தமிழ் சினிமாவும் பதிவர்களும் - எனது பார்வை

1:41:00 PM

இதோ இதோ என்று இப்போது தான் பதிவெழுத நேரம் கிடைத்தது. வழக்கம் போல் வேலை பளு காரணமல்ல, சுத்தமான சோம்பேறித்தனம் தான் காரணம் (சோம்பேறித்தனத்தில் என்ன சுத்தம்,ம்ம்ம் தெரியவில்லை). இது எனது 100 ஆவது பதிவு. இந்தப் பதிவு தலைவர் படமான எந்திரனைப் பற்றியதாக இருக்கும் என்று போன பதிவில் சொல்லியிருந்தேன். ஆனால் நான் இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்கும் முன்னேயே, ஆளாளுக்கு பெரிய பெரிய பஞ்சாயத்தெல்லாம் வைத்து எந்திரனை அடித்து துவைத்துக் காயப் போட்டுவிட்டு, தங்கள் வழக்கமான வேலைகளில் இறங்கிவிட்டனர். பிரச்சனையை மறுபடியும் கிளறுவதாக இருந்தாலும் பரவாயில்லை, தலைவரைப் பற்றி நான் எழுதாமல் விட மாட்டேன். இந்தப் பதிவில் இல்லையென்றாலும் எனது அடுத்தடுத பதிவுகளில் நிச்சயம் எந்திரனைப் பற்றிய எனது பார்வை நிச்சயம் இருக்கும். அதற்கு முன்னால் நான் மிகவும் நேசிக்கும் என் தமிழ் சினிமாவைப் பற்றி வெகுநாட்களாக நான் எழுத வேண்டும் என்று நினைத்திருக்கும் சில கருத்துக்களை இன்று எழுதி விடலாமென்றிருக்கிறேன்.

நான் ஏற்கனவே பல பதிவுகளில் சொல்லியிருப்பதைப் போல (பலர் அவர்களது பலப் பதிவுகளில் சொல்லியிருப்பதைப் போல), தமிழ் சினிமா என்பது முதலில் ஒரே ஒரு மாநிலத்தவர் என்ற அளவில் ஆரம்பித்து, பின் ஆந்திரா, பின் கேரளா, பின் கர்நாடகம் என்று தன் ரசிக வட்டத்தைப் பெருக்கி, 75 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி பாலிவுட் எனப்படும் இந்தியாவின் சினிமா கார்பரேஷனைத் தொட்டிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும், பாலிவுட்டைவிட நமது வியாபாரம் கம்மியானது தான். இங்கு வாரத்திற்கு இரண்டு படம் ரிலீஸ் ஆனால், பாலிவுட்டில் ஒரு நாளைக்கு இரண்டு படம். நமக்கு பிரதானம் நான்கு மாநிலங்கள் என்றால் அவர்களுக்கு பதினைந்து மாநிலம் (நமது நான்கை சேர்க்காமலே). ஆக நமது வியாபார நிலைப்படி நாம் நம் சக்தியை மீறி (கவனிக்க தகுதியை மீறி அல்ல) நிறையவே சாதித்து வருகிறோம், சவாலாகவும் இருக்கிறோம். பாலிவுட்டுடனே இத்தனை மல்லுக்கட்டு என்றால், ஹாலிவுட்டை யோசித்துப் பாருங்கள். நாம் நினைத்துப் பார்க்கக்கூடிய இடமா அது? நாம் யோசித்துப் பார்க்கக்கூடிய வணிகமா அது? ஹாலிவுட்டில் ஒரு நாளைக்கு சுமார் எத்தனைப் படம் ரிலீஸாகிறது என்பதை விக்கீபிடியாவினாலேயே கணக்கெடுக்க முடியவில்லை. அப்படியாப்பட்ட ஒரு மாபெரும் சக்தியுடன் ஒப்பிட்டு ஒப்பிட்டு நாம் நமது ஒருசில நல்ல முயற்சிகளையும் சரிவர பாராட்டாமல், தடையாக இருந்து வருகிறோம். ஆ..வூ என்றால் ஆஸ்கார், கேன்ஸ் என்று பேசுகிறோம் அல்லது 'உலக சினிமா' என்று அலப்பறையைக் கூட்டுகிறோம். எதை எடுத்தாலும் மட்டம் தட்டும் ஒரு கேவலமான கம்பேரிஷன். இது அந்தப் படத்தின் காப்பி, இது இந்தப் படதின் காப்பி என்று தனது மேதாவித்தனத்தை தன்னை ரசிக்கும் ஒரு கோமாளிக் கூட்டத்தின் முன் அரங்கேற்றுவது இப்போதைய பேஷன். இன்ஸ்பிரேஷனா காப்பியா, Plagiarism ஆ என்று பட்டிமன்றம் வேறு. இவர்கள் காப்பி என்று தெரிந்தால் உடனே கண்ணை மூடிக் கொள்வார்களா இல்லை படக்கென எழுந்து போய் விடுவார்களா, தெரியவில்லை. 


1973 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வெளி வந்தது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரே படத்தில் பல நாடுகளை மக்கள் பார்த்து ரசித்தனர். தாங்கள் வாழும் ஊரைத் தாண்டாத பல பொது ஜனங்கள் எம்.ஜி.ஆர் தயவால் உட்கார்ந்த இடத்திலேயே பல நாடுகளை சுற்றிப் பார்த்தனர். சினிமாவிலும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி மிகப் பெரும் புரட்சியாக அமைந்தது உலகம் சுற்றும் வாலிபன் என்று சொல்வர். நான் பிறப்பதற்கு பல வருடங்களுக்கு முன் வந்த படமாக இருந்தாலும் இன்றளவும் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் உலக சுற்றும் வாலிபனும் ஒன்று. இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால் எம்.ஜி.ஆர் உலக நாடுகளில் யாரும் காட்டாததைக் காட்டவில்லை. உலக சினிமா வரலாற்றில் இல்லாத ஒரு கதையைச் சொல்லிவிடவில்லை. ஆனாலும் மக்கள் அதைக் கொண்டாடினர். காரணம், நம் மக்களுக்கு அது புதியது.


அதே போல் தான் சிவாஜி நடித்து 1954 ஆம் ஆண்டு வெளிவந்த 'அந்த நாள்' படம். 1950 ஆம் ஆண்டு வெளிவந்த ரோஸமானின் (Rashômon) காப்பியாகவே அது இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் அது தமிழுக்கு, தமிழ் மக்களுக்கு அப்போது ஒரு கொலை, ஐந்து விதமான சாட்சியங்கள், சென்னையில் குண்டு, ஜப்பானுடன் நேரடி ரேடியோத் தொடர்பு என் அத்தனையும் எவ்வளவு புதிதாக இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் புரியும்.

வெகு சமீபமாகவே ஆங்கிலப் படங்களும் அதைத் தொடர்ந்து உலகப் படங்களும் நமக்கு சுலபமாகக் கிடைக்கின்றன. எனக்குத் தெரிந்த வரையில் 2002 ஆம் ஆண்டு வரை இந்திய மொழி அல்லாத ஒரு படமாக இருந்தால் அது ஆங்கிலப் படமாக மட்டும் தான் இருந்து வந்துள்ளது. பிலிம் சொசைட்டி, பிலிம் சேம்பர் போன்ற இடங்களில் மட்டுமே 'ஒலக' திரைப்படங்கள் காட்டப்பட்டு வந்தன. அதை எத்தனை பேர் பார்த்து வந்தனர் என்று தெரியவில்லை. இப்போது 15 ரூபாய்க்கு எந்தப் படமாலும் சுலபமாக கிடைத்து விடுவதால், உட்கார்ந்த இடத்திலேயே அவையனைத்தையும் பார்த்துவிட்டு கோடிக்கணக்கில் பணம் போட்டு பல வருடம் உழைத்து எடுக்கும் படங்களில் இது நொட்டை, இது சொல்லை என்று கூறி அதைப் பத்து பேருக்கு பரப்பவும் செய்கிறார்கள். அவர்கள் பார்த்து கண்டுபிடித்து விட்டதால், அதை யாரும் பார்க்க வேண்டாம் என்று பொதுநலத் தொண்டு என்று நினைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்கிறார்கள். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு நம் மொழியை ஒட்டி இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தமிழ் சினிமா பார்ப்பது. அவர்கள் எந்த சினிமா பார்க்கலாம் என்று முடிவு செய்வது பதிவுலகைப் பார்த்து தான் (இது நான் நேரடியாகப் பார்த்த ஒன்று). ஒரு படம் முதல் காட்சி வெளிவந்த அடுத்த ஒரு மணிநேரத்திற்குள் விமர்சனம் என்ற பேரில் அந்தப் படத்தை பதம் பார்க்கும் படலம் தொடங்கி விடுகிறது. படத்தை முழுதாகப் பார்ப்பார்களா அல்லது பாதிலேயே எழுந்து வந்து விமர்சனம் எழுத ஆரம்பித்து விடுவார்களா என்று தெரியவில்லை. ஒருவர் படம் நன்றாக இல்லை என்று சொன்னால் ஒரு பத்து பேர் அவருக்கு ஒத்து ஊதி "தல, நீங்க சொல்லிட்டீங்கல்ல அப்போ படம் கண்டிப்பா நல்லாயிருக்காது, நான் பார்க்கமாட்டேன், யாராவது பாக்கப் போறாங்கனாலும் எச்சரிக்கை பண்ணிடுறேன்" என்று கமெண்ட் வேறு எழுதுகிறார்கள்.


ரோஸமான், ரோலாண்ட் எம்ரிச், அமோரஸ் பெர்ராஸ், கிம் கி டுக், ஷீ டெவில், ஸ்டான்லி கியூப்ரிக், கொரியன் கிளாசிக்ஸ் எல்லாம் நமக்குத் தெரியும். எப்போதாவது ஏதாவது ஒரு நல்ல படம் வந்தால் குடும்பத்துடன் பார்க்கலாம் என்று காத்திருக்கும் ஒரு சராசரி தமிழ் குடிமமகனான ஒரு குப்பனுக்கோ சுப்பனுக்கோ அது தெரியுமா? அவன் ஒரு படத்தை நல்ல படம் என்று முடிவு செய்து அந்த படத்திற்கு கிளம்பும் முன் நம் போன்ற ஆட்களின் விமர்சனக் குத்துகளை எதிர்கொள்ள முடியாமல் அந்தப் படம் தியேட்டரை விட்டே போயிருக்கும். பிறகு அவன் அடுத்த படத்திற்கு காத்திருக்க வேண்டியது தான். நம் போன்ற விமர்சனங்களால் மட்டும் தான் ஒரு படம் ஓடுவதில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். "ஆம்" என்பதே எனது அழுத்தமான பதில். ஒரு படத்தின் வெற்றி விகிதத்தை, அது தியேட்டரில் ஓடும் நாட்களை பெருமளவில் நிர்ணயிப்பது 'ஏ' சென்டர்களே. அங்கு தான் படத்தின் கலெக்ஷன் அமோகமாக இருக்கும். படம் எடுத்தவனும் தன் லாபத்தை கணக்கிடுவது அங்குதான். ஒரு படம் வெளியான உடனே அந்த 'ஏ' சென்டர் மக்களுக்கு அந்தப் படத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டு விடுகிறது. உடனே அவர்கள் ஓடி வருவது வலைஉலகிற்கு தான். டைம்ஸ் ஆப் இந்தியாவில் இத்தனை ரேட்டிங், இந்தத் தளத்தில் இத்தனை ரேட்டிங் என்று யாரோ ஒருவர் படம் பார்த்து விட்டு கொடுக்கும் ரேட்டிங்கை வைத்து இவர்கள் தங்களது ரசனையை முடிவு செய்கிறார்கள். "படத்திற்கு ரேட்டிங் சரியில்லை. அதனால் யாரும் போக வேண்டாம்" என்று விஷயம் காட்டுத்தீ போல் பரவுகிறது. பின்னாலேயே சுடச் சுட நம்மவர்களின் 'விமர்சனப் பதிவுகள்'. இப்படியிருந்தால் மக்கள் எப்படி படம் பார்ப்பார்கள்? எப்படி தமிழ் சினிமா முன்னேறும்? எழுத்துச் சுதந்திரம், பொது நலத் தொண்டு, மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை காப்பியடித்து எடுக்கப்பட்ட ஒரு படத்தைப் பார்த்து விரயம் செய்வதிலிருந்து நான் தடுக்கிறேன், அது இது என்று யாராவது உளறினால், அவர்களுக்கு 'கும்பிபாகம்' தான். ஒருவருக்கு ஆக்ஷன் பிடிக்கும், மற்றொருவருக்கு செண்டிமெண்ட் பிடிக்கும், இன்னொருவருக்கு காமெடி பிடிக்கும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும் போது, இதை விட நான் பெரிய பெரிய ஒரிஜினல் ஸ்டண்ட் படமெல்லாம் பார்த்திருக்கிறேன். இந்தப் படம் வெறும் ரோப் பைட் தான் என்று நம் போன்றவர்கள் எழுதி வைத்துவிட, நியாயமாக உழைத்து தலைகீழாக கயிற்றில் தொங்கி நடித்ததெல்லாம் பார்க்க யாருமில்லாமல் திரும்பிவடுகிறது. 



ஒரு அருமையான உதாரணம் சொல்லவேண்டுமானால் 'ஆயிரத்தில் ஒருவன்' என்று ஒரு படம் சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தை எந்த பாடு படுத்தினோம் என்று யோசித்துப் பாருங்கள். இத்தனைக்கும் அது செல்வராகவனின் சொந்த மூளையில் தோன்றிய சொந்தக் கதையே. எனக்குத் தெரிந்து அது எந்தப் படத்தின் காப்பியும் அல்ல. ஆனால் விமர்சனம் என்ற பெயரில் அந்தப் படத்தை துண்டுதுண்டாக வெட்டி, சோழர்கள் பற்றிய புனைவுக்கதையை சோழர்களின் உண்மையான வரலாற்றுடன் ஒப்பிட்டு நாஸ்த்தி செய்து, கடைசியில் ஒரு தமிழ் சினிமா இயக்குனரின் உச்சகட்ட கற்பனை என்று நாங்கள் வியந்த அந்தப் படம் பலர் பார்வைக்கு வரும் முன்னேயே பெட்டிக்குள் போனது. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி போல் செல்வராகவன் எடுத்த காவியங்களெல்லாம் ஓடோ ஒடு என்று ஓடியது. மிகவும் சிரமப்பட்டு, நிஜமாகவே உழைத்து, உழைத்து செதுக்கிய புதுப்பேட்டை சம்பந்தமேயில்லாமல் 'சிட்டி ஆப் காட்' உடன் கம்பேர் செய்யப்பட்டு ஓடாமல் போனது. அடுத்து வந்த ஆயிரத்தில் ஒருவனும் இப்படி. இதெல்லாம் உண்மையாகவே என்னைப் போலான தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எவ்வளவு பெரிய வயித்தெரிச்சலாக இருக்கிறது தெரியுமா? உண்மைக் கதை என்று சொல்லப்பட்டு பின்பு அப்படியே உட்டாலக்கடி செய்து எடுக்கப்பட்ட ட்ராய், அலெக்ஸாண்டர் போன்ற படங்கள் தமிழ்படுத்தப் பட்டு ஆகாஓகோ என்று தமிழகமெங்கும் ஓடின. ஆனால் நம் இனத்தவரின் கதையை அடேய் இது உட்டாலக்கடி தான்டா என்று முதலிலேயே சொல்லிவிட்டு காட்டுபோதும் அது ஓடவில்லை. இல்லையென்றால் நாம் ஓட விடுவதில்லை.




தமிழகத்தில் எத்தனை பேர் டூட்ஸி (Tootsie) படம் பார்த்திருப்பார்கள்? யோகி படம் வெளியான அன்றே ஒரு பிரபல பதிவர், அழகாக அந்தப் படத்தையும் இந்தப் படத்தையும் ஒப்பிட்டு தன் தளத்தில் எழுதியிருந்தார். "நல்ல வேளை தப்பித்தோம்" என்கிற ரீதியில் நூறு கமெண்டுகள் வேறு. என்னவோ அவர்கள் அனைவரும் அந்த டூட்ஸியை பார்த்து விட்டமாதிரியும், அல்லது காப்பி அடித்து எடுக்கப்பட்ட படத்தை நான் ஒரு போதும் பார்க்க மாட்டேன் என்று சபதம் செய்திருப்பதைப் போலவும் என்னா அலப்பறை. முடியலட சாமீ... எங்கள் ஊர் போடியில் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' படம் ரிலீஸ் ஆகியிருந்த சமயம். எனது தந்தையை என்னால் 'பொம்மரிலு' பார்க்க வைக்க முடியாது. அதனால் இந்தப் படத்திற்கு அழைத்துச் சென்றேன். என் தந்தை மட்டுமல்ல தியேட்டரே சந்தோஷ் சுப்பிரமணியத்தை மிகவும் சந்தோஷமாகப் பார்த்தது. சித்தார்த்தின் நடிப்பில் பாதியைக் கூடத் தொடாத ஜெயம் ரவிக்கு தாய்மார்க்களின் கரிசணம் டன் கணக்கில் கிடைத்தது. நான் கல்லூரி சேர்ந்த சமயம் வெளியான எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி படத்தைப் பார்த்து விட்டு எனக்கும் முழு திருப்தியாக இருந்தது. ஏனென்றால் அது ஒரு ரீமேக் என்பது அப்போது எனக்குத் தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும் அதை நான் பார்க்காததால் இதை என்னால் ரசிக்க முடிந்தது. இந்தப் படங்களெல்லாம் ஓடுகிறது. ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் ஓடுவதில்லை...

பதிவு படுபயங்கர பெரிதாகப் போய் விட்டது. இவ்வளவு தூரம் எத்தனை பேர் பொறுமையாகப் படித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. படித்தவர்கள் அனைவரும் தங்களது கருத்துகளை கண்டிப்பாக பின்னூட்டமிடவும். தமிழ் சினிமா முன்னேற வேண்டும், அது வேறு நாட்டுப் படத்தின் காப்பியாகவே இருந்தாலும் சரி. ஏனென்றால் நம் மக்களுக்கு அது புதிது. எனவே அதற்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது என்பதே என் வாதம்.

உலக சினிமா என்ற பெயரில் எதைக் காட்டினாலும் ஆஹா ஓஹோ என்கிறார்கள். தமிழ் சினிமா என்று வரும்போது முதல் முயற்சியாய் இருக்கும் போது கூட ஒன்றும் தெரியவில்லை என்றாலும் கூட "எதாவது ஒரு படத்தின் காப்பியாகத் தான் இருக்கும்" என்று முடிவு செய்து விடுகிறார்கள். ஆங்கில சினிமாக்களையும், பிற மொழிப் படங்களையும் ஓடி ஓடி வளர்க்கும் நாம், நம் சினிமாவை ஆதரிக்க வேண்டாமா? உங்களது வரவேற்பைப் பொருத்து அடுத்த பதிவிலும் இதே விஷயத்தைப் பற்றிய எனது மேலும் சில கருத்துக்களை விவாதிக்க இருக்கிறேன்.

தயவு செய்து யாரையும் வெளிப்படையாகக் குறிப்பிட்டோ, கேவலமான சொற்களால் திட்டி அவமதித்தோ எழுத வேண்டாம். அது நமக்கு தான் அசிங்கம். இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருந்தால் மட்டுமே எனக்கும், படிக்கும் உங்காளுக்கு திருப்தியாக இருக்கும். Comment Moderation எடுத்து விட்டேன். நன்றி...    

You Might Also Like

33 comments

  1. கை கொடுங்கள் ஆனந்தன்..நல்ல பதிவு..ஆனால் ஒரு விசயம்..உலகசினிமாவை பார்த்து மறு உருவாக்கம் செய்யவேண்டும்.உ.ம் தேவர் மகன்,நாயகன்[ஒரிஜினல்;காட்பாதர்]ஈயடிச்சான் காப்பி செய்யக்கூடாது உ.ம் யோகி [Tsotsi],அமரன்[காட்பாதர்]மறு உருவாக்கம் மக்களால் கொண்டாடப்படும்.ஈ.காப்பி நிராகரிக்கப்படும்.

    ReplyDelete
  2. அற்புதமான பதிவு நண்பா.நீங்கள் சொல்வதுபோல் புதிய முயற்சிகளை நசுக்கக்கூடாது.

    //ஒரு படத்தின் வெற்றி விகிதத்தை, அது தியேட்டரில் ஓடும் நாட்களை பெருமளவில் நிர்ணயிப்பது 'ஏ' சென்டர்களே//

    இல்லை நண்பா.கலெக்‌ஷனைப் பொறுத்தவரை இந்தியாவில் ‘பி’ மற்றும் ‘சி’ தான் நிர்ணயிக்கின்றன்.’ஏ’ கிளாஸ் மக்கள் சதவிகிதத்தில் மிகவும் குறைவுதான்.அதிலும் பதிவைப் பார்த்துவிட்டு செல்லும் ‘ஏ’ கிளாஸ் மக்கள் சதவிகிதத்தில் மிக மிக குறைவு.அவர்களால் படத்தின் வசூல் எந்த விதத்திலும் பாதிக்காது.

    ReplyDelete
  3. //மிகவும் சிரமப்பட்டு, நிஜமாகவே உழைத்து, உழைத்து செதுக்கிய புதுப்பேட்டை சம்பந்தமேயில்லாமல் 'சிட்டி ஆப் காட்' உடன் கம்பேர் செய்யப்பட்டு ஓடாமல் போனது//

    ஒரு படம் காப்பி என்று சொன்னவுடன் ஓடாமல் போகும் அளவிற்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை.அந்தப் படம் பொதுவாக எல்லோருக்கும் பிடிக்காமல் போனதால் ஓடவில்லை.அதேபோல் தான் ஆயிரத்தில் ஒருவனும்,யோகியும் கூட.அதன் வெற்றியை வலைத் தளங்கள் எந்தக் காலத்திலும் நிர்ணயிக்கும் அளவிற்கு இன்னும் நம் சமூகம் வரவில்லை.

    உதாரணம்: கஜினி.அந்தப் படம் "Memento" வின் காப்பி என்று எல்லோருக்கும் தெரியும்.அதைக் கிழிக்காதவர்களே கிடையாது.ஆனால் அது இங்கு மட்டுமில்லாமல் இந்தியிலும் எடுக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.ஏனென்றால் அது எல்லோருக்கும் பிடித்திருந்தது. பொதுவாகவே மக்களுக்கு பிடித்த படம் வெற்றி பெறும்.பிடிக்காத படம் தோற்கும்.அவ்வளவுதான்.மற்றபடி தமிழ் சினிமா வளர்ச்சியை வலைத்தளம் தடுக்கிறது என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது நண்பா.

    ReplyDelete
  4. நண்பரே,

    ஒன்று பிடிக்கவில்லை என்று ஒருவர் கருதினால் அதற்கான காரணங்களுடன் பிடிக்கவில்லை என்பதில் என்ன தவறு இருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன், எந்திரன் ஆகிய இரண்டையும் நான் மிகவும் மோசமான படங்களாகவே கருதுகிறேன். வலையுலகப் பதிவுகளால் ஒரு படம் வெற்றி பெறுகிறது அல்லது தோல்வி அடைகிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களிற்கு பிடித்திருந்தால் விமர்சனங்களையும் தாண்டி அப்படம் வெற்றி பெறும் என்பதே என் கருத்து. புதிய முயற்சி என்பதற்காக என் கருத்தில் நல்லதல்ல என்று தோன்றும் ஒன்றை என்னால் நல்லது என்று கூற முடியாது. தமிழ் சினிமாவின் புதிய நல்ல முயற்சிகளிற்கு ஆதரவு தரவெண்டுமென்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை.

    ReplyDelete
  5. @உலக சினிமா ரசிகன்:
    // மறு உருவாக்கம் மக்களால் கொண்டாடப்படும்.ஈ.காப்பி நிராகரிக்கப்படும் //
    நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே ஆனால், ஈ.கா வாகவேயிருந்தாலும் தமிழ் மக்களுக்கு அது புதியது தானே? இப்படிச் சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஈ.கா வாகவேயிருந்தாலும் தமிழ் மக்கள் ரசனைக்கேற்ப சில மாற்றங்களை செய்து கொடுத்தால் அது கண்டிப்பாக வெற்றி பெரும் என்பது என் கருத்து... வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.


    @RNS: எனக்குத் தெரிந்து தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரு படம் வெற்றிப் படம் என்பதை வேண்டுமானால் 'பி' 'சி' நிர்ணயிக்கலாம். ஆனால் படத்தைத் தயாரித்த ஒரு தயாரிப்பாளர் அல்லது அதை வாங்கி வெளியிடும் டிஸ்ட்ரிபியூட்டர் அல்லது திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள் இவர்கள் அனைவரும் லாபமடைவது ஏ செண்டர்களில், மக்கள் கொடுத்துப் பார்க்கத் தயாராகயிருக்கும் அந்த டிக்கெட் விலையில் தான் என்பது என் கருத்து. ஆயிரத்தில் ஒருவன் போன்ற பேண்டஸி படங்கள் நிச்சயம் ஏ, பி யை மட்டுமே டார்கெட் செய்து எடுக்கப்பட்டிருக்கும். ஏனென்றால் திரைக்கதை அப்படி. அங்கு விமர்சனம் என்ற பெயரில் நடத்தப்படும் அபத்தங்கள் படத்தை பற்றிய ஒரு தவறான கருத்துகளை ஏற்படுத்தி மக்களை படம் பார்க்கவிடாமல் செய்துவிடுகின்றது.

    இது நான் கண்கூடாக பார்த்ஹ்ட ஒன்று. ஆயிரத்தில் ஒருவன் படம் ரிலீஸான சமயம், நான் முதல் நாளே பார்த்டுவிட்டேன். த்மிழில் அதுவும் செல்வராகவனைடமிருந்து இப்படி ஒரு படமா? என்று ஆச்சரியப்பட்டுப் போய், அடுத்த நாளும் புக் செய்திருந்தேன். அலுவல நண்பர் கேட்டார், "Times of Indiaவில் ரேட்டிங் சரியில்லையே அந்தப் படத்தைப் போய் இரண்டாவது தடவையாகப் பார்க்கிறீர்களா?" என்று. யோசித்துப் பாருங்கள், இது ஆரோக்கியமான விஷயமா? இதைத் தான் பதிவர்களாகிய நாம் விமர்சனம் என்ற பெயரில் செய்து கொண்டிருக்கிறோம். ஐ.டி துறையில் பிளாக் படிக்கும் பழக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதும் நான் கண்ணால் கண்ட உண்மை.

    வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பரே...

    ReplyDelete
  6. @கனவுகளின் காதலன்: நண்பரே என் லாஜிக் சிம்பிள். ஆயிரத்தில் ஒருவனும் சரி எந்திரனும் சரி உங்களுக்குப் பிடிக்கவில்லை ஆனால் எனக்குப் பிடித்திருந்தது. நீங்கள் ஒரு பிரபல் பதிவர், ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் உங்கள் பதிவுகளை விடாமல் வாசிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் (அது தான் உண்மை :)). நீங்கள் ஒரு படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் அந்தப் படத்தை எத்தனை பேர் பார்ப்பார்கள் பார்க்கமாட்டார்கள் என்பது தெரியாத விஷயம். ஆனால் அதே படத்தை நீங்கள் சரியில்லை என்று சொன்னால் நிச்சயம் அந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் (உங்களது ரசிகர்களின்) எண்ணிக்கை பெருமளவில் குறையும். படம் நன்றாக இருந்தால் தாராளமாக எழுதுங்கள். உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் "நன்றாகயில்லை, பார்க்காதீர்கள்" என்றெல்லாம் எழுத வேண்டாம், உங்களுக்கு பிடிக்காமல் போனது பலருக்கு பிடிக்கும் வாய்ப்பிருக்கிறது என்பது தான் என் வாதம். ஆங்கிலப் படங்கள், உலகப் படங்களுக்கு தாராளமாக எழுதுங்கள். தமிழ் படத்திற்கு வேண்டாமே. விமர்சனங்களால் மட்டும் தான் படம் ஓடுவதில்லை என்று நான் சொல்லவில்லை. திருட்டு வி.சி.டி போலத்தான் இந்த விமர்சனங்களும். படத்தின் வியாபாரத்தைக் குறைகின்றது. 5% காரணமாக இருந்தாலும் அதைத் தடுக்கலாமென்று நினைகிறேன். அவ்வளவுதான் :) வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பரே...

    ReplyDelete
  7. கலக்கிட்ட தம்பி. அப்புறம் இன்னொரு விசயம். சினிமாங்றது வியாபாரம். அதுல விளம்பரம்,லாபம் எல்லாம் முக்கியமான விசயம்.

    ஆனா சிலர், சினிமாவ என்னமோ அரசியல் ரேஞ்சுக்கு உயர்த்தி அது நொட்டை இது நொட்டைன்னு சொல்றது ஆச்சரியமா இருக்கு.

    அரசியலுல பொதுமக்கள் பணத்துக்கான ஆதங்கம். சினிமா டோட்டலா ஒரு வியாபாரம். அரசியல விமர்சனம் செய்ய மறந்திடுறாங்க. பாவம் சினிமாக்காரன நோகடிச்சிடுறாங்க.

    என்ன புரிதலோப் போங்க.

    அருமையான இடுகை.

    ReplyDelete
  8. என்னோட கருத்து - ஒரு படம் மொக்கையா இருந்தா, அதைப் பத்தி மொக்கைன்னு எழுதுவது தப்பே இல்லை. ஆனா, ஒரு மொக்கைப் படத்தை, ஒரு குறிப்பிட்ட நடிகர் (அதான், ‘தலைவர்’) நடிச்சிருந்தா, ஆஹா ஓஹோ, ஹாலிவுட்டுக்கு இணைன்னெல்லாம் எழுதுறதுதான் காமெடி :-) ..

    எந்திரன் ஒரு டப்பாங்குறதுல சந்தேகம் இல்லை. என் தளத்தில் நான் எழுதுவது, என்னுடைய கருத்துக்களே. ஒரு படத்தைப் பார்த்துவிட்டு, எனக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் எழுதுவேன். அதைவிட்டுவிட்டு, படம் டப்பா - ஆனா இதை நல்லா இருக்குனு தான் எழுதணும்.. ஏன்னா இது தமிழ்ப்படம்.. அதுவும், ‘தலைவர்’ படம்.. தலைவர் எனக்கு நிறைய செஞ்சிருக்காரு... அந்த நன்றிக்காகவாவது பாராட்டலாம் - இது எனது எண்ணம் அல்ல.. இப்படிப்பட்ட விமர்சனம் எழுதப் பல பேர் இருக்கிறார்கள் :-)

    அது என்னங்க.. லாஜிக்கலாவே இல்லாத பல விஷயங்களை மட்டுமே எழுதுறதுன்னு சபதம் எதாவது போட்ருக்கீங்களா? தமிழ் ப்ளாக்ஸ்னால படங்கள் ஓடாமப் போகுதுன்ற விஷயத்தை, LKG கொழந்த கூட ஒத்துக்காது.. எந்திரன் ஒரு மகா மொக்கை. ஆனா அது ஓடாம போயிருச்சா என்ன? :-)

    புதிய முயற்சின்னு சொல்லிட்டு, கொடூரமான மொக்கையை எடுத்தால், அதைப் பாராட்ட வேண்டும் என்பது உங்கள் ஆசை. இல்லையா? எல்லாப் படத்தையும் பாராட்டிக்கினே இருக்கணும்னா, அதுக்கு எதுக்கு ப்ளாக்? நிறை குறை எல்லாத்தையும் சொல்வதுதான் ஒரு விமர்சகனோட கடமை. அதை விட்டுவிட்டு, தமிழ்ப்படம் - ஸோ பாராட்டலாம்றது - வெல்.. மெகா காமெடி :-).. ஏன்? இண்ட்ரஸ்டிங்கான ஒரு ஹாலிவுட் படத்துல இருந்து, யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா ஈயடிச்சாங்காப்பி அடிக்கத் தெரியுதுல்ல? அதே மாதிரி, ஏன் சுவாரஸ்யமா ஒரு படம் எடுக்கத் தெரியலை?

    அதே மாதிரி, காப்பியடிச்சாலும் பரவாயில்லை.. ஆதரிக்கிறேன்னு சொல்ற உங்க கடமை உணர்ச்சி என்னைப் புல்லரிக்க வைக்குது :-) .. சீக்கிரமே ராம நாராயணன் உங்களை உதவி இயக்குநராகச் சேர்த்துக்கொள்ள எனது வாழ்த்துகள் :-)

    இந்தப் பதிவுல சொல்லிருக்குற விஷயங்கள், நிஜமாவே காமெடியாத்தான் இருக்கு :-)..

    நீங்க எவ்வளவு biasடா விமர்சனம் எழுதிக்கிட்டு இருக்கீங்கன்றதுக்கு இந்த வரிகளே உதாரணம். Unbiasedஆ இனி எழுத முயற்சி பண்ணுங்க :-)

    //பிரச்சனையை மறுபடியும் கிளறுவதாக இருந்தாலும் பரவாயில்லை, தலைவரைப் பற்றி நான் எழுதாமல் விட மாட்டேன்//

    மத்தபடி, தமிழ்ப்படங்களைப் பற்றிய எனது விமரிசனங்கள் தொடரும் :-).

    ReplyDelete
  9. //அதைவிட்டுவிட்டு, படம் டப்பா - ஆனா இதை நல்லா இருக்குனு தான் எழுதணும்.. ஏன்னா இது தமிழ்ப்படம்.. அதுவும், ‘தலைவர்’ படம்.. தலைவர் எனக்கு நிறைய செஞ்சிருக்காரு... அந்த நன்றிக்காகவாவது பாராட்டலாம் - இது எனது எண்ணம் அல்ல.. இப்படிப்பட்ட விமர்சனம் எழுதப் பல பேர் இருக்கிறார்கள் :-) //

    அடங்கப்பா, இது என்னடா அனுமார் வால் மாதிரி போய்கிட்டே இருக்கு... நண்பரே, நான் என்ன "மொக்கை படங்களா இருந்தும் தமிழ் படங்களை நல்லா இருக்குதுனு எழுதுங்க ப்ளீஸ்" என்றா உங்களிடம் வந்து மன்றாடுகிறேன்? இல்லவே இல்லை. உங்களுக்கு சுத்தமாக பிடிக்காத 'டப்பாங்குத்து', 'மொக்கை', 'டண்டணக்கா' படங்கள் பலருக்கு பிடித்த படங்களா இருக்க நிறைய வாய்ப்பிருக்கு. அதனால், விமர்சனம் என்ற பேரில் உங்கள் கருத்தைத் திணிக்காதீர்கள் என்று மட்டும் தான் சொல்கிறேன். இஷ்டமிருந்தால் கேட்கவும், இல்லையா, எனக்கு பிரச்சனையே இல்லை. நீங்க பாட்டுக்கு எழுதித் தள்ளுங்க. யார் உங்கள் கையைப் பிடித்து தடுத்தது. தடுத்தாலும் கேட்கவா போகிறீர்கள் :-)

    //ஒரு மொக்கைப் படத்தை, ஒரு குறிப்பிட்ட நடிகர் (அதான், ‘தலைவர்’) நடிச்சிருந்தா, ஆஹா ஓஹோ, ஹாலிவுட்டுக்கு இணைன்னெல்லாம் எழுதுறதுதான் காமெடி :-)//

    "தலைவர்" கான்செப்ட் ரஜினிக்கு மட்டும் தான். அது எனது பதிவின் முதல்பத்தியோடு நின்று விட்டது. நான் இரண்டாம் பத்தியிலிருந்து நான் சொன்னது ஏனைய தமிழ்ப் படங்களைப் பற்றி. "நீங்கள் தயவு செய்து தலைவரை தப்பாக பேசாதீர்கள், படம் ஓடாமல் போகப்போகிறது" என்று நான் உங்களைக் கேட்பதாக நினைத்தால், நீங்களே உங்களை 'ஏதோ' வாக நினைத்து கொண்டுள்ளீர்கள் என்று தான் அர்த்தம். நான் பொதுவாச் சொன்னால், "நீ என்னத் தான் சொல்ற, நா அப்படித்தான் பண்ணுவேன்"னு சொல்றீங்க. காமெடி யாரென்று இதைத் படிக்கும் மஹா ஜனங்களுகுத் தெரியும் :-)

    //புதிய முயற்சின்னு சொல்லிட்டு, கொடூரமான மொக்கையை எடுத்தால், அதைப் பாராட்ட வேண்டும் என்பது உங்கள் ஆசை. இல்லையா? எல்லாப் படத்தையும் பாராட்டிக்கினே இருக்கணும்னா, அதுக்கு எதுக்கு ப்ளாக்? நிறை குறை எல்லாத்தையும் சொல்வதுதான் ஒரு விமர்சகனோட கடமை. அதை விட்டுவிட்டு, தமிழ்ப்படம் - ஸோ பாராட்டலாம்றது - வெல்.. மெகா காமெடி :-).. ஏன்? இண்ட்ரஸ்டிங்கான ஒரு ஹாலிவுட் படத்துல இருந்து, யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா ஈயடிச்சாங்காப்பி அடிக்கத் தெரியுதுல்ல? அதே மாதிரி, ஏன் சுவாரஸ்யமா ஒரு படம் எடுக்கத் தெரியலை?//

    இதோ தமிழ் சினிமாவின் பிரகாசமான எதிர்காலம். ஆங்கிலப் படங்களைப் போல எடுக்க வேண்டும் என்பது உங்களது ஆசை. அவ்வளவு பணம் போட நீங்கள் தயாரிப்பாளர் ஆனால் தான் முடியும். அதுவும் உங்கள் டேஸ்டுக்கு எடுக்க தமிழ் நாட்லயே எந்த டைரக்டரும் இல்ல, என்ன பண்ணணும்னு சொல்லுங்க? கிம்-கி-டுக் க கூட்டிக்கிட்டு வருவோமா? அவர் எவ்ளோ சம்பளம் கேட்பார்? ரத்த வெறியாக அருமையான கதைகள் நிறைய வச்சிருப்பார். மேலும் அவர் தனது ரசிகர்களுக்கு (உங்களையும் சேர்த்துதான்) நிறைய செஞ்சிருக்கார்னு வேற எனது போன பதிவில் சொல்லியிருகீங்க :-)

    //சீக்கிரமே ராம நாராயணன் உங்களை உதவி இயக்குநராகச் சேர்த்துக்கொள்ள எனது வாழ்த்துகள் :-) //
    சினிமாவில் வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. அதுவும் ராமநாராயணன் போன்ற அனுபவமிக்கவர்கள் கூப்பிட்டால் உடனே சேர்ந்து விடுவேன். பாசத்திற்கு நன்றி :-)

    //மத்தபடி, தமிழ்ப்படங்களைப் பற்றிய எனது விமரிசனங்கள் தொடரும் :-)//
    தொடரட்டும் திருப்பணி :-)

    ReplyDelete
  10. எங்க காலேஜ்ல, ஒரு பையன் இருந்தான். இண்டர் காலேஜ் காம்ப்டீசன்ல ஜெயிச்சுட்டு வர்ற எல்லாரையும், "சரியான மொக்கடா நீங்க, அவன் அப்படி, இவன் இப்படி, மொத்தத்தில எவனுமே உருப்படியில்ல, ஆனா எப்படிதான் பரிசு மட்டும் கொடுக்குறானுங்கன்னு தெரியலன்னு சொல்லுவான்"
    ஒரு சமயம் எல்லாரும் வெறுத்துப் போய்,"புள்ள நல்லா பேசுதே, பல புக்ஸுங்க, டிவிடி எல்லாம் பாக்குதேன்னு, அந்த இயருக்கு, மாப்ள நீயேப் பண்ணுடான்னு சொன்னோம்.

    அட்டர் ப்ளாப். அதுவரைக்கும் நாலஞ்சு கப்பு வாங்குனது, அந்தவாட்டி "0" கப்.

    நீதி என்னான்னா, "சொல்றவங்க செய்றதில்ல. செய்றவங்க சொல்றதில்ல"

    சாரு நிவேதிதா " என்னளவுக்கு புக் எழுதனவங்க, எழுத்துலகில் ஷேம் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவங்க மட்டுந்தான் என்னப்பத்தி கமெண்ட் பண்ணமுடியும்"ன்னு சொல்றார்.

    இது எல்லா ஃபீல்டுக்கும் பொருந்தும்தானே.

    (i hope, i dont cross my level)

    ReplyDelete
  11. என்னோட பின்னூட்டத்துல ரெஃபரன்ஸ் காட்டுறதுல இன்னும் ரெண்டு மூணு பாயிண்ட் விட்டுட்டீங்க :-) .. அதையும் சேர்த்துக்கொள்ளவும்.. :-) ஹாஹ்ஹா

    ReplyDelete
  12. @ VJR - சாரு சொல்றது, அவரோட படைப்பைப் பத்தி யாரு வேணாலும் விமரிசனம் பண்ணலாம்ன்றதுதான். அவருக்குத் தேவையில்லாம அட்வைஸ் பண்ணுறவங்களைப் பத்தித்தான் அவரோட இந்த ரீதியிலான விமரிசனங்கள் இருக்கும். அதுவும், அவரோட தளத்துலயே வரும்... சில முட்டாள்தனமான அட்வைஸ்கள் பொழிவானுங்க சில பேர்.. அவனுங்களுக்குத் தான் அது :-)

    இன்னொண்ணு. விமர்சனம்ன்றது, சும்மா வேணும்னே ஒரு படத்தை மட்டம் தட்டுவதில்லை. அதில் உள்ள குறைகளை முழுக்க வெளியே வைப்பதே. ஒரு படத்தை, நம்ம ஆனந்தன் வாதிடுவதுபோல், அது தமிழ்ன்றதுனாலயோ, இன்னும் அவருக்குப் புடிச்ச சில விஷயங்கள் அதுல இன்வால்வ் ஆகுறதுனாலயோ மட்டும் பாராட்டிட முடியாது.. ஏன் அந்தப் படம் மொக்கைன்னு தெளிவா விமர்சனங்கள்ல இருக்கும்.

    unbiased அப்படின்னு ஒரு வார்த்தை இருக்கு. அது என்னன்னு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்.

    @ பேபி ஆனந்தன் - உங்க ஒட்டுமொத்தப் பார்வையே தவறு. அது ஏன்னா..

    தமிழில் நல்ல படங்கள் வேணும்னா, அதுக்கு பட்ஜெட் அவசியமில்லை. நல்ல கதை இருந்தால் போதும். களவாணி ஒரு உதாரணம். அதேபோல், அங்காடித் தெரு. இதெல்லாம் ஹாலிவுட் பட்ஜட் போட்டா எடுத்தாங்க? நான் தயாரிப்பாளரா இல்லாமலே இப்படிப்பட்ட நல்ல படங்கள் எடுக்கலாம். அதை ஏன் புரிஞ்சிக்காம இப்புடியெல்லாம் காமெடி அறிக்கைகள் ? :-) இதோ உதாரணம்..

    //அவ்வளவு பணம் போட நீங்கள் தயாரிப்பாளர் ஆனால் தான் முடியும். அதுவும் உங்கள் டேஸ்டுக்கு எடுக்க தமிழ் நாட்லயே எந்த டைரக்டரும் இல்ல, என்ன பண்ணணும்னு சொல்லுங்க? கிம்-கி-டுக் க கூட்டிக்கிட்டு வருவோமா? அவர் எவ்ளோ சம்பளம் கேட்பார்? ரத்த வெறியாக அருமையான கதைகள் நிறைய வச்சிருப்பார். மேலும் அவர் தனது ரசிகர்களுக்கு (உங்களையும் சேர்த்துதான்) நிறைய செஞ்சிருக்கார்னு வேற எனது போன பதிவில் சொல்லியிருகீங்க :-) //

    உண்மைய சொல்லணும்னா, கிம் கி டுக்குக்கு நான் வெறியன் அல்ல. அவரைத் ‘தலைவர்’ என்று சொல்லிக்கொண்டு, அவர் சொல்லுவதற்கெல்லாம் ஆமாம்சாமி போடமாட்டேன். அவரது படத்தை வெறித்தனமாக (காரணம் இல்லாமலேயே) ஆதரிப்பதில்லை. இதைப்பற்றி உங்களது இதே ரேஞ்சில் உள்ள மின்னஞ்சலுக்கு விவரமாக நான் போட்ட பதிலை நீங்கள் படிக்கவே இல்லையென்று இப்போது தெரிகிறது :-)

    நான் சொல்வது: ஒரு விஷயத்தைப் பற்றி எழுதுகிறீர்களா? அது unbiasedஆக இருக்கட்டுமே. ஏன் ஒரு சார்புநிலையைத் தெளிவாக எடுத்துக்கொண்டு, கண்மூடித்தனமான வாதங்கள்? இதுதான் நான் சொல்ல வருவது.

    உங்களது இந்தப் பதிவில் நீங்கள் சொல்லவரும் வாதம் முற்றிலும் தவறு. தமிழ் மட்டுமல்ல.. எந்தப் படமாக இருந்தாலும், கண்மூடித்தனமான சப்போர்ட் என்பது இருக்கவே கூடாது. நிறைகுறைகளை அலசிப் பார்த்தல் வேண்டும்.

    இதற்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்? இதோ..

    அய்யா.. தமிழ்ப்படத்தை நிராகரிக்காதீர்கள். குப்பன், சுப்பன் அண்ட் கோ இந்தப் படத்தை விரும்பலாம்.. எனவே, பிடிக்கவில்லை என்றால் அதை எழுதாதீர்கள்..

    ஒரு படத்தைப் பற்றிய உண்மையான கருத்தை வெளியே வைப்பதே ஆரோகியமான விமர்சனம். அதுதான் சரி. உங்களுக்கு ஒருவேளை இப்படிப்பட்ட அன்பையாஸ்ட் விமர்சனங்கள் வேண்டாம் என்றால், ஜால்ரா விமர்சனங்கள் போடும் தளங்களோடு உங்களது பார்வையை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடிக்காத தளங்கள் பக்கம் தவறிக்கூட வந்துவிட வேண்டாம் :-)

    ReplyDelete
  13. இந்த விவாவதம் இப்போதைக்கு முடிய போவதில்லை.. என்பது மட்டும் எனக்கு தெரியும்...

    ReplyDelete
  14. :-) ஹாஹ்ஹா... இது பாயிண்ட்டு ஜாக்கி :-) .. பட் நான் முடிச்சாச்சு.. அவ்ளோ தான் நம்ம கருத்துகள்.. நான் போறேன் ஆணி புடுங்க :-)

    ReplyDelete
  15. @ஜாக்கிசேகர்: நீங்கள் சொல்வது சரிதான் ஸார். இத்துடன் இந்த வாக்குவாதத்தை நிறுத்திக் கொள்வது தான் நல்லது

    @கருந்தேள் கண்ணாயிரம்: ம்ம்ம்...நல்லா பேசுனீங்க... நன்றி :-)

    ReplyDelete
  16. Real pucnh is "சொல்றவங்க செய்றதில்ல. செய்றவங்க சொல்றதில்ல""

    ReplyDelete
  17. என்னைப் பொறுத்த வரைக்கும்,விமர்சனத்தில் நல்லது,கெட்டது இரண்டையும் தாராளமாக எழுதலாம்.ஆனால் தமிழ்படங்களைப் பற்றி எழுதும்போது,அதனுடைய ஒப்பீடு அந்த நேரத்தில் வந்திருக்கும் மற்ற தமிழ் படங்களை அல்லது தென் இந்திய படங்களுடன் ஒப்பிட்டு,படம் நன்றாக வந்திருக்கிறதா இல்லையா என்றுதான் சொல்ல வேண்டும்.

    தமிழ் படங்களை,ஆங்கில அல்லது உலகப் படங்களுடன் ஒப்பிட்டு,தமிழ் படங்களை மிகவும் கேவலப்படுத்தி எழுதுவ‌து தேவையில்லாதது.நம்முடைய அம்மாவை விட படித்தவர்கள்,அறிவானவர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள்.அதற்காக அவர்களுடன் ஒப்பிட்டு நாம் நம்முடைய அம்மாவை குறை கூறிக் கொண்டிருப்போமா என்ன!

    ReplyDelete
  18. சினிமா என்பது ஒரு பொதுவிஷயம்தானே? விமர்சனங்களைத் தடுப்பது அவ்வளவு சரியான விஷயமாக இருக்காது.

    ReplyDelete
  19. We can Watch movies only if we like. We cannot watch movies because of their hard work.

    Many people want us to watch movie to protect producers.

    ReplyDelete
  20. Mr. Karunthel Kannayeram,

    What is your definition of 'good movie' vs 'mokkai'?

    Do you have any degree/certification in film critics?


    Have you seen/read/followed any well known film critics in India or anywhere in the world?

    How can you simply just say that if i don't like a movie, then, it is bad and no one should go and watch it.

    yes, i don't know you, neither you do, and the way you justify your thoughts does not make sense to me (again, it is just me). And i am writing this as Anonymous to avoid un-necessary "torture" from all "Blog Guards".

    ReplyDelete
  21. @ Mr Anonymous..

    Well, my definition of a good movie is a movie in which the story plays a major role. The story must be good. I don't believe in crap movies which are taken using a huge budget without a single line of story.. It's that simple

    and, to answer ur second question abt degree in film critics, let me ask u something.. why are ppl like u start to jump on ur toes once u see anyone pass on criticism on tamil movies? what's ur problem :-) All I am saying is that I will support movies with good stories, which can very well be filmed in a shoestring budget, and which are a treat to watch.. It's funny and pathetic to c ur comments, which tell me u have totally not understood what I hv said in my comments :-)

    And, abt crap movies and my comments on them, I have clearly given the cons of watching those bullshit films, whenever I have written abt them.. It's very clear.. I am not simply saying that ppl ahould'nt watch it.. I am giving the proper reasons too :-) ..

    Hope I hv answeres to ur questions..

    ReplyDelete
  22. @ Mohan - //என்னைப் பொறுத்த வரைக்கும்,விமர்சனத்தில் நல்லது,கெட்டது இரண்டையும் தாராளமாக எழுதலாம்.ஆனால் தமிழ்படங்களைப் பற்றி எழுதும்போது,அதனுடைய ஒப்பீடு அந்த நேரத்தில் வந்திருக்கும் மற்ற தமிழ் படங்களை அல்லது தென் இந்திய படங்களுடன் ஒப்பிட்டு,படம் நன்றாக வந்திருக்கிறதா இல்லையா என்றுதான் சொல்ல வேண்டும்.

    தமிழ் படங்களை,ஆங்கில அல்லது உலகப் படங்களுடன் ஒப்பிட்டு,தமிழ் படங்களை மிகவும் கேவலப்படுத்தி எழுதுவ‌து தேவையில்லாதது.நம்முடைய அம்மாவை விட படித்தவர்கள்,அறிவானவர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள்.அதற்காக அவர்களுடன் ஒப்பிட்டு நாம் நம்முடைய அம்மாவை குறை கூறிக் கொண்டிருப்போமா என்ன!//

    ஏன் இந்த செண்டி? தமிழ்ப்படங்களைப்போலவே? :-)

    அதாவது, உங்கள் வாதத்தின் படி, எந்திரனை எடுத்துக் கொள்வோம். அதனை, இதனுடன் வெளியான மற்ற தமிழ்ப்படங்களான பெண் சிங்கம், குட்டிப்பிசாசு, சுறா ஆகியவைகளுடன் ஒப்பிட்டுத் தான் நான் எழுதினேன்.. ஆகவே, நீங்கள் சொன்னதைத்தான் செய்திருக்கிறேன் :-)

    Jokes apart, எந்திரன் வெளியாகும்போது, அதன் இயக்குநர் - ஷங்கர் என்பவர் - வீசிய அறிக்கைகளைப் படித்திருப்பீர்கள். அவரும் சரி, அப்படத்தின் தயாரிப்பாளர்களும் சரி, இப்படம் ஆங்கிலப்படத்தைப் போலவே தான் எடுக்கப்பட்டுள்ளது என்றுதான் இன்றுவரை வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலப்படங்களைக் காப்பியடித்து (bicentennial man & I Robot..வசனங்களைக்கூட மாற்றாமல் அப்படியே சுட்டிருப்பதை மிக எளிதாக இப்படங்களைப் பார்த்தவர்கள் உணரலாம்) எடுத்திருக்கிறார்கள் என்று வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாமே தவிர, அது கண்டிப்பாக ஆங்கிலப்படத்தைப் போல் எடுக்கப்பட்டதல்ல. அம்முயற்சியில் எந்திரன் ஒரு பரிதாபகரமான தோல்வி.

    இவர்கள் இப்படி உளறிக்கொட்டுவதால்தான், அது அப்படி இல்லை என்று எழுத வேண்டியிருக்கிறது.

    உங்கள் அம்மா சென்டிமெண்ட், பி வாசு படங்களில் வொர்க் ஔட் ஆகும்.. இந்தப் பின்னுட்டத்தை அவருக்கு அனுப்பவும் :-) அதைப் படிக்க, சின்னத்தம்பி பட வசனம் போலவே இருந்தது :-)

    ReplyDelete
  23. கண்ணா, நல்லப் படங்றது டைரக்டரோ, தயாரிப்பாளரோ சொல்றதில இல்ல. அவங்க பிசினஸுக்கு அவங்க கூவுறாங்க. அது அவங்க பொழப்பு.

    நல்லா இல்லன்னு சொல்ல நமக்கு என்ன வந்துச்சு. அதுல அப்படியே நொந்துநூலாகிற தோரணை எதுக்குங்றேன். any loss to u my dude.

    கடைசியாய் யார் என்ன சொல்லியும் ஒரு புண்ணியமில்லை. மக்களுக்கு பிடிக்கனும் கண்ணா. நீயும் நானும் ஒரு 300 ரூபாவுக்கு ஒர்த். i mean 2 tickets. haha.

    பில்டப்புல படம் ஓடிடனுமுன்னு பயந்தா, பாபாவும்,குசேலனும் ஓடியிருக்கனுமே. so dont worry my dude, let the public decide. i hope already decided and collected more than 300 cr, is it?

    ReplyDelete
  24. கண்ணா..

    //நல்லா இல்லன்னு சொல்ல நமக்கு என்ன வந்துச்சு. அதுல அப்படியே நொந்துநூலாகிற தோரணை எதுக்குங்றேன். any loss to u my dude//

    கண்ணா..நான் நொந்து நூலாகலை :-) .. அது என் வேலையும் இல்லை. என் வேலையை நான் பார்க்கப் போயாச்சு.. இதோட ரிவ்யூ எழுதிட்டு, அதுக்கப்புறம் நான் பல போஸ்ட்களைப் போட்டுட்டுப் போயாச்சு.. :-) ஆனால், பிடிவாதமா இங்க வந்து, அதுவும் என்னை அட்ரஸ் பண்ணி, “எந்திரன் நல்ல படம்.. எந்திரன் நல்ல படம்”னு வந்து என்னை கன்வின்ஸ் பண்ணியே ஆகணும்ற இந்த வேலைனால எனக்கு டைம் வேஸ்ட் .. உங்களுக்கும் டைம் வேஸ்ட்.. போயி உருப்படியா எதாவது பண்ணலாமா ?

    And, juz coz a crap film collects money, it's not a gud film to me :-) that will still be crap to me :-)

    adios.. Gotta do some useful work :-)

    ReplyDelete
  25. //நிறை குறை எல்லாத்தையும் சொல்வதுதான் ஒரு விமர்சகனோட கடமை. //

    நல்ல விவாதக்களத்திற்கான இடுகைக்கு வாழ்த்துக்கள்.போன முறை ஜாக்கி vs கருந்தேள் கண்ணாயிரம் விவாதத்தில் நான் ஜாக்கி பக்கம் நின்னுகிட்டிருந்தேன்.இப்ப நான் கட்சி மாறிட்டேன்:)

    காரணம் கருந்தேள் கண்ணாயிரம் சொன்ன அடைப்பானும் அவர் அடிச்சு ஆடுறதாலும்:)

    ReplyDelete
  26. ஆஹா கொஞ்ச நாள் இந்தப் பக்கம் வராமலே இருந்துட்டேன்... இன்னும் முடியலையா?

    ஆணி புடுங்கப் போனவரை வம்படியா இழுத்து வச்சு பேசிக்கிட்டு இருக்கீங்களே.இது உங்களுக்கே நல்லா இருக்கா? அவர் தான் படம் புடிக்கல, நான் ஒததுக்ககமாட்டேன், என்ன ஏன் இந்தப் படம் நல்ல படம், ரஜினி படம் ஓடும்னு சொல்ல சொல்றீங்கனு கேக்குறார்ல... விடுங்கப்பா.

    நண்பரே, எல்லாரையும் திட்டிட்டேன். நீங்க இனிமே எதுவுமே சொல்ல வேண்டிய கஷ்டம் இல்லை.ok வா :-)

    ReplyDelete
  27. ஏனுங்க ஆனந்து, படம் கலக்சன்ல பட்டையக் கெளப்புதாமே. ஓவர்சீஸ் 60 கோடியத் தாண்டிருச்சாம். ஆக மொத்தம் மூனே வாரத்துல 320 கோடி வசூல் செஞ்சு ப்ளாக்பஸ்டருன்னு சொல்லுதாக.

    நல்ல வேள, நாக்குல பல்லுபோட்டு நாலு பேரு (நாலே பேரு) பேசுரதக் கேட்டுட்டு, ஷங்கரக் கூப்பிட்டு "யேப்பா ஒனக்கு சினிமா ஒன்னியும் தெர்லன்னுறாங்க, நீ பேசாத ப்ளாக் எழுதிகின்னு கெடன்னு" சொல்லலான்னு இருந்தேன் ஆனந்து, ஏதோ யார் செஞ்ச புண்ணியமோ நா சொல்லல்ல.

    இதுல ரஜினி வசனம் மட்டுமே பேசி இப்படின்னாக்க, நல்லா நடிச்சிருந்தா....?ஒரு வேள படம் வருசக்கணக்கா ஓடுமோ... என்னமோ போங்க ஒன்னியும் வெளங்கமாட்டுது.

    ReplyDelete
  28. @VJR: ஆமா தல, நான் கூட ஐய்யையோ 'அந்த நாலு பேர்' - "நான் படம் நல்லாயிருக்குனு சொல்லமாட்டேன்"னு அடம்பிடிச்சாங்களே, ஓடுமோ, ஒடாதோனு ஒரே கவலையில் இருந்தேன். அவுக மனசு வைக்கலனாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிருச்சு... :-)

    ReplyDelete
  29. வாதத்துக்கு மருந்து உண்டு ..பிடிவாதத்துக்கு கிடையாது. படத்துக்கு வேணும்னா.. எனக்கு தோன்றியதை சொல்லி இருக்கேன்னு சப்ப கட்டு கட்டிட்டு.. போங்க..ஆனால்..தனி மனித தாக்குதல்,” ஏ.ஆர்.ரகுமான் இசை மொக்கய்..ஷங்கருக்கு படம் எடுக்க தெரியாதுன்னு தெரிஞ்சு போச்சு..ரஜினைய இந்த வயசுல யாரு நடிக்க சொன்னா..” போன்றவை சிம்ப்ளி ”திமிர்” தானே.

    ReplyDelete
  30. //அதனால், விமர்சனம் என்ற பேரில் உங்கள் கருத்தைத் திணிக்காதீர்கள் என்று மட்டும் தான் சொல்கிறேன்.//
    I don't get it. என்னை பொறுத்தவரை விமர்சனம் என்பது, படம் பற்றிய எனது பார்வை என்பதே. அது என் பார்வை என்னும்போது அதில் என் கருத்துக்கள் தான் இருக்கும்!

    ReplyDelete
  31. We have to encourage good try in tamil even if it is copy because good movies like Aaranya kandam flops,why because,our people are not used to see such movies.so once we make use them to see such good movies even if it is a copy.Then we can try our own ideas.

    ReplyDelete
  32. பாஸ்,
    அருமையான பதிவு.
    ரொம்ப நாளைக்கு முன்னாடி படிச்சது. எந்திரன் ரிலீஸ் ஆனா டைம்ல எழுதிய பதிவுன்னு நினைக்கிறேன். அப்ப நடந்த கருத்து மோதல்கள் எல்லாம் நான் பார்த்துக்கிட்டு இருந்தேன். ஆனா எங்கேயும் கருத்தை பதிவு செய்ய வில்லை.

    ஆனா பாஸ், என்னை பொறுத்த வரை ஒரு படத்தின் வெற்றியை விமர்சனங்கள் முடிவு செய்வதாக நீங்கள சொல்வதை ஏற்க முடியவில்லை. நிறைய படங்கள் (களவானி) தவறான விமர்சனங்களையும் மீறி நன்றாக ஓடியது.
    சாமானிய மக்களுக்கு பிடித்தால் தான் ஒரு படம் ஓடும். அந்த சாமானிய ரசிகன் B,C, & D ரசிகர்கள் தான்.

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...