காஞ்சிவரம்...

7:30:00 AM


என்னிடம் இப்போது சுமார் 950+ திரைப்படங்களின் collection இருக்கிறது. நிறைய படம் பார்ப்பதை விட நிறைய படம் சேர்க்கும் பழக்கம் என்னகு இருக்கிறது. இந்த ஆசைக்கு யாரும் முன்னோடி இல்லை. என் குடும்பத்தில் சாதாரணமாக சினிமா மீது மோகம் உள்ளவர் கூடக் குறைவு. அப்படியிருக்கையில் சும்மா விளையாட்டாக ஆரம்பித்தது இப்போது அளவிற்கு அதிகமாக போய்க் கொண்டிருக்கிறது. ஆயிரத்திற்கு இன்னும் சில தூரம் தான். இதில் பெருமை பட்டுக் கொள்ள ஒன்றும் இல்லை என்று என்னக்கும் தெரியும். இருந்தாலும் பெயர் தெரிந்த ஆங்கிலப் படங்கள் அனைத்தும் என்னிடம் இருப்பதில் எனக்குப் பெருமை. ஹாலிவுட் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு என்று ஒரு வட்டம் இருக்கும். அதில் எனக்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு. நண்பர்கள் பலர் எதோ DVD பஜாரில் ஆர்டர் செய்வது போல் "மச்சான், Bank Job இருக்காடா?" என்று கேட்டு வாங்கிச் செல்வார்கள். சென்றவர்கள் பலர் சென்றேவிட்டனர் என் DVD யோடு. அதனாலேயே எப்போதோ 1000 தாண்டி இருக்க வேண்டிய நான் 950 திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

சரி விசயத்திற்கு வருவோம். இத்தனை படங்கள் கைவசம் இருந்தும் அத்தனையையும் நான் பார்த்திருக்கிறேனா என்றால் "இல்லை". படம் வாங்க நேரம் இருந்த எனக்கு அதை பார்ப்பதற்கு நேரம் இல்லை. படம் பார்க்கத் தேவைப்படும் 2 மணி நேரத்தில் நான் மேலும் 200 DVD கள் வாங்கிவிடுவேன். இப்படியே போய்க் கொண்டிருந்தால் யாருக்கோ கூட இல்லை எனக்கே ஒரு பயனும் இருக்காது என்பதற்காகத் தான் தினம் எப்படியாவது ஒரு படம் பார்த்து கலைத் துறையை வளர்க்க முடிவு செய்துள்ளேன். பார்ப்பதோடு மட்டுமில்லாமல் அதற்கு விமர்சனமும் எழுதி என் எழுத்துப் பசியையும் போக்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளேன். பார்போம் இது எவ்வளவு தூரம் போகிறதென்று. தமிழ் படங்களுக்கு குமுதம், ஆனந்தவிகடன் தொடங்கி ஏறக்குறைய பக்தி இதழ்கள் வரை அனைத்திலும் விமர்சனம் வருகிறது. இதில் நான் வேறா? எனவே வித்யாசமான தமிழ் படங்கள் மற்றும் இங்கிலீஷ் படங்கள் மட்டும் தான்...

தாய்மொழிக்கே முதல் சமர்ப்பணம்..

படம் : காஞ்சிவரம்

சுதந்திர காலத்து நெசவாளர்களின் கதை. பிரகாஷ்ராஜ்...ஆஹா இன்னும் கொஞ்ச நாட்களில் இவர் பெயரை சுவற்றில் எழுதினால் அது கூட நடித்துக் காட்டும். அருமையான நடிப்பு. வறுமைக்கே உண்டான கோபம், தேடல், பாசம், பயம், கூச்சம் என்று இந்த வேங்கடம் அசத்தியிருக்கிறார். பட்டுச் சேலையை நெய்த நேசவாளனுக்கு 7 ரூபாய், அவன் நெய்த சேலையோ 700 ரூபாய் என்னும் காலத்தில் தன் மகளுக்கு பட்டுப் புடவை உடுத்தி தான் அவள் மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்புவேன் என்று அவள் பிறக்கும் போது எடுத்த சபதத்திற்காக கடைசிவரை போராடும் ஒரு தந்தையாக வாழ்த்திருக்கிறார்.

அபியும் நானும் படம் நன்றாகவே இருந்தாலும் அது என் மனதில் ஒட்டாமல் போனதற்குக் காரணம் திரிஷா மட்டுமே.! இந்தப் படத்தில் மகளாக வரும் ஷம்மு, திரிஷாவை தலையில் கொட்டி "நான் எப்படி நடித்திருக்கிறேன் பார்" என்று பாடம் சொல்லிக் கொடுக்கலாம். அப்படி ஒரு இயல்பான நடிப்பு.

சுதந்திர காலத்தில் தலைதூக்கியிருந்த கம்யுனிசம், முதலாளி செட்டியார்களின் அடக்குமுறை, கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை என்று படம் நெடுக ஒரு வித்தியாசமான, நாம் கண்டிறாத ஒன்றை நமக்குக் காட்டி பிரமாதப் படுத்தியிருக்கிறார் பிரியதர்ஷன்.சபாஷ்...

கிளைமாக்ஸ் காட்சியில் படுத்த படுக்கையாக கிடக்கும் தன் மகளுக்குத் தானே விஷம் வைத்துக் கொன்று, அதுவரை நெய்திருந்த பட்டுப் புடவையை அவள் மேல் போத்தும் போது, அது உடலை மறைக்கக் கூடப் பத்தாமல் போகவே மேலும் கீழும் அதை இழுத்து இழுத்து விட்டபடியே திரும்பிப் பார்ப்பது போல் படம் முடிகிறது. இமையமும் சிகரமும் கொடுக்காததை ஒரு கமர்சியல் புலி கொடுத்து உலகப் புகழும் அடைந்துவிட்டார்.

நம்மவரில் பலருக்கு படம் வெளி வந்தது கூடத் தெரியாது. நல்ல சினிமா ரசிகன் இந்தப் படத்தை கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும்.

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...