வீரன் கேரள வர்மா பழசி ...

10:41:00 AM

விடுதலை போராட்டத்தின் ஆரம்பமாக, வணிகம் செய்ய வந்தவன் நாட்டை ஆழ்வதா? என்று தமிழ் நாட்டில் மருது பாண்டியர்கள் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துக் கொண்டிருந்த சமயம், முதன் முதன்முதலாக கேரளாவில் வெள்ளையர்களை கணிசமான அளவு துவம்சம் செய்த ஒரு குறுநில மன்னன் தான் கோட்டயத்தை ஆண்ட, கேரள வர்ம பழசி ராஜா. அந்த வீரனின் வரலாறு, 50 படங்களுக்கு மேல் இயக்கியிருக்கும் கேரளாவின் மதிக்கத்தக்க இயக்குனரான T. ஹரிஹரன் இயக்கத்தில், மம்மூட்டி, சரத்குமார் நடிப்பில் வெளிவந்துள்ளது.
ஆரம்பத்தில் 'கோட்டயத்தை' திப்பு சுல்தான் கைப்பற்ற நினைத்த போது, பழசி ராஜாவின் குடும்பம்தான் வெள்ளையர்களுக்கு உதவியாய் இருந்திருக்கிறது. ஆனால், பின்னாட்களில் 'வரி' என்ற பெயரில் நரி வேலையை அவர்கள் காட்ட, இவர்கள் எதிர்க்க, பகை ஆரம்பமாகிறது. பழசியின் வளர்ச்சியால் பொறாமை கொள்ளும் அவர் மாமா குரும்பறநாடு ராஜா வீரவர்மா (திலகன்), பழசியின் பழைய கூட்டாளி பழயம்வீடன் சந்து (சுமன்) ஆகியோர் கம்பனி ஆட்களுடன் சேர்ந்து சதி வேலையைக் காட்ட, அரண்மனையையும், காலம் காலமாக சேர்த்து வைத்த செல்வங்களையும் இழக்கிறார் பழசி. இந்தத் தகராறில் கர்ப்பிணியான பழசியின் மனைவி கைதேரி மாக்கம் (கனிகா) கிழே விழுந்து அடிபட்டுவிட குழந்தை இறக்கிறது.
செய்வதறியாமல் காத்திருக்கும் பழசிக்கு, அவரது வலது கையாக இருக்கும் படைத்தளபதி எடச்சேன குங்கன் நாயர் (சரத்குமார்), குரிச்ய மலைவாழ் மக்களின் தலைவன், வீரன் தலக்கல் சந்து (மனோஜ் கே விஜயன்) வை அறிமுகம் செய்து வைக்கிறார். சந்துவின் காதலியாக நீலி (பத்மப்ரியா) குரிச்ய பெண்படையின் தலைவி. இவர்களது உதவியுடன் 'ஒளிப்போர்' (மறைந்திருந்து தாக்கும் கொரில்லா தாக்குதல்) முறையில் வெள்ளையர்களை ஓட ஓட விரட்ட ஆரம்பிக்கிறார் பழசி. இடையில் சமாளிக்க முடியாமல், சமரச தூதை கம்பனி அனுப்ப, மக்கள் நலன் கருதி 'சரி, முயற்சி செய்து பார்க்கலாம் என்று பழசி ஒத்துக்கொள்ள, கொஞ்ச நாட்களிலேயே கம்பனி பழைய குருடியாக கதவைத் தட்ட ஆரம்பிக்க, மறுபடியும் வாளைக் கையில் எடுக்கிறார் பழசி.
என் கத்தியின் மேல் வைத்த அன்பைக் கூட உன்னிடம் நான் காட்டவில்லையே என்று மனைவிடம் உருகும் போதும், சந்துவை தந்திரமாகச் சிறை பிடித்துத் தூக்கிலிட்ட வெள்ளையர்களை தனி ஆளாகப் போய் துவம்சம் செய்து உறுமும் போதும், தன் மக்கள் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கண்டு கலங்கும் போதும்...கமலுக்குச் சவால் விட இவரைத் தவிர யாரால் முடியும் என்று தோன்றுகிறது.
பழசியை தன் எஜமானனாக மட்டும் பார்க்காமல் தன் வளர்ப்புத் தந்தையாகப் பார்க்கும் தளபதி குங்கனாக சரத்குமார், இன்ட்ரோ முதல் கிளைமாக்ஸ் வரை, திரையில் ஒரு கம்பீரத்தைக் காட்டுகிறார். சரத்திற்கு 55 வயது என்று சத்தியம் செய்தால் தான் நம்ப முடியும். மம்மூட்டியுடன் போடும் வாள்சண்டையிலும், சுமனை கொல்லும் சண்டையிலும் பிண்ணியிருக்கிறார். எதிராளி வாளை வீசும் போது 'டக்' கென்று வெறும் கையால் அவன் கையைப் பிடித்து முறுக்கும் வேகம், அந்த ஆண்மை, சரத்திடம் மட்டுமே பார்க்க முடியும்.
பழசியின் பாவப்பட்ட மனைவியாக கனிகா. உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்துகிறார். வெள்ளையர்கள் சூழ்ச்சி செய்து பழசியை சிறைபிடிக்க தண்ணீர் கொடுப்பது போல் சுழர்வாளைக் கணவனுக்கு கொடுப்பதும், காட்டில் பணிப்பெண்கள் இருக்கமாட்டார்கள்; உன்னால் சமாளிக்க முடியாது என்று கணவன் சொல்லும் போது உங்களைப் பிரிந்து இருக்க முடியாது என்று கூடவே கிளம்பும் போதும் அசத்தி விடுகிறார். கேரள இளவரசியாக யப்பா... மிகவும் அழகாக இருக்கிறார். அதிலும் 'குன்றத்துக் கோயில்' பாடலில் அழகோ அழகு...
நீலியாக வரும் பத்மப் பிரியாவும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். காட்டுவாசிப் பெண்ணாக கச்சிதமாக நடித்திருக்கிறார். வில்லம்பு விடும் வேகம், ஆண்களை எதிர்க்கும் வீரம் என்று நிறைவாகச் செய்கிறார். தவமாய்த் தவமிருந்து படத்திலும், பட்டியலிலும் பார்த்த பத்மப்ரியாவிற்கும் நீலிக்கும் நிறையவே வித்யாசங்கள். உடல் மெலிந்து கட்டளகியாகி இருக்கிறார். மிகச் சரியான பாத்திரத் தேர்வு.
மனோஜ் கே விஜயன், சுமன், நெடுமுடி வேணு, அஜய் ரத்னம் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உண்டு. இளையராஜாவின் பின்னணி இசை படத்தின் பெரிய பலம். ஒலிப்பதிவிலும் படம் சோடை போக வில்லை.
ஆனால், சரித்திரப் படத்தில் சண்டைக் காட்சிகள் பார்க்க 'ரியலாக' இருக்க வேண்டும். பல இடங்களில் 'ரோப்' பயன்படுத்தியிருக்கிறார்கள். அது அப்பட்டமாகத் தெரிகிறது. மம்மூட்டிக்கு சோலோ பைட், அதே மாதிரி சரத்குமாருக்கும் சோலோ பைட் என்று, ஹீறோயிசம் காட்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். கேரளாவில் நடக்கும் கதை, அதுவும் சரித்திரப் பின்னணியில் நடக்கும் கதை என்பதால் 'வரலாறு' தெரியாத நமக்கு கதையோட்டத்தை புரிந்து கொள்ளவதில் சிரமம் இருக்கும். படம் மலையாளத்தில் எடுக்கப் பட்டாலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி யில் 'டப்' செய்யப் பட்டு வெளியாகியுள்ளது.
இப்போதே கேரள அரசின் பல விருதுகளைக் குவிக்க ஆரம்பித்துள்ள இந்தப் படம் மலையாள சினிமா இதுவரை கண்டிராத பட்ஜெட், கால அவகாசத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில், 3.20 மணிநேரம் ஓடும் இப்படத்தை தமிழுக்காக சற்றுக் குறைத்து, 2.40 மணிநேரப் படமாக வெளியிட்டுள்ளார்கள்.

பழசி ராஜாவின் DVD உரிமையை MOSERBAER நிறுவனம் வாங்கியுள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் DVD வெளிவரலாம்.
பழசி ராஜா - கேரள மருது...

(இந்தப் படத்திற்கு எந்தப் பதிவர்களிடமிருந்தும் அவ்வளவாக விமர்சனம் வந்ததாகத் தெரியவில்லை...ஏன்? )

You Might Also Like

5 comments

  1. நல்லாருக்கே..விமர்சனம்...

    //(இந்தப் படத்திற்கு எந்தப் பதிவர்களிடமிருந்தும் அவ்வளவாக விமர்சனம் வந்ததாகத் தெரியவில்லை...ஏன்? )//

    ஏன் இல்லை நான் போட்டேனே...தல...
    http://vimarsagan1.blogspot.com/2009/11/blog-post_6252.html

    ReplyDelete
  2. உமது விமர்சனம் நன்று.

    ////(இந்தப் படத்திற்கு எந்தப் பதிவர்களிடமிருந்தும் அவ்வளவாக விமர்சனம் வந்ததாகத் தெரியவில்லை...ஏன்? )//

    நான் எழுதினேன். பார்க்க.

    http://raviaditya.blogspot.com/2009/11/blog-post_24.html

    ReplyDelete
  3. @நாஞ்சில் பிரதாப்,கே.ரவிஷங்கர்:
    நீங்க தப்பா பீல் பண்ணிடீங்க... யாருமே எழுதலைன்னு நான் சொல்லல. நிறைய பேர் எழுதலைனு தான் சொல்லியிருக்கேன்.

    வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  4. ஓகேங்க. நம்ம விமர்சனம் படிச்சிங்களா?அதன் பாடல் விமர்சன சுட்டியும் அதே பதிவில் இருக்கு.

    நன்றி.

    ReplyDelete
  5. அப்போதே படித்து விட்டேன் ரவிஷங்கர். நல்ல விமர்சனம்.
    ராஜாவின் தீவிர ரசிகர் என்பதையும் நிரூபித்து விட்டீர்கள்...

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...