியின் வசனத்தை வைத்தே சொல்ல வேண்டும் என்றால் "டேய் நீங்கள்ளாம் அப்பவே அந்த மாதிரி இப்போ போய் ஏண்டா இப்படி?"

4) தெய்வத்திருமகள் - முதன்முதலில் வெளியான டீசரே சொல்லிவிட்டது, "நான் 'I am Sam'ன் ரீமேக் என்று" இருந்தாலும் விக்ரம், குழந்தை சாராவின் அருமையான நடிப்பினால் தேறி விட்டது.

5) சதுரங்கம் - சரியாக வெளியாக வேண்டிய நேரத்தில் வந்திருந்தால் நிச்சயம் மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கும். அருமையான திரில்லர் பிளஸ் கரு.பழனியப்பனின் ஷார்ப் வசனங்கள்.

6) காவலன் - அதிசயமாக விஜய்த்தனங்கள் இல்லாத ஒரு நல்ல விஜய் படம்.

7) காஞ்சனா - முக்கால் பாகம் லாரன்ஸின் நடிப்பிற்காகவும் மீதி கால் பாகம் சரத் மற்றும் கோவை சரளாவின் கூட்டணிக்காகவும் இந்த இடம்

8) குள்ளநரி கூட்டம் - நல்ல கதையுடன் தேவையானதைக் கொடுத்த டைம் பாஸ் படம்.

9) வேலாயுதம் - இதுவரை வந்ததற்கு இது எவ்வளாவோ தேறலாம்.

10) தம்பி வெட்டோத்தி சுந்தரம் - கொக்கி, கருப்பசாமி குத்தகைக்காரருக்குப் பிறகு கரணுக்கு சொல்லிக்கொள்ளும் படியாக ஒரு படம்.

2011 ஆண்டில் என்னை ஏமாற்றிய 10 படங்கள், 2012ல் நான் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களின் பட்டியல் அடுத்த பாகத்தில்...

You Might Also Like

4 comments

  1. ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட்டுள்ளீர்கள்.
    2012ல் நிறைய பதிவுகள் போட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சத்தியமாய் ஒற்று கொள்ள மாட்டேன் ஆரண்யகாண்டம் முதல் இடம் கொடுத்து இருக்கனும் ஆடுகளத்தை விட கேவலமான படமா இதற்கு நீங்க பதில் கொடுத்தே ஆகணும்......

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...