மை மேஜிக்... எங்கும் தமிழ் எதிலும் தமிழ்...

7:18:00 AM

உலகில் தமிழர் இல்லாத இடம் இல்லை. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா என்று எல்லா இடங்களுக்கும் இங்கு காணாததைத் தேடிக் கண்டுபிடித்து பிழைக்கப் போவது தமிழன் ஸ்டைல். போனவன் அங்கு நிம்மதியாக வாழ்கிறானா என்பது வேறு கதை. அது இப்போது வேண்டாம். தமிழன் எங்கும் இருக்கிறான் என்பது மட்டும் தான் இப்போது நான் சொல்ல வரும் விஷயம். அப்படி சிங்கப்பூரில் பிழைக்கப் போன ஒரு தமிழ் குடும்பத்தைப் பற்றிய ஒரு படம் தான் மை மேஜிக். இந்தப் படத்தை எடுத்தவர் தமிழரும் இல்லை, இந்தியரும் இல்லை. அவர் ஒரு சிங்கப்பூரார் ! சிங்கப்பூரின் பிரபல இயக்குனர் எரிக் கூ வின் சமீபத்திய படம் தான் இது...
முதலில் இந்த மாதிரி ஒரு படம் வந்ததே என்னையும் சேர்த்துப் பல பேருக்குத் தெரிந்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் ஆரம்பத்தில் இந்தப் படத்தை தமிழ் படம் என்றே யாரும் சொல்ல வில்லை. எரிக் வூ வின் அடுத்த படம் என்ற அளவில் தான் விளம்பரம் செய்யப்பட்டது. மேலும் 2009 ஆம் ஆண்டின் சிறந்த வேற்று மொழிப் படத்திற்கான ஆஸ்கார் விருதிற்கு சிங்கபூரின் சார்பில் இந்தப் படம் தான் சென்றது. சிறந்த ஐந்தில் வராததால் அப்போதும் தெரியவில்லை. கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதான Palme D'Or எனப்படும் கோல்டன் பால்ம் விருதிற்காக பரிந்துரைக்கப் பட்ட முதல் சிங்கபூர் திரைப்படமாக இது இருந்த போதும் வெளியே தெரியவில்லை.
இந்தப் படத்தின் இயக்குனர் எரிக் கூ எனக்கு அறிமுகமானது(!) Be With Me படத்தின் மூலம் தான். ஆனந்த விகடனில் உலக சினிமா என்ற தலைப்பில் எழுத்தாளர் செழியன் பீ வித் மீ படத்தைப் பற்றி எழுதியிருந்தார். அந்தப் படம் பார்த்த வகையில் எரிக் கூ எனக்குப் பிடித்த இயக்குனர்களில் ஒருவராக இருந்தார். நிறைய படம் பார்க்கும் பழக்கமுள்ள நான், பார்த்த படங்களின் 'behind the scenes' பற்றி தெரிந்து கொள்ள, விக்கிபீடியா, imdb போன்ற வலை தளங்களை பயன்படுத்துவேன். அப்படி ஒரு முறை விக்கிபீடியாவில் 'தமிழ் சினிமா' என்று கொடுத்து எதையோ வாசித்துக் கொண்டிருந்த போது, மை மேஜிக் என்னும் லிங்க் கண்ணில் பட்டது. தட்டிப் பார்த்தால், எரிக் கூ படம்! மேலும் வாசித்துப் பார்த்தால் தமிழ் படம் !!

படத்தின் கதை இதுதான்

ஒரு குடிகார அப்பா. பேசுவதிலிருந்து பிழைக்க சிங்கப்பூர் வந்த தமிழன் என்பது தெரிகிறது. ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை செய்யும் அவர் கிடைக்கும் பணத்தை எல்லாம் குடித்தே கழிக்கிறார். அந்த வீணாப் போன அப்பாவிற்கு ஒரு மகன். குடித்து விட்டு நடு வீட்டில் வாந்தி எடுக்கும் அப்பாவை கழுவி விடுவது, மற்ற சிறுவர்களுக்கு வீட்டுப் பாடம் செய்து கொடுத்து சம்பாதித்து, அதில் அப்பனுக்கும் சேர்த்து நூடுல்ஸ் வாங்கி வருவது என்று அவ்வபோது அப்பாவைத் திட்டிக் கொண்டே, அம்மாவை நினைத்து அழுபவன் அவன்.
தன் மகன் தன்னை வெறுப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், தனக்குத் தெரிந்த மேஜிக் வித்தைகளின் மூலம் பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார் அந்த அப்பா. தான் வேலை செய்யும் ஹோட்டல் மானேஜருக்கு சின்ன சின்ன விதைகள் செய்து காட்டி, பணம் சேர்க்கிறார். அதீத வலி தாங்கும் வலிமை உடைய அந்த அப்பாவை வைத்து பணம் பண்ண ஆசைப் படும் அந்த மேனேஜர், ஹோட்டலில் இவரது மேஜிக் சாகசங்களை காட்சிப் படுத்துகிறார். இதைப் பார்க்கும் ஒரு பணக் கார முதலாளி "உன்னால் எவ்வளவு வலி தாங்க முடியும்" என்று இவரைப் பார்த்துக் கேட்க, "எவ்வளவு வேண்டுமானாலும்" என்று இவர் பதில் சொல்கிறார்.
மனைவி தன்னை விட்டுப் பிரிந்த சோகத்தில் இந்த அப்பாவால், குடிப்பதை நிறுத்த முடியவில்லை. குடி போதையில் ஒரு நாள் தன் மகனிடம் தான் ஒரு பிரபல மேஜிக் கலைஞன் என்றும், அவனுக்கும் மேஜிக் சொல்லித் தருவதாகவும் சொல்கிறார். முதலில் கோபமாகப் படுக்கப் போகும் மகன், அப்பா செய்யும் வித்தையைப் பார்த்து, நெருங்கி வருகிறான், சில வித்தைகளையும் கற்றுக்கொள்கிறான். ஹோட்டலில் செய்யும் வித்தையால் கொஞ்சம் பணம் சேர்ந்தாலும், இந்தியாவிற்கு திரும்பும் அளவிற்கு பணம் சேரவில்லை. அதனால் கிறுக்கனான அந்த முதலாளிக்காக உயிரைப் பணயம் வைக்கும் சவாலிற்கு அப்பா தயாராகிறார்.
கிளைமாக்ஸ்... கடைசியில் லிங்க் கொடுத்துள்ளேன். நீங்களே பாருங்கள். அப்போதுதான் அந்த வலியை உணர முடியும்.

இப்போது வரும் தமிழ், ஆங்கிலப் படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்த படம் டெக்னிக்கல் விஷயத்தில் பின்தங்கி இருந்தாலும், அது தரும் உணர்வு காலம் கடந்தது. தினம் இரவு குடித்து விட்டு வரும் அப்பாவை பார்த்து பார்த்து வெறுத்து போய் தன்னை அனாதையாக விட்டுப் போன தன் தாயையும், இறந்த பாட்டியையும் நினைத்து அழும் மகன், கனெக்சன் கட்டாகிப் போன போனில் தினம் தன் மனைவிக்கு போன் செய்து "சீக்கிரம் வந்திடு" என்று அழும் அப்பா என்று படம் நெடுக ஒரு சோகம் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த 'அம்மா/மனைவி' என்ன ஆனாள் என்று தெரியும் போது நமக்கும் அந்த தொற்றிக் கொள்கிறது...

தனக்கு நேர்ந்த அனுபவத்தை வைத்து "இந்த உலகம் ஒரு மோசமான உலகம். நீ ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும்" என்று மகனுக்கு அந்தத் தந்தை சொல்லிக் கொடுப்பது நம் மண்டையிலும் ஏறுகிறது. கடைசி காட்சியில் தன் அப்பாவையும் அம்மாவையும் ஒரே மேடையில் சேர்த்து இந்த மகன் பார்க்க, படம் முடியும் இடம்... சொன்னால் புரியாது...

எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைதியான ஒரு சூழலில் பார்த்தால் இந்தப் படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.

மை மேஜிக் - சிங்கப்பூரில் ஒரு தமிழ்க் குடும்பம்.
படத்தின் டிரைலர்...


படத்தை தரவிறக்கம் செய்ய...
http://rapidshare.com/files/270490253/MY_MAGIC.part1.rar
http://rapidshare.com/files/270530830/MY_MAGIC.part2.rar
http://rapidshare.com/files/270569900/MY_MAGIC.part3.rar
http://rapidshare.com/files/270618065/MY_MAGIC.part4.rar

You Might Also Like

8 comments

  1. இந்த மாசத்துக்கு... நம்ம மூடே.. வேற! :)

    ReplyDelete
  2. @Bala: தெரியும் தல... அடுத்த பதிவிற்காக காத்துக்கிட்டு இருக்கேன்...
    @Maha: வருகைக்கு நன்றி மஹா ஸார்..

    ReplyDelete
  3. நம்ம "மூடே"////

    இரட்டை மேற்கோளோட சொல்ல வேண்டிய விஷயம் பாலா அது. :)

    இப்படி ஒரு தமிழ் படமா? அதுல நடிச்சவங்க ரெண்டு பேரும் தமிழர்களா?

    ReplyDelete
  4. ஏற்கனவே இதே தீம்-ல் நெறைய தமிழ் படங்கள் வந்துவிட்டதல்லவா......

    ReplyDelete
  5. இப்படத்தைப் பற்றி பிபிசி தமிழ்ப் பகுதியில் வந்த செய்தியை வைத்து; பார்க்க இருந்தபோது பாரிசில்
    திரையிட்டார்கள்; மறக்கமுடியாத படம். முதல் வசனமே "போடு" என்று தமிழில் வரும்; சிங்கப்பூர் முன்னேறிய போதும் நம் தமிழினத்தில் எல்லோரும் அங்கே முன்னேறவில்லை. அங்கும் குடி குடியைக்
    கெடுப்பது போன்ற விடயங்கள் கூறாமல் கூறப்பட்டுள்ளதை உணர்ந்தேன்;
    நாம் அனைவரும் பார்க்கவேண்டிய படம்.
    படம் பார்த்த பின் யாராவது பதிவு போடுவார்களா? என எதிர்பார்த்தேன். இப்போதே இதைப் பார்த்தேன்.
    சாரு நிவேதிதாவுக்கு பார்க்கும் படி மின்னஞ்சலிட்டேன். இன்று வரை அவர் ஏதும் எழுதவில்லை.
    பார்த்துப் பிடிக்கவில்லையோ! அல்லது பார்க்கவில்லையோ தெரியவில்லை.

    ReplyDelete
  6. @pappu: வருகைக்கு நன்றி பாப்பு.

    @ Pena Moodi: வருகைக்கு நன்றி பேனா மூடி.. நிறைய வந்திருந்தாலும் சிங்கப்பூர் தமிழ் படம் என்பதுதான் இதன் சிறப்பே...

    @ Johan-Parisவருகைக்கு நன்றி யோகன் பாரிஸ் ஸார்.

    ReplyDelete
  7. அருமையான பகிர்வுக்கு நன்றி ப்ரதீப். படம் தரவிறக்கிப்பார்த்துவிட்டு சொல்கிறேன்.
    ஓட்டு போட்டாச்சு.
    தமிழ்மணத்தில் உங்கள் இடுகையை சேர்க்கையில்
    லேபிளாக இப்படி கொடுக்கவும்

    ஆக்கம், உலக சினிமாபார்வை, கலை, சினிமா, திரைப்படம், விமர்சனம்

    இல்லை என்றால் உங்க இடுகை வகைப்படுத்தாதவையில் சென்று விடும், முகப்பில் தேடினாலும் கிடைக்காது. என் 100க்கும் மேற்பட்ட பதிவுகள் இப்படித்தான் போய்விட்டன.

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...