“நாம் வாழும் உலகம் எவ்வளவு பாதுகாப்பானது?”, “வெளியே செல்லும் உங்கள் பெண் பத்திரமாக வீடு திரும்புவாள் என்கிற உத்தரவாதம் இருக்கிறதா?”, அடித்தால் திருப்பி அடிக்க வேண்டாமா?” - இந்த வசனங்களை எங்கோ கேட்டது போல் இருக்கிறதா? யுத்தம் செய் படத்தின் டிரைலரில் வரும் வரிகளே இவை. இவையேதான் தான் ‘The Last House on the Left’ படத்தின் ஒன்-லைன். யுத்தம் செய் படத்தின் கதை தான் இதிலும். நம்மவர்கள் இடையில் சேரனின் காணாமல் போன தங்கை எப்பிசோடை சொருகி ஒரு போலீஸ் ஸ்டோரியாக சொல்லி, கிளைமாக்ஸில் மிகை யதார்த்தத்துடன் முடித்திருப்பார்கள். இவர்கள் கதைக் கருவை மட்டுமே சுத்தி வந்து அழகாக முடித்திருக்கிறார்கள்.
முதல் காட்சியில் ஒரு ரயில்வே க்ராஸிங் அருகே முகமுடி அணிந்த இருவர் காரில் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படும் கொலையாளி ஒருவனை போலீஸாரைத் தாக்கி தப்பவைக்கின்றனர். தப்பித்த கைதி தன்னை கைது செய்த போலீஸை வில்லத்தனமாக ஒரு வசனத்தைப் பேசிவிட்டு தலையில் சுட்டுக் கொன்று தன் சகாக்களுடன் தப்பிச் செல்கிறான்.
அடுத்த காட்சியில் தங்களது வேலையை எல்லாம் முடித்து விட்டு விடுமுறைக்காக 17 வயது மகளான மேரியுடன் (Mari) ஏரிக்கரையில் அமைந்திருக்கும் தங்களது போட் ஹௌஸிற்கு வருகின்றனர் ஜான்-எம்மா (John-Emma) தம்பதியினர். அடர்ந்த காடு போன்றதொரு இடத்தில் ஏரிக்கரை அருகே தனிமையான ஒரு இடத்தில் அமிந்திருக்கிறது இந்த வீடு. அருகில் ஒரு சின்ன கெஸ்ட் ஹௌஸும் உண்டு. வந்த சிறிது நேரத்திலேயே காரை எடுத்துக் கொண்டு தன் தோழி பெய்ஜ்ஜைக் (Paige) காண ஊருக்குள் செல்கிறாள் மேரி. மேரி ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோரில் வேலை செய்பவள். அவளுடன் பேசிக்கொண்டு மேரி உட்கார்ந்திருக்கும் போது, கடைக்கு வரும் ஜஸ்டின் என்பவனோடு பேச்சு ஏற்பட நட்பாகிறது.
தன்னிடம் மெரிஜுனா எனப்படும் போதை பொருள் இருப்பதாகச் சொல்கிறான். பெய்ஜ் அதை உபயோகிக்க எண்ணி அவனுடன் அவன் தங்கியிருக்கும் இடத்திற்கு வருவதாகச் சொல்கிறாள். மேரியையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறாள். போதையைப் போட்டுவிட்டு ரூமிற்குள் இந்த "டீன்"கள் உலாத்திக்கொண்டிருக்க தடால் என்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகின்றனர் ஜஸ்டினின் தந்தை, அவரது காதலி, மற்றும் ஒரு நண்பன். பயந்து நடுங்கும் ஜஸ்டினிடமும் ஒன்று புரியாமல் முழித்துக்கொண்டிருக்கும் மேரி-பெய்ஜிடமும் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கோபமாகக் கேட்கிறார்கள்.
டிவியில் முந்தைய இரவு போலீஸாரைக் கொடூரமாகக் கொன்று விட்டு தப்பித்த மூவரைப் பற்றிய செய்தி வருகிறது. ரயில்வே க்ராஸிங் கேமராவின் உதவியினால் குற்றவாளிகளின் முகமும் தெளிவாகக் காட்டப்படுகிறது. அவர்கள் தான் இவர்கள் என்று தெரியவருகிறது. போலீஸ் வெளியே வெறிகொண்டு தங்களைத் தேடிக்கொண்டிருக்கும் சமயம், இந்த இரு பெண்களும் (மேரி - பெய்ஜ்) வெளியே சென்றால் ஆபத்து எனக் கருதி இவர்களை பணயக்கைதியாக்கி அவர்கள் வந்த காரிலேயே அழைத்துச் செல்கின்றனர். போகும் வழியில் மேரி முரண்டு பிடித்து தாக்க ஆரம்பிக்க கார் ஒரு மரத்தில் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகிறது. அனைவரும் காயமடைகின்றனர். வில்லன்கள் காயத்துடன் கோபமும் அடைகின்றனர். இவர்கள் இருவருக்கும் சரியான பாடம் கற்பிக்க நினைக்கின்றனர்.
அதன் பிறகு மேரி-பெய்ஜ் நிலைமை என்ன ஆனது என்பதை சொல்லத்தேவையில்லை. புயல் காரணமாக அந்த ஏரியாவில் இருக்கும் ஒரே வீடான போட் ஹௌஸிற்கு வருகிறார்கள் கொலையாளிகள். மேரியும் குற்றுயிரும் குறை உயிருமாக தப்பிப்பிழைத்து அதே வீட்டிற்கு வருகிறாள். வீட்டில் இருப்பது மேரியின் பெற்றோரான ஜான்-எம்மா. இதன் பின் நடப்பது டிவிடியில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய மீதிக் கதை.
I Split on Your Grave என்றொரு படம். தன்னைக் கற்பழித்த காமுகர்களை அந்தப் பெண்ணே தேடிப் பிடித்துக் கொடூரமாகக் கொல்வாள். அதே டைப் கதைதான் இதுவும். தாங்கள் உயிரையே வைத்திருக்கும் தங்களது மகளை துன்புறுத்திய மிருகங்களை எப்படி சாதாரண ‘கார்பொரேட்’ பெற்றோர்கள் வேரறுக்கிறார்கள் என்பதே இந்தக் கதை. முந்தைய படமும் 1980 களில் வெளிவந்து பின் சென்ற வருடம் ரீ-மேக்கப்பட்டது. இந்தப் படமும் 1972 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த படத்தின் ரீ-மேக்கே ஆகும்.
பிடிக்கும் பிடிக்காது என்று சொல்வதற்கு இந்தப் படத்தில் எதுவும் இல்லை. ஊருக்குள் என்னவெல்லாம் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது, எப்படிப்பட்ட மிருகங்கள் வாழும் இடத்தில் சாமாணியர்களான நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ‘இதெல்லாம் ஒரு மேட்டரா’ என்கிற ரீதியில் நாம் செய்யும் சின்ன சின்னத் தவறுகள் எவ்வளவு பெரிதாக உருவெடுக்கும் என்பவற்றைத் தெரிந்து கொள்ளவே இந்தப் படங்கள், பகிர்வு எல்லாம்.
வித விதமாக கொலை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளவும் இந்தப் படம் பயன் பெறலாம்.